புறப்பாடு II – 7, மதுரம்

காசியிலிருந்து டேராடூன் செல்லும் ஹரித்வார் ரயிலில் குளிர்காலத்தில் கூட்டமே இருக்காது. அதுவரை தள்ளுமுள்ளு நிறைந்த ரயிலையே பார்த்துவந்தவன். மொத்தமும் காலியாக ஒரு ரயில் வந்து நின்றபோது உண்மையிலேயே அது ரயில்தானா என்ற சந்தேகம் வந்துவிட்டது.

ரயில் கிளம்புவது வரை அதனருகிலேயே நின்றேன். பெரியவகுப்புகளில் பலர் ஏறிக்கொண்டிருந்தார்கள். பதிவுசெய்யாத பயணிகளின் பெட்டியில் ஒருவர்கூட ஏறவில்லை. ரயில் நினைத்துக்கொண்டு திக் என்று அசைந்தபோது சட்டென்று பாய்ந்து ஏறி உள்ளே சென்று மரபெஞ்சில் அமர்ந்துகொண்டேன். காசியில் வாங்கிய காவித் தோள்பைக்குள் ஒரு சப்பாத்தியைச் சுருட்டி வைத்திருந்தேன். அதை எடுத்து தின்றேன். தண்ணீர் இல்லை. எங்காவது ரயில் நிற்கும்போது குடித்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

எண்ணியதுபோல ரயில் உடனே கிளம்பவில்லை. இன்னும் கொஞ்சம் தள்ளிச்சென்று தயங்கி நின்றது. ஆனால் அது ஓடிக்கொண்டிருப்பதுபோல உடலில் அதிர்வு இருந்தது. சன்னல்வழியாகப்பார்த்தபோது அதிவேகமாக ரயில் ஓடுவதுபோலிருந்தது. மறுபக்கம் திரும்பினால் ரயில்நிலையம் அசையாதிருக்க ரயில் நின்றுகொண்டிருந்தது. கண்களின் மாயம் தலையைச் சுற்றவைத்தது. மறுகணம் அந்த விந்தையை அனுபவிக்க ஆரம்பித்தேன். மாறிமாறிப்பார்த்தேன். வலப்பக்கம் அதிவேகப்பயணமும் இடப்பக்கம் அசைவின்மையும். ஆம், அதுகூட சாத்தியம்தான். நின்றுகொண்டே விரைதல். அல்லது விரைந்தபடியே நின்றுகொண்டிருத்தல்.

ரயில் ஊதியது. மீண்டும் அதிர்ந்தது. அப்போது சளசளவென்று குரல்கள். ஒருகூட்டம் முண்டியடித்துக்கொண்டு ரயிலில் ஏறியது. பன்னிரண்டுபேரும் ஏதோ சரித்திர காலகட்டத்திலிருந்து வந்துநிற்பவர்கள் போலத்தோன்றினார்கள். அனைவருமே பளீரிடும் மஞ்சள் நிறத்தில் பஞ்சக்கச்ச வேட்டி கட்டி அதேநிறத்தில் தலைப்பாகையும் வைத்திருந்தார்கள். செங்காவிநிறமான சால்வை. அதில் ஏதோ இந்தி எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருந்தன. அத்தனைபேரும் குடுமி வைத்து நெற்றியில் பெரியநாமம் அணிந்திருந்தனர். தென்னிந்திய வைணவர்களின் நாமம் அல்ல, வட இந்தியாவில் போடப்படும் மஞ்சளால் ஆன ப வடிவ நாமம். அனைவர் கையிலும் ஏதோ ஒரு இசைக்கருவி இருந்தது. டோலக்குகள், ஜால்ராக்கள், மிருதங்கம், துடிபோன்ற ஒரு சிறிய வாத்திய, ஆர்மோனியப்பெட்டி, தம்புரா, ஷெனாயைவிட சிறிய நாதஸ்தவரம்.

எங்கோ இசைநிகழ்ச்சிக்காகச் செல்லும் குழு என்று தோன்றியது. அவர்கள் உற்சாகமாகச் சிரித்துக்கூச்சலிட்டு இடம் தேடி என்னருகே வந்தனர். என்னைப்பார்த்ததும் அவர்களில் கறுப்பாக இருந்த ஒருவர் ‘ராதே ஷியாம்!ராதே ஷ்யாம்!’ என்று புன்னகையுடன் கூவினார். என்னைச்சுட்டிக்காட்டி ஏதோ சொன்னார். ஒரு மனிதன் இங்கிருக்கிறான் என்று சொன்னாரென்று பட்டது. மொத்தக்கும்பலும் அந்தப்பகுதியில் சிதறி அமர்ந்துகொண்டது.

கறுப்பர் என்னிடம் இந்தியில் ஏதோ சொன்னார். புன்னகை மட்டும் செய்தேன். இந்தி தெரியவில்லை என்பதை இந்திக்காரர்களிடம் சொல்லிப்புரியவைக்க முடியாது. நம்ப மாட்டார்கள். இந்தி தெரியாதவன் வெள்ளைக்காரனாகத்தான் இருக்கமுடியும் என்ற நம்பிக்கை.

அவர்களில் ஒருவர் ஒரு துணிமூட்டையைப்பிரித்தார். உள்ளே பெரிய பாலிதீன் தாளில் சப்பாத்திகள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. நூறு சப்பாத்திக்கும்மேலே இருக்கும். வயதான ஒருவர் சப்பாத்திகளை எடுத்து அனைவருக்கும் கொடுத்தார். என்னிடம் நீட்டி ’கிருஷ்ண பிரசாத்’ என்றார்.

மறுக்க நினைத்தாலும் அவரது புன்னகையால் கவரப்பட்டு வாங்கிக்கொண்டேன். அவர் அதற்கு தொட்டுக்கொள்ள ஏதோ கொடுப்பார் என நினைத்தேன். ஆனால் அனைவரும் அப்படியே சாப்பிட ஆரம்பித்தார்கள். சாப்பிட்டபோதுதான் அது இனிப்புச்சப்பாத்தி என்று தெரிந்தது. சப்பாத்திக்குள் வேகவைக்கப்பட்ட பருப்புடன் வெல்லம் கலந்து வைத்திருந்தனர். நெய்வாசனை இருந்தது. நெடுநாட்களுக்குப்பின் சாப்பிடும் இனிப்பு.

சாப்பிட்டு முடிப்பதற்குள் அவர் இன்னொன்று கொடுத்தார். மீண்டும் இன்னொன்று. மூச்சுமுட்ட ஆரம்பித்தபின் நிறுத்திக்கொண்டேன். அவர்கள் கைகழுவிவந்ததும் கூட்டமாக அமர்ந்துகொண்டார்கள். ரயில் வேகமெடுத்துவிட்டிருந்தது. குளிர்காற்று உள்ளே சுழன்றடித்தது. கங்கையின் குளிர்நீரில் விழுந்துச் சுழல்வதுபோலத் தோன்றியது.

எழுந்து சன்னல்களை மூடினேன். ஆனால் பெட்டியில் உள்ள அத்தனை சன்னல்களையும் மூடியாகவேண்டும். என்ன செய்வதென்று தெரியவில்லை. காற்று பட்டு உடலின் உள்ளிருந்த வெப்பம் கரைந்தபோது குளிர் அதிகரித்து உடம்பு வெடவெடவென நடுங்கத் தொடங்கியது. உடம்பை எத்தனை இறுக்கிக்கொண்டாலும் உள்ளே வெப்பத்தை நிறுத்திக்கொள்ள முடியவில்லை.

அவர்கள் குளிருக்கு நன்றாகப்பழகிவிட்டவர்கள். அனைவரும் அமர்ந்ததும் வாத்தியங்களை எடுத்து மடியில் வைத்துக்கொண்டார்கள். ஒரு முதியவர் சட்டென்று உச்சக்குரலில் ‘ஜெய் கனஷியாம! ஜெய் ராதே ஷ்யாம்! போல் ஹரிபோல்!’ என்று கூவினார். சங்கு போன்ற ஓங்காரம் மிக்க குரல். அத்தனைபேரும் ‘ராதே ஷியாம்! ஹரிபோல்!’ என்று எதிர்க்குரல் எடுத்தனர். ஒருவர் மிருதங்கத்தில் டண்ண் என்று அறைந்தார். ஒரு கணநேரம் அமைதி சட்டென்று அததனை குரல்களும் வாத்தியங்களும் இணைந்து பாட ஆரம்பித்தன. ஒரே மனம் அனைத்திலூடாகவும் பாடுவதுபோல

ஸ்ரீ ராதே ராதே ராதே ! பர்சனவாலி ராதே!
ஸ்ரீ ராதே ராதே ராதே ! பர்சனவாலி ராதே!

என்று கூட்டுக்குரல் பாட்டு. ஊடாக அந்தக்கரிய மனிதரின் குரல் நாதஸ்வரத் தொனியுடன் எழுந்தது

நாம் மகாதான் ஹி அப்னோ ! நெஹின் துஸ்ரி சம் பட்டி அவுர் கமானி
சோட் அட்டாரி அடா ஹம் வோ குட்டியா பிரஜ் மகி பனானி!

ஒவ்வொரு வரியையும் திரும்பத்திரும்ப ஏற்றுப் பாடினார்கள். மொத்தக்குரலும் சேர்ந்துகொண்டு பல்லவியை இசைத்தது.

முதல் ஒலியிலேயே என் உடம்பு நடுங்க ஆரம்பித்துவிட்டது. என் உள்ளுக்குள் இருந்த ஒன்று இலைநுனிபோல எப்போதும் அதிர்ந்துகொண்டிருந்தது. அதன்மேல் மழைகொட்டுவதுபோல அந்த உரத்த சத்தம். போதும்போதும் என என் அகம் தவித்தது. எழுந்துபோகலாமா ? சற்று தயங்கியபின் எழுந்து மறுபக்கம் சென்றேன். அவர்கள் என்னைக் கவனிக்கவேயில்லை. அவர்கள் எதையுமே கவனிக்கவில்லை

மூன்றுபெட்டிகள் தள்ளிச் செல்லமுடிந்தது. எங்கும் ஆளில்லை. மூன்றாவது பெட்டியின் சன்னல்களை மூட முயன்றேன். பல சன்னல்களுக்கு மூடியே இல்லை. இரண்டாவது பெட்டிக்கு திரும்பிவந்தேன். அதை முழுக்க மூடமுடிந்தது. பெஞ்சில் குறுகி அமர்ந்தேன். பின்பு படுத்தேன். வாசல்கள் வழியாக குளிர்காற்று வந்தது. எழுந்து சென்று வாசல்களை மூடினேன். ஆனால் இணைப்புப்பகுதியின் இடவெளி வழியாக குளிர்காற்று சீறி வந்து வெறியுடன் அனைத்து இண்டு இடுக்குகளையும் ஓங்கி உதைத்து உலுக்கிக் குதறிச் சென்றது. குளிரின் ஒருபகுதியாக அந்தப்பாடல்

என்னசெய்வதென்று தெரியவில்லை. என்னிடம் இருந்த காவித்துண்டால்காதைமூடி தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டேன். சங்குமார்க் லுங்கியை போர்த்திக்கொண்டேன். ரயிலின் பெஞ்சுக்கு அடியில் சென்று படுத்துக்கொண்டேன். அங்கே குளிர் குறைந்தது. ஆனால் ரயிலின் தடக் தட் அடி நேரடியாகவே காதுக்குள் நுழைந்தது. கூடவே அந்தப்பாட்டு. என்ன தொண்டை. தொண்டைகளினாலான தொண்டை. வாத்தியங்களினாலான தொண்டை. உடம்புக்குள் உறைவதனைத்தையும் அப்படியே குரலாக மாற்றி வெளியே கொட்டுகிறார்கள். இங்கே அவர்கள் மட்டும்தான் .எதற்காகப் பாடுகிறார்கள்?

இரவேற ஏற பாடல் இன்னும் வலுத்தது. அல்லது அவர்களைக் கவனிப்பதனால் அந்த ஓசை வலுக்கிறது. தாகம் என் தொண்டையை கவ்வியது. ரயிலில் ஏறும்போதே தாகமிருந்தது. அந்த வெல்லச்சப்பாத்தி தாகத்தை பலமடங்கு மேலெழுப்பியது. அவர்களிடம் தண்ணீர் இருக்கலாம். ஆனால் எழுந்து சென்று கேட்கத்தோன்றவில்லை. அப்படியே தூங்கிவிட்டால்போதும்

சற்று தூங்கியிருப்பேன். ஆனால் தூக்கத்திற்குள்ளும் தாகத்தையே உணர்ந்தேன். வெயிலில் கங்கை கரையில் அமர்ந்திருக்கிறேன். வியர்த்துவழிகிறது. காசிக்கு வந்திறங்கியபோது இரவு பதினொரு மணி. ரயில்நிலையத்தில் தங்காமல் கங்கைப்படித்துறைக்குச் செல்லலாம் என்று நினைத்தது பெரும் தவறு. நினைத்ததைவிட அதிக தொலைவு. பெரிய தார்ச்சாலையின் இருபக்கமும் கட்டிடங்களெல்லாமே மூடி கிடந்தன. கனத்த பெரும் பசுகக்ள் அவற்றின் திண்ணைகளில் ஏறி நின்றும் படுத்தும் அசைபோட்டுக்கொண்டிருந்தன.தெருவெல்லாம் நாய்கள். குளிருக்கு அடிவயிற்றில் மூக்கை வைத்துச் சுருண்டு கிடந்தன. சில நாய்கள் மட்டும் தலைதூக்கி முனகின

கங்கைக்கான வழியை ஒரு போலீஸ்காரரிடம் கேட்டுச் சென்றேன். அதன்பின் வழி கண்டுபிடிப்பது எளிதாயிற்று,. கடைகளின் இயல்பு மாறியது, தெருக்களின் அகலம் குறைந்தது. கங்கைக்கரையில் எந்நேரமும் ஆளிருக்கும் என நினைத்திருந்தேன். குளிர்காலத்தில் மொத்தக் காசியுமே அடங்கிவிடும் என்று தெரிந்திருக்கவில்லை. லுங்கியால் போர்த்திக்கொண்டு, என்னைநானே தழுவிக்கொண்டு நடந்தேன். தாகம் ஏறி ஏறி வந்தது. ரயிலில் குடிக்க நீர் கிடைக்கவில்லை. தூங்கி எழுந்தபோது கடும் தாகத்தை உணர்ந்தேன். ஆனால் அதன்பின் காசிவரை ரயில் நிற்கவில்லை. காசி ரயில்நிலையத்தில் கங்கை என்ற சொல்லின் ஈர்ப்பில் தாகம் நினைவுக்கு வரவில்லை.

சாலையோரம் எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்தேன். ஒரு கடைகூட இல்லை. ஒருகட்டத்தில் தண்ணீர் தவிர எதையுமே நினைக்காமல் நடந்துசென்றேன். சாலை நேராக அஸ்ஸி கட்டத்துக்குச் சென்று இறக்கிவிட்டது. கங்கை! முதலில் பனியில் ஒன்றும் தெரியவில்லை. படிக்கட்டில் எல்லாம் சேறு உலர்ந்த புழுதி. இறங்கிச்சென்றபோது நதி முன்னால் இருக்கிறதா என்றே சந்தேகமாக இருந்தது. நீர் ஓடும் ஒலி இல்லை. காற்று மேலே வரவில்லை. கண்முன்னாலிருந்த பனிப்படலத்தில் கரையோரத்து விளக்குகள் செந்நிறமாகப் பிரதிபலித்தன. ஒரு இளஞ்செந்நிற திரைச்சீலை. விளக்குகளைச்சுற்றி ஒளிரும் மஞ்சள் வட்டம்

படிகளில் இறங்கிச்சென்றுகொண்டே இருந்தபோது நீரை உணர முடிந்தது. பின்பு காலில் நீர் பட்டபின்புதான் கங்கையைப்பார்த்தேன். கரியநீர் காலசைவில் நெளிந்தது. என் கைதொடும் தொலைவுக்கு மட்டும் தேங்கிப்பளபளத்த நீர்தான் நான் முதலில் கண்ட கங்கை. நான் உணர்ந்தது உடலெங்கும் எண்ணங்கெளெங்கும் நினைவெங்கும் நிறைந்திருந்த தாகத்தை. அள்ளிக்குடிக்க குனிந்ததுமே வாசித்தவையும் கேட்டவையும் நினைவுக்கு வந்தன. உலகிலேயே அதிகமாக மாசுபட்ட நதி. இலஸ்டிரேட்டட் வீக்லியில் அதில் மிதந்துசெல்லும் அழுகிய பிணங்களை படமாகப் பாத்திருந்தேன்

அள்ளிய நீரை கீழே போட்டுவிட்டு மேலேறினேன். கங்கைநீரில் அதிக குளிரில்லை. சொல்லப்போனால் இளம் வெம்மையைக்கூட உணர்ந்தேன். மேற்கொண்டு எங்கே செல்வது என்று தெரியவில்லை. கங்கை வரை வந்துவிட்டேன். இளமைமுதலெ மனதில் ஓடிய நதி. கங்கை. இன்னரு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே. ஆனால் மேளே எங்கே செல்வது? கங்கையில் குதித்து நீந்தி மறுகரை செல்லலாம். அங்கே வேறு ஏதோ ஒன்று இருக்கும். ஆனால் அந்த ஆற்றின் மறுகரையே தெரியவில்லை. மறுகரையே அதற்குக்கிடையாதென்பதுபோல கிடந்தது

கரையோரமாகவே நடந்தேன். உயரமான கட்டிடங்களின் அடிப்பகுதிகள் கங்கையின் கரையில் வந்து இறங்கி நின்றன. இடிந்த வாசல்கள், மண்டபங்கள். சில்லிட்ட சேறு கிடந்த படிகள். ஓர் இடத்தில் வெளிச்சம் தெரிந்தது. துணியை இழுத்துக்கட்டிய சிறிய கூடாரம். அதனுள் எரிந்த விளக்கொளியில் கூடாரமே ஒரு கண்ணாடிவிளக்கு போல ஒளிவிட்டது. அதற்குள் நான்குபேர் இருந்தனர். நான்குபேருக்குமே நீண்ட தாடி, அடந்த தலைமயிர். ஒருவர் சடையை பெரிய கொண்டையாக கட்டியிருந்தார். காவி உடைகள்.

அவர்கள் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்தார்கள் என்பதைக் கவனித்தேன். ஒரே சிலும்பியைக்கொண்டு அனைவரும் மாறி மாறி இழுத்தார்கள். சடைக்கொண்டைக்காரர் ஆழ இழுத்து புகையை உள்ளேயே நிறுத்தி விட்டு சிலும்பியை இன்னொருவரிடம் நீட்டினார். என்னைப்பார்த்தார். கரியபற்கள் தெரிய அவர் சிரித்தபோது மூக்குவழியாக புகைவந்து தாடிமீசையில் பரவியது. பிரியத்த்துடன் ‘ஆயியே பேட்டா…ஆயியே’ என்றார்

‘பானி…பானி’ என சைகை செய்தேன்.

அனைவரும் என்னைப்பார்த்தனர். இளைஞர் சிலும்பியை என்னை நோக்கி நீட்டி ‘ஆவோ ஃபையா” என்றார்

‘பானி…’

‘மதராஸி? தமிழ்? தெலுகு ?கன்னடா?’ என்றார் சடைமுடிக்காரர்

‘தமிழ்’

‘தம்பி தோ அங்க தண்ணிதானே அம்மாம் பெருசா ஓடிட்டிருக்கு?’

திரும்பிப்பார்த்துவிட்டு ‘இல்ல…அது’

‘சாக்கடைன்னு நினைக்கிறே? சாக்கடைதான். மனுஷனோட அழுக்கெல்லாம் அதிலே இருக்கு….நீ மனுஷந்தானே? குடிக்க மாட்டியா?’

பேசாமல் நின்றேன்

‘அப்பாலே எதுக்கு காசிக்கு வந்தே? அழுக்கை புடிக்காதவனுக்கு காசி எதுக்கு? அழுக்கைத்தின்னு அழுக்கிலே இரு…அதுமேலே அக்கினிய போடு…இந்தா’

பேசாமல் நின்றேன்

‘பின்ன எதுக்கு நிக்கிறே? ஓடு…டெல்லிக்குப்போ’

அதையே அவர்களுக்கு இந்தியில் சொன்னார். அவர்கள் கூட்டமாக என்னை நோக்கிச் சிரிக்க ஆரம்பித்தனர். கஞ்சா அவர்களை மேலும் மேலும் சிரிக்க வைத்தது. நடுவே இருந்த மண்ணெண்ணைச்சுடரின் செவொளியில் பைத்தியக்களை கொண்ட முகங்களும், பரட்டைத்தாடிகளும், மஞ்சள்பற்களும் ,எரியும் விழிகளும் என்னை நோக்கிச் சிரித்தன. ஒருவரின் ஒரு கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்துசொட்டியது.

விலகிச்சென்றேன். இந்த தண்ணீரை இவர்கள் குடிப்பார்கள். கஞ்சா எல்லாவற்றையும் எரித்துவிடும். அப்பால் தீ தெரிந்தது. நாலைந்து தீச்சுடர்கள். மறுகணமே அது அரிச்சந்திர கட்டம் என்று புரிந்துகொண்டேன். என் கால்கள் நடுங்க ஆரம்பித்தன. திரும்பி நடந்தேன். மீண்டும் அவர்களைத் தாண்டிச்சென்றேன். அவர்கள் அப்போதும் உரக்கச் சிரித்துக்கொண்டிருந்தார்கள்

படித்துறையை விட்டு மேலே செல்லும் சந்துப்பாதையைப்பார்த்தேன். இங்கே குடிக்கத்தன்ணீர் இல்லை. மேலே சென்றாலென்ன. அங்கே ஒருகடையாவது திறக்கக் கூடும். ஆனால் அதற்கும் மனமில்லாமல் அங்கேயே அமர்ந்துகொண்டேன். லுங்கியை நன்றாகப்போர்த்திச்சுருண்டேன். நீர்வெளி என நினைத்துக்கொண்டு பனித்திரையையே பார்த்துக்கொண்டிருந்தேன். முகத்திரையிட்ட கங்கை.

நன்றாகவே தூங்கிவிட்டிருந்தேன். தூக்கத்துக்குள் நான் எங்களூரின் வெயில் மண்டிய வயல்வெளியில் நடந்துகொண்டிருந்தேன். அறுவடை நடந்துகொண்டிருந்தது. களியல் அறுவடைக்குழு வந்து வயலில் இறங்கிவிட்டார்கள். நூறுபேருக்குமேல் இருக்கும். நல்ல வெயில். வியர்த்து ஊற்றுகிறது. அவர்களுக்கு அது பொருட்டே அல்ல. ஆணும் பெண்ணும் பேசிச்சிரிக்கிறார்கள். ஒருத்தி இன்னொருவனின் கால்நடுவே கையால் அடிக்க அவன் அவளை அடிக்கப்போக மற்றவர்கள் வெடித்துச்சிரிக்கிறார்கள். வரப்பில் நின்று அப்புவண்ணன் அதட்டி கூச்சலிடுகிறார்.

என் மேல் ஏதோ பட நான் விழித்து எழுந்தேன். என்னைச்சுற்றி படித்துறை முழுக்க ஆட்கள். எனக்கு சுற்றும் கால்கள் ஓடிக்கொண்டிருந்தன. இளவெயில் பரவியிருந்தது. அத்தனை வெயில்வந்தபின்னரும் எப்படித் தூங்கினேன்? வெயில் அளித்த வெப்பத்தால்தான்போல. எழுந்து அமர்ந்து அந்தக்கூட்டத்தின் பரபரப்பை பிரமித்துப்பார்த்துக்கொண்டிருந்தேன்.படிகளில் குடைகள் நடப்பட்டிருந்தன. காலைவெயிலுக்குச் சாய்ந்த குடைகளுக்குக் கீழே பண்டாக்கள் அமர்ந்திருக்க முன்னால் குடும்பங்கள் அமர்ந்து பலிச்சடங்குகளைச் செய்துகொண்டிருந்தார்கள்.. ஒரேசமயம் அத்தனை சடங்குகளும் கண்ணுக்குப்பட்டபோது என்னசெய்கிறார்கள் என்பதே கண்ணுப்புப்படவில்லை

படிகளில் சிலர் மொட்டைபோட்டுக்கொண்டிருந்தார்கள். சிலர் இலைத்தொன்னைகளில் இட்லி சாப்பிட்டார்கள். சிலர் பைகளுடன் அமர்ந்திருந்தார்கள். சிலர் தோத்திரநூல்களை வாசித்தார்கள். பூக்குடலைகளுடன் படியிறங்குபவர்கள், தாலங்களில் என்னென்னவோ பொருட்களைக்கொண்டு செல்பவர்கள் குழந்தைகளின் கைகளைப்பற்றிக்கொண்டு கூட்டமாக இறங்கிச்செல்பவர்கள்…ஒரு சிறுகூட்டம் போலோ கங்காமாதாகீ ஜே என்று கூச்சலிட்டபடி இடித்துத்தள்ளிச்சென்றது. கீழே படித்துறையில் நூற்றுக்கணக்கானவர்கள் நீரில் இறங்கிக் குளித்துக்கொண்டிருந்தனர். வெளிறிச்சுருங்கிய கிழட்டு முதுகுகள்.சேலைகளை சுற்றி ஒட்டிக்கொண் பெண்முதுகுகள். தொந்திகள் விலா எலும்புகள், இளமையான குழந்தைத்தோள்கள். குளிரில் கூச்சலிடும் குழந்தைகள். கூசிச்சிரிக்கும் பெண்கள். சிரிக்கும் பற்கள். எச்சரிக்கைக் கூச்சல்கள்.

அப்பால் நதிமுழுக்க படகுகள் ஒன்றுடன் ஒன்று முட்டி நின்றன. தெப்பக்குளத்தில் பொரிக்காக வந்து முட்டிமோதும் சாம்பல்நிறமான பெரிய பொத்தைமீன்கள் போல. குடும்பங்கள் படகில் ஏறி கைகளைப்பற்றிக்கொண்டு தடுமாறிச் சிரித்து கடைசிப்படகில் ஏறினர். படகுகள் மெல்லத்திரும்பி நதிக்குள் சென்றன. உயரத்திலிருந்து பார்த்தபோது தேங்கிய சிறிய நிர் என தோன்றியது. ஆனால் பெரியபடகுகள் கூட விரைவிலேயே அதில் சிறிய பூச்சிபோல ஆயின. அப்ப்பால் மறுகரை தெரியவில்லை. ஒளியுடன் வானம் இறங்கியதுபோல மூடுபனி.

ஒரு படுகிழவரை நான்குபேர் தூக்கிக்கொண்டு வந்தார்கள். வற்றி உலந்து தொய்ந்த சுள்ளிக்கட்டு போலிருந்தார். சுருங்கிய கீழ்த்தாடை விழுந்தமையால் வாய் திறந்திருந்தது. பற்கள் இல்லாத ஓட்டைக்குள் நாக்கு பதைபதைத்தது. மூக்கு வளைந்து மேலுதட்டின்மீது நிழல் வீழ்த்தியது. இருகைகளையும் கூப்பி மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தார். சுருங்கிய கண்கள் கங்கையையே பார்த்துக்கொண்டிருந்தன. தலைவெடவெடவென ஆடியது

பெரிய குடும்பம். தூக்கிவந்தவர்களுக்கு சராசரியாக ஐம்பது வயதிருக்கும். மேலும் இளைஞர்கள், இளம்பெண்கள், மூத்தபெண்கள் ,குழந்தைகள். விதவிதமான பித்தளைப்போணிகள் துணிப்பைகள் பிளாஸ்டிக் பைகள் டிரங்குப்பெட்டிகள். கிழவரை அவர்கள் கொண்டுசென்று முதல்படியில் வைத்தார்கள். அவரது கால் கங்கையில் அரையடி மூழ்கியிருந்தது. அவர் கைகூப்பி கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார். பின்னர் திரும்பி ஒருவரிடம் கையை ஆட்டி ஏதோ சொன்னார். அவருக்கு புரியவில்லை. நாலைந்து முறை சொன்னதும்தான் புரிந்தது

அவரை இறக்கி நீரில் அமரச்செய்தார்கள். அவர் இருகைகளாலும் கங்கையை அள்ளி அள்ளிக் குடிக்க ஆரம்பித்தார். அவர்கள் சுற்றிலும் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒருவர் ’ஜெயஜெய கங்கா மாதே…’ என்றார். மற்றவர்கள் ஏற்று முழங்கினார்கள். தெலுங்கர்கள் என்று தெரிந்தது.

நான் கங்கையில் இறங்கினேன். நீர் இப்போது குளிராக இருந்தது. கடும் குளிர். உடலை நடுக்கி சதைகளை இழுத்து விரைக்கச்செய்த குளிர். ஆனால் ஏன் இத்தனைகுளிரிலும் தாகமெடுக்கிறது? தோலில் பட்ட நீர் உள்ளே உள்ள நெருப்பைத் தீண்டவில்லையா? என்னகுளிர்! யார் பாடிக்கொண்டிருப்பது? பஜனைக்கும்பல் பாடியபடியே படி இறங்கி வந்தது. மத்தளம் ஷெனாய் மணி…

அந்தக்கோஷ்டி பாடிக்கொண்டே இருந்ததைக் கேட்டேன். சில கணங்களில் முழுக்கவே விழிப்பு வந்துவிட்டது. எழுந்து நடந்து அவர்களை அணுகினேன். சற்றுத்தள்ளி நின்று பார்க்கையில் அவர்கள் ஒரே உடலாகவும் ஆகிவிட்டதுபோலிருந்தது. அமர்ந்தபடியே நடனமிட்டனர். பாட்டின் தாளத்துக்கு ஏற்ப முன்னும்பின்னும் நகர்ந்து தோள்களை குழைத்து ஆட்டி. வாத்தியங்களுக்கேற்ப அசைந்து. நெருங்கியபோது ஒவ்வொருவரும் அவர்களில் மூழ்கி இருப்பதும் தெரிந்தது

கோவர்தன் மே ராதே ராதே!
தான்கட்டி மே ராதே ராதே
முகார்பிந்த் பே ராதே ராதே
மோஜன் குண்ட்பே ராதே ராதே!

ராதே ராதே ராதே என்ற உச்சவேக உச்சாடனல் அவர்களைத் தூக்கிச் சுழற்றியது. எங்கெங்கோ வீசியடித்தது. பின்பு அவர்கள் ஒரேசமயம் அந்தச்சுழல்காற்றிலிருந்து நிலத்தில் உதிர்ந்தார்கள். சிவந்த கண்களை விழித்து அந்த இடத்தைப்பார்த்தார்கள். ஆர்மோனியம் மட்டும் தொடர்ந்து பாடியது. தவளை முட்டைகளை இணைக்கும் வெள்ளிச்சரடுபோல அதன் இசை. அந்த விரல்கள் ஆர்மோனியத்தில் தேடின. துழாவின. அது அவருடைய அக ஆழம். பெருமூச்சுகள். ஒருவர் ‘ஜெய் ராதேஷியாம்!’ என்று சொல்ல மற்றவர்கள் ‘ராதே ஷியாம்!’ என்றனர்

நான் அவர்களிடமிருந்த பிளாஸ்டிக் குடுவைக்காக கைநீட்டினேன். கரியமனிதர் புன்னகையுடன் அதை எடுத்து என்னிடம் நீட்டினார். நான் தூக்கிக் குடித்தபோது வாயை வைத்துக்குடி என சைகை காட்டினார். குளிர்ந்த துளசிநீர். கூடவே பச்சைக்கற்பூர வாசனை.நீர் என் விரல்நுனிகள் வரை குளிர்ந்து நிறைந்தது.

சட்டென்று கிழவர் ‘ பகு குங்குரு பாந்த் மீரா ..’ என்று உச்சத்தில் ஆரம்பித்தார். அனைத்து வாத்தியங்களும் பொங்கி அவரைச்சூழ்ந்துகொண்டன. அடுத்தவரியில் எல்லா குரல்களும் அவருடைய குரலின் கைகளைப்பிடித்து தொங்கி துள்ளிக்குதூகலித்து கூட ஓட ஆரம்பித்தன. நான் அருகே அமர்ந்துகொண்டேன். ‘மீரா கி பிரபு’ வந்தபோதுதான் அது மீராபஜன் என்று தெரிந்துகொண்டேன். பீம்பிளாஸி என நான் பின்னர் அறிந்த ராகம், ஒருவேளை நான் இறக்கும்போது கடைசியாக என்னிடம் எஞ்சும் ராகம், அப்போதுதான் என் முன் வந்து நின்றது

அதன்பின் இரவெல்லாம் அந்த பாடல்வெளியில் இருந்தேன். ஒட்டகம் நகரும் பெரும்பாலை மடிப்புகள், மௌனமாக உறைந்த பனிமலைகள், பெருக்கெடுத்தோடும் வண்டலாறுகள், சுமைப்படகுகள் வரிசையாகச்செல்லும் பெருநதிகள், அடுக்கடுக்காக சமைந்த பாறைமலைகள், வெயில் விரிந்த நிலங்கள், பசுமை பொழிந்த சமவெளிகள். நினைவுகள் இனித்தன. இருத்தலே இனித்தது. மரப்பெஞ்சுகள் ,குளிர்ந்த இரும்புச்சுவர்கள், இரும்பின் சீரான தாளம் அனைத்தும் இனித்தன

டேராடூன் வரை பாடிக்கொண்டே இருந்தார்கள். ரயிலின் வழிகள் அனைத்தும் அறிந்தவர்கள்போல ஒரு இடத்தில் கிழவர் ‘ஹரிபோல் ஹரிபோல்…போல் ராதாகிருஷ்ண முராரே!’ என்று கூவியதும் ‘ராதே ஷியாம்! சாந்த் ஷியாம்!’ என்று கூவி முடித்துக்கொண்டார்கள். கிழவர் மீண்டும் சப்பாத்திகளை எடுத்தார். எனக்கும் தந்தார் ஆனால் என்னால் சாப்பிடமுடியவில்லை. வேண்டாம் என்றேன்

கரிய மனிதர் என்னிடம் புன்னகைத்து ‘தமிழாளா கிருஷ்ணா?’ என்றார்

‘ஆமாம்’

‘நமக்கு நெல்லூர்… ’ என்றார் ‘எங்கே போறே கிருஷ்ணா?’

‘சும்மா…டேராடூன்’

’நம்ம பேரு பேரு ஆஞ்சநேய கவுடு’ என்றார்.

‘நீங்க எங்க போறீங்க?’

‘ஹரித்வார்….அங்கேருந்து அப்படியே போய்டே இருப்போம். ஜனவரி முடிய வரை கோயில்கோயிலா போறதுதான்…கிருஷ்ணார்ப்பணம்’

தன்னை விரஜர் என்று அவர் சொன்னார். அது எனக்குப்புரியாதபோது பாகவதிகள் என்றார். அதுவும் புரியாதபோது ராதிகாவைஷ்ணவி என்றார்.

‘நீங்கள் நாடோடிகளா?’

‘நான் தையல்வேலைசெய்றேன் கிருஷ்ணா…ஊர்மேலே மனைவி ரெண்டு குழந்தைங்க இருக்கு’

அவர்கள் அனைவருமே அப்படித்தான். ஆறுமாதம் ஊரில் தொழில் செய்வார்கள். பெரும்பாலும் கைத்தொழில்கள். ஒருவர் நிலக்கிழார் . ஒருவர் எண்ணைக்கடை வைத்திருந்தார். ஆறுமாதம் சம்பாதித்ததை எந்தச்செலவும்செய்யாமல் மனைவியிடம் கொடுத்துவிட்டு கிளம்பிவிடுவார்கள். ஊரிலிருக்கும் ஆறுமாதம் அவர்கள் ஆண். கிளம்பியபின்பு ஆறுமாதம் பெண். ராதை. கிருஷ்ணன் மட்டும்தான் ஆண். அவர்களெல்லாம் கிருஷ்ணனின் காதலிகள். பீதாம்பரம் உடுத்து நாமம் தரித்து வாத்தியத்துடன் கிளம்பி திருப்பதி சென்றால் அங்கெயே குழு சேர்ந்துவிடும். பண்டரிபுரம் காசி ஹரித்வார் முதல் உடுப்பி வரைச்சென்று முடிய ஆறுமாதம். அதன்பின் மீண்டும் குடும்பத்தினர்

‘எங்க சாப்பிடுவீங்க?’

’விரஜர்களுக்கெல்லாம் அல்லா எடத்திலயும் சோறு கிருஷ்ணா… எவ்ளோ மடம் இருக்கு….அன்னபூரணன் கல்யாணன் கிருஷ்ணன் இருக்கானே கிருஷ்ணா…’

இன்னொருவர் ‘சோறு இல்லாட்டி என்ன கிருஷ்ணா? ராமநாமமே பாயசம்.கிருஷ்ணநாமமே சக்கரை… .’அவர் கையைத்தட்டியபடி எழுந்து ஆடியபடி பாடினார்.

‘ராம நாம பாயஸக்கே கிருஷ்ண நாம சக்கரே
விட்டல நாம துப்பவ கலசி பாயி சப்பரிசிரோ !’

மற்றவர்கள் கைதட்டி பாடினார்கள். நல்ல குண்டு மனிதர். தொப்பை ததும்பியது. ஆனால் கைவீசலில், இடைநெகிழ்வில் பெண்மை நிறைந்திருந்தது

ஆனந்த ஆனந்தவெம்போ டேகு பந்தாக எரடு டேகு பந்தாக
ஆனந்த மூர்த்தி நம்ம புரந்தர விட்டலன நெனெயிரோ !

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் என்று எனக்குக் கேட்டுக்கொண்டே இருந்தது. அவர்களில் ஒருவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. உதடுகள் துடித்தன.

ரயில் டேராடூனில் நின்றபோது அவர்கள் வாத்தியங்களை எடுத்துக்கொண்டு இறங்கினார்கள். இளவெயில் விரிந்த ரயில்நிலையத்தின் இன்னொரு ரயிலுக்கான கூட்டம் வந்துகொண்டிருந்தது. நான் அவர்களுடன் செல்ல நினைத்தேன். ஆனால் அவர்கள் அப்படி சேர்த்துக்கொள்ளமாட்டார்கள் என்று உடனே தெரிந்தது.

கவுடு என்னிடம் ‘என்ன கிருஷ்ணா?’ என்றார் ‘ஊரே விட்டு வந்துட்டியா?’

‘ஆமா’ அவர் என்னை அழைக்கப்போகிறார் என்று நினைத்தேன்.

’தட்டுலே பாயாசம் வெச்சு சாப்பிடு கிருஷ்ணா… தட்டு இல்லேண்ணா பாயசம் ஓடிரும். பாயாசமில்லாத வெறும் தட்டு உதவாது….’ கிழவரைச் சுட்டிக்காட்டி ‘குரு சொல்வார்…தட்டை திங்காதே. தட்டைப்பழிக்கவும் செய்யாதே. …கிருஷ்ணமதுரம் வெள்ளித்தட்டிலேதானே இருக்கணும்?’

எனக்கு மூச்சடைப்பது போலிருந்தது. அவரது கைகளைப்பற்றிக்கொள்ள விழைந்தேன்.

‘கிருஷ்ணார்ப்பணம்…வரட்டா? ராதேஷியாம்!’

‘ராதே ஷியாம்…’ என்றேன்.

மூட்டைகளை இறக்கியதுமே கிழவர் ’குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!’ என்று உச்சக்குரலில் ஆரம்பித்தார். அத்தனைபேரும் சேர்ந்துகொள்ள மொத்த ரயில்நிலையமே திரும்பிப்பார்த்தது. மூன்றுபேர் அதற்கு மென்காற்று பட்ட தென்னை ஓலை போல நடனமிட்டார்கள். மற்றவர்கள் சூழ்ந்துகொண்டு பாடினார்கள். அப்படியே மிதந்து விலகிச் சென்றார்கள்.

.

முந்தைய கட்டுரைஅமைப்பாளர் அறிவிப்பு
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுருஷன்