புறப்பாடு II – 9, காலரூபம்

காசியில் ஒரு படகில் ஏறி மறுகரையில் இருக்கும் காசிமன்னரின் அரண்மனைக்குச் சென்றேன். படகில் நான்மட்டும்தான் போகப்போகிறேன் என்ற பிரமையில் இருந்தேன். சின்ன படகுதான். ஆனால் அந்த குகா இளைஞன் தொடர்ந்து ஆட்களை கூவிக்கூவி ஏற்றிக்கொண்டிருந்தான். ஒருகட்டத்தில் படகின் விளிம்புக்கும் நீருக்குமான இடைவெளி நான்கு இஞ்ச்தான் இருந்தது. ஒரு மார்வாடி குண்டு மனிதர் ஏறியபோது என்பக்கம் படகு மேலெழுந்து அவர் அருகே நீர் உள்ளே கொட்டியது. இறங்கிவிடலாமா என்று நினைத்தேன். அதற்குள் அவன் மோட்டாரை இணைத்திருந்த கயிற்றைப்பிடித்து இழுத்தான். படகு உறுமி மெல்ல அதிர்ந்தது. துடுப்பான் இன்னொரு படகில் ஊன்றி உந்தியபோது படகு மெல்ல தயங்கி நகர்ந்து பின்பு சீராக நடுப்பிரவாகம் நோக்கிச் சென்றது.

சிறிதுநேரத்திலேயே கரை மிகவும் விலகிச்சென்றுவிட்டது. எத்தனையோமுறை படங்களில் பார்த்த காசிப்படித்துறைத்தொகுதி. வரணா முதல் அஸ்ஸி வரை வரையிலான நூற்றெட்டுபடிகள். ராஜபுதன மன்னர்கள் கட்டிய செந்நிறமான அரண்மனைகளின் அடிப்பகுதிகள் பெரும் தூண்கள் போல, கல்லாலான அடிமரங்கள் போல, இறங்கி வந்து சேற்றுப்புழுதியில் ஊன்றியிருக்க மேலே புராதனமான உப்பரிகைகள் மிதந்து நிற்பவை போல நின்றன. அவற்றுக்குமேல் அப்பக்கம் நிற்கும் மரங்கள் மணிமுடிமீது இறகுசூட்டப்பட்டதுபோலத் தெரிந்தன. விதவிதமான பழைய கட்டிடங்கள். பலகட்டிடங்கள் தங்கும்விடுதிகள் என்று தெரிந்தது. சுவர்களில் அவற்றின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.

கற்படிகள் மேலிருந்து சரிந்துவந்தன. அவற்றில் மக்கள் வண்ணக்கலைசலாக ஏறி இறங்கிக்கொண்டிருக்க தூரத்தில் அவர்களின் ஓசைகள் ஒன்றுகலந்து ஒரே ரீங்காரமாக ஒலித்தன. படித்துறைகளில் வெண்ணிறமான காகங்கள் அல்லது புறாக்கள் போன்ற பறவைகள் கூட்டமாக வளைந்து நீர்மேல் பரவிச் சிறகடித்தெழுந்து மீண்டும் சுழன்றிறங்கி மீன்களை பிடித்துக்கொண்டிருந்தன. மூங்கிலால் வளைவு கட்டி மேலே பாய்கள் போட்டு நிழல்கூரை அமைத்த பயணப்படகுகள் இயந்திரங்கள் அதிர நீரில் நகர்ந்தன. அவற்றை ஒட்டியே பறவைகளும் சென்றன.

விதவிதமான படகுகள். வெறுமே சுற்றுலாப்பயணிகளுக்காக விடப்பட்ட அலங்காரப்படகுகள்தான் அதிகம். மறுகரைக்கு சடங்குகளுக்காக ஆட்களை ஏற்றிச்சென்ற படகுகள் பேருந்துகளைப்போல உடல்களை அடைத்து வைத்திருந்தன. அருகே சென்ற படகில் ஒரு பஜனைகோஷ்டி இருந்தது. ஜாலர்களையும் கைத்தாலங்களையும் சிறிய மிருதங்கத்தையும் முழக்கியபடி கங்கா ஜெய் கங்கா ஜெய்ஜெய் கங்கா கங்கா மா கங்கா என்று பாடிக்கொண்டிருந்தனர். நடுவே ஒரு ஆண்குரல் ‘ஓஓஒ அமிர்த்வர்ஷினீ ஓ மாயா! ’என வீரிட்டது. காற்று பாட்டை அள்ளி நீரின் மேலேயே விதவிதமாகச் சுழற்றி விசிறி விளையாடியது.

பிறபடகுகளின் ஓட்டத்தால் கிழிபட்ட நீர்ப்பரப்பு அலைகளாக மாறி எங்கள் படகின் விலாவை களக் களக் என அறைந்தது. எங்கள் படகை அந்த அலைகள் மெல்ல ஊசலாட்டின. வளைந்து நெளியும் நீரை பார்த்துக்கொண்டிருந்தேன். குளிர்ந்த இளநீலநீர். இமயத்தின் குளிர். இன்னும்கூட அது அந்தக் குளிரை விட்டுவிடவில்லை. கல்கத்தாவில் கடலை நெருங்கும்போது கூட அந்தக்குளிர் இருக்கும் என்று தோன்றியது. குனிந்தால் நீரைத் தொட்டுவிடமுடியும். ஆனால் நான் நெடுநேரம் தயங்கிக்கொண்டிருந்தேன். ஆற்றுக்குள் செல்லச்செல்ல குளிர் அதிகரித்தபடியே வந்தது. காற்றிலேயே நீர்த்துளிகள் இருந்தன. படகு திரும்பும்போது தண்ணீர் மேலே தெறித்தது. பின்பு நீரை அள்ளி முகத்தில் விட்டுக்கொண்டேன்.

ஆற்றில் மிதந்துவரும் பொருட்களை கவனிக்க ஆரம்பித்தேன். காலைமுதல் எங்கெங்கோ செய்யப்பட்ட பூசையின் மலர்கள்தான் அதிகம். அஸ்ஸி ஆறு என்னும் மாபெரும் சாக்கடையில் இருந்து வந்து கலந்த ரசாயனங்களின் குமிழிகள். துணிகள் மனித உடல்கள் மூழ்கிச்செல்கின்றனவா என்ற துணுக்குறலை உருவாக்கின. நான் வாசித்தறிந்ததுபோல பிணங்கள் ஏதும் செல்லவில்லை. மட்கிய சில மரத்தடிகளையும் பிளாஸ்டிக் பொருட்களையும் பார்த்தபோதெல்லாம் அவை பிணங்கள் என்ற துணுக்குறலை அடைந்தேன்.

தொலைவில் நடு ஆற்றில் ஒரு சேற்றுப்படுகை தீவுபோலத் தெரிந்தது. கரியசேற்றில் செடிகளோ புற்களோ இல்லை. ஆனால் பறவைகள் கூட்டமாக அமர்ந்து எழுந்துகொண்டிருந்தன. படகு மேலும் நெருங்கிச்சென்றபோது அது நகர்வதாகத் தோன்றியது. ஆற்றின் மீது வந்தபின்னர் நகர்வது நிலைத்திருப்பது என்ற பேதமே அற்றுவிட்டது. காசியின் பெரும் படித்துறைக்கட்டிடங்கள் கப்பல்கள் போல மெல்ல நகர்ந்துகொண்டிருந்தன. கங்கை பெரியதோர் ஏரிபோல அசைவற்று நின்றது. உண்மையிலேயே அவை நகர்கின்றன என்று உணர்ந்ததுமே புரிந்துகொண்டேன், அவை எருமைகள்.

படகு அவற்றை நெருங்கியபோது விழிகொட்டாமல் பார்த்தேன். நூறு எருமைகளுக்குமேல் இருக்கும். அவை உடலோடு உடலாக ஒட்டி ஒரே பரப்பாக மாறி மெல்லச்சென்றுகொண்டிருந்தன. அவற்றின் முதுகுகளும் தலைகளும் மட்டுமே மேலே தெரிந்தன. அவை கால்களால் நீந்துவது வெளித்தெரியாததனால் நீரின் விசையால் அவை செல்வதுபோலத்தோன்றியது. ஆனால் அவை மறுகரைநோக்கிச் சென்றுகொண்டிருந்தன. அருகே சென்றபோது அவற்றின் காதுகள் நீரில் அளைவதைக் கண்டேன். காதுகள்தான் துடுப்புகளாக அவற்றை செலுத்துகின்றன என்று கற்பனை செய்துகொண்டேன்.

காசிமன்னரின் அரண்மனைக்கு அப்பால் ஒரு கிராமம் இருந்தது. செங்கல் பாவப்பட்ட அரண்மனைமுற்றத்தில் இருந்து பிரியும் நாலைந்து சாலைகள். அதற்கப்பால் வயல்கள். வயல்களின் மண்ணையே அள்ளி வைத்துக் கட்டியதுபோல குட்டையான வீடுகள். எங்கும் எருமைகள்தான் நின்றன. குட்டிபோட்ட எருமைகளை ஆற்றில் மேயவிடுவதில்லை . அவை கோதுமைவைக்கோலையும் கரும்புத்தாளையும் மென்று தின்றபடி கட்டுத்தறியருகே செவிகள் படபடவென அடிக்க தலையைக்குலுக்கியபடி நின்றன. மிதித்துக்கசக்கப்பட்ட கரும்புத்தாள்களும் வைக்கோல்களும் சாணியுடன் சேர்ந்து எழுப்பிய வீச்சம் எனக்கு என் வீட்டுத்தொழுவத்தின் இனியநினைவை எழுப்பியது.

ஊர் முழுக்க மணல். ஈரம்பட்டதுமே சேறாக மாறி காய்ந்ததும் முழுமையாக உதிர்ந்துவிடும் மிகமென்மையான தூசுமணல் அது. கங்கையின் கரை முழுக்க அதுதான். அப்படியென்றால் கங்கை இங்கெல்லாம் வந்திருக்கிறது. இந்நிலங்களெல்லாம் ஒருகாலத்தில் கங்கையின் வயிற்றுக்குள் இருந்திருக்கின்றன. அடர்பச்சைத்தாள்கள் வெயிலில் பளபளக்க கரும்புக்கூட்டங்கள் செறிந்த வயல்கள் வந்தபடியே இருந்தன. சிறிய ஓடைகளில் நீர் கிளுகிளுத்து சரிந்து வழிந்தோடி சின்ன வரப்புகளை ஊறி நனைத்துப்பரவிக்கொண்டிருந்தது.

ஊரெல்லாம் எருமைகள்தான். நின்றும் கிடந்தும் அசைபோட்ட எருமைகள் பெரிய கண்ணாடிக்கண்களை விழித்து தலைசரித்துப்பார்த்தன. அவற்றுக்கு நான் அன்னியன் என்று தெரிந்திருந்தது. பலத்த மூச்சுடன் தலையை நன்றாகக்குனித்து பின்னால் விலகின. இளம் பெண்ணெருமைகள் தடதடவென துள்ளிச் சுழன்று ஓடி நின்று மோவாயைத்தூக்கிப் பார்த்தன. பெரும்பாலானவை கரியபளபளப்புகொண்ட சிந்தி எருமைகள். எங்களூர் எருமைகள் சருகு நிறத்தில் இருக்கும். விலாவிலெல்லாம் காய்ந்தபுல்போல முடியும் சீமைக்கொன்றை நெற்று போல சப்பி பின்னால் வளைந்த கொம்பும் கொண்டவை. இந்த எருமைகளின் உடல்கள் தாரால் செய்யப்பட்டதுபோலப் பளபளத்தன. கொம்புகள் கன்னங்கரேலென்று பனம்பாளைகள் போல உருண்டிருந்தன.

எருமையின் ஈரமான மூக்கு எனக்கு எப்போதுமே பிடிக்கும். உண்ணியப்பம்போல ஒரு எண்ணைவழியும் சொரசொரப்பு. பழைய விபூதிக்குடுவை போல கரிய பளபளப்பு. எங்கள் எருமை காளியின் மூக்கில் வருடிக்கொண்டே இருப்பேன். மூக்கின் மேலேயோ கீழேயோ வருடுவது அவளுக்குப்பிடிக்கும். மூக்கின்மீது தொட்டால் உடனே கருநீலநிறமான நாக்கு வாழைப்பூ இதழ்போல சுருண்டு மேலே வந்து என் விரலைத் தொடும். புஸ்ஸ் என்று சீறிக்கொண்டு விலகிவிடுவாள்.

காளியை கிடாரியாகத்தான் அப்பா வாங்கிவந்தார். அப்போது அவளுக்கு உடம்பெல்லாம் இன்னும் முடி. செம்பட்டைநிறமான அந்தமுடியை கண்ணைமூடிக்கொண்டு தொட்டால் முடி என்று தோன்றாது. நார் போலிருக்கும். புளியம்பழம் போல கொம்புகள். அப்பு அண்ணாதான் ஓட்டிவந்தார். அவ்வளவு தூரம் நடந்து வந்து, வரும் வழியில் சைக்கிள்கள் மற்ற மாடுகள் நாய்கள் அனைத்துக்கும் பயந்து குதித்து அவளுக்கு எங்கள் வீட்டை நெருங்கும்போதே கழிய ஆரம்பித்துவிட்டது. வீட்டுமுற்றத்துக்கு வந்ததும் துள்ளி ஒரு வட்டமடித்து நின்று பீச்சியடித்தாள். செம்மண்ணில் செதில்களாகத்தெறித்தது. மட்கிய தழைவாடை.

‘அம்மிணியே முற்றம் சாணியடிச்சு மெளுக மருமொவ வந்தாச்சே’ என்றான் தங்கையன்.

‘டேய் நீ போ’ என்று அப்பா சொன்னார். ‘நல்ல காளியாக்கும் அப்பு…நிக்கட்டு’

தொழுவத்தில் ஏற்கனவே செவலையும் வெள்ளையும் மக்ரூணியும் நின்றுகொண்டிருந்தன. அவர்களை காளி ஐயமாகப் பார்த்து இங்கேயா என்று அப்புஅண்ணனிடம் கேட்டாள். அவர் புட்டத்தைப்பிடித்து தள்ளி கயிறு நுனியால் தட்டியதும் உள்ளே நுழைந்து சுபாவமாக புல்லுக்கூடை பார்த்தாள். அது நிறைய புதிய வைக்கோல் இருந்ததில் நிறைவடைந்து வாய் நிறைய அள்ளிக்கொண்டாள்.

‘புல்லுகடி கொள்ளாம் அப்பு…நல்ல அக்கினியுண்டு’ என்றார் அப்பா.

காளியை அதன்பின் எப்போதுமே ஒரு பெரிய சூளையாகத்தான் நான் பார்த்தேன். உள்ளே எரிந்துகொண்டிருப்பதை மேலே தொட்டுப்பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம்.மார்கழிமாதம் கதகளி பார்க்கப்போய் திரும்பிவந்தபோது திறந்துபோட்டுச்சென்ற கதவை அம்மா மூடிவிட்டிருந்தாள். தட்டினால் அப்பாவுக்குக் கேட்கும். வேறுவழியில்லை. பனி கொட்டி மணலெல்லாம் ஈரமாக இருந்தது. தொழுவத்தில் படுத்துக்கொண்டேன். அங்கும் குளிர் சதையைப்பிய்த்தது. காளி படுத்து அசைபோட்டுக்கொண்டிருந்தாள். அவள் வயிறோடு ஒட்டிக்கொண்டேன். சற்றுநேரத்தில் வெந்நீர்த்தவலையில் ஒண்டிக்கொண்டதைப்போல உணர்ந்தேன். அதன்பின் அவளை கணப்பு போலவே பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தேன்

காளி எதையும் தின்பாள். புல் தவிடு புண்ணாக்கு வைக்கோல் எதிலும் பேதமில்லை. வாழையிலை, வாழைமாணம், தென்னை ஓலை, அன்னாசி ஓலை, கைதை தாழை ஓலைகள் மட்டுமல்ல வேட்டிசட்டை எதுவும் வாயருகே வந்தால் அக்கணமே தின்னப்படும். என்னுடைய அம்பர்வெள்ளை பாலிதீன் சட்டையை அவள் வாயிலிருந்து உருவி எடுத்தபோது பாதி மெல்லப்பட்டிருந்தது. ஒருமுறை கயிறை மென்று அறுத்துவிட்டு வைக்கோற்போர் அருகே சென்று நின்று இரவெல்லாம் தின்று காலையில் பார்த்தபோது வயிறு உப்பி பெரிய பாறை போல இருந்தது. எடை தாளாமல் கால்கள் சற்றுக்கோணலாக ஊன்றப்பட்டிருந்தன. வால் தீனமாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. என்ன தப்பு நடந்தது என்று தெரியவில்லையே என்ற பாவனை பெரிய கண்களில் தெரிந்தது.

’அம்மச்சியே, ஒருமணிக்கூர் நேரத்துக்கு தண்ணியக்குடுத்திராதீய…உப்பிரும்…கொஞ்சம் எறங்கட்டு…’ என்றான் தங்கையன்.

சங்கிலி வாங்கிக்கொண்டுவந்து கட்டியது அன்றுதான். தொழுவத்தில் நாக்கை வெளியே தொங்கவிட்டு நின்று கால்களை மாற்றி மாற்றி ஊன்றி ‘அம்மேய்’ என்று முனகிக்கொண்டிருந்தாள். மூத்திரம் பசும் மஞ்சள் நிறத்தில் அடர்த்தியான தைலமாகச் சென்றது. சற்று நேரம் கழித்து கெட்டியாக உருண்டைச்சாணி வெளியே வந்தது. காளி கெட்டிச்சாணி போட்டது அதுவே முதல்முறை. இரண்டு உருண்டைச் சாணி போட்டதும் தங்கையன் ‘லோடு எறக்கிப்போட்டு…இனி பயமில்லை’ என்றான்.

புளித்த பழந்தண்ணீரும் புண்ணாக்கும்போட்டு குடிக்கக் கொடுத்தோம். அப்படியே மூழ்கி அடித்தட்டிலிருந்த புண்ணாக்கு ஊறலை நக்கித் தின்று மூக்கை நிமிர்த்தினாள். மீசைமுடிகளில் இருந்தும் தாடையிலிருந்தும் தண்ணீர் கம்பிகளாகச் சொட்டியது. கண்ணருகே தவிட்டுப்படலத்தின் கோடு வரையப்பட்டிருந்தது.

‘அப்பாடா….உள்ளகெடக்கப்பட்ட வைக்கோலு இனி நிண்ணு எரியும்’

‘இப்பிடி ஒரு தீற்றி உண்டா’ என்றாள் அம்மா. ‘இதெல்லாம் காட்டிலே எப்பிடி வயறு அறிஞ்சு தின்னுது?’

‘அம்மிணி காட்டில பச்சப்புல்லுல்லா….காஞ்ச வைக்கோலுக்க காரியம் அதுக்கு மலங்காளியம்மை சொல்லிக்குடுக்கல்லலா?’’

காளியின் வயிறு மீண்டும் பீப்பாயாக மாறியது. இம்முறை காலை பதமாக எடுத்து வைத்து அவளே தொழுவத்துக்குச் சென்று படுத்துக்கொண்டாள்

‘அப்பாடா அரை மணிக்கூர் நேரத்துக்கானாலும் அக்கினி அணைஞ்சுதே’

காளி எங்கள் வீட்டிலேயே இரண்டுகுட்டிகள் போட்டாள். ஒருகுட்டி பிறந்த இரண்டாம் வாரத்திலேயே செத்தது. எருமைக்குட்டிகள் பிழைப்பது கொஞ்சம் கடினம். காளி கொஞ்சநாள் தொழுவத்து பக்கப்பலகையை சொர்ர் சொர்ர் என்று மணிக்கணக்காக நக்கிக்கொண்டிருந்தாள். மடியில் தொட்டதுமே பால் சீறியடிக்க ஆரம்பிக்கும். யாரும் பார்க்காதபோது நான் செம்பைக்கொண்டுவந்து கறந்து அப்படியே தூக்கிக் குடித்துவிடுவேன். சூடான பச்சைப்பாலின் சுவையை எந்தப் பாலிலும் அறிந்ததில்லை. காய்ச்சிய பாலில் உள்ள மாவுருசி அதில் இல்லை. இளநீர் வழுக்கைபோல ஒரு இயல்பான இனிப்பு அதிலிருக்கும்.

காசியில் எங்கும் ஒரே இனிப்புதான் கிடைக்கும். எருமைப்பாலை பெரிய கடாயில் போட்டு கொதிக்கச்செய்து கிண்டிக்கொண்டே இருப்பார்கள். வற்றிவந்ததும் மாவுச்சர்க்கரையைப்போட்டு மேலும் கிண்டி பசையாக்கி கெட்டியாக்கிக் குவித்துவைத்தால் பேடா தயார். கிலோ கணக்கில் நிறுத்து வாங்கி பாலிதீன்தாள்களில் கட்டிக்கொண்டு சென்றார்கள். காசியின் எல்லா சந்துகளிலும் பால்பேடா கடைகள் இருந்தன. கடைகளை நெருங்கும்போதே முறுகிய எருமைப்பாலின் வாசனை வரும். அருகே சென்றால் அந்த வாசனை வாடையாக மாறி குமட்ட ஆரம்பிக்கும்.

பேடா சாப்பிட்டாகவேண்டும் என்று நான் நூறு கிராம் வாங்கினேன். ஒருவாய்கூட சாப்பிடமுடியவில்லை. திகட்டியது. ஆனால் காசியில் ஐம்பதுபைசாவுக்கு பெரிய கலம்நிறையக்கிடைத்த லஸ்ஸி எனக்குப்பிடித்திருந்தது. காசியில் இருந்தநாட்கள் முழுக்க பகலுணவாக லஸ்ஸிதான் சாப்பிட்டேன். பளிங்குக்கீற்றுகள் போன்ற கெட்டித்தயிர். அதில் சீனிபோட்டு அப்படியே கொடுப்பார்கள். மற்ற ஊர்களைப்போல சலவை யந்திரத்தில் கொட்டிக்கடைந்து நுரைக்கவைப்பதில்லை.

காசி எங்கும் எருமைகள் செறிந்திருந்தன. சுரங்கப்பாதைகள் போல சுழன்று மடிந்து திரும்பி சென்றுகொண்டே இருக்கும் சந்துகளுக்குள் பக்கவாட்டில் திறக்கும் வாசல்களுக்கு அப்பாலெல்லாம் எருமைகள் கட்டப்பட்டிருந்தன. சிலசமயம் சந்துகளுக்குள் செல்கையில் மொத்தவழியையும் நிறைத்துக்கொண்டு எருமைகள் வரும். வீடுகளுக்குள் நுழைந்தால் மட்டுமே அவை செல்ல வழிகொடுக்கமுடியும். நம்மருகே வரும்போது அவை கனிவுடன் விலகி முடிந்தவரை உடலை ஒதுக்கி கடந்துசென்றன.

அருகே வரும்போதுதான் எருமை எவ்வளவு பெரிய மிருகம் என்ற அச்சம் ஏற்படும். அது பழகியமிருகமாக இல்லாவிட்டல், ஒரு காட்டில் தன்னந்தனியாக அதை எதிர்கொண்டால் நம் ஈரக்குலை அதிர்ந்துவிடும். பிரம்மாண்டமான தலை. கருங்கல்லால் ஆனதுபோன்ற நெற்றி. பாறைப்பரப்புபோன்ற முதுகு. குளம்புகள் மண்ணில் ஊன்றப்படுகையில் பூமி அதிர்வதை காலால் உணரமுடியும். எருமையும் யானையும் பன்றியும் ஒரே வகையானவை. ஆனால் எருமையின் கண்களில் மனிதனுடன் உரையாடும் ஓர் ஒளி உண்டு. மற்ற இரண்டின் கண்களும் விலங்குத்தன்மையால் திரையிடப்பட்டவை. அதற்கப்பால் அவற்றின் ஆன்மா வன்மத்துடன் எச்சரிக்கையுடன் ஒளிந்து நம்மைப்பார்த்துக்கொண்டிருக்கும்.

எருமையின் கண்கள் வழியாக அதன் உள்ளே நுழைந்துவிடமுடியும். காற்றோட்டமான பெரிய கோயில் மண்டபம் போல குளிர்ந்து கிடக்கும் அதன் மனம் என்று தோன்றும். எருமைகள் மண்டிய எங்களூரில் எருமை முட்டி எவருமே செத்ததில்லை. வருடத்திற்கு இரண்டுபேராவது பசுமுட்டி செத்துக்கொண்டிருப்பார்கள். காசியில் எருமைகளை எவருக்குமே பயமில்லை. மூன்று வயது குழந்தைகூட கீழே கிடந்த கம்பை எடுத்து அதை அடித்து விலக்கி வழி உண்டுபண்ணி மேலே செல்வதைக் கண்டேன்.

காசி எப்போதும் இரைந்துகொண்டிருந்தது. எந்நேரமும் அதன் தெருக்களிலும் சந்துகளிலும் மனிதர்களும் வண்டிகளும் விரைந்துகொண்டிருந்தனர். எருமைகள் வேறு ஒரு காலத்தில் அங்கே வாழ்ந்தன. மிக மெதுவாக காலெடுத்துவைத்து ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி அவை நடந்தன. அவற்றின் குட்டிகள் இன்னும் தள்ளி தனியாக தேவையா இல்லையா என்ற ஐயத்துடன் காலெடுத்துவைத்தன. படிக்கட்டுகளில் ஒவ்வொரு காலாக எடுத்துவைத்து இறங்கும்போது எருமைகளின் வயிற்றுக்குள் திரவங்கள் தளும்பும் ஒலி கேட்டது.

சாலையில் ஒரு குதிரையின் அருகே நின்ற எருமையைக் கண்டு வெகுநேரம் நின்றுவிட்டேன். குதிரை நிலையழிந்து முன்னங்காலை தூக்கி நிலத்தை தட்டிக்கொண்டே இருந்தது. பர் என சீறியபடி தரையை முகர்ந்தது. பிடரியைச் சிலுப்பியபடி திரும்பிப் பார்த்தது. உடம்பைச் சிலிர்த்துக்கொண்டது. நின்ற இடத்திலிருந்து அசையாமலேயே நடந்தது. காதுகள் முன்னும் பின்னும் குவியம் மாற்றிக்கொண்டே இருந்தன. எருமை மண்ணில் செய்து நிறுத்தப்பட்ட சிலை போல, கரியசேற்றுக்குன்று போல அசையாமல் நின்றது. கீழ்த்தாடை மட்டும் மெல்ல அசைபோட கண்கள் சொக்கி பாதிமூடியிருந்தன. வால்கூட எப்போதாவதுதான் அசைந்தது.

காசியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்தில் வாழ்ந்தார்கள். காலையில் வந்திறங்கி சடங்குகளைச் செய்துவிட்டு விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் வணங்கி காலபைரவருக்கும் ஒரு கும்பிடுபோட்டுக்கொண்டு அடுத்த பஸ்ஸைப்பிடித்து செல்பவர்கள்தான் அதிகம். ஆம்னிபஸ்களில் வந்திறங்குபவர்கள் அனைத்துக்கும் சேர்த்து இரண்டுமணிநேரம் ஒதுக்கியிருப்பார்கள். காசியின் வணிகர்களுக்கு காலம் இரண்டாக பகுக்கப்பட்டிருந்தது. காசிவாசிகள் சாமான்கள் வாங்கும் பகல் ஒரு காலம். முற்றிலும் பயணிகளுக்கேயான இரவு இன்னொரு காலம். பெரும்பாலான கடைகளில் சகோதரர்கள்தான் வணிகம் நடத்தினார்கள். காலையில் இருப்பவரால் மாலையைச் சமாளிக்கமுடியாது. படித்துறைகளில் சிலும்பிகளில் கஞ்சாவை ஊதிக்கொண்டிருக்கும் சாமிகளுக்கு பகலா இரவா என்றே தெரியாது. அவர்களின் காலம் கங்கை போல முடிவில்லாதது. ஓடுகிறதா தேங்கிவிட்டதா என்றே சொல்லமுடியாதது.

‘இந்தூருலே நம்மாளுக வந்தா வேவாரம்செய்து அஞ்சுவருசத்திலே ஊர்லே மச்சூடு கட்டிருவானுக சார்’ என்றார் சிவகாசியைச் சேர்ந்த சற்குணம் நாடார். ‘இவனுக உறங்கி எந்திரிக்கவே காலம்ப்ற எட்டு எட்டரையாயிரும்…அப்ப நம்மாளு பாதி ஏவாரத்த முடிச்சிருவான்’ அவர் வந்து இருபதாண்டுகளாகிறது. அதிகாலை ஐந்துமணிக்கே டீக்கடை பாய்லருக்கு விபூதிப்பட்டை போட்டுவிடுவார்.

‘குளிர்நாடுங்கிறதனாலயா?’ என்றேன்.

‘குளிரு இருக்கு….ஆனா இவனுங்களுக்கு இதான்சார் கொண்டடாட்ம். பான்பராக்க போட்டு மென்னுட்டு அப்டியே கண்ணமூடி உக்காந்திருவான். அந்தால ஒக்காந்திருக்கான் பாருங்க ரிக்சாக்காரன்…சோட்டாராம்னு பேரு….சவாரி வருதாண்ணு கூப்பிட்டுப்பாருங்க. வரமாட்டான். ஏன்னா இப்பதாம் பீடா பதம் கூடியிருக்கு….’ நாடார் சொன்னார் ‘எல்லாம் காலம்பற கொளுத்த எருமப்பால குடிக்கிறான் சார். எருமைப்புத்திதானே வரும்?’

எருமைகள்தான் அவர்கள் என்பதில் நாடாருக்கு ஐயமே இல்லை. இரண்டாண்டுகளுக்கு முன்னால் காசியில் பெருவெள்ளம் வந்தது. நூறடி உயரத்தில் உள்ள சாலையிலேயே வெள்ளம் பெருகி ஓடியது ‘படித்தொறையிலே கஞ்சாபோட்டுட்டு கிடந்த சாமிகளிலே முக்காவாசி அன்னிக்கே ஆத்தோட போச்சு…ஜலமோச்சம். அதுகளுக்கென்ன இருந்தாலும் செத்தாலும் சமம்…’

ஆற்றங்கரை எருமைகளிலும் கணிசமானவை ஆற்றில் போய்விட்டன என்றார் நாடார். ‘ஏன், எருமை நல்லா நீந்துமே?’

’அத ராத்திரி முன்னங்காலை சேத்து கட்டித்தானே விட்டிருப்பானுக?’

காசியளவுக்கே ஹரித்வாரிலும் எருமைகள் உண்டு. கங்கைக்கரையின் மிருகமே எருமைதான். கங்கையை முதலைமேல் அமரச்செய்திருக்கிறார்கள். யமுனை ஆமைமேல் இருக்கிறாள். எருமைமீதுதானே கங்கை அமர்ந்திருக்கவேண்டும். அப்போதுதானே இரு கைகளிலும் உள்ள அமுதகலசத்துக்குப் பொருள் வரும்? அமுதகலசங்களில் இருந்து வெண்ணிறமான பால் பொங்கிவழிவதாகத்தான் வரைந்திருப்பார்கள்.

ஆனால் எருமை மகிஷாசுரமர்த்தனியின் காலடியில் மல்லாந்து கிடந்தது. பெரிய கொம்புகளும் விழித்த கண்களும் சட்டிசட்டியாக பற்களுமாக. தேவி பெரிய சூலாயுதத்தை அதன் வயிற்றில் ஆழ இறக்கியிருந்தாள். தெறித்த கண்களில் கொலைவெறி. திறந்த வாயில் குருதி நிற நாக்கு. ஹரித்வாரின் கங்கைக்கரையிலேயே ஏராளமான மகிஷாசுரமர்த்தனி கோயில்கள் இருந்தன. பெரும்பாலானவை குனிந்து உள்ளே பார்க்கவேண்டிய அளவுக்கு சிறியவை. கல்லில் புடைப்புச்சிற்பமாகச் செய்யப்பட்டு செந்தூரவிழுது பூசப்பட்டசிலைகள்.

கேசவேட்டன் ஒரு எருமையை வாங்கினார். நல்ல மூத்த சிந்தி எருமை. கொம்புகளில் ஒன்று சற்று ஒடிந்திருந்தது. பொறுமையாக கிழே கிடந்த கோதுமைவைக்கோலை மென்றுகொண்டிருந்தது. விற்கவந்தவனிடம் கேசவேட்டன் அந்த உடைந்த கொம்பையே ஒரு பெரும் குறையாகச் சொல்லிச் சொல்லி விலையைக்குறைத்தார்.

எருமையின் பின்பக்கம் அதன் குறி பெரிய கரிய வாழைக்கூம்பு போலத் தொங்கியது. கேசவேட்டன் ‘டேய் அதை அமுக்கிப்பாரு’ என்றார்

நான் அமுக்கினேன்

எனக்கு ஒன்றும் தெரியவில்லை

‘பதமா இருக்கா? ‘

‘அப்டீன்னா சூடா இருக்கா’

இளஞ்சூடாகத்தான் இருந்தது. எருமை என் தொடுகையில் உடல் அதிர்ந்து காதுகளை பின்னால் சரித்து வயிற்றை எக்கி அசையாமல் நின்றது. நான் கையை எடுத்ததும் வாலைச்சுழற்றி சிறுநீர் கழித்தது

‘நாலஞ்சு பெத்த தாய் எருமைதான் வேணும்…பெத்துமுத்தின எருமைக்கு கூம்பு பெரிசா இருக்கும்….தாயளிங்க அப்பிடிக்காட்டுறதுக்காக டியூபு வச்சு அதில தண்ணிய ஏத்தி வச்சிருவானுக’ என்றார் கேசவேட்டன்

எருமையை என்ன செய்யப்போகிறார் என்று எனக்கு புரியவில்லை. எருமையைக் கட்டுவதற்கு சண்டிகோயில் படிக்கட்டில் இடமில்லை. எருமையை வளர்க்கவும் அவரால் முடியாது. அவருக்கு இரண்டுகால்களும் இல்லை. ஒருவேளை என்னை எருமைவளர்க்கச் சொல்லப்போகிறாரோ?

ஆனால் எருமை நான்குநாள் அக்தரின் டீக்கடையிலேயே நின்றது. பின்பக்கம் குவியும் தையல் இலைகள் மட்டும்தான் சாப்பாடு. அவற்றில் சப்பாத்தியும் டாலும் இட்லியும் எல்லாம் ஒட்டியிருப்பதனால் எருமை குதூகலமாக வாலைச்சுழற்றி மென்றுகொண்டே இருந்தது. நாணலால் தைக்கப்பட்ட காய்ந்த பூவரச இலைகள்.

ஐந்தாம்நாள் கேசவேட்டன் இளஞ்சிவப்பு நிறத்தில் சட்டைபோட்டு கைகளை கனத்துருண்ட புஜங்களில் சுருட்டிவைத்து காதில் பீடி செருகி கிளம்பினார். ‘டேய் வாடா’

எருமையை கங்கையில் நன்றாகக் குளிப்பாட்டி நிறுத்தியிருந்தான் சோட்டு. மழைக்காலப் பாறைபோல ஈரமாக பளபளப்பாக நின்றது. ஒரு லோடு ஏற்றும் டிரக்குக்குச் சொல்லியிருந்தார் கேசவேட்டன். டாட்டா டிரக். மிகப்பழமையானது. அதன் அடிப்பகுதி முழுக்க தூசுபடிந்து களிமண்ணால் செய்யப்பட்ட யந்திரங்கள் கொண்டது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

டிரக் டிரைவர் இறங்கி ஒரு பலகையைச் சரிவாக வைத்தான். அதில் அரையடிக்கு ஒரு குறுக்குப்பட்டியல் படிபோல ஆணியால் அடிக்கப்பட்டிருந்தது. சோட்டு ஒரு கை புல்லை எடுத்து எருமைமுன் காட்டினான். எருமை அதை நோக்கி நாக்கை நீட்ட அவன் பின்னால் நகர்ந்து வண்டியில் ஏறிக்கொண்டான். எருமைபலகை அருகே சென்று தயங்கி நின்றது.

டிரைவர் அதன் பின்பக்கத்தை கையால் தட்டினான். ஏறாது என்றுதான் நினைத்தேன். ஆனால் ஹரித்வாரின் படிகளில் ஏறிப்பழகிய எருமை சாதாரணமாக படி ஏறி சோட்டுவிடமிருந்து புல்லை ஆவலாக வாங்கிக்கொண்டது. ஒரு வாய்க்குத்தான் இருந்தது புல்.

நானும் கேசவேட்டனும் டிரைவர் அருகே ஏறிக்கொண்டோம். எங்கே செல்கிறோம் என்று கேட்க விரும்பினேன். ஆனால் கேசவேட்டனிடம் அப்படி கேட்பதை அவர் விரும்புவதில்லை. அதை அவரது முடிவை கேள்விக்குரியதாக்குவதென்றே எடுத்துக்கொள்வார். ‘தெரிஞ்சாத்தான் வருவியோ? எரப்பாளி’ என்றுதான் சொல்வார்.

ரிஷிகேஷ் செல்லும் சாலையில் நெடுந்தூரம் சென்று பக்கவாட்டில் பிரிந்து சென்றோம். அந்தச்சாலையில் பல வண்டிகளில் எருமைகளைக் கொண்டுசென்றார்கள். அவை வண்டிகளின் அசைவுக்கு ஏற்ப அதற்குள் பழகி சகஜமாக நின்று வேடிக்கைபார்த்தன. கீழே பலர் கூட்டம் கூட்டமாக எருமைகளை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார்கள்.

கங்கை வரப்போவது தொலைவிலிருந்தே தெரிந்தது. தூரத்தில் தெரிந்த உயரம் குறைந்த மலைகள்தான் இமயத்தின் தொடக்கம் என நான் அறிந்திருக்கவில்லை. கங்கைக்கு அப்பால் மலையடிவாரம் ஆரம்பித்தது. கங்கை ஆழத்தில் வெண்ணிறமான உருளைக்கற்களுக்கு நடுவே மாலைவெளிச்சத்தில் கண்கூசும் ஒளியலைவுடன் ஓடிக்கொண்டிருந்தது. நீர்வெளி முழுக்க ஏராளமானவர்கள் குளித்துக்கொண்டிருந்தார்கள்.

கங்கை ஓரமாக ஒரு சிறிய கோயில். சுதையால் கட்டப்பட்ட ஒற்றை அறை கருவறைக்குமேல் சிற்பங்களோ அலங்காரங்களோ இல்லாத வெறும்கூம்பு. அதன்மீது ஒரு காவிக்கொடி கட்டப்பட்டு சாய்ந்து நின்று காற்றில் படபடத்தது. கோயிலைச்சுற்றி நிறைய மரங்கள். எல்லா மரங்களிலும் எருமைகள் கட்டப்பட்டிருந்தன. ஆங்காங்கே தறி அறைந்து அவற்றிலும் எருமைகளைக் கட்டியிருந்தனர். எருமைச்சந்தை போலிருந்தது. நீண்ட ஜிப்பாக்களும் பஞ்சக்கச்ச வேட்டிகளும் அணிந்த மனிதர்கள் அவற்றினூடாக நடமாடினர்.

வேறு டிரக்குகளிலிருந்தும் எருமைகளை இறக்கிக் கொண்டிருந்தார்கள். அவை மற்ற எருமைகளைக் கண்டு ஒருகணம் தயங்கியபின் கவனமாகக் காலெடுத்துவைத்து பலகைவழியாக இறங்கி நின்றன. எங்கள் எருமை இறங்கியதுமே இன்னொரு எருமையை நோக்கிச் சென்று அது தின்றுகொண்டிருந்த வைக்கோலைத் தின்ன ஆரம்பித்தது. அந்த எருமை பின்னகர்ந்து இதை உற்றுப்பார்ர்த்தது. எருமைகள் உறுமியின் தோலில் கோல் இழுபடும் ஒலியில் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொண்டன. தாகமெடுத்த எருமைகள் அப்பால் நகர்பவர்களைக் கண்டு றே என்று கூப்பிட்டன.

அந்திக்குள் அங்கே ஆயிரம் எருமைகள் வரை வந்துசேர்ந்துவிட்டன. கோயிலுக்கு முன்னால் நான்குபேர் பெரிய குடம்போன்ற தோல்வாத்தியத்துடன் வந்து நின்றார்கள். கோலால் அந்தத் தோலை தேய்த்து தேய்த்து அவர்கள் வாசித்தபோது எருமை ஒன்று தேம்பியழுவதுபோலவே கேட்டது. சிறிய பரப்புள்ள தோல்வாத்தியமொன்றில் சுள் சுள் என ஒருவன் அடிக்கும் ஒலியும் அதனுடன் இணைந்துகொண்டது.

கோயிலுக்குள் தீப ஆராதனை காட்டப்பட்டபோது முன்னால் கூட்டம் நெரிபட்டது. கேசவேட்டன் ‘ம்ம்…ம்ம்’ என உறுமியபோது விலகி வழிவிட்டனர். நான் அவர் பின்னால் சென்றேன். கேசவேட்டன் என்னிடம் அவரைப்பிடித்து தூக்கும்படிச் சொன்னார். நான் தூக்கி கருவறையைக் காட்டினேன். உள்ளே இரு பந்தங்கள் நடுவே ஒரு நடுகல் மாதிரி சிவப்பாக ஏதோ தெரிந்தது. கேசவேட்டன் ‘அம்மே மகாமாயே ரட்சிக்கணே’ என்றார்.

பூசை முடிந்ததும் பிரசாதம் என ஏதும் தரப்படவில்லை. இருவர் இந்தியில் உரக்க ஏதோ கூறினார்கள். எருமையைக் கொண்டுவந்த ஒவ்வொருவருக்கும் ஆளுக்கொரு காகிதடோக்கன் கொடுத்திருந்தார்கள். அது டிரைவரிடம் இருந்தது. எங்கள் எண் நூற்றி எண்பது. கேசவேட்டன் காந்திகுல்லாய் போன்று கெட்டியான நீலத்துணியின் தொப்பி போட்ட கிழவரிடம் சென்று நிதானமாகப் பேசினார். அவர் உடனே வரிசையை மாற்றிவிட்டார்

‘டேய் நம் எருமையைக் கொண்டுவா’ என்றார் கேசவேட்டன். ‘கோயில் எருமைக்குக்குப்பின் நம் எருமைதான்’

கோயில் முன்னால் முதல் எருமை கொண்டுவரப்பட்டது. அது வெளிச்சத்தைக்கண்டு கொஞ்சம் தயங்கியது. மனிதர்கள் இருப்பதை உணர்ந்ததும் நம்பிக்கையுடன் முன்னால் வந்தது. அங்கிருந்த இருவர் அதன் முன்னங்கால்களில் ஒரு கயிறை திறமையாகச் சுற்றி இறுக்கினர். அதை ஒருவர் பிடித்துக்கொள்ள இன்னொருவர் அதன் மூக்குக் கயிற்றைப்பிடித்து முகவாயை மேலே தூக்கினார்.

நான் படபடப்புடன் நின்றேன். ஓடிவிட நினைத்தாலும் என் கண்கள் அந்தக்காட்சியிலேயே நிலைத்திருந்தன. கோயில் பொறுப்பாளரான கிழவரும் ஐம்பது அறுபதுபேரும் சூழ்ந்து நின்றனர். அவர்கள் அனைவரும் அதைத்தான் தெறிக்கும் விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

மூன்றாம் மனிதர் கோயிலை வணங்கினார். பூசாரி உள்ளே சிலையின் காலடியில் இருந்து ஒரு சிறிய கூரிய கொக்கிபோன்ற கத்தியை எடுத்து அவர் கையில் கொடுத்தார். அதை அவர் வாங்கி தலைமேல் வைத்து வணங்கி எருமை அருகே வந்தார்.

மூக்கைப்பிடித்திருந்தவர் எருமையின் கழுத்தை வலப்பக்கமாக வளைத்தார். அதன் குரல்குழாயும் பெரிய ஒரு நரம்பும் புடைத்து வளைந்து தெரிந்தன. ’ஜெய் காளீ! ஜெய் அம்பே!’ என்ற கூச்சலுடன் அவர் அந்த நரம்பை வெட்டினார். குழாயிலிருந்து தண்ணீர் சீறுவது போல ரத்தம் பீச்சியடித்து அவர் உடலை நனைத்தது. பைஜாமாவும் ஜிப்பாவும் ரத்தத்தில் நனைந்து உடலுடன் ஒட்டின. எருமை அசையாமல், அந்த வெட்டை விரும்பியது போல கண்களை உருட்டியபடி நின்றது.

கூட்டம் ’ஜெய் மா! ஜெய் காளீ” என்று கோஷமிட்டனர். அவர் எருமையின் தொண்டைக்குழாயை வெட்டினார். சட்டென்று எருமை காற்று இழந்த துருத்தி போல வயிறு அடங்கி தொய்ந்து முன்னகர்ந்தது. அவர்கள் பிடிவிட்டதும் அது குப்புற விழுந்து மூக்கை மண்ணில் ஊன்றிச் சரிந்தது. அதன் கால்கள் வலிப்புகொள்ள ஆரம்பித்தன. உடனே அடுத்த எருமை. அதன் பின் இன்னொரு எருமை. முதல் எருமை இன்னும்கூட துடித்துக்கொண்டிருக்க அதன்மேல் அடுத்த எருமைகளை போட்டார்கள்.

நான்காவது எருமை கேசவேட்டனுடையது. எருமையை அவர்கள் வளைத்துப்பிடித்ததும் கேசவேட்டன் என்னிடம் அவரை தூக்கச் சொன்னார். என் கைகால்கள் நடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்களில் ஒருவரிடம் தூக்கச்சொன்னார். இருவர் அவரைத் தூக்கிக் கொண்டனர். அவர் அந்த வளைகத்தியை வாங்கிக்கொண்டார். தலைமேல் வைத்து கும்பிட்டார். எருமையின் நரம்பை கையால் நீவி இடம் பார்த்தார். பின்பு ஓரிடத்தில் கத்தியை வைத்தார். எருமை உடல் சிலிர்த்தபடி கால்மாற்றிக்கொண்டது. கத்தியை சட்டென்று இழுக்க குருதி வீசியடித்தது. கேசவேட்டன் அந்த ரத்ததை கைகளால் பிடித்து நெற்றியில் போட்டுக்கொண்டார்

ரத்தம் சீறி அந்தப்பகுதியின் மண் சேறாகியது. அங்கிருந்த அனைவரும் அருவிக்கரையில் நிற்பவர்கள்போல நனைந்திருந்தனர். முதல் எருமை அப்போதும் கண்களை உருட்டியபடி துடித்துக்கொண்டிருந்தது. படுத்தபடியே ஓடுவதுபோல கால்களை அசைத்தது.

எருமைகள் சற்று நேரத்தில் ஆளுயரத்துக்குக் குவிந்துவிட்டன. செத்துப்போன எருமைகளை கயிற்றால் கட்டி ஓர் ஆட்டோ ரிக்‌ஷாவால் இழுத்துக்கொண்டுசென்றார்கள். நான் அதன்பின்னால் சென்றேன். அங்கே மூன்றாள் உயரத்தில் பிரம்மாண்டமான குழி வெட்டப்பட்டிருந்தது. அப்பால் இன்னொரு குழி. வரிசையாக பல குழிகள். எருமைகளை அருகே கொண்டுவந்து கயிற்றை அவிழ்த்துவிட்டு குழிக்குள் தள்ளினார்கள். ஒன்றுமேல் ஒன்றாக பொத் பொத் என விழுந்த எருமைகளில் சில அப்போதும் காதுகளை அசைத்தன. நாக்குகளால் துழாவின. கண்களை உருட்டின. ஆனால் எந்த எருமையும் குரலை எழுப்பவில்லை.

விடியற்காலையில் கங்கையில் குளித்தோம். அதுவரைக்கும் என் மனம் பிரமித்துப்போய் மரத்திருந்தது. குளித்துவிட்டு கரையேறி தலை துவட்டிக்கொண்டிருந்தபோது உடல் நடுங்க ஆரம்பித்தது. நடுக்கத்தை நிறுத்த முயன்றபோது மூச்சும் மனமும் நடுங்கிக்கொண்டிருப்பதை உணரமுடிந்தது. என் விரல்கள் நடுங்கி ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டன.

புதிய சட்டையும் பைஜாமாவும் இருந்தன. அணிந்துகொண்டு டிரக்கில் ஏறிக்கொண்டோம்.

‘மொத்தம் எண்ணூற்றி நாற்பத்தி நான்கு’ என்றான் டிரைவர். ’போனமுறை ஆயிரத்தை தாண்டியது’

ஆறுவருடங்களுக்கு ஒருமுறைதான் அங்கே எருமைப்பலி. போனதடவையும் கேசவண்ணா ஓர் எருமையை பலிகொடுத்தார். அது இவ்வளவு பெரியதல்ல, இது நல்ல பெரிய எருமை. ‘காலா… காலா மகிஷ்’ என்றான்.

நான் திடுக்கிட்டு ‘காலமா?’ என்றேன். ‘கண்டா?’

’காலா என்றால் கறுப்பு’ கேசவேட்டன் மலையாளத்தில் சொன்னார். ‘அதனாலேதான் காலன் என்கிறார்கள். மகிஷம் காலனின் வாகனம் இல்லையா?’

இல்லை காலமேதானா? காலம் கருமையானதா? மென்மையான நிதானமான அழகான காலம். பிரியமான காலம்.

’காலம் மரணம் இரண்டும் ஒன்றுதான்’ என்று கேசவேட்டன் நான் நினைத்ததைச் சொல்வதுபோலச் சொல்லிக்கொண்டார்.

நான் கண்களை மூடிக்கொண்டேன். டிரைவர் நான் பயந்துவிட்டேன் என்று இந்தியில் சொல்லிச் சிரித்தான்.

’நீ என்னடா சொங்கி மாதிரி இருக்கிறாய்? நீ நாயர்தானே?’

நான் உலர்ந்து தவித்த நாக்கை வாய்க்குள் துழாவிக்கொண்டேன்.

‘நான் கழுத்தை அறுத்ததைக் கண்டு பயந்துவிட்டாயா?’

’ம்’

‘ஏழு வயசில் இங்கே வந்து விழுந்தபோது என்னை கூப்பிட்டு கூடவே வைத்துக்கொண்டவர் பண்டிபாபா. கருப்பாக ஆறடி உயரமிருப்பார். பீகார்காரர். அவருடன் இருந்ததனால்தான் பட்டினிகிடந்தோ அடிபட்டோ சாகாமல் வாழ்ந்தேன். அவருக்கு நான் மனைவி மாதிரி….இரவில் குடித்துவிட்டு வந்தாரென்றால் கழுவில் ஏற்றுவார். சின்னக்குழந்தை நான்…அலறி அலறி கொஞ்சம் கொஞமாக சரியானேன். ஆனால் பதினைந்து வயதில் முடிவுசெய்தேன். என்னைக்கண்டு மற்றவர்கள் பயப்படாவிட்டால் வாழமுடியாது என்று’

கேசவேட்டனின் முகத்தை இருளில் பார்க்கமுடியவில்லை.

‘காய்ச்சல் வந்து பாபா படுத்திருந்தார். அவரது கைகளை துணியால் சேர்த்து கட்டினேன். மார்பின் மீது ஏறி அமர்ந்து அலுமினியத்தட்டை வளைத்து ஒடித்து கூரிய முனையால் கழுத்தை அறுத்தேன். நினைத்ததுபோல அலறவில்லை. பேட்டா பேட்டா என்று கெஞ்சினார். அறுத்துக்கொண்டே இருந்தேன். மொத்தப் படிக்கட்டும் வேடிக்கைபார்த்துக்கொண்டு அசையாமல் இருந்தார்கள். பாதி அறுத்ததும் தட்டு நுனி வளைந்துவிட்டது. அப்பால் சென்று ஒரு புட்டியை உடைத்து கொண்டு வந்து அதைக்கொண்டு மேலும் அறுத்தேன். தயவுசெய், கருணைகாட்டு, விட்டுவிடு என்று கெஞ்சிக்கொண்டே இருந்தார். குரல்வளையை அறுத்து முடித்ததும் மொத்த மூச்சும் வெளியே போய்விட்டது. அரைமணிநேரம் வரை துடித்தார். ரத்தத்தில் அப்படியே நனைந்துவிட்டேன்’ கேசவேட்டன் மலையாளத்தில் சொன்னார்.

அவர் முகத்தில் ஒரு எதிர்வண்டிவெளிச்சம் தாண்டிச்செல்வதை பார்த்துக்கொண்டிருந்தேன். குளிர்ந்த காற்று முகத்தை அறைந்துகொண்டே இருந்தது.

’அதோடு நான் வேறு ஆள் ஆனேன். அந்த சின்னப்பையன் அப்படியே மறைந்துவிட்டான். எவனும் என்னைப்பார்த்தால் பயப்படுவான்’ கேசவேட்டன் சொன்னார்.

‘சாப், ஒரு டீ குடிக்கலாமா?’ என்றான் டிரைவர். ஹரித்வார் வந்து விட்டிருந்தோம். ஒருவன் குண்டு பல்ப் எரியும் டீக்கடையை திறந்து வைத்திருந்தான். ஒளிரும் ரத்தம்போல எரிந்த கரியடுப்பில் கெட்டில் அமர்ந்திருந்தது. வண்டி அணைந்தது. கீழே இறங்கியபோது கால் துணிமாதிரி தொய்வதை உணர்ந்தேன்.

டீ குடிக்கும்போது கற்கள் சரிவில் உருள்வதுபோன்ற ஓசையுடன் எருமைக்கூட்டம் ஒன்று கங்கைக்குச் சென்றுகொண்டிருந்ததைக் கண்டேன். இருட்டில் அவற்றின் கண்கள் மின்னிக்கொண்டிருந்தன.

முந்தைய கட்டுரைஒழிமுறிக்கு திரைக்கதை விருது
அடுத்த கட்டுரைஅறமும் வாசகர்களும்