புறப்பாடு II – 13, காற்றில் நடப்பவர்கள்

சந்தியா அச்சகத்தில் சாலையோரமாக ஒரு பெரிய திண்ணை இருந்தது. பழங்கால வீடு அது. சென்னையில் அத்தகைய தெலுங்குமணம் வீசும் வீடுகள் பல இருந்தன. இரண்டுபக்கமும் திண்ணை. நடுவே உள்ள பள்ளம் வழியாக உள்ளே செல்லும் பாதைக்கு அப்பால் இருண்ட தாழ்வான அறைகள். திண்ணையில் கரிய சிமிண்ட்தரை நெடுங்காலம் பலர் படுத்து புரண்டதனால் உளுந்து போல வழவழப்பாக இருந்தது. வளையோடு போட்ட மேல்கூரை கீழே வந்து பாதி தெருவை மறைப்பதனால் உள்ளே இருந்துபார்த்தால் தெருவில் நடப்பவர்களின் இடுப்புக்குக் கீழேதான் தெரியும். ஆனால் தெருவின் வெக்கையையும் தூசையும் பெருமளவுக்கு தடுத்து உள்ளே ஒரு குளுமையை அதுதான் நிலைநிறுத்தியது.

திண்ணையில் ஒருபக்கம் உரிமையாளரின் ஸ்கூட்டர் நிற்கும். மறுபக்கம்தான் நான் படுப்பேன். கொசுவலை கட்டுவதற்கு சுவரில் ஆணிகள் இருந்தன. தெருப்பக்கம் பச்சைநிறமான மரத்தூண். அதில்தான் தபால்பெட்டியும் தொங்கும். சுவரில் ஒருபிறை. அதில் இரவில் அவசரத்துக்குத் தேவையான தீப்பெட்டியை வைத்திருந்தேன். அதனருகே பச்சைநிறச் சட்டங்கள் கொண்ட சிறிய சன்னல் உள்ளே நோக்கித்திறக்கும். அதற்கு கம்பிகள் இல்லை. மரத்தாலான அழிதான். உள்ளே அச்சக உரிமையாளரின் மேஜையும் பீரோவும் இருந்தன. அதற்கப்பாலுள்ள அறையில்தான் எந்திரங்கள்.

சந்தியா அச்சகத்தை நான் தேர்ந்தெடுத்தமைக்குக் காரணம் நடந்துசெல்லும் தூரத்தில் இருந்த திரையரங்குகள். தேவி திரையரங்கில் தமிழ்படங்கள். காசினோவில் ஆங்கிலப்படங்கள். கெயிட்டியில் அவ்வப்போது படம் போடாமல் மூடிப்போடுவார்கள். தினமும் ஒருபடம் பார்ப்பேன். பெரும்பாலும் ஆங்கிலப்படங்கள். அக்காலத்தில் பத்துவருடம் பழையபடங்கள்தான் இந்தியாவுக்கே வரும்.பெரும்பாலும் மொத்தமாக ஒரு விலைபேசி வாங்கிக்கொண்டுவந்து மூன்றுநாட்களுக்கு ஒருபடம் வீதம் போடுவார்கள். பீட்ஸ் டிராகன், ஹெர்பி ரைட்ஸ் அகெய்ன், சீக்ரெட் கார்டன்…என்ன ஏது என்றே தெரியாத படங்கள். யாரோ வெள்ளைக்காரர்கள் ஏதேதோ பேசி மாறிமாறிச்சுட்டுக்கொண்டு ஓடுவார்கள். என்ன நடக்கிறது என ஒருமாதிரி அனுமானிப்பதற்குள் படம் முடிந்துவிடும்.

ஆனால் பாதிக்குமேல் பேய்ப்படங்கள். சுகர் ஹில், ஈவில் ஃபேஸ், ஐலண்ட் ஆஃப் டெத். விசித்திரமான நடமாடும் பிணங்கள் வீடுகளை உடைத்துப்புகுந்து தனியாக இருக்கும் பெண்களை வீல் வீல் என கதறச்செய்து துரத்தி துப்பாக்கிக்குண்டால் சிதறடிக்கப்பட்டு ஒன்று சேர்ந்து மீண்டும் தாக்கும். வெள்ளைக்காரர்களுக்கு பேய்களை துப்பாக்கியால் சுடமுடியாதென்ற அடிப்படை எந்த சினிமாவிலும் புரிபட்டதில்லை. டிராகுலாவைக்கூட துப்பாக்கியால் சுட்டார்கள். அவர் அல்லது அது பறந்து சுவரில் சென்று ஒட்டியபின் சிறகை விரித்து இருளில் செல்வதைக் கண்டபின்னரும் கூட அது என்ன என்பதைப்பற்றி பேசிக்கொண்டு டீ குடித்தார்கள்.

ஆங்கிலப்படம் என்றால் பதினொன்றரைக்கெல்லாம் திரும்பிவந்துவிடலாம். எந்தப்படத்துக்கும் நூறுபேருக்குமேல் வருவதில்லை. வருபவர்கள் நிம்மதியாக அமர்ந்து ஏதோ சிந்தனையிலாழ்ந்து பார்த்துவிட்டு பிரமைபிடித்தவர்களாகத் திரும்பிச்செல்வார்கள். ஒருபடம் மட்டும் அன்று பெரிய அலையைக் கிளப்பியிருந்தது. எண்டர் தி டிராகன். முன்னரே சென்னையில் பல இடங்களில் ஓடிய பிரதியாக இருக்கவேண்டும். நான் பார்த்தபோது மேலிருந்து கீழ்நோக்கி வெள்ளிக்கோடுகள் பீரிட்டன. அதற்கு அரங்குநிறைய ரசிகர்கள். புரூஸ்லீ திரையில் தோன்றியதும் கைத்தட்டல்கள் விசில்கள். எனக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை.  அவர் இருகைகளையும் நீட்டி நின்று மெல்ல மெல்ல பின்னால் காலெடுத்துவைத்தபோது எனக்கு அவர் பெரிய கடல்நண்டு மாதிரி தோன்றினார்.

அச்சகவேலையை ஏழரை மணிக்கு முடித்தபின் பஸ் ஏறி கடற்கரைக்குச் செல்வேன். எட்டரை மணிக்கு திரும்பிவந்து ஏதேனும் ஓர் ஓட்டலில் நுழைந்து பரோட்டா சாப்பிடுவேன். பரோட்டாவில் பாலை ஊற்றி சீனிபோட்டு சாப்பிடத்தரும் விருதுநகர் கடைகள் பல இருந்தன. தொட்டுக்கொள்ள மிக்சர். அது இரவில் எந்த தொந்தரவும் தராமல் தூங்கச்செய்யும் உணவு. அங்கேயே ஒருரூபாய்க்கு பக்கோடா பொட்டலம் கிடைக்கும். வாங்கிக்கொண்டு நடந்து திரையரங்குக்குச் செல்வேன். எந்தப்படம் என்ன என்றெல்லாம் பார்ப்பதில்லை. ஆங்கிலப்படமாக இருந்தால் போதும். சென்று அமர்ந்து நன்றாகச் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து படம் தொடங்குவதற்காகக் காத்திருப்பேன். படம் ஆரம்பித்ததும் பகோடாவைப்பிரிப்பேன். மெல்ல இதமாக தளர்த்திக்கொள்வேன்.

எப்படி சினிமாமீது அந்த ஆர்வம் எழுந்தது என்று எனக்கே தெரியவில்லை. மார்த்தாண்டம் கிறித்தவக் கல்லூரியில் புகுமுகவகுப்பில் சேர்ந்தபோதுதான் சினிமா பார்க்க ஆரம்பித்தேன். ஒருநாளுக்கு குறைந்தது இரண்டு சினிமா. நாகர்கோயிலுக்கு வந்தபின்னர் சினிமா ஆர்வம் குறைந்தது. ஒருகட்டத்தில் தமிழ்சினிமாக்களின் சுவரொட்டிகள்கூட சலிப்பூட்டின. சென்னையில்தான் சினிமா மீண்டும் வந்து பற்றிக்கொண்டது. மார்த்தாண்டம் குழித்துறை அரங்குகளில் பார்த்த காலகட்டத்தில் எல்லா சினிமாக்களும் எனக்குப் பிடித்திருந்தன. காட்சிகள் மாறிமாறி வரும் அழகே சினிமாவை ரசிக்க போதுமான காரணமாக இருந்தது.

சென்னையில் நான் ரசித்தது சினிமாவை என்பதைவிட திரையரங்குகளை என்றுதான் சொல்லவேண்டும். நகரத்தின் கருப்பைகள் அவை என்று நினைப்பேன். உள்ளே நுழைந்துகொண்டதும் இதமான அணைப்பு. தனிமை. தமிழ்ப்படங்களை நான் ஏன் வெறுத்தேன் என்று பார்த்தபோது அவை பேச்சாலும் அழுகையாலும் என்னுடைய உள்ளே ஓடிக்கொண்டிருந்த அகத்துடன் உரையாடி அதைச் சிதறடித்தன என்பதனால்தான் என்று தெரிந்தது. ஆங்கிலப்படங்கள் எனக்கு வெறும் காட்சியோட்டம் மட்டும்தான். அவ்வப்போது நான் என் அகத்திலிருந்து வெளியே வந்து விழும்போது திரையில் ஓடிக்கொண்டிருக்கும் சம்பந்தமே இல்லாத நிலக்காட்சி என்னை திகைக்கவைக்கும். ஊசியிலை மரங்கள் அடர்ந்த சாலைகள். பனிபடர்ந்த மலைகள். அடுக்குமாடிவீடுகள். விர்ராங் என்று சீறும் நீளமான கார்கள்.

அவை வேறு ஓர் உலகில் நிகழ்ந்துகொண்டிருக்க நான் இங்கிருந்து அவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. என்னால் அவர்களைப் பார்க்கமுடியும். அவர்கள் என்னை பார்க்கமுடியாது. விசித்திரமான அந்த எண்ணத்தின் பாதுகாப்பு திரையரங்கில் ஒரு இதமான போர்வைபோல சூழ்ந்திருக்கும்.

ஒருவாரம்கூட என்னால் குடிசையில் தங்கமுடியவில்லை. அந்த ஒருவாரத்தில் ஒருநாள்கூட அங்கே இரவு தூங்கவில்லை. பகலில் தூங்கி இரவெல்லாம் அலைந்துகொண்டிருந்தேன். பின்பு வாடகையைக் கொடுத்துவிட்டு சந்தியா அச்சகத்துக்கு வந்துவிட்டேன். அங்கே வாரம் ஒரு ஒரு துப்பறியும் நாவல் எழுதிக்கொடுத்தேன். சாணித்தாளில் நூறுபக்கம்தான். நிறைய துப்பாக்கிச் சண்டைகள் இருக்கவேண்டும். நிறையபேர் சாகவேண்டும். ஆனால் கதாநாயகன் தமிழனாகவும் கதை தமிழகத்தில் நடப்பதாகவும் இருக்கவேண்டும். அச்சக உரிமையாளரான பசவராஜூ ’நெறைய கொல்லணும் தம்பி…சுட்டுனே இருக்கணும்…’ என்பார்.

மோகன் என்றபேரில் எழுதினேன். என் கதைகளுக்குப் பின்புலமாக சேர்வராயன் மலையை எடுத்துக்கொண்டேன். அங்கே நான் போனதே கிடையாது. அந்தப்பெயர் எனக்குப்பிடித்திருந்தது. அந்த மலையில் குதிரைகளில் என் கதாநாயகர்கள் விரைந்தார்கள். அவர்களை மலையிடுக்குகளில் இருந்து கொள்ளைக்காரர்கள் சுட்டார்கள். பிரபல கொள்ளையன் ஒருவன் அவனைப் பிடிக்கவந்த துப்பறியும் கதாநாயகனிடமிருந்து தப்ப பத்தாம் மாடியிலிருந்து குதிக்கிறான். கீழே சிதறிய சடலம் கிடக்கிறது. மண்டை உடைந்து ரத்தக்குழம்பல். ஆனால் உண்மையில் கொள்ளையன் சாகவில்லை. குதித்தவன் கீழே ஒரு வலையில் விழுந்து தப்பித்துவிட்டான். கீழே உள்ள மாடியிலிருந்து அவனைப்போலவே இருக்கும் ஒருவனைக் கொன்று அந்தச் சடலத்தைத்தான் வீசியிருக்கிறார்கள். அந்தவிடுதியே கொள்ளைக்காரனுடையது.

பசவராஜு பரவசத்துடன் கட்டிப்பிடித்தார். கடைசியில் துப்பாக்கிச் சண்டையில் ஒரு செயற்கைப் பாறையை உருவாக்கி அதனுள் அமர்ந்துகொண்டு பாறையை நகர்த்தி நகர்த்திச் சென்று கொள்ளையர்களைச் சுடும் காட்சியில் பசவராஜு கண்ணீர் மல்கினார். எனக்கு இருநூறு ரூபாய் ரொக்கமாகத் தந்தார். நான் காலையிலேயே கிளம்பி நகருக்குள் நுழைந்து ஒரு பெரிய ஓட்டலில் சிற்றுண்டி சாப்பிட்டேன். ஒரு ஆட்டோவில் ஏறி சும்மா சுற்றிவந்தேன். மீண்டும் பகலெல்லாம் அலைந்தேன். மீண்டும் எதையோ சாப்பிட்டேன். மாலையில் ஒரு ஆங்கிலப்படம் பார்த்துவிட்டு பரோட்டா சாப்பிட்டுவிட்டு திரும்பும் வழியில் இன்னொரு திரையரங்கு. என்னிடம் இருபது ரூபாய் மிஞ்சியிருந்தது. இருபதுரூபாய்க்கு அந்த அரங்கின் மிக உயர்ந்த இருக்கைக்கான சீட்டை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தேன்.

உப்பரிகையில் மொத்தமே எட்டுபேர்தான் இருந்தோம். அரங்கில் நான் தன்னந்தனியாக இருக்கும் உணர்வைத்தான் அடைந்தேன். கையில் பணமில்லை என்பதே ஆழ்ந்த நிம்மதியை அளித்தது. கால்களை நீட்டிக்கொண்டு தலையை இருக்கையில் சாய்த்து அமர்ந்தவன் தூங்கிவிட்டேன். முந்தைய படத்தின் நிலக்காட்சிகள் கண்களுக்குள் கொஞ்சநேரம் தெரிந்தன. மின்விசிறியின் கறக்கறக் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.

படம் ஓட ஆரம்பித்து கொஞ்சநேரம் கழித்து திடுக்கிட்டு எழுந்து திரையைப்பார்த்து சொல்லிழந்து அமர்ந்திருந்தேன். திரை ஒரு பெரிய சதுரவடிவ திறப்பாக இருந்தது. நான் அதனுள் தலைகீழாக விழுந்து சென்றுகொண்டே இருந்தேன். அங்கே உண்மையான மனிதர்களை, உண்மையான பனிப்பாளங்களைக் கண்டேன். சினிமாவில் எனக்கு அப்படி சிலசமயம் நிகழ்ந்திருக்கிறது. யா. பெரல்மான் எழுதிய பொழுதுபோக்கு பௌதிகம் என்ற நூலில் அதை நான் பிறகுதான் வாசித்து புரிந்துகொண்டேன். திரைக்கும் நாமிருக்கும் இருக்கைக்குமான தூரம் மிகச்சரியான ஒன்றாக அமைகையில் படம் முப்பரிமாணம் கொண்டு மிக அருகே தெரிகிறது. என் ஆழ்மனம் அரைத்தூக்கத்தில் நன்றாகவே திறந்து கிடந்திருக்கலாம். நான் அந்தப் படத்துக்குள் இருந்தேன்.

வின்ட்வாக்கர் என்றபடம். முழுக்க முழுக்க செவ்விந்தியர்கள். வயது முதிர்ந்த ஒரு செவ்விந்தியர் மரணவிளிம்பில் பனிமூடிய குகை ஒன்றுக்குள் இருந்தார். அங்கிருந்து அவர் தன்னந்தனியாக கிளம்பினார். பனிநிலம் கண்ணாடியை உருக்கி ஊற்றிச் செய்ததுபோலிருந்தது. அவரது ஒவ்வொரு காலடியையும் நான் மிகத்துல்லியமாக கண்டேன். அவரது மூச்சை என் மேல் அறிந்தேன். அவர் கரடியுடன் போரிட்டபோது அதன் நகம் கீறிவிடுமென அஞ்சும் அருகாமையில் இருந்தேன். செவ்விந்தியக் கிராமங்கள், செவ்விந்தியர்களின் பூசல்கள், செவ்விந்தியக் குழந்தைகள்.

இருளில் உடலைக் குறுக்கியபடி நடந்தபோது எனக்குள் பனிநிலத்தின் ஒளி அலையடித்துக்கொண்டே இருந்தது. கூர்மையான பனிக்குச்சி ஒன்றை படத்தில் கண்டேன். அதன் நுனியில் கையால் வருடுவதுபோல உணர்ந்தேன். முதுகு கூசியது. ஒரு சவரத்தகடின் கூர்நுனியில் கையால் வருடுவதுபோல. பலமுறை நான் செய்துபார்த்திருக்கிறேன். அப்போது நம் புலன்களெல்லாம் உச்சத்தில் நின்றுகொண்டு உடம்பு மெல்லச் சிலிர்த்தடங்குவது பெரிய அனுபவம். மிகமிகக்கூர்மையான ஒன்று எனக்குப்பின்னால் எப்போதுமிருக்கவேண்டுமென நினைத்துக்கொள்வேன். அது அங்கிருக்கையில் ஒரு கணம்கூட வீணாகச் செல்வதில்லை.

திண்ணையில் பாயைத்தூக்கிப்போட்டிருந்தார் பசவராஜு. கொசுவலையைக் கட்டிக்கொண்டு படுத்தேன். நாளை எழுந்ததும் பனிவெளி பற்றி ஒருநாவல் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அந்த நினைப்பே உற்சாகத்தை அளித்தது. இந்த நகரத்திலிருந்து அப்பால், வெகுதொலைவில், எனக்கான ஒரு பூமி உள்ளது. பாலைநிலங்கள், காடுகள், செங்குத்தான மலைகள், உருளும்பாறைகள் கொண்ட மலைச்சரிவுகள், அற்புதமான குதிரைகள், ஒவ்வொருகணமும் வெடித்துவெடித்து ஒளிரும் கணங்களாலான காலம். கண்களை மூடிக்கொண்டு புன்னகையுடன் அந்தப் பனிவெளியைப் பார்த்தேன். காஷ்மீர். இல்லை அங்கே எப்போதும் பனி இருக்காது. அதற்கும் மேலே. இன்னும் உச்சியில் ஏதாவது ஓர் இடம். பனியில் வாழும் மனிதர்கள் எவரென்று பார்க்கவேண்டும்.

வின்ட்வாக்கர். காற்றில்நடப்பவன். காற்றாக நடப்பவன். நடக்கும் காற்று. அந்தப்படத்தில் ஒருவர்கூட வெள்ளையர் இல்லை. அவர்கள் வாழும் மண்ணில் வெள்ளையர் அப்போது வரவில்லையா என்ன? இல்லை அவர்களின் வாழ்க்கைக்குள் வெள்ளையர் ஊடுருவவில்லையா? வெள்ளையர்களும் அவர்களும் ஒரே இடத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமலேயே வாழ்வதுகூட சாத்தியமாகியிருக்கலாம். அவர்கள் வாழும் நிலம் அவ்வளவு பெரியது. சினிமாவில்கூட நிலம் எப்போதுமே ஆளில்லாமல் விரிந்து வெறுமைகொண்டு கிடக்கிறதைத்தான் கண்டேன். ஒரு குதிரைக்காலடிக்காக, ஒரு மனிதக்குரலுக்காக காத்துக்காத்து நூற்றாண்டுகளாக தூங்கிவழியும் மண்.

அங்கே செவ்விந்தியர்கள் வாழ்வதையே வெள்ளையர் அறிந்திருக்காமலிருக்கலாம். வெள்ளையர்களின் நகரங்களும், குதிரைவண்டிகளும், ரயில்களும் புழங்கும் மண்ணின் தலைக்குமேல் குன்றுகளின் மடிப்புகளுக்குள் பனிப்படுகைகளின் ஆழத்தில் செவ்விந்தியர்களின் தோல்கூரையிடப்பட்ட கூம்புவடிவக் குடில்கள் கொண்ட சிற்றூர்கள் இருக்கலாம். நகரும் ஊர்கள். குதிரைகள். கனத்த உடல்கொண்ட பசுக்கள். செவ்விந்தியர்கள் ஓசையில்லாமல் வாழ்வதற்குக் கற்றுக்கொண்ட வேட்டைக்காரர்கள். தங்களை அவர்கள் கண்ணுக்குத்தெரியாதவர்கள் என்று அழைத்துக்கொள்வதுண்டு.

யாரோ ஏதோ பேசும் ஒலி மிக அருகே கேட்டு விழித்து எழுந்து அமர்ந்தேன். கொசுவலையை தூக்கி வெளியே வந்தேன். என்னருகே இருவர் நிழலாக நின்றிருந்தனர். உடல் அனிச்சையாக நடுங்க ‘யாரு? என்றேன்.

‘சாமி…ஒண்ணில்ல சாமி…படுங்க சாமி’ என்று ஒருவன் மெல்லியகுரலில் சொன்னான்.

என் நடுக்கம் தணிய சற்றுநேரமாகியது. நரிக்குறவர்கள் என்று தெரிந்தது. அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தேன். ஒருவர் தோளில் ஒரு சாக்கு இருந்தது. இன்னொருவர் சாக்கடையோரம் குனிந்து நீளமான குச்சியால் குத்திக்கொண்டிருந்தார். என்னருகே நின்றவர் கையில் பெரிய டார்ச் விளக்கு இருந்தது. சாக்கடையில் குத்திக்கொண்டிருந்தவர் ஏதோ மொழியில் ஒற்றைச்சொல்லைச் சொல்ல டார்ச் விளக்கைப்பிடித்தவர் சட்டென்று குனிந்து உள்ளே விளக்கை அடித்தார். நான் எம்பி குனிந்து பார்த்தேன். ஒரு பெருச்சாளி மீசை விடைத்த கூரிய முகத்தை மேல்நோக்கித் தூக்கி அசையாமல் நின்றிருந்தது. அடுத்தகணம் எம்பிப்பாய்ந்துவிடும்போன்ற பதுங்கல். கண்கள் இரண்டு பாசிமணிகள் போல தெரிந்தன.

நீளமான குச்சி வைத்திருந்தவர் அதன் நுனியால் அதை குத்தினார். ஓங்கிக்குத்தவில்லை. அதனருகே மெதுவாகத் தூக்கி சட்டென்று ஓர் இறக்கு ‘ரிப் ரிப் ரிப்’ என்ற ஒலியுடன் அதுகுச்சியில் மாட்டி துடித்து நெளிந்தது. பெருச்சாளியின் வாய்க்குள் உள்ள பற்களை அப்போதுதான் பார்த்தேன். அதை அப்படியே மேலே தூக்க இன்னொருவர் அதன் வாலைப்பிடித்து உருவி எடுத்து கீழே கல்லில் இரண்டு முறை ஓங்கி அறைந்தபின் மூட்டைக்குள் போட்டுக்கொண்டார். மூட்டைக்குள் கனமாக இருப்பவை பெருச்சாளிகள் என்பதை நினைக்க ஆச்சரியமாக இருந்தது.

‘எதுக்குங்க?’ என்றேன்.

‘சாமி, இதானுங்க சாப்பாடு’

‘இதுவா?’

‘நல்ல டேஸ்டா இருக்கும் சாமி…’

சாக்கு வைத்திருந்தவர் ‘கறியிலேயே பெருச்சாளிதான் சாமி டேஸ்டு…ஒருக்கா சாப்பிட்டுப்பாத்தா விட மாட்டே’ என்றார்.

‘எதுக்கு அவ்ளவு புடிக்கிறீங்க?’

‘நாங்க நறைய பேரு இருக்கோம் சாமி…புள்ளகுட்டீல்லாம் இருக்கு சாமி’

அவர்கள் அப்பால் நகர்ந்து சென்றார்கள். நிழல்கள் அசைவதுபோலத்தான் இருந்தது அவர்கள் சென்றது. ஓசையே இல்லை. நான் போர்வையை கடாசிவிட்டு எழுந்து அவர்கள் பின்னால் போனேன்.

‘நீ எதுக்குசாமி கூடவே வாரே”

‘சும்மா பாக்க’

‘இதுல என்ன பாக்கறது?’

சாக்கு வைத்திருந்தவர் அவர்களின் மொழியில் ஏதோ சொல்ல மற்ற இருவரும் பதில் சொன்னார்கள். மிகவேகமாகப் பேசுவது போலிருந்தது. காய் காய் என்று ஒரு சொல் திரும்பத்திரும்ப வருவதுபோலக்கேட்டது.

அடுத்தபெருச்சாளியை குத்தி மேலே எடுத்தபோது ‘காமிங்க’ என்றேன்.

குத்தியவர் அதை என்னிடம் நீட்டினார் ‘சாமி கடிச்சுப்போடும்.கடிச்சா புண்ணு லேசிலே ஆறிடாது’

நான் அதன் முதுகை தொட்டுப்பார்த்தேன். எலியின் முடி மிகமென்மையானது. அதன்முடியைக்கொண்டு ஒருகாலத்தில் ஐரோப்பியப் பெண்களுக்கு புருவத்துக்கான பொய்முடி செய்வார்கள் என்று எங்கோ வாசித்திருக்கிறேன். பெருச்சாளியின் முடி முள்மாதிரியே இருந்தது.

‘நகத்துக்கும் வெஷமுண்டு சாமி…’

‘பெருச்சாளி புள்ளியாரு வாகனம் தெரியுமில்ல?’ என்றேன்.

‘ஆமுங்களா?’ என்றார் டார்ச் விளக்கு வைத்திருந்தவர். பிள்ளையார் என்பது என்ன என்றே அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்று தோன்றியது.

நான் ”ரோட்டோரத்திலே இருக்குமே, யானைமாதிரி தலை உள்ள சாமி…அதோட வாகனம் பெருச்சாளிதான்’ என்றேன்.

‘ஆமுங்களா?’

அவர் அதை உள்ளே வாங்கவேயில்லை என்று தெரிந்தது. அவர்களுக்கு சம்பந்தமில்லாததை கவனிக்கும் கருவியே அவர்களுக்குள் இல்லை என்று நினைத்துக்கொண்டேன். இந்தநகரத்தில் வாழ்ந்தும் பிள்ளையார் யாரென்றே தெரியாத ஒருவரிடம் சொல்லிமட்டும் என்ன புரியவைக்க முடியும்.

அவர்கள் சென்றபின் திரும்பி வந்து படுத்துக்கொண்டேன். அவர்களுக்கு எலிக்குப் பஞ்சமே இருக்காது. நகரில் கூட்டம்கூட்டமாக நிறைந்திருப்பவை அவை. எலியை உணவாகக் கொள்ள ஆரம்பித்தால் அதன்பின் சாப்பாடு என்பதைப்பற்றிய கவலையே தேவையில்லை. அவர்கள் வீடுகளில் தங்குவதில்லை. உடைகளைப்பற்றிய கவலையே இல்லை.

அப்படியென்றால் அவர்கள் எதற்கு தொழில் செய்கிறார்கள்? பாரிமுனையில் அவர்களின் பெண்கள் விதவிதமான ஊக்குகளை கோர்த்து சங்கிலிமாதிரி தூக்கிக்கொண்டு அலைந்து திரிந்து விற்பதைக் கண்டிருக்கிறேன். முதுகில் கிழிசல்தூளியில் மூக்குவடியும் செம்பட்டைத்தலைக்குழந்தை அமர்ந்து ஆர்வமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும். நடக்க ஆரம்பித்துவிட்ட குழந்தைகள் ஒவ்வொருவரையாக காலில் தொட்டு ‘ஷாமி ஷாமி’ என்று பிச்சைகேட்கும். விலகிச்சென்றால் உற்சாகமாக பின்னாலேயே வந்து ’ஷாமி ஷாமி…’

சாமிகள். நான் வாழும் உலகைச்சேர்ந்தவர்கள் எல்லாருமே அவர்களுக்கு ஏதோ ஒருவகை தேவர்கள். தலைக்குமேலே சிறகுடன் பறந்தலையும் தேவர்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நாம் இவர்களின் கண்ணுக்குப்படுகிறோம். இல்லை, ஒருவேளை கிண்டலுக்காகத்தான் அப்படி அழைக்கிறார்களா?

அந்த நாளுக்குப்பின் அவர்கள் என் கண்ணுக்குப்பட ஆரம்பித்துவிட்டார்கள். பாரிமுனையில் பரபரப்பான சாலையின் ஓரத்திலேயே பாலிதீன் தாளாலும் வேட்டியாலும் கூடாரம் கட்டி அவர்கள் குடியிருப்பதை கண்டேன். காலை பத்துமணிக்கு ஆண்கள் உல்லாசமாக சும்மா அமர்ந்திருந்தார்கள். கொண்டை போட்டு அலுமினிய மூக்குத்தி அணிந்த கட்டுமஸ்தான ஒருவர் மண்ணில் கால்நீட்டி அமர்ந்து அதன்மேல் ஒரு குழந்தையை வைத்து தூக்கி தூக்கி கொஞ்சிக்கொண்டிருந்தார். இன்னொருவர் ஒருக்களித்துப்படுத்து சிறிய டிரான்ஸிஸ்டரில் பாட்டுகேட்டுக்கொண்டிருந்தார்.

அப்பால் நான்கு கிழவர்கள் வட்டமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் குச்சிகள் அருகே வைக்கப்பட்டிருந்தன. ஒரு கிழவி எதையோ கல்லில் வைத்து நசுக்கிக்கொண்டிருந்தாள். இருகுழந்தைகளை ரஜினிகாந்தின் பெரிய முகம் மீது படுக்கவைத்திருந்தனர். காகங்கள் அவர்கள் நடுவே அமர்ந்தும் எழுந்துபறந்தும் சிறகடித்தன. காற்றில் கூடாரத்தின் விலா உப்பி உப்பி அமிழ்ந்தது. ஒரு பிரியமான மிருகம்போல அது அவர்கள் நடுவே நீலநிறத்தில் நின்றுகொண்டிருந்தது.

பரபரப்பாக ஓடுபவர்கள், பேருந்துக்காக காத்திருப்பவர்கள், விற்பவர்கள், கூவுபவர்கள் எவரும் அவர்களை கவனிக்கவில்லை. நான் விலகி நின்று அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். கிழவர்கள் மிக உயிர்வேகத்துடன் பேசிக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவர் பேசுவதையும் பிறர் மறித்துப் பேசினர். அப்படி எதைத்தான் விவாதிப்பார்கள் என்று தெரியவில்லை. சட்டென்று ஒன்று தெரிந்தது, அவர்கள் சாலையில் நிற்கும் என்னையும் என் உலகத்தையும் கொஞ்சம்கூட கவனிக்கவில்லை.

காமதேனு என்ற திரையரங்கில் ஓர் ஆங்கிலப்படம் பார்க்க நுழைந்தேன். மிகப்பழைய படம். இரண்டுநாள் இடைவெளிக்காக போட்டிருப்பார்கள் போலும். பழைய ஒரு சுவரொட்டி மட்டும்தான் இருந்தது. நான் சீட்டு வாங்கியபோது என்னைத்தவிர எவரும் இல்லை. உள்ளே சென்று அமர்ந்தபோது ஒருவர் இருப்பதைப் பார்த்தேன். இரண்டாம் ஆட்டத்துக்கு இத்தகைய படங்களுக்கு வருபவர்கள் மிகமிகத் தனிமையானவர்கள், என்னைப்போல.நான் மிகவும் தள்ளி அமர்ந்துகொண்டேன். இன்னொருவர் வந்து மிகவும் தள்ளி அமர்ந்துகொண்டார். மேலும் இருவர் சந்தேகத்திற்குரிய நெருக்கத்துடன் வந்தனர்.

சற்றுநேரத்தில் கலைசலான சத்தம் கேட்டது. பத்திருபதுபேர் கூட்டமாக வாசலில் நின்று பேசியபின் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் முன்னிருக்கைகளில் சென்று அமர்ந்தார்கள். எல்லாருமே நரிக்குறவர்கள். ஐந்தாறு பெண்கள், இரண்டு சிறுமிகள், பெண்களின் இடுப்பில் கைக்குழந்தைகள். படம் ஆரம்பமாகும் வரை கத்திப்பேசிக்கொண்டே இருந்தார்கள். எங்களுக்கு மின்விசிறியை போட உள்ளே வந்த ஊழியர் ‘த..அங்க என்ன சத்தம்?’ என்று அதட்டினார்.

‘என்னத்தை புரியுதுண்ணு வாறாங்க?’ என்றார் அங்கே இருந்த வழுக்கைத்தலை மனிதர்.

அவருடன் இருந்த இன்னொருவர் ‘அதுங்களுக்கு தமிழ்ப்படம் மட்டும் என்னத்தை புரியுது? எல்லாமே படம்தான்…’என்றார்.

ஊழியர் என்னருகே வந்து எனக்கு மட்டும் கேட்கும்படி மெல்ல ‘இவனுக மட்டும் புரிஞ்சுதான் இங்கிலீஸு படம் பாக்கிறானுகபோல…’ என்றபடிச் சென்றார். எனக்குநானே புன்னகை செய்துகொண்டேன்.

உண்மையில் தலையும் வாலுமில்லாத படம். ஒருவனுக்கு ஏதோ நோய், ஆஸ்பத்திரியில் இருக்கிறான், அவன் மனைவி அவனை நன்றாக பார்த்துக்கொள்கிறாள், ஆனால் அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான், அந்தக் காதலனை கணவன் அடிக்கடி சந்திக்கிறான், டாக்டர் என்னவோ சொல்கிறார். கணவன் இறந்துபோனானா இல்லையா என்று படம் முடிந்தபின்னரும் புரியவில்லை.

படம் முடிந்ததும் அவர்கள் கூச்சலிட்டு சிரித்துப்பேசிக்கொண்டே வெளியே சென்றார்கள். நான் வேறுவழியாக வெளியே சென்றபோது வெளியே செல்லும் வாசலின் அருகே அவர்களில் ஒரு அரைக்கிழவி உற்சாகமாக கைகால்களை ஆட்டி நடனமிடுவதைப் பார்த்தேன். இருவர் கைகளைத்தட்டினார்கள். அதன்பின்புதான் அங்கே டீக்கடையில் எம்ஜிஆர் பாடல் ஓடுவதை கவனித்தேன். ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்…அவள் ஹா ஹா ஹா என்ற ஒலிக்கேற்ப இடுப்பில் இருந்த பாவாடையைத் தூக்கி தூக்கிக் காட்ட கடையில் இருந்தவர்கள் சிரித்தார்கள்.

நான் அச்சகம் செல்ல வெகுதூரம் நடக்கவேண்டும். இருளில் நடந்துகொண்டிருக்கையில் யோசித்தேன். அழுதுகொண்டோ கவலைகொண்டோ இருக்கும் ஒரு நரிக்குறவரைக்கூட நான் பார்க்கவில்லை. அவர்களுக்குள் பயங்கரமாகச் சண்டை போடுவார்கள். மாறிமாறி கையில் கிடைத்தவற்றை எடுத்து வீசிக்கொண்டு ஆவேசமாக வசைபாடுவார்கள். சண்டைகளில் பெரும்பாலும் பெண்கள் உடைகளைத் தூக்கி காட்டியபடி நடனம்போல ஆடி வலிப்புகாட்டினார்கள். அனால் சில நிமிடங்களிலேயே சிரிப்பு, கூச்சல், நடனம்.

ஒருமுறை ஒரு கிழவி குடுமி வைத்த ஒருவனை நோக்கி பாவாடையைத் தூக்கியபடி ‘ச்சோட்! ச்சோட்! ச்சோட்!’ என்று கூவியபடி ஓடினாள். அவன் தன் கையிலிருந்த குச்சியை நீட்டி ‘லாந்த்! துமிரி லாந்த்’ என்று கூச்சலிட்டான். அவள் ஒரு கல்லை எடுத்து எறிய அது சாலையில் வந்து விழுந்தது. ஆட்டோக்காரர் ‘நாயிங்க’ என்று வளைத்துச்சென்றார். கிழவி ஒன்றும் நடக்காததுபோல அவளுடைய கூடாரத்துக்குத் திரும்பிச்சென்றாள். அவன் ஏதோபாட்டை முனகியபடி திரும்பிநடந்தான்.

மீண்டும் ஒருமுறை என் தெருவிலேயே பெருச்சாளி பிடிக்கவந்தார்கள். இம்முறை வேறு ஒரு குழு. நான்குபேர் இருந்தனர். நாலைந்து பெருச்சாளிகளைப் பிடித்தனர். அவர்கள் அப்பால் செல்வதை கொசுவலைக்குள்ளேயே படுத்து பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தப் பெருச்சாளியை நான் ஏன் இன்னமும் நினைவுகூர்கிறேன் என்று யோசித்தேன். அதன்முகம் சின்ன நாட்டுநாய்க்குட்டியைப் போலிருந்தது. தலைமேல் வருடினால் நாய்க்குட்டி அப்படித்தான் சொக்கி நிற்கும்.

தூரத்தில் சைக்கிளில் வந்த ஒருவர் அவர்கள் அருகே இறங்குவதைக் கண்டேன். அவர் போலீஸ்காரர் என்று தெரிந்தது. கையில் பெரிய டார்ச் வைத்திருந்தார். சைக்கிளை ஸ்டாண்ட் போடாமலேயே நின்று ஏதோ கேட்டார். சட்டென்று குரலை உயர்த்தி ‘டே பொறுக்கித்தாளி!’ என்று கூவியபடி டார்ச் விளக்கால் ஒருவன் தலையில் அறைந்தார். உக்கிரமான அடி. அவன் அலறியது சொல்லற்ற மிருகக்குரல் போலிருந்தது. ‘ஓடு…ஓடுரா’ என்று இன்னொருவனையும் டார்ச்சால் ஓங்கி அறைந்தார். இன்னுமிருவர் ‘சாமீ சாமீ..போறம் சாமீ..’ என்று கூவினார்கள்.

‘ஓடு…நிக்கக்கூடாது, கொன்னிருவேன்’ அவர் டார்ச்சை ஓங்கும்போது அவர்கள் அடிவாங்குவதற்காக உடலை வளைத்து கையை சற்றுதூக்கி பதுங்கி நின்றார்களே ஒழிய ஓடவில்லை. ஓடினால் அவரால் பிடிக்கமுடியாது. சைக்கிள் அவர் உடலில் சாய்ந்து நின்றது.

‘கைய.. கைய.. கைய ..எடுடா….தடுப்பியா? டேய்’ அவன் கையை விலக்க மூன்றாமவனுக்கும் அடி விழுந்தது. அடிபட்டவர்கள் தலையை கையால் பொத்தியபடி குனிந்து குறுகி நின்றனர். மிக வலுவான அடிதான்.

‘டேய் வாடா இங்க…வாடான்னா’

‘சாமி சாமி’

‘வாடா’

அவன் அருகே வந்ததும் அவனையும் ஓங்கி அறைந்தார். அடி சரியாகப்படவில்லை. அவன் வளைந்துவிட்டான் ‘டேய் நில்ரா..டே’ மீண்டும் அடி.

‘ஓடுங்கடா’

அவர்கள் சாக்குகளும் கம்புகளுமாக தலையைப் பொத்திக்கொண்டு சென்றார்கள். சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போலீஸ்காரர் என்னை நோக்கி வந்தார். நான் சாலையில் நின்றிருந்தேன்.

‘என்ன சார்?’

‘யார்ரா நீ?’

‘இந்த பிரஸ்சிலே வேல பாக்கிறேன்..’ என்றேன். ‘என்னாச்சு?’

‘என்ன ஆவணும்? போய் படுரா’

நான் திரும்பச்சென்று கொசுவலைக்குள் புகுந்தேன். என் உடம்பு மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தது. எவ்வளவோ சத்தங்கள், ஆனால் மனித உடம்பில் அடிவிழும் ஒலியை மட்டும் மனம் எவ்வளவு நுட்பமாக உள்வாங்கிக்கொள்கிறது.

போலீஸ்காரர் சைக்கிளில் திரும்ப வந்தார். சைக்கிளை சாய்த்து நிறுத்திவிட்டு ‘என்ன தம்பி தூங்கிலியா?’ என்றார்.

‘இல்ல’

‘கம்னாட்டிப்பசங்க தம்பி…சும்மா ஒண்ணுரெண்டு போட்டு உட்டாத்தான் ஒளுங்கா இருப்பானுக’ என்றபடி என்னருகே அமர்ந்தார். ’நமக்கு இந்த ஏரியாதான் ரோந்து…தம்பி பேரு என்ன?’

என் பெயரைச் சொன்னபடி எழுந்து கொசுவலைக்கு வெளியே வந்து அமர்ந்தேன்.

‘கொசு கடிச்சு கண்ணசர முடியாது….என்னா கொசு…முனிசிப்பல்காரன் மருந்தடிக்கிறானான்னா அடிக்கிறான். கொசு எங்க கேக்குது…?’ என்றார். ‘தம்பிக்கு எந்த ஊரு?’ அவர் கை தற்செயலாக என் தொடைமேல் பட்டது. உடனே அது தற்செயலல்ல என்று எனக்குத் தெரிந்தது.

‘நாகர்கோயில்’

’இம்மாந்தொலை வந்திருக்கிறீங்க…’ என்றார். ‘இங்க என்ன பண்றீங்க?’

‘பிரஸ்ஸிலே புக்கு எளுதறேன்’

‘ஓ…என்னா புக்கு?’ இம்முறை கை இயல்பாக என் இடுப்புக்குக் கீழே தொட்டது.

‘கைய எடுங்க’

‘இருக்கட்டும்’

‘கைய எடுரா’

‘டேய் என்ன? என்ன பேச்சு?’

‘கைய எடுரா….நான் யாரு தெரியும்ல? இங்க அச்சுபோடுற பத்திரிகையில எழுதறவன்…நாறடிச்சிருவேன்’

’சேச்சே என்ன தம்பி….இப்ப என்ன ஆச்சு? சரி உடுங்க’

‘போங்க நான் தூங்கணும்’

‘அதில்ல…மனசில வச்சுக்காதீங்க’

‘போங்கய்யா’

அவர் எழுந்து சென்றார். சைக்கிள் உருளும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. என் மனதில் நிறைந்த கசப்பு என்னை வெகுநேரம் தூங்கவிடவில்லை.

நாலைந்து நாட்கள் கழித்து அவரை டீக்கடையில் பார்த்தேன். ‘சௌக்கியமா தம்பி?’ என்றார்.

‘ம்’ என்றேன்.

‘தம்பி கோச்சுக்காதீங்க…நான் அத அப்பவே உட்டாச்சுல்ல…டீ சாப்பிடுங்க’

‘பரவால்ல’

இரண்டுநாள் கழித்து அவர் இயல்பாக வந்து திண்ணையில் அமர்ந்தார். நான் வெளியே வரவேயில்லை.

‘மார்கழி இப்ப வந்திருமே…பனியில இங்க எப்டி படுப்பிக?’

‘உள்ள ரூம் இருக்கு…குளிரா இருந்தா அங்க படுக்கலாம்’

‘தம்பி ஒண்ணியும் மனசில வச்சுக்காதீங்க…நம்ம பொளைப்பு இது நாறப்பொளைப்பு’ என்றார். ‘நம்ம பேரு ரத்தினம்….புதுக்கோட்டைப்பக்கம். இங்கதான் டூட்டி…குடும்பம் கோட்டர்ஸிலே இருக்கு…’

நான் சற்று தணிந்தேன். ‘எதுக்காக அவங்கள அடிச்சீங்க?”

‘நரிக்கொறவக்கூட்டம் தம்பி…’

‘திருடுவாங்களா?’

‘சேச்சே… திருடல்லாம் மாட்டாங்க. அவனுங்களுக்கு கையிலே காசு ஜாஸ்தி தம்பி. சாப்பாடு அப்டி இப்டி ஆயிரும். ராத்திரி ஓட்டலிலே மிஞ்சினத திம்பாங்க. நாயி எலீண்ணு பிடிச்சு சுட்டுத்திம்பாங்க. அப்றம் எதுக்கு காசு? பொம்புள எதாவது வித்து காசுகொண்டாந்தா அதுக்கு சாராயத்த ஊத்திக்கிடறது. சினிமா பாக்கிறது. அஞ்சு ரூபா கடைச்சா அன்னிக்கே தீத்திரணும். கையில காசு இருந்தா தூக்கம் வராம அலைவானுக. குடிச்சுப்போட்டு ரா முச்சூடும் ஆட்டம்தான். சிந்தாரிப்பேட்டையாண்ட இவங்க எடம் ஒண்ணு இருக்கு…கூவம் பக்கமா…இந்நேரம் ஆட்டம்போட்டு கூத்தடிச்சிட்டிருப்பானுக… நாகரீகம் கெடையாது தம்பி…படிப்பு பண்பு ஒரெளவும் கெடையாது…நம்மள மாதிரி மனுசங்க கெடையாது இவுனுங்க. இந்த பண்ணி பெருச்சாளிமாதிரி ஒரு சீவன்…’

‘ஓ…’ என்றேன். ‘திருடல்லேன்னா எதுக்கு அடிக்கிறீங்க?’

‘குளுவக்காரப்பயக்க தம்பி…அதான் ரெண்டு போட்டு உடுறது…ஆனா திருடல்லாம் மாட்டானுக. இவனுக திருட ஆரம்பிச்சா பிறவு போலீஸுகாரன் கோமணம் கட்டிட்டு காசிபோவ வேண்டியதுதான். ஊரிலே இவனுக்குத் தெரியாத சந்துபொந்து கடையாது. ஊருக்குள்ளயே எவனையும் கண்டுபிடிக்கமுடியாது. எவனுக்கும் பேரு ஊரு அட்ரஸு ஒரு எளவும் இல்ல…ஊரவிட்டுபோனான்னா அவ்ளோதான்…ஆனா திருட மாட்டானுக’

‘ஏன்?’

‘அவனுக திருடுறதில்ல….அவஞ்சாதி பொம்புளைக்குட்டிக காசுக்கும் போறதில்ல….குட்டிகள பாத்திருக்கிகளா? சுள்ளுண்ணு இருப்பாளுக. ஆனா பத்தினிகளாக்கும். எசகுபெசகா எதுனா பேசினா புருசங்காரன கூட்டியாந்திருவாளுக… ‘

‘ஓ’

‘இவனுக பொதுவா மனுசங்கள ஒண்ணும் செய்யமாட்டானுக…ஆனா அவங்க பொம்புளையாளுகள தொட்டா விடமாட்டானுக…நாலுவருசம் முன்ன ஒரு ரவுடிக்க சாவிக்கொத்த அப்டியே வெட்டி கொண்டுபோய்ட்டானுக…பாவம் காலம்பற வரை கெடந்து அலறியிருககான். யாரும் வாசல தெறக்கல. காலம்பற செத்து குளுந்து கெடக்கான்…ஆடறுத்தமாதிரி ரெத்தம்…என்ன ஏதுண்ணு விசாரிச்சா இப்டி’

‘பிறவு?’

‘என்ன பிறவு? நரிக்குறவனை என்னான்னு கோர்ட்டுக்கு கொண்டுபோறது? அவன் எங்க போனான்னு எங்க போயி தேட? புடிச்சாலும் சாச்சி வேணும்ல?’ குரலைத் தாழ்த்தி ‘தம்பிக்கு இங்க எவ்ளோ குடுக்கிறான்?’

‘ஏன்?’

‘இல்ல, பாத்தா படிச்சவரு மாதிரி இருக்கீங்க. நல்லா குடுத்தா எதுக்கு இப்டி தங்குறீங்க? நல்ல மேன்சன்ல இருக்கலாம்ல’

‘பரவால்ல..குடுக்கிறார்’

‘தம்பிக்கு இஷ்டமிருந்தா போலீஸுக்கு ஹெல்ப் பண்ணலாம்ல?’

எச்சரிக்கையுடன் ‘என்ன ஹெல்ப்?’ என்றேன்.

‘பெரிசா ஒண்ணும் இல்ல…இப்ப பல கேஸையும் ஒருமாதிரி அப்டி இப்டித்தான் போடுவோம்…அதாவது…ஒண்ணில்ல…இப்ப உங்க நகை காணாமப்போச்சுன்னு வைங்க….அதுக்குப்பின்னால தேடிப்போறதுக்கு நமக்கு ஃபோழ்ஸ் இல்லல்ல? அப்ப என்ன பண்ணுவோம்னா பழைய கேடி ஒருத்தன புடிச்சு எவிடென்ஸ் போட்டு உள்ள கோர்ட்டுக்கு கொண்டு போயிடறது…இந்தமாதிரி…’

‘எவிடென்ஸா?’’

‘அதெல்லாம் நம்மகிட்ட இருக்கும்….களவுகுடுத்தவுங்க இதான் எங்க நகைன்னு சொல்லிட்டாப்போச்சு…மித்தபடி சாச்சிதான் பிரச்சினை’ மெல்ல ‘சாச்சி சொன்னா அதுக்கு தனியா பணம் குடுத்திருவோம்’ என்றார்.

‘திருட்டுலயா?’

‘திருட்டுல பெரிசா ஒண்ணும் வராது. ஆனா கொலைன்னா நல்லாவே வரும்…. செத்தபார்ட்டியோட ஆளுங்ககிட்ட பேசிக்கூட நல்ல லம்பா வாங்கிக்கிடலாம். பலபேரு இப்ப நல்லாவே சம்பாரிக்கிறாங்க…சில கேசில பெரிய லம்பாக்கூட அடிச்சிடலாம்…’

‘பொய்சாட்சியா?’

‘சாட்சீன்னாலே அது பொய்யிதான். கொலபண்றவன் சாச்சி வச்சுட்டா பண்றான்? சாச்சீன்னு இருந்தாலும் அது அவனுக்கு தெரிஞ்சவனா சொந்தமாத்தானே இருக்கும்? அவன் வந்து சொல்லுவானா? சட்டத்தில கண்ணால பாத்த சாச்சி இல்லேன்னா தண்டனை கெடையாதுன்னு இருக்கு…நாங்க என்ன பண்றது…எதுக்குச் சொல்றேன்னா, இப்ப நீங்க இந்த ஊரு இல்ல. இங்க ஊருன்னா செலசமயம் பிரச்சினை வரும்….சாச்சியச்சொல்லிட்டு ஊராண்ட போய்ட்டா எவன் கண்டுபுடிக்கிறது?’

நான் எழுந்து அமர்ந்துவிட்டேன் ‘யாரு, நானா?’

’இருங்கதம்பி, பதற்றப்படாதீங்க. சொல்றதக் கேளுங்க….சொல்லவேண்டியத நாங்க சரியா சொல்லிக்குடுப்பம். அத அப்டியே அச்சச்சா சொல்லிட்டாப்போச்சு…பெரிய விசயமே கெடையாது. சாச்சி சொல்றது ஒண்ணியும் கிரைம் இல்ல’

‘பொய்சாட்சி சொல்றதா?’

‘பொய்சாச்சீன்னு உண்டா என்ன? சாச்சி நம்புற மாதிரி இல்லேன்னு வேணுமானா முன்சீப்பய்யா சொல்லலாம்…அதனால என்ன?’’

‘அதெல்லாம் வேணாம், நீங்க போங்க’

‘தம்பி இப்ப என்ன? பளிபாவம் பாக்கிறீங்களா?’

‘ஆமா’

‘என்னத்த பாத்தீங்க போங்க…நீங்க ஒருநடை கோர்ட்டுல வந்து பாருங்க…ஒருநாளைக்கு ஆயிரம்பேரு சாச்சி சொல்றாங்க… அவ்வளவும் பொய்சாச்சி. எனக்கும் இருபத்தாறு வருசம் சர்வீஸாச்சு… தனக்கு ஒரு பிரச்சினைன்னா போலீசு சொல்லிக்குடுத்த எந்தப்பொய்யையும் சொல்லக்கூடியவங்கள மட்டும்தான் பாத்திருக்கேன். மகாலச்சுமி மாதிரி இருக்கற குடும்பப்பொம்புளைங்க கூண்டிலே ஏறி நின்னு சத்தியம்பண்ணி பொய்ய சொல்லுறாங்க. வாத்தியாரும் டாக்கிட்டரும் சொல்றான். ஏன், வெள்ளவெளேன்னு அய்யமாரு வந்து நின்னு பகவத்கீதை புக்குமேலே அடிச்சு பொய்சொல்லுறான்….இன்னைத்தேதிவரை நியாயம் பேசின ஒருத்தனக்கூட பாத்ததில்ல…’

‘அப்ப அவனுங்கள போய் கூப்பிடுங்க’

‘ஏகப்பட்ட ஆளு இருக்கு தம்பி…எங்களுக்கு கேஸும் நெறைய இருக்கு…இப்ப தம்பி படிச்சிருக்கீங்க. கொளப்பமில்லாம தெளிவா பதிலச் சொல்லுவீங்க…அதான் பாத்தேன்..’

‘நீங்க போங்க….எங்கிட்ட பேசவேண்டாம்’

‘நல்லா யோசிச்சுப்பாருங்க….இங்க ஒருத்தனும் யோக்கியம் கெடையாது’

’அது உங்க நெனைப்பு….எவ்ளவோ பேரு கௌரவமாத்தான் வாழுறாங்க’

‘என்ன கௌரவம்? எல்லாம் பயம்….அவ்ளவுதான். இப்ப அஞ்சுபவுனு நகை திருட்டுபோச்சுன்னு பொம்புள வாரா. இன்னொரு நகைய காட்டி இதான் உன் நகைன்னு சொல்லு, இந்தாள செயிலுக்கு அனுப்பு. உன் நகைக்கு பதிலா இந்த நகைய வாங்கிக்கோன்னு அய்யா சொல்றாரு. மாட்டேன், இது என் நகை இல்லேன்னு சொல்ற ஒரு பொம்புளையக்கூட எங்க டிபார்ட்மெண்டில இன்னைத்தேதிவரை நாங்க பாத்ததில்ல’ அவர் குரல் ஓங்கியது ‘எங்க கொலதெய்வம் மேலெ சத்தியமாச் சொல்றேன் தம்பி, நான் ஒருத்தனையும் பாத்ததில்ல…’

‘நான் யோக்கியன்….போருமா?’

’என்னத்த யோக்கியன்? நீங்க மாட்டிக்கிட்டீங்கன்னு வைங்க. தப்பிக்கணுமானா பொய் சொல்லணும்னு சொன்னா சொல்லமாட்டீங்களா? உங்க சாமி மேலே சத்தியமா சொல்லுங்க’

என்னால் அதைச் சொல்லமுடியவில்லை.

‘பாத்தீங்களா? சொல்லமுடியாது….பொய்சாச்சி சொல்லக்கூடாதுன்னு ஒருத்தரும் நினைக்கல்ல. ஆனா எதுக்கு வம்புன்னு நெனைச்சு வரமாட்டாங்க…நீங்க தைரியமா வாங்க தம்பி…ஒரு லம்பு வந்தா பிறவு எதுக்கு இந்த பொளைப்பு?’

நான் பெருமூச்சு விட்டேன் ‘…இல்லே இந்த நரிக்குறவனுங்கள கூப்பிட மாட்டீங்களா?’

‘சேச்சே, அவனுக பொய்சாச்சி சொல்லமாட்டங்க தம்பி’

‘ஏன்?’

‘ஏன்னா அவனுக நரிக்கொறக்கூட்டம்ல? சாமி பொய்சாச்சி சாமீன்னு அதையே சொல்லிட்டிருப்பான். பத்தாயிரவாட்டி சொன்னாலும் ஏறாது. கூண்டிலே ஏறி அதையே சொல்லி களுத்தறுப்பான்….இவனுக மட்டும் சாச்சி சொன்னாங்கன்னா நாட்டிலே வேற சாச்சியே இருக்காதே…என்னா ஒரு வசதி…மத்தவன்னா நீ எதுக்குடா அப்ப அங்க போனேன்னு அக்கூஸ்டுவக்கீலு கேப்பாரு…இவன்கிட்ட கேக்கமுடியாதுல்ல?சாமி எலிபுடிக்கப்போனேன்னு சொன்னா தீந்துதே….நாறத்தாளிங்க , அடிச்சு கொன்னாலும் பொய்யச் சொல்லமாட்டானுக…ஓணான் திங்கிற கூட்டம்’

பெருமூச்சுடன் ’என்னால முடியாது சார்…’

‘நல்லா யோசிச்சுச் சொல்லுங்க…வலியவாற மகாலச்சுமிய விடவேணாம்…என் அனுபவத்தில சொல்றேனே, எவன் லச்சுமிய ஒருக்கா வேண்டாம்னு சொன்னானோ பிறவு அவ ஏறெடுத்தும் பாக்கமாட்டா…வரட்டா தம்பி?’

முந்தைய கட்டுரைஉமிழ்தல்
அடுத்த கட்டுரைஇரு கடிதங்கள்