வரலாற்றின் பரிணாமவிதிகள்

அன்புள்ள ஜெ,

நமஸ்காரம். உங்களின் “மூதாதையர் குரல்” படித்தேன். எனக்கு தோன்றியது என்னவென்றால் பத்தாம் நூற்றாண்டிற்கும் பதினைந்தாம் நூற்றாண்டிற்கும் இடையே உள்ள காலகட்டத்தை நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பார்க்கறீர்களோ என நினைக்கிறேன்.

”பத்தாம் நூற்றாண்டு வரை இந்தியாவின் வரலாறு என்பது செல்வச்செழிப்பின் பண்பாட்டுச்செழிப்பின் வரலாறு. அதன் பின்னர் வரண்ட பாலைநில மக்களின் மூர்க்கமான தாக்குதல்களால் அதன் அனைத்து அமைப்புகளும் ஆட்டம் கண்டன. ”

 

எந்த நாட்டிற்கும் , மனித கூட்டத்திற்கும் ஏன் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் பொருந்தும் ஒரு சட்டம் Fittest of the survival , அது நீங்கள் அறிந்தே இருப்பீர்கள். சுமார் முன்னூறு வருடங்கள் (கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை) வட இந்தியா தனது கதவை திறந்து வைத்துக்கொண்டு படை எடுப்பாளர்களுக்காக காத்திருந்த மாதிரியே தெரிகிறது.

அபரிமிதமான செல்வம், அதனை காக்க வலுவற்ற கூட்டம் இந்த இரண்டும் இருக்க இயற்கை விடுமா?பாரதியின் வார்த்தையில் சொன்னால் ‘அலிகளுக்கு இன்பமுண்டோ?’ வலுவுள்ளவனே உலக செல்வத்தை அனுபவிக்கும் உரிமை கொண்டவன்.

மேலும் கஜினி முகமது, கோரி முகமது, இல்டுமிஷ், அலாவுதீன் கில்ஜி போன்றவர்களை நீங்கள் ஒரு தீர்கமான ஒரு dynasty உருவாக்க முடியாதவர்களாக நீங்கள் பார்க்கறீர்கள், உண்மையே, ஆனால் அவர்கள் மிகச்சிறந்த போர் வீரர்கள், போர் தளபதிகள், அதை நாம் மறுக்கவே முடியாது. அவர்கள் மூர்க்கமான தாக்குதல் மட்டுமே நடத்தியவர்கள் அல்லர், மாறாக அந்த மூர்க்கமாக தாக்குதல்களை ஒரு தேர்ந்த போர் திறனுடன் நடத்தியவர்கள். அவர்களது மனவலிமையும் , உடல் வலிமையும், வேகமும் இந்திய அரசர்களுக்கு கற்பனை செய்ய முடியாததாக இருந்தது. அவர்களின் படைவீரர்களின் ஒற்றுமை இந்துகளுக்கு கனவிலும் நினைத்து பார்க்க முடியாதது.

கல்வியின்  மீது இருந்த மரியாதையை,காதலை வீரத்தின் மீதோ, தீரத்தின், உடல் வலிமையின் மீதோ வைக்கவில்லை என்பதே உண்மை.அதே மனோ நிலைதான் இன்றும் , ஒலிம்பிக்கில் ஒற்றை தங்கம் வாங்குவதற்கும் நுரை தள்ளும் நிலையில் இருக்கிறோம், நாசாவிலும், மைக்ரொஸாப்திலும் கும்பல் கும்பலாக இருக்கிறோம் , ஆக கல்வியில் உலகத்தரம், உடல் வலிமையில் பிறர் நகைக்கும் நிலை.ஆயிரம் வருடங்களாக ஒரே நிலை. விளைவு வறுமை. படிப்பிலும் கூட நம்மிடம் வீரம் இல்லை, அதாவது , ஒரு புதிய கண்டுபிடிப்பினை நிகழ்த்தும்
மன உறுதி இல்லை. கூலிக்கு மாரடிக்கும் படித்த கூலிகளாகவே இருக்கின்றோம்

ஆக படிப்பின் உண்டான காதலை நாம் பெருமையாக கருதும் அதே வேளையில் உடல் வலிமையை / வீரத்தை / துணிவை போற்றும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் ,ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவே இல்லை.

Regards
Gokul

 

அன்புள்ள கோகுல்,

பொதுவாகவே வரலாற்றை  உணர்ச்சிவசப்படாமல் நோக்க முயல்பவன் என்றே என்னைக்குறித்து நான் எண்ணிக்கொண்டிருக்கிறேன்.  வரலாற்றை வரலாறாகவே காணவேண்டும் என்றுதான் எண்ணிக்கொள்வேன். பலசமயம் நாம் வரலாற்றை மழுப்புகிறோம். பெரும்பாலான நேரங்களில் நம் வரலாற்றை நமக்கு பிறர் கற்பிக்க விட்டுவிடுகிறோம். நம் மீதான பழிகளையும் அவதூறுகளையும் ஆராயாமல் ஏற்றுக்கொள்கிறோம். எளிதில் சமாதானம் செய்துகொள்கிறோம். எளிய இலட்சியவாதத்தால் வரலாறு கற்பிக்கும் கசப்பான பாடங்களை மூட முயல்கிறோம். இவற்றுக்கெல்லாம் உடன்படலாகாது என்றே எண்ணிக்கொள்கிறேன்.

ஆனால் நான் வரலாற்றாசிரியன் அல்ல. வரலாற்றை கற்க முயலும் இலக்கியவாதி மட்டுமே. ஆகவே வரலாற்றாய்வினை புரிந்துகொள்வதில் எனக்கு எப்போதுமே பிழைகள் நிகழும் என்பதையும் கருத்தில்கொள்கிறேன். இந்த எல்லைக்குட்பட்டே, ஓர் எழுத்தாளனாக
சில மனப்பதிவுகளைச் சொல்கிறேன். அவை வரலாற்றாசிரியனின் முடிவுகள் அல்ல. அவை இலக்கியவாதியின் அபிப்பிராயங்கள் மட்டுமே. ஆனால் அவ்வகையிலும் அவை முக்கியமானவையே. ஏன் என்றால் எழுத்தாளனின் தார்மீகம் எந்த துறையிலும் சில புதிய கோணங்களை திறக்கக்கூடியது

சமூகங்களின் வரலாற்றில் ‘தகுதிபெற்றதே வாழும்’ என்பதுபோன்ற எளிய சித்தாந்தங்கள் போதுமான அளவுக்குப் பொருந்துவதில்லை என்றே நான் நினைக்கிறேன். தகுதி என்றால் என்ன என்பதே விரிவான வினாவுக்குரியதாக உள்ளது. வரலாற்றில் பண்பாடுகள் கொள்ளும் பரிணாம வளர்ச்சி என்பது வெறுமே உடல் ரீதியாகத் தங்கிவாழ்தல் என்பதை மட்டும் சார்ந்தது அல்ல என்றே எனக்குப் படுகிறது.அறிவார்ந்த முன்னேற்றம், ஆன்மீகமான முன்னேற்றம் என பல தளங்கள் அதில் உள்ளன.

ஜாரேட் டயமன்ட்

இப்போது ஜாரேட் டயமன்ட் [Jared Diamond ] எழுதிய  துப்பாக்கிகள் கிருமிகள் இரும்பு – சமூகங்களின் தலைவிதிகள்[Guns Germs and Steel — The Fates of Human Societies] என்ற நூலை முக்கால்வாசி வாசித்திருக்கிறேன். புகழ்பெற்ற , கொஞ்சம் பழைய நூல். ஒரு இந்திய வரலாற்று ஆசிரியன் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான நூல். இதன் முடிவுகளை விவாதிப்பது ஒருபக்கம். இதன் ஆய்வு வழிமுறைகளை இந்திய வரலாற்றின் மீது போட்டுப்பார்ப்பது இப்போதைக்கு மிக மிக முக்கியமானது என்ற எண்ணம் ஏற்பட்டது.

இந்தியச் சூழலில் சாதிகள், ஆசாரங்கள் முதலியவற்றின் உருவாக்கம் குறித்து இன்றுவரை ஆக்க பூர்வமான ஆய்வுகள் ஏதும் நடந்ததில்லை. டி.டி.கோஸாம்பி ஒரு நல்ல தொடக்கத்தை உருவாக்கினார். ஆனால் அவரது வழிவந்தவர்கள் அன்றாட அரசியலின் காற்றுக்கு ஏற்ப ஆய்வின் பாயை திருப்பக்கூடியவர்களாக அமைந்து அந்த ஆய்வுக் கருவிகளையே அபத்தமாக ஆக்கிவிட்டார்கள். ஏன் இங்கே சாதியமைப்புகள் உருவாயின? ஏன் சில சாதிகள் மேலாதிக்கம் பெற்றன? ஏன் சில சாதிகள் தோற்கடிக்கப்பட்டன? எவ்வாறு சென்றகாலத்தின் அடுக்கதிகாரம் உருவாகியது? இவற்றையெல்லாம் சமூகபரிணாமக் கோட்பாடுகளின்படி எவருமே ஆய்வு செய்ததில்லை.

மாறக அனைத்தையும் அபத்தமான  ‘உயர்சாதிச் சதி’ என்ற கூச்சலில் முடித்துக்கொள்ளவே முயல்கிறார்கள். அப்படி ஒரு வெறுப்பரசியலை , அப்பட்டமான ·பாசிசத்தை முன்வைப்பவர்களே இங்கே முற்போக்காளர்களாகவும் சிந்தனையாளர்களாகவும் முன்னிறுத்தப்படுகிறார்கள். சமூக பரிணாமத்தை ஆராயக்கூடிய தத்துவ அடிப்படை கொண்ட மார்க்ஸியர்களோ இந்த கும்பலுக்கு ஒத்து ஊதுபவர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள்.

அதேபோல நம் சமூகம் எப்படி அன்னியப்படையெடுப்புகளுக்கு முன் வீழ்ச்சி அடைந்து அடிமையாகியது, ஏன் இதன் சிந்தனைகள் அனைத்தும் ஒரு காலகட்டத்துடன் தேக்கம் கொண்டன என்பதும் மிகவிரிவான அளவில் சமூக பரிணாம ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டிய தலைப்பு. ஆனால் நமக்கு சிந்தனையாளர்கள் இல்லை. ஆங்கில ஞாயிற்றுக்கிழமைக் கட்டுரையாளர்கள்தான் நமக்கு முன்னோடிச் சிந்தனையாளர்கள். அவர்களைப் பிரதிசெய்து சிற்றிதழ்களில் எழுதும் பிராந்திய மொழியாளர்கள்தான் நம் அறிவுஜீவி வர்க்கம். இவர்கள் ‘எல்லாத்துக்கும் அத்வைதம்தான் காரணம் மச்சி’ என்றோ ‘மொதல்ல கீதைய கொளுத்தணும் இன்னாண்ரே?’ என்றோ சொல்லும் ஞானச்சிதறல்களைத்தான் நாம் விவாதித்துக்கொண்டிருக்கிறோம்.

ஜாரேட் டயமண்ட் அவர்களின் நூலில் வந்துகொண்டே இருக்கும் புதிய திறப்புகள் ஆச்சரியப்படுத்துகின்றன. ஒரு சமூகம் வளமான நிலப்பகுதியில் குடியேறும்போது உபரி உருவாகி அச்சமூகம் செல்வமும் வலிமையும் மிக்கதாக ஆகும் என்பது மார்க்ஸியம் கற்பிக்கும் பாடம். ஆனால் சூழல்கள் சமூகங்களை தகவமைக்கின்றன. ஆகவே சவால்மிக்க எதிர்மறைச் சூழல்களில் குடியேறும் சமூகங்கள் அச்சவால்களை எதிர்கொள்வதன் மூலமே  வல்லமை மிக்கதாக ஆகவும்கூடும்.

சமாதானம் நிலவும் பேரரசுகள் மெல்ல மெல்ல தேங்கும்போது சமூகங்கள் கடுமையாக போட்டியிடும் சூழலில் உருவாகும் நாடுகள் தீவிரமடைந்து தங்களை தகுதிப்படுத்திக்கொள்ளக்கூடும் என்று வாதிடுகிறார் ஜாரேட் டயமண்ட். சீனா உலகப்பேரரசாக ஆகாமல் போனமைக்கும் எதிர்மறைச்சூழல்கொண்ட ஐரோப்பா தனக்குள் கொண்டபோட்டியாலேயே வலிமை மிக்க சமூகங்களை அடைந்தமைக்கும் அவர் அளிக்கும் விளக்கம் இது. இந்தியாவுக்கும் ஓரளவுக்கு இது பொருந்தும்.

சமூகங்களின் வெற்றிக்கும் தோல்விக்கும் அச்சமூகங்களின் மரபணுத் தனித்தன்மை, பிறவியால் வரும் மனஅமைப்பு போன்ற காரணங்களை இனவாதக் கூற்றுகள் என நிராகரித்துவிட்டு சூழலுக்கு ஏற்ப மக்கள்த்திரள் கொள்ளும் படிப்படியான பரிணாமத்தையே ஜாரேட் டயமண்ட் முன் வைக்கிறார். இந்தப் பரிணாம வளர்ச்சி என்பதில் அச்சமூகத்தின் சமூக அமைப்பு, மத நம்பிக்கைகள், அழகியல் நோக்குகள், தத்துவங்கள் எல்லாமே அடங்கும். இவை அனைத்துமே அச்சமூகம் அச்சூழலை எதிர்கொண்டமையின் விளைவுகள் மட்டுமே.

இந்திய நிலச்சூழலின் வளமான மண்ணில் உருவான சமூக பரிணாமம் இதற்கே உரிய தனித்தன்மை மிக்க அரசமைப்பு, தத்துவம், மதம் ஆகியவற்றைக் கொண்டது என்று எடுத்துக்கொள்வதே சரியானதாக இருக்கும். இந்திய நிலச்சூழல் சில கிலோமீட்டர்களுக்குள்ளேயே மாறுபடக்கூடியது. அடர்காடுகள், அரைப்பாலைநிலங்கள், மேய்ச்சல்நிலங்கள், வளமிக்க வண்டல்நிலங்கள் என அதன் இயல்பு மாறுபடுகிறது. இந்தியாவின் இதிகாசங்கள் இத்தகைய மாறுபட்ட நிலச்சூழல்களில் வாழும் மாறுபட்ட மக்கள்கூட்டங்களை சித்தரித்துக்காட்டுகின்றன

இந்த அபாரமான பன்மைத்தன்மை காரணமாக இங்கெ வாழ்ந்த ஆதி மக்கள்கூட்டங்கள் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட வளர்ச்சிநிலைகளில் நின்றவர்களாக இருந்திருக்கலாம். அவர்களின் சமூக அமைப்பும் பண்பாடும் வேறுபட்டவையாக இருந்திருக்கலாம். அவர்களின் மதங்கள் வாழ்க்கைமுறைகள் எல்லாமே மாறுபட்டவையாக இருந்திருக்கலாம். நமது மதம், பேரரசுகள், இலக்கியம் போன்றவை உருவாகாத காலத்தில் இந்நிலம் முழுக்க பலவகையான மக்கள்கூட்டங்கள் நிறைந்து வாழ்ந்திருக்கலாம்.

ஆகவேதான் இந்நிலத்தில் உருவான அரசமைப்பு சிந்தனை மதம் எல்லாமே பன்மைத்தன்மையை அங்கீகரித்து ஒரு பொது அடையாளத்தின்  கீழே தொகுக்கும் தன்மை கொண்டதாக உள்ளன என்று தோன்றுகிறது. இங்கு உருவான மத, தத்துவ சிந்தனைகள் மூர்க்கமான ஒற்றை மையத்தை வலியுறுத்துவனவாக இருக்கவில்லை. அவை ஒரு தத்துவார்த்தமான மையத்தை பல்வேறுபட்ட சிந்தனைகளுக்கு பொதுவாக நிறுத்துவதாகவே உள்ளன. இது இந்து, சமண, பௌத்த சிந்தனைகள் அனைத்துக்கும் பொருந்தும்.

ஆகவே அவை தொடர்ச்சியாக முற்றிலும் மாறுபட்ட பல்வேறு வழிபாட்டுமுறைகளையும் நம்பிக்கைகளையும் உள்ளிழுத்துக்கொண்டு தொகுக்கும் பணியையே செய்து வந்தன. அந்த இயல்பால் அவை உறுதியான பெரிய சமூகக் கட்டுமானங்களை உருவாக்கும்தன்மை கொண்டிருந்தன. அந்த தன்மையானது பேரரசுகளை உருவாக்கும் மன்னர்களுக்கு உதவியாக இருந்தது. எனவேதான் சமணமும் பௌத்தமும் பிற இந்து மதங்களும் மன்னர்களால் பேணப்பட்டன. இந்த அம்சத்தை டி.டி.கோஸாம்பி சுட்டிக்காட்டுகிறார்.

கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் நம்முடைய அரசமைப்புகளும் மிகவிரிவான பன்மைத்தன்மையை அங்கீகரிப்பவையாகவே இருந்தன என்பதே. நம்முடைய பேரரசுகள் எல்லாமே பலநூறு சிறு அரசுகளின் தொகுப்பாகவே இருந்தன. அந்த சிறிய அரசுகளின் தனித்தன்மைகளை எல்லாம் அங்கீகரித்து அவை தங்களுக்கு மேல் ஒரு பொது அரச அமைப்பை ஒத்துக்கொள்ளவைப்பதே இங்குள்ள பேரரசுகளின் வழிமுறையாக இருந்தது.

இதிகாசங்கள் முதற்கொண்டு இந்த விஷயத்தைக் காணலாம். உதாரணமாக அஸ்வமேதம் என்னும் யாகம். ஒரு மன்னனின் குதிரை சுதந்திரமாக அவிழ்த்துவிடப்படுகிறது. அது செல்லும் இடமெல்லாம் அதற்குச் சொந்தம். அதை பிடித்துக்கட்டும் மன்னனுடன் குதிரைக்குச் சொந்தக்காரனாகிய மன்னன் போர் செய்வான். குதிரை கட்டப்படவில்லை என்றால் அந்த குதிரைக்குச் சொந்தக்கார மன்னன் சக்ரவர்த்தியாக ஆகிவிடுகிறான். பிற மன்னர்கள் அவனுக்கு கப்பம் கொடுக்கவேண்டும். அத்துடன் சரி. அவர்களின் நாடு கைப்பற்றப்படுவதில்லை. ஒரேகுடைக்கீழ் கொண்டுவரப்படுவதும் இல்லை.

இந்தப் பன்மைத்தன்மை இந்நிலத்தின் இயல்பால் பரிணாமம் கொண்டு வந்த ஒன்று. இங்கே பேரரசுகளை உருவாக்கியது, மாபெரும் பண்பாட்டுச்சாதனைகளை சாத்தியமாக்கியது இந்த பன்மைத்தன்மைதான். ஆனால்  அரேபியப் பாலைநிலத்தில் முற்றிலும் வேறுபட்ட ஒரு அரச அமைப்பும் சமூக முறையும் உருவாகி வந்தது. அதுவும் ஒரு பரிணாமவளர்ச்சிதான் என்றே சொல்ல வேண்டும். குறைவான இயற்கை வளங்களை பங்கிடும் பொருட்டு உருவானதாக இருக்கலாம்.  அது ஒருமையை ஆதாரமாகக் கொண்டது. மூர்க்கமாக ஒற்றைப்படைத்தன்மையை நிலைநாட்டியது. முழுக்கமுழுக்க இவ்வுலகை நிராகரித்து வீரமரணத்தையே இறுதி இலக்காக முன்வைத்து ஒரு முழுச்சமூகத்தையே போர்வீரர்களாக ஆக்கியது. கடுமையான எதிர்மறைச்சூழல்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு அது

அந்த சமூகத்தின் ஒட்டுமொத்தமான அடியை நம் சமூகத்தால் கடைசி வரை தாங்க முடியவில்லை. இங்கே அரசியல் அமைப்பில் இருந்த பன்மைத்தன்மைதான் இதன் வீழ்ச்சிக்குக் காரணம் என்பதை வரலாற்றில் மீண்டும் மீண்டும் காணலாம். தனிப்பட்ட வீரம் எந்நிலையிலும் இங்கே குறைவுபட்டிருக்கவில்லை. மண்ணுக்காகவும் பண்பாட்டுக்காகவும் உயிர்துறக்கும் மனப்பான்மை என்றும் இருந்திருக்கிறது. ஆனால் ஒருபோது இங்கிருந்த எந்தப்பேரரசும் ஒற்றைப்பெரும் சக்தியாக எழுந்ததில்லை. கடைசியான உதாரணம் மதுரை நாயக்கர் ஆட்சி. அது கடைசியாக சந்தாசாகிப்பின் படையுடன் போராடித்தோற்றமைக்குக் காரணமும் அதேதான், பாளையக்காரர்கள் ஒன்றாகத்திரள மறுத்துவிட்டார்கள்.

ஆக , சிக்கல் என்பது ஒரு சமூகத்தின் மனப்பான்மையில் இல்லை. அதன் ஆண்மையிலோ வீரத்திலோ இல்லை. வளம் மிக்க மண்ணில் உயர்பண்பாடு உருவாவது எப்படி பரிணாம விதியோ அதேபோல வரண்ட மண்ணில்  வென்று உயிர்வாழ்வதற்கான வெறி எழுவதும் பரிணாம விதியே.

ஜாரெட் டயமண்ட் அவர்களின் நோக்கை முன்னெடுத்துப்பார்த்தால் இன்னொரு விஷயமும் கவனத்துக்கு வருகிறது. இந்திய மண்ணில் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக எழுந்த இருபெரும் சக்திகள் என்றால் விஜயநகரமும் மராட்டியப்பேரரசும்தான். இங்கே பேரரசுகள் ஓங்கியிருந்த வளம் மிக்க நிலங்கள் பல இருந்தன. மகதம் திகழ்ந்த பிகார் முதல் சோழனும் பாண்டியனும் ஆண்ட தென்னாடுவரை. எங்கிருந்தும் ஒரு எதிர்ப்பு அரசு உருவாகி வரவில்லை. ஏன் என்றால் அங்கே ஏற்கனவே உருவாகி வந்த சமூக அமைப்புகள் இஸ்லாமிய அரசமைப்பின் ஒற்றைப்படையான வல்லமையை எதிர்கொள்ள உகந்தவை அல்ல.

விஜயநகர் உருவாகி வந்த ராயலசீமா மண் வரண்டது. ராயலசீமா என்றாலே ‘கல்பூமி’தான். ஆப்கானிஸ்தான் மண்ணுக்கும் அதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. அங்கே வாழ்ந்த மக்கள் அந்த வரண்ட கல்பூமியில் மாடுமேய்த்து வாழ்ந்தவர்கள். குதிரைமேய்க்க ஆரம்பித்ததும் ராணுவ வல்லமையாக ஆனார்கள். அவர்களால்தான் சுல்தானிய ஆட்சிக்கு எதிராக ஒரு அரசை உருவாக்க முடிந்தது. அதன்பின் மராட்டியத்தின் வரட்சிமிக்க குறுங்காடுகளின் கடுமையான சூழலில் வாழ்ந்த மராட்டியமக்கள் இன்னொரு அரசை முகலாயருக்கு எதிராக உருவாக்கினார்கள்.

நாம் நம்முடைய புவியியல் சூழல்களினால் வரலாறு வழியாக மெல்ல மெல்ல திரட்டிக்கொன்ட இந்த பன்முகத்தன்மை நமக்கு ஜனநாயக அமைப்பில் மிக முக்கியமான அடிப்படையாக இன்று உள்ளது. முரண்பாடுகளை பொதுவெளியில் விவாதிக்கவும் அந்த முரணியக்கம் மூலம் முன்னகரவும் நமக்கு அது உதவுகிறது. நேர் மாறாக ஒற்றைபப்டைத்தன்மை ஓயாத ரத்தப்பெருக்கையே அந்நாடுகளில் உருவாக்கி ஒருபோது ஜனநாயகத்தை வந்தடைய முடியாதவர்களாக ஆக்கியிருக்கிறது என்று படுகிறது

இதை நான் ஒரு கோட்பாடாகச் சொல்லவில்லை. வரலாற்றின் நிகழ்வுகளை எப்போதும் ஒரு விரிவான சமூகப் பரிணாம வரைவில் பொருத்தியே ஆய்வுசெய்யவேண்டும் என்று சொல்கிறேன். இந்தியாமீதான ஆங்கிலேய ஆதிக்கம் உட்பட அனைத்தையும். அத்தகைய விரிவான சமூகவியல் சித்திரத்தின் மீதே விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். குறைந்தது அறிவுஜீவிகள் என்பவர்களாவது அதைச்செய்தாக வேண்டும்

ஜெ

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் அக்டோபர் 1 2009
http://thatstamil.oneindia.in/art-culture/visai/may05/sagas.html

முந்தைய கட்டுரைஇமயச்சாரல் – 15
அடுத்த கட்டுரைதேவதை