லடாக்கின் தமிழ் முகங்கள்

மதிப்பிற்குரிய ஜெ,

இணைய கட்டுரைகளின் வாயிலாக நீங்கள் நலமாக இருப்பதை உணர்கிறேன். இமயப் பயணமும் முழுமையானதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். கண் முன் இமயம் விரிந்து கொண்டிருக்கிறது. அதற்கு நன்றி. பின்னிரவின் கனத்த மௌனத்தில், மெல்லிய குளிர் நடுக்கத்தில், என் இமயப்  பயண நினைவுகளை மீட்டெடுக்கிறது உங்கள் வரிகள். ‘லே’ அரண்மனைச் சுவர் மீது அமர்ந்து கொண்டு சிறுவன் ஒருவன் மிக சரளமாக ஆங்கிலத்தில் என்னிடம் ‘லே’ பற்றி வகுப்பெடுத்தான், சுற்றியிருக்கும் மணல் இறுகிய மலைகளைக் காண்பித்து, இவை பனியை உறிந்துகொள்ளும் தன்மையுடயது, லே போன்று அதிக பனி பொழியும் இருப்பிடங்களில் இம்மலைகள் அமைந்திருப்பது ‘Nature’s Beauty’ என்று கூறி புன்னகைத்தான். பனி உறிஞ்சும் மலையை நீங்கள் உறிந்து கொண்டு சொற்களில் விரித்துக் கொடுப்பதில் மகிழ்ச்சி.

பிஸ்லாபூர் தொடங்கி, மணாலி, கேலாங் , சார்ச்சு, பாங்க் என்று லே வழியாக , கார்கில், ஸ்ரீநகர் செல்லும் பாதையில் எத்தனை விதமான மலைகள். ஒன்றுக்கொன்று சற்றும் சம்பந்தமில்லாத மலைவியல். அத்தனையும் இமயம்! கழுத்தளவு நீரில் இறங்கியதும் கடலிடம் மட்டுமே தோன்றிய பயத்திற்குபின், லே- மனாலி சாலையில், ஒரு மலைக்கு எதிரில் தனியே எறும்பாய் ஊர்ந்து செல்கையில் ஒரு சின்ன பயம் நேர்ந்தது. நேராக அந்த மலையின் அடிவாரத்தை முட்டுவது போன்ற பாதை சட்டென்று ஓரிடத்தில் திரும்பியது. அந்த திருப்பம் வரும் வரையில் என்னால் அந்த மலையினை நேர்கொண்டு பார்க்க முடியவில்லை. காளியின் கண்களில் இருந்து நீங்கள் விலக்கிக் கொண்டதைப் போல என் பார்வையை வில‌க்கிக் கொண்டே வாகனத்தை முன்செலுத்தினேன். வளைந்து சிறிது தூரம் சென்ற பிறகே அந்த மலையை திரும்பிப்பார்க்க தோன்றியது. வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்த மலையை ஆசுவாசமாய் தைரியமாக பார்க்க முடிந்தது. இன்று வரை புரியவில்லை எதற்காக பயந்தேனென்று.

ஜெ, எதற்காக பெளத்த மடாலயங்கள் பெரும்பாலும் மலை பகுதிகளில் மட்டுமே நிறுவப்படுகிறது? இன்னும் குறிப்பிட்டு கேட்பதென்றால் லே நகரமே இமயம் மீது தான். ஆனால் மடாலயம் அங்கிருக்கும் உயரமான குன்று(?) மீது அமைப்பதின் நோக்கம் என்ன?

பனிக் கால ரங்துன் மடாலயம் என்னை நடுங்கச் செய்கிறது. யாராவது வரக்கூடும் என்ற நம்பிக்கையில் தனிமையை மென்றுவிழுங்கும் சவுகரியமற்ற பனிக்காலம் எதைக் கற்றுக் கொடுக்கும்?

இரண்டு வருடத்திற்கு முன்பான பயணத்தின்போது லே- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பாதை சீரமைக்கும் அல்லது அமைக்கும் பணியை பார்க்க நேர்ந்தது. (தற்போது நீங்களும் பார்த்திருக்கலாம் . இரண்டு ஆண்டுகளில் முடிந்திருக்கும் பணிகள் அல்ல அவை ). மிக உக்கிரமான மதிய வெயிலன்று அங்குமிங்குமாய் சிறு குழுவாக மலையை குடைந்து சாலை அமைத்துக்கொண்டிருந்தார்கள். கற்களை பரப்பும் சப்தமும் அருகே பாதாளத்தில் மெல்லிய நீரோடை சப்தமும் தவிர வேறெதுவுமில்லை.வேலை செய்பவர்க்குள்ளாகவும் பேசிக்கொள்ளவில்லை. அத்தனை பேரும் சொல்லிவைத்தாற் போல் ஒரே நிறம், அடர்த்தியான கரிய நிறம். ஆண் பெண் என்று அத்தனைப் பேருக்கும் சொல்லிவைத்தாற் போல் ஒரே தோற்றம். மெலிந்து, தோல் படிந்து , எலும்புகள் புடைத்து பழுப்பு கண்களுடனான தோற்றம்.

ஏறத்தாழ பத்து முதல் எழுபது வயது வரையிலான ஆட்கள் இருந்திருப்பார்கள் என்று ஊகிக்கிறேன். உணவருந்தும் வேளையில்கூட யாரும் பேசிக்கொள்ளவில்லை, முழுமையாக சுடப்படாமல் மாவுத் துகள்கள் அப்பியிருந்த எண்ணை படாத ரொட்டியில் மிளகாய் வைத்து மென்று கொண்டிருந்தார்கள். கை முழுக்க தூசு. கீழே பாதாள ஓடையில் இறங்கி ஒடுங்கிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி மேலே பருகக் கொடுத்தார்கள். ஒரு கணம் ஐரோப்பியாவிற்காக சுரண்டப்பட்ட ஆப்ரிக்கர்களும். பிரிட்டிஷ் கால சுரண்டலும் கண் முன் வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை. அவர்கள் அனைவரும் வேறு மாநிலத்தவர்கள். யாரேனும் தமிழில் ஒரு வார்த்தை பேசியிருந்தாலும் அங்கேயே உடைந்து அழுதிருப்பேன். இவர்களை போன்றவர்களை அன்றாடம் பார்த்திருக்கிறேன், பார்த்துக்கொண்டுமிருக்கிறேன் ஆனால் அன்று அவர்களின் தோற்றம், சூழல், உணவு என்று மொத்தமாக சேர்த்து என்னை கலங்கச் செய்து விட்டது. எதிர்ப்பாளன் என்றெல்லாமில்லை ஆனால் இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளின் நியாங்களை அதன்பிறகே ஓரளவு புரிந்து கொண்டேன்.

அழகான புகைப்படங்களை மட்டுமே நண்பர்களிடம் இதுவரைப் பகிர்ந்து கொண்டேன். உங்களிடம் சிறிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி .

அன்புடன்
நவீன்

முந்தைய கட்டுரைநூறுநிலங்களின் மலை – 12
அடுத்த கட்டுரைதஸ்தாயெவ்ஸ்கியின் முகம் [சிறுகதை]