புறப்பாடு II – 8, சண்டாளிகை

தேவர்களும் அசுரர்களும் பாலாழியைக் கடைந்து அமுதத்தை எடுத்தபோது அதை கலசத்தில் வாங்கி சொர்க்கத்துக்குக் கொண்டுசென்றார் கருடன். அதிலிருந்து நான்குசொட்டுகள் மண்ணில் உதிர்ந்தன. அவை முறையே .நாசிக், உஜ்ஜயினி, பிரயாகை மற்றும் ஹரித்வாரில் விழுந்தன. ஹரித்வாரில்தான் முதல் சொட்டு விழுந்தது என்று என்னிடம் சண்டாளிகா தேவி சொன்னாள்.

‘ஆகவே இதுதான் பூமியில் உள்ள புனிதத் தலங்களிலேயே புனிதமானது. ஹரியிடம் செல்வதற்கான வாசலே இதுதான்’

வேடத்தை முழுமை செய்துகொண்டிருந்தாள். முகத்தில் இளநீலநிறத்தை ஒரு தூரிகையால் தேய்த்தாள். கண்களின் விளிம்புகளில் ரத்தநிறம். இமைகளின் மீதும் ரத்த நிறம். வாயில் உதடுகள் செக்கச்சிவப்பாக பெரிதாக வரையப்பட்டிருந்தன. உதடுகள் அவ்வளவு பெரியவை அல்ல என்பதை சாதாரண சமயங்களில் கண்டிருக்கிறேன். அவற்றின் வெளிப்பக்கத்தை மிகப்பெரிதாக ஆக்கி எல்லைவரைந்து உள்ளே அடர்சிவப்புநிறம் தீற்றி அப்படி ஆக்கியிருந்தாள். கழுத்தும் நீலநிறம். கைகால்கள் எலலாமே நீலநிறம்.

அந்த நிறம் அவள் உடலில் இருந்து விலகுவதில்லை. வருடக்கணக்காக போட்டுப்போட்டு அவளது தோலில் அது ஊறிவிட்டிருந்தது. மற்றபடி நல்ல வெள்ளைநிறம் கொண்டவள். நல்ல உயரம், சராசரிக்கும் மேல் பருமன். சண்டாளிகை ஒரு சிறிய மரப்பெட்டியில் இருந்து நகைகளை எடுத்து அணிய ஆரம்பித்தாள். எல்லாமே அலுமினிய வார்ப்புநகைகள். பொன்னிறப்பூச்சு கொண்டவை. கைகளில் பெரிய கொத்துவளையல்கள். தோள்களில் நெளிந்த தோள்வளை. கழுத்தில் மாரபில் பாதியை மறைக்கும் பெரிய மணியாரம். காதுகளில் குண்டலங்கள்.

எல்லாநகைகளுமே பாம்பாலானவை. பாம்புகள் பின்னி நெளிந்து முயங்கி உருவான வடிவம் கொண்டவை. மூக்குநடுவே சிறிய பாம்பு புல்லாக்காக தொங்கியது. நெற்றிச்சுட்டியில் படமெடுத்த பாம்பு. சேலைக்குமேல் இடுப்பில் கட்டப்பட்ட ஒட்டியாணத்தில் சிவந்த கற்களை கண்களாகக் கொண்ட பெரிய பாம்பு படமெடுத்து சீறி நின்றது. கட்டைவிரல்கள் தவிர எல்லா கைவிரல்களிலும் நாகமோதிரங்கள். பொன்னிறப்பாம்புகள் ஊர்ந்து ஏறிச் சுருண்ட ஒரு மரம் போல எனக்கு அவள் தோன்றினாள்

‘அயோத்யா மதுரா, மாயா
காசீ காஞ்சீ அவந்திகா
புரீ ஸ்ரீமத் துவாரவதீ சைவ
ஸப்தைதா முக்தி தாயிகா..’

என்று என்னைநோக்கிச் சொன்னபடி கிரீடத்தை கையில் எடுத்தாள். அதன் உட்பகுதி அலுமினியநிறத்தில் இருக்க வெளியே பொன்னிறம் கூச்சமேற்படுத்துமளவுக்கு ஜொலித்தது. நூற்றுக்கணக்கான கண்ணாடிக்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. சிவப்பு நீலம் மஞ்சள் பச்சை நிறமான கற்கள். அதில் சர்ப்பம் இல்லை. அதை உள்ளே ஊதி உதறி தலையில் வைத்துக்கொண்டாள். அதன்பின்பக்கம் இருந்த ரப்பர்நாடாவை இழுத்து கழுத்துக்குப்பின்னால் கூந்தலுக்குள் போட்டு இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள். குனிந்தாலும்கூட அது விழாது. நான் அதை கையில் எடுத்துப்பார்த்திருக்கிறேன். எடையே இல்லாமல் காகிதத்தால் செய்யப்பட்டது போலிருக்கும்.

‘சப்தபதிகள்னு சொல்லுவா…ஏழு புனித ஸ்தலங்கள். இந்த ஏழிலேயும் ஒர்த்தன் முழுக்காட்டி எந்திரிச்சு சேவிச்சுட்டான்னா அவனுக்கு பெருமாள்பதம் உறுதின்னு பாகவதம் சொல்றது…ஏழிலேயும் முடியலேன்னா ஹரித்வார் ஒண்ணே போரும்…இங்கே வரமுடியலேன்னா இருந்த இடத்திலே இருந்துண்டு ஹரித்வாரை நினைச்சுண்டா போரும்…’ இன்னொரு சிறிய பிளாஸ்டிக் பெட்டியில் இருந்து பெரிய பற்களை எடுத்து மேல்பல்வரிசை மீது மாட்டிக்கொண்டாள். வெள்ளியாலானவை போல பளபளத்த உலோகப்பற்கள். இரு வீரப்பற்கள் இரு கதுப்போரத்திலும் வளைந்து நின்றன. இனி அவளால் பேசமுடியாது.

கேசப் புழுதியில் தவழ்ந்து உள்ளே வந்தார். இரண்டு கால்களும் துணியாலானவை போலிருக்கும். சேற்றில் சிறகால் துழாவிச் செல்லும் பொத்தைமீன் போல அந்தக்கால்களைக்கொண்டு புழுதியை அளைந்து அளைந்து முன்னகர்வார். மேலே ஒரு அழுக்கு மஞ்சள்சட்டை, கீழே எந்நேரமும் ஒரு காக்கி அரைக்கால்சட்டை. ஆனால் அவருடைய கைகள் மிகப்பிரம்மாண்டமானவை. கடல்நண்டின் கொடுக்குகள் போல. ஒரு பெரிய பயில்வானைக்கூட கைக்குள் சிக்கினால் அவரால் நசுக்கிப்பிழிந்துவிடமுடியும்.

கேசப் தேவியிடம் இந்தியில் ஏதோ சொன்னார். அவள் கையசைத்து வரும்படி காட்டிவிட்டு பீடத்தில் ஏறி அமர்ந்தாள். களிமண்ணால் செய்யப்பட்ட நான்கடி உயரமான பீடம். அதில் நான்குபக்கமும் ஏராளமான பெரிய பாம்புகள் வாய்திறந்து நிற்பதுபோலச் செய்யப்பட்டிருந்தது. பாம்புகளுக்கு கரிய வண்ணம் பூசப்பட்டிருந்தாலும் வாய் ரத்தச்சிவப்பாக இருந்தது. கண்களில் சிவந்த கண்ணாடிச்சில்லுகள் பதிக்கப்பட்டிருந்தன. பீடத்துக்குப்பின்னால் சுவர். அதில் பிரம்மாண்டமாக ஒரு ஐந்துதலை நாகத்தின் சிற்பம் களிமண்ணால் செய்யப்பட்டு கரிய நிறம் கொடுக்கப்பட்டு பதிக்கப்பட்டிருந்தது. நாகத்தின் நாக்குகள் கம்பிகளால் செய்யப்பட்டு சுழன்று பறந்து நின்றன. நாகத்துக்கு அருகிலேயே நாள்காட்டி மாட்டப்பட்டிருந்தது.

தேவி பீடத்தில் ஏறி அமர்ந்துகொண்டாள். அவள் அமர்ந்திருக்கும் கோலத்தை நான் முன்னர் கோயில்சிலைகளில் மட்டும்தான் பார்த்திருந்தேன். ஒருகாலை தொங்கவிட்டு மறுகாலை நன்றாக மடித்து தொடையுடன் குதிகால் படும்படி வைத்து நன்றாக நிமிர்ந்துநெளிந்து அமர்ந்தாள். என்னிடம் அவள் சைகை காட்டியதும் எழுந்து காகிதக்கூழால் செய்யப்பட்ட இரு கைகள் கொண்ட அமைப்பை எடுத்து அவளுக்குப்பின்னால் வைத்தேன். அது உண்மையில் அவள் உடலில் இருக்காது. பின்னாலுள்ள ஒரு குச்சியில் மாட்டப்பட்டிருக்கும். முன்னாலிருந்து பார்த்தால் தோளுக்குமேல் எழுந்த இரு பொம்மைக்கைகள். அவற்றில் ஒன்றில் ஒரு மழு. இன்னொன்றில் சூலாயுதம்.

இருபக்கமும் குத்துவிளக்கை ஏற்றிவிட்டு வெளியே சென்றேன். அது ஒரே அறைகொண்ட குடிசைதான். ஈச்சமரத்தின் தடியை நட்ட தூண்கள். ஈச்சமரம் வலுவற்றது என்று நினைத்திருந்தேன். ஆனால் அது காய்ந்து மட்காது, முளைத்து வேரோடி உயிருடன் இருப்பதனால் வலிமையை இழக்காது என்று தெரிந்துகொண்டேன். எங்களூரில் கைதை, தாழைச்செடிகளின் தடியை அப்படி நட்டு குடில்கட்டுவார்கள். குடிசைக்குமேல் ஈச்சமரத்தின் இலைகள் கரும்பச்சை நிறத்தில் நுனியில் முட்களுடன் குட்டையாக விரிந்து நின்றன.

ஈச்சை ஓலைகளைப்பின்னி வேயப்ப்பட்ட கூரை. சேற்றைக்குழைத்து கூழாங்கற்களுடன் சேர்த்து வைத்து கட்டப்பட்ட சுவரின் மீது சாணியும் சேறும் கலந்து பூசப்பட்டு மேலே வெள்ளை அடிக்கப்பட்டிருந்தது. கையாலேயே சேற்றையும் வெள்ளையையும் பூசியிருந்தார்கள். அலையலையாக வளைந்த விரல்தடங்கள். குடிலுக்குமேலே ஒரு மஞ்சள்கொடியும் ஒரு காவிக்கொடியும் காற்று இல்லாமல் குச்சிகளில் சோம்பிக்குவிந்திருந்தன. இன்னும் விடிய ஆரம்பிக்கவில்லை. எல்லாமே நீலநிறக்கண்ணாடியில் தெரிவதுபோலிருந்தது. அந்தக்குன்றுக்கே நீலபர்வதம் என்றுதான் பெயர். சண்டிதேவி கோயில் அதன்மீதுதான் இருந்தது.

சண்டிதேவி கோயிலை காஷ்மீர் மகாராஜா கட்டினார் என்று சொன்னார்கள். ஹரித்வாருக்கு வரும் அத்தனை பக்தர்களும் சண்டிதேவிகோயிலுக்கும் வருவார்கள். ஆனால் காலையில் கூட்டமிருக்காது. காலையில் அத்தனைபேரும் கங்கைக்கரையில்தான் குவிந்துகிடப்பார்கள். காலையுணவு சாப்பிட்டபின்பு மானஸாதேவி கோயிலுக்குச் செல்வார்கள். அதன்பின்புதான் சண்டிதேவி. வெயில் ஏறியிருந்தாலும் ஈச்சமரங்களும் உயரமற்ற புதர்மரங்களும் அடந்த குன்றில் நிழலிலேயே நடக்கமுடியும்.. ஒரே ஓட்டமாக அரைமணிநேரத்தில் குன்றில் ஏறிவிடலாம். ஆனால் பெரும்பாலான பக்தர்கள் வயதனாவர்கள். முழங்காலில் கையை ஊன்றி முனகி மூச்சிரைக்க மெதுவாகத்தான் ஏறிச்செல்வார்கள்.

மேலே சென்று சண்டிகோயிலைப் பார்த்தபோது எனக்குப் பெரும் ஏமாற்றம். அதை ஒரு கோயில் என்றே சொல்லமுடியவில்லை. ஒரு காரைக்கட்டிடம். சர்க்கஸ் கோமாளிகளின் கூம்புத்தொப்பி போல கூரை. கூட்டம் முட்டிமோதியது. தேவிதரிசனத்துக்கு பெரிய வரிசை நின்றது. வரிசை என்று சொல்லமுடியாது. கூட்டம்கூட்டமாக நிற்கும் பெரும் குடும்பங்களின் சங்கிலி. பதினைந்து நிமிடத்தில் கீழிறங்க ஆரம்பித்தேன். மேலே ஏறுவதற்கு ஒருவழி இறங்க இன்னொன்று. இரண்டுமே ஒழுங்கற்ற கற்படிகளால் ஆனவை.

படியின் இருபக்கமும் நுற்றுக்கணக்கான சிறிய குடில்கள் அடர்ந்திருந்தன. ஈச்சைக்கூரை போட்டு மண்சுவர் கொண்ட ஆளுயரக்குடில்கள் அவை. எல்லா குடில்களிலும் மேலே காவிக்கொடி பறந்தது. அவற்றின் உள்ளும் புறமும் சாமியார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தோற்றம். பத்துகிலோவுக்கும் மேல் ருத்ராட்சக்கொட்டைகளை உடலில் அணிந்திருந்த ஒருவரைப் பார்த்தேன். உடலில் நூற்றுக்கணக்கான இட்ங்களில் உருத்திராட்சக்கொட்டைகளை ஊசியால் குத்தி மாட்டியிருந்தார் ஒருவர். மாட்டில் உண்ணி தொங்குவதுபோலிருந்தது. பிரம்மாண்டமான சடைமுடிக்கட்டுகள். புகையிலைச்சுருள்கள் போல தோளில் பரப்பிப்போடப்பட்ட மட்கிய சடைகள். காவியின் நூற்றுக்கணக்கான வண்ணபேதங்கள்.

அதன்பின்புதான் கவனித்தேன், கணிசமான சாமியார்கள் தொழுநோயாளிகள். அவர்களின் முகங்களில் தெரிந்த வேறுபாட்டை அப்போதுதான் புரிந்துகொண்டேன். மூக்குநுனி கிடையாது. பலருக்கு காதுமடல்கள் இல்லை. முகங்கள் தடித்து அனைத்திலும் ஒரே முகபாவனை நிகழ்ந்திருந்தது. விரல்களற்ற மொண்ணைக் கைகள். மழுங்கிய கால்களில் தோல்செருப்பு போட்டிருந்த சிலர் அவற்றை மேலே முழங்காலுடன் இரும்பு ஸ்பிரிங்கால் இணைத்திருந்தனர். பெரும்பாலானவர்கள் தங்கள் முன் கன்னங்கரேலென பளபளத்த திருவோடுகளை வைத்துக்கொண்டு அக்கறையில்லாதவர்கள் போல அமர்ந்திருந்தார்கள்.

அங்கே யாரும் கஷ்டப்படுவதுபோலத் தோன்றவில்லை. சிலர் பேசிச்சிரித்துக்கொண்டிருக்க சிலர் சிறிய டிரான்ஸிஸ்டர்களை காதில் வைத்து பாட்டுகேட்டுக்கொண்டிருந்தார்கள். மரக்கால்களை கழற்றி முன்னால் வைத்திருந்த ஒருவர் இந்தி நாளிதழ் வாசித்தார். சாலையோரமாகவே மண்ணில் பெரிய சிவலிங்கங்கள் செய்து கரிய சாயம்பூசி மலர்மாலை சூட்டி வைத்திருந்தனர். அருகே வீசப்பட்ட ரூபாய்நோட்டுக்கள். பல இடங்களில் பெரிய சாமி படங்கள் மலர்மாலைபோட்டு சாய்த்துவைக்கப்பட்டு அதன்முன் காணிக்கைபோடுவதற்காக காவித்துணி விரிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலும் நீலநிறமான சிவன். விஷத்தைக்குடிக்கும் ஒரு பெரிய சிவன் படத்தின் கீழே அந்தச்சாமியார் தன் படத்தையும் ஒட்டியிருந்தார்.

அடுக்கடுக்காக குடில்கள் கீழே இறங்கிக்கொண்டே இருந்தன. ஒரு சின்ன குழியில் பிராந்திக்குப்பிகள் குவிந்துகிடந்தன. பலகுடிசைகளுக்கு முன்னால் சாமி படங்களுடன் சிறிய டேப்ரிக்கார்டரில் பக்திப்பாட்டும் போட்டிருந்தனர். படிகளில் இறங்கியவர்களை குடில்முன் நின்ற சாமியார்கள் கூவிக்கூவி அழைத்தனர். கையில் விபூதி வாரி நீட்டி கூச்சலிட்டார்கள். ஒரு கனத்த வட இந்தியப்பெண் பாராமல் செல்ல , தாடியும் சடைமுடியுமாக புலித்தோல்போன்ற துணியில் வேட்டியும் அணிந்த ஒருசாமியார் விபூதியை அள்ளி ஓங்கியபடி கூச்சலிட்டார். அந்தப்பெண் நின்று நடுக்கத்துடன் கைகூப்பி பத்துரூபாயைக் கொடுத்தாள். அவர் வாங்கமாட்டேன் என்றார். அவள் இன்னொரு பத்து ரூபாய் கொடுத்து அவர் கால்களைத் தொட்டுக் கும்பிட்டு விபூதியை வாங்கிக்கொண்டு சென்றாள்.

நான் அந்தப் படங்களைப்பார்த்துதான் நின்றேன். இரண்டும் நான்கடி உயரமானவை. கண்ணாடிச்சட்டம் போடப்பட்ட பழையபாணி ஓவியங்கள். ஒன்றில் காளி நீலநிறத்தில் ஏராளமான கைகளுடன் வாயிலிருந்து தொங்கிய நாக்கில் ரத்தம் சொட்ட நின்றிருந்தாள். கைகள் முழுக்க ஆயுதங்கள். கீழ் வலக்கையில் சிவனின் தலை. இடக்கையில் ஆம், சிவனின் பிரம்மாண்டமான ஆண்குறி! கீழே தலையற்ற சிவபெருமான் அவள் காலடியில் மல்லாந்து கிடந்தார்.

இன்னொருபடத்தில் சிவன் பிரம்மா மற்றும் தேவர்களின் தலைகளை கழுத்தில் மாலையாகப் போட்டுக்கொண்டு ஒரு பெண்தெய்வம் அமர்ந்திருந்தது. அது காளியா சாமுண்டியா தெரியவில்லை. எலும்புக்கூடு போன்ற உடல். மண்டையோட்டு முகம். தலைமயிர் பாம்புகளாலானது. கண்கள் ரத்தச்சிவப்பாக இருக்க வாயிலிருந்து ரத்தம் மார்பில் சொட்டியிருந்தது. கீழே பெண்குறி திரை விலகியதுபோல திறந்திருக்க உள்ளிருந்து ஒருமுகம் எட்டிப்பார்த்தது. தாடிகொண்ட முகம். பிரம்மா!

திண்ணையில் அமர்ந்திருந்த கேசப் என்னிடம் ‘ஆவோ பையா ஆவோ….சண்டிகாதேவி தர்ஷன் இதர் ஹே…’ என்று கூவினார்.

அந்தப்படத்தைச் சுட்டிக்காட்டி ‘இது யார்?’ என்று ஆங்கிலத்தில் கேட்டேன்.

‘சண்டாளிகாதேவி…தும் மத்ராஸி?’

தலையசைத்தேன். அவர் தெலுங்கில் ஏதோ கேட்டார்.

‘தமிழ்’ என்றேன்

கேசப் ‘எங்கியே நாடு?’ என்றார். அதை அவர் தமிழில் பேசுவதாக நினைத்தார்.

நான் மலையாளத்தில் என்னைப்பற்றிச் சொன்னேன்.

‘நீ உபாசகன் என்றால் சண்டிகையைத் தரிசிக்காமல் உனக்கு மோட்சம் இல்லை. இருபது வருடம் சண்டி உபாசனை செய்து சண்டியாகவே ஆகிவிட்டவள் தேவி….’

‘யார்?’

‘உள்ளே இருக்கிறார்…உள்ளே போ…ஆவோ சாப்…ஆவோ பையா’

அந்த இருவரும் நின்றனர். அவர்களிடம் சரளமாக இந்தியில் பேசினார். திரும்பி என்னிடம் ‘இருபது ரூபாய்…இருபது ரூபாய் தட்சிணை வை’ என்றார்.

‘என்னிடம் பணமில்லை’

‘இருபது ரூபாய்…’ அவர்களிடம் அவர் ஐம்பது கேட்டார். அவர்கள் பேச ஆரம்பிப்பதற்குள் அவர் மேலும் மேலும் பேசினார். ஒருகட்டத்தில் அவர்களில் ஒருவர் நூறு ரூபாயை வைத்துவிட்டு உள்ளே சென்றார். என்னிடம் திரும்பி ‘நேரமாகிறது…பூஜை ஆரம்பமாகிவிட்டது…ரூபாயை வை..சீக்கிரம்…வை வை…’ என்றார்.

ஒருமந்திரத்துக்கு ஆளானவன் போல நான் ரூபாயை வைத்துவிட்டு உள்ளே சென்றேன். உள்ளே சண்டிகை தேவி பீடத்தில் அமர்ந்திருந்தாள். முதலில் நான் அது ஒரு பெரிய பொம்மை என்றுதான் நினைத்தேன். அவள் அசைந்தபோது என் அகம் திடுக்கிட்டது. அவள் கையசைத்து என்னை அமரும்படி சொன்னாள். தரையில் ஈச்சம்பாய் போடப்பட்டிருந்தது. அதில் ஏற்கனவே இருவர் அமர்ந்திருந்தனர். புதியவர்கள் இருவரும் உடலின் எடையை சமன்செய்து மூச்சு அடக்கி குனிந்து கையூன்றி பின் கால்மடித்து அமர்ந்து முனகிக்கொண்டனர். நான் சற்றுத்தள்ளி அமர்ந்தேன்.

இருபக்கமும் குத்துவிளக்குகள் எரிந்தன. கேசப் குடிலின் வாசலில் இருந்த திரையை ஒரு கயிறைப்பிடித்து இழுத்து கீழே சரித்து மூடினான். சன்னல்கள் இல்லாத ஒரே வாசல்கொண்டகுடில். அதில் அரைஇருட்டு நிறைந்தது. கேசப் வாசலருகே நின்று இந்தியில் உரக்க பேச ஆரம்பித்தார். சண்டிதேவியைப்பற்றிச் சொல்கிறார் என்று மட்டும் புரிந்தது. ’தியான் கரோ’ என்று அடிக்கடி சொன்னார். நால்வரும் கைகூப்பினார்கள். நானும் அவர்களைப்பார்த்தபின் கைகூப்பினேன்.

கேசப் ஒரு பித்தானை அழுத்தியதும் அறைக்குள் இசை நிரம்பியது. மத்தளத்துடன் யாரோ ஒரு கிழவர் பாடிய பஜனை. பின்னணியில் பெண்குரல்கள் தொகையறா பாட யாரோ நடனமிடுவதுபோல ஜாலரின் ஒலி.

கேசப் வந்து கீழே இருந்த பித்தளை தாம்பாளத்தில் மலரிதழ்களைக் குவித்து வைத்தார். ஒரு சிறிய தட்டில் கர்ப்பூர வில்லைகளை வைத்து குத்துவிளக்குச் சுடரில் அதைக் கொளுத்தினார். தூபத்தட்டு ஒன்றில் கரிதான் இருந்தது. அதை கையால் விசிறிவிட்டு சாம்பிராணித்தூளைத் தூவியதும் குடில்முழுக்க புகை படர ஆரம்பித்தது.

கேசப் உரத்தகுரலில் ‘ஜெய் ஜெய் மா சண்டிகா தேவி! ஜெய் மா காளி தேவி! ஜெய் மா காமமோசனீ தேவி!’ என்று கூவினார். கூடியிருந்த இருவர் ‘ஜெய் ஜெய் மா!’ என்று முனகிக்கொண்டனர்.

கேசப் சற்று விலகியதும் தேவி தன் ஒட்டியாணத்துக்கு அடியில் இருந்த புலித்தோல் போன்ற துணிக்கச்சையை அவிழ்த்தாள். கைகளை முன்னால்கொண்டு வந்து ஒரு கணத்தில் தன் மொத்தச் சேலையையும் இடுப்புக்குமேல் தூக்கி முற்றாக பின்னால் தள்ளிவிட்டள். கால்களை மிக அகற்றி சிற்பங்கள் அமரும் பாவனையில் பீடத்தில் அமர்ந்து ஒரு கையை அபயக்கரமாக வைத்துக்கொண்டாள்.

நால்வரும் ‘ஜெய் சண்டி மாதா!’ என முனகியபடி கைகூப்பினார்கள். தொடைகள் விரிந்து அவள் பெண்குறி மிகவும் திறந்திருந்தது. ஒரு கணத்துக்குமேல் என்னால் பார்க்கமுடியவில்லை.

கேசப் என்னிடம் ‘மகாசக்திஸ்தானம்..மூலாதாரபிந்து…தர்சன் கரோ’ என்றார்.

நால்வரும் உரக்க ‘மாதாகீ ஜே மாதா கீ ஜே’ என்று கூவினர்.

கேசப் அந்த கற்பூரத்தட்டை எடுத்து ஆரத்தி காட்டும்படி அவர்களிடம் சொன்னார். ஒவ்வொருவராக அமர்ந்தபடி முன்னால் நகர்ந்து நடுநடுங்கும் கைகளுடன் கற்பூர ஆரத்தி காட்டினார்கள்.

நான் நடுங்கும் உடலுடன் அமர்ந்திருந்தேன். பற்களை இறுகக் கடித்திருந்தேன். கேசப் என்னிடம் ஆரத்தி காட்டச்சொன்னார். நான் தயங்க அவர் உரக்க ‘ஆர்த்தி காட்டணம்….ஆர்த்தி…’ என்றார்.

எழுந்து ஆரத்தி காட்டினேன். கண்களை மூடிக்கொண்டு தட்டைச்சுழற்றி கீழே வைத்தேன். எரிந்தபடி ஒரு கற்பூரவில்லை கீழே விழுந்தது.

‘அணைக்கூ…அதை அணைக்கூ’ என்றார் கேசப்.

ஈச்சம்பாய் கருகுவதற்குள் அதை அணைத்துவிட்டேன். கேசப் அனைவரிடமும் மலரை அள்ளி அவள் பெண்குறியில் போட்டு பூசை செய்யச் சொன்னார். அவர்கள் மெல்ல நடுக்கம் அகன்றவர்களாக மலர்களை அள்ளி வீசி மந்திரங்கள் போல ஏதோ சொன்னார்கள். ஒருவர் தேவியின் கால் பாதத்தில் தன் தலையால் மூன்றுமுறை அறைந்துகொண்டார்.

நான் மூன்றுமுறை மலரை வீசிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தேன்.

கண்களைமூடாமல் பார்த்துக்கொண்டே தியானம் செய்யவேண்டும் என்று கேசப் இந்தியிலும் மலையாளத்திலும் சொன்னார். நான் அங்கிருந்து எழுந்தோட ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கான தைரியம் எனக்கிருப்பதாகத் தோன்றவில்லை.

அரைமணிநேரம் கழித்து வெளியே வந்து வெயிலில் நின்றபோது கண்கூசியது. அங்கிருந்து ஓடிவிடவேண்டும் என்றுதான் முதலில் தோன்றியது. பாய்ந்து பாய்ந்து படியிறங்கி கீழே வந்தேன். மூச்சுமுட்டியது. ஏதாவது குடிக்கவேண்டும் போலிருந்தது. டீ அங்கெல்லாம் மிகக் கொஞ்சமாகவே கொடுப்பார்கள். அதிலும் அகலமான மண்சட்டியில். என் மார்புத்தவிப்புக்கு நிறைய தண்ணீர் தேவைப்பட்டது.

ஒரு சோடா குடித்தேன். பின்பு இன்னொரு சோடா. அதன்பின் படிகளில் ஓரமாக அமர்ந்துவிட்டேன். ஹரித்வார் காசியை விட அழுக்கான நகரம். குப்பைகளை அள்ளும் வழக்கமே இல்லை. அத்தனைபேரும் குப்பைபோடுவதற்காகவே அங்கே வந்தார்கள் என்று தோன்றும். ஆண்களெல்லாருமே எங்குபார்த்தாலும் பான்பராக் துப்பினார்கள்.

அங்கே கண்ணில்படுபவர்களில் முக்கால்வாசிப்பேர் முதியவர்கள் அல்லது நோயாளிகள். மரணம் நிறைந்திருக்கும் காற்று என்று தோன்றியது. எத்தனை இழுத்தாலும் மூச்சு போதவில்லை.

பின்னர் எழுந்து கங்கைக்கரையோரமாகச் சென்றேன். பகலெல்லாம் கங்கை அருகிலேயே இருந்தேன். எதற்காக அங்கே வந்தேன் என்று தெரியவில்லை. அங்கே பார்த்த ஒன்றுமே மனதுக்குப்பிடிக்கவில்லை. திரும்பிவிடலாம் என்று தோன்றியது. ஆனால் எங்கே செல்வது?  ஹரித்வாரில் ஏராளமான மடங்கள் உள்ளன என்று சொன்னாகள். ஏதாவது ஒரு மடத்தில் நுழையமுடிந்தால் கொஞ்சநாள் அங்கே தங்கலாம். ஆனால் நான் சுற்றிச்சுற்றி வந்தபோது எந்த மடமும் கண்ணுக்குப்படவில்லை. என்னிடம் பதினைந்து ரூபாய்க்குக் குறைவாகவே இருந்தது. இரண்டுநாட்களுக்குமேல் அங்கே நான் வாழமுடியாது.

பெரிய சிவப்புச்சரிகைத் தலைப்பாகை வைத்த ஒரு வெள்ளைக்காரன் என்னை நோக்கி ‘ராம்! ராம்!’ என்று புன்னகைசெய்தான்.

நான் ’குட் ஆஃப்டர்நூன்’ என்றேன்.

‘சகோதரா இங்கே சண்டி மந்திர் எங்கே இருக்கிறது?’

வழிசொல்ல ஆரம்பித்தபோது எனக்கு அந்த எண்ணம் வந்தது.’நான் காட்டுகிறேன்’

‘என்னிடம் பணம் இல்லை’ என்றான் அவன்.

‘பரவாயில்லை. நான் வழிகாட்டுகிறேன்’

அவனை சண்டிகோயிலுக்குக் கூட்டிச்சென்றேன். செல்லும்வழியில் சண்டிகை என்றால் என்ன என்று உடைசல் ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டே நடந்தேன். பிரம்மா விஷ்ணு சிவன் மூவருமே காமத்தால்தான் தம் ஆற்றலைப் பெறுகிறார்கள். காமம் அவர்களிடம் அகங்காரமாக ஆனபோது பராசக்தி சண்டியாக வந்து அவர்களின் காமத்தை வேருடன் பிடுங்கிவிட்டாள். அவர்கள் செயலாற்றலை இழந்து அப்படியே விழுந்துவிட்டார்கள்.பிரபஞ்சமே செயலற்றுப்போய்விட்டது. முனிவர்கள் எல்லாம் பராசக்தியிடம் சென்று வேண்டிக்கொண்டார்கள். பராசக்தி மனம் கனிந்து மூன்று தேவிகளாக மாறினாள். அவர்கள்தான் சரஸ்வதி லட்சுமி பார்வதி. அந்த தேவிகள் மூன்று தெய்வங்களிலும் மீண்டும் காமத்தை எழுப்பினார்கள். அவர்கள் செயலூக்கம் கொண்டபோது பிரபஞ்சம் செயல்பட ஆரம்பித்தது.

அவன் மிகத்தீவிரமாக, கண்களைச் சுருக்கியபடி, ’மூன்று தெய்வங்களுக்கும் ஆதிபராசக்திக்கும் என்ன உறவு?’ என்றான்.

‘அவள்தான் அன்னை…மும்மூர்த்திகளும் பிள்ளைகள்’

‘அப்படியென்றால் மூன்று மனைவிகளும் அவர்களின் அம்மாவின் மூன்று பகுதிகளா?’

என்ன சொல்வதென்று தெரியவில்லை. ‘ஆனால்…’ என ஏதோ ஆரம்பித்தேன்.

‘எனக்குப்புரிகிறது’ என்றான்.

‘மேலே இருக்கும் சண்டிகை கோயில் மிகச்சிறியது. அங்கே சாதாரண மக்கள்தான் போவார்கள். உண்மையில் சண்டிதேவியை தரிசிக்க நினைக்கும் உபாசகர்கள் போகும் ஒரு இடம் எனக்குத்தெரியும்….அங்கே நான் உன்னை கூட்டிச்செல்கிறேன்’.

அவன் தயங்கியபடி ‘அபாயகரமான இடமா?’ என்றான்.

‘கொஞ்சம்’

அவன் யோசித்து ‘சரி…ஆனால்..’ என்றான்.

‘சட்டவிரோதமான விஷயம் அது. ஆனால் அற்புதமான அனுபவம்.’

‘நீ என்ன எதிர்பார்க்கிறாய்?’

‘நூறு ரூபாய்’

‘ஐம்பது’

‘நன்றி…மேலே போ…மேலேதான் சண்டி கோயில்’

‘நில் நில்…’ என்றான். ’நூறே தருகிறேன்’

‘பணம் கொடு’

நூறுரூபாய் கையில் வந்தபோது நம்பமுடியவில்லை. எவ்வளவு எளிதாக ! இன்னும் ஒருவாரம் இங்கே இருக்கலாம்.

‘அங்கே மீண்டும் ஐநூறு ரூபாய் நீ கொடுக்கவேண்டும்’

‘ஐநூறு ரூபாயா?’

‘இங்கே இது சட்ட விரோதம். வெள்ளையர்களை உள்ளே விட சாஸ்திர அனுமதியும் இல்லை. நான் சொல்லிப்பார்க்கிறேன்’ என்றேன் ‘ஆனால் ஐநூறு இல்லாமல் முடியாது’

‘சரி’ என்றான்.

‘அந்தச் சரிகைத்தலைப்பாகை யார் தந்தது?’

‘என் குரு….எனக்கு யோக ஞானம் அளித்தபோது இதைக்கொடுத்தார்’

ஏற்கனவே நிறையப் பணம் விட்டுவிட்டான் போல என நினைத்துக்கொண்டேன்.

கேசப் என்னையும் வெள்ளையனையும் பார்த்தபோது முகத்தில் கொஞ்சம் ஆச்சரியம் காட்டினார் .நான் சுருக்கமாக அந்தவெள்ளையனை நான் கவர்ந்து கொண்டுவந்ததைச் சொன்னேன். ஐநூறு ரூபாய் தருவான் என்றேன். ஆனால் அவனை தனியாக அமரச்செய்யவேண்டும்.

கேசப் சம்மதித்தார். ‘கம்’ என உள்ளே கொண்டுசென்றார். அதற்குமுன் காசு வாங்கிக்கொண்டார்.

உள்ளே சென்றதுமே வெள்ளையன் ‘ஓ மை…’ என்று முனகினான்.

ஒருமணிநேரம் கழித்து வெளியேவந்தபோது அவனுக்குக் கண்ணே தெரியவில்லை. தடுமாறி கறுப்புக்கண்ணாடியை மாட்டிக்கொண்டான். முகம் ரத்தமாகச் சிவந்திருந்தது.‘Oh…Oh my god…Ya, it is great…Awesome…Phew!’

‘You liked it?’

‘Incredible! Man , I… I actually screamed out’

‘Huh?’

‘Is it Shiva?’

அவனை கீழே கொண்டு விட்டேன். நேராகச்சென்று ஒரு கடையில் நுழைந்து சப்பாத்தியும் கீரைப்பருப்புக்கறியும் பப்பட்டும் சாப்பிட்டு ஒரு லஸ்ஸி குடித்தேன். இரவில் நன்றாகவே குளிரும் என்று தெரிந்திருந்தது. ஆனால் மாலைக்குள் படுப்பதற்கான ஒரு இலவச சத்திரத்தைக் கண்டுபிடித்தேன். பெரியதலைப்பாகைகளும் சுருள்வாள் மீசைகளுமாக ஆண்களும், தோள்வரை சங்குவளையல்களை அடுக்கி மூக்கில் பெரிய பாசிமணி புல்லாக்குபோட்ட பெண்களும், முகமெங்கும் பச்சைகுத்தப்பட்ட கிழவிகளுமாக ஒரு பெரிய ராஜஸ்தானிய கும்பல் அதை நிறைத்திருந்தது. அங்கேயே சப்பாத்தி சுட்டுக்கொண்டிருந்தார்கள்.

நான் படுத்ததும் ஒரு கிழவி என்னை எழுப்பி இரண்டு சப்பாத்தியும் ஒரு துண்டு வெல்லமும் தந்தாள். அவர்கள் கலைந்து கலைந்து கூடணையும் பறவைகள் போல சத்தமிட்டு ஒருவழியாக அடங்கி படுத்துக்கொண்டார்கள்.

மறுநாள்காலை நான் அந்தக் கடையில் சாப்பிடச்சென்றபோது கேசப் கீழே இருப்பதைப்பார்த்தேன். அவருக்கு பூரியை பொட்டலம் கட்டிக்கொண்டிருந்தார்கள்.

‘நீ என்னுடன் மேலே வா’ என்றார்.

‘எதற்கு?’

‘நீ ராத்திரி எங்கே தூங்கினாய்?’

‘சத்திரத்தில்’

‘அங்கே திருட்டுப்பயம் உண்டு….சிலசமயம் ஆண்களைப் பிடிப்பவர்களும் வருவார்கள்…எங்களுடன் தங்கு’

‘எங்கே?’

‘மேலே குடிலில்தான்…அது எங்கள் குடில்தான்’ என்றார் கேசப் ‘நான் உனக்கு தினம் முப்பது ரூபாய் கொடுக்கிறேன்…’

‘நான்…’

‘எனக்கு வெள்ளைக்காரர்கள் வேண்டும். ஆங்கிலம் பேச எனக்குத்தெரியாது’

‘நான் அவனிடம் காசு வாங்கவில்லை..’

‘பொய் சொல்லாதே….நீ காசு வாங்கினால் எனக்கென்ன…வருகிறாயா?’

நாங்கள் மேலே வந்தபோது சண்டிகை நீலம்பாரித்த வெள்ளைச்சருமத்துடன் குளித்துவிட்டு வந்து கூந்தலை காயவைத்துக்கொண்டிருந்தாள். கேசப் அவளிடம் ‘இவன்தான்’ என்றார்.

‘எந்த ஊரு தம்பி?’ என்று தமிழில் கேட்டாள்

‘நீங்க தமிழா?’

‘ஆமா…நாங்க பிராமின்ஸ்’

‘ஓ’

‘எங்கப்பா ப்ரோகிதர்…சின்னவயசிலேயே அம்மா அப்பா ரெண்டுபேரும் போய்ட்டா…ஜோசியம் சொல்லி பிழைச்சிண்டிருந்தேன். அப்றம் இப்டி’ என்று சுருக்கமாக தன் வாழ்க்கையைச் சொன்னாள்.

‘ஜோசியம் படிச்சீங்களா?’

‘எங்க? அப்பா ஜோசியம் பாப்பார். அப்ப எங்கியோ நாலு வார்த்தை காதிலே விழுந்தது….பொழைக்கணுமே’ என்றாள் ‘பூரி சாப்பிடறியா?’

‘இல்லை சாப்பிட்டேன்’

பேச ஆரம்பித்ததுமே அவள் மிக நெருக்கமாக ஆகிவிட்டாள் என்பதை ஆச்சரியத்துடன் அறிந்தேன். எல்லா மூத்தபெண்களுக்கும் இருக்கும் அக்கா பாவனை. ‘நீ பேசாம ஊருக்குப்போய் படிச்சு வேலைக்கு போ. அம்மா கஷ்டப்படுவாங்க இல்ல?’ என்றாள். அதை வெவ்வேறு சொற்களில் மணிக்கு ஒருமுறை சொல்லிக்கொண்டே இருந்தாள்.

கேசப் அவள் கணவன் என்று தெரிந்துகொண்டேன்.‘அனாதையா மானங்கெட்டு நின்னப்ப ஆம்புளையா வந்து கைகுடுத்தாரு….ஆளு இப்டி இருக்காருண்ணு நினைக்காதே…இவருகூட வந்தபிறகு ஒத்தன் என் மேலே கைய வச்சான்…. அம்பதுபேர் பாக்க புடிச்சு கசக்கிட்டு போனான். இவரு மண்ணிலே இருந்துண்டு அந்தக்கைய பத்திரமா பாத்துக்கோ ராம்சிங்னு சொன்னாரு. மறுநாள் பிண்டு இருக்கானே, இந்த ஊரிலே பெரிய ரவுடி, அப்ப அவன் சின்னப்பையன், ராம்சிங்கோட ரெண்டு கையையும் வெட்டிக்கொண்டுவந்து இந்தா இந்த மரத்தடியிலே போட்டுட்டு போனான்….நாள்முழுக்க அங்கதான் கெடந்தது கை…நான் தோ இங்க உக்காந்து கையையே பாத்துண்டிருந்தேன். எடுத்து ரெண்டுகையிலேயும் வச்சுண்டு டான்ஸ் ஆடணும்னு தோணித்து தெரியுமா? என்னா பெரிய கை…மலைப்பாம்பு மாதிரி தும்பிக்கை மாதிரி…வெரலெல்லாம் இந்தா தண்டிக்கு வெள்ளரிக்கா மாதிரி…தூக்கமுடியும்னே தோணல்லை’ என்றாள் ‘அந்தக்கைய எனக்கு நன்னாவே தெரியும்’

‘அவன் என்ன ஆனான்?”

’அவனா? அவன் தர்மாஸ்பத்ரியிலே கெடந்து அழுகிச் செத்தான்..’

‘கேஸ் ஆகலியா?’

’கேஸா? இங்க எதுக்குமே கேஸில்ல’

கேசப் மலையாளி. தறவாட்டு நாயரும்கூட. தலக்கர கடுத்தா நாயர் கேசவன் நாயர். மாவேலிக்கரை அருகில் திருவோணக்கரை என்று ஒரு ஊர். தினமும் செய்தித்தாள் படிப்பார். ரேடியோவில் கேரள அரசியல் கேட்டுத்தெரிந்துகொள்வார். இடதுசாரி ஈடுபாடு உண்டு. ‘நாயனார் யோக்கியனாக்கும். ஆனா எனக்கு எம்.என்.கோவிந்தன்நாயரைத்தான் பிடிக்கும்’

‘எப்படி இங்கே வந்தீர்கள்?’ என்றேன்.

‘ஆறுவயதில் என் அப்பாவும் சிற்றம்மாவும் சேர்ந்து கேகே எக்ஸ்பிரஸிலே ஏற்றிவிட்டுவிட்டார்கள்’ என்றார் கேசப். ‘ரயில் வந்து நிற்கும் கடைசி இடம் டேராடூன். அங்கிருந்து இதோ இங்கே….எல்லா வித்தையும் படித்துத்தான் இங்கே வாழ்ந்தேன்….இதோ இந்தக் கையால் ஒரு பழையதுணியைக்கிழிப்பதுபோல ஒரு மனிதனின் சங்கை என்னால் அறுக்கமுடியும்’

கேசப்புக்கு என்னிடம் பிரியம் இருந்தது. காரணம் நான் மலையாளி. ‘நம்மளைப்போன்ற மலையாளிகள்’ என்று அடிக்கடி சொல்வார். சென்ற செப்டெம்பரில்தான் தாதா படா ராஜன் மும்பையில் கொல்லப்பட்டிருந்தார். அதுவும் நீதிமன்றவாசலில் வைத்து.

‘படா ராஜனின் பெயர்தெரியுமா? ராஜன் மகாதேவன் நாயர். மாவேலிக்கரைதான் அவருக்கும் சொந்த ஊர்…அவர் ஆள் யார்? சிங்கம்….நன்றிகெட்டத்தனமாக கொலைசெய்துவிட்டார்கள். ஆனால் விடமாட்டார்கள். சோட்டாராஜன் பழிவாங்காமல் இருக்கமாட்டான்’ கேசப் கொதித்தார்.

ஒவ்வொருநாளும் மும்பை தாதாக்களைப் பற்றிய செய்திகளை உன்னிப்பாக வாசித்து நினைவில் வைத்திருந்தார். படா ராஜனின் முதன்மைச்சீடர் சோட்டாராஜன் அல்ல இவர்தான் என்று நினைத்துக்கொண்டேன்.

‘நாயர் தோற்கக்கூடாது. நாயர் மேல் கையை வைத்தவனின் வம்சத்தை வாழவிடக்கூடாது’ பல்லைக்கடித்து செய்தித்தாளை ஆட்டி கேசப் உரக்கச் சொல்வார். பலநூற்றாண்டுக்காலம் குடிப்பகை விரோதத்தை வளர்த்து தலைமுறைதலைமுறையாக மாறி மாறி தலைவெட்டி வாழ்ந்த வம்சத்தின் ரத்த நுரை அது என்று தோன்றியது.

தேவிக்கு கேசப் மீது பயமா பிரியமா மரியாதையா என்று தெரியாத உணர்ச்சி இருந்தது. சண்டிவேடம் போட்டதும் கேசப் சீடனின் பணிவும் ஒடுக்கமுமாக அவள் முன் நிற்பார். அவரே அவளுக்கு பூசையும் தூபமும் காட்டுவார். ஆனால் மற்ற நேரங்களில் அவள் ஒவ்வொரு கணமும் அவருடைய கடைக்கண்பார்வைக்கு ஏங்குபவள் போலிருப்பாள். அவருக்குப் பணிவிடைகள் செய்வாள். அவர் நாளிதழ் வாசிக்கையில் மிகமௌனமாக டீ கொண்டு சென்று அருகே வைப்பாள். இரவில் அவரது மெலிந்த கால்களை டவலை வெந்நீரில் முக்கி துடைத்துவிடுவாள். அவருக்குச் சாப்பாடு பரிமாறிவிட்டு விலகி கவனித்துக்கொண்டு நிற்பாள். அது தீரத்தீர அக்கணத்திலேயே பரிமாறுவாள்.

அவர் அவளிடம் நேரடியாகப்பேசுவதே குறைவு. பேசினாலும் வேறெங்கோ பார்த்துத்தான். பெரும்பாலும் தலைகுனிந்து ஓரிரு சொற்களில் பேசும் வழக்கம் அவருக்கு உண்டு. ‘வேண்டாம்’ என்று சொன்னால் வேண்டாம்தான். மறுசொல்லை அவள் சொல்லமுடியாது. அதனால்தான் அவளுக்கு என்மீது ஆதிக்கம் கலந்த உரிமை வந்தது.

‘முதல்ல போயி இந்த பரட்ட தலைமுடிய வெட்டு… தாடிய சிரைச்சுண்டு வா…நீ என்ன சாமியாரா? வளரும் புள்ளை’ என்று அதட்டினாள். காலையிலும் இரவிலும் மட்டும்தான் அவள் சாப்பிட முடியும். அப்போது முதலில் எனக்குப் பரிமாறிவிட்டுத்தான் சாப்பிடுவாள். பரிமாறும்போது அவள் ஒருமாதிரி விரிந்துகொண்டே செல்வதாகத் தோன்றும். அள்ளியள்ளி வைப்பாள். ‘சாப்பிடு…இப்டிச்சாப்பிட்டா ஒடம்பு கொத்தவரங்கா மாதிரில்ல ஆகும்…’ என்பாள். கரண்டியாலேயே மண்டையில் செல்லமாக அடிப்பாள்.

அவளுக்கு புராணக்கதைகள், கொஞ்சம் சுலோகங்கள் தெரியும். தான் ஒரு பிராமணப்பெண் என்பதற்கு ஆதாரமாக அதைச் சொல்லிக்கொண்டிருக்கிறாள் என்று தோன்றும்..’இதெல்லாம் எனக்கு அவ்வளவா பிடிக்கல்லை’ என்று ஒருமுறை சொன்னேன்.

‘என்ன புடிக்கலை? நான் என்ன ரெக்கார்டு டான்ஸா ஆடறேன்…இது உபாசனை தெரியுமா?’

‘ஒண்ணுமில்லை’ என்று வேறுபக்கம் பார்த்தேன்.

‘உனக்கென்ன தெரியும்? நான் மேடையிலே இருக்கிறச்ச என்னைய அம்பாளாத்தான் நினைச்சுக்குவேன். இந்த உலகையே பெத்துப்போட்ட அம்மாவா நினைச்சுத்தான் அத்தனைபேருக்கும் அருள் புரிவேன்….அதான் எல்லாரும் என் காலிலே விழுறா…மனசு உருகி எத்தனை பேரு அழறா…எத்தனைபேருக்கு அவா பாவம்லாம் கரைஞ்சாச்சுண்ணு தோண்றது…எனக்கு அதெல்லாம் பெரிய புண்ணியமாத்தான் தெரியறது. பிராப்தத்தாலே இந்த மாதிரி எனக்கு அமைஞ்சிருக்கு…’

அந்த வேலைகள் எல்லாமே கேசப்பின் ஜோடனைகள் என நான் நன்கறிந்திருந்தேன். தேவி நேரம் கிடைக்கும்போதெல்லாம் விதவிதமாகப் பேசி அவள் செய்வதை நியாயப்படுத்திக்கொண்டே இருந்தாள்.

நான் இரண்டுவாரம் அங்கே இருந்திருப்பேன். அதற்குள் அங்கே எல்லாமே சலித்துவிட்டது. மாலையானால் படிக்கட்டே மாறிவிடும். எல்லாரிடமும் நல்ல காசு புழங்கியது. அத்தனைபேரும் குடிப்பார்கள். அதன்பின் குழறல்மொழியில் சண்டைகள் கூச்சல்கள். திமுதிமுவென்று ஓடுவார்கள், பொத் பொதென்று விழுவார்கள். சமயங்களில் கட்டிப்புரண்டு சண்டை. கட்டைகளைத் தூக்கி மாறி மாறி அடிப்பார்கள்.

கண்ணெதிரே இருவர் மிருகத்தனமாக அடித்துக்கொண்டாலும் கேசப் அசைய மாட்டார். பீடியை ஆழ இழுத்தபடி சுருங்கிய கண்களுடன் பேசாமல் பார்த்துக்கொண்டிருப்பார். எவருக்கும் உதவுவதில்லை. ஆனால் அவர் ‘பஸ்’ என்று சொல்லிவிட்டாரென்றால் அவ்வளவுதான் அனைவருமே அமைதியாக முனகியபடி, முணுமுணுத்தபடி கலைந்துசெல்வார்கள்.

கேசப்பை கேசவேட்டன் என்று கூப்பிட ஆரம்பித்தேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது அவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னால் அவரிடம் சென்று நேருக்கு நேர் நின்று பேசமுடியாது. அவரும் என் அப்பாவும் அண்ணாவும் எல்லாமே ஒரே வார்ப்புகள். பிறரை ஆட்சிசெய்வதற்காகவே பிறந்தவர்கள். தேவியிடம் சொல்லி சொல்ல வைக்கலாம் என்றால் அது இன்னும் கஷ்டம். அவளே என்னிடம் சொல்லித்தான் அவரிடம் ஏதாவது கேட்டுப்பெற்றாள்.

நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது தேவி என்னிடம் ‘டேய், உங்கண்ணனிடம் ஒரு கடை கிடை வைக்கச்சொல்லுடா…இனிமே இது வேண்டாம்’ என்றாள்.

கேசப் அப்பால் திண்ணையில் இருந்தார். அங்கிருந்தே அவர் திரும்பிப்பார்ப்பதை என் முதுகில் உணர்ந்தேன்.

தேவியின் கழுத்தும் கன்னங்களும் புல்லரித்திருந்தன என்று தோன்றியது. கண்களில் நீர் நிறைந்திருந்தது ‘என்னாலே இனிமே இதெல்லாம் முடியாது…’

‘என்னடீ?’ என்றார் கேசப்.

‘இனிமே இது முடியாது….இனிமே வேஷம் கட்டி உக்கார மாட்டேன்’

‘ஏன்?’

அவள் என்னிடம் மெல்ல ‘மூணுமாசமாச்சு’ என்றாள்.

அவள் சொல்வதே எனக்குப்புரியவில்லை.

‘என்னது?’

‘பாத்துட்டேன்…அதுதான்…இந்தவாட்டி மூணுமாசம் கழிச்சு சொல்லலாம்னு இருந்தேன்’

’அதுக்கு?’

‘இனிமே என்னால முடியாது…என்னை கொன்னாலும் சரி…என்ன தொழில் வேணுமானாலும் செய்றேன்…மாடா ஒழைக்கிறேன்…’

அவள் பாத்திரத்தை தரையில் வைத்துவிட்டு முகம் பொத்தி அழ ஆரம்பித்தாள். கைகளும் தோளுமெல்லாம் நீலநிறம் பாய்ந்திருந்தன. விசும்பலில் உடம்பு அதிர்ந்தது.

‘சரி சரி…பிடிக்கல்லேண்ணா வேண்டாம்…கீழ ஒரு கடைய எடுத்திரலாம்…பைசா எவ்ளவு இருக்குன்னு பாக்கிறேன்’ என்றார் கேசப்.

அவள் அதன்பின்னரும் கொஞ்சநேரம் விசும்பிக்கொண்டிருந்தாள். அதன் பின் கண்களைத் துடைத்து என்னை நோக்கி புன்னகைத்து ‘தால் வைக்கட்டுமா?’ என்றாள்.

‘போரும்’என்றேன்.

கேசப் அப்பால் தவழ்ந்து புழுதிவழியாக பாதையில் ஏறி சென்றுகொண்டிருந்தார்.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுருஷன்
அடுத்த கட்டுரைஒழிமுறிக்கு திரைக்கதை விருது