வாடிவாசல் பற்றி

அன்புள்ள ஜெயமோகன் ,

சுந்தர ராமசாமி சி.சு.செல்லப்பா பற்றிய தன்னுடைய “நினைவோடை ” கட்டுரையில் எவ்வாறு சி.சு .செல்லப்பா “பொருட்சிக்கனம்” கொண்டு எழுத்து இதழை நடத்தினார் என்று சொல்லி இருந்தார் . வாடிவாசல் படித்த பிறகு சி.சு.செல்லப்பாவின் “எழுத்து சிக்கனமும் ” தெளிவாகியது .எண்பது பக்க படைப்பில் சி.சு செல்லப்பா தமிழ் இலக்கியத்தில் ஒரு அற்புதம் நிகழ்த்தியுள்ளார் .
மேலும் ஜல்லிகட்டை என் கண் முன் நிறுத்திய படைப்பும் இதுவே .

“சல்லி” கட்டை பற்றிய அருமையான கதை ,இதை மிக எளிதாக நாவலாக மாற்றம் பெற செய்திருக்கலாம் ,ஆனால் அவர் அதை செய்யவில்லை . பிச்சிவின் அப்பா அம்புலி ,கிழவன் ,ஜமிந்தார் ,முருகு ,காரி என்ற காளை இவை அனைத்தையும் பின்புலமாக கொண்டு கதையை விரிவாக்க அனைத்து சாத்தியங்களும் இருந்தும் அதை தவிர்த்தே செல்கிறார் . பிச்சி மற்றும் மருதன் பற்றிய உடல் கூறுகள் ,அவர்களின் முந்தைய காளை சண்டைகள் என்றும் இந்த கதை விரிவு பெற கூறுகள் இருந்தும் அதை அவர் செய்யவில்லை , இவைகள் இல்லாமலேயே இந்த கதை அதன் நோக்கை எட்டிவிட்டதாக தோன்றுகிறது .

ஜமீந்தார் “டேய் பிடி ” என்று பிச்சுவிடம் கூறும் பொழுது ,தான் வளர்த்த காரி (காளை ) தோற்றாலும் பரவாயில்லை மனிதன் வெல்லவேண்டும் என்ற நோக்கம் தெளிவாக தெரிகிறது ,தன் இனத்தை விட்டுகொடுக்கதா “ரோஷம் ” அது .அருமையான சொல்லாடல் ,வர்ணனைகள் (உழுது போட்ட நிலம் போன்ற கிழவனின் முகம் ,சீனி கிழங்கு போன்ற கொம்புகள் ,கொசு அமர்ராபுல காள மேல அமர்னுமேலே ) ,கூடி உள்ளவர்கள் பேசுவது போன்ற வரிகள் அனைத்தும் அற்புதம் . ஆதி முதல் நடக்கும் இந்த இரண்டு மிருகங்களுக்கான போராட்டத்தில் வெல்வது யார் என்பதை விட அவர்களின் ” நோக்கம் ” தான் முக்கியமாக தெரிகிறது. பிச்சி சொல்வது போல “நோக்கம் பழகனுமுங்க “. இதை ஒரு வகையில் ஹெமிங்க்வேயின் “கிழவனும் கடலும் ” கதையுடன் ஒப்பிடலாம் என்றும் தோன்றுகிறது .

முரளி சித்தன்

முந்தைய கட்டுரைஆங்கில இந்தியச்சமூகமும் தமிழிலக்கியமும்
அடுத்த கட்டுரைபுறப்பாடு II – 12, புரம்