இரு கடிதங்கள்

வணக்கம் ஜெயமோகன் சார்.

தாங்கள் நலம் என நம்புகிறேன்.

நான் தங்களுடைய இணையதளத்தை கடந்த ஒன்றரை வருடங்களாக தொடர்ந்து வாசித்து வருகிறேன். மெல்ல பழகிய பழக்கம் இப்பொழுது என்னை முழுமையாக ஆட்கொண்டு வருகிறது.

இரவு 12.00 வரை காத்திருந்து உங்கள் பதிவுகளை வாசித்துவிட்டு தூங்குவது வழக்கம். தக்கலையில் ஒரு சிறிய உணவகம் நடத்தி வருகிறோம். அதனால் ஒருவேளை இரவில் வாய்ப்பமையாவிட்டால் மறுநாள் முதல் வாய்ப்பில் வாசிப்பது வழக்கம்.

கவிதை, இலக்கியம், வாசிப்பு, ஏன் வாசிக்கிறோம், எழுத்து, எழுத்தாளர்கள், மதம், வேதாந்தம், தத்துவம், அரசியல், அறிவியல் என எல்லா தளங்களிலும் என்னுள்ளே தங்களுடைய தாக்கத்தை உணர்கிறேன்.

தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்காக பல நாட்கள் தட்டச்சு செய்ய (நான் google transliterate பயன்படுத்துகிறேன்) ஆரம்பித்து விட்டு நிறுத்திவிடுவதுண்டு. ஒருகாரணம் தயக்கம். தங்களைப் போன்ற எழுத்தாளரை என்போன்ற வாசிப்பின் ஆரம்பகட்டத்தில் உள்ள வாசகர்கள் தொந்தரவு செய்வது முறையல்ல. ஆனாலும் எழுதாமல் இருக்க முடியாது என்பதால் எழுதுகிறேன். தங்கள் நேரத்தை வீணடிக்கவில்லை என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன். நன்றி.

“நூறுநிலங்களின் மலை” முழுதும் வாசித்தேன். தூண்டுகிறது பயணங்கள் மேற்கொள்ள. சில மாதங்களுக்கு முன் வயநாடு சென்றபோது இடைக்கல் குகையில் பாறைகளை கிழித்து வரையப்பட்டுள்ள ஓவியங்கள் என்னை மிகவும் பிரமிப்பில் ஆழ்த்தின. 8000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதர்கள் தங்களுடைய வாழ்கையை இத்தனை அழகான பதிவுகளாக பிரதியெடுத்து வைத்தார்கள் என்றால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அதை ஒரு அருங்காட்சியகமாக அவர்கள் செய்திருக்கிறார்கள்.

விஷ்ணுபுரம் வாசித்துக்கொண்டு இருக்கிறேன். முதல் பகுதி முடியப்போகிறது. மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டி வரும். “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” மேலோட்டமாக வாசித்தேன். இன்னும் வாசிக்க வேண்டும். “ஏழாம் உலகம்” மற்றும் “பனிமனிதன்” வாசித்தேன்.

“இன்றைய காந்தி” மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். புத்தகத்திலும் உங்களுடைய வலைத்தளத்திலும். புத்தகத்தில் சில பக்கங்களைக் காணவில்லை உங்கள் வலைத்தளத்தில் சில பதிவுகளைக் காணவில்லை.

“இந்து மதம் ஒரு விவாதம்” ஒரு சிறந்த வழிகாட்டி. இதுபோன்று முடிந்தவரை அத்தனை இணைய பதிவுகளையும் புத்தகமாக்குவது உதவிகரமாய் இருக்கும்.

உங்களுடைய தளத்தில் சிறுகதைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். உண்மையில் சிறுகதைகள் என்ன என்பது இப்பொழுதான் புரிந்துவருகிறது. என்னை மிகவும் வசீகரித்தது “தீபம்”. ஒவ்வொரு முறை வாசிக்கும்பொழுதும் உள்ளே ஒரு மின்னதிர்வு. அதற்காகவே மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்.

தங்களுடைய சுதந்திரதின உரை மிகச்சிறந்த விதத்தில் உள்ளே புதிய வாயில்களைத் திறந்தது. மிக்க நன்றி,

தொடர்ந்து கடிதம் எழுதுகிறேன்.

அன்புடன்

குமரேஷ் R S

அன்புள்ள குமரேஷ்,

தக்கலையில் எங்கே? மறுமுறை அவ்வழியாகச் செல்லும்போது வருகிறேன்.

தட்டச்சு செய்வதற்கு nhm நிரலியை நான் பயன்படுத்துகிறேன். எனக்கு அது மிகமிக வசதியாக உள்ளது. வயநாட்டுக்கு ஒரு விரிவான பயணம் செல்லவேண்டுமென நினைத்திருக்கிறேன். அங்குள்ள சில அரிய குகைச் சித்திரங்களை நான் இன்னும் பார்த்ததில்லை.

எழுதுங்கள்!

ஜெ

பெருமதிப்பிற்குரிய ஜெ,

உங்கள் எழுத்தை வாசித்து…யோசித்து ….நகர்ந்து விடலாம் என்றே நினைத்திருந்தேன்.
சந்திப்பும் நேரடி உரையாடலும் பிம்பங்களை மாற்றும் கடப்பது எளிது என்ற எண்ணம் இருந்தது.
இரு முறை (வீடு மற்றும் பெங்களுரு) சந்தித்த பிறகும்.

இரவின் வசீகரத்தை மென்மையை முடிவிலியை, ஏழாம் உலகின் உண்மையை அறத்தின் கண்ணீரை விட்டு விலக முடியவில்லை.

மேலும் நான் புதையுறுகிறேன் உங்கள் எழுத்தில். நாட்கள் மட்டுமே நகர்கிறது. ஏனோ தெரியவில்லை…
உங்களைக் கடக்க இன்னமும் முடியவில்லை.

முயற்சிக்கிறேன் உங்களைக் கொண்டு உங்களை கடக்க.

அன்புடன்

கிருஷ்ணா T

அன்புள்ள கிருஷ்ணா,

ஓர் எழுத்து நம்மை ஆட்கொள்ளும் காலம் இருப்பதைப்போலவே அதைநாம் கடந்துசெல்லும் காலமும் உண்டு. ஆனால் அவ்வெழுத்தை முழுமையாக உள்வாங்கியபின்னரே அதுநிகழும்.

உண்மையில் அது ஆசிரியனுக்கும் வாசகனுக்குமான ஒரு விளையாட்டு.

ஜெ

முந்தைய கட்டுரைபுறப்பாடு II – 13, காற்றில் நடப்பவர்கள்
அடுத்த கட்டுரைபுறப்பாடு II – 14, ரணம்