வணக்கம் ஜெமோ.
இமயமலைப்பயணம் முழுவதையும் பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்!
படங்கள் ஒவ்வொன்றும். அருமை. நேரில் போகமுடியவில்லை என்ற ஏக்கத்தை ஓரளவு தணித்தது என்றாலும் தொடர் எட்டில் இருக்கும் ஒட்டகத்தின் போஸ் & மனநிலை அட்டகாசம். அணுஅணுவாக ரசித்து மகிழவைத்தது.
சண்டிகரில் ஒன்னரை வருசம் வசித்தும் இவ்வளவு நல்ல இடங்களைத் தவற விட்டேனே என்ற அங்கலாய்ப்பு எனக்கு:(
மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன், என் தாகம் அடங்க.
அஜிதன் நன்றாக வளர்ந்துவிட்டா(ன்)ர். தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை!
அருண்மொழிக்கும் சைதன்யாவுக்கும் என் அன்பு.
அடுத்த பயணம் எங்கே?
என்றும் அன்புடன்,
துளசி (நியூஸிலாந்து)
துளசி,
அடுத்த பயணம் உள்ளூர் காடுகள்தான். இமயத்தைப்பார்த்ததுமே மேற்குமலைகள் ஈர்க்கின்றன
ஜெ
மனிதன் சுலபமாக அடைய முடியாத மலை முகடுகளையும் மாகி அடைந்து விட்டதே,
அதன் கரங்கள் தான் எத்தனை வலிமையானவை? அவர்கள் உணவுப் பட்டியலின் எந்த இடத்தை மாகி பிடித்துக் கொண்டது? மாகி வருவதற்கு முன் அவர்கள் எதை உண்டும்
கொடுத்தும் வந்ததார்கள் ஜெ? யோசித்தால் அதுவே ஒரு சுவாரசியமான கட்டுரையாக உருவெடுக்கும் அல்லவா?
சித்ரா
அன்புள்ள சித்ரா
அதில் ஆச்சரியமென ஏதுமில்லை. அந்த மலைமக்களின் உணவுப்பழக்கம் தொன்றுதொட்டே பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்ட உணவுகள்தான். காரணம் வருடத்தில் ஒன்பதுமாதம் பனி. இன்று அந்த பாரம்பரிய உணவுப்பதனிடும் முறையை மாகி நீக்கம் செய்துவிட்டது
ஜெ
,
ஜெ,
நூறு நிலங்களின் மலை – — தொடருக்கு நன்றி.
கூடவே பயணம் செய்த உணர்வு.
உங்கள் விவரிப்புகளுக்கு பெரும் வலு சேர்த்த அஜிதனின் புகைப்படங்களுக்கு ஒரு விசேஷ நன்றியும்,
அஜிதனுக்குப் பாராட்டுகளும்.
அன்புடன்
சாந்தினி
அன்புள்ள சாந்தினி
நன்றி
எந்தக்கோணத்தில் வைத்தாலும் இமயமலைகள் அழகாகவே உள்ளன. காரணம் அவற்றின் வடிவவேறுபாடுகள்தான்
நம்மூர் மலைகள் பெரும்பாலும் ஒரே அமைப்பைக்கொண்டவை
ஜெ