புறப்பாடு ll – 5, எண்ணப்பெருகுவது

தாராவியில் நாணப்பண்ணணின் மதராஸ் மெஸ்ஸில் காத்திருக்காமல் சாப்பிட முடியாது. அதிகாலையில் நாணப்பண்ணன் கடைதிறக்கும்போதே எழுபது எண்பதுபேர் காத்திருப்பார்கள். அதன்பின் நூறுபேருக்குக் குறையாமல் எந்நேரமும் வெளியே நின்றிருப்பார்கள். சட்டென்று பார்த்தால் இருபதுபேர் காத்திருப்பதாகத் தோன்றும். பக்கத்திலுள்ள கடைகள் முன்னாலும் சாக்கடையை ஒட்டி போடப்பட்டிருந்த பெரிய சிமிண்ட் குழாய் மேலும் அமர்ந்திருப்பவர்களும் அந்த வரிசையில் உண்டு என அங்கே செல்லக்கூடியவர்களுகுத்தெரியும்.

வரிசை என்று ஏதும் இல்லை. ஆனால் யார் முன்னால் வந்தார்கள் என அடுத்து செல்லவேண்டியவருக்குத் தெரியும். ஒவ்வொருவரும் வந்துசேர்பவர்களை ஓரக்கண்ணால் பார்ப்பார்கள். தெரிந்தவர்கள் என்றால் ஒரு புன்னகை. மிகத்தெரிந்தவர் என்றால் ‘ஊரிலே மளை உண்டுமா?’ என்பது போல ஒரு விசாரிப்பு. பீடிக்கு தீ பகிர்தல். பீடியையே ஒடித்துப்பகிர்வதும் உண்டு. ஒரு மணிநேரம் வரைக்கும்கூட காத்திருக்கவேண்டியிருக்கும்.

கடும்பசியில் காத்திருக்கும்போது காலம் ராவணன்பெட்டி போல ஆகிவிடுகிறது. பெட்டிக்குள் பெட்டிக்குள் பெட்டிகள். ஒரேநிமிடம் அவ்வளவு நினைவுகளை , எண்ணங்களை, உணர்ச்சிகளை தன்னுள் கொண்டிருக்குமா என்ன? நிமிடங்கள் கொசு போல விசிறி விரட்ட விரட்ட நீங்காமல் ரீங்கரிக்கும். கற்பாறை போல எத்தனை உந்தினாலும் அசையாமல் நின்றிருக்கும். வெண்ணைமலைபோல அள்ள அள்ள பிய்ந்து வந்துகொண்டிருக்கும்

உள்ளே இருபதுபேர் இருந்து சாப்பிடலாம். எந்நேரமும் நாற்பதுபேர் வெளியே காத்திருப்பார்கள். பிளாஸ்டிக் தட்டின்மீது பாலிதீன் தாளை விரித்து அதில் சாப்பாடு பரிமாறும் வழக்கத்தை நாணப்பண்ணன்தான் அறிமுகப்படுத்தியிருந்தார். சாப்பிட்டபின் அப்படியே பிளாஸ்டிக் தாளை எச்சிலுடன் ஒரு பெரிய பிளாஸ்டிக் வாளியில் கவிழ்த்துவிட்டு அடுத்த பிளாஸ்டிக் தாளை அதன்மேல் பரப்பி அடுத்த சாப்பாட்டை பரிமாறிவிடுவார். பிளாஸ்டிக்தாள் பல்வேறுவகையான பைகளையும் உறைகளையும் சேகரித்து சராசரியான அளவில் வெட்டப்பட்டது. அவரது கடையில் ஒருபோதும் சோறு சூடாக இருப்பதில்லை. பலவண்ண தாள்கள். பல அச்சுகள். ஒருமுறை நான் ஹேமமாலினியின் முகத்திலேயே அவியலை வழித்தேன்.

எப்போதுமே அங்கிருக்கும் ஓர் அலுமினியக்கிண்டியில் ஒரு கிண்டி சோறு. செந்நிறத்தில் நீர்த்த தேங்காய் மீன்குழம்பு, கீரைக்கூட்டு, எலுமிச்சை வாசனை கொண்ட புளித்த மோர், எலுமிச்சைவினிகர் ஊறுகாய். அக்காலத்தில் ஒரு ரூபாய்க்கு அந்தச்சாப்பாட்டை அவர் கொடுத்துவந்தது ஆச்சரியம்தான். நாகர்கோயிலிலேயே அளவுச்சாப்பாடு அன்று மூன்றுரூபாய். அங்கே குடிக்கக் கிடைக்கும் நீர் விட்டுத் தேற்றி உப்பு போடப்பட்ட வடித்த கஞ்சித்தண்ணீர் பிரபலம். அத்தனைபேரும் அதை மீண்டும் மீண்டும் வாங்கி குடிப்பார்கள்.

சாப்பிடுபவர்களில் பெரும்பாலானவர்கள் என்னைப்போலத்தான் இருந்தார்கள். ஒட்டிய உடலும் முகமும் வரண்ட உதடுகளும் மெல்லிய தாடிமீசையும் தொளதொளப்பான பழைய உடைகளும் கொண்டவர்கள். அதிகமாகப்பேசாதவர்கள். ஒருமுறை சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அனிச்சையாக கண்களை தூக்கி அந்த அறையைப்பார்த்து திகைத்தேன். அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்த அத்தனைபேரும் பலிச்சோறு எடுக்க வந்த ஆவிகள் போலிருந்தனர். விழித்துப்பிதுங்கிய கண்கள் ,விரியத்திறந்த வாய் ,ஆவேசமாக அள்ளித்திணிக்கும் கை ,அதை வாங்குவதற்காக முன்னால் சாய்ந்த உடல். அவர்கள் எவருமே மெல்லுவதைப்போலத் தெரியவில்லை.

ஐந்து நிமிடம் சாப்பிடுவதற்குக்கூட இருக்காது. ஆனால் உள்ளே சென்றவர்கள் எளிதில் வெளிவருவதில்லை. வெளியே நிற்கையில் உள்ளே தட்டுகளும் டம்ளர்களும் ஓசையிட, சோறும் குழம்பும் மோரும் சேர்ந்த வாசனை பெரிய வதை. உள்ளே சென்றபின் அதில் திளைத்து விளையாட ஆரம்பிப்பார்கள். எழுந்து வரவே மனமில்லாதது போல வழித்து வழித்து நக்குவார்கள். ‘மக்கா ஒரு கிளாஸு கஞ்சிவெள்ளம் குடுடே’ என்பார்கள்.

ஒருரூபாய் சாப்பாடு ஒருபோதும் எனக்கு போதுமானதாக இருந்ததில்லை. சோறு அப்படி பரப்பி வைக்கப்படாவிட்டால் அதை சாப்பாடு என்றே சொல்லமுடியாது. என் அம்மா கோழிக்குச் சோறு அள்ளி வீசும்போதுகூட அதைவிட அதிகமாக அள்ளுவாள்.

சாப்பிட்டு முடித்ததுமே ஓர் இழப்புணர்வுதான் ஏற்படும். தாளில் எஞ்சிய பருக்கைகளை பொறுக்கி வாயில்போடவேண்டுமென்று தோன்றும். அதைச்செய்யக்கூடாதென்ற இறுக்கமும் வரும். ஆனால் பலர் நன்றாக வழித்து வழித்துச் சாப்பிட்டு கைகளையும் சுத்தமாக நக்கிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். மாதவன் அண்ணா ‘அந்தால அந்த கையையும் தின்னிருடே…தீ அடங்கட்டு’ என்று சொன்னார். நான் அவன் கேட்டுவிட்டானா என்று பீதியுடன் பார்த்தேன்

அங்கு வருவதற்கு வெகுநேரம் முன்னரே பசி ஆரம்பித்திருக்கும். சாப்பிடுவதற்கான காசு அதற்குப்பிறகுதான் ஈட்டப்பட்டிருக்கும். சிலர் வெகுதொலைவில் இருந்துகூட நடந்து வந்தார்கள். நாணப்பண்ணனுக்கு அவரது வாடிக்கையாளர்கள் பற்றித்தெரியும். வெளியே சாக்கடைக்குமேலே ஒரு பெரிய அலுமினியத்தொட்டியில் குடிநீரும் சங்கிலி போட்டு கட்டப்பட்ட அலுமினிய டம்ளரும் இருக்கும். அனேகமாக அனைவருமே நாலைந்து டம்ளர் தண்ணீர் குடிப்பார்கள். தண்ணீர் இறங்கும் தொண்டைகள் அசைவது அந்த நீரை உடல் ஆவலுடன் வரவேற்பதுபோலிருக்கும். இன்னும் இன்னும் என்று அசையும் குரல்வளை நின்றதும் தாடியில் நீர்த்துளிகளுடன் குவளையை இன்னொருவருக்கு நீட்டுபவன் முகத்தில் களைப்புதான் மிஞ்சியிருக்கும்.

காத்திருப்பவர்களுடன் சேராமல் வெளியே சாலைக்கு அப்பால் பஜ்ரங்பலி சன்னிதி அருகே வரிசையாக ஐம்பதுபேர் வரை காத்திருப்பார்கள். அவர்களிடம் ஒருரூபாய் கூட இருக்காது. யாராவது எதிரே இருக்கும் பாபாகோயிலில் இருந்து வந்து சாப்பாட்டுக்கு நாணப்பண்ணனிடம் பணம் கொடுப்பார்கள். அண்ணனின் மகன் சுதீரன் ஐந்தாறு தட்டுகளை மேலே மேலே அடுக்கியபடி வெளியே வந்து அந்தவரிசையில் இருப்பவர்களுக்கு கொடுப்பான். அவர்களில் சிலர் எழும்போது மற்றவர்கள் உணர்ச்சியற்ற முகத்துடன் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

நாங்கள் காத்திருப்பதை விட மோசம் அவர்கள் காத்திருப்பது. எங்கள் காத்திருப்புக்கு முடிவு உண்டு என்று தெரியும். பையில் ஒரு ரூபாய் இருப்பது வரை பிரச்சினையே இல்லை. நாணப்பண்ணன் இரவு பன்னிரண்டுவரை கடைமூடுவதில்லை.ஒவ்வொருவராக எழுந்து செல்கிறார்கள். இதோ இந்த குர்தா ஆசாமிக்குப் பிறகு நான். அவனுக்கு முன்னால் அந்த பச்சைச்சட்டை ஆசாமி. அவருக்குப்பின்னால் அந்த ஒல்லியான மருமுகத்தவன். அவனுக்கு முன்னால்….

அவன் எழுந்து ஒன்றும் நடக்காதது போல உள்ளே செல்கிறான். உள்ளே செல்பவனை அனைவரும் மௌனமாகத் திரும்பிப்பார்க்கிறார்கள். ஐந்து நிமிடங்களுக்குள் அடுத்தவன். இன்னும் ஒருவன் மட்டும்தான் எனக்கு முன்னால். அக்கணங்களில் அவன் மீது உருவாகும் இனம்புரியாத கசப்பை நாமே திரும்பப்பார்க்கமுடிந்தால் புன்னகைதான் வரும்

ஆனால் எதிர்ச்சாரியில் இருப்ப்பவர்கள் அப்படி அல்ல. ஒருவேளை பகல் முழுக்க ஒருவருக்குக் கூட சாப்பாட்டுக்கு அழைப்பு வராமல் போய்விடலாம். முன்னால் இருவருக்கு தட்டுவந்தபின் மூன்றாவது ஆளுக்கு பலமணிநேரம் கழித்து தட்டு வரலாம். வராமலேயே போகலாம். எந்த நம்பிக்கையில் அவர்கள் காத்திருக்கிறார்கள் தெரியவில்லை. அனேகமாக எல்லாருமே நம்பமுடியாத அளவுக்கு மெலிந்த காசநோயாளிகள். மேலும் மெலிந்து வற்றுவதை தடுப்பது எலும்புக்கூடு மட்டும்தான். சிலர் கைகால்கள் இல்லாதவர்கள். ஒருமுறை ஒரு வெள்ளை ஆடைப் பெண்மணியையும் ஒரு சிறுமியையும்கூட அவ்வரிசையில் பார்த்தேன்.

அங்கே பணம் கொடுத்துச் சாப்பிட வரக்கூடியவர்கள் எல்லாருமே மலையாளிகள்தான். மிக அபூர்வமாகவே தமிழர்கள் வந்தனர். குழம்பில் இருக்கும் மீன்வாடைக்காகவே மலையாளிகள் தேடிவந்தனர். அவர்களால் தமிழர்கள் சாப்பிடும் அய்யர்மெஸ்களை தாங்கிக்கொள்ளமுடியாது. தமிழர்களுக்கு குழம்பில் மீன்செதும்பல் கிடப்பது குமட்டலை உருவாக்கும். நாணப்பண்ணன் முதல்நாள் மீன்குழம்பு வைத்து இறக்கியதும் மீனை எல்லாம் பொறுக்கி மறுநாள் மீன்குழம்பில் போடுவதற்காக வைத்துவிடுவார் என்றுசொன்னார் மாதவண்ணன். நான் ஒரே ஒருமுறை ஒரு மீன்முள் கிடைக்கப்பெற்றேன். மத்திச்சாளை மலிந்த காலம் அது.

மும்பையில் அன்று தினம் இரண்டு ரூபாய் கிடைப்பது ஒன்றும் பெரிய வேலை அல்ல. கையும் காலும் உடைய யாருக்கும் தினம் பத்து ரூபாய் கூலி உண்டு. பதினொன்றாம் வகுப்பு பாஸ் ஆகியிருந்தால் மாதம் முந்நூறு ரூபாய் கொடுக்க பல்வேறு சேட்டுகள் தயராக இருந்தார்கள். அங்கே மிகப்பெரிய செலவினமே தங்குமிடம்தான். எங்கள் ஊரிலிருந்து மட்டும் பதினைந்துபேர் மும்பையில் இருந்தார்கள். நான் மாதவண்ணனின் அறையில் பங்காளியாக தங்கியிருந்தேன்

மாதவண்ணன் ஒரு வயலுக்கு அப்பால் ஆண்டிப்பொற்றையில் குடியிருந்த பாகீரதிமாமியின் மகன். இரண்டு வருடத்துக்கு ஒருமுறை ஊருக்கு வருவார். ஊரில் இருந்த காலங்களில் அவர்தான் கோயில் விழாக்களில் ’தேவி ஸ்ரீதேவி தேடிவருந்நூ ஞான்’ பாட்டை உருக்கமாக பாடுவார். நாலைந்து வருடங்களாகவே மாமி அவருக்கு பெண் பார்த்துவந்தாள். ‘என்னெடி விசாலமே…. அவனுக்கு பாம்பேயிலே கம்பேனியிலே நல்ல உத்தியோகம். மாசம்பிறந்தா கையிலே காசு….இவளுகளுக்கு என்ன திமிரு பாத்துக்கோ. குந்தம்தூக்கி பட்டாளத்துகாரனுகளை கெட்டுவாளுக. கம்பேனிக்காரனை கெட்டமாட்டாளுக…அவளுகளைச் சொல்லி குற்றமில்லை. அவளுகளுக்க தந்தையான்மாரைச் சொல்லணும்…விவரமில்லாத கூட்டம்’ மாமி சொன்னாள்.

மும்பையில் ரயிலில் வந்திறங்கியதும் அவரைத்தான் நினைத்தேன். மும்பைக்குள் நுழைந்தபோது நான்குபக்கமிருந்தும் மலையிறங்கிவந்த பாறைகளைப்போல கட்டிடங்கள் என்னை சூழ்ந்துகொண்டன. எல்லாமே மழையில் கறுத்த சுவர்களும் குப்பைகள் தொங்கும் பால்கனிகளும் கொண்ட பலமாடிக் கட்டிடங்கள். எல்லா கட்டிடங்களுக்கு முன்னாலும் மனிதர்கள் கூடிக்கிடந்தார்கள். எருமைகளுக்குப்பின்னால் சாணியும் முன்னால் தீனியும் கிடப்பதுபோல. அவர்கள் எல்லாரும் காத்திருந்தார்கள். எஞ்சியவர்கள் காத்திருப்பதற்காக சாலைகளில் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

ஒருமணிநேரம் சாலையோரத்தில் சொல்லிழந்துபோய் நின்றிருந்தேன். அந்தப் பரபரப்பில் எங்கே செல்வது என்ன செய்வது என்றே புரியவில்லை. வெளியே ஓடிய பேரோசையில் என்னுடைய உள்ளே ஓடிய சொல்லோடை வழிதவறி அவ்வப்போது உதிரிச்சொற்களாக மீண்டு வந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு முறை மீண்டும் வரும்போதும் வேதாளம் போல என் மீது ஏறி அமர்ந்து என்னை வதைத்த அதனிடமிருந்து அவ்வளவு நேரம் விடுதலை பெற்று இருக்கிறேன் என்று ஆறுதலுடன் எண்ணிக்கொண்டேன். மும்பையிலேயே இருந்துவிடுவது என்று முடிவெடுத்தேன். நான் எப்போதுமே நாடிய மக்கள்கூட்டம் அங்கே எல்லா சந்துபொந்துகளிலும் இருந்தது.

மேலே செய்யவேண்டியது என்ன என்று சிந்திக்க ஆரம்பித்து பின்பு சலித்து விலகிய கணமே மாதவண்ணன் நினைவு எழுந்தது. அவர் வேலைசெய்யும் கம்பெனியின் பெயர் மோதி ஆண்ட் மோதி மெஷின் டூல்ஸ் என்ற நினைவு எங்கோ ஆழத்தில் இருந்து கிளம்பி வந்தது. அந்த கம்பெனியை விசாரித்துச் சென்றேன். பகல் முழுக்க தேடி மாலை நாலரை மணிக்கு கண்டுபிடித்துவிட்டேன். நான் நினைத்ததைவிட பெரிய நிறுவனம். வெளியே இருந்த கூர்க்கா என்னை உள்ளே விட மறுத்துவிட்டார். அவரிடம் பேசிப்புரியவைக்க என்னிடம் மொழி இல்லை. வாசலிலேயே நின்றேன். இருட்ட ஆரம்பிக்கும் நேரத்தில் வெளியே வந்த கும்பலில் மாதவண்ணாவைப்பார்த்தேன்.

என் குரல் கேட்டு திரும்பிப்பார்த்தவர் சாதாரணமாக ‘நீயா?’ என்றார். நான் வேலைதேடி ஊரைவிட்டு வந்தேன், வந்த இடத்தில் என் பெட்டியை எவரோ திருடிவிட்டார்கள் என்றேன். அவர் அதிகம் ஆச்சரியப்படவில்லை. அப்படி சொந்தக்காரர்களோ ஊர்க்காரர்களோ வந்துகொண்டே இருப்பது வழக்கம் என்று பின்னால் தெரிந்துகொண்டேன். செல்லும் வழியில் ‘உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது?’ என்று கேட்டார். எட்டு ரூபாய் இருந்தது.

’சரி அது இருக்கட்டும்…’ என்று என்னை கூட்டிச்சென்றார். பஸ் ஏறி இறங்கி நடந்து இருட்டு பரவிய சந்துக்குள் நுழைந்து நாணப்பண்ணன் கடையை அடைந்தோம். அந்த முதல் சாப்பாடு எனக்கு மிகவும் ருசியாகத்தான் தெரிந்தது. அதன் விலை ஒரு ரூபாய்தான் என்று தெரிந்தபோது இன்னொன்றும் சாப்பிடலாமென நினைத்தேன். ஆனால் மாதவண்ணன் ஒரே சாப்பாட்டுடன் எழுந்திருந்ததனால் நானும் எழுந்தேன். அவரே பணம் கொடுத்தார்.

மாதவண்ணன் ஒரு பீடி பற்றவைத்துக்கொண்டார். புகை விட்டபடி தலைகுனிந்து நடந்தார். ஊரில் மாதவண்ணன் ஒளிந்து மறைந்துதான் புகைபிடிக்கமுடியும். இங்கே தெருவழியாக கவனமே இல்லாமல் புகையை ஊதிக்கொண்டு சென்றார். ஊரில் தன்னந்தனியாக இடைவழிகளில் நடக்கையில்கூட நடையும் முகமும் அவருடன் பலர் இருப்பதுபோலிருக்கும் . அடிக்கடி தோள்களை முட்டி முட்டி வழி எடுத்துச்சென்றபோதும்கூட இங்கே அவர் தன்னந்தனியனாக இருந்தார்

மாதவண்ணனின் அறை உண்மையில் ஒரு குடிசை. தகரக்கூரைக்குக் கீழே ஒருவகை அட்டையைக்கொண்டு சுவர்கள் கட்டியிருந்தனர். ஒரே அறை. கதவும் தகரம்தான். அதில் நுழைவதற்கு இரு செங்கற்கள் போடப்பட்டிருந்தன. அந்தத்தெருவிலேயே சாக்கடையும் ஓடியது. சாக்கடைக்குள் போடப்பட்ட கற்களை தாவித்தாவி மிதித்துத்தான் நடமாட முடியும். எதிரே வருபவர்கள் மிகத்துல்லியமாக வேறு கற்களை மிதித்துத் தாண்டிச்சென்றார்கள். சாக்கடை முழுக்க விதவிதமான பாலிதீன் தாள்கள் மிதந்தன. ஒரு கார் இருக்கையின் நுரைரப்பர் பரப்பு நீர் ஊறி பன்றியிறைச்சி போல ஒதுங்கிக்கிடந்தது.

மாதவண்ணனுடன் மேலும் நான்குபேர் அந்த அறையைப் பகிர்ந்துகொண்டிருந்தனர். நான்கு கொடிகளில் போடப்பட்ட விதவிதமான வேட்டிகள் பாண்டுகள் சட்டைகள் குர்த்தாக்கள் முழு அறையையும் அடைத்துக்கொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் ஒரு தகரப்பெட்டி. சிவப்பு அல்லது நீலநிறம் பூசப்பட்டவை. சிலபெட்டிகள் நிறத்தை முழுமையாக இழந்திருந்தன. அவை ஓரு மூலையில் மேல் மேலாக அடுக்கப்பட்டிருந்தன. ஓரமாக ஒரு கள்ளிப்பெட்டி. அதன்மீது ஒரு ஸ்டவ் மட்டும் இருந்தது. சுவர்களில் குருவாயூரப்பன் ,அய்யப்பன் படங்களுடன் பிரேம்நசீர், மது, ஜெயன் , ஜெயபாரதி, ஷீலா படங்களும் ஒட்டப்பட்டிருந்தன.

நாங்கள் போகும்போது நான்குபேர் விரிக்கப்பட்ட பாயில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். மாதவண்ணன் என்னை அறிமுகமெல்லாம் செய்யவில்லை. ‘வேலைக்கு வந்திருக்கான்’ என்றார். அவர்கள் என்னை கூர்ந்து பார்த்தார்களே ஒழிய ஒன்றும் சொல்லவில்லை. ஒருவர் கொட்டாவி விட்டுக்கொண்டு ‘சரியாச்சொல்லப்போனா இன்னும் எண்பத்திரண்டு நாள்….அதுக்குள்ள எல்லாம் சரியா போகணும்…நான் குருவாயூரப்பனுக்கு நேர்ச்சை விட்டிருக்கேன்’ என்றார்.

பெரும்பாலான மாலைநேரங்களில் அவர்கள் கணக்குகள்தான் போட்டார்கள். இன்னும் எத்தனை தவணை கட்டினால் சீட்டு முடியும். ஓணத்துக்கு இன்னும் எத்தனை நாள். இன்னும் எத்தனை மாதம் தாண்டினால் சம்பளஉயர்வு வரும். ஏன் இன்னும் வீட்டிலிருந்து கடிதம் வரவில்லை. அவர்கள் நடுவே அந்தக்கணக்குகள் எதிலும் சம்பந்தப்படாதவனாக நான் இருந்தேன். என்னை அவர்கள் பெரிதாகப்பொருட்படுத்தவுமில்லை. என் வயது ஒரு காரணம். அதைவிட முக்கியமானது நான் எந்தப்பொறுப்பும் இல்லாதவன் என்பது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சுமைகளைப்பற்றி மட்டும்தான் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் அனைவருமே நாணப்பண்ணனின் வாடிக்கையாளர்கள். ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் சமையல். மிக அபூர்வமாக என்றாவது ஒருநாள் கோழியோ மீனோ எடுத்துவந்து சமைப்பார்கள். செலவுகள் பகிர்ந்துகொள்ளப்படும். ஆனால் அதில் ஜார்ஜ் மாஸ்டர் கலந்துகொள்ள மாட்டார். அவருக்கு ஒவ்வொரு பைசாவும் முக்கியம். மாதச்சம்பளத்தை அப்படியே வீட்டுக்கு அனுப்பிவிட்டு பக்‌ஷீஸில் வாழும் வாட்ச்மேன் அவர்.

அறையின் சட்டங்களில் ஒன்று இரண்டுவாரம் வரை ஒருவன் வேலைதேடலாமென்பது. அதுவரை அறையைப் பகிர்ந்துகொள்ள வாடகை இல்லை. காசிருந்தால் சாப்பிடலாம், இல்லாவிட்டால் இரண்டுவேளைச் சாப்பாட்டுக்கு மற்றவர்கள் பணம் கொடுப்பார்கள். இரண்டு வாரம் தாண்டுவதற்குள்ளாகவே எனக்கு ஒரு கடையில் விற்பனையாள் வேலை கிடைத்துவிட்டது.

தேங்காய்நாரிலான பல்வேறுபொருட்களை விற்கக்கூடிய கடை. அவர்களின் சரக்குகள் மும்பையின் புறநகர்களில் எங்கோ இருந்தன. அங்கிருந்துதான் அவை வாங்குபவர்களிடம் செல்லும். நான் இருந்த எட்டடிக்கு எட்டடி கடையின் உரிமையாளர் முகமது யூனுஸ் என்ற கோழிக்கோட்டு மாப்பிளை. ஒரு கோணத்தில் வைக்கம் முகமதுபஷீரின் தம்பி போல இருப்பார். நான் ஹிட்லர்மீசை வைத்த ஒருவரை உயிருடன் பார்ப்பது அதுவே முதல்முறை. அது மீசை என என் மனம் ஏற்கவே நாலைந்து நாள் ஆகியது. அவரும் மேலுதட்டை முன்னால் நீட்டி மீசையை அசைக்கும் வழக்கம் கொண்டிருந்தார்.

ஆலப்புழாவில் உள்ள ஏதோ சொசைட்டியின் விற்பனை ஏஜென்ஸி அது. யூனுஸ் அதில் பங்குதாரர். அவரது அண்ணன்கள் ஊரில் மரக்கடை வைத்திருந்தார்கள். அவர் அதை ஆரம்பித்து எட்டு வருடங்கள் தாண்டி விட்டிருந்தது. ‘எந்த தொழிலுக்கும் ஒரு தொடக்கம் உண்டு’ என்று சொல்வார். ‘என் அண்ணா தொழில் ஆரம்பித்து பதிமூன்று வருடம் கழித்துதான் சூடுபிடித்தது…’

முஸ்லீமாக இருந்தாலும் எல்லா மாப்பிளைகளையும்போல அவருக்கும் சோதிடத்தில் பெரிய ஈடுபாடு இருந்தது. குருவாயூருக்கு நேரில் சென்று காணிப்பய்யூர் நம்பூதிரியிடம் கொடுத்து ஜாதகத்தை விரிவாகக் கணித்து குறித்து வைத்திருந்தார். அது அவரது மேஜைக்குள்ளேயே இருக்கும். அடிக்கடி அதை எடுத்து நுணுக்கமாக வாசித்து காலண்டரை வைத்து கணக்குபோட்டு பென்சிலால் ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொள்வார்

என் எதிரே ஒரு மிகமெலிந்த ஆங்கில இந்தியப்பெண். மரியா என்று பெயர். அவள் முன் ஒரு பழங்கால ரெமிங்டன் தட்டச்சு யந்திரம். அவளுக்குப்பின்னால் பீரோ. அதில் பல்வேறு பதிவேடுகள் கணக்கேடுகள். மேலே மூட்டையாக கட்டி வைக்கப்பட்ட பழைய ரசீதுகள். மரியா குதிகால் உயர்ந்த செருப்புகள் போட்டிருப்பாள். பெரும்பாலும் காபிநிற கவுன்கள். காதில் வளையம் தவிர நகைகள் கிடையாது. நான் மும்பையில் கண்ட எல்லா ஆங்கில இந்தியப்பெண்களுக்கும் மரியா என்றுதான் பெயர்.

அவளுக்கும் எனக்கும் பெரிய வேலை ஏதும் இல்லை. அந்தகடையைத் தேடிவந்து தேங்காய்நார் நார்க்கம்பளம் வாங்குபவர்கள் மிகமிக குறைவு. எங்கள் கடை கிட்டத்தட்ட சாலைமேலேயே பிதுங்கி நீண்டிருக்கும். சாலைவழியாகச் செல்பவர்கள் எல்லாம் கடைக்குள்ளேயே நடமாடுபவர்கள் போலத் தோன்றுவார்கள். ஆட்டோக்கள் விடும் கரும்புகை நேரடியாகவே கடைக்குள் வந்து நிறையும். மேலே ஓடிய சிறிய சிறகுகள் கொண்ட மின்விசிறியின் வேலையே சாலையில் இருந்து வரும் புகையையும் புழுதியையும் வெளியே தள்ளுவதுதான்.

காலையில் வந்ததுமே யூனுஸ் அன்றைய கடிதங்களுக்கான குறிப்புகளை எனக்கு வாய்மொழியாக தந்துவிடுவார். என்னுடைய ஆங்கிலம் மீது அவருக்கு நல்ல மதிப்பு. எல்லா கடிதங்களும் ஒரே உள்ளடக்கம் கொண்டவைதான். Sir, we are awaiting your early response… வகையறா. பணம் பல்வேறு இடங்களில் நின்றுவிட்டிருந்தது. விசாரிப்புகள் பாதியில் அறுந்து நின்றுவிட்டிருந்தன. எங்கோ ஏதோ தேடி வரவிருந்தது.

பத்துமணிக்கு தபால்காரர் வந்ததும் கடிதங்களை பிரிந்த்து கோப்பில்போடுவேன். தேவையானவற்றுக்கு மட்டும் சிறிய குறிப்பு எழுதுவேன். அவ்வளவுதான், வேலை முடிந்தது. நான் எழுதும் கடிதங்களை மரியா டக் டக் என்று மெதுவாக தட்டச்சு செய்வாள். அவளுக்கு உண்மையிலேயே தட்டச்சுப்பயிற்சி இருக்கிறதா என்று எனக்கு சந்தேகம். ஆங்கிலம் பேசக்கூடிய ஒருவருக்கு ஆங்கிலம் சரியாக எழுத வராது என்பதும் ஆச்சரியமாக இருந்தது.

மரியா நாலைந்து கடிதங்களை நாளெல்லாம் அடித்துக்கொண்டிருப்பாள். மிச்சநேரம் வெளியே வெறித்துப்பார்த்துக்கொண்டு தன்னிலையழிந்து மணிக்கணக்காக அமர்ந்திருப்பாள். அவள் ஆங்கில இந்தியப்பெண் அல்ல என நான் ஐயப்பட்டேன். மாநிறம், கறுப்புக்கூந்தல். வெள்ளைக்காரச் சாயலே இல்லை. ஆனால் மும்பையில் ஆங்கில இந்தியர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்றார் மாதவண்ணா. ‘பாத்து நடந்துக்கோ. சக்கை அரக்காக்கும் அவளுக… தொட்டா பின்ன சந்திவரை கேறி ஒட்டிப்போடுவாளுக’

ஆங்கில இந்தியப்பெண்களுக்குத் திருமணமே ஆவதில்லை என்றார் அறைநண்பரான அச்சுதன்குட்டி.அவர்களின் சமூகத்தில்தான் திருமணம் நடந்தாகவேண்டும். அதில் ஆண்கள் மிகக்குறைவு. அவர்களும் எப்படியாவது ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிடுவார்கள். பெரும்பாலான ஆங்கில இந்தியப்பெண்கள் அவர்கள் திரும்பி வருவதற்காகக் காத்திருக்கிறார்கள். அழகில்லாத பெண்களுக்கு அந்தக் காத்திருப்பே வாழ்க்கையாக ஆகிவிடும்.

ஆனால் மரியா என்னிடம் எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை. அவள் உடம்பில் சதையே இல்லை. மார்பகங்களே இல்லாத பெண்ணை அவ்வளவு நெருக்கமாக அப்போதுதான் பார்க்கிறேன். ஆனால் ஒரு பெண்ணை நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் ஒரு அழகு தென்பட ஆரம்பிக்கிறது. பெண்ணாக இருப்பதனாலேயே உள்ள அழகு அது. பெரும்பாலும் அசைவுகளின் நளினமாக அது வெளிப்படுகிறது.

மரியா தாள்களைத் தேடும்போது, பென்சிலை கவனமாகச் செதுக்கும்போது, கூர்ந்து நோக்கி தட்டச்சு எழுத்தை ஆராயும்போது, இரு கைகளாலும் குட்டைத்தலைமயிரை பின்னால் தள்ளி ரிப்பனால் கட்டும்போது, அமர்ந்ததும் கவுனை தொடைக்கு கீழே செருகி முட்டுக்கு கீழே இழுத்து விடும்போது இயல்பான மென்மை வெளிப்படும். அபூர்வமாக அவள் வாய்க்குள் எதையாவது முனகலாகப் பாடும்போது கண்களில் ஒரு கனிவு தெரியும்.

அவளை நான் பார்ப்பதை விரைவிலேயே அறிந்துகொண்டாள். ஆரம்பத்தில் சஞ்சலத்துடன் என் பார்வையை வந்து சந்தித்த அவள் கண்கள் பின்னர் என் ஆர்வத்தை புரிந்துகொண்டன. அதன்பின் அவள் என் கண்களைச் சந்திப்பதே இல்லை. ஆனால் இன்னும் உல்லாசம் கொண்டவளாக ஆனாள். அடிக்கடி பாடிக்கொண்டாள். அதிகநேரம் மேஜைக்குள் காகிதங்களைத் தேடினாள். அவள் கைகள் உள்ளே வெற்றிடத்தை அளைந்துகொண்டிருக்கின்றன என்று எனக்குத் தோன்றும்

நான் மதியம் பன்னிரண்டு மணிக்கே கிளம்பி நாணப்பண்ணனின் கடைக்குச் சென்று இரண்டுமணிக்குத்தான் வருவேன். ஒருமணிநேரம் காத்திருக்கவேண்டியிருக்கும். சாப்பிட்டுவிட்டு வரும்போது மரியா அவளுடைய வண்ணம்பூசப்பட்ட அலுமினிய சம்புடத்தில் கொண்டுவந்த உணவைச் சாப்பிட்டுவிட்டிருப்பாள்.

நான் சாப்பிட எழுந்தபோது அவள் என்னிடம் ஆங்கிலத்தில் ’நீ எங்கே சாப்பிடுகிறாய்?’ என்று கேட்டாள்.

’அருகேதான்’ என்று சொன்னேன்.

‘காத்திருந்து சாப்பிடவேண்டுமோ’?’

‘ஆம்…’

‘உணவு எப்படி இருக்கும்?’

‘மலிவு…’

அவள் புன்னகை செய்து ‘தரமானவற்றுக்காக காத்திருப்பதில் அர்த்தம் உண்டு’ என்றாள்

நான் மொண்ணையாக ‘மலிவு. அதனால்தான் காத்திருக்கிறேன்’ என்றேன்

‘நமக்கு அடிபப்டை உரிமையாக உள்ளவற்றுக்கே நாம் காத்திருக்கவேண்டியிருக்கிறது, இல்லையா?’

மையமாக புன்னகைசெய்துவிட்டுச் சென்றேன். அவள் என்ன சொல்லவந்தாள் என்று சாப்ப்பிட்டு முடித்தபின் புரிந்தது. இந்த நகரில் அபூர்வமான, அருமையான எவற்றுக்காகவாவது யாராவது காத்திருக்கிறார்களா என்ன?

மறுநாள் நான் சாப்பிடக்கிளம்பும்போது மரியா என்னிடம் ‘நீ அசைவம் சாப்பிடுவாய்தானே?’ என்றாள்

‘ஆமாம்’

‘சிக்கன்?’

‘ஆமாம்’ என்றேன். எனக்கு அவள் என்னசெய்யப்போகிறாள் என்று புரிந்து வாயில் எச்சில் நிறைந்தது.

அவள் இன்னொரு அலுமினிய டப்பாவை என்னிடம் நீட்டி ‘உனக்கு ஆட்சேபணை இல்லை என்றால்…’ என்றாள்.

கோழிக்கறி எங்கள் ஊரிலேயே அபூர்வ உணவு. அதிலும் கோழியைப்பொரிப்பது என்பது நினைத்தே பார்க்கமுடியாதது. நான் எலும்புகளைக்கூட விரும்பிச் சாப்பிட்டேன். அப்படிச் சாப்பிடுவது அவளுக்குத்தெரியக்கூடாது என்று நினைத்தாலும் கொஞ்ச நேரத்திலேயே என்னை மறந்துவிட்டேன்.

அவள் ‘பிடித்திருந்ததா?’ என்று கேட்டாள். அதை ஏன் அப்படிக் கூர்ந்து பார்த்துக்கொண்டு கேட்டாள் என்று தெரியவில்லை.

தடுமாறியபடி ‘ஆமாம்’ என்றேன். சட்டென்று நாணப்பண்ணனின் நினைவு வந்தது. அவரது குடும்பமும் அங்கே சமைப்பதைத்தான் உண்கிறது. நாங்களாவது இப்படி எதையாவது சாப்பிட முடியும். அவர்களுக்கு வேறு வழியே இல்லை.

அதற்கு அடுத்த திங்கள் கிழமை எனக்கு மீண்டும் சிக்கன் கொண்டு வந்து தந்தாள். அதை நான் மாதவண்ணனிடம் சொன்னேன். ‘டேய் தூண்டிலாக்கும் போடுதா…மயிரே…அது சூண்டையிலே கொருத்து வச்ச சிக்கனாக்கும். தின்னா கொதவளையிலே குத்தி நின்னுபோடும் பாத்துக்க’ என்றார்

‘நான் என்ன செய்யணும் அண்ணா?’ என்றேன்

‘அவ அடுத்த தவணை சிக்கன் குடுக்கும்பம் வேண்டாம்னு சொல்லிடு’

‘சும்மா வேண்டாம்ணு சொல்லணும்… வயிறு செரியில்ல, இப்பம்தான் சாப்பிட்டேன், பிறவு பாக்கலாம் , ஒண்ணும் சொல்லப்பிடாது. வேண்டாம், அம்பிடுதான். அவளுக்கு தெரிஞ்சிரும்’ என்றார் அருணாச்சலம்நாடார்

ஆனால் அடுத்த தடவை அவள் சிக்கன் தந்தபோது என்னால் அதைச் சொல்லமுடியவில்லை. அவளுடைய முகத்தில் தெரிந்த கனிவு அதைச் சொல்லவைக்கவில்லை. சிக்கன் சாப்பிட்டதை அவர்களிடம் சொல்லாமல் இருந்துவிட்டேன்.

அவள் என்னிடம் ‘நீ மாதுங்கா வந்திருக்கிறாயா?’ என்றாள்

‘இல்லை’ நான் உண்மையில் மும்பையையே அறிந்திருக்கவில்லை. நானறிந்ததெல்லாம் நாலைந்து தெருக்கள் மட்டும்தான்.

‘மாதுங்காவில் எங்கள் குடியிருப்பு இருக்கிறது. நானும் என் அம்மாவும் மட்டும்தான் இருக்கிறோம்’

‘ஓ’

‘நீ ஏன் இந்த ஞாயிற்றுக்கிழமை என் வீட்டுக்கு வந்து சாப்பிடக்கூடாது? அம்மா உன்னை அழைக்கச் சொன்னாள்’

நான் மூச்சுத்திணறினேன். என்ன பதில் சொல்வது என்று தேடிய என் மூளை அந்தரத்தில் நின்றது.

‘நான் உன்னை எதிர்பார்க்கிறேன்’

’சரி’ என்றேன்.

‘ஞாயிற்றுக்கிழமை நான் இங்கே வருகிறேன். அந்த இனிப்புக்கடை முன் நிற்கிறேன். நீ வந்துவிடு. நாம் பஸ்ஸிலேயே போய்விடலாம்’

‘சரி’

நான் அதே மூச்சுத்திணறலுடன் நடமாடினேன். ஒருநாள் கழிந்ததும் இது என்ன சில்லறை இம்சை, நடப்பது நடக்கட்டும் என்று அதை மனதிலிருந்தே அழித்தேன். ஞாயிற்றுக்கிழமை காலையில் காத்திருந்தது போல சரியாக வந்து என் குரல்வளையைப்பிடித்துக்கொண்டது அந்த நினைவு.

காலையில் பல்தேய்த்துவிட்டு அறையிலேயே அருணச்சலம் நாடார் சுட்ட கோதுமைதோசையை சாப்பிட்டேன். மெல்ல நடந்து என் அலுவலகம் வரை வந்து தூரத்தில் நின்று அதைப்பார்த்துக்கொண்டிருந்தேன். மூடிய கடை கண்மூடித்தூங்கிக்கொண்டிருப்பதுபோலிருந்தது. பகலில் அது சோர்வுடன் எதையோ எதிர்பார்த்துக்கொண்டிருப்பதுபோலிருக்கும்.

சற்று நேரத்தில் நான் அவளைக் கண்டேன். இளஞ்சிவப்பு நிறத்தில் புதிய கவுன் அணிந்திருந்தாள். அதன் முகப்பில் செந்நிற ரோஜா போல ஒரு குஞ்சலம். தலையில் சிவப்புநிற ரிப்பன். சிவப்பு நிறமான பை. கைக்குட்டையால் முகவாயில் வியர்வையை ஒற்றியபடி நான்குபக்கமும் சிறிய பதற்றத்துடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

கால்களைப் பெயர்ப்பதற்குச் சற்று விசை தேவைப்பட்டது. அதன்பின் வேகமாகவே நடக்கமுடிந்தது. திரும்பித் திரும்பி சந்துகளில் நடந்து பெரிய சாலைக்கு வந்து மறுபக்கம் தாண்டி கம்பிவேலி இடைவெளி வழியாக ரயில்நிலையத்துக்குள் நுழைந்தேன். எப்போதும் மனிதத்திரள் முட்டிமோதும் ரயில்நிலையம். அதில் நான் என்னை பொருத்திக்கொள்ள ஒரு கச்சிதமான இடைவெளி இருந்தது.

அங்கேயே இருட்டுவது வரை அமர்ந்திருந்தேன். ரயில்கள் கூக்குரலிட்டபடி சென்றுகொண்டிருந்தன. இரும்பு அலறுவதுபோல. எவ்வளவு இரும்பு! ஓடி ஓடி தேய்ந்துகொண்டே இருக்கிறது இரும்பு. நவீன நாகரீகம் இரும்பை கண்டுபிடித்தபின்புதான் ஆரம்பித்தது என்று வாசித்திருக்கிறேன். இரும்புவெள்ளம் என்று ஒரு ரஷ்யநாவல். புரட்சியை இரும்பின் எழுச்சி என்கிறார். அலறிகூக்குரலிட்டு முனகி தேய்ந்து கொண்டிருக்கிறது. மொத்த இரும்பே தேய்ந்து மறைந்துவிட்டபின் என்ன ஆகும். என்ன மடத்தனமான சிந்தனைகள் என்று கூடவே ஓர் எண்ணம்.

இருளில் திரும்பி நடந்தேன். இனிப்புக்கடைப்பக்கம் போய் அந்த இடத்தைப்பார்த்தாலென்ன என்று தோன்றியது. ஆனால் ஒருவேளை அவள் அங்கே நின்றிருந்தால் என்ன செய்வது? சேச்சே, அதிகபட்சம் ஒருமணிநேரம் நின்றிருப்பாள். இல்லை இரண்டு மணிநேரம். அதற்குமேல் நிற்க முடியாது. திரும்பிச்சென்றிருப்பாள். அவளுக்குப்புரிந்திருக்கும். புரியாமலிருக்கும் அளவுக்கு அவள் முட்டாள் இல்லை.

ஆனால் புரிந்துகொள்வது எது? அதுவன்றி இன்னொன்று உள்ளது அகத்தில். அது நம்ப விழைகிறது. தக்கவைத்துக்கொள்ள முயல்கிறது. பிடிவாதமாக எதிர்பக்கம் திரும்பிக்கொள்கிறது. எதையும் கேட்கவும் காணவும் மறுக்கிறது. அவள் இன்னும்கூட அங்கேயே நின்றிருக்கலாம். இருட்டில், மின்னும் கண்களுடன்… என்னால் ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியவில்லை. திரும்பி அறைக்குச் சென்றேன்.

என் அறைக்கு அவள் வந்துவிடுவாளா என்ன? அலுவலகத்தில் என் அறைவிலாசம் கொடுத்திருந்தேன்..இப்போது அவளிடம் விலாசம் இருக்காதென்றாலும் நாளை அவளால் அதை எடுத்துப்பார்க்கமுடியும். நான் நாளை அலுவலகம் செல்லாவிட்டால் கண்டிப்பாக அவள் தேடிவருவாள். அவளுக்கு ஒன்று தெரியும், அவள் என் முன் நிற்கும்போது வலிமை மிக்கவள். அவளுடைய கண்களை கண்டபின் நான் அவளை மறுக்கமுடியாது. ஆம், கண்டிப்பாக வருவாள். என்னால் இனிமேல் அந்த அலுவலகம் செல்ல முடியாது. அவளால் இங்கே வராமலிருக்கவும் முடியாது.

இரவெல்லாம் தூங்கவில்லை. எழுந்து சென்று இருளைப்பார்த்துக்கொண்டு நின்றேன். நான் வளர்ந்த ஊர், அம்மா அப்பா எல்லாமே எங்கோ இருந்தன. நான் ஒருபோதும் அங்கே திரும்பிச்செல்லமுடியாதென்பதுபோல. ஆனால் அங்கிருந்து இங்குவரை ஒரே இருட்டு நீண்டு அகன்று பரவியிருந்தது. பசைபோன்ற இருட்டு. கையால் அதை அளையமுடியும் என்று தோன்றியது. அள்ளி அள்ளிக்குடிக்கமுடியும் என்று தோன்றியது.

மரியா இன்னும்கூட அங்கேயே நின்றிருக்கலாம். காத்திருப்பு என்பதில் ஒரு நம்பிக்கை மிச்சமிருக்கிறது. திரும்பிச்சென்றுவிட்டால் அது கூட இல்லாமலாகிவிடுகிறது. அசட்டுத்தனம். ஏன் இப்படியெல்லாம் சிந்தனை ஓடுகிறது?

மறுநாள் அதிகாலையிலேயே மாதவண்ணனிடம் ஏதும் சொல்லாமல் கிளம்பிவிட்டேன். ரயில்நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து மின்ரயிலில் பெரிய ரயில்நிலையம் சென்று அங்கிருந்து கிடைத்த முதல் வண்டியில் ஏறிக்கொண்டேன். இரண்டு மணிநேரத்துக்குப்பின் எங்கோ ஒரு சிறிய ரயில் நிலையத்தில் பரிசோதகரால் இறக்கி விடப்பட்டேன். ‘சாலா ,மாதர் சோத்… ’ என்று பல்லைக்கடித்தபடி என் கன்னத்தில் ஓங்கி அறைந்தபின் ரயில் நிற்பதற்கு முன்னரே தள்ளிவிட்டுவிட்டார்.

ரயில் சென்றபின் அந்த ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தேன். வடக்கே ஔரங்காபாத் செல்லும் ரயில்கள் அவ்வழியாகச் சென்றன. நிறைந்து வழிந்த பெட்டிகளுடன் கனத்து உறுமிச்சென்றன அவை. சென்ற வழிகளில் சிறுநீர் சொட்டி வெயிலில் ஆவியாகியது. ரயில் நிலையம் மிக நீளமானது. அதன் நுனிவரை நடந்தேன். சிமிண்ட் பெஞ்சுகளில் அனேகமாக எவரும் இல்லை. வெயில் இருந்தாலும் காயாதபடி குளிரும் இருந்தது. பெஞ்சில் அமர்ந்துகொண்டு தண்டவாளத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

கூரிய வாள்போன்ற தண்டவாளம்.. நேராகப்போடப்பட்டிருந்தால்கூட தொலைவு வரை தெரியும்போது வாளின் வளைவுகூடிவிடுகிறது தண்டவாளத்தில். வெயிலில் அதன் விளிம்பு மின்னியது. அந்த வாள் நினைத்திருக்காத ஒரு கணத்தில் சட்டென்று சுழன்று அங்கிருக்கும் அத்தனை பேரில் தலைகளையும் சீவிவிடும் என்று கற்பனைசெய்தேன்.

எனக்கு நாலைந்து பெஞ்சுக்கு அப்பால் இன்னொருவன் அமர்ந்திருந்தான். அதற்கு மிக அப்பால் இன்னொருவன் இருந்தான். உதிரி உதிரியாக நாலைந்துபேர் இருந்தார்கள். அனைவருமே எங்கும் போகாதவர்கள் போலத்தென்பட்டனர். தண்டவாளத்தை, அப்பால் ஓய்ந்து நின்ற ரயில்களை, கழற்றப்பட்டதனால் கைவிடப்பட்ட வீடுகள் போல நின்ற தனிப்பெட்டிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்

என் அருகே புல்லடர்வுக்கு நடுவே துருப்பிடித்துக்கொண்டிருந்த ஏதோ ஒரு இரும்புப்பொருள் இருந்தது. பெட்டிபோலவும் இயந்திரம் போலவும் தோன்றியது. செங்காவிநிறத்தில் அதன்மீது படிந்த துரு சில இடங்களில் சேறு போல அப்பியிருந்தது. அமைதியாக அவை மட்கி உதிர்ந்து அழிந்துகொண்டிருந்தன.

மனிதர்களின் கால்கள் மிதித்து மிதித்து காலத்தைப்பின்னால் தள்ளிக்கொண்டிருந்தன. எழுந்து எங்காவது செல்லவேண்டுமென நினைத்தேன். ஆம், காசி. ஆனால் அது எங்கே இருக்கிறது? வடக்கேதான். இதுவே வடக்கு. இன்னும் வடக்கு. வடக்கு நோக்கிச் செல்பவர்கள் வேறு வழியில்லாமல்தான் இமையமலையில் சென்று முட்டிக்கொள்கிறார்கள்.

சட்டென்று நான் விசும்பி அழ ஆரம்பித்தேன். அழ ஆரம்பித்தபோதுதான் எனக்கு அழுகை அவ்வளவு தேவைப்படுகிறது என என் மனம் அறிந்தது. அழுது அழுது ஓய்ந்தபோது மொத்தத் தன்னிரக்கமும் இன்னும் கெட்டிப்பட்டிருந்தது. கூடவே பசித்தது. எழுந்து சென்று ஒரு டீயும் பன்னும் சாப்பிட்டேன். ஊருக்குள் சென்றாலென்ன என்று தோன்றியது. ஆனால் அதற்கு கால்கள் மறுத்தன.

திரும்பி வந்து அந்த சிமிண்ட் பெஞ்சிலேயே அமர்ந்துகொண்டேன். அப்பால் அமர்ந்திருந்தவர்களை கூர்ந்து பார்த்தேன். அழுக்குச் சட்டை, கறைகள் கொண்ட பாண்ட். பரட்டைத்தலை. ஒருவன் தலையை இல்லை இல்லை என்பது போல ஆட்டிக்கொண்டே இருந்தான். அப்பால் ஒருவன் காய்ந்தபூவரசு இலைத் தொன்னையில் விற்கப்பட்ட ஒரே ஒரு இட்லியை சிறிய மரக்குச்சியால் கிண்டி துளித்துளியாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

ரயில்கள் சென்று சென்று மறைந்தன. ஒரு தண்டவாளத்தில் ரயில் செல்லும்போது பிற தண்டவாளங்கள் நடுங்கி அதிர்ந்தன. மொத்த தண்டவாளப்பின்னலும் சேர்ந்து ஒரு வகையான சில்ல்லென்ற ஒலியை உருவாக்கின. அதை என்னால் சகிக்க முடியவில்லை. எழுந்து அது காதில்விழாத தூரத்துக்குச் சென்றுவிடவேண்டுமென்று நினைத்தேன். ஆனால் எழுந்திருக்கமுடியவில்லை. நான் அங்கே ஏன் அமர்ந்திருக்கிறேன் என்று கேட்டுக்கொண்டேன். யாராவது பார்த்தால் எதற்காகவோ காத்திருப்பதாக நினைக்கலாம். உண்மையில் எதையாவது காத்திருக்கத்தான் செய்கிறேனா என்ன?

சட்டென்று நாணப்பண்ணனின் கடைக்குவெளியே காத்திருப்பதுபோல உணர்ந்தேன். ரயில்களின்சத்தம் சமையலறைப்பாத்திரங்களின் ஒலி போலக் கேட்டது. இன்னும் எத்தனைபேர் எனக்கு முன்னால். அதோ அந்த அழுக்குச்சட்டைக்காரன். அவனுக்கு முன்னால் நிற்கும் வழுக்கையனையும் சேர்த்துக்கொள்ளலாம். உள்ளே சோறும் குழம்பும் கறியும் தட்டுகளில் விரிகின்றன. வாசனை எழுவதுபோலிருந்தது. மூன்றாவதாக இருந்த ஆள் சாப்பிட்டுவிட்டு கீழே போட்ட தொன்னையை மீண்டும் எடுத்து அதில் ஒட்டியிருந்த துளிகளை கையால் தொட்டு எடுத்து வாயில் வைத்தான். தாடியுடன் கூடிய தாடை அசைந்தது

கோணலாக உள்ளே வந்த ஒரு ரயிலின் தலை சத்தமில்லாமல் திரும்பி நேராக என் நடைமேடைநோக்கி வந்தது. அதன் ஒலி மேலே இரும்புப்பாலத்தில் எதிரொலிக்க உருகிய மெழுகில் சறுக்கி வருவதுபோல சத்தமில்லாமல், மென்மையாக வந்துகொண்டிருந்தது. மூன்றாவதாக இருந்த ஆள் அழைக்கப்பட்டது போல, ஆயத்தமாவது போல எழுந்தான். சட்டைநுனியை நன்றாக இழுத்துவிட்டுக்கொண்டான். ரயிலை நோக்கி விடுவிடுவென நடந்தான்

நிகழ்ந்தபின்னரே என்ன என்று புரிந்தது. அவன் ரயில்முன் பாய்ந்துவிட்டிருந்தான். பதறி எழுந்துவிட்டேன். ஒன்றும்புரியவில்லை. எனக்கு அப்பால் பெஞ்சில் அமர்ந்திருந்தவன் எழுந்து கைகளை தன் விலாவில் இருமுறை வேகமாகத் தேய்த்துக்கொண்டு என்னைப்பார்த்தான். ரயில் என்னைக்கடந்து சென்றது. முழுமையாகவே தாண்டிச்சென்று அப்பால் பெரிய ஊளையும் கிரீச்சிடலுமாக நின்றது. அதிலிருந்து சிலர் இறங்கி ஓடிவந்தனர். கரிய கோட் அணிந்த இருவர் இறங்கி கையில் இருந்த குறிப்பேடுஅட்டைகளை சுழற்றியபடி நிதானமாக நடந்தனர். நீலச்சட்டை அணிந்த ஒருவன் கைகளை ஆவேசமாக வீசி வீசி சுட்டிக்காட்டினன். அவன் லேசாகக் குதிப்பது போலிருந்தது

ரயிலுக்குக் குறுக்காகப் பாய்பவர்கள் சிதைந்து சின்னபின்னமாவார்கள் என நினைத்திருந்தேன். அந்த ஆளை ரயில் கொஞ்சதூரம் இழுத்துவந்து போட்டிருந்தது. குப்புறக்கவிழ்ந்து மண்ணை அள்ளிப்பற்றியது போலக் தண்டவாளத்திற்கு இப்பால் கிடந்தான். அவனுடைய ஒரு கால் விசித்திரமாக உடைந்து மடிந்திருந்தது. அதன்பின்னர்தான் அவனுக்குத் தலை இல்லை என்பதைக் கவனித்தேன். தலையிருந்த இடத்தில் இருந்து சிவப்புக்குழம்பு சிதறியிருந்தது

அவன் குதித்த இடத்தில் தண்டவாளத்தின் நடுவே எடுத்து வைக்கப்பட்டதுபோல தலை இருந்தது. சிறிய மண்பானை போல. பரட்டைத்தலைக்குக்கீழே வாய் பழுப்புநிற பற்களுடன் லேசாகத் திறந்து வெறித்த கண்களுடன் ஏதோ சொல்ல வருவதுபோல தெரிந்தது.

அந்த தலையின் பார்வையை நான் சிலநாட்களில் மறந்துவிட்டேன். ஆனால் அவன் குதித்தபோது நடுவே இருந்த இரண்டாமன் என்னைப்பார்த்த பார்வையைத்தான் நெடுநாள் கனவுகளில் திரும்பத்திரும்ப கண்டுகொண்டிருந்தேன்.

முந்தைய கட்டுரைஆறு மெழுகுவர்த்திகள் – ஒரு கசப்பு
அடுத்த கட்டுரைதமிழ் மேகம்