பதஞ்சலி யோகம்: ஒரு கடிதம்

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
 உங்கள் பதஞ்சலி யோகம் கட்டுரை படிக்கும் சூழல் ஏற்பட்டது. மிக அருமையான விளக்கம். ஒரு எழுத்தார்வலர் பதஞ்சலியை படிப்பது என்பது அரிதான ஒன்று.பதஞ்சலி யோக சூத்திரம் என்பது மதம், இனம் மற்றும் ஆன்மிகம் கடந்த விஷயம் என நீங்கள் விளக்கியதிலிருந்து உங்கள் புரிதல் மற்றும் அதன் ஆழம் உணர முடிகிறது.

கட்டுரையில் சில முரண்பட்ட தகவல்களை காண முடிந்தது. பாராட்ட விருப்பம் கொண்ட எனக்கு இதை சுட்டிக்காட்டவும் உரிமை உண்டு என நினைக்கிறேன்.
“பகவத் கீதை இயற்றப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டில்தான் அதை  ஆன்மீக மரபுகள் எடுத்தாள ஆரம்பித்தன” என்று கூறுவது எதன் அடிப்படையில்?
ஐந்தாம் நூற்றாண்டில்தான் என்பதற்கு ஆதாரம் என்ன?

சாங்கிய தத்துவமும் நாத்திகமானது என்பது உண்மை. கடவுள் என்பது அதில் இல்லை. ஆனால் கடவுள் + சாங்கியம் = பதஞ்சலி யோகம் என விளக்கபடுகிறதே இதற்கு உங்கள் விளக்கம் என்ன?

பதஞ்சலி கடவுளை பற்றி சொல்லவில்லை என்றால் “ஈஷ்வர” எனும் பதத்தால் அவர் குறிப்பது என்ன?

பகவத் கீதை ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கொடுத்தார். அர்ஜுனன்ன் பிறருக்கும். அவர் வழியில் வந்த பிறர் பதஞ்சலிக்கும் கொடுத்த உபதேசத்தின் சரம் தான் சூத்திர வடிவில் உள்ள பதஞ்சலி யோகம் என குரு பரம்பரை கூறப்படும் பொழுது பகவத் கீதையில் இல்லாத ஒன்று அதில் இருக்க முடியுமா? அல்லது பகவத் கீதையின் காலத்திற்கு முற்பட்டது என சொல்லாகுமா?

தியானம் என்பது மனம் குவிக்கும் விஷயம் என கூறுகிறீர்கள், அப்பொழுது “தாரணை” என்பது என்ன? தாரணை மனம் குவிப்பு எனில் தியானம் எதை பற்றியது?

ஐயா, உங்களை போன்ற இலக்கியவாதிகள் இளைய சமுதாயத்தை மேம்படுத்த முடியும். சுஜாதா அழ்வர்களை மேற்கோள் கட்டியதால் நாலாயிரம் திவ்விய பிரபந்தம் படித்த இளைஞர்கள் பலர் உண்டு. 

எனது கருத்தில் பதஞ்சலி யோகத்தில் அனைத்தும் உண்டு.
அதில் சில…
1) பகவத் கீதை போன்றவை சமுதாயத்திற்கு சொல்லப்பட்டவை. பதஞ்சலி யோகம் தனி மனிதனுக்கு அமைக்கப்பட்டது.
2) இந்தியர்கள் வெளிநாட்டு தன்னம்பிக்கை பேச்சாளர்களை ( persanality development people) ஓடுகிறார்கள். அஷ்டாங்க யோகத்தில் உள்ள விஷயத்தை மேலாண்மையில் பயன்படுத்தினால் , கிடைக்கும் பலன் பிரம்மண்டமனதாய் இருக்கும்.
3)  அஷ்டாங்க யோகத்தில் ஏதேனும் ஒரு பகுதியை கொள்கையாக மனிதன் கொண்டால் அவன் மாபெரும் நிலையை அடையலாம். உதாரணம் மகாத்மா காந்தி – அஹிம்சை –  எனும் ஒரு பகுதியை கொள்கையாக கடைபிடித்தார்.

இவை அனைத்தும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள காரணம், பதஞ்சலியை
நினைபவர்கள் குறைவு அதில் அவரை சரியாக வெளிச்சம் காட்டுபவர்கள் அதிலும் குறைவு. பாரதி இதில் தோல்வி கண்டார் என்கிறது சரித்திரம்.
உங்களை போன்ற உயர் உள்ளம் வாய்ந்தவர்கள் பதஞ்சலியை சரியான முறையில் அனைவரிடமும் சென்று செர்பீர்கள் என எண்ணுகிறேன்.

இவன்
ஸ்வாமி ஓம்கார்.

[email protected]

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஸ்வாமி ஓம்கார் அவர்களுக்கு,

தங்கள் கடிதம் ஊக்கமூட்டுவதாக இருந்தது. பதஞ்சலி யோகம் போன்ற மூல நூல்களை படிக்கும் கோணம் குருபரம்பரை சர்ந்து மாறுபடுகிறது. என்னுடைய கோணம் நாராயண்குருவைச் சார்ந்தது. சுத்த அத்வைத நிலைபாடு உடையது. மேலும் எழுதும்போது தாங்கள் சொன்னவற்றை நினைவில் கொள்கிறேன். கீதையின் காலம் பற்றி இந்த இணைய தளத்தில் எழுதியிருகிறேன். அவற்றை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்

ஜெயமோகன்

கீதை பற்றிய கட்டுரைகள்

http://jeyamohan.in/?p=317

http://jeyamohan.in/?p=265

http://jeyamohan.in/?p=35

முந்தைய கட்டுரைபாவலர் விருது விழா
அடுத்த கட்டுரைசென்னை சித்திரங்கள்