ஜெ,
நேற்று ஆறு மெழுகுவர்த்திகள் பார்த்தேன். அற்புதமான படம். நான் அதன் சிறுசிறுகுறைகளைப்பற்றிச் சொல்ல வரவில்லை. ஒட்டுமொத்தமாக படம் உருவாக்கும் உணர்ச்சி அதிர்ச்சியும் பரபரப்பும் நெகிழ்ச்சியும் கலந்த ஒரு பெரிய அனுபவமாக உள்ளது. வணிகரீதியாகவும் சினிமா நன்றாக போகிறது என்று தெரிந்துகொண்டேன்
நேற்றுவந்தபிறகு இணையத்திலும் இன்று தமிழ் ஹிந்து செய்தித்தாளிலும் மதிப்புரைகளைப்பார்த்தேன். எல்லாருமே மிகவும் புகழ்ந்து பாராட்டி எழுதியிருக்கிறார்கள். சமீபத்தில் எந்த சினிமாவுக்கும் இந்த அளவுக்கு பாராட்டு வந்ததில்லை. இந்த வருடத்தின் மிகச்சிறந்த சினிமா என்றுகூட பலர் எழுதியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்
ஒரே ஒரு கேள்வி, இந்த உலகம் உண்மையானதா? இப்படி நடக்கிறதா ? ஏனென்றால் இது ஏற்கனவே ஏழாம் உலகம் நாவலில் ஒரு அத்தியாயமாக வந்த விஷயம்தான். அந்த ஒரு அத்தியாயமே பதற அடிக்கும். [அந்தக்காட்சி அப்படியே படத்திலும் உள்ளது] இந்த உலகத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
கெ.சந்திரமோகன்
அன்புள்ள சந்திரமோகன்,
நன்றி. படம்பற்றிய பாராட்டுக்களை இணையத்தில் நிறைய வாசித்துவிட்டேன். கிட்டத்தட்ட நூறு மதிப்புரைகள் அச்சிலும் இணையத்திலும் பிரசுரமாகியுள்ளன. அனைத்துமே படத்தைப் பெரிதும் புகழ்ந்து உணர்ச்சிவசப்பட்டநிலையில் எழுதப்பட்டவை.
மிகக்கடுமையான பொருளியல்நெருக்கடியில் மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம். பல தயாரிப்பாளர்கள் மாறியிருக்கிறார்கள். மூன்றுவருடங்கள் தயாரிப்பில் இருந்தது. தொழில்நுட்பநிபுணர்கள் எவருமில்லை. ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், கலைஇயக்குநர், ஒப்பனையாளர் அனைவருமே புதியவர்கள்.நடிகர்களில் ஷாம் தவிர அனேகமாக எல்லாருமே வளரும் கலைஞர்கள். விட்டு விட்டு, கிடைக்கும் பணத்தைக்கொண்டு எடுக்கப்பட்ட படம்.
இத்தகைய சூழலில் ஒரு சினிமாவுக்கு வரும் சிறிய தொழில்நுட்பக்குறைபாடுகள் படத்தில் உள்ளன என்று தெரியவந்தது. [நான் இன்னும் படம் பார்க்கவில்லை. கேரளத்தில் இருக்கிறேன்]. ஆனால், வேகமான திரைக்கதையாலும் உணர்ச்சிகரமான காட்சிகளாலும் படம் கடுமையான தாக்கத்தை உருவாக்கியது என்று சொல்லி அறிந்தேன். அதற்கு இயக்குநர் துரை, நடிகர் ஷாம் இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.
நீங்கள் சொல்வதுபோல ஏழாம் உலகத்தில் உள்ள சிறிய துணுக்குதான் இந்த சினிமாவில் விரிந்துள்ளது. உருப்படிகளை வைத்து வணிகம்செய்யும் பண்டாரமே இந்த வணிகத்தைக்கண்டு அஞ்சி பதறி ஓடிவிடுகிறார். முருகா முருகா என்று அரற்றிக்கொண்டே சென்று கோயில் உண்டியலில் பணம்போடுகிறார்.
நாவல் வெளிவந்தபோது இப்படி நடப்பது உண்மையா என்ற வினாக்கள் எழுந்தன. சரியாக எட்டுமாதம் கழித்து நாவல் நடக்கும் பழனியில் ஒரு கும்பல் பிடிபட்டது. குழந்தைகளைப்பிடித்து விற்கும் கும்பல். ஊனமாக்கி பிச்சை எடுக்க வைப்பவர்கள். அந்தக்குழுவில் நான்குபேர் பெண்கள் என படம் வெளியாகியது. அந்த வலைப்பின்னலை மேற்கொண்டு பிடிக்க போலீஸால் முடியவில்லை
ஆறு மெழுகுவர்த்திகள் கதையில் வரும் அனைத்தும் 90 சதவீதம் உண்மை. நகரிதான் இந்த வணிகத்தில் சென்னைக்கு வெளியே செல்லும் வாசல். காசி ஒரு முக்கியமான மையம். நான் இந்த உலகை அறிமுகம்செய்துகொண்டது காசியில். ஆந்திரத்தில் ஒருவரைச் சந்தித்திருக்கிறேன். ஆம் ‘ராவ்’ஐத்தான்
சினிமாவில் உள்ள இரு குழந்தை வணிகர்களை நானே நேரில் அறிவேன். அவர்களை அப்படியே படம் காட்டுகிறது. அவர்களின் வயதைமட்டும் 15 கூட்டிக்கொண்டேன், அவ்வளவுதான்
இந்த உலகை ஏன் போலீஸ் விட்டுவைக்கிறது? திரைக்கதையிலேயே பதில் இருந்தது, சினிமாவில் இல்லை. இது விபச்சார உலகமும் கூட, இந்தியாவின் பெரும்பாலான பெரும் குற்றவாளிகள், தீவிரவாதிகள் இந்த வலையில்தான் வந்து மாட்டிக்கொள்கிறார்கள். இவர்கள் உளவுத்துறைக்கு அளிக்கும் தகவல்களுக்கு பிரதிபலனாக இவர்களை விட்டுவைக்கிறது போலீஸ். இது அவர்களில் ஒருவரே இருபதாண்டுகளுக்கு முன்னால் சொல்லி நானறிந்தது.
நன்றி. இந்த தளத்தில் சினிமா விமர்சனங்களை முன்னெடுக்க விரும்பவில்லை. இங்கே நிறுத்திக்க்கொள்வோம்
ஜெ.
இந்து விமர்சனம்