ஜெ சைதன்யாவின் பிரபஞ்சம்

ஜெ. சைதன்யா அவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொற்றொடர் “இந்த ஒலகத்திலேயே…” என்பதாகும். “இந்த ஒலகத்திலேயே ஒம்பேச்சு கா” என்றால் இனிமேல் காலம் பிரபஞ்சம் ஆகியவை உள்ளளவும் உன்னிடம் பேசப்போவதில்லை என்பதே பொருளாகும். காலம் பொருள்வயப் பிரபஞ்சம் ஆகிய இரண்டும் வேறு வேறல்ல என்ற புரிதல் அன்னாரிடமிருந்தது.

பிரபஞ்சம் என்பது ஓர் ஒழுங்கு மற்றும் நோக்கம் என ஜெ. சைதன்யா அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார். ஆகவே ஒவ்வொன்றிலும் உள்ள ஒழுங்கைத் தன் முழு ஆளுமையாலும் வலியுறுத்துவது அவரது வழக்கம். உதாரணமாக இவர் கைக்குழந்தையாக இருக்கும்போது இவருக்கு ஊட்டி எழுத்தாளர் நிர்மால்யா அவர்களால் ஒரு கம்பிளிச்சட்டை பரிசளிக்கப்பட்டது. இது சிறிதாக ஆனமையால் மார்கழி மாதக் குளிருக்கு இரண்டு சட்டைகளை ஒன்றன்மீது ஒன்றாகப் போடும்படி கூறப்பட்டு, வாதாடப்பட்டு, மன்றாடப்பட்டு, இறுதியில் மிரட்டப்பட்டபோதும் இவர் வளைந்து கொடுக்கவில்லை. இவரது தாயார் தலையணைக்கு உறை போடுவதுபோல இவரைத் தலைகீழாகத்தூக்கிக் கால்கைகளால் இடுக்கி அவற்றைப் போட முயன்ற போது இவர் அதிஉக்கிரமாகக் கதறியழுது தரையில் விழுந்து கைகால்களை மிக வேகமாக உதைத்துக் கொண்டு அதகளம் செய்து, அது கழற்றப்பட்டு, ஒழுங்கு மீண்டு, செய்யப்பட்ட பிழைக்காக தாயார் உரிய முறையில் மன்னிப்பும் கேட்ட பிறகே நிதானமடைந்தார்கள்.

இதேபோல உதடுகளைப் போதுமான அளவுக்குக் குவித்துப் பலமுறை ஊதாமல் டீ குடித்தல், முன்னால் கண்ணாடி இன்றி தலை சீவப்படுதல், பை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே கிளம்புதல், எச்சில் தொடாமல் ஸ்டிக்கர் பொட்டை ஒட்டுதல், விரல்களை மடிக்காமல் ஏதாவது எண்ணைக் குறிப்பிடுதல் போன்ற ஒழுங்கீனங்களை இவர் சற்றும் ஏற்பதேயில்லை.

முன்னால் பேசப்பட்ட கம்பிளிச்சட்டை ஜெ. சைதன்யா அவர்கள் ஆறுமாதக் குழந்தையாக இருக்கும்போது அவர் தன் கைகால்களை வயிற்றுப்பகுதிக்குள் இழுத்துக் கொண்டு உள்ளேயே கண்ணயருமளவுக்குப் பெரிதாக இருந்தது. ஒருமுறை இவர் தலையையும் உள்ளே இழுத்துக் கொள்ளவே இவரை இவரது தந்தையார் கட்டில் மேலேயே சிலநிமிடங்கள் தேடிக் கம்பிளிச்ச்சட்டையை எடுத்தபோது கனத்தை அறிந்து உள்ளே இவரை கண்டடைய வேண்டியிருந்தது. பிறகு இந்தக் கம்பிளிச்சட்டை சிறிதாகியது. பரிணாமப் படிக்கட்டில் கம்பிளிச்சட்டை இவ்வாறு பின்னகர்வதை ஜெ. சைதன்யா அவர்கள் பலவிதமான வினாக்கள் மூலம் தெளிவு செய்துகொண்டார்கள். முதல் வினா அந்தக் குழந்தை எங்கே என்பதாகும். அது வளர்ந்து ஜெ. சைதன்யா ஆக மாறும் போது முதலில் இருந்தது எங்கே போகிறது?

வேறு ஒரு பெற்றோரால் குலவப்பட்டு சோறு ஊட்டப்பட்டு அது வேறு ஒரு வீட்டில் வளர்க்கப்படுகிறது என இவரது தந்தையார் விளக்கியது பொருத்தமானதாக இருப்பதை ஜெ. சைதன்யா உணர்ந்தார்கள். ஜெ. சைதன்யா அங்கு போனால் அக்குழந்தையாக ஆகிவிடவேண்டியிருப்பதைப் போலவே அது இங்கு வந்தால் ஜெ. சைதன்யா ஆகவும் மாற வேண்டியிருக்கும். “அது வீடுப்பா வீடு!” என ஜெ. சைதன்யா அவர்கள் புருவம் தூக்கிப் போதிய அளவுக்கு அழுத்தமளித்துத் தெரிவித்தார்கள். இவ்வாறு பிரபஞ்சத்தில் மனிதர்களால் விடப்படும் வீடுகளுக்கு இடையேயான தூரமே காலம் என்பது என ஜெ. சைதன்யா அவர்கள் துல்லியமாக தெரிவித்தார்.

மற்ற சிந்தனையாளர்களைப்போலவே ஜெ. சைதன்யாவும் காலத்தின் நேர்கோட்டு இயக்கத்தை ஏற்றுக் கொள்வது இல்லை. காலத்தை இடத்தில் இருந்து பிரிப்பது குறித்து இவருக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும் சிறிய கருத்து முரண்பாடுதான் உள்ளது. காலமானது இடத்துடன் பிரிக்கமுடியாதபடி சம்பந்தப்பட்டது என்பதை இவரும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் இடம் அழிய நேருமென்பதை இவர் ஏற்கவில்லை. ஆகவே எல்லாக் காலஇடங்களும் புத்தகத்தின் பக்கங்களைப்போல அடியில் அடியிலாக அடுக்கப்படுகின்றன என்பதை இவர் அறிவார்கள். பலர் அப்புத்தகங்களை முன்னோக்கி மட்டுமே புரட்ட முடியும் என்ற மூட நம்பிக்கையுடன் இருப்பது குறித்து ஜெ. சைதன்யா விசனப்படுவதும் அவ்வீழ்ச்சியில் இருந்து தன் முதற்சீடரைக் காக்க ஓயாது முயன்றபடியே இருப்பதும் உண்டு.

“நாளைக்கு நான் பெரிய பொண்ணா ஆயி, மொபெட்டிலே ரொம்ம்ம்ப வேகமாப் போறப்ப நீ எனக்கு ஏன் சிவப்பு சுடிதார் வாங்கித் தரல்லே?” என்று இவர் தன் தந்தையிடம் கண் கலங்க குரல் கம்ம உதடு பிதுக்கிக் கேட்டபோது அவர் காலவலையிலே சிக்கி ஓரிரு கணங்கள் தத்தளித்துப் பிறகு மீண்டு “வாங்கி வச்சிருக்கு பாப்பா. பீரோவில இருக்கே” என்றார். “காட்டு பாக்கலாம்” என்று ஜெ. சைதன்யா கேட்டபோது அவர் “அதெப்பிடி காட்டுறது? நாளைக்குத்தானே காட்டமுடியும்?” என்று சொன்னதை ஜெ. சைதன்யா அங்கீகரித்தார். பிறகு மேலும் யோசித்து “நாளைக்கு ஆறப்ப அது இண்ணைக்கு ஆயிடும்ல?” என்றார். உச்சகட்ட தரிசனமாக “என்னைக்கு பாத்தாலும் நாளைக்கெல்லாம் இன்னைக்கா ஆயிட்டே இருக்கு அப்பா” என்றது உடனடியாக வரலாற்றில் அவரது மெய்ச்சீடரால் பொறிக்கப்பட்டது.

ஜெ. சைதன்யா பிரபஞ்சத்தின் நோக்கம் குறித்த தெளிவை வீட்டிலிருந்தே அடைந்தார், அகத்தை நோக்கிப் புறத்தை அறிதல் இது என இவரது மாணவரால் அது விளக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் ஒவ்வொன்றும் ஒரு நோக்கத்துடன், ஒருவரால் வைக்கப்பட்டுள்ளது போலவே வெளியிலும் என இவர் அறிந்தமையால் எதையுமே ‘வச்சிருக்கு’ என்றே குறிப்பிடுவார். “அவங்களோட வீட்டு முன்னாடி ஏன் கொளம் வச்சிருக்கு?”, “அந்தப் பக்கமா ரோடு பக்கத்திலதானே மலை வச்சிருக்கு” – இவ்வாறாக இவர் கூறுவதுண்டு. இது இவரது தமையனாரின் தத்துவ தரிசனத்தில் இருந்து சிறிதே மாறுபடுகிறது. அவருக்கு எல்லாமே வரையப்பட்டவை, செய்யப்பட்டவை. “நேரா ஒரு ரோடு போட்டிருக்கும் அப்பா. அதுக்கு அந்தப் பக்கமா ஒரு தென்னமரம் போட்டிருக்கும். அதுக்குப் பக்கத்தில இப்பிடி ஒரு ஒரு கோடு போட்டு இப்பிடி நாலு கோடு போட்டா ஒரு வீடு வந்திடும்… ‘

மனிதன் அந்த ஆதி நோக்கத்துக்குக் கட்டுப்பட்டவன் என ஜெ. சைதன்யா நம்பிக் குறிப்பிடவும் செய்தார்கள். பேருந்தில் வீடு திரும்புகையில் இவரது தந்தையார் “பாப்பா ராத்திரி முறுக்கு திங்கக்கூடாது என்ன? வயத்த வலிக்கும்டீ” என்றபோது இவர் ஆழமாக முறுக்கைப் பார்த்த பிறகு “திங்கத்தானே முறுக்கு வச்சிருக்கு? திங்காம இருக்கவா முறுக்கு வச்சிருக்கு?” என்று வினவியது குறிப்பிடத்தக்கது. ” பாப்பா இருட்டியாச்சு வா வெளையாடாம.” “வெளயாடத்தானே பாப்பா வச்சிருக்கு? வெளயாடாம இருக்கவா பாப்பா வச்சிருக்கு?”

இந்த வைப்பின் மூல நோக்கம் ஜெ. சைதன்யா அவர்களின் மனமகிழ்வே என்பது அவற்றின் அமைப்பிலிருந்தே தெளிவாகத் தெரிந்தது. உதாரணமாக ஜெ. சைதன்யா அவர்களின் கொல்லைப்பக்கத்தில் உள்ள வேளிமலை. “எதுக்கு இந்த வேளிமல இங்க வச்சிருக்கு தெரியுமா? ” ” எதுக்கு?” “இங்கதானே சைதன்யா பாப்பா ஒக்கார எடம் வச்சிருக்கு?” இது உடற்கூறியலிலும் வேறுவகையில் செயல்படுகிறது. ” சின்னப்பிள்ளங்களுக்கு எதுக்கு தொப்புள் வச்சிருக்கு தெரீமா? சிலேட் மொனய வச்சு எளுதணும்ல, அதுக்குத்தான்… ”

பிரபஞ்ச ஆக்கத்தில் உள்ள ரகசியங்கள் குறித்த கேள்விகளுக்கு ரகசியங்களே பதிலாகுமென இவரது தந்தையார் இவரிடமிருந்தே அறிந்துகொள்வதுவரை மிகவும் சிரமப்பட்டார். “எதுக்கு அப்பா பண்ணியோட வாலு கீளப் பாத்து இருக்கு? நாயோட வாலு மட்டும் மேலப்பாத்து இருக்கு?” என்ற வினாவிற்கான விடையாக சட்டென்று ஏற்பட்ட மெய்த்தரிசனத்தால் தூண்டப்பட்டு ” நாய் கடிக்கும், பண்ணி கடிக்காதுல்ல, அதான்” என்றபோதுதான் அவர் அதை அறிந்தாராம்.

ஜெ. சைதன்யா பிரபஞ்ச அறிவை இடைவிடாது தனக்குக் கற்பித்துக் கொண்டிருந்ததாக இவர் குறிப்பிடுகிறார். காரில் அடிபட்டு செத்துக் கிடந்த பூனை “செத்துப்போய்த் தூங்குது அப்பா” என குறிப்பிடப்பட்டபோது இவர் திருவள்ளுவர் கண்ட உலகத்தைத் தானும் கண்டார். சின்னக் குழந்தைகளின் உலகில் தேவதைகளோ பூக்களோ வருவதில்லை மிகப்பெரிய, வானம் வரை பெரிய, ஒரு சின்னக் குழந்தைதான் வரும் என ஜெ. சைதன்யா சொன்னபோது திருவள்ளுவர் கூட சென்றடைய முடியாத சிகரநுனிகள் இவரது தந்தையரான பிரதம சீடருக்குத் தெரிந்தனவாம்.

முடிவற்ற வேடிக்கைகளால் ஆன இவ்வுலகில் மனிதர்கள் சிரமப்பட்டு வேடிக்கை நிகழ்த்துவதன் அபத்தம் ஜெ. சைதன்யா வால் உணர்த்தப்பட்ட சம்பவமும் இங்கு பதிவு செய்யப்பட வேண்டியதாகும். ஜெ. சைதன்யாவுக்கு சர்க்கஸ் பிடிக்கக் கூடுமென இவரது தந்தை அழைத்துச் சென்றிருந்தார். அங்கே பெண்கள் ஊசலில் குப்புற ஆடியபோதும், ஒருவர் மீது ஒருவர் ஏறிக் கொண்டபோதுமெல்லாம் ஜெ. சைதன்யா அவர்கள் “அவுங்க வெள்ளாடறாங்கல்லே?” என ஆர்வமின்றி இழுத்து சொன்னபடி அமர்ந்திருந்து, சட்டென அரங்கின் அடியில் ஒரு கோழி மேய்வதைக் கண்டு அற்புத பரவசம் அடைந்து “அப்பா கோளீ! கோளீ அப்பா!” என கிரீச்சிட்டார்கள்.

அதன் பிறகு இவரது தந்தையார் இவரது கண்கள் வழியாக உலகைப் பார்க்கத் தலைப்பட்டு; பாலித்தீன் பைக்குள் மூக்கை விட்டு, தன் மூச்சில் அது உப்புவது கண்டு அதிர்ந்து, வாலைச் சுழித்து காதை விடைத்து ஸ்தம்பித்து நின்று, “அம்றே” என அன்னையை அழைத்தபடி கீழே விழுந்த பலாக்காய் போலத் துள்ளி ஓடும் பன்றிக்குட்டியிலும், தெருநாயின் புட்டத்தில் உக்கிரமாக எழுந்து நிற்கும் பதிலற்ற கேள்விக்குறியிலும் எல்லாம் விரிந்து பரந்து கிடக்கும் மாபெரும் புன்னகை ஒன்றை எப்போதுமே கண்டடைந்தார்.

ஜெ. சைதன்யா அவர்கள் இப்பிரபஞ்சத்தையே தன்னுடையதாகக் கருதும் விசாலமான பார்வையைக் கொண்டிருந்தார் என்பது இவர் வேறு ஒரு இடத்தில் வேளிமலையில் கல் உடைக்கப்படுவதைக் காண நேர்ந்தபோது “எதுக்கு அப்பா அவுங்க நம்மளோட மலய அவுங்க ஒடைக்கிறாங்க?” என்று கேட்டது தெளிவுபடுத்தியது. வேளிமலையில் ‘சிவப்பு கவுனு போல’காட்டுத்தீ எரியும்போது “அய்யோ நம்பளோட வானத்திலே தீ பிடிச்சிடுமே” என ஜெ. சைதன்யா கவலைப்படுவதுண்டு.

ஜெ. சைதன்யா இயற்கையைக் கூர்ந்து கவனித்துப் பல முக்கியமான தரிசனங்களை அடைந்திருப்பார் என எவருமே ஊகிக்கலாம். “மேகம் குட்டி போட்டு மலையிலயே விட்டுட்டுப் போயிட்டுது அப்பா” என மலைமடிமீது கிடக்கும் மேகத்துண்டைக் கண்ட இவரது கற்பனை “அது ம்ம்ம்ம்… மம்மு வேணும், மம்மு வேணும்னு அழுவுது” என்று தாயிற் சாலப்பரியுமளவுக்கு விரிவு பெறவும் செய்தது. மழைக்கால காலைநேரமொன்றில் “அப்பா இங்கபார் நம்பளோட மலையையே காணும்” என்று இவர் சொல்ல “அய்யோ எங்கடி போச்சு? நாம இப்ப எங்க போயி தேடறது? காக்கா எடுத்துட்டுப் போயிருக்குமோ” என இவரது தந்தை கேட்டபோது அவரது அறியாமையைக் கண்டு சிரித்த ஜெ. சைதன்யா “அய்யோ அப்பா! மலய எப்பிடி காக்கா எடுக்க முடியும்? அது சின்னதுதானே? களுகுதானே பெரிசு? அது எடுத்துட்டுப் போயிருக்கு” என்றார்.

ஆனால் கூர்ந்து பார்த்தபோது மலையின் கரையாத துணுக்குகள் சில காணக் கிடைக்கவே ஜெ. சைதன்யா அவர்கள் “அப்பா, அழுவாதே. மலய ஒண்ணுமே தூக்கிட்டுப் போவலை. மல பொகயா ஆயிட்டுது” என்றார். “அதெப்பிடிடி? ” என இவரது தந்தை தடுமாறவே “சில சமயம் வானம் பொகயா ஆவுதில்ல, அதுமாதிரித்தான்” என்றார். “அப்பிடீன்னா இன்னமே நமக்கு மலயே இல்லியா? ” ” இல்லப்பா, மத்தியான்னம் ஆனா மழ பெய்யும்ல? அப்ப பொகயெல்லாம் கரஞ்சுபோவும்ல? அப்பதானே காக்கால்லாம் பறக்க முடியும்? காக்கா பறக்காம எப்பிடி ராத்திரி வரமுடியும்? அப்ப மலயெல்லாம் ஒளுங்கா வந்து சமத்தா லைனா ஒக்காந்திடும்” என ஜெ. சைதன்யா ஆறுதலும் விளக்கமும் அளித்தார்கள்.

அப்போது வானத்தின் படுதாவுக்கு அப்பாலிருந்து வேளிமலை சற்றே முகம் காட்டிப் புன்னகைத்ததை இவரது தந்தையார் கண்டார். இந்த மலை வானம் பறவைகள் வெயில் முதலியவையெல்லாம் ஜெ. சைதன்யாவிடம் விளையாடும் பொருட்டு அப்பால் இருக்கும் எவரோ ஒவ்வொன்றாக எடுத்து முன்னால் போடுபவையா என்ற ஐயம் அவருக்கு ஏற்பட்டது. அந்த மறைந்துள்ள ஆசாமியும் ஜெ. சைதன்யா அளவுக்கே ஒரு தீராத விளையாட்டுப்பிள்ளைதானோ என அவர் எண்ணிக் கொண்டார்.

தொடர்புடைய சுட்டிகள்:

ஜெ.சைதன்யா :ஓர் எளிய அறிமுகம்
ஜெ.சைதன்யாவின் கல்விச் சிந்தனைகள்

முந்தைய கட்டுரைநடைபயணி
அடுத்த கட்டுரைஜெ.சைதன்யாவின் மொழியியல் நோக்கு