அன்பிற்குரிய நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
அழிந்துவரும் தமிழ் நூல்களை நிரந்தரமாகப் பாதுகாக்க தமிழ் மேகம் tamilcloud.org என்ற இணைய தளத்தைத் தொடங்கியிருக்கிறோம். தமிழ் அச்சுப்பதிப்பு என்பது ஏறத்தாழ 1812 திருக்குறள் பதிப்பிலிருந்து தொடங்குகிறது எனலாம். எனவே எங்களது நோக்கமும் திருக்குறள் பதிப்பு தொடங்கிய காலம் தொட்டு முடிந்தவரை தமிழ் நூல்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்பதே.
ஏற்கனவே நிறைய இணையதளங்கள் இருக்கின்றனவே என நீங்கள் நினைக்கக் கூடும். அவற்றுக்கும் தமிழ் மேகத்திற்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் இதில் தகவல்கள் நிரந்தரமாகப் பாதுகாக்கப்படும். விரிவாக என்னுடைய கட்டுரையில் எழுதியிருக்கிறேன். அருள்கூர்ந்து நேரம் ஒதுக்கிப் படித்துப் பாருங்கள்.
இந்தப் பக்கத்தை என் மாணவன் லென் சீனிவாசன் என்பவர் அமெரிக்காவிலிருந்து இன்னும் செவ்வையாக்க ஆவன செய்துகொண்டிருக்கிறார். முழுமையான வடிவமைப்பு இன்னும் தயாராகவில்லை.
தங்களிடம் கோருவது யாதெனில் எங்கள் நோக்கத்தை தங்கள் பக்கத்தில் பகிருங்கள். அது பலருக்கும் செல்லும்போது இன்னும் பயனுடையதாக இருக்கும். உங்களது இந்த நன்றிக்கு நாங்களும் தமிழும் நன்றியுடைவர்கள் ஆவோம்.
கீழே உள்ளது எங்கள் இணைய பக்கம்.
சங்கர் தாஸ்
அன்புள்ள சங்கர்தாஸ்
அரிய முயற்சி
இத்தகைய முயற்சிகள் கூட்டான உழைப்பின் மூலமே வெற்றிகரமாக ஆக முடியும். தமிழின் பழைமையான நூல்கள் அச்சில் வரமுடியாத நிலை மெல்லமெல்ல உருவாகி வருகிறது. நூலகங்கள் செயலற்று வருகின்றன. இம்முயற்சி அதற்கு ஒரு தீர்வாக அமையட்டும்
வாழ்த்துக்கள்
ஜெ