ஆசிரியருக்கு ,
ஓட்டப்பந்தயத்தில் வெடி சத்தத்திற்கு முன்னால் உள்ள கணங்களும் , நீச்சலில் குதிப்பதற்கு முன்னால் உள்ள கணங்களும் சில வினாடிகள் தான் என்றாலும் , நாம் எண்ணுவதைவிட முக்கியமானவை, போட்டியில் நமது இடத்தையே தீர்மானிப்பவை . இக்கணத்தில் செய்ய வேண்டியவை குறித்து பயிற்சியும் திட்டமிடலும் பெரும் பங்கு வகிக்கும் , அக் கணங்களில் நமது மன நாடகமும் உச்சகட்டமானவை. பல முறை அடையாள வெடி சுடுவதற்கு முன்பே சில வீரர்கள் ஓடத் துவங்குவதையும், எச்சரிக்கப் பட்டு மீண்டும் போட்டி துவக்கப் படுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். துவக்க கணங்கள் அவ்வளவு எடை கூடியது. எய்யக் காத்திருக்கும் நாண் அது, எய்த பின் கேட்கும் விசையொலி எய்பவனுக்கு முன்பே கேட்கும்.
புறப்பாடும் அவ்வாறே , நாட்கள் சில தான் (நான்கு மாதங்கள்) என்றாலும் அவ்வயதில், அந்நாட்கள் சூடேறியவை , ஒரு ஆயுள் அனுபவம் சில மாதங்களில் வாய்க்கப் பெறும். புறப்படும் முன்பே புறப்பட்ட பின் உள்ள வாழ்வையும் சாவையும் நாம் மனதில் முழுமையாக ஒரு வாழ்வு வாழ்ந்திருப்போம். நம்மில் வெளியேற உத்தேசிக்காதவர்களோ, தற்கொலைத் திட்டம் இடாதவர்களோ, அதன் பிறகான உலகத்தை கற்பனை செய்யாதவர்களோ அனேகமாக இல்லை எனலாம்.
இந்த நான்கு மாதங்களுக்குள் எவ்வளவு நிலங்கள்- மலை ,வனம் , சாக்கடை , தேரிக்காடு என . எவ்வவளவு மனிதர்கள் – விடுதி நண்பர்கள், தோழர் , கையீரம் தாய், பசு, பன்றிகள் என . எவ்வளவு அனுபவம் – கட்டிடப் வேலை ,எழுத்து , திரை அரங்கு,கல்லூரி , நாகமணி துரத்தப் படுத்தல் என.
எல்லாவற்றிற்கும் மேல் என்னவொரு தரிசனம் -( ’எனக்கு என்ன தோணுது தெரியுமா? அவனையும் உம்மையும் கர்த்தருக்கு ஒரேமாதிரித்தான் பிடிக்கும்’- கோயில் கொண்டிருப்பது)
இதில் உள்ள கனவும் –
(‘எனக்கு வெள்ளத்தில முங்கிப்போற மாதிரி இருந்தது. சூடான வெள்ளம். மூக்கும் வாயும் எல்லாம் வெள்ளம் கேறிப்போச்சு. அப்பமாக்கும் கைய நீட்டி உனக்க காலைப் பிடிச்சேன்… தலைக்குமேலே நீங்க ரெண்டாளும் நீந்தி போனிய..’
‘ரெண்டாளும்னா? ஆரு?’
ஜான் குழம்பி அவன் சொன்னதை அவனே கவனித்து என்னைப்பார்த்தான். பின் பார்வையைத் திருப்பி. ‘நீயும் மேரியும்’ என்றான்- கருந்தீண்டல் )
அசலும்- (“மொத்த நகரையும் பின்பக்கம் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். நூற்றுக்கணக்காக வீடுகளின் பின்பகுதிகள். கதவோ சன்னலோ அற்ற சிமிண்ட் பரப்புகள். செங்கல்பரப்புகள். ஓலைத்தட்டிப்பரப்புகள். எல்லா வீடுகளும் அப்பகுதியை அருவருத்து திரும்பிக்கொண்டவை போலிருந்தன. வீடுகளின் அந்தரங்கக் கழிவுறுப்புகள் போல ஓட்டைகள் திறந்திருந்தன”- துறக்கம்)
வாசிப்பவனுக்கு ஒரு நிகர் வாழ்வைத் தருவது உறுதி . துறக்கம் படிக்கும் போது என் மீதே சேரும் சகதியும் அப்பிக் கொண்டன. எப்போது தான் எனக்கு குளிக்க சந்தர்பம் கிடைக்கும் என அடுத்த வரி அடுத்த வரியாகப் பாய்ந்து கொண்டிருந்தேன் , ஒரு கிழவி ஒரு குளத்தை அடையாளமாகச் சொல்லும் போது சற்று ஆசுவாசப் பட்டேன், அச்ச உணர்வை விட அருவருப்பு மேலோங்கியது, என்றாலும் குளிக்காமல் அப்பகுதியை விட்டது ஏமாற்றமளித்தது.
இத்தொடரில் நேரடியான பட்டென மிளிரும் வரிகள் , வாக்கியங்கள் இல்லை , ஆனால் ஓடும் தெளிந்த நீரோடையில் வெட்டியெடுக்கப் படாத பட்டை தீட்டப் படாத பளபளக்கும் வைரம் மெளனமாக ஒளிர்கிறது.
புறப்பாடு (I) – ஆயத்தம் பயணத்தை விடப் பெரிது.
-கிருஷ்ணன்
8
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
அறம் வரிசை கதைகள்
விஷ்ணுபுரம்
புறப்பாடு
இவை மூன்றும் என்னை தூக்கி வேறு உலகுக்கு செலுத்தியது போல வேறு எந்த எழுத்தும் ஆட்கொண்டதில்லை.
புறப்பாடு முதல் தொகுப்பில் வரும் என்று நான் நினைத்த பகுதியை நேற்று தான் படிக்க நேர்ந்தது. (லிங்கம்)
மிகவும் சிறப்பாக இருந்தது.
இந்த மூன்றில் புறப்பாடு தான் மிகப்பெரிய தாக்கத்தை என்னுள் ஏற்படுத்துகிறது. புறப்பாடு அதன் நேரடித் தன்மையினால் பட்டவர்த்தனமாக என்னுள் அறைகிறது.
இன்னும் இது குறித்து நிறைய எழுதலாம். ஆனால் உள்ளே ஏற்படும் அனுபவத்தை சொற்களால் வடிக்க முடியவில்லை; வடித்தால் அது சாதாரணமாக ஆவதால் அந்த அனுபவத்தை ஒரு விதத்தில் கொச்சைப்படுத்துவது போல தோன்றுகிறது.
மேலும் உங்களை இந்த மாதிரி ஈமெயில் வாயிலாக தொந்தரவு செய்யக் கூடாது. நீங்கள் தான் எழுதணும். நான் படிக்கணும். அது தான் ஞாயம். அது தான் நல்லூழ்
ஸ்ரீதர்
88
அன்பின் ஜெ எம்.,
தோழனின் மரணம் இளமையில் உங்களை ஆழமாகப்பாதித்ததைப்பலமுறை நீங்கள் குறிப்பிட்டுப்படித்திருக்கிறேன்; அந்தத் தோழனுடன் கொண்ட நட்பையும் அவனது மரணத்தின் தாக்கத்தையும் விவரிக்கும் புறப்பாட்டுப்பதிவுகள்-லிங்கம்,எள்- மயிர்க்கூச்சலிடச்செய்து விட்டன.
உங்கள் இழப்பின் ஆழத்தை…, அந்தக்கணத்தில் உங்களுக்குள் நேர்ந்த ஒவ்வொரு நொடியின் வேதனையையும் வெகு துல்லியமாக- மிகவும் கூர்மையான நுணுக்கத்துடன் காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள்.
அத்தகைய அனுபவங்கள் , பலருக்கும்- ஏன் எல்லோருக்குமே ஒவ்வொரு வகையில் நேர்ந்திருந்தாலும் கூட- அவரவர் இழப்புக்களை அசைபோட்டுப் பயணிக்க முடிகிற வகையில் வாசிப்பவர்களுக்கு அவற்றைக்கடத்த முடிவது உங்கள் எழுத்தால் சாத்தியமாகிறது.
தங்கள் வாழ்வில் இது போல் இழப்பால் பெற்ற அனுபவங்களையெல்லாம் ஒருசேர நினைவுகூர வைத்துக் கலங்கடித்து விடுகிறது புதிய புறப்பாடு…
எம் ஏ சுசீலா