மான்வேட்டைக்குச் சென்றிருந்தபோது வழிதவறி பேச்சிப்பாறை உள்காட்டுக்குச் சென்றுவிட்ட தேவநேசன் பெருவட்டரின் கதையை எனக்கு அப்பு அண்ணா சொல்லியிருக்கிறார். புல்மூடிக்கிடந்த பெரும் குழி ஒன்றில் அவர் விழுந்துவிட்டார். இருபதடிக்குமேல் செங்குத்தாக ஆழம் கொண்ட குழி அந்தக்காலத்தில் யானைபிடிக்க அனுமதி இருந்தபோது வெட்டப்பட்டது. அதன்பின் அப்படியே விட்டுவிட்டார்கள்.
உள்ளே விழுந்த பெருவட்டருக்கு அடி ஏதும் படவில்லை. ஆனால் அடுத்த அரைமணிநேரத்தில் தெரிந்துவிட்டது பிறர் உதவி இல்லாமல் மேலே ஏறுவது சாத்தியமே இல்லை என்று. மேலே இருந்து வந்த வேர்களும் கொடிகளும் எதுவுமே அவரைத் தாங்குவதுபோலில்லை. மண் ஈரமூறிப்போயிருந்தமையால் பிடித்து ஏறமுயன்றாலே இடிந்துவிழுந்தது. எல்லாவழியிலும் முயன்றுபார்த்தார். முடிந்தவரை குரல் எழுப்பி கூச்சலிட்டார்.
அகலமான குழி. முப்பதடி நீளமும் பதினைந்தடி அகலமும் கொண்டது. விழும் யானை பக்கவாட்டில் உரசி அடிபடக்கூடாதென்று அப்படி பெரியதாகவே வெட்டுவார்கள். யானை விழுந்ததும் உள்ளே சுற்றிவந்து ஏறமுயன்று களைப்படையவேண்டும். அதன்பின் பெரிய மரத்தடிகளை இறக்கி யானை மேலேறிவர வழிசெய்வார்கள். பெருவட்டர் உள்ளே சுற்றிச்சுற்றி வந்தார். மழைக்காலத்தில் உள்ளே நிறைய நீர் தேங்கி குளமாகக் கிடக்கும். கோடையாதலால் முழங்காலளவு சேறுதான் இருந்தது. விதவிதமான செடிகள் வளர்ந்து அடர்ந்திருந்தன.
மொத்தம் இருபத்திரண்டுநாள் பெருவட்டர் அந்தக்குழிக்குள் இருந்தார். தேன்தேடிச்சென்றவர்கள் பேசிச்செல்லும் ஒலியைக் கேட்டு அவர் குரல் எழுப்பியதனால்தான் காட்டுசேம்புச்செடிகளுக்கு நடுவே அப்படி ஒரு பெரும் குழி இருப்பதே அவர்களுக்குத்தெரிந்தது. குழிக்குள் பெருவட்டர் நலமாகத்தான் இருந்தார். மேலே தூக்கப்பட்டபோது ஒத்துழைத்தார். உணவு கொடுக்கப்பட்டபோது சாப்பிட்டார். ஒவ்வொருவரையாகக் கட்டித்தழுவி ‘ஏசுவே ஸ்தோத்திரம் ஏசுவே’ என்று சொல்லி அழுதார். ஒருபாறையில் படுத்து ஒருமணிநேரம் அசந்து தூங்கினார்.
ஆனால் திரும்ப வரும்வழியிலேயே கட்டில்லாமல் பேச ஆரம்பித்தார் என்னென்னவோ சொன்னார். ஆரம்பத்தில் அவர்கள் அவரை சமாதானப்படுத்தவும் அவர்பேசுவதை கவனிக்கவும் முயன்றாலும் கொஞ்சநேரத்திலேயே தெரிந்துவிட்டது. கடைசிநாள் வரை அவர் தூங்கும்நேரம் தவிர பேசிக்கொண்டேதான் இருந்தார். ‘எளவு, அதுக்குள்ள மனியன் எல்லா காரியங்களும் அம்பிடு கூர்மையாட்டுல்லா செஞ்சிருந்தான்’ என்றார் மீட்பதற்காகச்சென்ற வறுவேல். ’மேல வந்தப்பமில்லா எளகிப்போச்சு’
பெருவட்டர் உள்ளே சென்றதும் முதலில் செய்தது பெரிய சேம்பிலைகளை பறித்து அவற்றை நாணலால் கோர்த்து போர்வைபோல செய்துகொண்டதுதான். அங்கே பெய்துகொண்டிருந்த இளம்தூறலில் இருந்து அவரை அது காத்தது. மழைக்காடுகளில் சாரல் இல்லாத காலமே இருப்பதில்லை. குழிக்குள் உள்ள கிழங்குகளில் சாப்பிட ஏற்றது எது என்பதை கண்டுகொண்டார். அவற்றை அகழ்ந்து எடுத்து ஒருநாளுக்கு ஒருவேளை மட்டும் சாப்பிட்டார். சேம்பிலைகளை பறித்து தொன்னைபோல கோட்டி மண்ணில் குழிபறித்து வைத்தார். அதில் தேங்கிய நீரை குடித்தார். குந்தி அமர்ந்து தூங்கினார்.
‘ஏகதேசம் ஒருமாசமுல்லா உள்ள இருந்துபோட்டாரு..’ என்றார் அப்பு அண்ணா.’அதுக்கு ஒரு மனக்கட்டி வேணும்…இல்லேன்னு சொல்லப்பிடாது’
‘மனக்கட்டி இருந்தா எதுக்கு வெளியவந்ததும் வட்டெளகிச்சு?’ என்றேன்.
’அது மாதாவுக்க விருப்பம்…’ என்றார் தங்கையன்
அச்சகமாடியில் ஒருநாள் நான் தேவநேசப்பெருவட்டரைப்போல ஆழமான குழிக்குள் அமர்ந்திருப்பதைக் கனவுகண்டேன். எப்படி உள்ளே சென்றேன் என்று தெரியவில்லை. அத்துடன் என்னால் அந்தக்குழியைச்சுற்றி வெகுதூரத்துக்கு என்ன இருக்கிறது என்பதையும் உணரமுடிந்தது. அந்தக்குழி இன்னொரு பெரும் குழியின் உள்ளே இருந்தது. அந்த மாபெரும் குழி ஒரு மலையிடுக்கு. நான்குபக்கமும் நூற்றுக்கணக்கான அடி ஆழத்துக்கு செங்குத்தான பாறை. நானிருந்த குழியே கூட நூறடிக்கும் மேல் ஆழமானது.
நான் அங்கே ஒரு சிறிய குடிசைகட்டியிருந்தேன். ஒரு செம்பு என்னிடமிருந்தது. அதில் தண்ணீர் வைத்திருந்தேன். என்னென்னவோ பொருட்கள் என்னிடமிருந்தன. நுனிசுருண்ட கிழிந்த புத்தகங்கள். ஒருசில குச்சிகள். ஒரு பெரிய சட்டை. யாருடையதென்று தெரியவில்லை. அத்துடன் ஒரு கருகிய தேங்காய். ஆமாம், அது வெட்டப்பட்ட தலைபோல கருப்பாக இருந்தாலும் தேங்காய்தான்.
விழித்துக்கொண்டபோது என் உடம்பு பதறிக்கொண்டிருந்தது. பெருவட்டருக்கு ஏன் வட்டு இளகியது என்று அப்போது புரிந்தது. அத்தனை உணர்ச்சிகளையும் நான் அனுபவித்திருந்தேன். ஆரம்பத்தில் யாரோ உடனே வந்து காப்பாற்றப்போகிறார்கள் என்ற எண்ணம் இருந்தது. பின்பு எவருமே வராமல் போய்விடுவார்களோ என்ற பயம். மெல்லமெல்ல அந்தப்பயம் வளர்ந்து உடலை நடுங்கச்செய்யும் பீதியாக ஆகியது. ஒருகட்டத்தில் எவரும் எப்போதும் வரப்போவதில்லை என்ற உறுதி ஏற்பட்டது.
உடனே அங்கே சாகாமல் வாழ்வதற்கான வழிகளைத் தேட ஆரம்பித்தேன். சாப்பிடுவதற்கு என்னசெய்வது? தண்ணீர்? குளிருக்கு என்ன வழி. எல்லாம் சரியாக மேலும் சில நாட்கள். அதன்பின் எல்லாம் அதேபோல சீராக நடக்கும் என்பது திடப்பட்டது. அதன்பின்புதான் நான் எனக்கு முன்னால் நீண்டு கிடந்த நாட்களைப்பார்த்தேன். முடிவில்லாமல், மறுநுனி தெரியாமல்…. பதைத்து கைகால்கள் துடிக்க விழித்துக்கொண்டது அப்போதுதான்.
எப்போதும் நள்ளிரவில் ஒரு கனவுடன் விழித்துக்கொள்வது வழக்கமாக இருந்தது. குளிரை விதவிதமாக கனவுகளாக்கிக்கொள்வேன். பின்பு விழித்துக்கொண்டு கீழே செல்வேன். எழுந்ததும் மொட்டைமாடியில் நின்றபடி கீழே பார்ப்பேன். சேறுவழிந்த கரிய சாக்கடைத்தடம் போல சாலை கிடக்கும். சிலசமயம் கனத்தமாடுகள் குளம்படிகள் ஒலிக்க கடந்துசெல்லும். வெகுதொலைவில் ரயில் செல்லும் தடதடப்பு கேட்கும். தூங்கும் வனமிருகம்போல ஒரு விசித்திர முனகலுடன், மூச்சுநாற்றத்துடன் கிடக்கும் நகரத்தை அப்போது மேலும் வெறுப்பேன்.
சென்னை எனக்கு ஒவ்வாமையை மட்டுமே அளித்தது. எந்நேரமும் வழிதவறிவிடுவேனோ என்ற பதற்றத்துடன், எதன்மீதாவது இடித்துக்கொள்வேன் என்ற கவனத்துடன் வாழவேண்டிய ஊர். எவரும் எவரையும் ஏறெடுத்துப்பார்க்காத ஊர். சொல்லப்போனால் எந்த நகரத்திலும் நான் நிம்மதியாக உணர்ந்ததில்லை. சென்னையின் கிறுக்குப்பிடிக்கவைக்கும் வெயில் டிசம்பரிலும் கொளுத்தியது. மூச்சடைக்கவைக்கும் தூசு. அழுகிய புண்ணைப்போல நாறும் சாக்கடைகள். சென்னைத்தெருவில் ஒருமுறை மயங்கி விழுந்தேன். ஒன்றரை மணிநேரம் வெயிலிலேயே கிடந்தபோதும் எவரும் குனிந்துபார்க்கவில்லை. நானே விழித்தெழுந்து ஓரமாக நகர்ந்து அமர்ந்தேன். என்னைச்சுற்றி கால்கள் சென்றன.
குமுதம் வழியாக சென்னை எனக்கு நன்றாகவே அறிமுகமாகியிருந்தது. குமுதத்தில் வெளிவரும் பெரும்பாலான கதைகளின் களம் சென்னைதான். தாம்பரம், பூந்தமல்லி, புரசைவாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி எல்லாமே தெரிந்த இடங்கள். பெயர்கள் மட்டுமல்ல அந்த இடங்களின் சித்திரம் கூட மனதில் இருந்தது. நான் வாசித்துக்கொண்டிருந்த எழுத்தாளர்களும் நான் எழுதிய பத்திரிகை அலுவலகங்களும் சென்னையில்தான் இருந்தன.
சென்னைக்கு வந்த நாலைந்துநாட்களிலேயே ஜெயகாந்தனை தேடிச்சென்று பார்த்தேன். மாலை ஆறரை மணி. அவரது மொட்டைமாடியில் முட்டைவிளக்கு வெளிச்சத்தில் இருபதுபேர் இருந்தனர். அவர்கள் மிகச்சாதாரணமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். ஜெயகாந்தன் ஏதோ கேட்க அவர்கள் ஏதோ சொல்ல சாதாரணமாக போய்க்கொண்டிருந்தது. எவரும் என்னிடம் நான் யார் என்று கேட்கவில்லை. ஜெயகாந்தன் தலைகுனிந்து தன்னுள் ஆழ்ந்து அமர்ந்திருந்தார். ஏற்கனவே புகை ஆரம்பித்திருந்தது.
சிலும்பி சுற்றிவந்தபோது என்னிடம் வேண்டுமா என்றார் ஒரு தாடிக்காரர். பார்வைக்கு ரிக்ஷாத்தொழிலாளர் என்று தோன்றியது. நான் மறுத்தேன். ஒருமணிநேரம் இருந்தேன். ஜெயகாந்தன் எதுவும் விசாரிக்கவில்லை. அங்கே அத்தனைபேர் இருப்பதே அவர் கண்ணுக்குப்படவில்லை என்று தோன்றியது. கிளம்பும்போது எவரேனும் திரும்பிப்பார்ப்பார்கள் என நினைத்தேன். எவரும் கவனிக்கவில்லை. படியிறங்கும்போது வேறு எவரோ ஏறிவந்தார்கள்.
சிலநாட்கள் கழித்து நா.பார்த்தசாரதியை சந்திக்க தீபம் அலுவலகம் சென்றேன். அங்கிருந்த திருமலை நா.பா. அங்கே வருவதேயில்லை என்று சொன்னார். நா.பார்த்தசாரதியின் வீட்டுக்குச் சென்று பெரிய வாசலருகே காத்திருந்தேன். நா.பா. காரை வெளியே எடுக்க கதவைத்திறந்தார். என்னிடம் பதற்றமாக கையசைத்து ‘வெலகு…டேய் வெலகுடா’ என்றார். நான் விலகி நின்றேன். அவர் ஏதோ முனகியபடி காரில் ஏறிக்கொண்டார். கார் வெளியே சென்றது.
அதன்பிறகு எவரையும் தேடிச்சென்று சந்தித்ததில்லை. பெல்ஸ் சாலையில் கணையாழி என்ற சிறிய பலகை இருந்தது. அதன் முன் நின்று உள்ளே போவதா வேண்டாமா என்று தயங்கியபோது கையில் ஒரு பழைய துணிப்பையுடன் வெளிவந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு நடந்துசென்ற மெலிந்த மனிதர்தான் அசோகமித்திரன் என நான் அப்போது அறிந்திருக்கவில்லை.
நாலைந்துமுறை கன்னிமாரா நூலகம் சென்றேன். அங்கே நூல்கள் புத்தக அடுக்குகளில் சம்பந்தாசம்பந்தமில்லாமல் அடுக்கப்பட்டிருந்தன. கூடத்தின் ஓரு மூலையில் பழையநூல்களை அழுகிய காய்கறிகளைப் போல குவித்துப்போட்டிருந்தார்கள். அங்கே இருந்த அத்தனை நூல்களே என்னை அச்சுறுத்தின. அவை அடுக்கடுக்காக அமைந்து ஒரு விசித்திரமான கட்டிடத்தின் சுவரைப்போல ஆகிவிட்டிருந்தன. புத்தகங்களுக்கான அரசு மருத்துவமனை அது என்று பின்பு புன்னகையுடன் நினைத்துக்கொண்டேன்.
ஒரே ஒருமுறை சென்னை அருங்காட்சியகத்துக்குள் சென்றேன். ஒருகாவலன் என்னருகே வந்து ‘டேய், என்ன? டிக்கெட் எங்கடா?’ என்றான். நான் டிக்கெட்டைக் காட்டியதும் சற்றுநேரம் முறைத்துவிட்டு திரும்பிச்சென்றான். தூசுபடிந்து அமர்ந்திருந்த உடைந்த புத்தர்ச்சிலைகள் வழியாகச் சென்றபோது பெரும் நிலைகொள்ளாமையைத்தான் உணர்ந்தேன். அங்கே நிற்கவே முடியவில்லை.
என்னுடைய தோற்றம் என்னை நகரின் பல்லாயிரம் பஞ்சைப்பராரிகளுடன் சேர்த்துவிடுகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. எவரும் என்னிடம் வழிகேட்பதில்லை. பிச்சைக்காரர்கள் கைநீட்டுவதில்லை. ஆனால் பூங்காக்களில் சிமிண்ட் பெஞ்சில் சென்றமர்ந்தால் சற்று அப்பால் பரட்டைத்தலையும் சிக்குத்தாடியும் அழுக்குச்சட்டையுமாக தூங்கிக்கொண்டிருக்கும் ஆசாமி நிமிர்ந்து என்னை நோக்கி ‘பிரதர் பீடி இருக்கா?’ என்று கேட்பார். போலீஸ்காரர் என்னைக் கூர்ந்து நோக்கி ‘டேய், யார்ரா? எங்கபோறே?’ என்பார்.
பகலில் நகருக்குள் செல்வதை நிறுத்திக்கொண்டேன். சாயங்காலம் ஏழுமணிக்கு அச்சகம் மூடப்பட்டபின்பு அப்படியே கிளம்புவேன். கரிபடிந்த சட்டையும் பாண்டும். சிலசமயம் முகத்திலேயே கரிமை இருக்கும். பாரிமுனைக்குச் செல்லும் பேருந்தில் ஏறிக்கொள்வேன். அங்கே சென்றபின் வேறு எங்காவது செல்வேன். பெரும்பாலும் திரையரங்குகளுக்குத்தான். எந்தத் திரையரங்கின் பெயரும் நினைவில் நிற்பதில்லை. பேருந்தில்செல்லும்போது கண்ணில்பட்ட திரையரங்கு வாசலில் இறங்கிக்கொள்வேன்.
முதல்முறை அப்படி இறங்கிக்கொண்டது தி ப்ளூ லகூன் என்ற சினிமாவுக்காக. அந்த சுவரொட்டியில் இருந்த பெண்ணின் அடர்ந்த புருவங்கள்தான் என்னைக் கவர்ந்தன. வெள்ளைக்காரிகளின் புருவங்கள் அப்படி இருக்காது. இறங்கி சீட்டுக் கொடுக்கும் இடத்தில் நின்றபோதுதான் அதற்கு அவ்வளவு கூட்டம் வந்திருப்பதை கவனித்தேன். நேரமாக ஆக அரங்கின் முற்றமெல்லாம் வண்டிகள். கூச்சல்கள், நெரிசல். டிக்கெட் எடுத்து உள்ளே சென்று அமர்ந்தேன். இருண்ட அமைதியான குளம்போலிருந்தது அரங்கு.
திரையில் படம் ஓட ஆரம்பித்தபோது ஏன் அத்தனை கூட்டம் என்று தெரிந்தது. அதில் சில நிர்வாணக்காட்சிகள் இருந்தன. ஆனால் எனக்கு அந்தக்காட்சிகள் எந்த ஆர்வத்தையும் எழுப்பவில்லை. கற்பனை இல்லாதவர்கள்தான் இம்மாதிரி நிர்வாணக்காட்சிகளுக்காக அடித்துப்புரள்வார்கள் என்று தோன்றியது. ஒரு கணநேரத் திகைப்புக்கு அப்பால் அவற்றில் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
என்னைக்கவர்ந்தது அந்தப்படத்தில் காட்டப்பட்ட அந்த அழகிய தீவுதான். நான் அத்தகைய நீலநிற கடலை எங்குமே கண்டதில்லை. குமரியின் கடல் இளம் எண்ணைப்பச்சைநிறத்தில்தான் பெரும்பாலும் இருக்கும். மழைமேகம் சூழ்ந்திருக்கையில் சாம்பல்நிறம். அபூர்வமாக மதியவெயிலில் கண்ணாடிநீலம். அந்தக்கடல் ஒளிரும் மண்நீலமாக இருந்தது. என்னால் அந்தக்கடல் அலைகளில் இருந்து கண்களையே எடுக்க முடியவில்லை. எங்கிருக்கிறேன் என்ற உணர்வையே இழந்துவிட்டிருந்தேன்.
இடைவேளையின்போதும் கண்களைமூடி அந்த நீலக்கடலையே நினைத்துக்கொண்டிருந்தேன். படம்முடிந்து வெளியே வந்து நின்றபோது சட்டென்று பெரும் ஏக்கம் ஒன்று நெஞ்சுக்குள் நிறைந்தது. எங்கே இருக்கிறேன். என்ன வாழ்க்கையை வாழ்கிறேன். இதுவல்ல, இதுவல்ல நான் தேடிவந்தது. இதற்காக நான் கிளம்பவில்லை. மலைகள், ஆறுகள், காடுகள்…இல்லை நீலக்கடல், வெண்மணல், சுழலும் காற்று…இவர்கள் வாழும் இந்த இருண்ட சந்துகளுக்குள் சுருண்டு பதுங்கி வாழவேண்டியவனல்ல நான். நான் செல்லவேண்டிய இடங்கள் தொலைதூரத்தில் இருக்கின்றன. இங்கே, இந்த அழுக்கு உலகில், இந்த மக்களின் நெரிசலில் நான் அடைவதற்கொன்றும் இல்லை. ஈட்டுவதற்கு ஏதுமில்லை.
அன்றிரவு மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். டிசம்பரில் சென்னையில் மழைபெய்யவேண்டும். அந்த வருடம் மழை தாமதமாகியது. ஆனால் வானில் விண்மீன்களே இல்லை. சிறிய நிலவு மேகங்களின் விளிம்பை ஒட்டி ஒளிவிட்டுக்கொண்டிருந்தது, சருகில் ஒட்டியிருக்கும் மின்மினி போல. சட்டென்று ஏனென்று தெரியாமல் அழுகை பீரிட்டு வந்தது. நெடுநேரம் அழுதுகொண்டிருந்துவிட்டு கீழே வந்தேன். படுத்துத் தூங்கிவிட்டேன்.
மறுநாள் நினைத்தபோது வேடிக்கையாக இருந்தது. ஒரு ஆங்கில சினிமாவைப்பார்த்துவிட்டு வந்து அழுதிருக்கிறேன். ஆனால் அன்றுமாலை திரும்பவும் அந்தப்படத்துக்குச் சென்றேன். அந்த நீலத்திலேயே மூழ்கி அமர்ந்திருந்தேன். மீண்டும் மீண்டும் அந்தப்படத்தையே பார்த்தேன். ஒருகட்டத்தில் அந்த நீலக்கடலைத்தவிர எதையுமே பார்க்காதவனாக ஆனேன். நான் அந்தப்படத்தை கண்களால் பார்க்கிறேனா அல்லது அது என் கனவா என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
சிலநாட்களுக்குப்பின் அந்தப்படம் அங்கே இல்லை. வேறு ஏதோ ஆங்கிலப்படம். அந்நாளில் ஆங்கிலப்படங்களை வாரமொருமுறை இன்னொரு அரங்குக்கு மாற்றுவார்கள். அது எனக்குத் தெரியவில்லை. அரங்கின் முன் இறங்கி நின்றவன் சிலநிமிடங்கள் கழித்துதான் சுவரொட்டி மாறியிருப்பதை அறிந்தேன். சற்றுநேரம் அதை என் மனம் உள்வாங்கவேயில்லை. பின்பு ஏமாற்றத்தில் மனம் கனத்தது. மனதின் எடை தாளாதவன்போல அங்கேயே அமர்ந்து விட்டேன். சீட்டுக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். மிகச்சிலர்தான் படம்பார்க்க வந்திருந்தார்கள்.
பின்பு எழுந்து தளர்ந்த காலடிகளுடன் நகரச்சாலைகளில் நடக்க ஆரம்பித்தேன். சென்னையின் நடைபாதைகள் நடப்பதற்குரியவை அல்ல. நடைபாதைக்கடைகள், விதவிதமான கடைச்சாமான்கள், குடியிருப்புகள். அவை இல்லாத இடங்களில் கட்டிட இடிபாடுகள் குப்பைமேடுகள் மூத்திரச்சேறு. ஆனால் என்னைமறந்து நடக்கும் எனக்கு சாலையில் இறங்கிநடக்க துணிவிருக்கவில்லை. நடந்து நடந்து எங்கோ ஓர் இடத்தில் என்னை உணர்ந்தபின் வழிகளை கவனிப்பேன். மீண்டும் நடப்பேன். எங்கே சென்றாலும் பாரீஸ் கார்னருக்கு டிக்கெட் எடுத்து அங்கே இறங்கி அங்கிருந்து பெரம்பூருக்கு பஸ் பிடிப்பேன்.
அதன்பின் இரவில் நகரில் நடப்பதை வழக்கமாகக் கொண்டேன். ஏன் நடக்கிறேன் என நான் அறிந்திருக்கவில்லை. நடப்பது ஒரே காரணத்துக்காகத்தான். அந்நேரத்தில் அச்சகத்தின் மாடியில் தனித்திருக்க முடியாது. உடலை அமரச்செய்ய முடியாது. நகர்ந்துகொண்டே இருக்கையில் மனதின் ஓட்டத்தை சற்று தாங்கிக்கொள்ளமுடியும். அமர்ந்திருந்தால் உள்ளே எழும் விசைகளின் வேகம் உடலை தூக்கி தள்ளுவதுபோலிருக்கும்.
இரவின் நகரம் வேறுமாதிரியானது. பெரியசாலைகளில் பத்துமணிக்கெல்லாம் வண்டிகள் ஓய ஆரம்பித்துவிடும். இரண்டாம் ஆட்டம் படம் விடும்போது மட்டும் கொஞ்சம் ஒளியும் சத்தமும் சாலைகளில் ஓடும். சாலைகள் அத்தனை அகலமானவை, அவ்வளவு பளபளப்பானவை என்பதை இரவிலேயே காணமுடியும். பிரம்மாண்டமான ஒரு தோல்செருப்பின் வார்போல சாலைச்சந்திப்புகள்..தார்ப்பரப்பில் விளக்குகளின் ஒளி பிரதிபலிப்பதனால் சற்று தொலைவில் நின்றுபார்க்கும்போது கன்னங்கரிய ஓடைபோலத் தோன்றும்.
நகரில் இரவில் வேலைசெய்பவர்கள் பலர் உண்டு. பசைவாளியும் சுவரொட்டிச்சுருளுமாக சைக்கிளை நிறுத்திவிட்டு சிறிய ஏணியை சுவரில் சாத்திவைத்து ஏறுபவர்கள் என்னைத் திரும்பிப்பார்த்துவிட்டு ஆர்வமிழப்பார்கள். பழமையான சினிமா அரங்கு ஒன்றின் அருகில் இருந்த சிறிய பெட்டிக்கடைமுன் நின்றிருந்த நாற்பதுவயதுப்பெண் ஒருத்தி ‘இந்தாயா’ என்று அழைத்தாள். நான் திரும்பியதும் ‘போ…போ..போய்னே இரு’ என்றாள்.
சில இடங்களில் விளக்குகள் எரிய ஏதோ நடந்துகொண்டிருக்கும். சுமைவண்டிகளில் கொண்டுவரப்பட்ட சாமான்களை உள்ளே கொண்டு சென்று அடுக்கிக் கொண்டிருப்பார்கள். ‘இந்தாய்யா, லோடு எறக்க வாறியா? முப்பது வாங்கிக்கோ’ என்று ஒருவர் என்னை அழைத்தார். நான் அந்த அழைப்பை உள்வாங்காமல் பார்த்தேன் ‘போ போ’ என்று கையசைத்துவிட்டுச் சென்றார். என்னுடைய பார்வையைக் கண்டபின் எவரும் என்னிடம் மேலேபேசுவதில்லை.
விடியற்காலையில் ஓரிரு வண்டிகள் ஓட ஆரம்பிக்கும். பால்காரர்கள் செல்வார்கள். மீன்பாடிவண்டிகள் துணிபோட்டு மூடப்பட்ட பெரிய ஐஸ்கட்டிகளுடன் செல்லும். காய்கறியும் பூக்களும் ஏற்றப்பட்ட வண்டிகளை சைக்கிள்போல மிதித்துக் கொண்டுசெல்வார்கள். முதல் பேருந்தில் பாரிமுனைசென்று பெரம்பூருக்கு ஏறிக்கொண்டு அக்கணமே தூங்க ஆரம்பிப்பேன். எப்போதும் நடத்துநர் வசைபாடி இறக்கிவிட்டால்தான் இறங்குவேன். ஆறுமணிக்குப்படுத்து ஒன்பதரைக்குத்தான் எழுவேன். அப்போது அச்சகத்தின் இயந்திரங்கள் தடக் தடக் என்று ஓடிக்கொண்டிருக்கும்.
ஒரு கட்டத்தில் அச்சகத்தில் இருந்து விலகிவிட்டேன். என்னால் காலையில் எழுந்து வேலைசெய்யமுடியவில்லை. பதினொருமணிக்கு மீண்டும் படுத்து தூங்கிவிடுவேன். எழுதுவதும் இல்லை என்றானபோது அச்சக உரிமையாளர் முணுமுணுக்க ஆரம்பித்தார். நேரடியாகவே திட்டினார். கடைசியில் ‘இதெல்லாம் இங்க நடக்காது…இது தொளில் செய்ற எடம்…சத்திரமில்ல’ என்றார்.
என்னிடம் நாநூறு ரூபாய்க்குமேலேயே இருந்தது. அச்சகத்தில் இருந்து பொதிகளை கைவண்டியில் எடுத்து தள்ளிச்செல்லும் சாமியிடம் எனக்குத் தங்க இடம் பார்க்கமுடியுமா என்று கேட்டேன். ‘ஏன் சாமி, இங்க தங்கினா என்ன?’ என்றார்.
‘இல்ல…நான் வேற எடத்துக்குப்போகணும்’ என்றேன் ‘இவரு சரியில்ல’
‘இன்னா வாடக குடுப்பே?’
‘அம்பது….இல்லேன்னா அதுக்கும் கொறைவு’
‘அம்பதுக்கா? சேந்து தங்கிக்கிறீயா? மேன்சன் இருக்கு’
‘எனக்கு தனியா எடம்வேணும்’
‘தனியாவா? அம்பதுக்கு…’
‘குடிசையா இருந்தாக்கூட போரும்…’
சாமிதான் என்னை அந்த இடத்துக்கு அழைத்துச்சென்று காட்டினார். சேத்துப்பட்டு அருகே ஒரு சிறிய சந்துக்குள் செல்லவேண்டும். கூவத்தின் கரையில் வரிசையாக அமைந்த குடிசைகளினால் ஆன ஒருபக்கம். மறுபக்கம் ஏதோ பெரிய கட்டிட வளாகத்தின் பெரிய சுவர். அதன் மேலே முட்கம்பிகள் சென்றன. குடிசையின் முன்பக்கம் செங்கல்சுவரில் வெள்ளையடித்து ஏதோ விளம்பரம் எழுதப்பட்டிருந்தது. தகரத்தாலான கதவில் சிறிய பூட்டு.
பூட்டைத்த் திறந்து காட்டிய ஞானராஜ் அந்தக்குடிசையின் உரிமையாளர்.’போனவருசம் வரை நானும் ஊட்டுக்காரங்களும் இங்கதான்சார் குடியிருந்தோம். அப்பாலிக்கி வேற ஊடு பாத்துட்டோம்…எடம் நம்முதுதான். ரேசன் கார்டு எலக்ரிக் கார்டு அல்லாம் இருக்கு. வாடகைக்கு குடுத்திருந்தேன். சோமாரி பைசாகுடுக்காம டபாய்ச்சான்…சாருக்கு தெக்குப்பக்கமா சார்?’
‘ஆமா’
‘என்ன பண்றீங்க?’
‘சினிமாவுக்காக வந்திருக்கேன்’ அதை உடனே நம்பிவிடுவார்கள் என நான் அறிந்திருந்தேன்
‘ஏகப்பட்டபேரு சினிமான்னு சொல்லினு வாரான் சார்…அங்க உள்ரயே விடமாடான்… ’ உள்ளே குனிந்து நுழைந்து ‘புடிச்சிருக்கா பாருங்க…’ என்றார் .
உள்ளே ஒரே அறைதான். முன்பக்க செங்கல்சுவரும் வெள்ளையும் எல்லாம் ஒரு ‘செட்டப்’ என்று தெரிந்தது. உள்ளே தரை கள்ளிப்பெட்டிப்பலகையால் ஆனது. கூவத்துக்குள்ளேயே மரக்கால்களை அடித்து இறக்கி அதன்மேல் பலகைகளை வேய்ந்து உருவாக்கப்பட்ட குடிசை அது. முன்பக்கம் மட்டும்தான் சுவர். பின்பக்கமும் பக்கவாட்டிலும் எல்லாம் மரம்தான்.
‘ஒருத்தர் தாராளமா இருந்துக்கலாம் சார்…ரெண்டுபேருகூட இருந்திருக்கோம்’
அப்போது ஒன்றை அறிந்தேன். சாலையில் தூங்கும் குடிசைவாசிகள் நடுவே நான் அலைந்தபோதெல்லாம் மானசீகமாக அவர்களின் வாழ்க்கையை நடித்துக்கொண்டிருந்தேன். அதில் எனக்கு ஓர் ஈர்ப்பு இருந்திருக்கிறது. திரும்பத்திரும்ப நான் இரவில் அலைந்ததெல்லாமே குடிசைப்பகுதிகளில்தான். அங்கே தங்குவதற்கான முடிவை உடனே எடுத்தேன். நாற்பது ரூபாய் வாடகை. நூறு ரூபாய் அட்வான்ஸ்.
‘பணம் கண்டீசனா வந்திரணும்…அப்பாலிக்கு பேச்சு மாறுற மாதிரி ஆயிரப்படாது’
ஞானராஜ் என்னிடம் சாவியை கொடுக்கும்போது கண்மூடி பிரார்த்தனைபோல ஏதோ சொன்னார். சாமிக்கு ஐந்து ரூபாய் கொடுத்தபின் என்னுடைய துணிப்பையை சுவரில் மாட்டினேன். அறையில் பாய் தலைணை பெஞ்சு என ஏதும் இல்லை.
வெளியே வந்தபோது இருபக்கமிருந்தும் பெண்களும் குழந்தைகளும் வந்து என்னைப் பார்ப்பதற்காக நின்றிருந்தார்கள். தடித்த பெரிய பெண்மணி என்னிடம் ‘எந்தூரு?’ என்றாள்.
‘தெக்க….நாகர்கோயிலு’
‘இங்க என்ன செய்யப்போறீங்க?’ என்றாள் இன்னொருத்தி. கரிய ஈறுகள் தெரிய சிரித்தபோது அவள் அழகாகவே தெரிந்தாள்.
‘சும்மா….வேலை ஏதாவது பாக்கலாம்னு’
‘பாயி தலைகாணில்லாம் வோணும்ல? வாங்கினு வாறது” என்றாள் இன்னொருத்தி ‘பொட்டி இல்லியா?’
‘இல்ல’
‘அந்த லெஃப்டுல திரும்பினா ராசமாணிக்கம் கடை இருக்கு. கள்ளிப்பெட்டி விப்பான். ஒண்ணு வாங்கினா உள்ர சாமான் வச்சுக்கலாம்…மேலே ஒக்காரவும் செய்யலாம்’
அவர்களே நான் என்ன செய்யவேண்டுமென்று சொல்ல ஆரம்பித்தனர். பாய் வாங்குவதை விட லாரிக்கடையில் வெட்டி விற்கப்படும் பழைய தார்ப்பாயை வாங்குவது நல்லது என்றும், ஸ்டவ் பழுதுபார்க்கும் அம்மாசியிடம் ஒரு பழைய ஸ்டவ்வை வாங்கிக்கொண்டால் கிருஷ்ணாயில் வாங்கி வைத்துக்கொண்டு தேவையான போது டீ போட்டுக்கொள்ளலாம் என்றும் சொன்னார்கள். மாலைக்குள் நான் ஒருமாதிரியாக குடியமர்ந்துவிட்டேன்.
இரவு வெளியே சென்று ஒரு சாலையோரக்கடையில் இட்லி சாப்பிட்டுவிட்டு வந்தேன். ஒன்பதுமணியளவில் எல்லா குடிசைகளிலும் ஆட்கள் வந்துவிட்டார்கள். ஆண்கள் சாலையோரம் பாய் விரித்து டிரான்ஸிஸ்டர் ரேடியோக்களை மார்பில் வைத்துக்கொண்டு படுத்திருக்க குழந்தைகள் அவர்கள் அருகே விளையாடின. எல்லா குடிசைகள் முன்னாலும் அடுப்புகள் எரிந்தன. சோறு கொதிக்கும் வாசனை வந்தது.
உள்ளே நுழைந்து சட்டையைக் கழற்றும்போதுதான் முதன்முறையாக அங்கிருக்கும் வாடையைக் கவனித்தேன். மதியம் வந்தபோது உள்ளே ஐந்துநிமிடம்கூட இருக்கவில்லை. கள்ளிப்பெட்டிப்பலகையான தரையின் இடுக்குகளுக்கு அடியே கூவத்தின் கரியசேற்றுப்பரப்பு. அதிலிருந்துதான் அந்த நாற்றம் வந்தது. சிலநிமிடங்களுக்குமேல் உள்ளே நிற்கவே முடியவில்லை.
வெளியே வந்து குடிசைவாசலிலேயே அமர்ந்துகொண்டேன். கொசுக்கள் வந்து சூழ்ந்துகொண்டன. ஒரே ஒருமுறை பேச்சிப்பாறை காட்டுக்குள் பன்றிவேட்டையாடும் கும்பலுடன் சென்றிருக்கிறேன். காட்டுசேம்புப் புதர்களுக்குள் ஒளிந்திருக்கும்போதுதான் அந்த அளவுக்கு கொசுக்களை அறிந்திருக்கிறேன். துணி ஒன்றை மேலே போர்த்தியதுபோல கொசுக்கள் வந்து அப்பிக்கொண்டன. முகத்தை தேய்த்துவழித்தபோது கைமுழுக்க கொசுக்கள்.
அங்கிருந்தவர்கள் எவரும் கொசுக்களை பொருட்படுத்தியதுபோலத் தெரியவில்லை. கைகால்களை ஆட்டியும் அடித்தும் கொசுக்களை அனிச்சையாக விரட்டிக்கொண்டு உரத்த குரலில் பேசினார்கள். அவர்களுடைய பேச்சு ஆரம்பத்தில் சண்டை போலக் கேட்டது. பின்னர் அதுவே இயல்பான குரலாகக் கேட்டது.
’இன்னா சார் கொசுவா?’
‘ஆமா…கொஞ்சம்…’
‘நல்லாவே கொசு கடிக்கும் சார்…தூங்க விடாது…’ வாயில் இருந்த பீடியை எடுத்துக்காட்டி ‘நாலு இளுப்பு இளுத்தேன்னா ஒண்ணியும் தெரியாது. தூங்கிரலாம்’
‘இல்ல வேண்டாம்’
‘வேற பீடி வசிருக்கேன் சார்.. ஓணுமா?’
‘இல்ல வேண்டாம்…பளக்கமில்ல’
‘தண்ணிபோடுவியா?’
‘இல்ல;’
‘அப்பால எப்டி தூங்குறது?’
நான் குழந்தையை காட்டி ‘இது தூங்குதுல்ல?’ என்றேன்.
‘அதுக்கு ஒண்ணும் தெரியாது…மேல பாத்தியா…அவ்ளவும் கொசுக்கடி’
நான் என்னருகே இருந்த குழந்தையை பகலிலேயே பார்த்திருந்தேன். உடம்பெல்லாம் படைபோலிருந்தது வேர்க்குரு என்றுதான் நினைத்திருந்தேன்.
’மோசமான எடம் சார் இது…இப்ப இப்டி இருக்குன்னு நெனைக்காதே…இப்ப மளை இல்ல..இன்னும் பத்துப்பாஞ்சு நாள்ல மளை வந்திரும்…அப்ப பாரு’ என்றான்.
போனமழையில் அவன் வீட்டுக்குள் தூங்கியிருக்கிறான். குழந்தைகளை எல்லாம் பாலிதீன் கவருக்குள் போட்டு படுக்கவைத்துவிட்டு அவனும் மனைவியும் தார்ப்பாயைப்போர்த்துக்கொண்டு அமர்ந்து தூங்கினார்கள். கூவத்தில் தண்ணீர் ஏறி ஏறி வந்தது. தரையின் பலகையிடுக்கு வழியாக உள்ளே தண்ணீர் வர ஆரம்பித்தது. சின்னக்குட்டியை தூக்கி கள்ளிப்பெட்டி மேல் வைக்கச்சென்ற அவன் மனைவி திடீரென்று எதையோ பார்த்து கத்திவிட்டாள். தரையின் இடுக்கில் ஒரு முகம்
‘முகமா?’
’ஆமா சார், பொணம். செத்து மெதந்து தண்ணியிலே வந்திருக்கு. நம்ம ஊட்டுக்கு அடியிலே குச்சியிலே தட்டி நின்னிட்டிருக்கு. தண்ணி எந்திரிச்சப்ப மேல வந்து தரையில முட்டிநிக்குது…இன்னா பண்ணச் சொல்றே?’
‘அப்றம்?’
’இன்னா பண்றது? குச்சி வச்சு ஒரே குத்து கீள தள்ளிட்டேன். அப்டியே தண்ணியோட போச்சு…’
‘வேற எவன் வீட்டிலயாம் போயிருக்கும்…’
‘அதெல்லாம் இல்ல சார்…அப்டியே கடலாண்ட போயிரும்…எங்க போனா என்ன? நம்ம ஊட்ல நொளையாம இருந்தா சரி..இன்னாசொல்றே?’
உண்மையில் அங்கே இருக்கவே முடியவில்லை. கொசுக்கள் சதையை பிய்த்துத் தின்பதுபோலக் கடிப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். உள்ளே சென்று என் லுங்கியை எடுத்து போர்த்திக்கொண்டேன். துணிவழியாகக் கடித்தபோது இன்னும் அதிகமாக வலித்தது.
அவன் மனைவிதான் காலையில் எனக்கு ஆலோசனைகள் சொன்னவள். கஞ்சிப்பானையை இறக்கி வைத்தாள். கருவாடு வாங்கி குழம்பு வைத்திருந்தாள் ‘சோறு துண்றியா சார்?’
‘வேண்டாம்…இட்லி சாப்பிட்டேன்’ என்றேன்.
‘இங்க சுப்பி ஆயா இட்லி விக்கும். கணக்கு வச்சு குடுக்கும்..’ என்றாள்.
அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எதிரே கார்களும் ஆட்டோக்களும் தூசும் புகையுமாகச் சென்றன. கால்கள் நடந்து கடந்தன. பன்றிகள் சென்றன. அவர்கள் அவற்றைப் பார்க்கவில்லை. பிறரும் அவர்களைப்பார்க்கவில்லை. நடுவே ஒரு பெரிய திரை இருப்பதுபோல. இருசாராரையும் நான் மட்டும்தான் பார்க்கமுடியும்…
கொசுக்கடி தாளமுடியாமல் எழுந்து நடக்க ஆரம்பித்தேன். இரவு தூங்கமுடியும் என்று படவில்லை. கொசுவலை ஒன்று வாங்கலாம். அவர்கள் ஏன் கொசுவலை கட்டிப்படுப்பதில்லை? சாலையில்தான் காற்றோட்டம். அங்கே கொசுவலை கட்டமுடியாது. உள்ளே படுத்தால் புழுக்கம் தாளமுடியாது. சேற்றுக்குநேர்மேலே. நீராவி பாத்திரத்தின்மேல் படுப்பதுபோல. அத்துடன் கொசுவலை என்றால்…
ஆனால் அந்த இரவில் எங்கே சென்று கொசுவலை வாங்குவது? கொசுவலை முப்பது ரூபாயாவது இருக்கும். கையில் பணம் ஓரளவு இருந்தது. அப்போதுதான் ஒடோமஸ் நினைவுக்கு வந்தது. ஒருமுறை நாகர்கோயிலில் தங்கும்போது ஒருபையன் கொண்டுவந்திருந்தான். ஒருகடையில் ஒடோமஸ் ஒரு குழாய் வாங்கிக்கொண்டேன்.
திரும்பவந்தபோது அவர்கள் எல்லாரும் படுத்துவிட்டிருந்தார்கள். சிலகுடிசைகளுக்குள் மட்டும் குடித்துவிட்டு வந்த ஆண்கள் குழறிப்பேசுவதும் பெண்கள் எரிச்சலுடன் பதில்சொல்வதும் கேட்டது. அறைக்கதவை மூடிக்கொண்டு ஓடோமஸை சட்டைக்குமேல் தெரிந்த எல்லா பகுதிகளிலும் தடவிக்கொண்டேன். பாயை விரித்துப் படுத்துக்கொண்டேன். முந்தையநாள் இரவு சரியாகத் தூங்கவில்லை.மெல்ல தூக்கத்தை நோக்கி விழுந்தபோது அந்த முகம் நினைவுக்கு வந்தது. எழுந்து அமர்ந்துவிட்டேன்.
மடத்தனம் என்று தெரிந்தும்கூட தரையின் இடுக்குகளை கூர்ந்து பார்த்தேன். யாரோ அங்கே பிணமுகத்துடன் மல்லாந்து எட்டிப்பார்ப்பதுபோலவே தோன்றியது. வெறும் இருட்டிலேயே என் மனம் பிம்பங்களை உருவாக்கிக் கொண்டது. பாயை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். வெளியே தூங்கிக்கொண்டிருந்தவர்களுக்குமேலே கொசுக்களின் படலம் ரீங்காரமிட்டது
பாயை விரித்து படுத்துக்கொண்டேன். ஒடோமஸ் கொசுக்கடியை தடுத்தது. அல்லது கொசுக்களுக்கு கடிக்க ஏராளமான உடல்கள் இருந்தன. சிலநிமிடங்களில் தூங்கிவிட்டேன். சில்லென்ற தண்ணீர் வழியாக மல்லாந்து சென்றுகொண்டே இருந்தேன். என் தலைக்குமேல் குடிசைகளின் அடிப்பகுதிகள் வந்தன. ஒரு தடியில் முட்டி நின்றேன். எவரோ என்னை உந்தி விட்டார்கள். மீண்டும் குளிர்ந்த நீரில் ஒழுகினேன். இன்னொரு இடத்தில் முட்டிக்கொண்டேன். விழித்து எழுந்து அமர்ந்தேன்.
அந்தப்பிணத்தை யாராவது கண்டுபிடித்தார்களா, இல்லை கடலுக்கே சென்றுவிட்டதா? இந்த நகரின் அத்தனை குப்பைகளும் சாக்கடையும் கடலுக்குத்தான் செல்கிறது. இங்குள்ள ஒவ்வொன்றும் பயன்முடிந்ததும் குப்பையாகிக்கொண்டிருக்கின்றன. மொத்த நகரமே மெல்லமெல்ல கடலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது…
கொசுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கடிக்க ஆரம்பித்தன. பின்பு கடி தாளமுடியாமலாகியது. அப்படியே எழுந்து நடக்க ஆரம்பித்தேன். சாலைகளில் இருந்து பிரியும் சிறியபாதைகளில் குடிசைப்பகுதிகள். பெரும்பாலும் அக்குடிசைகளுக்கு அப்பால் கூவம் ஓடியது.. நடக்கும்போது வாயில் கொசுவந்து மாட்டிக்கொண்டே இருந்தது. மேலே சாலைவிளக்குகளின் செவ்வொளிவட்டத்தில் பூச்சிகள் சுற்றிப்பறப்பது அவை புகைவதுபோலத்தெரிந்தது. எல்லாமே ஆளுயரம்கூட இல்லாத குடிசைகள். பெரும்பாலானவை ஓலைக்கூரை போடப்பட்டவை. பனையோலைத்தடுக்குகளைக்கொண்டு சுவர்கள்.
சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் எனக்குத்தெரிந்த இடம். அதைநோக்கிச்செல்லும் சாலைதிருப்பத்தில் வந்தபோதுதான் வழி தவறிவிட்டதை அறிந்தேன். மீண்டும் நடந்து கூவத்தைக் கண்டு அதன் வழியாக நடந்து என் குடிசைத்தெருவை அடைந்தேன். குடிசைகளில் எல்லாம் விளக்குகளை அணைத்திருந்தார்கள். கதவுகள் வெளியே பூட்டப்பட்டிருந்தன.அவற்றுக்குள் எவரும் படுப்பதில்லைபோல. அத்தனைபேரும் சாலையோரமாக படுத்திருந்தார்கள். வரிசையாகப் படுத்து தூக்கத்தில் வரிசை கலைந்து அனைவரும் மேலிருந்து அள்ளிக்கொட்டியவர்கள் போலிருந்தார்கள்.
சிலநிமிடங்கள் அங்கேயே நின்றேன். என்ன செய்வது? அங்கே படுத்துக்கொள்ள வேண்டும் ஆனால் என்னால் முடியும் என்று தோன்றவில்லை. வேறு வழி என்ன என்றும் நான் யோசிக்கவில்லை. திரும்பி மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். அந்தச்சாலை கூவத்தை ஒட்டியே சென்றது. சாலையோரம் முழுக்க நெருக்கமாக படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். சில இடங்களில் மீன்பாடிவண்டிகள் நின்றன. அவற்றில் படுத்து தூங்கினார்கள்.
தூங்குபவர்களைப் பார்த்துக்கொண்டே நடந்தேன். தூக்கத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கிறது. பெண்கள் பெரும்பாலும் குப்புறப்படுத்துத்தான் தூங்குகிறார்கள். அதை ஒரு பாதுகாப்பு ஏற்பாடாகவே அவர்கள் கற்றுக்கொண்டிருக்கலாம். ஆடைவிலகுமென்ற அச்சமே தேவையில்லை. ஆண்கள் மல்லாந்து முகத்தின்மேல் கையை வைத்துக்கொண்டு வாய் திறந்து தூங்கினார்கள். குழந்தைகள் ஓடிக்கொண்டிருக்கும் பாவனையில் தூங்கின.
பன்றிகளின் உறுமல்கள். பன்றிகளில் ஒன்று மட்டும் சாக்கடை இடுக்கு வழியாக ஏறி காதுகளை விரைத்து இருபக்கம் பார்த்து மெல்ல உறுமியது. பன்றிக்கூட்டம் சாக்கடைசிதற மறுபக்கம் செல்லும். தூங்கிக்கொண்டிருப்பவர்களின் நடுவே இடைவெளியினூடாக கொழுத்த பன்றி உறுமி உறுமி முகர்ந்து நடந்தது. இருகைகளையும் ஏதுமில்லை என்ற பாவனையில் விரித்துக்கொண்டு கைக்குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது.
சாலையில் ஒருகணம் அதிர்ந்து நின்றேன். ஒரு குழந்தை இறங்கி கீழே வந்து சாலையோரம் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தது. தரையில் இருந்து எதையோ கூர்ந்ந்து நோக்கி எடுத்து இரு கைகளாலும் வாயில் வைத்துக்கொண்டு திரும்பி என்னைப்பார்த்தது. சாலையில் எவருமில்லை. என்ன செய்வது? குழந்தையைத் தூக்கி மேலே விட்டாலென்ன? ஆனால் தூக்கும்போது என்னை குழந்தைத்திருடன் என நினைத்துக்கொண்டால்? அப்படியே விட்டுச்செல்லவும் மனம் வரவில்லை.
பத்துநிமிடம் வரை அங்கேயே நின்றேன். பின்பு மெல்ல குழந்தையை தூக்கினேன். அது எந்த விதமான எதிர்ப்பும் இல்லாமல் வந்தது. அப்படியே கொண்டுசென்றிருந்தால்கூட வந்திருக்கும். கரிய மெலிந்த குழந்தை. சிக்கான தலைமுடியில் நார் வைத்து கட்டியிருந்தது. இடுப்பில் ஒரு கரிய சரடு. கையில் பிளாஸ்டிக் வளையல்கள். பெண்குழந்தை. அதைத் தூக்கி தூங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு அப்பால் இருந்த இடைவெளியில் விட்டேன்.
நான் நடக்க ஆரம்பித்தபோது குழந்தை சிணுங்கி அழ ஆரம்பித்தது. பின்பு வீரிட்டது. ஆனால் எவரும் எழுவதைப்போலத் தோன்றவில்லை. சற்று தள்ளி நின்று பார்த்தேன். குழந்தை இரு கைகளையும் விரித்து என்னை நோக்கி எம்பி எம்பி உரக்கக் கூவி அழுதுகொண்டிருந்தது. சட்டென்று பக்கத்திலிருந்த சந்துக்குள் நுழைந்துவிட்டேன். கண்களைமூடிக்கொண்டு சிலகணங்கள் நின்றேன். பின்பு வேகமாக ஓட்டமும் நடையுமாக விரைந்தேன். என்னையறியாமலேயே என் குடிசைவாசலுக்கே வந்துவிட்டேன்.
இரவு மீண்டும் மிச்சமிருந்தது. இன்னொரு முறை நடப்பது மட்டுமே ஒரே வழி. இம்முறை எனக்கு இடம் நன்றாகவே தெரிந்தது. நிதானமாக நடந்தேன். சில இடங்களில் நின்றேன். அங்கே கொசுக்கள் வந்து என்னைச்சூழ்ந்துகொள்ளும்வரை நின்றுவிட்டு நடந்தேன். இந்தநகரம் கொசுக்களுக்கானது. அத்தனைகொசுக்களும் சேர்ந்து குடிக்கும் மனிதரத்தம் எவ்வளவு இருக்கும்? அதிகமும் குழந்தைகளின் ரத்தம். இந்த நகரத்தில் சேரிகளில் பிறக்கும் குழந்தைகளில் முக்கால்வாசி சிறுவயதிலேயே செத்துவிடுகின்றன. அக்குழந்தை பிறந்ததற்கு ஒரே அர்த்தம்தான். கொசுக்களுக்கு சில லிட்டர் ரத்தத்தை உற்பத்திசெய்துகொடுத்திருக்கிறது. அவ்வளவுதான்.
அதன் பெற்றோர் வாழ்வதற்கு மட்டும் என்ன அர்த்தம்? உயிரோடிருப்பது என்பது உயிரோடிருப்பதற்கான போராட்டம் மட்டும்தான். ஆனால் நான் இவர்களில் ஒருவனல்ல. என் பையில் இப்போதுகூட பணமிருக்கிறது. இன்றுகூட நான் இங்கிருந்து கிளம்பிவிடமுடியும். ஆனால் எங்குசென்றாலும் எதையோ செய்தாகவேண்டும். மூளையை கசக்கி ஏதோ ஒன்றுக்குள் திருகிச்செருகவேண்டும். மூளை அந்த இடுக்கில் மாட்டிக்கொண்டபின் மிஞ்சிய வாழ்நாளெல்லாம் அங்கேயே கிடக்கவேண்டும்.
ஓர் இடத்தில் சிந்தனைகள் முட்டி நிற்க நின்றேன். மொத்தம் நான்கே தெருக்களைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தேன் என்று தோன்றியது. ஒரேசாக்கடை எனக்கு இணையாக வந்துகொண்டிருந்தது. நேராக பெரிய சாலைக்கு ஏறினேன். அதன் வழியாகச் சென்றுகொண்டே இருந்தேன். மிகவும் தூரம் சென்றுவிடுவேன் என்ற சந்தேகம் வந்து கால்கள் தயங்கின. ஆனால் பிடிவாதமாக என்னை நானே செலுத்திக்கொண்டேன்.
நடந்து நடந்து ராயப்பேட்டை ஆஸ்பத்திரி வாசலை அடைந்தேன். அங்கே ஒரு தள்ளுவண்டிக்கடையில் பாய்லருக்குப்பின்னால் நிற்பவர் மண்ணெண்ணை விளக்கொளியில் செந்நிறத் தழல் போலத் தெரிந்தார். அங்கே யாருமில்லை. அவர் அருகே ஒரு சிறிய டேப் ரிக்கார்டரில் ‘மடைதிறது பாயும் நதியலைநான்!’ என்று சினிமாப்பாட்டு மெல்லிய ஒலியில் ஓடிக்கொண்டிருந்தது. இரண்டுநாய்கள் அருகே கிடந்தன. ஆஸ்பத்திரிமுகப்பின் மஞ்சள் ஒளியில் தரை வினோதமாகத் தெரிந்தது. தரையில் மஞ்சள்நீரைக் கரைத்து ஊற்றியதுபோல. அவர் ‘டீயா சார்?’ என்றார்.
பழையபாலின் புளிப்புவாடை கொண்ட டீ குடித்தேன். மீண்டும் நடந்துகொண்டே இருந்தேன். இந்த இரவில் இப்படி நிலையழிந்து நான் நடப்பது இப்போது நான் மட்டுமே அறிந்த ஒன்று என்னும் எண்ணம் பயங்கரமாக இருந்தது. இப்போது ஒரு காரில் அடிபட்டு நான் செத்தால் எவருக்கும் தெரியாது. அப்படியே தூக்கி ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் போட்டுவிடுவார்கள். அங்கே பிணவறையில் இப்போதுகூட ஏராளமான பிணங்கள் கிடக்கும். ஒருமுறை பார்த்திருக்கிறேன். ஐஸ்பெட்டியெல்லாம் இல்லை. சாதாரணப் பெட்டிதான். மேலே மீனுக்கு வைக்கும் ஐஸ்கட்டிகளை உடைத்துப்பரப்பியிருப்பார்கள். பெரும்பாலான பிணங்கள் புன்னகைசெய்வதுபோல அல்லது எதையோ சொல்வதுபோல வாய் திறந்திருக்கும்.
அந்தச் சந்திப்பை அடைந்தபின்புதான் அது கடற்கரைச்சாலை என்று தெரிந்தது. கடற்கரைநோக்கிச் சென்றேன். தார்ச்சாலையின் மீது காற்றில் மணற்துகள்கள் இணைந்து நெளிந்தாடின. மணலாலான தழல் போல. பாலித்தீன் தாள்கள் பல இடங்களில் சிக்கியிருந்து ர்ர்ர்ர் என்று அதிர்ந்துகொண்டிருந்தன. என் உடைகள் பறக்க ஆரம்பித்தன. ஆனால் அவ்வளவாகக் குளிரவில்லை. பின்பு நீரின் துளிகளை காற்றில் உணர்ந்தேன். நாவால் உதடுகளை நக்கியபோது உப்பு தெரிந்தது.
கடற்கரையோரமாக சாலை வரிசையான விளக்குகளுடன் கைவிடப்பட்டுக் கிடந்தது. நடைபாதை முழுக்க ஏராளமான தள்ளுவண்டிகள் சணல்சாக்கால் பொதிந்து கட்டப்பட்ட பொருட்களுடன் நின்றன. அவற்றின் அருகிலேயே உரிமையாளர்கள் படுத்திருந்தனர். வேட்டியையும் லுங்கியையும் தலைக்குமேல் போர்த்திக்கொண்டு பேருந்தின் மீதிருந்து இறக்கிப்போடப்பட்ட பொதிகள் போலச் சுருண்டு கிடந்தார்கள். சாலைக்கும் நடைமேடைக்கும் இடையேயான இடுக்கு முழுக்க பாலிதீன்தாள்கள் அதிர்ந்தன. சுருண்டு தூங்கிக்கொண்டிருந்த நாய்களில் ஒன்று காதுகளை அசைத்தது. நிமிர்ந்து என்னை நோக்கி மூக்கை நீட்டி ர்ர்ர் என்றது. நான் பேசாமல் கடந்துசென்றதும் திரும்ப சுருண்டு இறுக்கிக்கொண்டது.
கடல்மணலிலும் ஆட்கள் படுத்திருந்தார்கள். மூடிக்கட்டப்பட்ட தள்ளுவண்டிகளுக்கு அருகே மணலில் துணியை விரித்து குடும்பமாகப் படுத்துக்கிடந்தனர். குழந்தைகளை அன்னையர் அணைத்துப்பிடித்திருக்க அவை விதவிதமாக கைகால்களை பரப்பி வாயைக்குவித்துக்கொண்டு தூங்கின. தூங்கும்போதுதான் குழந்தைகளின் கைகால்களை இப்படி கவனிக்கமுடிகிறது. குழந்தைக்கைகளை அழகாக ஆக்குபவை மணிக்கட்டுகளும் கணுக்கால்களும்தான். பொத்துபொத்தென்று. பெரியவர்களுக்கு அப்படி இருந்ததென்றால் வீக்கம் என்று அர்த்தம். சின்னக்குழந்தைகள் என்றால் புறங்கைகூடத்தான் மெத்தென்று இருக்கிறது.
அந்தக்காற்றில், மணல் பறக்கும் வெளியில் எப்படித் தூங்குகிறார்கள்? திறந்த வாயுடன். அவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் சாத்தூர் விருதுநகர் வாசிகள். நான் ஒருமுறை பேசியிருக்கிறேன். கிராமம் கிராமமாகவே திரண்டு சென்னைக்கு வந்து கடலையும் முறுக்கும் விற்கிறார்கள். அவர்கள் ஊரிலேயே இதேபோல திறந்த வெளியில் தூங்கிப்பழகியவர்களாக இருக்கலாம். அங்கும் இதேபோல காற்றில் புழுதி பறந்துகொண்டிருக்கும்.
கடலோரம் சென்று நின்றேன். கடலில் தூரத்தில் கட்டிடங்கள் தெரிவதுபோல கப்பல்களின் விளக்குகள். கடலலைகள் இருட்டுக்குள் சுருண்டு அருகே வந்து கரையை விசிறியறைந்து மீண்டன. திரும்பத்திரும்ப என் கால்களை அவை எட்டிபிடிக்கமுயல்வதுபோல. இருண்ட தைலம்போன்ற நீர். கூவத்தில் ஓடும் நீரின் அதே கருமை. அலைகளின் நுனியில் மட்டும் வெண்மை. கரியநாயின் பற்களைப்போல. ஆனால் கூவத்திலும் தண்ணீர் விழுமிடங்களில் வெண்ணிறநுரை இருக்கத்தான் செய்கிறது.
ஈரமணலில் அமர்ந்துகொண்டேன். திரும்பத்திரும்ப நிகழ்ந்துகொண்டிருந்தது கடல். அதையே வெறித்துக்கொண்டிருந்தேன் என்றாலும் அதை அவ்வப்போதுதான் பார்த்துக்கொண்டிருந்தேன். நடந்துசெல்லும்போது பிள்ளைகள் விளையாடும் பந்து வந்து உடம்பில் அறைவது போல ஓர் எண்ணம் பிடரியைத் தாக்கியது. அந்த விசையில் எழுந்து நின்றுவிட்டேன். கைகள் இரண்டும் பதறின. அவற்றை கால்சட்டைப் பைக்குள் செலுத்திக்கொண்டேன். தாடை வெடவெடத்து பற்கள் தட்டிக்கொள்ளும் ஒலி கேட்டது.
அதுதான் சரியான முடிவு என்பதில் நினைக்க நினைக்க உறுதி ஏறியபடியே வந்தது. எல்லாவகையிலும் பொருத்தமானது. அனைத்தையும் முழுமை செய்யவைப்பது. அந்தஎண்ணம் இறுக இறுக என்னுடைய அகம் ஒருமை கொண்டது. கடற்காற்றில் கிடக்கும் பாலித்தீன் தாள்போலத்தான் இதுவரை இருந்தது மனம். எல்லா திக்கிலும் விளிம்புகள் அலையடிக்க கிழிந்து கிழிந்து பறந்துகொண்டிருந்தது. அந்த எண்ணம் பெரிய எடைபோல என்னை நிலைகொள்ளச் செய்தது. அந்த நிம்மதி பெரிய விடுதலையாக இருந்தது.
அத்தனை இதமாக அது இருக்கும் என்பதை அதற்கு முந்தைய கணம்கூட நினைத்திருக்கமாட்டேன். எவ்வளவு வாசித்திருக்கிறேன். எவ்வளவு கேட்டிருக்கிறேன். யோசனை ஓட ஆரம்பித்த நாள்முதல் ஏதேதோ வடிவில் உள்ளே வந்துசென்றிருக்கிறது. அச்சமூட்டுவதாக பிரமிப்படையச்செய்வதாக சற்றும் புரியாத ஒரு முடிவின்மையாக. ஆனால் அப்படி மிக அருகே, பிரியமான ஒருவரின் இருப்பு போல அதை உணர்ந்ததில்லை.
நேராக நீரை நோக்கிச் சென்றேன். அலைகள் தொடையை அறைந்தபோது தள்ளாடினேன். ராதாகிருஷ்ணனை நினைத்துக்கொள்ளவேண்டும். இல்லை, அம்மாவை நினைத்துக்கொள்ளவேண்டும். இடுப்பளவுசென்றுவிட்டேன். நீர் என்னை பின்னால் பிடித்துத் தள்ளியது. கால்பின்ன கீழே விழுந்தேன். வாய்க்குள்ளும் மூக்குக்குள்ளும் உப்பு நீர் சென்றது. தொண்டையில் உப்பு காறலெடுத்து குமட்டியது. தரையில் கையை ஊன்றி எழுவதற்குள் நீர் என்னை முன்னாலிழுத்தது. இருமுறை உருண்டு கால்களை மண்ணில் உதைத்து எம்பி எழுந்துவிட்டேன்.
துழாவிய கால்களுக்குக் கீழே மணல் இல்லாமலாகியது. நீரின் அலைகளுடன் ஏதேதோ மெல்லிய கொடிகளும் சிக்கிக்கொண்டன. என் உடைகள் உடலோடு ஒட்டி அசைவுகளைத் தடுத்து குழப்பின. மொத்த நீர்வெளியும் என்னை அப்படியே தூக்கி மேலேற்றியபோது தொலைவில் கப்பல்களின் ஒளியைக் கண்டேன். மணலில் என்னை வீசி உருட்டியது நீர். மணலை அறிந்ததும் கால்கள் பரபரத்து அதில் ஊன்றிக்கொண்டன. உடல் அதுவே இயல்பாக வளைந்து நீரைத் தவிர்த்து மணலுடன் சேர்ந்துகொள்ள கைகாலிடுக்குகள் வழியாக அலைநீர் பின்வாங்கிச்சென்றது.
எழுந்து கரைநோக்கி ஓடினேன். இடிந்துவிழுந்து நின்ற மணல்விளிம்பில் தொற்றி ஏறி மேலே சென்று காலைத்தொங்கபோட்டுக்கொண்டு மூச்சுவாங்க அமர்ந்தேன். நுரையீரலுக்குள் காற்று கனத்து இறுகி நிற்பதாகத் தோன்றியது. உப்ப் உப்ப் என்று மூச்சை வெளியேற்றினேன். மல்லாந்து படுத்துக்கொண்டேன். கீழே விழுந்துகொண்டே இருப்பதைப்போலத் தோன்றியது. சட்டென்று எழுந்து அமர்ந்தேன்.
நீர்வெளி இப்போது மூர்க்கமாகக் கொந்தளிப்பதாகத் தோன்றியது. பாய்ந்து அலறிவந்து என்னைப் பிடிக்க அது முனைந்தது. அலைவளைவுகள் சரிந்து சரிந்து கீழிறங்க மணல் கொப்புளங்கள் சுருசுருவென மறைய அடுத்த அலை. சட்டென்று பெரியதோர் அலைவந்து என் கால்களைப்பிடித்தது. நான் கால்களை மேலே தூக்கிக்கொண்டேன். எழுந்து நின்று கைகளை ஏனென்றே தெரியாமல் விரித்தேன். திரும்பி ஓட ஆரம்பித்தேன்.
மணலில் பலமுறை விழுந்து எழுந்து மூச்சிரைக்க சாலைக்கு வந்தேன். என் உடலில் இருந்து ஈரமணல் உதிர்ந்தது. நடைமேடையில் நின்று கால்களைத் தட்டி மணலை உதறினேன். ஈரச்சட்டை உடலில் இருந்து உரிந்து பிய்ந்து படபடத்தது. காதுகளுக்குள் தண்ணீர் சென்றதனால் தலை இளநீர் போலக் குலுங்கியது. தலையை வெட்டி வெட்டித்திருப்பி காதுச்சிமிழில் தேங்கிய நீரைச் சிதறடித்தேன். அப்போது தலைசுற்றி குமட்டல் வந்தது. குனிந்து உப்புநீரையும் டீயின் கசப்பையும் வாந்தி எடுத்தேன்.
அங்கே நின்று கடலைப்பார்த்தேன். இருண்ட வானம்தான் தெரிந்தது. சட்டென்று கடல் புன்னகை புரிந்து அடங்கியது. கலங்கரைவிளக்கின் ஒளி மணல்பரப்பை வருடி மேலேறியது. அங்கே நின்று பார்த்துக்கொண்டே இருந்தேன். மீண்டும் கடல்மீது ஒளி துழாவி நகர்ந்தது. பெருமூச்சுடன் நடந்தேன். கடைசிக்கணங்களில் நான் ராதாகிருஷ்ணனை நினைக்கவில்லை. அம்மாவையும் நினைக்கவில்லை. நினைக்க முயன்றேன். அவர்களின் முகங்களே மனதில் எழவில்லை. எனக்குள் இருந்தது என்னைப்பற்றிய பிரக்ஞை மட்டும்தான்.
என்னைப்பற்றி என்றால்? நான் இருக்கிறேன் என்ற நினைப்பு. அதுமட்டும்தான். மிகப்பெரிய ஆச்சரியத்துடன் அதை அப்போது உணர்ந்தேன். நீருக்குள் இறங்கிச்செல்லும்போதுகூட அந்த போதம்தான் இருந்தது, இதோ இருக்கிறேன், இதைச் செய்கிறேன். அந்தப் பிரக்ஞை அழிவதைப்பற்றிய பிரக்ஞை இருக்கவில்லை. நான் என்னும் உணர்வு இல்லாமலாகும் கணம் ஒரு மின்னலாகக்கூட என்னுள் கடந்துசெல்லவில்லை. அந்த அலைகளில் நான் சாகும்போதுகூட நான் இருக்கிறேன் என்றே நினைத்துக்கொண்டிருப்பேன். செத்துப்போய் மேலும் சில கணங்களுக்குக் கூட அந்த போதம் எஞ்சியிருக்கும்…
கலங்கரைவிளக்கக் கட்டிடத்தின் வாசல் திறந்து கிடந்தது. விளக்கு எரிந்தது. இரும்புவாசலருகே ஒரு பெரிய சிவப்பு பிளாஸ்டிக் வாளி காலியாக வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்துக்கொண்டு அதுவரை வந்தவரைக் காணவில்லை.உள்ளேயும் சிவப்பு குண்டுவிளக்கு எரிந்துகொண்டிருக்க எவரும் கண்ணுக்குப்படவில்லை. ஏன் செய்கிறேன் என்றே தெரியாமல் உள்ளே சென்றுவிட்டேன்
படிகளில் ஏறும்போதும் எவரும் கண்ணுக்குப் படவில்லை. கீழே எங்கோ ஏதோ விழும் ஒலி கேட்டது. மூச்சிரைக்க படிகளில் ஏறினேன். என் உடைகள் காய்ந்துவிட்டன. உடைகளும் தலைமயிரும் படபடக்க மேலேறியபோது பறந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. மேலே விளக்குகள் இருக்குமிடத்துக்கு முன்னதாகவே கதவு பூட்டப்பட்டிருந்தது. சிலகணங்கள் அங்கேயே நின்றேன். பின்பு திரும்பி நடக்க யத்தனித்தேன். உப்பரிகைக்கு அப்பால் வானம் தெரிந்தது. விளக்குகள் அணைந்து அணைந்து எரிய ஒரு விமானம் செல்வதைக் கண்டு அங்கேயே நின்றேன்.
எண்ணங்களின் ஓட்டத்தை காற்றின் வேகம் பிய்த்து பிய்த்து வீசியதுபோல எங்கெங்கோ சென்றுகொண்டிருந்தேன். பிரேம்நசீர் நடித்த கறுப்புவெள்ளைப் படங்களின் காட்சிகள் நினைவில் ஓடின. திருவட்டாறு கோயில்யானை நடக்கும்போது சுருங்கி விரியும் சருமத்தின் கோடுகள். கவிழ்த்துப்போட்ட மாபெரும் உருளிகள். பேச்சிப்பாறை மலைப்பாறைகளின் உருண்ட வளைவுகள். மழையில் அவை மௌனமாக நனைந்தன. நனைந்து நனைந்து கருகின. மழை தழல் போல நின்று ஆடியது. அவை எரிந்து எரிந்து குளிர்ந்தன.
கிழக்கே வானத்தில் சிவப்புத்தீற்றல்கள் விழுந்திருப்பதை கவனித்தேன். எப்போது அது நிகழ்ந்தது என்று யோசிக்கையிலேயே அங்கும் இங்குமாக நிறத்தீற்றல்கள். அவற்றின் வடிவில்லா வடிவை என்னுடைய அகத்தின் வடிவபோதம் அடையாளம் காண்பதற்குள்ளாகவே அவை வடிவம் மாறின. தீக்கனல்போல, செம்பட்டு போல, பிரம்மாண்டமான அரளி இதழ்கள் போல. அல்லது…ஏன் இப்படி ஒப்பிட்டுக்கொள்கிறேன். இல்லை, ஒருகணம் கூட இந்த ஒப்பிடும் பிரக்ஞையை தவிர்க்கமுடியவில்லை.
கடலின் மீது ஒளியாலான பாதை ஒன்று உருவாகி கரைநோக்கி வந்தது. நெளியும் செந்நிறச்சரிகையாலான பாதை. மேலே செந்நிறத்தின் இடுக்குகளில் பொன்னிற ஒளி கசிய ஆரம்பித்தபோது அந்த சரிகைப்பாதை மேலும் அகலமாகியது. பொன் உருகி வழியும் அருவிபோலாகியது. பறவைக்கூட்டங்கள் சிறகுகளால் அந்த ஒளியைத் துழாவியபடி திளைத்தன.
பெருமூச்சு விட்டபடி திரும்பிப்பார்த்தேன். எனக்குப்பின்னால் சென்னை மெல்லிய நீலமேகப்படலத்தால் போர்த்தப்பட்டதுபோலத் தெரிந்தது. வெண்நுரையால் செய்யப்பட்டு, செய்த கரங்களால் மெல்ல அள்ளி எடுக்கப்பட்டு, அலுங்காமல் மண்ணில் வைக்கப்பட்டதுபோல. மேலே வானத்தில் மேகங்களின் கோபுரமுகங்கள் பொன்னொளிப்பூச்சு கொண்டன. கீழே மெல்ல மெல்லத் துலங்கி வந்தது பேரெழில் கொண்ட நகரம்.