பின் தொடரும் நிழலின் குரல் பற்றி பேசியது:
ஜெயமோஹனின் பின் தொடரும் நிழலின் குரல் என்ற நாவல் குறித்துப்பேச வந்திருக்கிறேன்.
இதைப்பேச எனக்கு இருக்கும் தகுதி என்ன என்று யோசித்துப்பார்க்கிறேன். என் கையில் சாக்பீஸ் கிடைத்து தரையில் படம் வரையத்தொடங்கிய நாட்களில் வீட்டின் கூடம் முழுக்க அருவாள் சுத்தியல் நட்சத்திரம் வரைந்து என் அம்மாவிடம் திட்டு வாங்கியவன் என்ற தகுதி காரணமாயிருக்கலாம். சிவப்பு மல்லி, கண் சிவந்தால் மண் சிவக்கும் போன்ற படங்களை விரட்டி விரட்டிப் பார்த்த வெறி காரணமாயிருக்கலாம். ஏழாம் வகுப்பு படிக்கையில் தேர்தல் நேரத்தில் எங்கள் கிளாஸ் வாத்தியார் “யார் யார் எந்தெந்த கட்சிக்கு ஓட்டு, கை தூக்குங்க” என்று கேட்க, கிளாஸிலேயே நான் மட்டும் மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சிக்கு கை தூக்கியது காரணமாயிருக்கலாம். அம்மாவிடம் திட்டு வாங்கியபடியே தெரு முனையில் நின்றுகொண்டு நண்பர்களிடம் தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி உணர்ச்சி பொங்கப்பேசியவன் என்பது காரணமாயிருக்கலாம். அல்லது டியானென்மன் ஸ்கொயரில் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டது பற்றி அத்தனை பத்திரிகைகளும் பக்கம் பக்கமாய் எழுதிக்கொண்டிருக்க , தீக்கதிரில் மூன்றாம் பக்கத்தில் ஒரு சிறு செய்தியாக அதை வெளியிட்டு, ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டது என்று சொல்வதெல்லாம் முதலாளித்துவத்தின் பொய்ப் பிரச்சாரம் என்று படித்த அந்த கணத்தில் இவ்வளவு நாள் லட்சிய வாதம் என்ற பிரம்மாண்ட கனவுக்குள் தனி மனித தார்மீகம் என்பதை அழுத்தி மூச்சுத்திணர வைத்துக்கொண்டிருந்திருக்கிறோம் என்று உணர்ந்து நூல் அறுபட்ட பட்டம் போல, அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட விதேயன் போல, பின் தொடரும் நிழலின் குரலின் அருணாசலத்தைப்போல சுதந்திரமாகவும் சோகமாகவும் உணர்ந்தவன் என்பதும் காரணமாயிருக்கலாம்.
பின் தொடரும் நிழலின் குரலின் நாயகன் தொழிற்சங்க லட்சியவாதி அருணாசலத்திற்கும் இது நடக்கிறது. கம்யுனிஸ்ட் கட்சியால் ஒதுக்கப்பட்டு, தூஷணை செய்யப்பட்டு இறந்த வீரபத்ரபிள்ளையின் கடிதம், அருணாசலத்திற்குள் கேள்விகளை எழுப்புகிறது. தனிமனித அறத்திற்கும் லட்சியவாதத்திற்கும் இடையே மனவெளியில் நடக்கும் உக்கிரமான போரை ரஷ்யப் புரட்சியின் வழியாகவும் அந்தப்புரட்சியின் பலிகடாக்களான உயிர்களின் வழியாகவும் நமக்கு காட்டுகிறது இந்த நாவல்.
இதையும் சொல்லி விடுகிறேன். ஜெயமோஹன் 80-களின் இறுதியிலேயே பரவலாகக் கவனம் பெறத்தொடங்கி விட்ட எழுத்தாளர். ஆனால் அதற்கு ஒரு 15 ஆண்டுகள் கழித்து அவர் திண்ணையில் எழுதிய கட்டுரைகளின் வழியாகத்தான் எனக்கு ஜெயமோஹன் அறிமுகமாகிறார். அக்கட்டுரைகள் மற்றும் அவரது இணைய தள எழுத்துக்கள் வழியாகத்தான் நான் பின் தொடரும் நிழலின் குரலுக்கு வந்து சேர்ந்தேன். இந்த நாவல், அதன் உள்ளடக்கத்திலோ, நேராகக் கதை சொல்லிச்செல்லும் விதத்திலோ பொன்னியின் செல்வன் போலவோ, ஒரு மனிதன் ,ஒரு வீடு, ஒரு உலகம் போலவோ, பதினெட்டாவது அட்சக்கோடு போலவோ, நிழல் யுத்தம், பவுண்டன் ஹெட் போலவோ எழுதப்பட்ட நூல் அல்ல. ஆனால் இது ஒரே நேரத்தில் வரலாற்று நூலாகவும், தனிமனிதனின் சுயதேடலாகவும், சமூக இயக்கங்களை விவரிக்கும் நூலாகவும், தத்துவங்களை விவாதத்திற்கு அழைக்கும் நூலாகவும் இருக்கிறது. இதைப்போன்ற புத்தகத்தை தமிழ்ப் புத்தக வெளியில் நான் இதுவரை படித்ததில்லை.
இந்த நாவலைப்படிப்பதற்கு முன் ரஷ்யப்புரட்சி பற்றியும், ஸ்டாலின் பதவிக்கு வந்த விதம் பற்றியும் சில அடிப்படை விஷயங்கள் தெரிந்திருப்பது உதவும்.
லெனினுக்குப்பின் ஸ்டாலினுக்கும் ட்ராட்ஸிக்கும் நடக்கும் அதிகாரப்போட்டியில் ஸ்டாலின் பக்கம் நின்று அவர் பதவிக்கு வர முக்கிய காரணமாயிருப்பவர் நிகலாய் புகாரின். சிறந்ததொரு சிந்தனையாளர்; கம்யூனிஸ சித்தாந்தவாதி. ஆனாலும் இறுக்கமான சித்தாந்த எல்லைகளுக்கு அப்பாலும் சிந்திக்கத் தெரிந்த யதார்த்தவாதி. ட்ராட்ஸ்கியின் தீவிர கம்யுனிஸத்திற்கு எதிராக ஸ்டாலின் பக்கம் நின்று பதவிப்போட்டியில் ஸ்டாலின் வெற்றி பெற புகாரின் உதவுகிறார். ஆனால் பதவிக்கு வந்தபின் படிப்படியாக ஸ்டாலின் அத்தனை அதிகாரங்களையும் தன்கையில் குவித்து தனக்கு சவால் என்று வளரக்கூடிய அத்தனை பொலிட் பீரோ உறுப்பினர்களையும் கழித்துக்கட்டுகிறார். சிறு விவசாயிகள் குடும்பம் குடும்பமாக குழந்தைகள் பெண்கள், வயோதிகர் என்ற பேதம் இல்லாமல் லட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டுகிறார்கள். இதை எதிர்க்கும் புகாரினும் கடைசியில் ஸ்டாலினால் துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்படுகிறார். ஸ்டாலினுக்குப்பிறகு பதவிக்கு வரும் குருஷேவினால் ஸ்டாலின் கால அட்டூழியங்கள் அத்தனையும் வெளிக்கொண்டு வரப்படுகின்றன. உலகக் கம்யூனிஸ்டுகள் பலரை இது அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. ஆனால் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் விஷயத்தில் இந்த விவாதம் பெரிய அளவில் மேடைக்கு வரவேயில்லை. மாறாக ஸ்டாலினிஸ கொலைகள் எல்லாம் சோவியத்தின் சரித்திர அவசியம் என்று பிரசாரப்படுத்தப்பட்டு நியாயப்படுத்தப்பட்டது. இது ஏதோ அன்று நடந்த விஷயம் மட்டுமல்ல.
இந்த பிரசாரம், இதன் பின்னுள்ள அற உணர்வை மீறிய அதிகார வெறி எதுவும் இன்றும் கம்யூனிஸ்டு கட்சிகளில் மறைந்து விடவில்லை. தஸ்லிமா நஸ்ரீன் எழுதிய லஜ்ஜா என்ற புத்தகம் பங்களாதேஷில் பத்து லட்சம் இந்துக்கள் அவர்கள் இந்துக்கள் என்ற ஒரே காரணத்துக்காக கொல்லப்பட்டதை முதல் தடவையாக வெளிப்படையாகப் பேசியது. இந்துக்களின் சொத்துகள் அரசாங்கத்தாலேயே அபகரிக்கப்படுவதையும், குடும்பம் குடும்பமாக அவர்கள் மிரட்டப்பட்டு மதம் மாற்றப்படுவதையும், அவ்வாறு மாறாதவர்கள் கொல்லப்படுவதையும் நாட்டை விட்டே விரட்டப்படுவதையும் விவரித்தது . இந்தப்புத்தகத்தின் வெளியீட்டிற்கு இந்திய இடதுசாரிகள் கடுமையான எதிர்ப்புக்குரல்களை எழுப்பினார்கள் என்று அந்தப்புத்தகத்தின் முன்னுரையில் அவர் சொல்கிறார். இந்தியாவில் தமது முதன்மை அரசியல் எதிரிக்கு ஆதரவாக இந்தப்புத்தகம் ஆகி விடும் என்று சொல்லி இந்தப்புத்தகம் வெளியிட வேண்டாம் என்று அழுத்தம் தந்திருக்கின்றனர். தஸ்லிமா நஸ்ரீன் என்ற பெண்மணியின் தனிமனித அற உணர்வின் வேகம் மட்டுமே இந்தப்புத்தகத்தை வெளிவரச்செய்தது. சில அராஜகங்கள் மட்டுமே வெளியே பேசப்படலாம், சில அராஜகங்கள் மூடி மறைக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் சில அரசியல் இயக்கங்களின் வழிமுறையாக இருக்கலாம், அது பத்திரிகையாளரின் வழிமுறையாகவோ ஊடகங்களின் நெறியாகவோ , இலக்கியவாதியின் வழியாகவோ இருக்கக்கூடாது. ஆனால் இன்றும் நிலைமை அப்படியில்லை. பத்திரிகை, ஊடகம், இலக்கியம் அனைத்துமே அதிகாரம் நோக்கிய பிரசாரக் கருவிகளாகவே பெரிதும் கையாளப்படுகின்றன.
இந்த பிரசாரத்தில் ஊறிவளர்ந்த அருணாசலம் என்ற தொழிற்சங்க தலைவன் படிப்படியாக வீரபத்ர பிள்ளையின் கடிதங்கள் வழியாகவும் நிகோலய் புகாரினின் வாழ்க்கை வழியாகவும் அவர்களது இறப்புக்குப்பிறகும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் அவர்களது நிழலின் மூலமாக தன் மனசாட்சியின் குரலை அடையாளம் காண்கிறான். இந்தக்குரலைத் துணிவாகப் பதிவு செய்ததன் மூலமாக, ஒரு உண்மையான இலக்கியவாதியாக நம்முன் எழுந்து நிற்கிறார் எழுத்தாளர் ஜெயமோஹன். இந்தப்புத்தகம் இடதுசாரிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது, ஜெயமோஹன் மீது தனிப்பட்ட அளவில் வசை பொழிந்து பல எழுத்துக்கள் இன்றும் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. அவற்றை மீறி தன் மனதின் குரலுக்கு மட்டும் உண்மையாக, இலக்கிய வெளியில் முக்கியமான படைப்பாளியாக திமிறி நிற்கும் ஜெயமோஹனுக்கு ஒரு வாசகனாக என் நன்றிகளும் வணக்கங்களும்
[கலிஃபோர்னியா ஃப்ரீமான்ட் நகரில் 5௯௨009 அன்று நடந்த வரவேற்புக் கூட்டத்தில் எழுத்தாளர் அருணகிரி பேசிய உரை]