வாக்களிக்கும் பூமி 8, அல்பெனி

நியூயார்க் மாகாணத்தின் தலைநகரம் எதுவென்று கேட்டால் பொதுவாக எந்த இந்திய மாணவனும் நியூயார்க் என்றே பதில் எழுதுவான். ஆனால் அதன் தலைநகரம் அல்பெனி. அமெரிக்காவின் வடக்கே கனடா எல்லைக்குச் சமீபமாக இருக்கும் சின்னஞ்சிறிய நகரம். என்னுடைய அடுத்த பயண இலக்கு.

ஜூலை 17 ஆம் தேதி மதியம் என்னை பாஸ்டன் பாலாஜி கிரேஹௌண்ட் பேருந்தில் ஏற்றிவிட்டார். பேருந்துப்பயணம் அமெரிக்காவில் ஏழைகளுக்குரிய ஒன்று. அதாவது கார் இல்லாதவர்களின் வழிமுறை. வசதியான வண்டிதான். ஆனால் பயணிகளில் கணிசமானவர்கள் கறுப்பர்கள் மற்றும் சீன இனத்தவர் என்பதைக் கவனித்தேன். வெள்ளையர்களில் அனேகமாக அனைவருமே கிழவர்கள் கிழவிகள்.

வசதியான வண்டிதான். பின்பக்கம் கழிப்பறை உண்டு, ஆகவே முதியவர்கள்கூட தயங்க வேண்டியதில்லை. நன்றாகச் சாய்ந்துகொண்டு தூங்கலாம். என்னருகே ஒரு முதிய வெள்ளையர் அமர்ந்திருந்தார். என்னிடம் ‘ஹல்லோ’ என்றபின் மிஞ்சிய பயணம் முழுக்க அமைதியாக இரும்புச்சிலை போல் அமர்ந்திருந்தார்.

அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு  ஆரம்பத்தில் வெள்ளையர் எத்தனை இனிய , பெருந்தன்மையான மனிதர்கள் என்ற எண்ணம் ஏற்படும். சாலையில் எதிரே வருபவர்கள் நம்மிடம் ‘இனிய நாள்’ என்றோ ‘உங்களுக்கு ஒரு சிறந்த நாள் அமையட்டும்’ என்றோ சொல்வார்கள். முன்பின் தெரியாதவர்களிடமும் நட்பு கொள்ளும் அவர்களின் மனம் நம்மை மகிழ்விக்கும்.

ஆனால் கூர்ந்து கவனிக்கும் ஒருவருக்கு பத்து நாட்களுக்குள்ளாகவே அந்தப்பிரமை கலையும். இந்தியர்களுக்கு அது ஒரு வருத்தமான அனுபவம். வெள்ளையர்களின் அந்த முகமன்களும் புன்னகையும் ஒருவகை அனிச்சையான செயல்கள் மட்டுமே. அந்தச் சொற்களுக்கு அவர்களைப் பொருத்தவரை ஒருவகையான மதிப்பும் இல்லை. அந்தச் சொற்களுக்கு மேல் அவர்கள் பிறரைப்பற்றி கொஞ்சமும் அக்கறை கொள்வதில்லை. பிறரிடம் அறிமுகம் செய்துகொள்ளவோ,  உரையாடவோ முயல்வதே இல்லை.

நான் வெள்ளையர்களின் ‘புது உலக’த்தில் மூன்று மாபெரும் நாடுகளில் பயணம் செய்திருக்கிறேன்.  ரயிலில், பேருந்தில் ,விமானத்தில் தனித்து. எப்போதுமே பிறரிடம் ஓரிரு சொற்களாவது உரையாட முயல்வது என் வழக்கம்.  ஒருமுறைகூட ஒரு வெள்ளையர்கூட என்னிடம் முகம் கொடுத்து பேசியதில்லை. என்னைப்பற்றி அறிய எந்த முயற்சியும் எடுத்துக்கொண்டதில்லை.

அவர்கள் நம்மை புறக்கணிக்கிறார்கள் என்றே நமக்கு தெரியாது, நம்மிடம் அவர்கள் பேசும் சொற்கள் எல்லாமே ஒரு பண்பட்ட பாவனையுடன்தான் இருக்கும்.  நம் காரை தொடர்ந்து வந்து நம்மை நிறுத்தி அபராதம் விதிக்கப்போகும் போலீஸ்காரர்கூட ‘சிறந்த நாள் அமையட்டும்’ என வாழ்த்தியபின்னர்தான் பேச ஆரம்பிப்பார்.அவையெல்லாம் அவர்களின் நாகரீகம் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்த வெறும்பழக்க வழக்கங்கள் மட்டுமே.

உண்மையில் அவர்களுக்கு நாம் ஒரு பொருட்டே அல்ல. நெடுநாட்களுக்கு முன்னர் நான் ரால்ஃப் எல்லிசன் எழுதிய இன்விசிபில் மேன் [Invisible Man ,Ralph Ellison]என்ற ஒரு நாவலை வாசித்தேன். கறுப்பின மனிதன் ஒரு வெள்ளையனின் பார்வைக்கேதெரிவதில்லை, ஆகவே அவன் ஒரு கண்ணுக்குத்தெரியாத மனிதன் என்று சொல்லும் நாவல் அது.. கண்ணுக்கே தெரியாத மனிதர்களாக நாம் நடமாடும் உணர்வை வெள்ளையர் நடுவேதான் அடைய முடியும்.

இன்னும் ஒன்றைக் கவனித்தேன், நாம் மனிதர்களை கண்ணுக்குக் கண்ணாகச் சந்திக்கிறோம். அனிச்சையாகவே இதைச் செய்கிறோம். இது நம் பழக்கம். நம் கண்களை யாராவது சந்தித்தால் புன்னகை செய்வோம். அல்லது பேசுவோம். வெள்ளையர்கள் எவரையும் கண்சந்திப்பதில்லை. அது அவர்களுக்கு பண்பாட்டுவழக்கம் அல்ல. அவ்வாறு நம் கண்களைச் சந்திக்கும்போது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி ஏற்படுகிறது. ஒரு ‘நிறத்தானின்’ பார்வை அவர்களை கொஞ்சம் பதறச்செய்கிறது. அதைத்தான் அவர்கள் அந்த முகமன் வழியாகச் சமாளிக்கிறார்கள்.

என்னருகே அமர்ந்திருந்த வெள்ளையரை சீண்டவேண்டும் என்ற எண்ணத்துடன் நான் அவரிடம் ‘ஹாய், நான் இந்தியாவில் இருந்து வருகிறேன்’ என்றேன். அவர் திடுக்கிட்டு அதிர்ந்தே போனார். அரைக்கணம் வாய் திறந்திருந்தது. பின் ‘நல்லது’ என்றபின் உடனே பார்வையை விலக்கிக் கொண்டார். சிரிப்பு வந்தாலும் அடக்கியபடி ‘அல்பெனிக்கு பஸ் எப்போது போகும்’ என்றேன். என்னைப்பாராமலேயே ‘தெரியவில்லை’ என்றார்.

அவர் படும்பாடு அவரது கழுத்துச்சதைகளின் அதிர்வில் தெரிந்தது. பதற்றமாக ஒரு புத்தகத்தை எடுத்து விரித்துக்கொண்டு குனிந்தார்.ஜீவவதை கூடாது என்பதனால் நான் மேலே  பேசவில்லை. ஆனால் பேருந்தில் வெள்ளையர்கள் அன்னியர்கள் என்றாலும் அருகருகே அமர்ந்ததுமே தங்களுக்குள்   பேசிச் சிரிக்க ஆரம்பித்தார்கள் என்பதை கண்டேன். தாத்தா வீட்டுக்குச் சென்றதுமே பாட்டியிடம் ‘இன்று என் தலையெழுத்து, ஒரு நிறத்தான்  அருகே மாட்டிக்கொண்டேன்’ என்று சொல்வார் என எண்ணிக்கொண்டேன்.

ஒருகணம் குரூரமான ஒரு எண்ணம் வந்தது ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டு அவரை கிட்டத்தட்ட இதய அதிர்ச்சிக்கு ஆளாக்கலாமா என்று. இந்தியாவில் நம் பக்கத்தில் அமரும் மனிதர் பத்து நிமிடத்தில் சுருக்கமாக தன் வரலாற்றைச் சொல்லிவிடும் வழக்கம் உண்டு. நோய் என்றால் மருந்து சொல்வது, இறங்கும் ஊரைப்பற்றிய தகவல்கள் சொல்வது என அது தொடங்கும். நிரந்தரப்பயணி என்பதனால் இந்தியா முழுக்க தெரியாத மொழிகளில் எல்லாம் பல்லாயிரம்பேர் என்னிடம் அறிமுகமாகி பேசியிருக்கிறார்கள். வீட்டுக்கு அழைத்து சாப்பாடும் போட்டிருக்கிறார்கள். வெள்ளைத்தாத்தா பொட்டென்று போய்விட்டால் என்னாவது என எண்ணி புன்னகையுடன் பார்வையை திருப்பிக் கொண்டேன்.

அல்பெனி சாலையின் இருபக்கமும் மாபெரும் புல்வெளிகள் வந்தபடியே இருந்தன. ஆஸ்திரேலியாவில் செல்வதைப்போல ஒரு பிரமை எழுந்தது. அமெரிக்கச் சாலைப்பயணத்தின் சோர்வூட்டும் அம்சம் சாலையின் ஓரத்தில் ஒரு வாழ்க்கை நம் கண்ணுக்குப் படுவதில்லை என்பதே. மீண்டும்மீண்டும் ஒரேபோன்ற  சாலையோரக் கடைகள். ஒரேபோன்ற கட்டிடங்கள். ஒரேபோன்ற காடுகள். காடுகள் வேலியிடப்படும்போதே அவை காடுகள் அல்லாமல் ஆகிவிடுகின்றன.

அல்பெனியில் ஓப்லா விஸ்வேஷ் என்னை வந்து வரவேற்று அழைத்துச் சென்றார். அவரது இல்லம் மிகப்பெரிதாக இருந்தது. அல்பெனி முதலிய சிறுநகரங்களில் பெரிய வீடுகள் கட்டுபடியாகக் கூடியவை. ஆனால் ஒரு பிரச்சினை. இந்தியாவில் அத்தகைய ஒரு வீடு இருந்தால் அதை சுத்தமாக வைத்திருப்பதற்கு மிகக் கடுமையான உழைப்பு தேவை.  ஓப்லா விஸ்வேஷின் வீட்டை நான்கு வேலைக்காரர் இல்லாமல் சமாளிக்க முடியாது. அங்கே வேலைக்கு ஆள் என்பது மிகப்பெரிய ஆடம்பரம்.

இந்தியாவில் தூசி ஒரு பெரும் பிரச்சினை.ஜன்னல்களை திறந்து வைத்தால் வீடு தூசடைந்தபடியே இருக்கும். தினமும் துடைத்தாகவேண்டும்.  ஜன்னல்களை திறக்காமலிருக்க குளிர்வசதி செய்யவேண்டும், அது மிகப்பெரிய செலவு. பூச்சிகள் வரும். ஒட்டடை படிந்துகொண்டே இருக்கும். இந்தச் சிக்கல்கள் எதுவுமே அமெரிக்க வீடுகளில் இல்லை. ஊரெங்கும் கல்பாவியிருக்கிறார்கள். எஞ்சிய இடங்களில் புல். ஆகவே தூசியே இல்லை. வீடுகளின் வாசல்கள் கூட வலையிடப்பட்ட¨வை. ஒட்டடையும் இல்லை.

ஓப்லா விஸ்வேஷ் மதுரையைச் சேர்ந்தவர். சௌராஷ்டிரர். ஓப்லா என்பது குடும்பப்பெயர். சௌராஷ்டிரர்கள் பட்டு- சரிகை நெசவு வேலைக்காக நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் மதுரைக்குக் குடியமர்த்தப்பட்டவர்கள். அவர்கள் வாழ்ந்த பகுதி குஜராத்தின் சௌராஷ்டிரம். அவர்கள் பேசும் மொழி குஜராத்தியின் ஒரு முன் வடிவமான சௌராஷ்டிர மொழி.

ஆப்கானியப் படையெடுப்பின்போது சூறையாடப்பட்ட நிலப்பகுதிகளில் ஒன்று சௌராஷ்டிரம். வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு ஊர்களில் சௌராஷ்டிர மக்கள் குடியேறியிருக்கிறார்கள். விஜயநகரப்பகுதியான ஆந்திராவில் அவர்கள் பதிமூன்றாம் நூற்றாண்டிலேயெ குடியேறி காலப்போக்கில் தங்கள் தனியடையாளங்களை இழந்து ஆந்திர மக்களாக ஆனார்கள். ஓப்லா என்ற பெயரை ஆந்திர ரெட்டிகளில் சாதாரணமாக காணலாம்.

மதுரைக்கு சௌராஷ்டிரர் வந்தது பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான். அதுவும் நேரடியாக சௌராஷ்டிரத்தில் இருந்து வரவில்லை. அனந்தபூர்- பெனுகொண்டா பகுதிகளில் இருந்து குடியேறினார்கள். விஜயநகர வீழ்ச்சிக்குப் பின் இப்பகுதிகள்தான் விஜயநகர சாம்ராஜ்யத்தின் எச்சங்களாக மேலும் பல ஆண்டுகள் நீடித்தன.

எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் சௌராஷ்டிரர். அவரது வேள்வித்தீ என்னும் நாவலில் சௌராஷ்டிரர் குலவரலாறும் அவர்களின் பட்டுநெசவுத்தொழில்வரலாறும் ஓரளவுக்குச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவர் ‘மீ காய் கரு’ என்ற பேரில் சௌராஷ்டிரர் புலம்பெயர்தல் பற்றி ஒரு மாபெரும் நாவல் எழுத எண்ணியிருந்தார்– எழுதமுடியாமலேயே போயிற்று.

சௌராஷ்டிரம் என்றால் நல்ல நாடு என்று பொருள். இன்றைய சௌராஷ்டிரநிலம் அரைப்பாலைவனம். ஆனால் அக்காலத்தில் அது ஒரு முக்கியமான செல்வமையமாக இருந்திருக்கலாம். ஏன் என்றால் இந்தியா முழுக்க சௌராஷ்டிரர் பட்டு நெசவு , சரிகை  நெசவு, பொன்வேலைப்பாடுகள் போன்ற ஆடம்பரக் கலைகளில் சிறந்தவர்களாகவே அறியப்பட்டிருக்கிறார்கள். முற்காலகட்டத்தில் பட்டு சீனாவில் இருந்துதான் இந்தியாவுக்கு வந்தது.  சௌராஷ்டிரம் சீனாவுடன் நெருக்கமான உறவுள்ள இடமாக இருந்திருக்கலாம்.

ஓப்லா விஸ்வேஷின் இல்லத்தில் அன்று தங்கினேன். இணையத்தில் அவ்வப்போது எழுதும் விஸ்வேஷ் ஓர் இசைக்கலைஞர். மதுரையில் கணிப்பொறி ஆசிரியராக வேலை பார்த்தபின் அல்பெனியில் ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

[மேலும்]

என் அல்பெனி புகைப்படங்களைப் பார்க்க:

http://ovishvesh.jalbum.net/Jeyamohan/

 

http://en.wikipedia.org/wiki/Invisible_Man

முந்தைய கட்டுரைதமிழ்ச் சமணம்
அடுத்த கட்டுரைபண்பாடு மீண்டும் ஒரு கடிதம்