புறப்பாடு II – 6, நீர்கங்கை

அறையுடன் இணைக்கப்பட்ட கழிப்பறை என்பதை பண்பாட்டுரீதியாக ஏற்றுக்கொள்ள எனக்கு பத்தாண்டுகள் தேவைப்பட்டன. என் பாட்டி நாகர்கோயிலில் அத்தைவீட்டுக்கு ஒரு சிகிழ்ச்சைக்காகச் சென்றவள் மறுநாள் காலையில்தான் சமையலறையை ஒட்டியிருந்த பூசையறைபோன்ற அமைப்பு மலம்கழிப்பதற்குரியதென்பதைக் கண்டுகொண்டாள். உள்ளே சென்றபோதும் அவளுக்குப்புரியவில்லை. சோறுபோட்டுச் சாப்பிடலாம் போலிருந்த பீங்கான் பாத்திரத்தில் மலம் கழிக்கவேண்டும் என்ற தகவல் சொல்லப்பட்டதும் ’அய்யோ பகவதீ ’ என்று வெளியே பாய்ந்துவிட்டாள். அந்த மலம் எங்கே செல்லும் என்று கேட்டால் வீட்டுக்கு அடியிலேயே ஒரு கிணற்றுக்குள் என்றார்கள். குடிநீர் அதனருகே இன்னொரு கிணற்றிலிருந்து வருகிறது.

‘அய்யய்யோ….திங்கிறதும் வெளிக்குப்போறதும் பக்கத்தில பக்கத்தில…அங்க குசுவிட்டா இங்க சோறு திங்கிறவனுக்குக் கேக்குமாம்…’ என்றாள் பாட்டி. ‘இனி ஒரு நிமிஷம் என்னால இங்க இருக்கமுடியாதுன்னு சொல்லிட்டேன்….அப்பமே எனக்க சஞ்சிய எடுத்துட்டு எறங்கிட்டேன்ல?’ அதன்பின் உயிர்வாழ்ந்த காலம்வரை சொல்லிக்கொண்டிருந்தாள் ‘பீக்க மேலே இருந்து ஒரு சீவிதம்…நமக்கு வேண்டாமே’

வேதாந்தியும் வைத்தியருமான பெரியப்பா சொன்னார். ‘அதிப்பம் எளையம்மே, மனுஷ சரீரமும் அதுபோலல்லா? இல்ல சொல்லுதேன். நம்ம குடலிலே மேலே சோறு கீளே மலம். எல்லாம் ஒரு பெட்டிக்குள்ள வச்சுல்லா மூடியிருக்கு?’

‘எறங்கிப்போடா குருத்துவம்கெட்ட நாறி…..டேய் மனுஷனுக்குள்ள சத்தையும் அசத்தையும் பிரிக்கதுக்கு ஆத்மாண்ணு ஒண்ணு இருக்கு….டேய், அது சாட்சாத் பரப்பிரம்மமாக்கும்…’

‘பரப்பிரம்மத்துக்கு எல்லாம் ஒண்ணுதானே எளையம்மா’

‘நீ படிச்ச வேதாந்தத்தை கொண்டுபோயி வேவிச்சு தின்னுடா மோந்தையா…வந்துட்டன். டேய் பரப்பிரம்மரூபமா இருக்கக்கூடிய எதுக்கும் அன்னமும் மலமும் ஒண்ணுதான்.தீய விட்டா ரெண்டையும் கொளுத்திச் சாம்பலாக்கும். ரெண்டும் விபூதியாயிரும். ரெண்டையும் நுள்ளி நெத்தியிலே போடலாம்….பரப்பிரம்மமா நிண்ணு எரியுற வரைக்கும் அன்னத்த தின்னுற ஜீவி மலத்த தின்ன முடியாது பாத்துக்கோ’

‘மண்ணில எல்லாமே அன்னமாக்குமே…மலம் வேற சில சீவனுகளுக்கு அன்னம்’

‘டீ வெசாலமே இந்த நாயிக்கு ஒரு எலைபோட்டு பீய வெளம்புடீ….’

அந்தப்புள்ளியில் பேச்சு அவிந்தது. பெரியப்பா ‘குருவாயூரம்பல நடையில் ஒருதிவசம் ஞான் போகும்’ என்று பாடியபடி வெற்றிலையை எடுத்து நரம்பை நுணுக்கமாக உரித்து எடுக்க ஆரம்பித்தார். நரம்புகளை ஒரே வலையமைப்பாக முழுமையாகவே கீறி எடுப்பது அவருக்குப்பிடிக்கும்.

மும்பையில் அன்று கழிப்பறைகளையே அட்டாச்மெண்ட் என்றுதான் சொல்வார்கள். ‘இங்க தாராவியில எங்கியும் அட்டாச்மெண்ட் கெடையாது பாத்துக்க…தோதுபோல போகவேண்டியதுதான்’ என்றார் மாதவண்ணன்

எனக்குப்புரியவில்லை. ‘என்ன போறது?’

மாதவண்ணன் புரிந்துகொண்டு விளக்கினார். கழிப்பறை என்பது வெளியே ரயிலடியோரம் செல்லக்கூடிய ஒரு பெரிய திறந்த சாக்கடைதான் என்று.மையமாகத் தலையசைத்தேன். அதுவரை அதைப்பற்றி யோசித்ததே இல்லை

‘பாம்பேயில திங்கிறது ஈஸியாக்கும். திண்ணத வெளியத்தள்ளுகதுக்கு பாடுண்டு’ என்றார் ஜார்ஜ்.

மறுநாள் அதிகாலை அவர்தான் எழுப்பினார். மாதவண்ணனுக்கு அதிகாலை வேலை என்பதனால் அவர் இல்லை. ‘இஞ்சபாரு, இருட்டுக்குள்ள போனாத்தான் மானமா திரும்பி வரமுடியும் பாத்துக்க…கெடந்துறங்கினா பின்ன பஸ்ஸ்டாண்டுக்கு போகணும். பஸ்ஸுக்கூலியும் அங்க பீக்கூலியும் எல்லாம் செலவு…’

பீக்கூலி இல்லாமல் அங்கிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட சந்துகளில் வாழும் மொத்தக்கூட்டமும் அப்பகுதியை வளைத்துச்சென்ற சாக்கடையைத்தான் பயன்படுத்தினார்கள்.அதன்மீது பல பாலங்கள். பாலங்கள் என்று சொல்லமுடியாது. ஓடையைக் கடந்துசெல்லும் குழாய்கள் அவை. தண்ணீர்க்குழாய்கள், தொலைபேசிக்குழாய்கள், வேறு ஏதோ சில குழாய்கள். பெரிய இரு குழாய்களில் ஆண்களும் சிறிய குழாய்களில் பெண்களும் போகலாமென்பது நடைமுறை விதி.

தண்ணீர்க்குழாய் மட்டும்தான் இரட்டையாக இருந்தது, ஆகவே காலுக்குச் சமநிலை இருக்கும். மற்றவை நடந்துநடந்து வழுவழுப்பான வளைவான பரப்புகள். கீழே இரண்டாள் உயரத்தில் கெட்டியான தார் போல சாக்கடை. அங்கே அதன் அகலம் அதிகரித்தமையால் கிட்டத்தட்ட தேங்கி நின்றது. அதன் கரிய சதுப்பிற்குள் சில கரிய ஓடைகள் வளைந்து வழிந்தோடிக்கொண்டிருந்தன. பாலிதீன்குப்பைகள், பலவிதமான பிளாஸ்டிக் பொருட்கள் மிதந்து கிடக்க கரையோரமாக பன்றிகள் உறுமி முட்டிமோதிக்கொண்டிருக்கும்.

இரண்டாள் ஆழமிருக்கும். சென்ற வருடம் அதில் ஒரு பெண் விழுந்து அப்படியே உள்ளே சென்றுவிட்டாள் என்றார் ஜார்ஜ். தீயணைக்கும்படை வந்து கொக்கிபோட்டு அவளை வெளியே எடுத்தார்கள். ‘மனுஷப்பண்ணிய அன்னைகுத்தாலா பாத்தேன்…கறுப்பாட்டு இருந்தா’

அதைச்சொன்னபின் அவர் குழாயின் விளிம்போரம் அமர்ந்துகொண்டார். அவ்வளவு வெளிச்சமிருக்குமென நான் எதிர்பார்க்கவில்லை. சாலைவிளக்குகளின் வெளிச்சம். வானம்கூட செவ்வொளியுடன் இருந்தது.

‘விடிஞ்சுட்டுதோ?’

‘இங்க பாம்பேயில எப்பமும் வானம் செவப்பாத்தான் இருக்கும்’

‘ஏன்?’

‘என்னமோ இங்க செஞ்சு வச்சிருக்கானுக…பணக்காரனுக்கு பிடிச்சிருக்குமோ என்ன எளவோ’

நான் அமரப்போனேன். கால்தடுமாற அக்கணத்தில் உள்ளே இருந்த ஒன்று பதறி எதை எதையோ பற்றிக்கொண்டது.

‘பாத்து’

‘ம்’

அவர் அந்தப்பெண்ணைப்பற்றிச் சொன்னது அப்போது எரிச்சலாக இருந்தாலும் அதைச் சொல்லியிருக்காவிட்டால் அவ்வளவு எச்சரிக்கையாக இருந்திருக்கமாட்டேன் என்று தோன்றியது

‘அந்தக்குட்டிக்க லவ்வறு நமக்க ஆப்பீஸிலே ஃபிட்டறாட்டு இருந்தான்’

‘எந்தக்குட்டிக்க?’ என்று கேட்டதுமே புரிந்துகொண்டேன்

‘இவன் ஆந்திராக்காரன். ராமப்பாண்ணு பேரு. அவ கோவாக்காரி…எங்கயோ டைப்படிச்ச்சிட்டிருந்தா… நல்ல செவப்பா இருப்பா…மூக்கு நீளமாட்டு இருந்தாலும் பய அவளுக்க மேலே கிறுக்காட்டு அலைஞ்சான். அஞ்சர மணியானா ஆளு பறந்திருவான். ரோட்டு முக்கில போயி நிக்கது. அவ வந்ததும் ரெண்டாளுமாட்டு பஸ்ஸிலே கேறிப்போறது. இங்க லவ்வு செய்யுகதுக்குள்ள வளி பஸ்ஸிலே கேறி நாலு சுத்து சுத்தி எறங்குறதாக்கும்…வேற எங்கயும் எடமில்லல்லா?’

‘ஓ’

‘குட்டிய கிரேன வச்சு தூக்கி எடுக்கத வந்து பார்த்தான். கறுத்த பீயிலே முக்கி எடுத்து ரோட்டிலே போட்டிருக்கு…பெத்த அம்மைகூட அஞ்சடி தள்ளி நிண்ணுதான் எனக்க பொன்னுமோளேண்ணு அவிய பாசையிலே கரையுதா. இவன் அலறிகிட்டே ஓடிவந்து அப்பிடியே நிண்ணுபோட்டான். அந்தால திரும்பிப்போனான்…. ஏளெட்டுநாள் ஆளைக்காணல்ல. பிறவு சோலிக்கு வந்தான். களண்டுபோச்சுல்லா?’

‘பின்ன?’

‘இப்பமும் வட்டாத்தான் இருக்கான். என்னமாம் பேசிக்கிட்டே இருக்கது, சிரிக்கது. திரும்பித்திரும்பி பாக்குதது… இனியவன பரிசித்த ஆவி நினைச்சாத்தான் ரெட்சிக்கமுடியும்…’

எப்படியும் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கே மலம் கழித்தார்கள். காலையில் நூறுக்கும் குறையாமல் அதில் அமர்ந்திருப்பார்கள். ஆண்கள் சிகரெட்டோ சுருட்டோ இழுத்துக்கொண்டிருப்பார்கள். சிலர் கனைத்துக்கொண்டும் முனகிக்கொண்டும் இருக்க பெரும்பாலானவர்கள் ஆழ்மான தியானத்திலிருப்பதுபோலத் தோன்றும். குழாய்க்கு பிடிப்பு ஏதுமில்லை. ஆகவே முன்னால் நன்றாகக் குனிந்துகொண்டால்தான் சமநிலை ஏற்படும். சிலசமயம் அந்த இடைவெளிகள் வழியாகச் சிலர் மறுபக்கம் உள்ள ரயில்நிலையத்துக்குச் செல்வார்கள். மாப் கரோ…மாம் கரோ என்று சொல்லிக்கொண்டு அமர்ந்திருப்பவர்களின் தலையை தொட்டுத் தொட்டு மறுபக்கம் சென்றுவிடுவார்கள்.

நான் ஓரிருமுறை தூங்கிப்போய் தாமதமாகிவிட்டேன். பேருந்துநிலையத்தில் உள்ள கழிப்பறைகளில் எந்நேரமும் பெருங்கூட்டம். மிகச்சிறிய அறைகள். குண்டானவர்கள் அமர்ந்தால் நான்குபக்கமும் சுவர்கள் உடலில் முட்டும். சுவர்கள் முழுக்க எச்சில்கோழையும் அழுக்கும் கலந்த சளி பரவியிருக்கும். மூலைகளில் எச்சிலோடு குவிந்த சிகரெட் குச்சிகள். மலத்தொட்டியில் மலம் கீழே இறங்குவதேயில்லை. அப்பால் அதன் செரிமானத்தொட்டி நிறைந்திருக்கும் போல.

பெரிய அபாயம் வெளியே கழுவுவதற்காக உள்ள காக்கிக் கால்சட்டை அணிந்த மனிதர் தொட்டியில் தண்ணீரை அள்ளி அனைத்துக்கழிப்பறைகளுக்கும் சேர்த்து வீசுவதுதான் சகல மலினங்களும் சேர்ந்து நம் காலை நோக்கி வரும். உடனே எழுந்துவிட்டால் மேற்கொண்டு படாமல் தப்பிக்கலாம். கழிவுத்தொட்டி குபுக் என மேலே எழுந்துவரும்.

அதிகபட்சம் மூன்றுநிமிடம். அதற்குள் வெளியே கதவைத்தட்ட ஆரம்பித்துவிடுவார்கள். ‘அரே பையா…சோட்டூ…பையா…ஜல்தி கரோ…அரே ஜல்தி பாய்’

‘ஒண்ணு பாத்தா ஆச்சரியம்தான். இந்த மண்ணு அம்புட்டையும் சீரணிச்சுட்டுல்லா இருக்கு?’ என்றார் மாதவண்ணன்

‘எங்க சீரணிக்குது? அதுக்கு புளிச்ச ஏப்பம் வந்தாச்சுவே….நம்ம போர் வெள்ளத்தை கையிலே எடுத்து மோந்துபாரும்…’

உண்மைதான். ஆயிரக்கணக்கான கழிப்பறைத்தொட்டிகளும் சாக்கடை ஆறுகளும் மண்டிய நிலத்திலிருந்துதான் கிணற்றுநீரும் வந்தது. அள்ளி முகர்ந்தாலே சாக்கடை மலநாற்றம் அடிக்கும். அதில்தான் குளியல் துணிதுவைப்பது எல்லாமே. அதைத்தான் குடிக்கவும் வேண்டும். அதில் நன்னாரி வேரைப்போட்டுவிட்டால் நன்னாரி வாசனையைக்கொண்டு குடித்துவிடமுடியும்.

மும்பையில் வந்திறங்கியபோது எனக்கு எல்லாமே அருவருப்பாகத்தான் இருந்தது. எங்கும் ஒருகணம் கூசிச்சுருங்கிவிட்டு கண்ணைமூடிக்கொண்டு உள்ளே சென்றுவிடுவேன். ஆனால் மாதவண்ணன் உட்பட அத்தனைபேருக்கும் எதிலும் எந்த தயக்கமும் இல்லை. மொத்த மும்பையே அருவருப்பு என்ற உணர்ச்சியை முழுமையாகவே துறந்துவிட்டிருந்தது. தரையில் என்ன கிடக்கிறதென்று பார்த்துக்காலெடுத்துவைக்கக்கூடிய ஒரே மும்பைவாசி நான் என்று நினைத்துக்கொண்டேன்

அதன்பின்புதான் ராவை அறிமுகம்செய்துகொண்டேன். என் அலுவலகத்துக்கு ஒட்டிய அலுவலகம் அவருடையது. அவரது உரிமையாளர் ஒரு குஜராத்தி. சூரத் துணிகளுக்கான தரகுவணிகமோ ஏதோ செய்தார். அலுவலகத்தில் ராவ் மட்டும்தான் இருப்பார். அவர்தான் மேனேஜர். ஒரு பையன் உதவிக்கு இருப்பான். மும்பையில் எல்லா சின்னப்பையன்களும் சோட்டுதான்.

ராவ் ஐம்பதுவயதான கன்னட பிராமணர். சுண்ணாம்புக்கல்லில் செதுக்கப்பட்டவர் போல இருப்பார். மெல்லிய சிவந்த உதடுகள் ஒடுங்கிய மூக்கு நீளமான கழுத்து. வெள்ளைக்காரர் இல்லை என்று தெரிவிப்பவை உடலசைவுகள் மட்டுமே. மெலிந்த சிறிய மனிதர் சோப்புநுரை போன்ற .நரைத்த தலைமயிரை பக்கவாட்டில்வகிடு எடுத்துச் சீவியிருப்பார். மீசையற்றமேலுதடும் கன்னங்களும் களிம்புப்பச்சை நிறத்தில் இருக்கும்.

ராவ் எப்போதுமே வெள்ளைச்சட்டை, வெள்ளை பாண்ட்தான். சட்டையை உள்ளே இழுத்துவிட்டு கறுப்பு பெல்ட் கட்டியிருப்பார். முழுக்கையில் பித்தான்களைப்போட்டு மேலே வாட்ச் கட்டியிருப்பார். எப்போதுமே கருப்புநிறமான ஷூக்கள் பளபளவென்றிருக்கும். தினமும் பாலீஷ்போடாமல் அப்படி வைத்திருக்கமுடியாது. சட்டையில் காலரின் பித்தான்களைப்போடக்கூடியவராக அவரைத்தான் நான் முதலில் கண்டேன்.

ராவ் சைக்கிளில்தான் வருவார். அதை எங்கள் அலுவலகத்தின் பக்கவாட்டுத்திண்ணையில் நிறுத்துவார். அவரது அலுவலகத்தில் இடமில்லை. பளபளப்பாகத் துடைக்கப்பட்ட சைக்கிள் பலவகையான குஞ்சலங்கள் அலங்காரங்களுடன் பூம்பூம்மாடு போலிருக்கும். எங்கள் அலுவலகத்தில் குண்டூசி பசை முதலியவற்றை வாங்குவதில்லை. சைக்கிள் நிறுத்துமிடத்துக்கான வாடகைபோல நான் ராவிடம் சென்று அவற்றை வாங்கி வருவேன்.

ராவ் அதிகம் பேசுபவரல்ல. என்னிடம் உபரியாக ஒரு புன்னகை உண்டு. நான்தான் சளசளவென ஏதாவது பேசுவேன். அதிகமும் அன்று உருவாகி வந்த ராஜ்குமாரின் கன்னடதேசிய அரசியலைப்பற்றி. ராவுக்கு அரசியல் கருத்துக்கள் இல்லை. சொல்லப்போனால் கருத்துக்களே இல்லை. ‘ஔதுரீ’ என்று மட்டும் சொல்வார். தமிழ் அவருக்கு நன்றாகவே புரியும். அவரது அம்மா நாமக்கல்காரி.

ராவின் அலுவலகமே அச்சமூட்டும் ஒழுங்குடன் இருக்கும். ஒவ்வொன்றும் அதனதன் இடத்தில் கச்சிதமாக அடுக்கப்பட்டிருக்கும். நாளுக்கு பத்தாயிரம் வாகனங்கள் செல்லும் புழுதிச்சாலையோரம் அவரது அலுவலகத்தில் எதிலுமே தூசுப்படலம் இருக்காது. எங்கள் அலுவலகத்தில் எல்லா பரப்பிலும் தொலைபேசி எண்களை விரலால் எழுதிவைக்கமுடியும். நான் ராவிடம் அதைப்பற்றிச் சொன்னேன். ‘ஔதா?’ என்றார்

மும்பையில் ஜூன்மாதம்தான் மழைக்காலம். ஆனால் அந்தவருடம் டிசம்பரிலேயே பெருமழை. நான்கண்ட முதல் மழை. எங்களூர் இடவப்பாதி கொடுமழையை விட மும்மடங்கு பெரிய பொழிவு. கூரைகள் அருவிகளாக மாறின. நகரமே கரிய தார்ப்பாயால் போர்த்தப்பட்டதுபோல இருண்ட மேகங்களால் மூடப்பட்டது. மொத்த நகரும் ஒரு பெரும் சாக்கடையாக ஆகிவிட்டிருந்தது. எங்கள் குடிசைகளுக்குப்பின்னால் இருந்த சாக்கடை திடீரென்று ஆறாக மாறிவிட்டது. பின்னர் அது நதியாகியது. எங்கள் சந்து ஒரு துணைநதியாக உருவெடுத்து கன்னங்கருமையாக பலவிதமான பிளாஸ்டிக் குப்பைகள் மட்கிய துணிகள் செத்த எலிகள் என பெருகிச்சென்றது

நினைத்ததுபோலவே இரண்டாம்நாள் தண்ணீர் ஓடுவது நின்று பக்கவாட்டில் நீர் பரவ ஆரம்பித்தது.மூன்றாம் நாள் சாக்கடைநதியில் இருந்து நீர் தெருவுக்குள் ஏறிவரத்தொடங்கியது. எங்கள் குடிசையின் வாசல்விளிம்புவரை நீர் வந்து முட்டிமுட்டிச் சுழித்தது. தரை சில்லென்றாகி நீரில் படுத்திருப்பதுபோல உணர்ந்தேன். நள்ளிரவில் மிகவும் குளிர்ந்தது. ஜார்ஜ் எழுந்து மெழுகுவத்தியை ஏற்றினார். எங்கள் குடிலுக்குள் சாக்கடைநீர் பரவியிருந்தது. அதில் எல்லாருமே நனைந்துகொண்டு படுத்திருந்தோம்

பெட்டிகளை தூக்கி மேலே பரண்மேல் வைத்துக்கொண்டோம். ஒருமணிநேரம் என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்துவிட்டு மாதவண்ணன் ஒரு வழி கண்டுபிடித்தார். இரண்டு தகரப்பெட்டிகளை காலி செய்து மற்ற பெட்டிகளில் அடைத்துவிட்டு அவற்றை செங்குத்தாக நீரில் நிறுத்தி சன்னல் பலகையைப் பெயர்த்து அவற்றின் மீது பெஞ்சுமாதிரி வைத்தார். பெஞ்சிலேயே அமர்ந்து கொண்டோம். பலகை நன்றாக வளைந்திருந்தது. கீழே கரியசாக்கடை நுரைத்துச் சுழித்துச் சென்றது.

நான் கால்களைத்தூக்கி மேலே வைத்துக்கொண்டேன். உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிவிட்டேன். சளசளவென ஒரு பெருச்சாளி எங்களை நோக்கி வந்தபோது ஜார்ஜ் அவரது பெரிய பூட்ஸை எடுத்து அதை அடித்தார். ளிளிளி என்ற ஒலியுடன் நீரில் மல்லாந்து பின் மூழ்கி சற்றுத்தள்ளி எழுந்து நீந்திச்சென்றது. அப்பால் இன்னொரு பெருச்சாளி சுவர் ஓரமாக நீந்தி மேலே ஏற முயன்றுவிழுந்துகொண்டிருந்தது

மறுநாள் அனைவரும் ரயில் நிலையத்திற்குச் சென்று அங்கேயே பகலையும் இரவையும் கழித்தோம். அங்கே ஏராளமானவர்கள் இருந்தார்கள். ஆங்காங்கே அமர்ந்தும் சாய்ந்தும் தூங்கவேண்டியதுதான். நின்றுகொண்டிருந்த ரயில்களில் ஏறி மலம்கழித்தோம். மழை நின்றபோது நீர் வடிந்து தெரு சற்று தெரிய ஆரம்பித்தது. மாதவண்ணன் தொலைபேசியில் விடுப்பு கேட்டபோது அங்கே வசைபாடினார்கள். ஜார்ஜுக்கும் சென்றாகவேண்டும்

திரும்பவந்தபோது வீடுமுடுக்க கரியசேறு களி போலப்பரவியிருந்தது. கணுக்கால் வரை அதில் புதைந்தது. ஆளுக்கொரு அட்டையையும் பலகையையும் எடுத்துக்கொண்டு கூட்டித்தள்ளினோம். நான் சுவரோரமாக ஏதோ கிடப்பதைக் கண்டேன். விசித்திரமான ஒரு பெரிய பூச்சி. அதற்கு உயிர் இருந்தது. அட்டையால் மெல்லத் தொட்டபோது கலைந்தது. புழுக்கள் ஒரு கொத்தாக மாறி திரண்டிருந்தன.

தரையை நன்றாகக் கழுவியபின்னரும் சேற்றுவாடை எஞ்சியிருந்தது. சாராயப்புட்டி ஒன்று கீழே விழுந்து உடைந்ததுபோல ஓர் எரியும் வீச்சம். அது ஏன் என்று கொஞ்சநேரத்தில் புரிந்தது. குடிசைகளுக்கு நடுவே உள்ள சிறிய சந்துகளில் பன்றிகள் செத்து உப்பி அழுக ஆரம்பித்திருந்தன. அங்கிருப்பவர்கள் எவருக்கும் எதையும் சரிசெய்ய நேரமில்லை. குடைகளும் மழைக்கோட்டுகளும் பாலிதீன் சாக்குகளும் கொண்டு வேலைக்குத் திரும்பிவிட்டார்கள்.

சாக்கடைநதி அப்போதும் பாலம் மூழ்கச் சென்றுகொண்டிருந்தது. காலைக்கடன்களுக்கு எங்கேயும் செல்லமுடியாது. மாதவண்ணன் அதற்கான வழியைச் சொன்னார். அது தாராவியில் வழக்கம்தான். அறைக்குள் தாளை விரித்து அதில் மலம் கழித்து சுருட்டிப்பொட்டலம் கட்டிக் கொண்டுசென்று சாக்கடையில் வீசிவிடுவது. அதன்பின் கையில் பொட்டலத்துடன் செல்லும் ஒவ்வொருவரும் அதைத்தான் கொண்டுசெல்கிறார்கள் என்று தோன்ற ஆரம்பிக்கும்.

மழைக்கோட்டுடன் வந்திறங்கிய ராவ் பதற்றமாக இருந்தார். என்னை அழைத்து அவரது அலுவலகத்திலும் தொலைபேசியைப்பார்த்துக்கொள்ளமுடியுமா என்று கேட்டார். நான் ஒப்புக்கொண்டேன். ராவின் அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள். நான் மூன்றுநாள் அவரது தொலைபேசி அழைப்புகளுக்குக் குறிப்புகள் எடுத்துவைத்தேன். ராவுக்கு அதில் பெரும் மனநிறைவு. தெளிவான குறிப்புகள் என்றார்

ராவ் அன்று அவரே அவரைப்பற்றிச் சொன்னார். அவருக்கு மூன்று அக்காக்கள் ஒரு தம்பி. அனைவரும் பெங்களூரிலும் மைசூரிலும் இருக்க இவர் மட்டும் மும்பையில் அவர்குடும்பத்தில் அதிகம் படிக்காதவர் அவர் மட்டுமே. இண்டர்மீடியட் மட்டும்தான் படிப்பு. ஆனால் அம்மாவைப் பார்த்துக்கொள்ளமுடியாது என உடன்பிறந்தவர்கள் மறுத்துவிட்டார்கள். அவர்களுக்கு எண்பத்தெட்டு வயது. ராவ் அம்மாவை தன்னுடன் கடந்த இருபத்தேழு ஆண்டுகளாக வைத்துப்பார்த்துக்கொள்கிறார்

அவருக்கு எவ்வளவு பிள்ளைகள் என்று கேட்டேன். புன்னகையுடன் திருமணமே செய்துகொள்ளவில்லை என்றார். அவரது குறைவான வருமானத்தில் பாதி மும்பையில் ஒரு வீட்டுக்கான வாடகையாகவே போய்விடுகிறது. மிச்சத்தில் அம்மாவுக்கான மருத்துவச்செலவுகள். அம்மாவால் கடந்த எட்டாண்டுகளாகச் சரியாக நடமாட முடியாது. ராவ் காலையில் எழுந்து தனக்கும் சமைத்து அம்மாவுக்கும் கஞ்சி காய்ச்சி, தண்ணீர் மாத்திரைகளை எடுத்து படுக்கையருகே வைத்துவிட்டு கிளம்பி வரவேண்டும்

‘வேலைகிடைத்த நான்குவருடம் பிரம்மசாரியாக அறையைப் பகிர்ந்துகொண்டிருந்தேன்.அப்போது கொஞ்சம் மிச்சம்பிடித்ததனால்தான் இந்த சைக்கிளையும் வாங்கமுடிந்தது. ஒரு டேப்ரிக்கார்டரும் வாங்கினேன். பாட்டு கேட்பதுதான் ஆறுதலாக இருக்கிறது’ என்றார் ராவ்.

ஆச்சரியமாக இருந்தது. அவரை சாலையில் பார்த்தால் ஏதாவது ஒரு பள்ளியில் இந்தி ஆசிரியர் அல்லது அரசாங்கக் கம்பவுண்டர் என்று தான் தோன்றும். கண்டிப்பான தந்தையாக சில குழந்தைகளுடன் இருப்பவராகவே நான் அவரை நினைத்திருந்தேன்.

ராவ் எப்படி அவரது ஷூக்கள்கூட அழுக்காகாமல் வருகிறார் என்று கேட்டேன்

ராவ் சிரித்தபடி அது பெரிய விஷயமல்ல என்றார். ஷூக்களுக்கு மேலே பிளாஸ்டிக் காகித உறையை போட்டுக்கொண்டுதான் சைக்கிளில் ஏறுவார். வந்து இறங்கியதும் அந்த உறையை எடுத்து நீரில் அலம்பி வைத்துவிடுவார்

‘எங்கள் தெரு முழுக்க சாக்கடை….உடம்புக்கே உறை போடவேண்டும்’ என்றேன். ‘பின்பக்கம் சாக்கடையில் பன்றிகளும் பெருச்சாளிகளுமாக பிணங்கள் ஓடுகின்றன’

‘மா கங்கா….அவள் எல்லாவற்றையும் சுத்தமாக்கக்கூடியவள்’ என்றார் ராவ்

‘இந்தச்சாக்கடையா கங்கை?’

‘நண்பா எல்லா நீருமே கங்கைதான் என்பார் என் அப்பா. அவர் பெரிய கவிஞர். துளு மொழியில் செய்யுள்கள் எழுதக்கூடியவர். கன்னட ஆசிரியராக இருந்தார்’ ராவ் சொன்னார் ‘மண் என்பதுதான் உடல். நீரோட்டம் அதன் ஆன்மா…நீர் மண்ணை சுத்தப்படுத்திக்கொண்டே இருக்கிறது’

மழைக்காலத்தில்கூட மும்பையில் தெருவோரக்கடைகள் இயங்கும். வேறு வழியில்லை. அவர் எனக்கு ஒரு டீ வாங்கித்தந்தார். அவரது அம்மா மறுநாள் குணமாகி வீடு திரும்பிவிட்டாள்.’அம்மாவுக்கு வருத்தம். சாகாமல் வந்துவிட்டேனே என்று. விக்ரமாதித்தனின் வேதாளம் என்று தன்னைப்பற்றிச் சொல்கிறாள்’ என்றார்

‘நீங்கள் அவளைப்பற்றி வருத்தப்பட்டதுண்டா?’;

‘ஆரம்பத்தில் கொஞ்சம் கசப்பு இருந்தது. இப்போது எனக்கு வேறு துணையில்லை’

இரண்டே வாரத்தில் வெயில் உறைக்க ஆரம்பித்தது. சாக்கடைசேறு மொத்தமும் காய்ந்து தூசாகி காற்றில் எழுந்து மும்பை மேல் பரவி அரபிக்கடல் மேல் சென்று இறங்கியது. சாக்கடை ஓடை மீண்டும் எல்லைக்குள் ஒடுங்கியது.

‘வருஷம்தோறும் இப்பிடி மழைவந்து கழுவல்லேண்ணா இந்த ஊரு நாறி ஊறிரும் பாத்துக்க…இப்பம் கிணறுகளிலே கொஞ்சம் நல்லவெள்ளம் வரும்…’

உண்மையில் குடிநீரில் சாக்கடைவீச்சம் மட்டுப்பட்டு புதுச்சேற்றின் வாசனை வந்து சேர்ந்திருந்தது. நான் இரண்டு வெள்ளைச்சட்டைகளும் ஒரு வெள்ளைபாண்டும் வாங்கிக்கொண்டேன். அவற்றைப்போட்டுக்கொண்டு சென்றபோது ராவ் என்னை நோக்கிப்புன்னகை செய்தார்

ராவுடன் நான் மேலும் நெருங்கினேன். அவர் என்னிடம் சிவராம காரந்தின் நாவல்களை வாசிக்கச்சொன்னார். ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட சோமனதுடி நாவலை அவரே கொண்டுவந்து தந்தார். சிவராம காரந்த் எனக்கு அறிமுகமானது அப்படித்தான். காரந்தின் படம் என்னை கிளர்ச்சியுறச்செய்தது. வெண்ணிறச் சருமம், வெண்கூந்தல், வெள்ளை ஆடைகள். ராவுக்கு காரந்தை பிடித்ததில் வியப்பில்லை.

ராவின் அம்மாவுக்கு மேலும் உடல்நிலை மோசமாகியது. ராவ் என்னை தொலைபேசியில் அழைத்து அவரது வீட்டுக்கு வந்து ஒரு கோப்பை வாங்கிக்கொண்டு வந்து அவரது உரிமையாளரிடம் தரமுடியுமா என்று கேட்டார். வழியை அவரே அணுவணுவாக விவரித்தார்.

கண்டுபிடிப்பது கடினமாக இருக்கவில்லை. ராவ் சாலையோரம் இருந்த பழைமையான ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பின் கீழ்த்தளத்தில் குடியிருந்தார். அங்கே முன்னர் இருந்த ஏதோ மில் அவர்களுடைய தொழிலாளர்களுக்காக கட்டிய குடியிருப்பு. மில்லை பிறகு பூட்டிவிட்டார்கள். அந்த மில் பேரிலேயே குடியிருப்பு அறியப்பட்டது.

மிகப்பெரிய நான்கு கட்டிடங்களின் தொகுதி. கட்டிடங்கள் பாசிபிடித்துக் கருமையாகி நின்றன. மேல்மேலாகத் தெரிந்த பால்கனிகளில் துருப்பிடித்த கம்பியழிகளுக்கு அப்பால் ஓட்டை உடைசல்களும் அழுக்குத்துணிகளும் திணிக்கப்பட்டிருந்தன. வெளியே கட்டப்பட்ட கொடிகளில் துணிகள் காற்றிலாடின. ராவின் வீடு இருந்த டி பிளாக்கின் சுவர் மேலிருந்து கீழே வரை வெடித்து நின்றது. ஒருபகுதி அப்படியே எக்கணமும் சரிந்துவிடுவதுபோல மெல்லச்சாய்ந்திருக்க அனேகமாக எல்லா குழாய்களும் உடைந்திருந்தன

தரையில் உடைந்து சரிந்து பரவியிருந்த கான்கிரீட் பாளங்கள் வழியாகச் சென்றேன். ராவின் வீட்டு எண்ணை சரி பார்த்துவிட்டு கதவைத்தட்டினேன். ராவ்தான் சட்டையில்லாமல் தட்டுசுற்று வேட்டியுடன் கதவைத்திறந்தார். என்னைக் கண்டதும் உதடு சிரிப்பு போல சற்றுக் கோணியது ‘வா’ என்றார்

ராவின் குடியிருப்பு மொத்தமே இரண்டு அறைகள் கொண்டது. ஒரு கூடம், ஒட்டியே ஒரு சமையலறை. கூடத்திலிருந்து செல்லும் ஒரு கழிப்பறை -குளியலறை. அறையே இருட்டாக ஜில்லென்றிருந்தது. அறையின் சுவர் ஓரமாக இரு கட்டில்கள். ஒன்றில் கிழவி படுத்திருந்தாள். இன்னொன்றில் ராவ் அமர்ந்துகொண்டு எனக்கு ஒரு கூடைநாற்காலியை போட்டார். அமர்ந்துகொண்டேன்

ராவ் ‘காபி சாப்பிடுகிறாயா?’ என்றார். அவரது மார்பு வெறும் கூடாக இருந்தது. அதன்மேல் வெள்ளைப்புல் போல மயிர். குறுக்காக பூணூல்.

‘வேண்டாம்…’

‘ஃபைலை கொடுத்துவிடு…நான் அனேகமாக நாளைக்கு வருவேன்’

‘அம்மா..’

’சாயங்காலம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகவேண்டும்’

கிழவி மெழுகுப்பொம்மை போல படுத்திருந்தாள். வெளுத்துச் சுருங்கி சப்பிப்போன முகம். வாயே இல்லை. மூக்கு அண்ணாந்திருக்க உள்ளே இருந்த முடி தெரிந்தது. மூச்சு ஏறி இறங்கியது

‘மருந்துகொடுத்திருக்கிறார்கள். நல்ல தூக்கம்’

சட்டென்று நான் அதைக் கண்டேன். ராவின் வீட்டுச்சுவர் வழியாக தண்ணீர் அலையலையாக வழிந்து இறங்கிக்கொண்டிருந்தது. அதன் வாடைதான் அது. சாக்கடைவீச்சம். இல்லை மலநாற்றம். மஞ்சள் நிறத்தில் திப்பிதிப்பியாக சுவரில் மலம் வழிந்தது. கீழே ராவ் சுவர் ஓரமாக அது வழிந்தோட சிமிண்டால் விளிம்பு போட்டு ஒரு சிறிய ஓடை போல செய்திருந்தார்.

நான் பார்ப்பதைக் கண்டு ‘மேலே நிறைய குழாய்கள் உடைப்பு….பொதுக்கழிப்பிடங்கள் நேர் மேலே இருக்கின்றன’ என்றார்

‘சரிசெய்யமுடியாதா?’

‘ஒன்றுமே செய்யமுடியாது. இந்தக்கட்டிடத்தையே இடிக்கவேண்டும் என்று நகராட்சி சொல்கிறது. குடியிருப்பவர்கள் முடியாது என்று நீதிமன்றத் தடையுத்தரவு பெற்று போராடிக்கொண்டிருக்கிறார்கள்…’

‘இருந்தாலும்…’

‘வேறுவழி இல்லை. இந்த வாடகைக்கு இங்கே இடம் கிடைக்காது. அம்மாவுக்கு சிகிழ்ச்சைக்கான பணம் இப்போதே பாதி கடன்தான்’

எனக்கு உடம்பு குமட்டி அதிர்வதுபோலிருந்தது. எழுந்து ஓடிவிடவேண்டும் என நினைத்தாலும் என் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டேன்

‘சமையலறையிலும் வழியும்…மழைக்காலத்தில் கொஞ்சம் அதிகம்…ஆனால் பழகிவிட்டது’

‘நான் கிளம்புகிறேன்’

’சரி…’ என்றார் ராவ் பின்பு புன்னகையுடன் ’நரகம் என்பது சொர்க்கவாசிகளின் கழிப்பறைதான் என்று அப்பா சொல்வார்’ என்றார்

நான் ஒன்றும் பேசாமல் வருகிறேன் என்று தலையசைத்தேன். தெருவில் இறங்கியபின் குமட்டலுடன் உடலை உலுக்கிக் கொண்டேன்.

ராவின் வீட்டில் மறு சுவரில் இருந்த ஒரு படத்தை நாலைந்து நாட்கள் கழித்துத்தான் நினைவுகூர்ந்தேன். இருகைகளிலும் அமுதகலசங்களுடன் முதலைமேல் அமர்ந்த தேவி. கங்கையன்னை

முந்தைய கட்டுரைபுன்செய் புளியம்பட்டி புத்தகத் திருவிழா – 2013
அடுத்த கட்டுரைஅமைப்பாளர் அறிவிப்பு