என்ன பிரயோசனம்?

அன்புள்ள ஜெ,

ராய் மாக்ஸ்ஹாமின் ‘தி கிரேட் ஹெட்ஜ் ஆப் இண்டியா’ படித்தேன். அதை அறிமுகப்படுத்தி நீங்கள் எழுதியிருந்த கட்டுரையையும், சமீபத்தில் சங்குக்குள் கடல் உரையில் குறிப்பிட்டிருந்ததையும் வாசித்தேன். நிறைவாக இருந்தது. இம்மாதிரி விஷயங்கள் ரசவாதத்தன்மை கொண்டவை. நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் வரலாறு குறித்த ‘ஒற்றைவரிப்புரிதல்’களைத் தாண்டி சிந்தனையை விரிவுபடுத்தக்கூடியவை. புத்தகத்திலிருந்து இரண்டு விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவது, ராயின் ஆங்கிலேய நண்பர்கள், அவரது சக இங்கிலாந்து ஊழியர்கள், உடம்புக்குக் கெடுதல் விளைவிக்கும் உப்பை அதிக வரிபோடுவதன் மூலம் குறைவாக உட்கொள்ளவைத்து இந்தியர்களுக்கு பிரிட்டிஷார் நன்மையே புரிந்திருக்கிறார்கள் என்று வாதிடுவது. உப்பு உடலுக்கு எவ்வளவு அவசியம் என்பதை விளக்குவதற்காகவும், தற்போது உப்பு எப்படி தேவைக்கு அதிகமாக உடலில் சேருகிறதென்பதையும், நூற்றைம்பது வருடங்களுக்குமுன்னால் உப்பு வேலியின் காரணமாக உடலின் அத்யாவசியத்தேவைக்கே ஒரு கூலித்தொழிலாளி வருடத்தில் தன் இரண்டு மாத சம்பளத்தை உப்பு வாங்க செலவழிக்க நேர்ந்ததையும், பஞ்ச காலத்தின் இறப்புகள் பாதிக்கும்மேல் கழிச்சலால் உடலில் உண்டாகும் உப்பு குறைபாட்டினாலேயே (அப்போது IV எனப்படும் நரம்புக்குள் மருந்தை செலுத்தும் கண்டுபிடிப்பு இல்லை. சோடியம் குறைவால் மயங்கினால் சாக வேண்டியதுதான்) உண்டானது என்பதைப் புரியவைப்பதற்கும் இரண்டு அத்யாயங்களை ராய் செலவழிக்கிறார். இதிலிருந்து வெளியில் எடுக்கவேண்டிய உண்மை; இன்றைய ஒழுக்க விதிகள், நோய்கள், தொழில் நுட்ப வசதிகள், சமூகப்பிரச்சனைகளைக் கொண்டு வரலாற்றை நோக்குவது நம்மை அபத்தமான முடிவுகளுக்கு இட்டுச்செல்லும் என்பது.

இரண்டாவது, நூற்றைம்பது வருடமேயான வரலாறு நிச்சயம் மக்கள் மனதிலிருந்து அழிந்திருக்க வாய்ப்பேயில்லை என்ற நம்பிக்கையுடன் இந்தியாவைச்சுற்றியலைந்த ராய்க்கு ஆச்சரியமே மிஞ்சுகிறது. முன்னூறு வருடங்களாக அந்த கிராமத்தில் வசித்துவரும் அந்த குடும்பத்தின் பெரியவருக்கே அவ்வேலியைப்பற்றி ஏதும் தெரியவில்லை என்பது அவரை கிட்டத்தட்ட நம்பிக்கையிழக்கச்செய்கிறது. நுட்பமாக இவ்விடத்தில் அதைச்சுட்டிக்காட்டுகிறார். அந்தப்பெரியவரின் கேள்வி ‘வேலி இருந்ததாகவே இருக்கட்டும். இப்ப அதைக்கண்டுபிடிப்பதால் என்ன பிரயோஜனம்?’ என்பதுதான். பிறகு வேலி இருந்த அடையாளங்களைப் புளிய மரங்களைக்கொண்டும், ஜிபிஎஸ், பழைய வரைபட குறிப்புகளைக்கொண்டும் உறுதிசெய்துகொண்டு, மகிழ்ச்சியுடன் ஒளிப்படங்களும் எடுத்துக்கொண்டு, அதே பெரியவரிடம் ராய் விளக்கும்போதும் அதே கேள்வியை அவர் திரும்பவும் கேட்கிறார்; ‘சரி இப்ப கண்டுபிடிச்சாச்சு. என்ன பிரயோஜனம்?’. ராய் இரண்டு முறையும் அதற்கு பதிலேதும் சொன்னதாக எழுதவில்லை. ஆனால் பெரியவர் கேட்டதை எழுதியிருப்பதிலிருந்து நான் ஊகித்துக்கொண்டது இம்மனநிலையைத்தான் ‘ஏன் வேலி மக்கள் மனதிலிருந்து அழிந்தது?’ என்பதற்கான விளக்கமாக ராய் கொள்கிறாரோ என்பது.

குறிப்பாக வரலாறும் இலக்கியமும் சர்வசாதாரணமாக இந்த ‘என்ன பிரயோஜனம்?’ கேள்வியை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. தகவல்களைத்தொகுத்துச் சொந்தமாகச் சிந்திக்கவும், எதிர்கேள்விபோட்டு வரலாற்றில் மானுட வாழ்க்கையின் பரிணாமங்களைப் புரிந்துகொள்ளவும் முடிந்தால் அதனால் நாம் பெறும் பிரயோஜனம் நம் ஆளுமையிலும் அன்றாட வாழ்க்கையிலும் நிச்சயம் பிரதிபலிக்கும் என்றே நம்புகிறேன். வரலாற்றிலும் இலக்கியத்திலும் ஆராய்ச்சிகளுக்கும், உண்மையைக்கண்டறிதல்களுக்கும் அப்பாற்பட்ட பிரயோஜனம் ஆன்மீகமான பண்படுதல்தான். மற்ற ‘பிரயோஜனமான’ கற்றல்கள் அனைத்தும் வருமானத்தையும், அளக்கமுடியக்கூடிய வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்தும் அதேவேளையில் நம்மை வயதான குழந்தைகளாகவே இறக்கச்செய்கிறது. வெற்றுத்தகவல்களாக இவைகளை மூளையில் சேகரிப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லைதான். இதேபோல சமீபத்தில் மதம், கலாச்சாரம் சார்ந்த இம்மாதிரி கேள்விகளைச் சமாளிக்க ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ மாதிரியான விளக்கங்கள் எழுதப்படுகின்றன. அர்த்தமற்ற விஷயங்கள் மீது மேலும் அறிவியலையும் மருத்துவ குணங்களையும் சாமர்த்தியமாக ஏற்றவேண்டியிருக்கிறது.

நேற்று வெளியான ‘மூடர்கூடம்’ என்ற திரைப்படத்தில் ‘இலக்கின்மீதே குறியாகக்கொண்டு பயணத்தைத் தவறவிட்டுவிடாதீர்கள்; பயணம்தான் வாழ்க்கை’ என்ற புத்தரின் கருத்து சொல்லப்பட்டுள்ளதாக விமர்சனங்களில் படித்தேன். என்ன பிரயோஜனம் என்ற கேள்வியை கேட்பவர்கள் ‘பண்படுதல்’ என்பதையும் பிரயோஜனங்கள் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

அன்புடன்,
சிவானந்தம் நீலகண்டன்,
சிங்கப்பூர்.

அன்புள்ள சிவானந்தம்,

உண்மைதான்.

எனக்குச் சிலசமயம் தோன்றும் ஒன்றுமே தெரியாமல் இருக்கமுடியும் என்றால் பிரச்சினையே இல்லை என. நம்மூர் பாட்டிகளுக்கு சரித்திரம் தெரியாது. ஆகவே அதுபற்றிய கருத்துக்களும் இல்லை. ஒரு எளிய விவேகத்தை அவர்கள் சமையற்கட்டில் இருந்தே அடைந்திருப்பார்கள்

ஆனால் பிரச்சினை அரைகுறை அறிவுதான் உண்மையான சரித்திர ஞானம் இல்லாத இடத்தில் உள்நோக்குடன் உருவாக்கப்பட்ட பிரச்சாரங்களை நம்மவர் விழுங்கி கூட்டி வைத்திருக்கிறார்கள். ஆகவே ஒவ்வொன்றையும் தவறாகப்புரிந்திருக்கிறார்கள். விளைவாக கோணலான வாழ்க்கைநோக்கும் சிதிலமான அறவுணர்வும் கொண்ட கோழைக்கூட்டமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். அறியாமையை கிடைத்த இடத்தில் எல்லாம் சலம்பிக்கொண்டிருக்கிறார்கள்

அதிலிருந்தும் வெள்ளைக்காரன் வந்துதான் காப்பாற்றவேண்டியிருக்கிறது நம்மை

ஜெ

உலகின் மிகப்பெரிய வேலி

முந்தைய கட்டுரைஅறமும் வாசகர்களும்
அடுத்த கட்டுரைபுறப்பாடு II – 11, தோன்றல்