பண்பாட்டின் பலமுகங்கள்

அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம்

பண்பாடு என்றால்  மக்களின் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தில் வழங்கும்,புழங்கும், மொழியும், நெறிமுறைகளும், பழக்க வழக்கங்களும்,  சடங்குகளும் சம்பிரதாயங்களும் அடங்கும் அல்லவா?   இவைகளின் கூட்டு பாதிப்புகள்தனே நீங்கள் சொல்லும் படிமங்கள் ஆகவும்  குறியீடுகள் ஆகவும் உரு பெறுகின்றன?  உங்கள் கட்டுரையில்,  இந்த படிமங்களும் குறியீடுகளும் நாம் வாழும் சூழலில் இருந்து வருகின்றன என்றும்,  நம் மனம் இந்த படிமங்கள் குறியீடுகள் மூலமாக செயல் படுகின்றது
 என்றும் எழுதி உள்ளீர்கள்.  அப்படியானால்,  ஒரு  பண்பாட்டு சூழலில் கெட்ட , கேவலமான,  நியாயத்துக்கு
 புறம்பான ,  இழிவானவைகளும்  இருக்கும்.  வரதக்ஷிணை,  விதவைகோலம்,  பெண்ணடிமை,  ஜாதிகொடுமை,  ஏற்ற
 தாழ்வுகள் போன்ற  கொடிய முறைகள் அந்த படிமங்கள்  மற்றும் குறியீடுகள் ஆகியவற்றை  களங்க படுத்தலாம்
 அல்லவா?  நம்முள் படியும் இந்த குறைபாடு உள்ள படிமங்கள் குறியீடுகள் நம் மனதை தவறாக செயல்படுத்தாதா?
இப்படி ஒரு கூட்டம் புலம் பெயர்ந்து வேறுஒரு நாட்டில் வாழும் பொது,   தங்கள் பண்பாட்டில்  தவறாக உள்ளவைகளை  களைந்து விட்டு,   அந்த புதிய நாட்டில் நல்ல அம்சங்கள் இருந்தால் அதை ஏற்று கொள்வதில் என்ன தவறு?  தங்கள் சொந்த பண்பாட்டில் உள்ள நல்ல அம்சங்களை மறக்காதவரை?! அப்படி செய்தால்,  அந்த படிமங்களில் உள்ள கேடுகள் நீக்கப்பட்டு,  அதனால் மனமும் நல்ல முறையில் செயல் படும் அல்லவா? நம் எண்ணங்களும் கற்பனைகளும் கனவுகளும் சீர் படும் அல்லவா?

நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல தமிழ் மற்றும் நல்ல தமிழ் கவிதைகள் கற்று கொடுத்தீர்கள்,  ஆனால் சினிமா மட்டும் மலையாள சினிமாவை காட்டினீர்கள்.  தமிழ் சினிமாவை அல்ல,  ஏன்?  மலையாள சினிமாஅளவுக்குதமிழ் சினிமாவில் தரம் இல்லை என்று உங்களுக்கு உணர்ந்ததால்.  அது போலவே இங்குள்ள தமிழர்களும்  தங்கள்  பண்பாட்டில் உள்ள சில தரம் இல்லாதவைகளை புறக்கணித்து விட்டு,  அந்த விஷயங்களில் அமெரிக்க முறையை கடைபிடிக்கலாம்.  இது பண்பாட்டு இழப்பு ஆகுமா,  அல்லது பண்பாட்டை செம்மை படுத்தல் ஆகுமா?

மேலும் எந்த ஒரு பண்பாடும் கலாச்சாரமும்  ஆதி காலம் தொட்டே ஒரே மாதிரியாகவே இருந்ததில்லையே.  காலப்போக்கில் மற்ற  கலாச்சாரங்களில் இருந்து நமக்கு நிறைய பண்பாட்டு அம்சங்கள் வந்து உள்ளனவே? நம் பண்பாட்டில் பெண்ணுக்கு தாலி கட்டும் வழக்கம் எங்கு இருந்து வந்தது?  நம் சங்க இலக்கியங்களில் உள்ள திருமணம் பற்றிய பாடல்களில் தாலி பற்றிய குறிப்பு இல்லையே?  பெண்கள் ஒரு காலத்தில் மார்பு கச்சை அணிந்து,  பின்பு சேலைகட்டி,  இப்போது இளம் பெண்கள்  சல்வார் குமீஸ்
 அணிந்து கொள்கிறார்கள். சேலை இன்னும் மறைந்து விடவில்லை.  ஆண்கள் வேட்டியில் இருந்து பேன்ட் அணிய ஆரம்பித்தனர்.  வேட்டியும் பஞ்சகச்சமும் அழிந்து விடவில்லை.  நமது ஆடை கலாசாரம்  அழிந்து விடாமல் மேலும்
 செழித்து அழகாக இருக்கின்றது என எண்ணுகிறேன்.  இஸ்லாமியர்களிடம் இருந்து பிரியாணியும்,   வெள்ளைக்காரனிடம் இருந்து ரொட்டியும் நமது உணவு கலாச்சாரத்தில் புகுந்தாலும்,  இன்னும் பொங்கல், இட்லியை நாம் மறக்கவில்லையே.இங்குள்ள தமிழர்கள்  தங்கள் பண்பாட்டு அம்சங்களில் சிலவற்றை மறந்து விட்டு இருக்கலாம்; ஆனால்  முக்கியமான சில இன்னும் உள்ளன.  இன்னும் தாய்மார்கள் பிள்ளைகளுக்கு  உணவு ஊட்டித்தான் விடுகிறார்கள்,   அத்தை மடி மெத்தை யடி பாடி உறங்க வைக்கிறார்கள்,  இன்னும் பட்டு சேலையும் காசு மாலையும் அணிந்து கொள்கிறார்கள்.  பல இந்திய – அமெரிக்க
 திருமணங்களில்,  சர்ச்சில் மாலை மாற்றி,  தாலி கட்டி கல்யாணம்  நடக்கின்றன.    

ஆங்கிலோசக்சன் மற்றும் யூதர்கள் அவர்கள் பண்பாட்டை கொண்டு வந்தார்கள் அதனால் வென்றார்கள்.  ஆங்கிலேயர்கள்
 முதலில் இங்கு இருந்த பூர்வீக கலாசாரத்தை அழித்து விட்டு அவர்கள் பண்பாட்டை நிறுவினார்கள்.  யூதர்கள் பண்பாடும் இந்த நாட்டின் முக்கியபொருளாததார கண்ணோட்டதொடும்  இயைந்து விட்டதால் வென்றார்கள்.  ஆனால்  நாம்  இப்போதுதான் இங்கு  குடியேறி வந்தோம்.   தமிழ் பண்பாட்டின் பங்களிப்பு தெரிய வர இன்னும் காலம் ஆகும். இந்த நாட்டில் மனோ தத்துவம்,  மூளை நரம்பு ஆராய்ச்சி இவற்றில் நமது புத்த கொள்கைகளும்  வழிபாட்டு முறைகளும் ஏற்று கொள்ளப்பட்டு பாராட்டும் பெற்று உள்ளன.  இந்த நாட்டின் உணவு முறையிலும் நமது சைவ உணவு பற்றிய அறிவும் ஊக்கமும் உள்ளது.

என் அறிவிற்கு எட்டிய கருத்துகளையும்  எண்ணங்களையும்  கொட்டி இருக்கிறேன்.  உங்கள் பதில் எண்ணங்களை அறியப் படுத்த வேண்டுகிறேன்.  இதை உங்கள் வலைப்பூவில் பிரசுரிக்க வேண்டுகிறேன்.  மற்ற வாசர்கள் கருத்தையும் அறிந்து கொள்ள ஆவல்.

அன்புடன்

 சிவா

 சக்திவேல்

 

 

 

அன்புள்ள சிவா

உங்கள் உணர்வுகள் பெரும்பாலும் அனைத்திலும் எனக்க்கு உடன்பாடே. மரபு என்று சொல்லும்போது நாம் ஒரு பொது உருவகத்தையே குறிப்பிடுகிறோம். அந்த உருவகத்துக்குள் பல்வேறு வகையிலான கருத்துக்கள் உள்ளன. அனைத்துமே சமகால வாழ்க்கைக்கு தேவையானவை என்றோ, அல்லது அனைத்துமே புனிதமானவை என்றோ சமநிலையுள்ள எவருமே சொல்ல மாட்டார்கள். இது எந்த ஒரு பண்பாட்டுக்கும் பொருந்தும்.

எந்த ஒரு பண்பாட்டை நாம் ‘ஏற்றுக்’கொண்டாலும் அதை அறிவார்ந்த விமரிசன நோக்குடன் மட்டுமே அணுகவேண்டும். நடைமுறை சார்ந்தே ஏற்கவும் வேண்டும். ஆகவே நான் சொல்வது ஆய்வுநோக்கு இல்லாத பக்தியையோ உணர்ச்சிகரமான ஈடுபாட்டையோ அல்ல. 

பொதுவாக பண்பாட்டுக்கூறுகளை நல்லவை தீயவை என்றெல்லாம் எளிமைப்படுத்துவதை நான் ஏற்பதில்லை. சமூக அமைப்புகள், நம்பிக்கைகள், ஆசாரங்கள் போன்றவை ஒரு சமூகம் தன் தங்கிவாழ்தலுக்கும் வெற்றிக்கும் தேவையானபடி அந்தந்தச் சூழலின் கட்டாயங்களுக்கு ஏற்ப உருவாக்கிக்கொள்ளும் கருவிகள் என்றே எண்ணுகிறேன். தேவையற்ற ஒன்றை உருவாக்கிக் கொள்ளவேண்டிய அவசியம் சமூகங்களுக்கு இல்லை.

ஆனால் எந்த ஒரு அமைப்பும் ஆசாரமும் நம்பிக்கையும் அதன் பணி முடிந்தபின்னர் வெறும் கூடாகவே எஞ்சும். சமூக உளவியல் அத்தகைய கூடுகளை எளிதில் கைவிடவும் விடாது. அச்சமூகத்தின் சிந்தனைசெய்யக்கூடிய முன்னோடி உறுப்பினர்களாலேயே அந்தக் கூடுகள் விமரிசனத்துக்கு ஆளாக்கபட்டு ,மறுபரிசீலனைசெய்யப்பட்டு, தேவையில்லை என்றால் பிறருக்குச் சொல்லப்பட்டு, நிராகரிக்க வைக்கப்பட வேண்டும். இந்த முன்னோடிச் சிந்தனையாளர்களையே நாம் சமூக சீர்திருத்தவாதிகள் என்கிறோம். எந்த ஒருசமூகத்திலும் எப்போதுமே சீர்திருத்தவாதிகள் தேவை

ஆனால் சீர்திருத்தவாதி என்பவனுக்கு அச்சமூகத்தின் பரிணாமவரலாறு குறித்த ஒரு புரிதல் இருக்கவேண்டும். அதன் இயக்க விதிகளைப்பற்றிய அறிதலும் அவனிடம் இருக்க வேண்டும். அத்தகைய ஒட்டுமொத்த நோக்கு இல்லாமல் அவ்வப்போது கண்ணில்படும் விஷயங்களுக்கு அவ்வப்போது தோன்றும்விதத்தில் எதிர்வினையாற்றும் சீர்திருத்தவாதி ஆக்கத்தை விட அழிவையே அதிகம் உருவாக்குகிறான். குளிப்பாட்டிய நீருடன் பிள்ளையையும் தூக்கி வீசுபவன் அவன்.

சமநிலை கொண்ட சீர்திருத்தவாதி என்பவன் நீதியுணர்வினால் உந்தபப்ட்டவனே ஒழிய தனிப்பட்ட காழ்ப்புகளினால் இயக்கப்படுபவன் அல்ல. அவன் விவேகம் உள்ளவன் என்றால் ஒருபோதும் எந்த ஒரு மக்கள்கூட்டத்தையும் வெறுக்காதவனாகவே இருப்பான். இறந்தகாலத்தின் பழையை எந்த ஒரு தனிமனிதர் மேலும் மக்கள்கூட்டம் மேலும் போடமாட்டான். எந்நிலையிலும் வரலாற்றைவைத்து வெறுப்புகளை உருவாக்கவும் மாட்டான்

வரலாற்றின் ஓட்டத்தில் மனிதர்கள் அவ்வப்போது சாத்தியமான அமைப்புகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவற்றில் தங்களுக்கு அளிக்கப்பட்ட பாத்திரங்களை நடிக்கிறார்கள். அதற்குமேல் மனிதர்களுக்கு வரலாற்றில் செய்வதற்கு ஏதும் இல்லை. எந்த ஒருமனிதனுக்கும் அவனது அன்றாடத்தேவையில் உள்ள அநீதி கண்ணுக்குப் படுவதில்லை.

நேற்று நடந்தவைக்காக நம் முன்னோடிகளை நாம் வசைபாடலாம். அதன்மூலம் நம்மை நாம் மேலானவர்களாக எண்ணிக்கொள்ளவும் செய்யலாம். ஆனால் இன்று நாம் செய்பவைகளுக்காக நாளை நமது வாரிசுகள் நம்மைப்பற்றி அப்படியே எண்ணக்கூடுமென எண்ணவேண்டும். நேற்று அடிமைகள் கொடுமைப்படுத்தப்பட்டமைக்காக இன்று நம் நீதியுணர்வு கலக்கம் கொள்கிறது. நாளை, செயற்கை புரோட்டீன் வந்தபின்னர், உணவுக்காக விலங்குகளை நாம் கொன்றமைக்காக அன்றைய சமூகம் நம்மை எண்ணி கூச்சமும் அருவருப்பும்  அடையக்கூடும்.

சென்றவை எதுவும் வேறு எப்படியும் நடந்திருக்கக் கூடியவை அல்ல என்பதே ஒரு சிந்தனையாளன் வந்தடையும் முக்கியமான விவேகமாக இருக்க முடியும். ‘நாய் கடிக்கவந்தால் நீ நாராயணா என்று சொல்லியிருக்க வேண்டும்’ என்று திரும்பிப்பார்த்து வரலாற்றுக்கு உபதேசம் செய்யும் தகுதி எவருக்கும் இல்லை.

ஆகவே இன்று நம்மிடம் வந்துசேர்ந்திருக்கும் பண்பாடென்பது நம் முன்னோடிகள் தங்கள் வாழ்க்கையின்மூலம் உருவாக்கிக் கொண்டது. நமக்கு அவர்கள் அளித்தது. இதில் எவை நமக்கு உதவும் எவை நமக்கு பொருந்தும் என்று நோக்கி அல்லாதனவற்றை நாம் நிராகரிக்கலாம்.  அவ்வாறன்றி நிராகரிக்கத்தக்கனவற்றை மட்டுமே உருவாக்கிய ஒரு மரபாக நம் இறந்த காலத்தை நாம் கண்டோமென்றால் பிரச்சினை நம்மிடம் இருக்கிறது. சில நிராகரிக்கத்தக்கவற்றை உருவாக்கிய பழிக்காக ஒட்டுமொத்த பண்பாட்டையே நிராகரித்தோமென்றாலும் நாம் தான் இழப்பவர்களாவோம்.

மேலும் பண்பாடு என நாம் சொல்வது ஒரு ஒற்றைப்படையான கட்டுமானத்தை அல்ல. பண்பாடு என்பது ஒரு குரல் அல்ல. ஒரு தரப்பு அல்ல. அது ஒரு உரையாடல்வெளி. ஒரு விவாதக்களம். அது பலகுரல்கொண்டது. உதாரணமாக தமிழ்ப்பண்பாட்டை எடுத்துக்கொள்வோம். தலைவிக்குப் கற்பொழுக்கத்தைச் சொல்லி தலைவனின் பரத்தை ஒழுக்கத்தை அங்கீகரித்த மரபு சங்க இலக்கியத்தில் உள்ளது. ஆனால் ஆணுக்கும் கற்பொழுக்கத்தைச் சொல்லி பரத்தமையை முற்றாக நிராகரிக்கும் குரல் குறளில் உள்ளது. இரண்டுமே தமிழ்ப்பண்பாடுதான்.

மொத்த தமிழ்ப்பண்பாட்டிலும் விழுமியங்கள், மதிப்பீடுகள், அறக்கருத்துக்கள் எவையுமே ஒற்றைப்படையாக இல்லை. பல்வேறு தரப்புகள் முன்வைக்கப்பட்டு அவற்றுக்கிடையேயான விவாதமாகவே நமக்கு அது கிடைக்கிறது. அந்த தரப்புகளில் எதனுடனும் நாம் இணைந்துகொள்ள நமக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ப்பண்பாட்டின் விதி, தமிழ்ப்பண்பாட்டின் குரல் என்று திட்டவட்டமாக வரையறுத்துச் சொல்லப்பட வேண்டிய நெறி ஒன்று உண்மையில் இல்லை.   

ஒழுக்கமுறைகள், ஆசாரங்கள், சடங்குகள் போன்றவை பண்பாட்டின் விளைகனிகளே ஒழிய அவையல்ல பண்பாடு என்பது. அவை பண்பாட்டின் தோற்றங்களாக நமக்கு தெரிகின்றன. அவை காலம்தோறும் மாறிக்கொண்டிருக்கின்றன என்பதை நாம் காண்கிறோம். தமிழ் இலக்கியங்களைப் பார்த்தாலே ஒழுக்கநெறிகளும் வாழ்க்கைமுறைகளும் பலமுறை மாறி வந்திருப்பதைக் காணலாம். அந்தமாற்றம் வழியாக படிபப்டியாக வளர்ந்து வந்திருக்கும் சாராம்சமான ஒன்றைத்தான் நாம் தமிழ்ப்பண்பாடு என்கிறோம்.

அதை நம் பேரிலக்கியங்களில், கலைகளில், நம் நீதியுணர்வில், வாழ்க்கைத்தரிசனத்தில் காணலாம். எந்த ஒரு பண்பாட்டையும் திட்டவட்டமாக இன்னதென்று வகுத்துச் சொல்லிவிட முடியாது. ஆனால் அதன் இருப்பை நாம் உணர்ந்துகொண்டும் இருப்போம். நாம் ஒரு பண்பாட்டை வலிந்து ஏற்றுக்கொள்ள முடியாது. அப்பண்பாட்டுக்குள் நாம் வாழ ஆரம்பிக்கும்போது அது நம்முள் குடியேறுகிறது. நம்முடைய சிந்தனைகளை அது வடிவமைக்கிறது. நம் ஆழ்மனதின் போக்குகளை தீர்மானிக்கிறது. அதையே நமக்குள் ஆழ்படிமங்களாக அது இருக்கிறது என்று சொன்னேன்.

நம் பண்பாட்டை நாமே திட்டவட்டமாக பிரித்தறிந்து சொல்லிவிடமுடியாது. ஏனென்றால் நாம் அதற்குள்தான் இருக்கிறோம். ஒரு பண்பாட்டை அதற்கு வெளியே உள்ள ஒருவர் பிறபண்பாடுகளுடன் ஒப்பிட்டு ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் பொருத்தி ஓரளவுக்கு வரையறைசெய்யமுடியும், அவ்வளவுதான்.

ஒருபண்பாட்டின் உள்ளே இருப்பதென்பது அதன் மொழியில், அதன் கலைகளில், அதன் வாழ்க்கைமுறைகளில் ஈடுபட்டு வாழ்வதன் மூலமே நிகழ்கிறது. அவற்றில் இருந்து பண்பாடு நமக்குள் குடியேறிக்கொண்டே இருக்கிறது. மொழியையும் வாழ்க்கைமுறைகளையும் இழக்கும்போது நாம் பண்பாட்டில் இருந்து விலகிச்செல்கிறோம். ஆகவே என் பண்பாட்டில் இன்ன விஷயங்களை எல்லாம் நான் ஏற்றுக்கொள்கிறேன் இன்னவற்றை எல்லாம் நிராகரிக்கிறேன் என்று சொல்வதைப்போல அபத்தம் இல்லை.

ஆகவே சாத்தியமானது ஒன்றே. மொழிக்குள், கலைகளுக்குள், வாழ்க்கைமுறைகளுக்குள் இருப்பது. அந்தமொழியில், கலைகளில், வாழ்க்கைமுறைகளில் எவையெல்லாம் ஒவ்வாதனவோ, பொருந்தாதனவோ, காலாவதியானவையோ அவற்றை அறிவுபூர்வமாக தவிர்த்துவிடுவது. இதைத்தான் எங்கும் எல்லா மக்கள்குழுக்களும் செய்து வருகிறார்கள்.

ஒருவரின் படைப்பூக்கம் , சுயசிந்தனை ஆகியவை அவனது பண்பாட்டின் வேர்களில் இருந்தே முகிழ்க்க முடியும். யாரையெல்லாம்  மானுடசாதியின் முன்னுதாரணங்களாக, உலகபுருஷர்களாக முன்னிறுத்துகிறோமோ அவர்கள் அனைவருமே தங்கள் தனிப்பண்பாட்டில் இருந்து முளைத்து உலகம் தழுவ விரிந்தவர்களே.

ஒவ்வாதசிலவற்றுக்காக ஒட்டுமொத்தமாக மொழியையும் கலைகளையும் வாழ்க்கைமுறைகளையும் நிராகரித்தோமென்றால் நாம் பண்பாட்டை இழக்கிறோம். அது அளிக்கும் முடிவில்லான ஆழ்மனச் சாத்தியக்கூறுகளை இழக்கிறோம். அதன்பின் பிறிதொரு பண்பாட்டின் வாசலில் இரண்டாம்கட்டப் பிரஜைகளாக அடையாளப்பிச்சை கோரி இரந்து நிற்போம். நான் சொல்லவருவது அதையே

ஜெ

முந்தைய கட்டுரைகிளி சொன்னகதை:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅமெரிக்க பயணம், புதியநிரல்