புறப்பாடு II – 4, இரும்பின்வழி

என்னை ஜோலார்ப்பேட்டையில் ரயிலில் இருந்து இறக்கிவிட்டார்கள். டிக்கெட் எடுக்கவில்லை. டிக்கெட் எடுக்கக் கூடாதென்று நினைக்கவில்லை. எங்கே செல்வது என்ற திட்டமில்லாமல் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் நின்றேன். மூன்றுநாள் திருவனந்தபுரத்தில் அலைந்தபின் ரயில் நிலையம் என்னுடைய இடமாக ஆகியது. நிறுத்திவைக்கப்பட்ட ரயில்களில் ரகசியமாக இரவு தூங்கமுடியுமென்பதை கற்றுக்கொண்டேன்

ரயிலில் எனக்கு ஓர் ஆறுதல் இருந்தது. தண்டவாளத்திலும் இரும்புச்சக்கரங்களிலும் இரும்பாலான கனத்த பெட்டிகளிலும் எல்லாம் ஓர் உறுதி இருந்ததை உணர்ந்தேன். ரயிலின் விசில், அதன் நெற்றியில் சுடரும் வெளிச்சம், அதன் நிதானமான தாளம் திட்டவட்டமாக அதிகரிக்கும் விதம் அனைத்துமே எனக்குப்பிடித்திருந்தது. ரயில் ஒரு கறாரான அப்பா. அல்லது தலைமை ஆசிரியர். அனைத்தையும் விட ரயில் நகரத்துக்குள் ஓடுவதில்லை. கேரளத்துக்குள் ஓடுவது கூட இல்லை. அது காசியில் இருந்தும் டெல்லியில் இருந்தும் வருவது. இந்தியாவை முழுக்க ஓடி அளந்துகொண்டிருப்பது

அன்றெல்லாம் ரயில்நிலையத்தில் எந்நேரமும் கூட்டம். திருவனந்தபுரம் ரயில்நிலையத்திற்குள் நுழைய பிளாட்பாரம் டிக்கெட் எடுக்கவேண்டியதில்லை. தண்டவாளத்தின் எல்லாப்புறங்களும் திறந்து கிடந்தன. முக்கால்வாசிப்பேர் ரயில்நிலையத்திற்குச் சம்பந்தமில்லாமல்தான் உள்ளே வருவார்கள், வெளியே செல்வார்கள். ரயில்நிலையம் முழுக்க எந்நேரமும் பெரும் கூட்டம் . இரைச்சலுடன் வந்து நின்ற ரயிலைக் கண்டதும் திறக்கப்பட்ட மடைகள் நோக்கி செல்லும் ஏரித்தண்ணீர் போல அத்தனைபேரும் ரயிலின்கதவுகளை நோக்கி குவிந்து உந்திப்பெருகிச்சென்றனர். அக்கணத்தில் நானும் முடிவெடுத்து அவர்களுடன் சென்று ஏறிக்கொண்டேன்.

சேலம்வரை என்னுடன் அந்த ரயில்பெட்டியில் பயணம்செய்தவர்களில் பாதிப்பேரிடம் டிக்கெட் இருந்திருக்காது என்பதில் சந்தேகமே இல்லை. பலவகையான கூலித்தொழிலாளர்கள், சிறுவணிகர்கள், பிறவகைத் தெருவுயிரிகள்தான் அதிகம். டிக்கெட் பரிசோதகர் உள்ளே வந்து வெளியே செல்லமுடியாது. அந்த அளவுக்குக் கூட்டம். ஆணும்பெண்ணும் அனைத்துப்பண்பாட்டுச்சுவர்களையும் தாண்டி பிதுங்கி ஒன்றாக மாறிய உடல்தொகுதி. பல அடுக்குகளாக மக்கள். தரையில் ஓர் அடுக்கு. பெஞ்சுகளில் அமர்ந்திருப்பவர்கள் இன்னொரு அடுக்கு. மேலே தட்டுகளில் அமர்ந்திருப்பவர்க்ள் மூன்றாம் அடுக்கு. முகங்களும் கால்களும் வயிறுகளும் எல்லாம் ஒன்றுகலந்த தசைப்பரப்பு

அன்று வளைகுடாப்பணத்தின் வருகையால் கேரளம் முழுக்க கட்டிடங்கள் கட்டிக்கொண்டிருந்தார்கள். மேற்குமலைக்கு இந்தப்பக்கம் தமிழகம் தொடர்ந்து மழையில்லாமல் கிடந்தது. திருப்பூரும் ஈரோடும் மக்களைக் கைவிட்டன. நாமக்கலும் கரூரும் உருவாகி வரவில்லை. தமிழகத்தின் வறண்டபகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் பஞ்சம்பிழைக்கக் குடிபெயர்ந்துகொண்டிருந்தனர். கேரளத்தின் தெருக்கள் முழுக்க தமிழர்கள் வாழ்ந்தனர். கட்டப்படும் கட்டிடங்களின் அடியில் செங்கல்லடுக்குகளுக்கும் மணலுக்கும் சிமிண்ட்மூட்டைகளுக்கும் நடுவே சாக்குப்படுதா கட்டி குடும்பங்கள் தங்கியிருந்தன. நடைமேடையில் சமைத்து உண்டு தார்ப்பாய்களுக்கு அடியில் தூங்கினர்.இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் தமிழர்கள் மழைநீரில் வண்டல் வந்து படிவதுபோல சாலையோரங்களில் சேர்ந்துகொண்டிருந்தனர்.

தென்கேரளத்தில் ராமநாதபுரம் கோயில்பட்டிக்காரர்கள் அதிகம். வடகேரளத்தில் அதிகமும் சேலம் மாவட்டத்தினர். வேலூர்மாவட்டத்தினர் பெங்களூரில். மும்பையில் எல்லாருமே கலந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒருவகைத் தோற்றமிருந்தது. வடதமிழகத்தினருக்கு வழுக்கை அனேகமாக இருப்பதில்லை. முன்நெற்றியில் செம்பட்டை ஓடிய முடி கொத்தையாக துருத்தி நிற்கும். பெண்கள் கனத்தகூந்தலை பெரிய சுருளாகச் சுருட்டி வைத்திருப்பார்கள். தென்தமிழகத்தினர் பெரும்பாலும் வழுக்கை. பெண்கள் பசுவின் வாலளவுக்கே கூந்தல் கொண்டவர்கள். வடதமிழகத்தில் ஆண்கள் சிவந்தபட்டி போட்ட காடாத்துணி அண்டர்வேர் போட்டிருகக் தென்தமிழகம் முழுக்க நீலநிற கெட்டிக்கால்சட்டைதான் அடியில். வடதமிழகத்தினருக்கு உடலில் உப்புவீச்சம் என்றால் தென்தமிழகத்தினருக்கு வெடிமருந்துகலந்த உப்புவாடை.

ரயிலின் பொதுப்பெட்டிகளில் எல்லாம் மெலிந்த கரிய உடலும், அழுக்கு உடையும், கறைபடிந்த பற்களும், வறண்டபுல் போல பரட்டைத்தலைமயிரும்கொண்ட கிராமத்துமக்களின் உரத்தபேச்சுகள், கூச்சல்கள். அலுமினியப்பானைகளையும் பிளாஸ்டிக்சாமான்களையும் வெள்ளையாகப்பிய்ந்து நூல்வழியும் நைலான் உரச்சாக்குப்பையில் போட்டு கட்டி எடுத்துக்கொண்டு ஆண்கள். பிய்ந்த தோள்பைகளிலும் துருப்பிடித்த டிரங்குப்பெட்டிகளிலும் துணிகளைத்திணித்து தலையிலும் தோளிலும் தூக்கிக்கொண்டு இடுப்பில் கைக்குழந்தைகளுடன் பெண்கள். அக்காக்களின் இடுப்பிலும் அண்ணாக்களின் பிடியிலும் அம்மாக்களின் அதட்டல்களும் கட்டுப்பட்டு எண்ணை ஒட்டிய தலைமயிரும் , மூக்குப்பீ பக்கவாட்டில் தீற்றப்பட்ட கன்னங்களும், பெரிய சோழிக்கண்களும் கொண்ட குழந்தைகள் ஆர்வமிரட்சியுடன் ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டு ஐந்துபைசா வெல்லமிட்டாய்களை சப்பின. அனேகமாக கிழவிகளோ கிழவிகளோ பெரும்பாலும் கண்ணில்படுவதில்லை. அவர்களை எல்லாம் எப்படி எங்கே விட்டுவிட்டு இவர்கள் கிளம்பினார்கள்?

கழிப்பறைகளைத் திறந்து உள்ளேயும் ஆட்கள் குந்தியிருந்தார்கள். இறுக்கிச்செருகப்பட்ட கூட்டத்தில் இருந்து எழுந்திருக்கமுடியாமையால் ஆட்கள் தரையிலேயே மௌனமாக சிறுநீர் கழித்தனர். இருமி இருமி கீழேயே காறித்துப்பினர் சிறுநீரும் சளியும் பெட்டிமுழுக்க மிதிபட்டன. எவரும் சாப்பிடுவதுபோலவோ தண்ணீர்குடிப்பதுபோலவோ தெரியவில்லை. அவர்களெல்லாருமே வேலைசெய்து சேர்த்த சிறிய தொகைகளுடன் ஊருக்குச் செல்பவர்கள். கல்யாணங்கள், சாமிகும்பிடுதல்கள், திருவிழாக்கள் ஏதாவது இருக்கும். எல்லாருக்கும் ஏதோ ஒரு போதை இருந்தது. பெண்கள் நார்நாராக புகையிலையை கிழித்து கடைவாய்க்குள் செருகிக்கொண்டனர். ஆண்கள் பாக்கைத்தட்டி கசக்கி வாய்க்குள் போட்டு அதக்கினர். கன்னங்கள் குழிந்து இழுபட பீடி இழுத்தனர். மூக்குப்பொடியை மூக்கிலும் ஈறுகளிலும் தடவிக்கொண்டனர். பசிக்காமல், தாகமெடுக்காமல் இருக்க அது உதவுகிறதா என்ன?

அன்றுதான் அவர்களில் ஒருவனாக ஆனேன். மிக எளிதாக என் உடல் அவர்களுடன் கலந்து அடையாளமிழந்தது. உண்மையில் என் உடலை வேறு மனித உடல்கள் நான்குபக்கமும் நெருக்கியபோது ஓர் ஆழ்ந்த நிம்மதியை உணர்ந்தேன். என் உடல் பலபக்கங்களிலும் சிதறி பரவுவதாக ஒரு பிரமை என்னை துரத்தியிருந்தது அன்று. அது இனிமேல் சாத்தியமில்லை. என்னை இவர்கள் அழுத்திப்பிடித்து நானாகவே வைத்திருப்பார்கள். வெம்மையான மென்மையான உடல்கள். மனிதவாடை

பெஞ்சை ஒட்டி நின்றிருந்தவன் கால்கடுத்தபோது அமர்ந்தேன். தூக்கம் வந்து உடலை பெரிய எடையாக உணரச்செய்தபோது சாய்ந்துகொண்டு கண்ணயர்ந்தேன். அதன்பின்பு காலடியில் இடமிருப்பதை கண்டேன். மர இருக்கைகளுக்கு அடியில் அமர்ந்திருப்பவர்களின் கால்களுக்கு அப்பால் ஆட்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். காலைநீட்டி உள்ளே சென்றேன். சில கணங்கள் அந்த தூசும் நாற்றமும் சூழ்ந்துகொண்டாலும் முதுகு அபாரமான இதத்தை உணர்ந்தது. என்னைச்சுற்றில் கால்களால் ஆன புதர்க்காடு. ரயிலின் அதிர்வு நேரடியாகவே உடலுக்கு வந்தது.

ரயில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தது. உறுதியாக, திட்டவட்டமாக. ஆளப்புடி ஆளப்புடி என்று அது சொல்வதுபோல முதலில் தோன்றியது. பின்னர் டெல்லிட்டக்கு டெல்லிட்டக்கு என்று தோன்றியது. அதிவேகமான டெல்லிட்டக்கு. பின்பு எங்காவது வேகம் குறைகையில் டெல்ல்லி ட்ட்டக்க்கு என்று அழுத்தமாக. நிலையத்தில் நிற்கையில் ஒரு பெரிய இரும்புமுனகலுடன் டெல்ல்ல்லீ.. பின்பு ஓர் உக்கிரமான பெருமூச்சு. மீண்டும் ஒரு சீறல். டெல்ல்லீ டாக்கூ…இரும்புப்பாலங்களில் ஏறும்போது அந்த உச்சரிப்பு ராட்சதனின் அலறலாக ஆகிறது. டெல்லீ டக் டெல்லிட் டக்.

டெல்லி. அது எங்கே இருக்கிறது. இந்தியாவின் தலைநகரம். இந்தியாவில் ஓடும் எல்லா ரயில்களும் டெல்லியைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. டெல்லி வெள்ளைக்காரனின் நகரம். ரயிலும் வெள்ளைக்காரன் போட்டது. ’ வாழைக்கொலைய மணிப்பொச்சம்கயிறு போட்டு கட்டுறமில்லாலே? அதமாதிரி ரயில்பாதைய போட்டு வெள்ளக்காரன் இந்தியாவ ஒண்ணா கட்டினான்’ தங்கையாநாடார் சாரின் வகுப்பு. அதன்பின் சுதந்திரம் கிடைத்தது. காந்தி நேரு சர்தார் வல்லபாய்பட்டேல் அம்பேத்கர்.செங்கோட்டை டெல்லியில்தான் இருக்கிறது. குதுப்மினார் டெல்லியில்தான் இருக்கிறது. டெல்லி…டெல்லி டக் டெல்லி டக்அதன்பின் தூங்கிவிட்டேன்

ஈரோட்டிலேயே பாதிக்கூட்டம் இறங்கிவிட்டது. சேலத்தில் மிச்சம்பேரும் சென்றுவிட்டார்கள். சேலத்திலிருந்து வேறுவகையான மக்கள் வண்டிகளில் ஏறியிருப்பதை குரல்கள் வழியாக உணரமுடிந்தது. அதிகமும் வேலைகளுக்குச் செல்லக்கூடியவர்கள். கல்லூரிமாணவர்களின் சிரிப்புகளும் கேட்டன. கால்களில் தொட்டபோது இருவர் பதறி எழுந்தார்கள். ஊர்ந்து வெளியே வந்தேன்

‘இவன் யார்ரா? உள்ள போயி படுத்திருக்கான்’

‘டேய் டிக்கெட் இருக்காடா?’

பதில்சொல்லாமல் சற்று நகர்ந்து அமர்ந்து அவிழ்ந்த கால்சட்டையை இறுக்கியபின் எழுந்துகொண்டேன். காலை எட்டுமணி ஆகியிருக்கும். நல்ல வெயில் வெளியே. வெயில்குளித்த மரங்களும், வெயிலில் சாயம்போன மண்சாலைகளும், வெயிலைப்பிரதிபலித்த ஓட்டுக்கூரை வீடுகளும் சென்றுகொண்டிருந்தன. கழிப்பறைக்குச் சென்றபின் வாசலருகே நின்றுகொண்டேன். தாகமெடுத்தது. கழுவுதொட்டிநீரைக் குடித்தேன்.

டிக்கெட் பரிசோதகர்கள் ரயில்நிறுத்ததில்தான் ஏறுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அவர்கள் உள்ளே உள்ள வழியிலூடாக வருவார்கள் என்பது அதிர்ச்சியூட்டக்கூடியதாக இருந்தது. கரிய உருண்ட முகமுள்ள நடுத்தரவயது பரிசோதகரைப்பார்க்க வழக்கறிஞர் போலிருந்தார்.அவரைப்பார்க்காமல் மெல்ல நடுங்க ஆரம்பித்தேன். அவர் நேராக என்னைப்பார்த்து ‘டிக்கெட் இருக்காடா?’ என்றார். பேசாமல் நின்றேன்

’எடுடா ..ஃபைன எடு’

ஒருகணம் அனிச்சையாக பணத்தை எடுக்கப்போனேன். உடனே கட்டுப்படுத்திக்கொண்டேன். எச்சிலை விழுங்கிவிட்டு பேசாமல் நின்றேன்

‘வித்தவுட்டுன்னா இப்பல்லாம் ஆறுமாசம் ஜெயில், தெரியும்ல? வக்காளி, வந்து ஏறிடுறானுங்க’

வெளியே குதித்துத் தப்பி ஓடமுடியுமா என்று பார்த்தேன். ரயில் அத்தனை வேகத்தில் ஓடக்கூடியதென்பதை அப்போதுதான் புரிந்துகொண்டேன். ஓரத்து கம்பித்தூண்கள் விம் விம் என பறந்து பறந்து சென்றுகொண்டிருந்தன

‘பணம் இருக்காடா?’

‘இல்ல’

‘பின்ன உங்கப்பன் ஊட்டுச் சொத்துன்னா ஏறினே?’

பேசாமல் நின்றேன்

’என்னடா தாளி லுக்கு உடறே?’

அவர் அடிக்க கை ஓங்க அனிச்சையாக உடலைக்குறுக்கிக் கொண்டேன்

‘பேசாம பணத்த வை…இல்லேன்னா நேரா ஜெயிலுக்குப்போ…என்னடா?’

என்னருகே நின்ற வேறு இருவரிடமும் டிக்கெட் இல்லை என தெரிந்தது. அவர்களும் தலைகுனிந்து சுவரோடு ஒண்டி நின்றார்கள்.

அவர் திரும்பி ‘இருடா உனக்கெல்லாம் இருக்கு…டேய் நீ வித்தவுட்டா?’

அவரும் டிக்கெட் இல்லாதவர்தான். ஐம்பதுவயதான அழுக்குச்சட்டை மனிதர். நரைத்த தலை நீர்க்காவி பிடித்த வெள்ளைத்துண்டு போலிருந்தது. காரை படித்த பற்கள். செத்துப்போனவை போன்ற கண்கள்.

‘நாயே நாயே நாயே….மானம்கெட்ட நாயே…எதுக்குடா வண்டியிலே ஏறுறே? காசில்லேன்னா போயி தண்டாளத்திலே தலைய வைக்கவேண்டியதுதானே? கருமாந்தரம்…இவனுகள நாம கட்டிமேய்க்கவேண்டியிருக்கு’

பரிசோதகர் உள்ளே சென்று டிக்கெட் இல்லாத கும்பல்களை ஓரமாக சென்று நிற்கச்சொல்லிக் கத்திக்கொண்டிருந்தார்.

பத்திருபதுபேர் என்னுடன் வந்து கக்கூஸ் அருகே நின்றுகொண்டிருந்தனர். ஒருபெண் வயிறுவரை தொங்கி வந்த முலையை தூக்கி இடுப்பிலிருந்த பிள்ளை வாயில் வைத்தாள். அது துப்பிவிட்டு கையால் காலை உதறி அழுதது. மூக்குச்சளி இளம்பச்சை நிறத்தில் உதடுவரை வழிந்து உறைந்து நின்ற குழந்தை. சுள்ளிபோன்ற கைகால்கள்.

நரைத்தலைக்காரர் என்னிடம் ‘எந்தூருக்கு போறே?’ என்றார்

‘திருப்பதி’ என்றேன்

‘இந்த ரயிலு திருப்பதி போகாது…ரேனிகுண்டா போயி அங்கிட்டு போட்டுருவான்…நா முச்சூடும் அங்கிட்டுதான் கிடக்கும்…மறுக்காநாள் ராத்திரிதான் எடுப்பான்’

‘நீங்க எங்க போறீங்க?’

‘பாம்பே பக்கமா போறேன்…அங்கதான் சோலி…வீடு செவாசி பக்கம்…பொண்ணு வயசுக்குவந்துட்டானு வந்துட்டு போறேன்’

‘டிக்கெட் எடுக்கலியா?’

‘எங்க எடுக்க? எடுத்தா கூலி அதுக்கே போயிரும்… இந்தமட்டும் குட்டிக்கு ஒரு சீலையும் சாக்கெட்டும் வாங்கி ஆயிரம் ரூவாய ஊட்ல குடுத்திட்டு வந்ததுக்கே இன்னும் நாலுமாசம் பீயத்திங்கணும்…செரி…ஏதோ இந்தமட்டுக்கும் சோறுதண்ணியோட சீவன் நிண்ணுபோவுதுல்ல…. நீ திருப்பதிக்கு ஏன் போறே?’

‘தெரிஞ்சவுங்கள பாக்க’

‘பைனு குடுக்க பைசா இருக்கு இல்ல….பாக்கெட்ட தொட்டுப்பாத்தப்பம் தெரிஞ்சுது…’

‘ம்’

‘குடுக்கவேண்டாம்…. ஒண்ணும்செய்ய மாட்டான் பாத்துக்க….அப்டீயே ஜொலார்பேட்டிலே எறக்கி விட்டிருவான்…ஒரு மணிநேரத்திலே அடுத்த ரெயிலு வந்திரும்… ரேனிகுண்டாவிலே இந்த ரயிலயே மறுக்கா புடிச்சிருவேன்’

‘பாம்பேயிலே வேல பாக்கிறீங்களா?’

‘பாம்பேண்ணு இல்ல… பூனாவுக்கும் பாம்பேக்கும் நடுவிலே….லோனாவாலாண்ணு ஒரு எடம்…அங்கிட்டு இப்ப புதிசா ரயிலும் ரோடுமெல்லாம் போடுறான். நம்மாளுகதான் வேலை முச்சூடும் செய்றது….ஆயிரக்கணக்கிலே இருக்கானுக’

‘ஓ’

அதற்குள் கக்கூஸ் அருகே நிற்க இடமில்லாமல் கும்பல். எல்லாருமே அழுக்கும் தூசியும் வியர்வையுமாக இருந்தனர்

‘முக்காவாசிப்பேரு லோனாவாலாவுக்கு போறவுகதான்…’

‘எப்பிடித்தெரியும்?’

‘பாதிப்பேரு புள்ள குட்டிகளோட சும்மா அப்டியே ரயிலிலே ஏறுவானுக. ரயிலிலே லோனாவாலா போறகும்பல்கிட்ட பேசுறது. சேந்துக்கிறது…’

‘கேரளத்துக்கு போற மாதிரியா?’

‘கேரளத்துக்குப் போறதானா தொளில் தெரிஞ்சிருக்கணும்…மண்ணுவேல கல்லுவேல கொலுத்துவேல….இந்தமாதிரி வத்தல்வதங்கலை எல்லாம் எடுக்கமாட்டான். அங்க மேஸ்திரிகள் பயங்கர கெத்தாக்கும். லோனாவாலாவிலே எவன் போனாலும் வாடான்னுருவான்…மண்ணும் கல்லும் அள்ளிப்போடுற வேல தானே?’

அவர் பீடிபற்றவைத்த அதே கணம் பரிசோதகர் வந்தார். அவர் பீடியை தரையில் போட்டு மிதித்துவிட்டு உறைந்த முகத்துடன் நின்றார்

‘உங்க அம்மாவ ஓளுறவனாடா வண்டிய விட்டுருக்கானுங்க? தாயளி எங்க தாலிய அறுக்கிறதுக்குண்ணு ஏண்டா வாறிங்க? ஏய் எந்தூருடீ ஒனக்கு?’

அந்தப்பெண் ‘வடக்கூரு’ என்று ஏதோ சொன்னாள். சத்தம் எழவில்லை

‘பைசா இருக்காடி ஃபைனு கட்ட?’

அவள் தலையசைத்தாள்

‘கூதி வச்சிருக்கேல்ல? உள்ள போயி நாலுபேருக்கு விரிச்சுக் குடுத்து கொண்டு வந்து கட்டுடீ…தேவ்டியா நாயி’ அவளருகே நின்ற கரிய மனிதனிடம் ‘நீ யார்ரா?’

அவன் பேசாமல் நின்றான்

‘யார்ரா நீ? இவளுக்கு யாரு?’

‘என் ஊட்டுக்காரிங்க’

‘நீயும் அவ கூட போயி ஊம்பு…போடா’

அவன் பேசாமல் நின்றான்

‘பைன் கட்டலீண்ணா ஜெயிலுதான்… எங்கள என்ன கேனையன்னு நெனைச்சுட்டீங்களாடா? மானங்கெட்ட சென்மங்க…. ஆய் த்தூ..’ அவன் முகமெல்லாம் அவரது எச்சில் வழிந்தது. அவன் தலைகுனிந்தான்.

அவர் இன்னொரு வட்டம் சென்றுவிட்டு வந்தபோதும் நாங்கள் அப்படியே நின்றிருந்தோம். ரயில் ஜோலார்பேட்டையை அடைந்தது. அவ்வளவு சின்ன ஊரில் அவ்வளவு பெரிய ரயில் நிலையம் என எதிர்பார்க்கவில்லை

’டேய் தேவ்டியா புள்ளைங்களா…எல்லாரும் எறங்குங்கடா….நேரா ஸ்டேஷனுக்கு நடங்க’

‘சாமி…அய்யா….ஏழைச்சனம் அய்யா…பஞ்சம் பொழைக்க போறம்யா’

‘பஞ்சம் பொழைக்கிறதனா போயி எங்கியாம் பிச்ச எடுங்கடா நாயிங்களா….இங்க ஏறி எதுக்குடா என் தாலிய அறுக்கிறீங்க’

‘அய்யா சாமி…தொரை…சார்’ எல்லாரும் சேர்ந்து விதவிதமான குரலில் முனக அந்த கூட்டமே நிறையகால்களும் நிறைய கைகளும் கொண்ட ஒரு விசித்திர மிருகம் போல ஓலமிட்டது.

நரைத்தலைக்காரர் என்னிடம் சும்மா என்று உதட்டைக்குவித்துக்காட்டினார்

ரயில் ஊதியது. பரிசோதகர் ரயிலில் தொற்றி ஏறிக்கொண்டார்

‘உங்களையெல்லாம் போலீஸிலே ஒப்படைச்சு முட்டிய ஒடைக்கத்தெரியாம இல்ல… பிச்சக்காரத்தாயளிங்களா….இப்ப எனக்கு வேற வேலை இருக்கு… போயிச்சாவுங்கடா’

ரயில் வேகமெடுத்தது. ஒருபெரிய மிருகம் நின்று மலம்கழித்துவிட்டுச் செல்வதுபோல. அதன் பின்பக்கம் மறைந்தது. மலக்குவியல் நீரில் பிரிவதுபோல மெல்ல கூட்டம் கலைந்து நீளமாக ஆகியது.

ரயில் ஒலி மறைந்ததும் எல்லாரும் இலகுவாகிக் கலைந்தனர். பிள்ளையை வைத்திருந்தவள் மெல்ல விசும்பி அழுதுகொண்டிருந்தாள்

‘த புள்ள எதுக்கு அழுறே? அவன் என்ன கையைப்புடிச்சா இளுத்தான். அவன் ரயிலுக்கு அதிகாரி… சர்க்காரு ரயிலு அவனுக்க சொத்து….அவன் நாலு வார்த்த சொல்லத்தான் செய்வான்…ஓசியில ஏறி வந்தேல்ல….சும்மா கெட’ என்றார் நரைத்தலையர்

அவள் முந்தானையால் மூக்கையும் கண்ணையும் துடைத்தாள். அவள் கணவன் அவளிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டான்.

நரைத்தலையர் ‘ஒரு மணிநேரத்திலே திருப்பதி பாசஞ்சர் வரும். அதிலே செக்கர் ஏறமாட்டான்…கூட்டமும் பெரிசா இருக்காது…’ என்றார்

அத்தனைபேரும் அமர்ந்துகொண்டார்கள். அருகிலேயே சிமிண்ட் பெஞ்சுகள் இருந்தபோதும் எல்லாரும் தரையில்தான் அமர்ந்தார்கள். இருகிழவிகள் தரையில் நன்றாக காலை விரித்து சப்பணமிட்டு அமர ஆண்கள் குந்தி அமர்ந்தனர். ரயில்நிலையம் மிகப்பெரியது. ஆனால் அங்கே அதிகம்பேர் இறங்கவோ ஏறவோ இல்லை. சில நிமிடங்களிலேயே மொத்த நடைமேடையும் காலியாக விரிந்து கிடந்தது. ஆனால் அவர்கள் ரயிலுக்குள் இருந்ததுபோல குறுகி ஒடுங்கி ஒருவரோடொருவர் ஒண்டிக்கொண்டு அமர்ந்திருந்தார்கள்.நடைமேடையில் விதவிதமான பொருட்கள் குவிந்துகிடந்தன. அவற்றைப்போல ஒரு மனிதக்குவியல்

எனக்கு ஒரு டீ குடிக்கவேண்டும் போலிருந்தது. ஆனால் தனியாகவிலகிச்சென்று டீ குடிக்கவும் தயக்கமாக உணர்ந்தேன். உண்மையில் நான் அவர்களில் ஒருவனாக அங்கே இருப்பதை விரும்பவில்லை. நான் வேறு என்றுதான் என் மனம் எண்ணியது. ஆனால் அவர்களுடன் சென்றால் தைரியமாக டிக்கெட் இல்லாமல் எங்கும் செல்லமுடியும். எங்கே எங்களை பிடித்தாலும் துணைக்கு அத்தனைபேர் இருப்பார்கள்.

அதேசமயம் நான் உயர்ந்த சாதி என்பதை காட்டிக்கொள்ள விரும்பினேன். அங்கே தள்ளி நின்று எவரோ எங்களைப்பார்த்துக்கொண்டிருப்பதுபோல ஓர் அர்த்தமற்ற கற்பனை. அவர் என்னைப்பார்த்தாலே இவன் உயர்ந்தசாதிக்காரன் என்று நினைக்கவேண்டும். இந்த பஞ்சத்துக்கூட்டத்தில் இவன் எப்படிச் சேர்ந்தான் என்று வியக்கவேண்டும். அந்த எண்ணம் என்னையறியாமலேயே என் உடலில் ஒரு அலட்சியபாவனையை உருவாக்கியது. அது ஒரு கோணலாக என் இடுப்பில் வெளிப்பட்டது. எப்போதும் என் வாழ்க்கையை யாருக்கோ நடித்துக்காட்டிக்கொண்டிருப்பதுபோன்ற பிரமை என் பதின்பருவம் முழுக்க கூடவே இருந்துகொண்டிருந்தது.

நரைத்தலையர் என்னிடம் ‘தம்பி வா…’ என்றபின் நடந்தார். அவரை பின் தொடர்ந்தேன்

‘ஒரு டீயப் போடுவமா?’

‘அவங்க?’

‘அதுகளுக்கு பைசா இருந்தா அதுக குடிக்கும்ங்க….அதெல்லாம் பாத்தா வயிறு காஞ்சிரும் தம்பி….தம்பியப்பாத்தா ராத்திரி பட்டினின்னு தெரியுதே’

‘எப்ப்டீ?’

‘நானும் ராத்திரி பட்டினி….அதனாலத்தான்’ என்று சிரித்தார்.

ரயிலில் டீ விற்பவர் கூடையை பெஞ்சில் இறக்கியிருந்தார். ஒரு பெரிய வட்டி நிறைய பொறையும் இருந்தது

‘சாமி ரெண்டு டீ…ரெண்டு பன்னு’

அவர் டீயில் பன்னை நனைத்து தின்ன ஆரம்பித்தார். பலர் அப்படிச் செய்வதைக் கண்டிருந்தாலும் ஏன் என்பது பன்னைத் தின்றதும் புரிந்தது. பன் என் பசித்து வறண்ட தொண்டையைத் தாண்டி இறங்கவில்லை. மேலே டீயை உறிஞ்சி விழுங்கினேன்.

அவர் டீ குடித்தபோது மெல்லிய கழுத்தில் நரம்புகளும் குரல்வளையும் நெளிந்தன. மீனை விழுங்கும் கொக்குபோல ஓர் அசைவு. ‘பசி செத்துப்போச்சு தம்பி…அந்தக்காலத்திலே எங்கூர்ல நாந்தான் பெரிய தீனிக்காரன். மாரியம்மன் கோயில் திருளாலே கூளு குடிக்கிற போட்டி உண்டு. ஒரு வெங்காயம் பச்சமுளகா எடக்கையிலே வச்சுட்டு நாலுபோணி கூளை எடுத்து சாத்திருவேன்ல….கைகாலெல்லாம் சும்மா கரணை கரணையா இருக்கும்….அப்ப ஊர்ல வெள்ளாமையும் இருந்தது. புஞ்சையிலே வத்தலு நல்லா வரும். கம்மாய் வரண்டாக்கூட ஒரு சாரலு அடிச்சுச்சுன்னா சோளம் கம்புண்ணு போட்டிருவோம்…’ பெருமூச்சுடன் டீயின் கடைசி மிச்சத்தை நாக்கில் விட்டுக்கொண்டார்.

டீ குடித்தபோது எனக்கு குமட்டியது. இன்னொரு டீ குடித்தால்தான் பசித்த வயிறு அடங்குமென தோன்றியது. ஆனால் அடக்கிக்கொண்டேன். டீக்கு நான்தான் பணம் கொடுத்தேன்

‘ஒரு பன்னு குடு சாமி’

டீக்கடையில் இருந்து ஒரு பன் மட்டும் வாங்கிக்கொண்டார். திரும்பி நடக்கும்போது ‘தம்பிக்கு எங்கிட்டு?’ என்றார்

சட்டென்று அப்போது தோன்றிய ஒரு கதையைச் சொன்னேன். ஊரில் யாரும் இல்லை. அனாதை. தாய்மாமன் வீட்டில் நின்று வளர்ந்தேன். அவர் அடித்துத் துரத்திவிட்டார்

‘படிப்பு உண்டா?’

‘எட்டாம் கிளாஸ் படிச்சேன்’

‘எட்டாம் கிளாஸுக்கெல்லாம் இப்ப என்ன தம்பி வேல? ஒண்ணும் பேராது’ என்றார் ‘நம்ம பேரு சின்சாமி. அந்தக்காலத்திலேயே நாலாப்பு பாஸ்….தந்திப்பேப்பரு படிப்பேன் அப்பல்லாம்…இப்ப படிக்கிறதில்ல…படிச்சு என்னத்துக்கு?நம்ம பொழப்பு நாறிக்கெடக்கு’

கும்பலை அணுகியதும் அந்த பன்னை குழந்தையிடம் நீட்டி ‘இந்தாடா…தின்னு’

குழந்தை பாய்ந்து ஓடிவந்து பன்னை வாங்கிக்கொண்டது. அதை எவரேனும் பிடுங்கிவிடுவார்களா என்பது போல மார்போடணைத்துக்கொண்டு உதட்டைத்துருத்தி சந்தேகத்துடன் பார்த்தது. அதிக சந்தேகம் என்மீதுதான்

‘தின்னுடா….தண்ணிலே தொட்டு தின்னு’

அந்தப்பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு குழாயடிக்குச் சென்றாள். அதை நிறுத்திவிட்டு அந்த பன்னை கேட்டாள். அது கொடுக்காமல் திரும்ப முயல பிடித்துத் திரும்பச்செய்து அதைப்பிடுங்கினாள். குழந்தை ‘ஆ ஆ’ என்று கைநீட்டி காலை மாறி மாறி உதைத்துக்கொள்ள குழாயைத் திறந்து அந்த பன்னை அதில் நனைத்தாள். அவள் பன்னைப் பிய்த்து குழந்தைக்குக் கொடுக்க அதை வாய்க்குள் போட்டுக்கொண்டு மிச்சத்துக்காக கைநீட்டி துள்ளியது. அவள் மறுபக்கம் திரும்பிய கோணத்தில் சட்டென்று பாதி பன்னைத் தன் வாய்க்குள் திணித்துக்கொள்வதை கவனித்தேன்.

ஒன்றரை மணிநேரத்தில் அடுத்த ரயில் வந்தது. அதில் சின்னச்சாமி சொன்னதைப்போல அல்லாமல் நல்ல நெரிசல் இருந்தது. ஆனால் பெரும்பாலானவர்கள் திருப்பதி செல்லும் பக்தர்கள். பலவகையான பாத்திரங்கள்,பெட்டிகள். நாங்கள் ஏறிக்கொண்டு கழிப்பறை அருகிலேயே கூட்டமாக அமர்ந்துகொண்டோம்

‘ஒண்ணும்பெரீய கஸ்டமில்ல தம்பி….வண்டி அப்டியே ஓடீரும்…மாசமானா கையிலே கொஞ்சம் காசும் நிக்கும்….எல்லாம் ஊருலே பட்ட கஸ்டம்தான்…வெய்யக்காலம் தாண்டியாச்சுண்ணா ஒருமாதிரி மப்பும்மந்தாரமுமா வேலைசெய்ய ஏத்தமாதிரித்தான் இருக்கும்…’

‘வெயிலிலே?’ என்றேன்

‘அதெல்லாம் நாம பாத்ததுதானே? நம்மூரு கரிசக்காட்டுல அடிக்காத வெயிலா? கெந்தகமாக்குமே’

அவர் சொல்லிவர வர எனக்குள் ஓரு சித்திரம் உருவம்பெற்றது. அந்தமனிதர்களுக்கு நடுவே சென்று சேர்கிறேன். அவர்களுடன் உழைக்கிறேன். அவர்களுடன் வாழ்கிறேன். அவர்களுக்கு உரிமைகளைக் கற்றுத்தந்து அவர்களை ஒருங்கிணைக்கிறேன். அவர்கள் என்னை தலைவனாகக் கொண்டாடுகிறார்கள்! நினைக்கவே உற்சாகமாக இருந்தது. எனக்கு நன்றாகவே ஆங்கிலம்.வாசிக்கவும் எழுதவும் தெரியும் என்றும் பட்டப்படிப்புவரை படித்தவன் என்றும் தெரியாமல் என்னை அங்கே வேலைக்கு வைத்துக்கொள்கிறார்கள். நான் பொதுவுடைமைதான் என்ன வாசித்திருக்கிறேன். மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றையும் இ.எம்.எஸ்சின் புத்தகங்களையும் வாசித்திருக்கிறேன். சகாவு பி கிருஷ்ணபிள்ளை நெய்யூரில் அப்படி அடிமைவிவசாயியாக வேலை பார்த்தார். சே குவேரா கரும்புவயல்களில் வேலைபார்த்தார் என்று ரவீந்திரனின் புத்தகத்தில் வாசித்திருக்கிறேன். கிருஷ்ணபிள்ளை வேண்டாம். ஆம், சே!

‘நானும் வாறேன்’

‘வேல செஞ்சுபளக்கமுண்டுதானே?’

‘வெவசாயவேலைகள் செய்வேன்’

‘அது போரும்… ‘ என்றார். ‘பின்ன அங்கிட்டு ஈச்சங்கள்ளு கிடைக்கும். குடிக்க ஆரம்பிச்சா ஒண்ணும் மிஞ்சாது’

ஆந்திரத்தில் இன்னொரு ரயிலில் ஏறிக்கொண்டோம். அங்கிருந்து போபால். அங்கிருந்து பூனா. அங்கிருந்து ஒரு ஒரு டிரக்கில் லோனாவாலா. சின்னச்சாமியுடன் ஒரு நூறுபேர் சேர்ந்துகொண்டார்கள். அவர் அங்கே எப்படி இருக்கும் என்பதைச் சொல்லிக்கொண்டே இருந்தார். ‘பஞ்சம்பொளைக்கண்ணு கெளம்பிட்டோமுண்ணா பின்ன மானம் மரியாத பாக்கப்படாது. இந்த பண்ணிய காட்டுல பாத்திருக்கிங்களா? பண்ணி காட்டுக்கு அரசனாக்கும். சிறுத்தை அதைக்கண்டா வால கவட்டையிலே செருகிப்போடும். ஊருக்குள்ள கொண்டு வந்து வளத்தானுங்க. தீனி இல்லாம அது பீயத்திண்ண ஆரம்பிச்சுப்போட்டு…இப்ப பண்ணி கடிச்சு செத்த எவனையாவது கேள்விப்பட்டிருக்கீங்களா? இல்ல…ஏன் இல்ல? பீயத்திங்கிற சென்மத்துக்கு என்னத்தை கடிக்கத்தோணும்…என்ன நான் சொல்றது?’

ரயிலுக்கு வெளியே மெல்லச் சுழன்றுகொண்டிருந்த பிரம்மாண்டமான நிலவிரிவையே பார்த்துக்கொண்டிருந்தேன். நிலக்காட்சிகளில் இருந்து என் கண்களை விலக்கவே முடியவில்லை. நான் அதுவரைக்கும் சென்ற அதிகபட்ச வெளியூர் கிழக்கே மதுரை. மேற்கே திருவனந்தபுரம். தமிழகப்பெருநிலத்தையே அப்போதுதான் பார்த்தேன். வெட்டவெளியாக வெயில் தேங்கிக்கிடந்த ராயலசீமாவைக் கண்டு சொற்களை இழந்தேன். உருட்டி உருட்டிக்கூட்டி வைக்கப்பட்ட பெரும்பாறைக்குவியல்களாக மலைகள். பாறைகள் அவற்றின் நிழல்களின் மீது காலத்தில் பிரமித்து அமர்ந்திருந்தன. அவற்றினூடாக ஓரிரு தளர்ந்த ஆடுகளுடன் கிழிசல் உடையணிந்த மேய்ப்பர்கள் சென்றனர். இந்தியாவே இப்படி காலியாக இருக்குமென நான் நினைத்திருக்கவில்லை. மிகப்பெரும்பாலான நிலம் வறண்டு கைவிடப்பட்டு வானத்தைப்பார்த்து மல்லாந்து விரிந்து கிடந்தது. வானிலிருந்து கைப்பிடிப் பசுமையை அள்ளி வீசியதுபோல அவ்வப்போது சில பசுமைத்தீற்றல்கள். அங்கே தாள்களையும் குப்பைகளையும் கசக்கி வீசியதுபோல சின்னஞ்சிறு வீடுகள். சின்னஞ்சிறு மனிதர்கள். மனிதர்களை இத்தனை சிறியவர்களாக ஆக்குபவை எவை? பூமி. இல்லை வானம்

ரயில் சென்றுகொண்டே இருந்தது. மெல்லிய சிறகுகளுடன் அந்த வெற்றுநிலங்கள் மேல் மிதந்துபறந்துகொண்டிருந்தேன். இந்தியா என்பதுதான் எவ்வளவு பெரியது. முடிவேயில்லாத மண். அதன்மீது பளபளக்கும் இரும்புப்பட்டைபோல தண்டவாளம். அது இல்லாவிட்டால் இந்த நிலங்கள் உடைந்து பிரிந்து விலகிவிடக்கூடும்தான். மேலே சென்றுகொண்டிருக்கிறது இரும்புக்கிராமம் ஒன்று. அதற்குள் மனிதர்கள். அந்த நிலங்களுடன் தொடர்பில்லாத வேறுவகை மனிதர்கள்.

எங்கும் மனிதர்கள் ரயிலைக்கண்டதும் நின்று விழிவிரிய பார்த்தார்கள். ஆடுமேய்க்கும் குழந்தைகள். முள்ளைவெட்டிச் சுமந்துசெல்லும் ஆண்கள். மாடுகளை ஓட்டிச்செல்பவர்கள். தலையில் குடங்களுடன் செல்லும் பெண்கள். அத்தனைபேரும் ரயிலில் என்னதான் பார்க்கிறார்கள்? எவரும் கையசைக்கவில்லை. சிரிக்கவில்லை. வெறித்த கண்கள். வெண்ணிறப் பற்கள். சுருங்கிய நெற்றி. படபடக்கும் உடைகள். அத்தனைபேரும் ஒரே பார்வையைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ரயிலைப் பயப்படவில்லை. ரயிலை வெறுப்பதாகவும் தெரியவில்லை. சும்மா வெறித்துப்பார்த்தார்கள். ஏன்?

லோனாவாலா என்ற ஊர் ஒரு மலையடிவாரம் என்பதை சின்னச்சாமி பலமுறை சொல்லியிருந்தாலும் அங்கே சென்றபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பசுமையான உயரமற்ற மலைகள் சூழ்ந்த நிலம். மரங்கள் குட்டையானவை. நெருக்கமற்றவை. சாலையோரமாக ஒரு சிறிய அருவி யாருமே இல்லாமல் கொட்டிக்கொண்டிருந்தது. ‘சைட்டு’ என்று சின்னச்சாமி சொன்ன இடத்தை நெருங்கியபோதே வேலை நடக்கும் ஒசைகள் கேட்க ஆரம்பித்தன.

பின்பு அந்த இடத்தைக் கண்டேன். மலையைக் குடைந்து ஒரு பெரிய செந்நிறமான புண்ணை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். கரிய புழுக்கள் போல மனிதர்கள் அந்தப்புண்குழியை தோண்டிக்கொண்டிருக்க நூற்றுக்கணக்கான சிறியவகை லாரிகள் வண்டுகள் போல ரீங்கரித்தபடி சுற்றிவந்தன. செந்நிறமான ஓடைகள்போல சாலைகள் வளைந்து வளைந்து மேலேறின. அவற்றில் லாரிகள் உறுமி நின்று அதிர்ந்து பின் மேலேறின. வேலையிடத்தின் பக்கவாட்டில் புதர்க்காடுகள் முழுக்க தகரக்கூரை போடப்பட்ட மிக நீளமான கொட்டகைகள். சுவர்களும் தகரம்தான். தகரத்தாலான கோட்டைச்சுவர் போலத் தோன்றின அவை. முதல் பார்வையிலேயே சோர்ந்து தனிமைப்பட்டுவிட்டேன். ஆனால் என்னுடன் வந்த அத்தனைபேரும் வினோதமான கிளர்ச்சியையும் உற்சாகத்தையும்தான் அடைந்தார்கள்.

சின்னச்சாமி சென்று ஒரு தொப்பிபோட்ட ஆசாமியை அழைத்துவந்தார். காந்தித்தொப்பியை மூக்குப்பொடிநிறத்தில் போட்டதுபோலிருந்தது. வாயில் பான்பீடா அதக்கிய குண்டு மனிதர். பாண்டுக்குமேல் தொப்பையின் பிதுங்கல் தெரிந்தது. இந்தியில் அவர் சரசரவென்று பேச சின்னச்சாமி உதிரி உதிரிச் சொற்றொடர்களில் ஏதோ சொன்னார். சில நிமிடங்களில் எங்களை வேலைக்கு எடுத்துக்கொண்டார்கள். சாமான்களையும் பிள்ளைகளையும் எல்லாம் ஓரமாக வைத்துவிட்டு நேரடியாகவே அங்கிருந்தே வேலைக்குள் புகுந்தோம்.

அது அக்டோபர். லோனாவாலாவில் வெயிலடித்தாலும் காற்று குளிராக இருந்தது. மண்வேலைசெய்பவர்கள் சட்டை போட்டிருப்பதை அங்கேதான் முதல்முறையாகக் கண்டேன். டயர்களை பிய்த்து தைத்த மண்கூடைகளையும் குனிந்து மட்டுமே மண்ணை அள்ளமுடிகிற மண்வெட்டிகளையும் அப்போதுதான் பார்த்தேன். பெரிய இயந்திரங்கள் மண்ணை வெட்டிக்குவிக்க அவற்றை அள்ளி கொண்டு வந்து சிறிய மர ஏணிகளில் ஏறி லாரிகளில் கொட்டவேண்டும். எப்படியும் இரண்டாயிரம்பேர் அங்கே மண்ணை அள்ளிக்கொட்டிக்கொண்டிருந்தார்கள்.

என்ன செய்யப்போகிறார்கள் என்றே புரியவில்லை. அந்த மலையை குடைந்து ஏதோ செய்யப்போகிறார்கள் என்றார்கள். அவ்வழியாக ரயிலை திருப்பிவிடப்போகிறார்கள் என்று ஒரு தரப்பும் இல்லை சாலைதான் மலைக்குள் சென்று மறுபக்கம் போகப்போகிறது என்று இன்னொரு தரப்பும் சொன்னது. எவருக்கும் அதைப்பற்றி பெரிய அக்கறை இல்லை. நான்குவருடத்துக்கும் மேலாக வேலை நடக்கிறது. பலர் ஆரம்பகாலத்தில் இருந்தே பணியாற்றக்கூடியவர்கள். திரும்பத்திரும்ப ஒரே வேலைதான். மண்ணை அள்ளிக்கொண்டுவந்து லாரியில் கொட்டிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

சிலநிமிடங்களில் நான் மண்ணுடன் கலந்தேன். அங்குள்ள அனைவர் மேலும் மண். அந்த வேலையின் உண்மையான சிக்கல் கொஞ்சநேரத்திலேயே தெரியவந்தது. இயந்திரங்களில் இருந்து வரும் மென்மையான தூசு மூச்சடைக்கவைக்கும். கமறிக்கமறித் துப்பிக்கொண்டே இருந்தேன். மேலும் சற்று நேரத்தில் மூச்சடைத்தது. எவ்வளவு இழுத்தாலும் மூச்சு போதவில்லை. ஆனால் நிற்கமுடியாது. அத்தனை மனிதர்களும் சேர்ந்து ஒரே இயந்திரமாக ஆகிவிட்டிருந்தனர். ஒரு தனி உறுப்பு எந்த முடிவையும் எடுக்கமுடியாது. நிற்கவோ வேகம் குறைக்கவோ முடியாது. ஓடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்

மதியம் அத்தனைதொழிலாளர்களும் இரு பெரும்பிரிவாகப் பிரிந்தனர். ‘சோறா சப்பாத்தியா?’ என்று ஒருவன் இந்தியில் கேட்டான். ‘சாவல்’ என்று சொன்னேன். பெரிய ஈச்சஓலைப்பாயில் சோற்றை இடுப்பளவு உயரத்துக்கு கொண்டுவந்து கொட்டிக்குவித்திருந்தனர். சன்னரக வெள்ளை அரிசி. அந்தக்காலத்தில் எங்களூரில் ரேஷன் அரிசி சிவப்பாக சாக்குவாடையுடன் இருக்கும். சோற்றில் மட்டுமல்ல பழையதிலும்கூட சாக்குவாடை இருக்கும். பாதிக்குப்பாதி சோளமும் கோதுமையும் போட்டார்கள். இங்கே அரிசி நன்றாகவே இருந்தாலும் சோற்றை குவித்துவிடுவதனால் உள்ளே இருக்கும் பகுதி வெந்து களியாக ஆகியிருந்தது. ஆனால் மேலே உள்ள கெட்டித் தோலுக்கு களி எவ்வளவோ மேல்.

நாலைந்து நாட்களுக்குப்பின் வயிறு புடைக்கச் சாப்பிட்டேன். பருப்பும் கத்தரிக்காயும்போட்டு காய்ச்சப்பட்ட குழம்பும் சோறும் மட்டும்தான். ஆனால் சாப்பிடச்சாப்பிட நிறுத்தவே தோன்றவில்லை. ஒரு கட்டத்தில் குமட்டலே வர ஆரம்பித்தது. தலைசுழல்வதுபோலிருந்தது. ‘இங்க சோறு நல்லாவே போடுவான்…அதுல ஒண்ணும் குத்தம் சொல்லமுடியாது’ என்றார் சின்னச்சாமி. ‘நாம வேற என்னத்தைக் கண்டோம்? என்னதம்பி?’

மாலையில் வேலைமுடிந்தபோது மண்ணாலான சிலைகள் போல பெரும்கூட்டம் கொட்டகைகளை நோக்கிச் சென்றது. மேலிருந்து பார்த்தபோது செம்மண்ணின் ஒருபகுதியே ஒழுகிச்செல்வதுபோலத் தெரிந்தது. அதற்குள் நல்ல குளிர் ஆரம்பித்துவிட்டிருக்க கைகளை மார்புடன் கட்டிக்கொண்டு நடந்தேன்.

‘ஒத்தக்கட்டைகளுக்கு தனி ரூம்பு கடையாது தம்பி…எல்லாரும் சேந்து ஒத்தக்கொட்டாய்லதான் படுத்துக்கணும்…நீ அந்தால போ’

‘நீங்க?’

‘நமக்கு இங்க ஒரு தொடுப்பு உண்டு…குடும்பமாத்தான் இருக்கம்….வந்த எடத்தில ஒண்ணுண்ணா ஆளு வேணும்ல? பாவம் அதுவும் கால்கை வெளங்காத புருசனையும் புள்ளிங்களையும் உட்டுட்டு இந்தா தொலைவு வந்திருக்கு….வாறன்’

சற்று திகைத்து நின்றேன். சுற்றிலும் நீளமான கொட்டகை. அதை தனித்தனியாக பிரித்து நூற்றுக்கணக்கான குடியிருப்புகளாக ஆக்கியிருந்தனர். ஒற்றை அறைதான். உள்ளே குழந்தைகள் தெரிந்தன. சில குழந்தைகள் பெற்றோரை நோக்கி ஓடிவந்தன. எவரும் குளிப்பதுபோலத் தோன்றவில்லை. மண்மூடிய உடையை கழற்றி வேகமாக உதறினார்கள். அதை சுருட்டிக்கொண்டு இன்னொரு உடையை அணிந்துகொண்டார்கள். ஒரு துண்டைவைத்து உடலில் உள்ள மண்ணைத் துடைத்துக்கொண்டு முகத்தை மட்டும் குடியிருப்பு முற்றத்துப் பானையில் இருந்து மொண்ட நீரால் கழுவிக்கொண்டார்கள்.

தொப்பி போட்ட ஒருவன் என்னிடம் வந்து ஒரு கொட்டகையைக் காட்டி அங்கே போகச்சொன்னான். அவர்கள் அனைவருமே பீடா போட்டிருப்பதைக் கண்டேன். பீடாச்சிவப்பு வாய்கள் புண்கள்போலிருந்தன. பலருக்கும் வாயின் ஓரம் வெள்ளையாகக் கிழிந்திருந்தது.

கொட்டைகையில் இருந்தவர்களில் பாதிப்பேர் பீகாரிகள். நான் உள்ளே நுழைந்ததும் அவர்கள் என்னைப்பார்த்தார்கள். அத்தனைபேரும் உடைமாற்றிக்கொண்டிருந்தார்கள். சொரசொரப்பான சிமிண்ட் தரைமுழுக்க மண். ஓரமாக பாய்கள் சுருட்டி அடுக்கப்பட்டிருந்தன. இன்னொரு ஓரத்தில் தகரடப்பாக்கள்.

ஒருவன் என்னிடம் இந்தியில் ஏதோ கேட்டான். அவனை விழித்துப் பார்த்தேன். அவன் இன்னொருவனிடம் ஏதோ சொல்ல அவன் ‘டேய் எந்தூருடா?’ என்றான்

‘நாகருகோயில்’

‘பெட்டி எங்க?’

‘இல்ல’

‘பீடாக்காரன் பைசா குடுத்தானா?’

‘இல்ல பேரு எளுதிக்கிட்டான்’

‘இங்க வாரம் ஒருக்காதான் அரிசி பருப்பு குடுப்பான். காலம்பற ராத்திரி ரெண்டுவேளையும் சமைச்சுக்கிடணும்… இப்ப இங்க சாப்பிடு…உன் ரேசன் வந்ததும் கடன மூட்டிரு…என்ன’

தங்கவேல் அன்பாக இருந்தான். என்னைப்பற்றி அதிகம் கேட்கவில்லை. ‘நமக்கு சேலம். ஆத்தூருக்குப்பக்கமா ஊரு. ஊட்ல அம்மாவும் தங்கச்சியும் இருக்காங்க’என்று மட்டும் சுருக்கமாகச் சொன்னான்.

அன்றிரவு அங்கே சப்பாத்திதான் செய்தார்கள். ‘ராத்திரியே சப்பாத்திய உருட்டிக்கிட்டா காலம்பற மிஞ்சுறத சுட்டுத்தின்னுட்டு ஓடலாம் பாத்தியா?’ சப்பாத்தி மிகத்தடியாக இருந்தாலும் இட்லி போல மென்மையாக மென்றுதின்னும்படி இருந்தது.

சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொண்டேன். தங்கவேல் எனக்கு ஒரு ஈச்சம்பாயை தந்தான். ‘கொஞ்சம் குளிரும்…இந்தா’ என்று சணல்சாக்கை வெட்டித்தைத்த ஒரு போர்வையையும் தந்தான். ‘சாமிக்கண்ணுன்னு ஒரு பய இருந்தன். அவனோடது. ‘

‘அவன் எங்க?’

‘அவன் திரும்ப வரல்லை’

இரவில் மேலே தெரிந்த தகரக்கூரையை பார்த்துக்கொண்டே படுத்தேன். ஒற்றைக்குண்டுவிளக்கு எரிந்தது. கூரைக்குமேல் நீர்த்துளிகள்சொட்டுவதுபோல ஒலி. காற்றில் தகரங்கள் எழுந்து வளைந்து அமுங்குவதன் உலோக முனகல். பிகாரிகள் ஒருவருக்கொருவர் உரக்க இந்தியில் கத்திப்பேசிக்கொண்டிருந்தனர். சண்டைபோடவில்லை என்பது அவ்வப்போது அவர்கள் சிரிப்பதிலிருந்து தெரிந்தது.

வெளியே விசில் ஒலி. இந்தியில் ஏதோ கூச்சல்

ஒருவன் விளக்கை அணைத்தான். தங்கவேல் என்னிடம் ’பீடாக்காரனுக…இங்க எட்டுமணிக்கு வெளக்க அணைச்சு உறங்கிடணுமுன்னு ரூலு’

‘ஏன்?’

’காலையிலே வேலை செய்யணும்ல?’

விசில் ஒலியும் வசைக்குரலும் தொலைவில் மீண்டும் கேட்டன.

‘தங்கவேலு’

‘ஏண்டா?’

’இங்க குளிக்கமுடியாதா?

‘நல்லா குளிரும்…மாசத்துக்கு ஒருவாட்டி குளிச்சா போரும்….’

‘அதில்ல…’

‘குளிச்சுட்டு மறுபடியும் மண்ணுல தானே போயி விளணும்?’

பெருமூச்சுடன் உடம்பை இலகுவாக்கிக் கொண்டேன். ஊரிலிருந்து எவ்வளவு தூரம். அந்த தூரத்தை நினைவில் திரும்ப ஓட்டிப்பார்க்கவே முடியவில்லை. எங்கள் ஊரே மறந்துவிட்டதுபோல. காலாகாலமாக இந்த வெற்றுமண்வெளியிலேயே வாழ்ந்து வருவதைப்போல. ’தங்கவேலு’

‘ஏன்?’

‘இங்க சவுரியமா இருக்கியா?’

‘என்னத்த சவுரியம்? எங்க போனாலும் இதே வேலைதானே?’ அவன் திரும்பிப்படுத்துக்கொண்டான்.

தகரம் அதிர்ந்தது. குளிர்காற்று உள்ளே வந்தது. நன்றாகப்போர்த்திக்கொண்டேன். மண்ணில் வேலைசெய்த சட்டைபாண்டை உதறி திரும்பப் போட்டிருந்தேன். ஆனாலும் உடம்பெல்லாம் மண் இருப்பதுபோலவே உணர்ந்தேன். சாக்கு உடம்பில் பட்ட இடமெல்லாம் அரிப்பு.

அதேசமயம் எனக்குள் ஓர் உற்சாகமும் நிறைவும் இருந்தது. நான் பெரிய ஒரு விஷயத்தைச் செய்யப்போகிறேன். அந்த இரவை நன்றாக நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டும். அது நான் எதிர்காலத்தில் எழுதப்போகும் ஒரு நூலின் முதல் அத்தியாயம். உலகம் முழுக்க அதை மொழியாக்கம் செய்து வாசிப்பார்கள். இவன் பெயர் தங்கவேல். மற்ற பையன்கள் பெயரையும் விசாரித்துத் தெரிந்துகொள்ளவேண்டும்…நினைவுகளில் எல்லாம் துல்லியமாக இருக்கவேண்டும்

விசித்திரமான சூழல்தான். தகரக்கூரை. குளிக்காமல் மண்ணோடு மண்ணாக வாழும் மனிதர்கள். சற்றுப்பெரிய மண்புழுக்கள். நல்ல தலைப்பு. மண்புழுக்கள். சற்றுப்பெரிய மண்புழுக்கள்தானே இவர்கள்? மண்ணைத்துளைப்பதுதான் வாழ்க்கை. ஒரு நாவலாகக்கூட எழுதலாம். பெரியநாவல்…ஆனால் கூட்டுப்புழுக்கள் என வேறு யாரோ நாவல் எழுதியிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் எழுதலாம். எர்த்வார்ம்ஸ்…

மறுநாள் காலையிலேயே விசிலும் வசையும் ஒலித்தது. நான் எழுந்தபோது மற்றவர்கள் எழுந்து பரபரவென்றிருந்தனர். தங்கவேலுவைக் காணவில்லை. இருவர் சப்பாத்திகளை நெருப்பில் சுட்டுக்கொண்டிருந்தார்கள். நான் வெளியே சென்றபோது மறுகொட்டகைக்குப்பின்னால் ஓர் இளம்பெண் இடுப்புக்குமேலே உடையை முழுமையாக விலக்கி துணியால் துடைத்துக்கொண்டிருந்தாள். கரிய இளம் முலைகள். என்னைக் கண்டதும் கண்களில் ஒரு சிறிய சுருக்கம். மறுபக்கம் திரும்பிக்கொண்டாள்

தக்கவேலு உள்ளே வந்தான் ‘எங்கே கொல்லைக்குப் போறது?’ என்றேன்

‘நேரா அந்தப்பக்கமா போனா பெரிய காடுதான்…எங்க வேணுமானாலும் போலாம்….’

‘தண்ணி?’

‘அங்க ஓடை உண்டு’

செம்மண் மேட்டை ஏறி மறுபக்கம் சென்றேன். இடுப்பளவுக்கு உயரமாக புதர்கள் வளர்ந்த காடு. சில கணங்களுக்குப்பின்னால் கவனித்தேன். நிறைய பெண்கள் அங்கே இருந்தார்கள். அவர்கள் எழவில்லை. அந்தப்பக்கமாகத் தள்ளிப்போ என்று ஒருத்தி கையைக் காட்டினாள். மற்றவர்கள் வேறு கவனத்தில் இருப்பவர்கள்போலிருந்தார்கள்.

சப்பாத்தி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே விசில் ஒலி வசையுடன் ஒலித்தது. தங்கவேலு ‘சீக்கிரம் சாப்பிடு’ என்றான்

‘இங்கே வேலைநேரம் எப்ப?’

‘அப்டீல்லாம் ஒண்ணுமில்லை….விடிஞ்சா இருட்டுற வரைக்கும்தான்…சீக்கிரம்’

இருவரும் வெளியே வந்தோம். பீடாக்காரர்கள் நால்வர் கையில் லத்திகளுடன் விசில் ஊதியபடி கொட்டகைகளில் இருப்பவர்களைக் கிளப்பிக்கொண்டிருந்தனர். பெண்கள்தான் தாமதமாகக் கிளம்புவதாகப் பட்டது. அதிலும் கைக்குழந்தை உடைய பெண்கள். பீடாக்காரர்கள் அவர்களை புட்டத்திலும் தோளிலும் லத்தியால் மெல்ல அடித்து கெட்டவார்த்தை சொல்லி துரத்தினார்கள். குழந்தைகளை இன்னும் பெரிய குழந்தைகளின் கையில் கொடுத்துவிட்டு அடிக்கு உடலைக்குறுக்கி குனிந்து ஓடி முன்னால் செல்லும் கூட்டத்துடன் கலந்துகொண்டார்கள்

என் முன்னால் சென்ற ஒரு பெண்ணின் கையை பீடாக்காரன் பிடித்து நிறுத்தினான். அவள் இழுத்துத் திமிறியபடி வளைய அவன் சிரித்துக்கொண்டே இன்னொருவனிடம் ஏதோ சொன்னான். அவனும் சிரித்தான். மெலிந்த கரிய பெண். கூரிய சிறிய முகமும் பெரிய அழகிய எருமைக்கண்களும் கொண்டவள். அவன் அவள் சிறிய முலையைப்பிடித்து கசக்க அவள் ஓசையில்லாமல் வலியில் வாயைத்திறந்தாள். அவன் விட்டதும் கையால் மார்பைப்பிடித்துக்கொண்டு முன்னால் ஓடி அவளுடைய தோழிகளுடன் சேர்ந்துகொண்டாள்

நான் திகைத்துப் பதறி நின்றுவிட்டேன். என் இதயத்துடிப்பு உடம்பெங்கும் எதிரொலித்தது. ‘வா’ என்றான் தங்கவேலு

‘என்ன இப்டி செய்யானுக?’

‘இங்க அப்பிடித்தான்…எல்லாத்துக்கும்தானே வாறாளுக…வா’

என்னால் நடக்கவே முடியவில்லை. கால்கள் ரப்பரால் ஆனவை போலிருந்தன. நான் என்ன செய்யவேண்டும்? முஷ்டி சுருட்டி உரக்க கூவி அவர்களிடம் பேசினேன். விலங்குவாழ்க்கையை உதறி மனிதர்களாக வாழவேண்டுமென அறைகூவினேன். அவர்கள் எனக்குப்பின்னால் சேர்ந்து நின்றார்கள். கை சுருட்டி ஆட்டிக்காட்டி கூச்சலிட்டார்கள். ஆனால் நான் அந்தக்காட்சியை எங்கோ ஆழத்தில் பார்த்துக்கொண்டு நடந்து சென்றேன். பேசிச்சிரித்துக்கொண்டு கூடைகளை எடுப்பவர்களுடன் சேர்ந்துகொண்டேன்

மதியமானபோது எனக்கான நியாயங்களை உருவாக்கிக் கொண்டேன். உடனடியாக ஏதும் செய்துவிடமுடியாது. அந்த மக்களுடன் நெருங்கவேண்டும். அவர்களுள் ஒருவனாக ஆகவேண்டும். அவர்கள் நம்பிக்கையைப்பெற்று அதேசமயம் அவர்களை விட மேலானவன் என்ற மதிப்பையும் அடைந்தபின் அவர்களுக்குத் தலைமை ஏற்கவேண்டும். சே குவேரா அப்படித்தான். புரட்சியாளர்கள் எல்லாருமே அப்படித்தான்.

நான் அவர்களைக் கவனிக்கிறேன் என்று எனக்குநானே சொல்லிக்கொண்டேன். அங்கே நான் உண்மையில் வேலைசெய்யவில்லை, அவர்களை ஆராய்ச்சிதான் செய்கிறேன். அவர்களை நான் புரிந்துகொள்ள சற்றுக் காலமாகலாம். அதன்பின் அவர்கள் என்னைப்புரிந்துகொள்ளவேண்டும். ஆகவே ஒவ்வொன்றையும் ஓர் அழுத்ததுடன் செய்ய ஆரம்பித்தேன். நான் கூடையில் மண்ணை எடுத்து தலையில் வைக்கும்போது வேலைசெய்யவில்லை, அச்சூழலை அவதானிக்கிறேன். ஒவ்வொரு மனிதனையும் கவனிக்கிறேன். அங்கே வாயில் பீடாவுடன் நடமாடும் ஒவ்வொரு குண்டனையும் கணக்கிட்டுக்கொள்கிறேன்

திரும்பத்திரும்ப ஒன்றே நிகழும் வாழ்க்கை அது. வேறு எதற்கும் இடமே இல்லை. மண்சுமந்து திரும்பும்போதே கால்கள் படுக்கைக்காக கெஞ்சும். சாப்பிடும்நேரம் வரை மட்டுமே தூங்காமல் விழித்திருக்க முடியும். அதிகபட்சம் சில சொற்கள் பேசிக்கொள்ளலாம். காலையில் கண்விழித்த கணம் முதல் கிளம்புவது வரை அவசரம். ஆண்கள் வேலைசெய்யாத நேரமெல்லாம் தூங்கினார்கள். பெண்கள் மாலையில் வந்தபின் சமைத்தனர். குழந்தைகளை கவனித்தனர்.

தங்கவேலுவிடம் ஓரிருசொற்கள் பேசுவதை விட்டால் எனக்கு பேச்சே அற்றுப்போய்விட்டது. சின்னச்சாமியையோ பிறரையோ பின்பு பார்க்கவேயில்லை. பகல்களில் மண்சுமையும் காலமும் ஒன்றேயாக ஆனதுபோல. மண்கூடைகள் வழியாக நிமிடங்கள் மணிகள் கடந்துசென்றன. எங்கே இருக்கிறேன், என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று சிலசமயம் தோன்றும்

மண்வேலைக்காக அடுத்த இடம் சென்றபோது அருகே ரயில்பாதை சென்றது. மும்பைக்குச் செல்லும் ரயில்.வேலைநடுவே எங்கோ ரயிலின் கூக்குரல் கேட்கும். மெல்ல தண்டவாளம் அதிரும். டெல்லி டக் டெல்லி டடக் என்ற ஓசையுடன் காற்றில் ஏறிச்செல்வதுபோல ரயில் கடந்துசெல்லும். சுமைகளுடன் கூடைகளுடன் அத்தனைபேரும் ரயிலை நோக்கி திரும்பி நிற்பார்கள்.ரயிலில் இருப்பவர்கள் எங்களைப்பார்ப்பார்கள். ஆனால் எங்களுக்கு அவர்களின் முகங்கள் தெரிவதில்லை. பறக்கும் முகங்கள் இணைந்து ஒன்றாகி விட்டிருப்பதுபோலத் தோன்றும்

பெட்டிகள் ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டு சென்று மறைந்து தண்டவாளம் மெல்ல டெல்லி டக் டெல்லி டடக் என்று அதிந்ந்து அடங்குவது வரை அத்தனைபேரும் பார்ப்பார்கள். பின்பு காற்று புதரில் ஊடுருவுவதுபோல ஓர் அனைவரிலும் அசைவு கடந்துசெல்லும். ஒருநாளைக்கு ஏழெட்டு ரயில்கள் வரை செல்லும். ஒவ்வொருமுறையும் அனைவரும் பார்க்கத்தவறுவதில்லை.

ரயிலைப்பார்த்து நின்றபின் மீண்டும் கலைவதற்குள் பீடாக்காரன் ஒருவனை தோளில் அடித்து வேலையைப்பார் என்று சொல்லியிருக்கிறான். அவன் தடுமாறி மறுபக்கம் இருந்த இரண்டடி ஆழத்து பள்ளத்தில் விழுந்தான். இளைஞன். சட்டென்று அனிச்சையாக சீறி எழுந்து கையில் அகப்பட்ட மண்கட்டியை எடுத்து அந்த பீடாக்காரனை அடித்துவிட்டான்

பீடாக்காரன் உடைந்த குரலில் கிரீச்சிட்டபடி லத்தியைச் சுழற்ற அவன் லத்தியை பிடித்துக்கொண்டான். நாலைந்து பீடாக்காரர்கள் அவனை நோக்கி ஓடினார்ர்கள். அவன் லத்தியுடன் பீடாக்காரனை சுழற்றி தரையில் போட்டபின் எங்களைநோக்கித் திரும்பி ‘தாயளிகளே…அம்மைவயித்திலே பொறக்காத்த நாயிங்களே…. டேய் பீயத்திங்காதீங்கலே…டே’ என்று கூச்சலிட்டான். குரல் உடைந்து கம்மி விசித்திரமாக ஒலித்தது

எல்லாரும் அமைதியாகப் பார்த்து நின்றார்கள். பீடாக்காரர்கள் அவனைச்சூழ்ந்துகொண்டு கீழே கிடந்த கற்களைப்பொறுக்கி அடித்தார்கள். அவன் திருப்பி அடிக்கவில்லை . கூட்டத்தை நோக்கி ‘டேய் தாயளிங்களே….டேய் டேய்’ என்று கைவீசிக்கூச்சலிட்டுக்கொண்டிருந்தான். அவனுடைய முகத்தில் புருவங்கள் சுருங்கி கண்கள் இடுங்கி வாய்கோணி எச்சில் நுரைக்க அச்சொற்கள் வருவதை துல்லியமாக, மிகமிக அருகில் என்பதுபோல, பார்த்துக்கொண்டிருந்தேன்.

பீடாக்காரர்கள் அவனை வீழ்த்திவிட்டார்கள். அவன் மண்ணில் சரிந்ததும் லத்தியால் மூர்க்கமாக அடிக்க ஆரம்பித்தனர். தூரத்தில் நின்று பார்க்கையில் மௌனமாக ஏதோ நடப்பதுபோலிருந்தது. கீழே அவன் கைகால்கள் அசைந்தன. அவர்கள் வாயைத்திறந்து ஏதோ கூச்சலிட்டபடி அடித்தனர்

பின்பு அவர்கள் பின்னகர்ந்தனர். ஒருவன் அவன் மீது பீடாவைத் துப்பினான். ஒருவன் எங்களை நோக்கி ஏறிட்டு இந்தியில் கூச்சலிட்டான். வேகத்தில் உடைந்து சிதறிய குரல். பதறியதுபோல அத்தனைபேரும் ஏதேதோ செய்ய ஆரம்பித்தனர். கூடைவைத்திருந்தவர்கள் ஓடினார்கள்.பிறர் மண்ணை வேகமாக அள்ளிப்போட்டனர்.

அவனை அவர்கள் சாக்குமூட்டையை கொண்டுசெல்வதுபோல கைகால்களைப்பிடித்து தூக்கி கொண்டு சென்றார்கள். இருவர் எங்களை நோக்கி லாத்திகளை வீசி கத்திக்கொண்டே இருந்தார்கள்.

நான் அதன்பின்னர்தான் என்னை உணர்ந்தேன். என் தொடை தன்னிச்சையாக நடுங்கிக்கொண்டிருந்தது. நெஞ்சின் அறைதலை காதில் கண்ணில் உணர்ந்தேன். முச்சை இழுத்து இழுத்து விட்டு என்னை மெல்ல மீட்டுக்கொண்டேன்.

நான் என்ன செய்திருக்கவேண்டும்? ஓடிச்சென்று அவர்கள் நடுவே நின்றிருக்கவேண்டும். அந்த அடிகளை நானும் வாங்கிக்கொண்டிருக்கவேண்டும். அந்த மக்களை நோக்கி அறைகூவியிருக்கவேண்டும். ஆம், அதைத்தான் செய்யவேண்டும். ஆனால் இப்போதல்ல…

முட்டாள்தனம். பச்சைக்கோழைத்தனம். இதுதான் அந்த இடம். இந்த இடத்தில் அதைச்செய்பவனே அதைச்செய்யக்கூடியவன்… இல்லை. எதையுமே என்னால் செய்ய முடியாது. நான் நினைப்பவன் அல்ல நான். ஆம். அதுதான் உண்மை.

மேலும் எட்டுநாட்கள் கழித்து நான் இரவில் அங்கிருந்து தப்பி ஓடினேன். குறுங்காடுவழியாக தண்டவாளம் வந்து தண்டவாளம் வழியாகவே இரவெல்லாம் நடந்து ரயில்நிலையத்தை அடைந்து அங்கிருந்து ஒரு ரயிலில் ஏறி மும்பைக்குச் சென்றேன்.

மிகப்பெரிய இரும்பொலியுடன் ரயில் மும்பையில் நுழைந்தது. கீழே நூற்றுக்கணக்கான சேரிகள் , குப்பைமலைகள் ,மனிதர்கள்.

முந்தைய கட்டுரைவரப்போகும் படங்கள்
அடுத்த கட்டுரைவரலாற்றாய்வை புதைத்துவைப்போம்