எம்.எஸ்.வி நினைவஞ்சலி [புறப்பாடு II – 10, உப்பு நீரின் வடிவிலே]

ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் சக்கரங்கள் கொண்ட கரிசல்காட்டுக்கிராமம். சென்னைக்கு வராமலேயே மதுரைக்குச் செல்லக்கூடியது. ஏழெட்டு பெட்டிகள் முழுக்கமுழுக்க தென்தமிழகத்தவர்கள். நான் அந்தப்பெட்டியைநோக்கி ஓடியதும் ஒருவன் என் சட்டையைப்பிடித்து ’கியா?’ என்றான்.

‘ரயிலு…’ என்றேன்.

‘தமிழாளா?’

‘ஆமா…’

‘அண்ணாச்சி, அவன் மலையாளத்தான். பொய் சொல்லுறான்.மூஞ்சியப்பாருங்க’

‘டேய் இதில தமிழாளுங்களத்தான் ஏத்துறது….வேற பெட்டிக்குப்போ…பின்னாலபோ’

‘அண்ணாச்சி, நான் நாகர்கோயிலாக்கும்’ என்றேன்.

‘அண்ணாச்சி அவன் பேச்சப்பாருங்க’

‘இல்ல, நான்…’

‘வக்காளி, சொல்லிட்டே இருக்கேன்…’ என அந்த இளைஞன் கையைச்சுருட்டிக்கொண்டு அடிக்கவந்தான்.

‘கைய நீட்டாத…அதுவேற வம்பாயிரும்…டேய் போ’

நான் பின்னால் நகர்ந்தேன். ஆனால் அந்தப்பெட்டிக்குள்தான் கொஞ்சமாவது இடமிருந்தது. மேலும் அத்தனை கெடுபிடி இருக்கும் பெட்டிக்குள் மேலும் அதிகம்பேர் ஏறிக்கொள்ளவும் வாய்ப்பில்லை. திரும்பியவன் அவர்கள் இன்னொருவரைத் தடுத்த கணத்தில் பாய்ந்து ரயிலுக்குள் ஏறிக்கொண்டேன்.

‘லே , அந்தா போறாம்லே…பிடிலே பிடிலே அவன’

நான் உள்ளே சென்று இருக்கையின் விளிம்பில் அமர்ந்து கம்பியை பிடித்துக்கொண்டேன். உள்ளே வந்த இளைஞன் என் கையைப்பிடித்து ‘எந்திலே…லே எந்தி…சொல்லுதேம்லா? வெட்டிப்பொலிபோட்டிருவேன்’ என்றான்.

நான் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். அவன் என்னை இழுத்தபின் சரமாரியாக என் தோளிலும் தலையிலும் அடித்தான். ‘தாயளி…எந்திலே..லே எந்திலே’

‘லே, என்ன கைய நீட்டுதே? ‘ என்றார் ஒரு கிழவர்.

‘சொன்னாக்கேக்காம ஏறிட்டான்….அண்ணாச்சி அங்க நிண்ணு துள்ளுதாரு’

‘எந்தூருவே?’

‘நாகர்கோயில்…நான் தமிழாளாக்கும்’

‘தமிழாளு இல்லேண்ணு பாத்தாத் தெரியுது…அத விடும்…லே நீ போ’

‘இவன்…’

‘இருக்கட்டும்லே…ஏறிட்டான்லா? இருந்துட்டு போறான்’

‘அண்ணாச்சி… ‘

‘சம்முவம் கிட்ட நான் சொன்னதாச் சொல்லு…போ…ஏலே போலே’

அவன் என்னை முறைத்துப் பார்த்தபடி சென்றான். மறுபடி என்னை எங்காவது தனியாகச் சந்தித்தால் அடிப்பான் என்று பட்டது.

‘தமிளு நல்லா பேசுறிய’ என்றார் கிழவர் ‘நாகருகோயிலிலே எங்க?’

‘கொலசேகரம் பக்கம்’

‘அது மலையாளமில்லா….சரிதான்….நாங்க மத்த ஆளுகள உள்ள விடுகதில்ல பாத்துக்கிடுங்க…’ கிழவர் சொன்னார் ‘அந்த பெட்டிய உள்ள நவுத்திவை குட்டி…நிண்ணு டேன்ஸுல்லா ஆடுதா?’

‘ரயிலு எல்லாருக்கும் பொதுவுல்லா?’

‘ஆமா… அதை அந்தால ஆந்திராக்காரன் பொட்டியிலே போயி சொல்லமுடியுமா?’ என்றார் இன்னொருவர். நீளமான பற்களும் முன்வழுக்கையும் கொண்ட கரிய மனிதர் ‘அந்தக்காலத்திலே நாங்கள்லாம் தனியா வருவோம். புள்ளகுட்டியோட பொட்டிபொட்டியா அலைவோம்…போரா குக்கான்னு காறித்துப்புவான். எசமான் புள்ள இருக்குதுங்க எசமான்னு கையெடுத்து கும்பிட்டு கெஞ்சுவோம். கம்பியில புடிச்சா கையிலே காலால உதைப்பான். என் வீட்டுக்காரி கைப்புள்ளையோட பிளாட்பாரத்திலே மல்லாந்து விளுந்தா….’

‘வண்டி எடுக்கிறதுக்குள்ள ஏறுறதுக்காக ஓடுவோம்…’ என்றார் கிழவர். ‘தவறி விளுந்து பலபேரு செத்திருக்கானுக’

‘கேரளா வளியா வாற வண்டியிலே ஏறவே விடமாட்டானுக…பாண்டி பாண்டீன்னு சொல்லி ஒதைச்சு தள்ளுவானுக. டிக்கெட் இருந்தாக்கூட செக்கரு எறக்கி விட்டு அடுத்த வண்டியிலே வான்னு சொல்லுவான்’

’இந்தமட்டுக்கும் இருந்து சாய்ஞ்சு ஊருபோயி சேருறதுன்னா அது இப்பிடி கெடுபிடியா இருக்கதனாலத்தான் பாத்துக்கிடும்’ என்றார் கிழவர் என்னிடம்.

‘ரிசர்வ் பண்ணி போகக்கூடாதா?’

‘அந்தமட்டுக்கும் கையில பைசா இருந்தா பின்ன நாங்க எதுக்கு இப்டி இருக்கம்? தம்பி, நாங்கள்லாம் சீட்டு இல்லாம ரயிலேறிப்போனவங்க…இப்ப இந்தமட்டுக்கும் சீட்டுன்னு ஒண்ணு கையில வச்சிருக்கம்’

’அண்ணாச்சி அந்தால எடமிருக்குல்லா?’ என்றபடி ஒரு குள்ளமான மனிதர் வந்தார். எல்லாருமே கறுப்பு, ஒல்லி, நீண்ட பற்கள் கொண்டமனிதர்களாக இருந்தார்கள். பெண்களும் அதேபோலத்தான்.

‘தம்பி வாங்க….மருதையா?’

’நமுக்கு ஒடங்குடீண்ணே….இங்கிண முறுக்குசுட்டு விக்கிறோம்…செத்த தள்ளினேள்னாக்க காலுக்கும் அமைய எடம் கெடைக்கும்…குண்டிக்கு எடம்குடுத்துட்டு கால அந்தால விட்டுரப்பிடாதுல்லா? ரெண்டும் சேந்துபொறந்ததாக்கும் பாத்துக்கிடுங்க’

முன்பதிவுசெய்யப்படாத பெட்டிகளே பத்து இருக்கும். வண்டி கிளம்ப நிறையநேரமிருந்தது. டெல்லிநிலையத்திலேயே வண்டியை ஐந்துமணிநேரம் நிறுத்திவைப்பார்கள். சிறிது நேரத்திலேயே பெட்டி நிறைந்துவிட்டது. உள்ளே இருந்தவர்கள் கதவை உள்ளே சாத்தி தாழிட்டுவிட்டார்கள். அதன்பின் கதவுகள் நான்கும் பத்துபேர் கொண்ட நிர்வாகக்குழுவின் கட்டுப்பாட்டில் வந்தது.

‘வாசல்ல கெடுபிடி பண்ணுறாங்கண்ணாச்சீ…உள்ள இம்பிடு எடமிருக்கே’ என்றபடி ஒரு குடும்பம் கடைசியாக ஏறியதும் கதவு மூடப்பட்டது.

‘அந்தால விட்டா ஆட்டுமந்தைய கொண்டாந்து ஏத்திப்பிடுவானுக பாத்துக்கிடுங்க. பொறமே பெட்டி பள்ளிக்கூடம்மாதிரி ஆயிரும்”

வண்டிக்குள் விளக்குகள் இல்லை. சன்னல்கள் திறந்திருந்தாலும் நல்ல புழுக்கம். அரை இருட்டில் வியர்த்த கரிய முகங்களின் பற்கள் பல இடங்களில் தெரிந்துகொண்டிருந்தன. ‘எப்பம் எடுப்பான்?’

‘அவன் வண்டிக்குள்ள எண்ணையும் தண்ணியுமெல்லாம் ஏத்தணும்லா? பன்னிரண்டரைக்கு எடுப்பான். அந்தால நேரா ஆக்ராதான். காலம்பற போபால தாண்டீருவான். மத்தாநாள் காலம்ப்ர ரேணிகுண்டா… அண்ணைக்கு சாயங்காலம் மருதை….ஒரு ரெண்டுமணிநேரம் லேட்டுல்லாம போவமாட்டான் பாத்துக்கிடுங்க…’

மேல்வரிசைப்பற்கள் நீட்டிக்கொண்டிருந்த கரியமெலிய மனிதர் இருக்கைகளில் தொற்றி ஏறி மேலே இருந்த பொருள்வைக்கும் பகுதியின் கம்பிகளில் இரண்டு சிறிய ஒலிப்பெருக்கிகளை வைத்துக் கட்டினார். அவரது முன்னந்தலை சிலும்பி நின்றது. முகம் முழுக்க அம்மைத்தழும்பு. கால்கள் சுள்ளிமாதிரி ஒல்லியாக இருந்தன. இன்னொரு குள்ளமான கரிய மனிதர் கீழே நின்று அவருக்கு உதவினார்.

மிட்டாய்ச்சிவப்பு பாலியஸ்டர் புடவை கட்டியிருந்த கரிய இளம்பெண் ‘என்ன மாமா, இம்புடுநேரமா? மாமாக்கு கனேசன் குடுக்கதிலே தெறம பத்தாது போலுக்கே’ என்றாள்.

‘கனேசனுக்கு பின்னு இருக்கு. பிளக்குக் குளி வேணும்லா? தேடீட்டிருக்கான்’ என்றார் குள்ளமனிதர்.

‘இன்னும் தேடுறீகளாக்கும்?’

‘தேடணுமே…உனக்கு தெரிஞ்சு நல்ல பிளக்கு குளி இருக்காட்டீ?’’

‘இருக்கு…ஆனால் அதில இப்பம் கறண்டு இல்ல’

‘கனேசன் குடுத்திருவோம்…கறண்டு வாறப்ப வரட்டு’

அவள் உடம்பில் மெல்லிய புழுதிப்பூச்சு கரிய சருமத்தில் பரவியிருந்தது. அது ஏன் என எனக்கு நன்றாகவே தெரியும், அவள் சிமிண்ட் வேலைசெய்யக்கூடியவள். கரிய ஈறுகளில் இருந்த பெரிய மாட்டுப்பற்கள். கைகளால் வாயை மூடிக்கொண்டு சிரித்தாள்.

அவர் ஒயரை இழுத்து டேப்ரிக்கார்டருடன் இணைத்தார். பெட்டியின் எல்லா பகுதியிலும் ஒரு ஒலிப்பெருக்கி வீதம் கட்டி ரயிலின் மின்விசிறியின் அருகே ஒரு தகரப்பகுதியைத் திறந்து அங்கே ஏதோ செய்து மின்சார இணைப்பு எடுத்துக்கொண்டார்.

‘பானாசோனிக்கா சார்?’

‘ஆமா…’ என்றார். அவர் பேசும் வழக்கமே இல்லாதவர் என்று நினைத்துக்கொண்டேன்.

‘ஸ்டீரியோவாக்கும்…பிரியா படப்பாட்ட போட்டுக்கேக்கணும்…டிங்கு டிங்குண்ணு பொறந்தலையில கேக்குமே’ வழுக்கைத்தலை ஆள் பக்கத்தில் இருந்த ஆளிடம் சொன்னார்.

அவர் ஒரு மஞ்சள்பையில் இருந்து போர்வைகளை எடுத்துக்கொண்டிருந்தார். அவர் பாட்டு எதையும் கேட்பவர் போலத்தெரியவில்லை. மொத்த வாழ்நாளையும் பொறுப்பாக இருப்பதற்காக மட்டுமே செலவழிப்பவர் என்று நினைத்துக்கொண்டேன். அருகே அவரது மனைவி. அவள் பயணத்தை ஒரு வாழ்க்கைச்சிக்கல் என்ற கோணத்தில் அணுகக்கூடியவள். எவர்சில்வர் வாளியை இருக்கைக்கு அடியில் பத்திரமாக வைப்பதில் மூழ்கியிருந்தாள். அதில் இரண்டுநாளைக்குண்டான புளிசாதமோ எலுமிச்சை சாதமோ இருக்கும் என்று தோன்றியது.

‘தம்பி யாரு?’

‘நாகருகோயிலுக்கு போறாராம்’

‘நம்மாளு மாதிரி இல்லியேண்ணு கேட்டேன்’

‘மலையாளத்தான்….’

‘வேற பொட்டி ஓடுதுல்லா?’

நான் அவரது சிறிய கண்களைப்பார்த்தேன். அதில் தெரிந்த விரோதத்தைக் கண்டு கண்களை விலக்கிக் கொண்டேன். அத்தனை கண்களும் என்னையே பார்ப்பதுபோல உணர்ந்தேன். இறங்கி வேறு பெட்டிக்குச் சென்றாலென்ன என்று தோன்றியது. ஆனால் மலையாளிகளுக்கென ஒரு பெட்டி இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் அதில் என்னை தமிழன் என்று சொல்லி ஏறவிடாமல் தடுத்தாலும் தடுப்பார்கள்.

அங்கே இருப்பதன் அசௌகரியத்தை வெல்ல நான் வெளியே பார்க்க ஆரம்பித்தேன். பிளாட்பாரத்தில் ஆட்கள் பிள்ளைக்குட்டிகளுடன் ஓடிக்கொண்டிருந்தனர். பெரிய இரும்புவண்டிகளில் பொதிகளை இழுத்துச்சென்றார்கள். எங்கோ ஒரு ரயில் கிளம்பிச்சென்றது. எங்கோ ஒரு குரல் ஏதோ சொன்னது.

ரயில் கிளம்பியதும் மின்விசிறிகளும் விளக்குகளும் உயிர்கொண்டன. உடனே ஒல்லி ஆள் பாட்டுபோட ஆரம்பித்தார். முதல்பாட்டு ‘குறைதீர்க்கும் வினாயகனே’ அடுத்தபாட்டு ‘நான் செத்துப்பிழைச்சவண்டா!’ பயங்கரக் கைதட்டல், விசில் ஒலி. ஒரு ஒல்லி மனிதர் எழுந்து கைகளை விரித்து லேசாக ஆட மற்றவர்கள் கைதட்டிச்சிரித்தார்க்ள். அடுத்தபாடல் ‘ஒன்றும் அறியாத பெண்ணோ’ வந்தபோது அனைவரும் அமர்ந்து அதன் ஓங்கிய இசைக்கு தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அழுத்தமான குரலில் டிஎம்.எஸ் ‘கள்ளும் வெண்மை பாலும் வெண்மை பருகிப்பார்த்தால் தெரியும் உண்மை’ என்றார்.

எனக்கு எப்போதுமே பிடித்த ‘நீல நயனங்களில்…’ .அவ்வளவு நீளமான நீலம். பாடல்களைப்போட்ட ஒல்லிமனிதர் இருக்கையில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு கண்களை மூடி சுட்டுவிரலால் காற்றில் தாளம்போட்டு தன்னை மறந்து இருந்தார். அவரது தேர்வில் ஒரு நயம் இருந்தது. பாட்டுகளை சகட்டுமேனிக்குக் கேட்பவரல்ல. எப்போதாவது தற்செயலாக மட்டும் பாட்டு கேட்பவர்கள்தான் சலித்துப்போன பாட்டுக்களை வைத்திருப்பார்கள். ’காதுகொடுத்துக் கேட்டேன் ‘ ‘டிக் டிக் டிக்’ போன்ற பாட்டுகள். அந்தவகை ஒன்றுகூட அவரிடமில்லை.

வந்துகொண்டே இருந்தவை கேட்டுக்கேட்டு சலிக்காத பாட்டுக்கள். காலத்தை வென்றவை. அவை அனேகமாக இன்னிசைமெட்டுக்கள். ‘பாடும்போது நான் தென்றல்காற்று’ ‘ஆண்டவன் உலகத்தின் முதலாளி’ ’விழியே கதை எழுது’ ’பூமழைதூவி வசந்தங்கள் வாழ்த்த‘. எல்லாவற்றுடனும் எம்ஜியாரின் முகம் இருந்தது. அங்கே கசக்கி கிழித்து சுருட்டி வீசப்பட்ட எளியமனிதர்களுடன் அவரும் இருப்பதுபோலத் தோன்றியது. அங்கிருந்த ஒவ்வொருவரும் அப்போது அவரை அங்கே உணர்வதுபோல.

எப்போதுமே எம்ஜியார் எனக்குப்பிடித்தவரல்ல. அவரது படங்களின் செயற்கையான கதை, அவரது கோமாளிபோன்ற முகம் எதிலும் என் மனம் ஒட்டியதில்லை. நான் சத்யனுக்கும் நசீருக்கும் ரசிகன். ‘தலைதிரிஞ்சு போச்சு. நல்ல நாயருக்க படம் பிடிக்காது. நாடாரும் மிலேச்சனும் நடிச்சா பிடிக்கும்…என்னத்தச்சொல்ல’ என்று அப்பு அண்ணா வருத்தப்படுவார். ஆனால் இப்போது எம்ஜிஆரின் முகம் மனதுக்கு மிக நெருக்கமானவராக இருந்தது.

எம்ஜிஆர் சிரித்துக்கொண்டு மட்டுமே நினைவில் எழுந்தார். சரிதான் என்று கண்ணடித்தார். துள்ளி ஓடினார். கைவீசிச்சுழன்றாடினார். துன்பமே அற்றவராக இருந்தார். அவர் பாடல்களில் எப்போதுமே ஓர் உற்சாகம் இருந்தது. காதல்பாடல்களின் இன்னிசையில்கூட பிரியத்துடன் துக்கம் கலந்திருப்பதில்லை. இந்தவாழ்க்கை, இதன் சேறும் அழுக்கும் குப்பையும் கூளமுமாகக்கூட, மகத்தானதுதான் என்று அவை சொல்கின்றனவா என்ன?

இதோ இந்தக் கரிய மெலிந்த மனிதர்களின் கண்கள் மின்னிக்கொண்டிருக்கின்றன. சிலர் சன்னல்வழியாக பார்த்துக்கொண்டிருக்க அவர்கள்மேல் ஒளியும் நிழலுமாக படபடத்தோடுகின்றது பாடல். சிலர் கண்மூடி தங்களுக்குள் அலைகிறார்கள். சிலர் தாளம்போட்டு பின் அதை விட்டுவிட்டு வேறெங்கோ சென்றுவிடுகிறார்கள். ‘சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ’

‘அண்ணாச்சி சிவாஜி பாட்டு போடுங்க, புண்ணியமாப்போவும்’

‘இருக்கு தம்பி…அண்ணாச்சி போடுவாரு…அம்பிடு கேசட்டு வச்சிருக்காருல்லா? ..தம்பி ஆசாரிமாரா பிள்ளமாரா?’

‘அண்ணாச்சி, நாம தட்டாம்புள்ளைல்லா’

‘சிவாசி பாட்டு கேக்குறப்பமே தெரிஞ்சுது…இருங்க, வருது’

நாலைந்துபேர் சிரித்தார்கள்.

‘அண்ணாச்சி, நாங்க நாடாக்கமாராக்கும்…நாங்களும் சிவாசிப்பாட்டு கேப்பம்ல’ என்றான் மறுபக்கமிருந்து எட்டிப்பார்த்த ஓர் இளைஞன்.

‘என்னத்தலே நீங்க கேட்டிய? லே ஒரு சிவாசிப்பாட்டு சொல்லு பாப்பம்’

’சோதனைமேல் சோதனை!’

‘பாத்தியா? வே, கண்டீராவே உம்மாளு என்ன பாட்டு கேக்கான்னுட்டு’

‘அவன் இந்தமட்டுக்கும் என்னடி ராக்கம்மாவ சொல்லாம விட்டான்ல’ என்றார் வழுக்கையர். அனைவரும் சிரித்தார்கள்.

‘அண்ணாச்சி, நான் நல்லவர்க்கெல்லாம் பாட்டாக்கும் மொதல்ல நெனைச்சேன்….அது இளையராசாபாட்டுல்லான்னு நிப்பாட்டிட்டேன் பாத்துக்கிடுங்க’

‘வெளங்கீரும்…’

‘வே பாட்டைப்போடும்வே…சும்மா பயக்ககூட சலம்பீட்டு’

முதல் பாடலே ’செந்தமிழ் பாடும் சந்தனக்காற்று’ தொடர்ந்து ’சிந்துநதிக்கரையோரம்’ ’காதல்ராஜ்ஜியம் எனது’ ‘மலரே குறிஞ்சி மலரே’. எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்கள் எல்லாவற்றிலும் பலவரிகளின் முந்தானை நுனிகள் காற்றில் பறக்கின்றன. ‘பிறந்தபயனை நீஈஈஈ அடைந்தாய்ய்ய்….’ பல வரிகளும் ஒருமுறை வெளிநோக்கி ஒலித்து உடனே தன்னை நோக்கியே திரும்பப் பாடிக்கொள்கின்றன. ’தேரினில் வந்தது கண்ணே, கண்ண்ணே தேரினில் வந்தது கண்ணே’ அந்த இரண்டாவது முறை குரல் சற்று கொஞ்சுகிறது. அல்லது கெஞ்சுகிறது.

வெறும் மனப்படங்கள். இசை எழுப்பும் எண்ணங்களுக்கு எந்த ஒழுங்கும் இல்லை. அந்த இசையின் தர்க்கத்தில்கூட அவை இல்லை. ஆனால் அவையும் சேர்ந்ததே இசை. அவை இல்லாமல் கேட்டால் இசை என்னவாக இருக்கும்? வெறும் கணக்குவழக்குகளாக இருக்குமோ?

நான் தமிழகத்தைவிட்டு வந்து ஆறுமாதங்கள் ஆகிவிட்டிருந்தன. அந்தப்பாடல்கள் வழியாக எங்களூரில் வாழ ஆரம்பித்தேன். கணம் கணமாக. ஒளிபரவிய ஆற்றுநீர்ப்பரப்பு. காற்றுகடந்து செல்லும் தென்னைமரக்கூட்டங்கள். பசுமையலைமேல் கொக்குகள் சிறகடிக்கும் வயல்கள். செந்நிற ஓட்டுக்கூரைகள் மீது வெயிலின் வெறிப்பு. குளிர்ந்த இருட்டுக்குள் கொடித்துணிகள் காற்றில் நெளிகின்றன. எருமைகள் கண்மூடி அசைபோடுகின்றன. வாழையிலைக் கிழிசல்களின் கொடித்தோரணங்கள் படபடக்கின்றன. ஒருமண்ணில் ஒருவன் எத்தனை துளிகளில் ஒரேசமயம் வாழ்ந்துகொண்டிருக்கிறான். அவனே அறிவதில்லை.

ஒவ்வொரு பாடலுடனும் முகங்களும் இடங்களும் ஒலிகளும் மணங்களும் கலந்திருந்தன. ‘காதல் ராஜ்ஜியம் எனது’ நானும் ராதாகிருஷ்ணனும் சேர்ந்துபார்த்த மன்னவன் வந்தானடி படத்தின் பாடல். மஞ்சுளா ஒரு குதிரையில் செல்ல சிவாஜி சேணத்தைப்பிடித்துக்கொண்டு நடப்பார். ’சிவாஜி தலையிலே வவ்வாலு இருக்குடேய்’ என்று ராதாகிருஷ்ணன் அவரது வினோதமான பொய்முடியைப்பார்த்து கூவினான். சிவாஜி ரசிகர்களாலான அரங்கே சிரித்தது.

வெளியே வரண்ட காலியான இந்திய மையநிலம் மௌனமாக திரும்பிக்கொண்டிருந்தது. அன்னிய நிலம். அதை எனக்குள் ஆழ்ந்த துயரம் நிறைந்த கனவாக ஆக்கிக்கொண்டிருந்தவை அந்தப்பாடல்கள்தான். ’மதன மாளிகையில், மந்திரமாலைகளாம்’ பாடல்களில் கொஞ்சம் துக்கம் கலக்காமலிருந்தால் அவை இனிமையாவதில்லை. துக்கமே இல்லாதபாடல்கள்கூட காலப்போக்கில் அவற்றின்மீது துக்கத்தை திரட்டிவைத்துக்கொள்கின்றன. சிவந்த மண்ணின் ’ஒருராஜா ராணியிடம்’ பாடலின் தொடக்கத்தில் வரும் அந்த ‘லாலலா லாலலா லா!’ ஒரு திடுக்கிடலை உள்ளுக்குள் ஏற்படுத்தியது. எங்கிருக்கிறேன்!

திடீரென்று ஆச்சரியத்துடன் நினைத்துக்கொண்டேன். அம்மா அப்பாவின் பிரியத்தை, நண்பர்களின் உற்சாகத்தை எல்லாம் உதறிவிடமுடிந்தது. நினைவுகளைக்கூட மனதுக்குள் ஒடுக்கிக்கொள்ளமுடிந்தது. ஆனால் இந்தப்பாடல்கள் அவையனைத்தையும் ஒரேகணத்தில் பேருருவம் கொண்டு எழச்செய்துவிட்டன. தமிழ்மண்ணுடனும் வாழ்க்கையுடனும் என்னை வாழ்நாள் முழுக்க பிணைத்துநிறுத்துபவை இந்தப்பாடல்கள்தான். இந்தப்பாடல்களின் சாலைவழியாகச் சென்று நான் அனைத்தையும் தீண்டிவிடமுடியும்.

சாமியார்கள் இந்தப்பாடல்களின் இனியவதையிலிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அவர்கள் இவற்றை எந்த ஆழத்தில் புதைப்பார்கள்? இவை விதைகள். பாறைகளைப்பிளந்து வெளிவரும் தளிர்கள். ‘திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே’ என்ன ஒரு குழைவு. ரயிலில் இருந்தே வெளியே பறந்து பல கிலோமீட்டர்தூரத்துக்கு குரலின் நுனி நெளிந்துகொண்டிருப்பதுபோல. ’தீபங்கள் ஆராதனை…’

ஊரெங்கும் பூவாசனை வீசவேண்டுமென்றால் ஓணம் வரவேண்டும். அத்தப்பூக்களம். பூக்கொய்ய கூட்டம் கூட்டமாக காலையிலேயே செல்வோம். காட்டுப்பூக்களும் பூக்களே என உணரும் நாட்கள். எல்லா பூக்களுக்கும் ஏதோ ஒரு வாசனை உண்டு என்றறியும் நாட்கள். ’மாலை ராகத்தின் ஆனந்த மயக்கமே மங்கலத் தேன் சிந்தவா!’

‘அண்ணாச்சி, பிபிஎஸ் பாட்டு இல்லீங்களா?’ என்று ஒரு பெண் வந்து கம்பியைப்பிடித்துக்கொண்டு நின்றபடி கேட்டாள். முப்பதுவயதிருக்கும். நல்ல கட்டுமஸ்தான கரிய பெண். நெற்றியில் முடியை காக்கைச்சிறகுபோல வெட்டி விட்டிருந்தாள். காதில் பெரிய வளையங்கள். தலையில் பின்னலைச் சுற்றியதுபோல மல்லிகைப்பூ.

‘அவரு எந்தப்படத்தில நடிச்சாருட்டீ?’ என்றார் நரைமீசை. கண்களில் இருந்த சிரிப்பு அவர் நக்கலடிக்கிறார் என்பதைக் காட்டியது.

‘அவரு எல்லா பாட்டிலயும் நல்லா நடிக்காருல்லா ?’ என்றாள்.

’செரிதான்….நாக்குள்ள குட்டி’ என்றார் ஒரு கிழவர் சிரித்தபடி.

‘தனியா நாலு கேசட்டு இருக்கு…போடுதேன். ஆனா எல்லாருக்கும் புடிக்கணுமே’

‘மத்தியான்னம் சாப்பிட்டதும் எல்லாரும் கொஞ்சம் அங்க இங்க படுப்பாங்கல்லா? அப்ப போடுங்க’

‘இப்பம் போடுலே…குட்டி கேட்டுட்டால்லா?’

பி.பி.சீனிவாசின் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்ததும் அவள் தரையிலேயே அமர்ந்துவிட்டாள். இருக்கையில் லேசாகச் சாய்ந்து கண்களை கீழே சரித்து அவள் இருந்த விதம் அப்பாடல்கள் ஒரு துளிகூடச் சிந்தாமல் உள்ளே செல்வதற்கானது என்று பட்டது. ‘மௌனமே பார்வையாய்…’ அழகான பெண்ணே அல்ல. கரடுமுரடான முகம். உருண்ட மூக்கு. ஆனால் அவள் கண்கள் மிகப்பெரியவை. இமைகள் குருவிச்சிறகுபோல மெல்லச்சரிய அவள் சரிந்து அமர்ந்திருக்கையில் மெல்லமெல்ல பேரழகியாகியபடியே வந்தாள். ‘எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி’

மதியமானதும் பாட்டை நிறுத்திவிட்டு சாப்பிட ஆரம்பித்தனர். அந்த முடிவை யார் எடுத்தார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. எங்கோ எவரோ சோற்றுவாளியை இழுத்திருக்கவேண்டும். வாளிகளின் ஒலி எழுந்ததும் ஒல்லி ஆள் பாட்டை நிறுத்தினார். புளிசாதமும் எலுமிச்சை சாதமும் சப்பாத்திகளும் வெளியே வந்தன. கிழவி அவளிடம் ’புளிசோறு திங்கியாட்டீ?’ என்றாள்.

‘திங்குதேன் அத்தை….நான் ஒண்ணுமே கொண்டுவரல்லை பாத்துக்கிடுங்க…இங்க ரயிலிலே வாங்கிக்கலாம்ணு இருந்தேன்’

‘இங்க கொண்டுவரணுமானா கதவத்திறக்கணும்லா? ஒருத்தனையும் உள்ளவிடமாட்டானுக நம்மாளுக…டேசன் வந்ததும் கதவச்சாத்தீருவானுக’

‘அவங்களும் ஏறணும்லா?’

‘அதைப்பாத்தா முடியுமா? விட்டா ஏறி நெருக்கீருவானுக…நாம எப்பிடி மூணுநாளு அந்தமாதிரி யாத்திரபோறது? மனுஷன் கட்டையச்சாய்ச்சு கண்ணமூடாண்டாமா?’

‘தம்பி புளிசோறு இருக்கு…சாப்பிடுதியளா?’ என்றாள் ஒரு பெண்.

நான் திடுக்கிட்டேன்’ நானா?’

‘ஆமா…சோறு கொண்டாரல்ல இல்லியா?’

‘ஆமா’ என்றேன்.

‘தம்பி பாட்டுகேட்டு சொங்கிப்போய்லா இருந்தாரு…சாப்பிடுங்க த,ம்பி’ என்றார் வழுக்கை.

‘கொண்டாங்க’ என்றேன்.

பாலிதீன் காகிதத்தில் புளிசோற்றை அள்ளி வைத்தாள். ‘உப்பு தனியா வச்சிருக்கேன்…பத்தல்லண்ணா சொல்லுங்க’

‘நீ எந்தூரு குட்டி?’

’மாமா நமக்கு பணவுடியாக்கும்…’ என்றாள் ‘செல்வீண்ணு பேரு’

‘பணவுடிண்ணா….?’

‘அங்கிண ஒரு கிராமம்…அது என்னத்துக்கு? நம்ம மானம்கெட்ட பொளைப்பு அங்கிணயும் நாறுகதுக்கா?’

‘செரி, எல்லாம் மானம்கெட்ட பொளைப்புதான்… ஊர விட்டு வந்துட்டா பிறவு ஏது மானம் மரியாத? கும்பிச்சூட்டிலே குளுந்த கஞ்சி விளுதா இல்லியாண்ணு பாத்தா போரும்லா?’

‘அத்தைக்கு எந்தூரு?’

‘ராதாபுரம்…பக்கத்திலே உருமாங்குளம்….’

‘விசேசமா போறீங்களோ?’

‘என்னத்த விசேசம்? அங்க ஒரு அஞ்சேக்கர் மண்ணு கெடக்கு…ஒருத்தன் ஏக்கருக்கு மூவாயிரம் குடுக்கான்னு சொல்லுதான். மொட்டப்பால. அதுக்கு நாலு பங்காளிய. நிண்ணுபேசி உண்டானத வாங்கிட்டுப்போனா போன எடத்தில ஒரு எடத்தப்பாத்து வேவாரத்த எடுக்கலாம்ணு நினைப்பு…சொரிமுத்தையன் காக்கணும்’

‘டீக்கடையா?’

‘எப்படித்தெரியும்?’

’அத்தையப்பாத்தா தெரியுதே?’ என்று சிரித்தாள்.

‘குட்டி, இந்த ரயிலிலே பாதிபேரு டீக்கடையாக்கும்…’ என்றார் கிழவர். ‘கடை என்னா கடை, சும்மா ரோட்டோரம் அடுப்ப வைக்கிறதுதான்…’

அந்தப்பக்கமிருந்து ஒரு ஐம்பதுவயது பெண் எட்டிப்பார்த்து ‘ஏந்தம்பி, சப்பாத்தி வேணுமா?’ என்றாள் என்னிடம்.

‘இல்ல…புளிசோறு சாப்பிட்டேன்’

‘சப்பாத்தி குடு ஆத்தா…வளரும்பிள்ள…சோத்தில என்ன சத்து?”

‘நாம இப்பிடி வெறுஞ்சோத்தில புளியவிட்டு தின்னுத்தின்னுதான் இந்தமாதிரி ஒடஞ்சுள்ளி கணக்கா இருக்கோம். வட இந்திய ஆளுங்க சப்பாத்திய சுருட்டி கடிக்கான்….எப்டி இருக்கான் பாரு…அய்யனாருசெல மாதிரி’

‘அங்க வம்புக உண்டா?’

‘வம்பில்லாத எடமுண்டா? ஆனா கூரை பறக்குற காத்துல எறும்பு பறக்காதுல்லா? ஏது”

’என்ன செய்வீயோ?’ என்றாள் செல்வி.

’எதுக்க முடியுமா? பஞ்சம் பொளைக்கல்லா வாறோம்? போனதுமே ஊரிலே வல்லான் ஆருண்ணு மையமா கணக்குபோட்டுக்கிடுறது. நேரா போயி அவன் காலிலே விழுந்தா அவன் நம்மள பாத்துக்கிடுவான்’

‘நாலு வருசம் முன்ன ஒருத்தன் நம்ம கிட்ட வந்து மாமூலு கேட்டான் அண்ணாச்சி. சின்னப்பய….யாதவாக்கும்… எனக்கே கஞ்சிக்கு வளியில்லேண்ணு சொன்னா கொன்னிருவேண்ணு சொல்லி கத்தியக்காட்டினான். அவனுக்க மூத்தவன கூட்டிட்டுவாறான். அவன் வாரான் சிந்தி எருமைக்கு கைய வச்சாமாதிரி…நேரா நானும் இவளும் ரெண்டு பிள்ளையளுமாட்டு போயி அப்டியே காலிலே விளுந்துட்டோம். நடு ரோடு பாத்துக்கிடுங்க…பத்து அஞ்ஞூறு ஆளுங்க சுத்தி போய்ட்டு வந்திட்டிருக்கப்பட்ட எடம்…அப்டியே தெகைச்சு நின்னுட்டான். நான் அவன் காலைப்பிடிச்சுகிட்டேன். நீ என் தெய்வம், உன்னை நம்பி இருக்கேன்னு சொன்னேன். அவன் செரி எந்திரிடான்னான். இப்பம் ஒருத்தன் நம்ம கிட்ட ஒண்ணும் சொல்லமாட்டான்….’

‘நாம மனுசன நம்பில்லா வாளுறம்…தொகையலு வச்சுக்கிடுதியா குட்டி?’

‘வேண்டாம் அத்த…கத்திரிக்கா வச்சுல்லா அரைச்சிருக்கீஹ? நம்ம தொளிலுக்கு கத்திரிக்கா இருக்கப்பிடாது’

‘பிள்ளகுட்டி உண்டுமாட்டீ?’

‘ஒரு குட்டி கெடக்கு. அதை ஊரிலே விட்டிருக்கேன்..நாலாப்பு படிக்கு’

’நம்ம குட்டிக ஒண்ணும் நெறமும் சதையுமாட்டு இருக்காதுல்லா? அதாக்கும் மானமா பொளைப்பு போவுது….குட்டி லெச்சணமா இருப்பான்னா அங்க நிண்ணு படிக்கட்டு’

‘படிக்கப்பட்ட குட்டியாக்கும் மாமா…அதாக்கும் நானும் கஷ்டப்பட்டு பைசா அனுப்புகேன். அதுக்கு அந்தக்குடும்பத்துக்கே நான் கஞ்சி ஊத்தணும் பாத்துக்கிடுங்க…அதைக்கொண்டா இதைக்கொண்டான்னுட்டு’

சாப்பாடு முடிந்ததும் செல்வி ‘மாமா மல்லிகை என் மன்னன் மயங்கும்’ போடுங்க’ என்றாள்.

‘அந்தப்படம் நான் பாத்ததாக்கும்…தீர்க்கசுமங்கலி…கே.ஆர்.விசயா முத்துராமன்’

‘முத்துராமன் என்ன ஆளாக்கும் அண்ணாச்சீ?’

‘ஏன், பெஞ்சாதிய கூட அனுப்புற எண்ணம் இருக்கா…கேக்கான்பாரு’

‘குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி கொஞ்சிப் பேசியே அன்பை பாராட்டுது’. நான் பார்வையைத் திருப்பியபோது பாட்டு போடும் ஒல்லிமனிதரின் கண்களைச் சந்தித்தேன். ஈரமாக இருப்பவைபோலத் தோன்றின. விலக்கிக்கொண்டு மீண்டும் அனிச்சையாக அவரைப் பார்த்தபோது புன்னகை செய்தார். வருத்தம் நிறைந்த புன்னகை என்று தோன்றியது. பெரிய ஒரு துயரத்தில் இருந்து மீண்டபிறகு வரும் புன்னகை. மாபெரும் அவமதிப்பு ஒன்றை நெடுநாள் கழித்து நினைவுகூரும்போது வரும் புன்னகை.

மதியம் எல்லாருமே தூங்கிவிட்டார்கள். நல்ல வெயில் வெளியே. ஆனால் ஜனவரியின் குளிர்காற்றில் வெக்கையே தெரியவில்லை. காற்று தலைமுடியை உடையை அளைந்துகொண்டே இருந்தது, பிரியம் தாளமுடியாததைப்போல. செல்வியும் நானும் அவரும் மட்டும் விழித்திருந்தோம்.

’வெள்ளிமணி ஓசையிலே உள்ளமெனும் கோயிலிலே’ அவள் பெருமூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்தாள். நான் அவரையே பார்த்தேன். ஒவ்வொரு பாடலையும் எந்த மனம் கொண்டு தேர்வுசெய்கிறார்? ஒருபாட்டுக்கு மேல் இன்னொரு பாட்டை ஏன் அமைக்கிறார்?

ஒலிநாடா சிக்கிக்கொண்டது. அவர் நிதானமாக அதை வெளியே எடுத்து கையை நடுவில் விட்டுச் சுழற்றி திரும்ப மாட்டினார்.

‘அண்ணாச்சி என்ன செய்றீக?’ என்றேன்.

‘நமக்கு ஸ்காவஞ்சர் சோலியாக்கும் தம்பி…ஒரு கம்பெனியிலே’

‘குடும்பம் எங்க இருக்கு?’

‘எல்லாம் நம்ம கூடத்தான்….நம்ம பெரியப்பன் செத்துப்போயிட்டாரு…அதான் ஊருக்குப்போறேன். நல்லதுக்கு போவல்லேண்ணாலும் கெட்டதுக்கு போயிடுறது….ஆளுங்க வேணுமே.. நமக்கு நல்லது நடக்கல்லேண்ணாலும் கெட்டது நடந்திரும்லா?”

‘இந்தப்பாட்டெல்லாம் நீங்களே எடுத்ததா?’

‘நமக்கு இதான் தம்பி பொளுதுபோக்கு…சோறில்லாம இருப்பேன். பாட்டில்லாம இருக்கமுடியாது’

’ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்’. இந்தப்பாடல்கள் உண்மையில் ஏதோ சில சினிமாக்களைச் சேர்ந்தவைதானா? இவற்றுக்கும் சென்ற ஐம்பதாண்டுகளாக இங்கே மனிதர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்களைப்போலப் பேசக்கூடிய, அவர்களைப்போல பாடி ஆடக்கூடிய எவரையுமே நான் கண்டதில்லை. ஆனால் அவற்றின்மீது பலலட்சம்பேரின் கனவுகள் படிந்து கெட்டியாகிவிட்டன. அவற்றுடன் சேர்ந்து மூன்றுதலைமுறைகள் பலகோடி மனநாடகங்களை நடித்துவிட்டார்கள். ‘குலமாதர் யாரும் தனியாக வாடும் விதியொன்றும் இல்லை மறவாதே’

சுசீலாவின் குரல். வெண்பட்டு. அல்லது மலைமேலிருந்து கீழிறங்கி ஏறும் செம்பருந்து. அல்லது வெண்கலக்கம்பி. அல்லது இளநீர். ‘முத்துச்சிப்பி மெல்லமெல்ல திறந்து வரும்…’

பெருமூச்சுடன் அசைந்து அமர்ந்து செல்வி ‘செத்திரலாம்போல இருக்கு …இல்ல அண்ணாச்சி?’ என்றாள். அவர் புன்னகைசெய்தார். அவர் மனைவியிடம்கூட அதிகம் பேசுபவர் போலத்தெரியவில்லை. ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான்’ என சுசீலா காற்றிலாடும் கொடி போலப் பாட ஆரம்பித்தார்.

மாலையில் ஒவ்வொருவராக எழ ஆரம்பித்தனர். சத்தங்கள் சிரிப்புகள் எழுந்தன. ஏதோ ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்றபோது ஒரே ஒரு டீக்காரர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். டீ குடித்தபின் நான் அனைவருக்கும் பணம் கொடுத்தேன். கேசவேட்டன் தந்த ரூபாய் என்னிடமிருந்தது. ‘ஒரு வடை இருந்திருக்கலாம்’ என்றார் பல்நீண்டவர்.

‘சும்மா கெடயுங்கோ…வடையத்திண்ணுட்டு ராத்திரி வாயுகுத்துதுண்ணு சலம்புகதுக்கு’ என்றாள் அவர் மனைவி.

‘அண்ணாச்சி, எம்ஜியார் பாட்டு போடுங்க….சாயங்காலத்துக்கு ஒரு இது வேணும்லா?’

’ஒரு பெண்ணைப்பார்த்து நிலவைப்பார்த்தேன்’ ஒவ்வொரு பாட்டு முடிந்ததும் கைதட்டல்கள். ‘ஒன்று எங்கள் சாதியே ஒன்று எங்கள் நீதியே…உலகமக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே’ இரவு இருண்டு அடங்குவது வரை எம்ஜிஆர் சிவாஜி பாடல்கள். ’அண்ணாச்சி பாவம் செமினிக்கும் ஒரு நாலு பாட்டு போடுங்க’ . உடனே ’இயற்கை என்னும் இளைய கன்னீ’

இரவில் பத்துமணிக்கு மீண்டும் சாப்பாடு. உட்கார்ந்தே இருந்ததனால் பெரும்பாலானவர்கள் அதிகம் சாப்பிடவில்லை. வழுக்கை எழுந்து கழிப்பறைப்பக்கம் சென்று நின்றபின் சுருட்டு வாசனையுடன் திரும்பி வந்தார்.

கிழவர் ‘நான் அந்தப்பக்கம் கக்கூஸ்பக்கத்திலே படுத்துக்கிடுதேன் …நமக்கு டாங்கு லீக்கு உண்டு’ என்றார்.

அமர்ந்து தூங்குபவர்களுக்கு மட்டும்தான் பெஞ்சு. படுக்க விரும்புபவர்கள் எழுந்துகொள்ள எனக்கு சன்னலோரம் இடம் கிடைத்தது. எல்லாரும் பிளாஸ்டிக் தாள்கள் வைத்திருந்தனர். அதை விரித்து அந்தச்சிறிய இடத்திற்குள் அத்தனை பேரும் படுத்துக்கொண்டார்கள். காலடியிலும் இருக்கைகளுக்கு அடியிலும் வழியிலும் எல்லாம் உடல்கள். ஒரு கணத்தில் பிணங்களை அடுக்கியிருப்பதுபோலத் தோன்றி உடனே தலையை அசைத்து அந்த எண்ணத்தைத் துரத்தினேன்.

ஒல்லிமனிதர் பாட்டை நிறுத்தினார்.

‘அண்ணாச்சி, பாட்டு போடுங்க…நமக்கு ராத்திரி தூக்கம் வராதுல்ல’ என்றாள் செல்வி.

‘இப்பமா?’

‘மெள்ளமா போடுங்கண்ணாச்சி…’

‘என்ன பாட்டு?’

‘ராத்திரிக்கு ஏ.எம்.ராசா இல்லாட்டி கண்டசாலா. வேற பாட்டு நான் கேக்குறதில்ல’

‘இரவும் நிலவும் காயுது’ என மெல்ல பாட்டு ஒலிக்க ஆரம்பித்தது.

‘சத்தம் தொந்தரவா இருக்காதா?’ என்றேன்.

‘நம்மாளுக எந்நேரத்திலயும் பாட்டு கேப்பானுக…பாட்டு மட்டும் ஒருத்தனும் வேண்டாம்னு சொல்லமாட்டான். விடியவிடியப்போட்டாலும் கேப்பானுக’

‘பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ’ அதன்பின் நான் சற்றும் எதிர்பாராத பாட்டு ‘முத்தாரமே உன் ஊடல் என்னவோ’

‘அண்ணாச்சி இது ராஜா தானே?’

‘ஆமா ….கொஞ்சநாள் விட்டுப்போட்டு மறுக்கா வந்தப்ப பாடினது’

‘கேட்டு ரொம்பநாளாவுது அண்ணாச்சி’ என்றேன்.

‘இன்னொண்ணு இருக்குல்லா…செந்தாமரையே செந்தேனிதழே’ என்றாள் செல்வி.

வெளியே முக்கால்நிலவு கூடவே வந்துகொண்டிருந்தது. நிழலைக் குவித்துப்போட்டதுபோல அடிவானில் மலைகள். ஒளிபெற்ற மேகங்கள் தூக்கத்தில் மிதந்து நின்றன. கீழே நிழலால் வரையப்பட்ட நிலம்.’ இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று’

அமர்ந்தவாறே செல்வியும் தூங்கிவிட்டாள். என்னிடம் ’பாட்டு போரும்ல?’ என்றார்.

‘ம்’

அவர் விளக்கை அணைத்தார். எனக்கு நேர்முன்னால் சன்னலோரமாக அமர்ந்திருந்தார். நான் கம்பியில் தலைசாய்த்தேன். கேட்ட பாடல்கள் எல்லாமே எனக்குள் மீண்டும் ஓட ஆரம்பித்தன. துக்கங்கள் கனவுகள் ஏக்கங்கள் கொண்டாட்டங்கள். சட்டென்று அவையெல்லாம் ஓட்டல்தட்டுகள் என்ற எண்ணம் ஏற்பட்டது. யார் யாரோ வந்து எதையெதையோ வைத்து தின்றுவிட்டுச்சென்றவை. அந்த வாசனைகள் எல்லாமே கலந்த ஒரு வீச்சம் கொண்டவை.

பெருமூச்சுடன் அசைந்து அமர்ந்தேன். வெகுநேரமாகியிருக்கவேண்டும். மீண்டும் பெருமூச்சு விட்டேன். ஏன், இவையெல்லாம் கோயில் தெய்வ்ச்சிலைகள் என்று சொல்லக்கூடாது? பல லட்சம்பேர் பலகோடிப் பிரார்த்தனைகளுடன் கண்ணீர்மல்கி நோக்கி நின்றவை. கைநீட்டி இரந்தவை. அழவேண்டும் போலிருந்தது. ஆனால் அழுகையும் வரவில்லை.

மீண்டும் அசைந்து அமர்ந்தபோது அவரது பார்வையைச் சந்தித்தேன். புன்னகைசெய்தார். நானும் புன்னகைசெய்தேன்.

‘க்க்கும்’ என அவர் கனைத்துக்கொண்டார். ஒருபீடியைப் பற்றவைத்து உள்ளங்கையால் கனலைப் பொத்தி ஓர் இழுப்பு இழுத்தார். ‘ம்ம்க்கும்’ என கனைத்தபடி மீண்டும் இழுத்தார். பின்பு அதை வெளியே வீசிவிட்டார். குளிர்காற்றில் குச்சித்தலைமயிர் அசைந்தது.

‘தம்பி’ என்றார் அவர். என்னிடமா என்று நான் அவரைப்பார்த்தேன்.

ஏதோ சொல்லவந்தவரால் சொல்லமுடியவில்லை. ‘ஒண்ணில்ல’ திரும்பி படுத்திருப்பவர்களைப்பார்த்தார். ‘பாவப்பட்ட சனங்க தம்பி நாம’

‘ஆமா’ என்றேன். அவர் என்ன சொல்கிறார் என்றே புரியவில்லை.

’ஊரூரா போயி…என்னண்ணு சொல்ல…நம்ம கெதி இதாக்கும்’

நான் அவரைப் பார்த்து தலையசைத்தேன். இருவரும் சிறிதுநேரம் வெளியே பார்த்தோம் ‘இன்னும் பாட்டு இருக்குல்லா அண்ணாச்சி?’ என்றேன்.

‘காலம்ப்ற போடுதேன்’ என்றார் அவர்.

முந்தைய கட்டுரைகரடி- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஏன் விவாதிக்கிறேன்