தமிழ் நவீன இலக்கியச் சூழலின் தற்போதைய பிதாமகர்கள் (தங்களையும் சேர்த்து) மரபுத்தொடர்ச்சி இல்லாத இலக்கியம் இலக்கியமே இல்லை என்பதாகக் கொள்கின்றார்கள். அந்த மரபு என்பது என்ன? தலித் இலக்கியப் பிரிவுகளுக்கு எந்த வகை மரபுத் தொடர்ச்சி கிடைக்கும்? தலித் இலக்கியம் ஏகலைவனிடமிருந்தாகவோ அல்லது நந்தன் வழியாகவோ தொடர்வதுதான் சிறப்பா? அமெரிக்கக் கருப்பின இலக்கியங்களுடன் சகோதரத் தொடர்பு கொண்டு வளர்ந்தால் அது ஏதேனும் இழந்துவிடுகின்றதா?
— ஜி.திராவிட்.
பிதாமகன் என்றதற்கு நன்றி. என் காதோர நரை இப்போது சற்று நியாயப்படுத்தப்படுகிறது.
மரபுத்தொடர்ச்சி குறித்து சிந்திக்க தொடக்கப்புள்ளியாகக் கொள்ளவேண்டியது மரபு முற்றிலுமாக இல்லாத நிலை ஒன்று உண்டா என்ற வினாவை எழுப்பிக் கொள்வதே. முதலில் மொழி இருக்கிறது. அதில்தான் எல்லாமே நிகழ்கிறது. ஆழ்படிமங்கள் [Archetypes], மாதிரிவடிவங்கள் [Stereotypes], என சிந்தனையின் அடிப்படைக் கட்டுமானங்கள் உள்ளன. எல்லா தொடர்புறுத்தல்களுமே இதன் மூலம்தானே நிகழ்கின்றன?
ஆகவே மரபு இல்லாமல் ஒரு சிந்தனை, கலை இல்லை. எல்லாச் சிந்தனையும் எல்லாக் கலையும் ஏற்கனவே இருப்பதன் நீட்சியே. ஏனெனில் இலக்கியத்துக்கும் கலைக்கும் அடிப்படையாக உள்ள ஆழத்துக் குறியீட்டமைப்பு பல்லாயிரம் வருடங்களாக உருவாகி வந்தது. மனிதன் குரங்காக இருந்த காலம் முதல் உள்ள பல்லாயிரம்கோடிப் படிமங்களும் குறியீடுகளும் அடையாளங்களும் கருத்துகளும் கலந்தது அது. பல்லாயிரம் வருடங்களாக ஊறி மண்ணில் சேர்ந்த நிலத்தடி நீர் போல. அதைப் பொதுவான தளமாகக் கொண்டே எல்லா தொடர்புறுத்தல்களும் நிகழ்கின்றன. இது நவீன மொழியியல் சொல்லும் அடிப்படை விதிகளில் ஒன்று. சில பின்நவீனத்துவ மொழியியலாளர்கள் படைப்பு என எதுவுமே புதிதாக நிகழ்வதில்லை என்றும் ஏற்கனவே இருப்பதன் மறு ஆக்கமே முடிவின்றி நிகழ்கிறது என்றும் சொல்கிறார்கள்.
நம் மரபு இருவகை.
1] நாம் நம்மை அறியாமலேயே அடைவது. பிறந்து விழுந்த கணம் முதல் அது நம்முள் வந்து நிறைய ஆரம்பிக்கிறது. அதை எவருமே தெரிவு செய்ய முடியாது, விலக்கவும் முடியாது. ஆகவே மரபு இல்லாத ‘தூய’ மனிதப்பிறவி இல்லை.
2] நாம் ஏற்றுக் கொள்ளும் மரபு. இது கல்வி மூலம் நாம் அடைவது. சிந்தித்து நாம் ஏற்பது. நாம் மரபு என்று பொதுவாகப் பேசுவது இரண்டாவது மரபைப்பற்றித்தான்.
கற்றுச் சிந்தித்து அறியும் மரபை மிக விரிவானதாக உருவகித்துக் கொள்வதே அறிவுளோர் செயலாகும். அந்த விரிந்த மரபை விமரிசனக் கண்ணோட்டத்துடன் ஆராய்வதும் தனக்குரியதைத் தெரிவுசெய்வதும் இன்றியமையாதது. இவ்வாறு கற்றுத் தெரிவுசெய்து அடையும் மரபை வைத்து தன்னிச்சையாக வந்து சேர்ந்த மரபை இடைவிடாது பரிசீலித்தபடியே இருப்பதுதான் அறிவுச்செயல்பாடு.
சென்ற காலங்களில் மரபே தேவையில்லை என்றும், மரபிலிருந்து முற்றாகத் துண்டித்துக் கொள்ளுதலே முற்போக்கு என்றும் கருதப்பட்டது. அப்படித் ‘துண்டித்துக்’ கொண்டவர்கள் உண்மையில் இரண்டாவது வகை மரபையே நிராகரித்தார்கள். ஆகவே முதல்வகை மரபு அவர்களில் உள்ளடங்கி இயல்பாக இருந்தது. அவர்களுடைய ஆழ்மனமாக அது இருந்தது. எல்லா முக்கிய முடிவுகளையும் அவர்கள் அதுசார்ந்தே எடுத்தார்கள். காரணம் அதை அடையாளம் காண, பகுப்பாய்வு செய்ய ஏற்க நிராகரிக்க இரண்டாம்வகை மரபின்மீது ஆழமான பயிற்சி தேவை. அது அவர்களிடம் இல்லை.
உதாரணமாகச் சொல்கிறேன். மறுபிறவி நம் மரபிலிருந்து இயல்பாக நமக்கு வரும் நம்பிக்கை. நம் மொழியில் அது ஆழமாக ஊறியிருக்கிறது. இது முதல்வகை மரபுக்கூறு. கல்வி மூலம் நம் மத மரபை விரிவாக அறிந்த ஒருவர் அதை அலசி ஆராய்ந்து தெளிவை அடைய முடியும். அதை ஏற்கவோ நிராகரிக்கவோ முடியும். அப்படி மத மரபை அறியாத ஒருவர் அதை எளிதாக நிராகரித்து அப்படி ஒரு எண்ணமே தன்னுள் இல்லை என்ற நினைப்பில் இருப்பார். அது ஆழமான மனநெருக்கடியின்போது அவரையறியாமலேயே அவரிலிருந்து வெளிப்படும்.
ஆகவே மரபைக் கற்று ஆய்ந்து ஏற்பதுதான் அறிவார்ந்த வழி. நாராயணகுருவும், அம்பேத்கரும், இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடும் மாறுபட்ட கருத்துத்தரப்பினர். அவர்களிடையே உள்ள பொது அம்சம் இதுதான். மரபுக்கு அப்பால் உள்ளது மனிதனின் தூய சுயம். இலக்கியம் அதை உணரும் தருணங்கள் உண்டுதான். அந்நிலையை அடைந்த மனிதன் அனைத்து அடையாளங்களுக்கும் அப்பாற்பட்ட ஆதிமனிதன். ஆனால் தொடக்கம் மரபே.
தமிழ்ச் சூழலுக்கு வருகிறேன். தலித்துக்களுக்கு மொத்த தமிழ்மரபையே தங்கள் மரபாகக் கொள்வதில் என்ன தயக்கம்? வேளாளரும், தேவரும், வன்னியரும் அதை ஏற்கலாமென்றால் தலித்துக்கள் ஏன் ஏற்கக் கூடாது? கண்டிப்பாக அதில் அவர்கள் ஏற்க மறுக்கக்கூடிய பல விஷயங்கள் உண்டு. ஆய்ந்து நோக்கி அவற்றை நிராகரிக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. இந்த மாபெரும் சொத்து எந்தத் தனி இனக்குழுவுக்கும் உரியதல்ல. முதலில் அது தமிழர்களுக்குரியது. பின் அது மானுடகுலத்துக்கு உரியது. தெருக்களை, நீர்நிலைகளை தலித்துக்களுக்குத் தடுப்பது போன்றதே மரபை அவர்களுக்கு மறுப்பதும். அது தலித் தலைவர்கள், கோட்பாட்டாளர்கள் செய்தாலும் கொடுமையே.
ஒருவன் எப்படித் தன்னை உருவகித்துக் கொள்கிறான் என்பதைப் பொருத்து அவனது ஆளுமை அமைகிறது. தலித்துகளான அயோத்திதாசப் பண்டிதரும், தேவநேயப்பாவாணரும் மொத்த தமிழ் மரபையே தங்கள் மரபெனக் கொண்டார்கள். அதைத் தங்கள் நோக்கில் ஆராய்ந்து, விளக்கி, அதன் சில கூறுகளை நிராகரித்து, சாரத்தை உள்வாங்கினார்கள். இன்று ரவிக்குமார், அ.மார்க்ஸ் சுட்டிக்காட்டிய சில ஐரோப்பியத் துண்டுப்பிரசுரங்களுடன் தன் அறிவுலகை நிறுத்திக் கொண்டிருக்கிறார். காரணம் மரபை மறுதலிக்கும் கோட்பாடு என்கிறார். ‘நீரளவே ஆகுமாம் நீராம்பல்’ என அவர்கள் ஆளுமையின் விரிவும் அவ்வளவிலேயே உள்ளது. பொதுவாக நிராகரிப்பது மிக எளிது. வெறுப்பு என்ற ஆயுதம் மட்டுமே அதற்குப் போதும். ஆனால் ஏற்பு மிகக் கடுமையான உழைப்பைக் கோரி நிற்பது.
நம் கண்முன் நாராயண குருவின் முன்னுதாரணம் உள்ளது. அவர் எதையும் கற்கவேண்டாமென மறுத்தவரல்ல. சுரண்டப்பட்ட மக்களுக்குச் சுரண்டுபவர்களின் ஞானம் எதற்கு என்ற வினா அன்றும் சிலரால் எழுப்பபட்டது. ஞானம் மானுடகுலத்துக்கு உரியது என்றும் அதை நிராகரிப்பதன் மூலமல்ல; என்றும் மேலெடுப்பதன்மூலமே முன்னேற்றம் சாத்தியம் என்றும் நாராயணகுரு சொன்னார். ஒரு சமூகத்தின் அறிவார்ந்த வெற்றியே அதன் சமூக அதிகாரம் என்றார். ‘அறிவுக்குì குறுக்குவழிகள் இல்லை’ என்ற அவரது உபதேசம் முக்கியமானது. தன்னைப் பின்பற்றியவர்களிடம் வேதங்கள், உபநிடதங்கள், இந்தியத் தத்துவங்கள், சம்ஸ்கிருத மலையாளக் காவியங்கள், தமிழிலக்கிய மரபு அனைத்துமே அவர்கள் பாரம்பரியம் என்றுதான் நாராயணகுரு சொன்னார். அவற்றைக் கற்றுத் தெரிவுசெய்து மறு ஆக்கம் செய்து முன்னெடுத்துச்செல்லும் சவாலை விடுத்தார். அதை அவர்கள் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய வரலாறு நம் கண்முன் உள்ளது.
தமிழில் அனைத்தையும் நிராகரிக்கக் கற்பித்த ஈ.வே.ராமசாமி அவர்களின் சொற்களே எல்லாருக்கும் வசதியான வழிகாட்டியாக உள்ளன. முதலில் இந்து ஞான மரபு நிராகரிக்கப்பட்டது. பிறகு சம்ஸ்கிருத மரபு. பிறகு ஒட்டுமொத்தத் தமிழ் மரபு. மேலைநாட்டுச் சமகால துண்டு துக்காணி அறிதல்களைக் கொண்டு கட்டிய பிரமைகளை வைத்துச் சிந்திக்க முடியாது. நிராகரிக்கலாம். ஆனால் அவர்கள் அம்பேத்கர் பேரைச் சொல்லி இந்திய மரபை ஆழ அகல அறிந்த அப்பேரறிஞரை அவமதிக்கக்கூடாது.
ஆகவே ஏகலைவன் மட்டுமல்ல துரோணரும் தலித்துக்களின் மரபின் பகுதிகள் என்றே நான் சொல்லுவேன். நந்தன் மட்டுமல்ல நாயன்மாரும் அவர்களின் மரபே. அமெரிக்கக் கருப்பின இலக்கியம் மட்டுமல்ல சாக்ரடீஸ் முதல் சார்த்ர் வரை அவர்கள் தங்கள் மரபாகக் கொள்ளலாம். மரபு, உண்டு செரிப்பதற்குரியது, உயிர்ச்சக்தியாக மறு ஆக்கம் செய்வதற்குரியது.
எந்த மரமும் வேர்களைக் கட்டுப்படுத்துவது இல்லை.