1979

அன்புள்ள ஜெயமோகன்,

சமணர் குகைகள் பயணத்தொடருக்குப்பின் இந்த இமயப் பயணத் தொடரை அள்ளிப்பருகி வருகிறேன். இப்படித்தான் பயணக்கட்டுரை எழுத வேண்டும் பார்த்துக்கொள் என்று பாடம் நடத்துவது போல் உள்ளது. உண்மையில் இதைத் தமிழில் பயணத்தொடர் டாக்குமெண்டரி படமாகவே எடுத்திருக்கலாம்- இப்போதும்கூட நீங்கள் எடுத்துள்ள படத்துண்டுகளையும் புகைப்படங்களையும் உங்கள் அனுபவத்தைப் பேட்டியாகவும் சரியாக வெட்டி ஒட்டி விட்டால் ஒரு அமெச்சூர் டாக்குமெண்டரி தயார் செய்து விடலாம் என்று தோன்றுகிறது.

நீங்கள் எழுதிய பகுதிகளிலேயே சமகால உலக அரசியல் அடிப்படையில் முக்கியமான பகுதி காஷ்மீர் பற்றி எழுதியுள்ள 9-ஆவது பகுதி. அதில் நீங்கள் கூறியுள்ள ஒவ்வொரு கருத்தும் தமிழில் வெளியில் அதிகம் பேசப்படாத கருத்துகள். காஷ்மீர் சென்று நேரடியாக நீங்கள் இவற்றை சொல்லும்போது அவை அதிக முக்கியம் பெறுகின்றன.

பொதுவாக இதுபோன்ற கட்டுரைகளில் இருக்கக்கூடிய சிறு விவரப்பிழைகள் பொருட்படுத்தக்கூடியவையே அல்ல- உதாரணம்: 2000-இல் அமெரிக்கா தாலிபானால் தாக்கப்பட்டது என்றிருப்பது. அது 2001.

ஆனால் 1979 அப்படி அல்ல. இரண்டாம் உலகப்போருக்குப்பிந்தைய உலக வரலாற்றில் மிக முக்கியமான வருடம் 1979. உலக அரசியலின் அத்தனை வலுவான சக்திகளும் ஐரோப்பாவிலிருந்து விலகி மத்திய கிழக்கில் குவியத்தொடங்கிய நேரம் அது. அந்த 1979ஆம் வருட சம்பவங்களின் எதிரொலி இன்றுவரை கேட்டுக்கொண்டிருக்கிறது.

1979 ஜனவரியில் ஈரான் ஷா வெளியேறி, பிப்ரவரியில் அயதுல்லா கொமேனி ஈரானில் நுழைகிறார். ஏப்ரலில் ஈரான் இஸ்லாமிய நாடாகிறது. கார்ட்டர் ராணுவ ரீதியாகத் தலையிட தயங்குகிறார். இது அமெரிக்க வலதுசாரி ரிபப்ளிகன் கட்சியால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகிறது. ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே சோவியத் ஆதரவு ஆட்சி – இப்போது அருகில் உள்ள ஈரானில் ஷியாக்களின் ஆட்சி என்பது சவுதி அரேபியாவுக்கு மிகுந்த அச்சம் தருகிறது. 1979 ஜூலையில் சோவியத்துக்கெதிரான போரில் ஆப்கன் முஜாஹிதீன்களுக்கு சிஐஏ உதவி செய்யத்தொடங்குகிறது.

நவம்பர் முதல் வாரத்தில் ஷாவுக்கு அமெரிக்கா அடைக்கலம் கொடுத்ததை எதிர்த்து கொமேனி அமெரிக்க தூதரக அதிகாரிகளை சிறை வைக்கிறார். இதைத் தொடர்ந்து 1979 நவம்பர் 20-இல் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்கிறது. மெக்கா மசூதி வஹாபிய சுன்னி அடிப்படைவாதிகளால் ஆக்கிரமிக்கப்படுகிறது. மேற்கின் ஊடகங்களும் அரசாங்கங்களும் உடனே மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு ஈரான் ஷியாக்களால் நிகழ்த்தப்பட்டது என்று அவசர அவசரமாக செய்தி வெளியிட்டன. ஆனால் நீங்கள் எழுதியிருந்தபடி இஸ்லாமிய உலகே அமெரிக்க-இஸ்ரேல் எதிர்ப்பில் தோய்ந்த ஒன்றுதான், கொமேனி இதை சரியாக உபயோகப்படுத்திக்கொண்டார். அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து இந்த ஆக்கிரமிப்பை நிகழ்த்தியிருப்பதாக அறிக்கை வெளியிட்டார். உலகெங்கும் ஒரு பெரும் கலவரத்தீ பற்றிக்கொண்டு பல வாரங்களுக்கு எரிந்தது.

இந்தியாவில் ஹைதராபாத்தில், கிலாபத் இயக்க நாட்களை நினைவுபடுத்தும் விதமாக, மெக்கா மசூதி ஆக்கிரமிப்பிற்கு எந்த தொடர்பும் இல்லாத இந்துக்கள் மீது கொடும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்துக்களின் கடைகள் சூறையாடப்பட்டன. பெரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரங்களை முன்னின்று நடத்தியது ரஜாக்கர்களின் கட்சி என்று அறியப்பட்ட எம்.ஐ.எம் (Majlis-e-Ittehadul Muslimeen). இதற்குப்பிறகு என்.டி.ராமாராவ் பதவிக்கு வரும்வரை ஒவ்வொரு வருடமும் பல வெள்ளிக்கிழமை கலவரங்கள் எம்.ஐ.எம் தலைமையில் ஹைதராபாத்தின் வாடிக்கையாகிப்போயின. இந்தக்கலவரங்களை உரமாக்கி எம்ஐஎம் ஆந்திராவின் குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் வளர்ந்தது. இன்று 7 எம் எல் ஏக்களையும் ஒரு எம்பியையும் தன்னிடத்தில் வைத்துக்கொண்டு கடுமையான மத அடிப்படைவாத மிரட்டல் அரசியல் நடத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. தஸ்லிமா நஸ்ரினை நாற்காலியால் அடித்து உதைத்து வெளியேற்றியது இந்தக்கட்சியின் எம்.எல்.ஏக்கள்தான்.

சவுதி அரசு, மெக்கா மசூதி வஹாபிய அடிப்படைவாதிகளால் கைப்பற்றப்பட்டதாக அறிவித்தவுடன் இந்த கலவரங்கள் படிப்படியாக அணையத் தொடங்கின. சவுதி அரேபியா பிரான்ஸ் நாட்டின் ரகசிய அதிரடிப்படையினரின் உதவியுடன் மசூதியின் மேற்கூரைகளில் (dome) ஓட்டைபோட்டு விஷப்புகை பாய்ச்சி ஒரு வழியாக இந்த முற்றுகையை முடிவுக்குக்கொண்டு வந்தது.

மெக்கா மசூதி ஆக்கிரமிப்பின் விளைவாக புனித நிலங்களைப் பாதுகாக்க சவுதி அரசு தவறி விட்டது என்று ஈரான் பிரசாரம் செய்யத் தொடங்கியது. சவுதியின் சக்திவாய்ந்த அதிகாரபீடமான வஹாபிய மதத்தலைமையும் மெக்கா மசூதி ஆக்கிரமிப்புக்கு உள்ளானதையும் காபிர்களைக்கொண்டு அதனை விடுவிக்க நேர்ந்ததையும் அரசின் தோல்வியாக, இஸ்லாத்திற்கு அவமானமாகக் கருதியது. வஹாபிய மதத்தலைமையை சமாதானப்படுத்த வேண்டிய மத அடிப்படைவாத மூலை ஒன்றிற்கு சவுதி மன்னர் அரசு தள்ளப்பட்டது. அன்று தொடங்கி உலகமெங்கும்- குறிப்பாக இஸ்லாமிய நாடுகளிலும், இந்தியாவிலும்- அடிப்படைவாத வஹாபியத்தை பரப்புவதை சவுதி அரசு தொலைநோக்குக் கடமையாக ஏற்றுக் கொண்டது. இதன் மூலம் உலக இஸ்லாத்தின் உண்மையான புரவலனாக தன்னைக் காட்டிக்கொள்வது சவுதி மன்னர்களின் மத்திய கிழக்கு இஸ்லாமிய இழுபறி அரசியலுக்கு முதன்மையாகிப் போனது. அன்றிலிருந்து இந்தோனேஷியா, மலேஷியா, இந்தியா என்று கணிசமாக இஸ்லாமியத்தொகை உள்ள அத்தனை நாடுகளும் குறி வைக்கப்பட்டன. அவற்றின் மதராஸா தலைமைகளுக்கு சவுதியில் வஹாபியப் பயிற்சி அளிக்கப்பட்டது. கடுமையான அடிப்படைவாத வஹாபிய அமைப்புகளுக்கு பெரும் நிதி உதவி பொழியப்பட்டது. அன்றைய மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு இன்று பர்கா அணியாததற்கு இஸ்லாமியப் பெண் முகத்தில் வீசப்படும் அமிலமாக தமிழ்நாட்டில் எதிரொலிக்கிறது.

ஆனால் இந்த மெக்கா மசூதி சம்பவத்தில் முஸ்லீம் நாடுகளிலெல்லாம் அமெரிக்காவிற்கு எதிராகக் கிளம்பிய கலவரங்களை சோவியத் யூனியன் ஆர்வத்துடன் கவனித்தது. சவுதியைக்காக்க கார்ட்டர் போர்க்கப்பலை அனுப்பியதை பிராந்திய ஊடுருவலாகக் கண்டு எச்சரிக்கையடைந்தது. இந்நிலையில் தனது ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கு எதிரான அமெரிக்காவின் பிரசாரம் இஸ்லாமிய மக்களிடம் எடுபடாது என்று கணக்குப்போட்டு, 1979 கிறிஸ்துமஸ் தினத்தில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது,

சோவியத்தை நிழல் யுத்தத்தில் வீழ்த்த அமெரிக்கா இதை நல்ல வாய்ப்பாக்கிக்கொண்டது. சவுதி மற்றும் பாகிஸ்தான் உதவியுடன் பெரும் ஜிஹாதிப் போர் ஒன்றைத்துவக்கியது. இந்த போருக்கான பணத்தில் ஒருபகுதிக்காக ஆப்கானிஸ்தானில் ஓப்பியம் பயிரிடல் அமோகமாக முடுக்கி விடப்பட்டது. அதன் வினியோகம் பாகிஸ்தான் ஐ எஸ் ஐ அமெரிக்க சிஐஏ ஆகியவற்றின் துணையுடன் நடத்தப்பட்டது. 1981-இல் உலக ஹெராயினில் 60% ஆப்கன் -பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இருந்து வந்தது. ஹெராயின் விற்ற பணம் உலக அளவில் கைமாற பாகிஸ்தானியரால் அபுதாபி மன்னர் உதவியுடன் தொடங்கப்பட்ட பிசிசிஐ (Bank of Credit and Commercial International) என்கிற வங்கி உபயோகப்படுத்தப்பட்டது. சோவியத் வீழ்ந்தபின் இந்த வங்கியின் செயல்களை அமெரிக்கா ”ஆராய”த் தொடங்கியது; வங்கியின் சொத்துகளை உறைய வைத்தது, பிஸிஸிஐ வீழ்ந்தது. உலகப் பணச்சுழற்சியை இது பாதித்து தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தை வீழ்த்தியதில் ஒரு காரணியானது. 1997இல் இது பெரும் செய்தியானது.

1979-இல் முடுக்கி விடப்பட்ட இந்த போதை மருந்து உற்பத்தி இன்று வரை நின்றபாடில்லை. ஆனால் இதன் முக்கிய விளைவாக ஆப்கன் இன்று உலகின் மாபெரும் போதை உற்பத்தி கேந்திரமாகி உள்ளது. இன்று அமெரிக்கப்படைகள் அந்த போதை மருந்துக்கேந்திரங்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் போராடி வருகின்றன.

மெக்கா மசூதி கட்டிட கான்ட்ராக்டர் மகன் அமெரிக்க சிஐஏவுடன் சேர்ந்து சவுதி இளவரசருடன் ஆப்கானியப் போருக்கான ஆள்சேர்ப்பை மேற்பார்வையிட்டவர்- அவர்தான் ஒஸாமா பின் லாடன். சோவியத்துக்கெதிரான ஜிஹாதி போரின் அத்தனை கட்டுமானங்களையும் பின்னர் அமெரிக்காவை நோக்கித்திருப்ப உபயோகப்படுத்திக்கொண்டார். சவுதி தலைமை மதகுரு பின்பாஜ் அன்று சோவியத்தை எதிர்க்க வேண்டியது உலகளாவிய முஸ்லீம்களின் கடமை என்று பாத்வா விதித்தார். இரண்டாம் உலகப்போருக்குப்பிந்தைய காலகட்டத்தில் எல்லை கடந்த ஜிஹாதி அணிதிரட்டல் நடந்த முதல் நிகழ்வு என்று அதைச்சொல்லலாம். அதன் உலகளாவிய ஜிஹாத் வளர்ச்சியாக பின்பு உருவெடுத்தது அல்-குவைதா.

1979-இன் சம்பவங்களின் விளைவாக அடுத்த கால் நூற்றாண்டுக்கு காஷ்மீரில் தீவிரவாதம் கொழுந்து விட்டு எரியும். பல ஆயிரம் வருடங்களாக அங்கு வாழ்ந்த காஷ்மீர் இந்துக்கள் விரட்டியடிக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதி வாழ்க்கை வாழ்வார்கள். வஹாபியிசம் உலகை அடிப்படைவாத போர்களுக்குள் தள்ளும். ஈரான்-ஈராக் போர், ஈரானின் உதவியுடன் ஹெஸ்புல்லாவின் வளர்ச்சி என்று மத்திய கிழக்கு அரசியலை மடை மாற்றும். சோவியத் யூனியன் உடைந்து சிதறும். உலகளாவிய கம்யூனிஸம் என்கிற அதிகாரக்கனவு புகையாய்க் கரையும்.

ஒருவகையில் 1939-க்கு அடுத்தபடியாக கடந்த நூற்றாண்டின் முக்கிய வருடமாக 1979ஐச் சொல்லலாம். அந்த ஆண்டு 1978 என்று உங்கள் கட்டுரையில் வந்திருக்கிறது. தயவு செய்து மாற்றி விடுங்கள் :)

அன்புடன்,

அருணகிரி.

முந்தைய கட்டுரைஆறு , இன்று
அடுத்த கட்டுரைபுறப்பாடு II – 1, லிங்கம்