நூறு நிலங்களின் மலை பதிவுகளை இப்போது தான் படித்து முடித்தேன். அற்புதம்! தமிழில் இமயப் பயணம் பற்றி எழுதப் பட்ட மிகச் சிறந்த படைப்பு அனேகமாக இது தான் என்று நினைக்கிறேன். ஆங்கிலத்தில் கூட மிக மிக அபூர்வமாகவே இவ்வளவு செறிவான, ஆழமான, உயிரோட்டமான இமாலயப் பயணக் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன்.
வானுயர்ந்த இமயச் சிகரங்களில் கூடும் ஆன்மீகத் தருணங்களையும், அங்கு பொங்கும் அழகின் பிரவாகத்தையும் மட்டுமல்ல; மலைக் கிராமங்களின் சலிப்பூட்டும் தினசரி வாழ்க்கை, பௌத்த மடாலயங்களின் வரலாறு, இஸ்லாமிய பயங்கரவாத அரசியல் பின்னணி, காஷ்மீர் பிரசினை, ஷியா சுன்னி மோதல்கள், இயற்கையின் பூகோள விசித்திரங்கள், அபூர்வ மிருகங்கள் பறவைகள் இவற்றையெல்லாம் இணைத்தே பதிவு செய்து கொண்டு பாய்ந்து, சுழித்துச் செல்கிறது இந்த எழுத்து நீரோடை. அந்த சூழலின் அபரிமிதமான கனத்திலும், உறைந்த மௌனத்துக்கு நடுவிலும் கூட, மண்ணில் கால்பதித்து நின்று மக்களோடு உரையாடி இவற்றைப் பற்றியெல்லாம் யோசித்து, எழுத முடிந்திருக்கிறது ஜெயமோகனால். அகமும் புறமும் இயைந்து சமன்வயப்பட்ட ஆத்மாக்களுக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய விஷயம்.
இமயச் சாரலின் பள்ளத்தாக்குகள், பனிப் பாறைகள், வளைவுச் சாலைகள் என்று நூறு நூறு புற நிலக் காட்சிகளை அள்ளும் ஜெயமோகனின் மொழியில், அந்தப் படைப்பாளியின் அக நிலக் காட்சிகளும் இணைந்து ஊடாடுகின்றன. உண்மையில் ஒரு அலாதியான, மகத்தான அனுபவம் இந்தப் பதிவுகளை வாசிப்பது.
நித்ய சைதன்ய யதி கயிலைப் பயணம் போனது பற்றி ஜெ சொல்லியிருக்கிறார். சிகரங்களைப் பார்த்து “காளிதாசனுடைய சல்லியம் இல்லாமல் இந்த மலைகளைப் பார்க்க முடியாது போலிருக்கிறதே’ என்று செல்லமாக அலுத்துக் கொண்டாராம் நித்யா. அந்த அளவுக்கு குமார சம்பவத்தின் இமயத்தின் எழிலை ததும்பத் ததும்ப வர்ணித்திருப்பான் காளிதாசன். ஜெ வாசகர்களும் எதிர்காலத்தில் இமயப் பயணம் மேற்கொண்டால் இதையே சொல்லக் கூடும்.
அன்புடன்,
ஜடாயு