புறப்பாடு II – 1, லிங்கம்

ராதாகிருஷ்ணனை முதன்முதலாகப்பார்க்கும்போது அவன் ஒரு மொட்டைத்தென்னையில் ஏறிக்கொண்டிருந்தான். இடிவிழுந்து அதன் மேல்நுனி கருகி மொண்ணையாகிருந்தது. மூத்த கனத்த தென்னை. ஆகவேதான் முழுக்க எரிந்தழியவில்லை. விசித்திரமான ஒரு சுட்டுவிரல்போல அது வானத்தைக் காட்டியது. துண்டை முறுக்கி கால்களில் தளைப்பாகக் கட்டி அவன் அதில் பாதிவரை ஏறியிருந்தான்

நானும் அப்பு அண்ணனும் அப்பா திருவரம்பில் புதியதாக வாங்கிய தோட்டத்தைப்பார்ப்பதற்காக வந்திருந்தோம். ஆச்சரியமாக மேலே இருந்த ராதாகிருஷ்ணனை அண்ணாந்து பார்த்தேன். ‘டேய் ராதா என்னடா அங்க செய்யுதே?’ என்றார் அப்பு அண்ணா

‘எமன் வந்துட்டான் அண்ணா, அதாக்கும் சிவலிங்கத்திலே கேறுதேன்’ என்றான் அவன். கீழே அவனுடைய எருமை நின்றது.

எனக்கு அந்தப்பதிலில் இருந்த கற்பனை ஆச்சரியமூட்டியது. பத்தாவது படித்துக்கொண்டிருந்தேன். பஷீரும் ஓ.வி.விஜயனும் ஹெமிங்வேயும் அறிமுகமாகியிருந்தனர். மற்ற இளைஞர்கள் எல்லாம் கற்பனையும் சொல்நயமும் இல்லாத ஒரு தட்டை உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற மிதப்பு இருந்தது. அந்த ஒரேவரியில் ராதாகிருஷ்ணன் என்னை விட ஒரு படி மேலானவன் என்று எண்ண ஆரம்பித்தேன்.

ராதாகிருஷ்ணன் இறங்கினான். தளைப்பை எடுத்து உதறித் திரும்ப தலையில் கட்டிக்கொண்டான்.

‘எதுக்கு கேறினே?’ என்றேன்

‘சும்மா’ என்று சிரித்து ‘அப்புவண்ணா இவன் யாரு? கரடி தங்கப்பன்நாயருக்க மகனா? மூத்தவனா?’

’எளையவன். பத்தாம்கிளாஸ் படிக்கான்’ என்றார் அப்பு அண்ணா

‘எந்த ஸ்கூல்?’ என்று ராதாகிருஷ்ணன் கேட்டான்

‘அருமனை நெடியசாலை ஸ்கூல்…நீ?’

‘இவனா? இவன் திருவட்டாறு பள்ளிக்கூடம்’

‘எத்தனாம் கிளாஸ்?’ என்றேன். ராதாகிருஷ்ணன் அதற்கு பெரிய வெண்பற்களைக் காட்டிச் சிரித்தான்.

’ஏன் சிரிக்கே?’

‘அவனுக்கு சிரிப்புல்லா? எட்டாம்கிளாஸில மூணுமட்டம் தோற்றா அவனுக்க ஒடையனுங்க இல்ல கரையுவானுவ…அவனுக்கென்ன? வட்டிலிலே சோறு, விரிச்சிட்ட பாயி…’

’பிடிக்கியதுக்கு பிரேக்கு’

‘லே போலே….சவிட்டினா கொடலு வெளிய வந்திரும் பாத்துக்க’

உண்மையிலேயே ராதாகிருஷ்ணன் எட்டாம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தான். அந்தவருடமும் தோல்வி. அதைப்பற்றி அவனுக்கு கவலையே இல்லை. எருமையை கொண்டுசென்று ஆற்றுமணலின் ஓரம் இறக்கினான். அது புதர்களை மேய ஆரம்பித்தது

‘மொட்டைத்தெங்கிலே எதுக்கு ஏறினே?’

‘குஞ்சு எடுக்கிறதுக்கு’

‘என்ன குஞ்சு?’ என்றேன்

‘அருமந்தக்குஞ்சு….ஆராம்புளிக்குஞ்சு….பாக்குறியா?’

‘ ஆமா’ என்றேன். அவன் தன் சாயவேட்டியின் மடியை காட்டி ‘இங்கிண வச்சு கட்டியிருக்கேன். பிரிச்சுப்பாரு…’ என்றான் ‘பாத்து …கடிச்சுப்போடும்’

அவன் மடியைப்பிரித்தேன். உள்ளே சிவப்பாக ஏதோ இருந்தது. அடுத்த கணம் பாய்ந்து பின்னகர்ந்தேன். அவன் தன் குறியை இழுத்து மேலே கொண்டுவந்து அதன் நுனி அங்கே தெரியும்படி கட்டியிருந்தான்

நான் பாய்ந்தோடுவதைக் கண்டு ராதாகிருஷ்ணன் கூவிச்சிரித்தான். ‘படிப்பாளி ஓடுதான்லே…கூ’

அதன்பின் அவனைக்கண்டாலே விலகி நடந்தேன். அவனை தூரத்தில் பார்த்தாலே எனக்கு கைகால்கள் உதற ஆரம்பிக்கும். ஆனால் அவன் என்னை விடவில்லை.அருமனை சாலைவழியாகச் செல்லும்போது சைக்கிளில் வந்து என் பின்னால் காலை ஊன்றி பெல்லடித்தான். அவன் சட்டைபோட்டிருந்ததனால் எனக்கு முதலில் அடையாளம் தெரியவில்லை.

‘வாறியா? அளப்பங்கோடு சாஸ்தா கோவிலுக்குப் போவம்’

‘இல்ல…ஸ்கூலு உண்டு’

‘டே வாடே’ என்று என் தோளைப்பிடித்தான். மறுக்க நினைத்தாலும் பின்னால் கம்பி இருக்கையில் ஏறிக்கொண்டேன். என் புத்தகப்பையை தூக்கி ஒரு டீக்கடையில் கடாசினான். ’ சுப்பண்ணோ, ஆளுக்கொரு கடுப்பச்சாயா’ என்று உத்தரவிட்டான்

‘எங்கிட்ட பைசா இல்ல’

‘எங்கிட்ட இருக்குடே’

பணம் கொடுத்தபின் கிளம்பினோம். மேல்பாலை அருகே ஆலமரத்தடியில் கோயில்கொண்டிருக்கும் அளப்பங்கோடு சாஸ்தா எங்களூரில் பிரபலம். எதற்கெடுத்தாலும் வேண்டிக்கொள்வார்கள். வேண்டுதலுக்காக அவ்வளவுதூரம் செல்லவும் முடியாது. ஆகவே ஏதாவது பையன்களைப்பிடித்து வழிபாட்டுக்கு கொடுத்தனுப்புவார்கள். அது மூலையம்வீட்டு பங்கிப்பாட்டியின் வேண்டுதல். ராதாகிருஷ்ணனின் சைக்கிள்முன்னால் பையில் உருளியும் அரிசியும் வெல்லமும் தேங்காயும் இருந்தன. விறகுக்கும் போற்றிக்கான தட்சிணைக்கும் பைசா கொடுக்கப்பட்டிருந்தது.

அளப்பங்கோடு கோயிலை சைக்கிள் தாண்டிச்சென்றதும் ‘அளப்பங்கோடு இங்கயாக்கும்?’ என்றேன்

‘அங்க போகல்ல’

’ஏன்?’

‘சாஸ்தாவுக்கு சுகமில்ல’

‘ஏன்?’ என்றேன்

‘குந்தி இருக்காருல்லா? அண்டி மண்ணிலே புதைஞ்சு ஆனியாடி மழையிலே முளைச்சு வேரோடிப்போச்சு’

எனக்குச் சிரிப்பு வந்தது. ‘பிறவு?’

‘ஆவணியில இன்னொரு சாத்தா முளைச்சு பொந்திருவாருண்ணாக்கும் பேச்சு. அவராக்கும் இனி அஜிஸ்டெண்டு சாஸ்தா’

குழித்துறையில் ஒரு மளிகைக்கடையில் பச்சரிசி, வெல்லம், தேங்காய் ஆகியவற்றை சகாயவிலைக்கு எடுத்துக்கொண்டார்கள். ராதாகிருஷ்ணன் திரும்பி ‘அளப்பங்கோட்டப்போ தொணையா நின்னுக்கப்போ’ என்றான்

ஒருவாறாக ஊகித்துவிட்டிருந்தேன். இருந்தாலும் கேட்டேன் ‘நாம எங்க போறம்?’

‘வழிபாட்டுக்கு’

‘என்ன வழிபாடு?’

‘வெடி வழிபாடு….குழித்துறை கண்டன் சாஸ்தா கோயிலிலே பாத்திருப்பியே அதுதான்…டமால்…பும்’

படம் ஐ.வி.சசி இயக்கிய ‘இதா இவிட வரே’ . எம்.ஜி.சோமன் ஜெயபாரதியின் வெற்றுமுதுகை முகர்ந்து பார்க்கும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. ஜெயபாரதி அழுவதுபோல எனக்கு தெரிந்தது.

‘இவளாரு?’ என்றேன். அதற்கு முன் மொத்தமாக பத்து சினிமாக்கள் கூட பார்த்ததில்லை. எல்லாமே பக்திப்படங்கள். எல்லாமே அருமனை கொட்டகையில். அதை ஏழாம் வகுப்பு படிக்கும்போது மூடிவிட்டார்கள்.

‘வெடி’ என்றான் ராதாகிருஷ்ணன். இரும்புக்கம்பிக்குகை வாசலில் நல்ல கூட்டம். எல்லாருமே வேட்டியை டப்பாக்கட்டு கட்டிய இளைஞர்கள். காட்டாத்துறை காரக்கோணம் என்று உள்கிராமங்களில் இருந்து வந்தவர்கள். பலர் செழிப்பாக வெற்றிலை குதப்பியிருந்தனர். காலடியிலேயே துப்பி எல்லார் காலும் எருமைபலிகொடுக்கும் இடத்தில் நிற்பவர்கள் போலிருந்தன. உச்சி வெயிலில் வியர்வையும் தேங்காயெண்ணையும் சேர்ந்து ஆவியாகும் வாடை. அருகே ஓடும் சாக்கடையில் குமிழிகள் வெடிக்கும் வாடை.

சட்டென்று ர்ர்ர்ர் என்ற ஒலியுடன் ‘கணபதியே’. கடகட என்று இரும்பு அழி திறந்தது. உள்ளே அதைத் திறந்தவன் திரும்பி ஓடினான். மதகுவழியாக அணைநீர் பெருக்கெடுப்பதுபோல உள்ளே மனிதக்கூட்டம் பீரிட்டது. ராதாகிருஷ்ணன் பின்னால்தான் நின்றிருந்தான். ‘அளப்பங்கோட்டு சாஸ்தாவே சரணமய்யப்பா!’ என்று கூச்சலிட்டபடி பிதுங்கிப்பாய்ந்து சில கணங்களில் உள்ளே போய் ஓடிக்கொண்டிருந்தான்

நான் பின்னால் நின்றேன். எனக்குப்பின்னால்நின்றவர்கள் என்னைத்தள்ள முன்னகர்ந்து கம்பிவாயை அணுகி அக்கணத்தில் மாயவிசை ஒன்றால் வெளியே தள்ளப்பட்டேன். இரண்டுமுறை. அந்த நெரிசலில் யாரோ என்னுடைய விதைப்பையை பிடித்துப்பார்த்தனர். அதிர்ந்து திரும்பிப்பார்த்தேன். அருகே பிதுங்கிக்கொண்டிருந்த கோடுமீசை ஒல்லியாள்தான் அது என அவர் முகம் காட்டியது.

பீதியுடன் வெளிவந்து விலகி நின்றேன். உண்மையில் திரையரங்கு நோக்கி பலபகுதிகளில் இருந்தும் மழைநீர் போல ஆட்கள் வந்து சேர்ந்துகொண்டிருந்தனர். அப்பகுதியில் தலைகள் கொப்பளித்தன. என்னசெய்வதென்று தெரியவில்லை. வீட்டுக்குத்திரும்பிப்போக பேருந்துக்கு பணமில்லை. சைக்கிளை ராதாகிருஷ்ணன் வைத்து பூட்டியிருந்தான்.

எனக்குப்பின்னால் கதவு திறந்தது . ‘இவராலே?’

‘மொதலாளி…டிக்கெட்டு வாங்கியாச்சு மொதலாளி…வாங்க’ என்றான் ராதாகிருஷ்ணன்

கதவிடுக்கு வழியாக உள்ளே சென்றேன். ராதாகிருஷ்ணன் ‘வாடா’ என்றபடி பெஞ்சுபகுதி நோக்கி விரைந்தான்

‘ஆராக்கும் மொதலாளி?’

‘நீதான்….மொதலாளி வெளியே நிக்காருண்ணு வாச்சுமேன்கிட்ட சொன்னேன்’

படம் ஆரம்பித்து ஐ வி சசி பெயர் வந்ததும் ராதாகிருஷ்ணன் எழுந்து நின்று வாய்க்குள் எட்டுவிரல்களைப்போட்டு விசிலடித்தான். அவன் கையில் பை இருந்தது

‘இது என்னடே?’

‘உருளி…சைக்கிளிலே வைச்சா அடிச்சுமாத்திருவானுக’

படம் ஆரம்பித்தது. எனக்கு படம் தலைகால் புரியவில்லை. எம்.ஜி.சோமன் ஊருக்கு வருகிறார். அவருக்கும் மதுவுக்கும் விரோதம். மதுவின் மகள் ஜெயபாரதி

‘டேய் கதை என்ன?’

‘நீ என்ன மயித்துக்கு கதையப்பாக்குதே? அவளுக்க சந்தியப்பாருடே’

‘ஏன்?’

‘அதாக்கும் கலை…கலையே என் வாழ்க்கையின் திசை மாத்தினாய்!’

ராதாகிருஷ்ணன் பரவச நிலையில் இருந்தான். குளியல். புஜங்கள், பிதுங்கல்கள்,. இடைவெளிகள். ஆழ்ந்த அமைதி கொண்டவனானேன்

‘வெண்ணையோ வெண்ணிலாவுதிச்சதோ வெளுத்தபெண்ணே நின்றே பூமேனி’ பாடல் முழுக்க அவர்கள் பலவகையான பொருட்களில் பாதி மறைந்து தழுவிப்புரண்டார்கள். அரங்கு மூச்சடக்கி இருந்தது. மிகச்சரியாக பாட்டு முடிந்ததும் ராதாகிருஷ்ணன் பாடலின் முதலெழுத்தை மாற்றி உரக்கப்பாடினான். அரங்கே உச்சக்குரலில் வெடித்துச் சிரித்தது.

திரும்பும் வழியில் ராதாகிருஷ்ணன் பாடிக்கொண்டே சைக்கிளை மிதித்தான். மேல்புறம் சந்தைவிட்டுச் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை நோக்கி உரக்கப் பாடினான்.

அவள் ‘வாரியலாலே அடிப்பேன்….தெருநாறி’ என்றாள். பாதிதான் காதில் விழுந்தது.

‘அவ ஆளை விளிச்சுகூட்டிருவாடே’

‘டேய், சைக்கிள் இறக்கத்திலே போறப்பமாக்கும் அந்தப்பாட்டை பாடணும்….ஏற்றத்திலே பாடினா அடி உறப்பு கேட்டியா?’

போகிறவழியில் கடையில் ஒரு ரூபாய்க்கு ஒரு பொட்டலம் மஞ்சள்தூள் வாங்கிக்கொண்டோம். அதை ஓடைநீரில் குழைத்து வாழையிலையில் பொதிந்து கொண்டான். சாஸ்தாபிரசாதம்.

‘ஜெயபாரதீஸ்வர பூசைண்ணு ஒண்ணு பண்ணினாரு போத்தி….சிலுத்துப்போச்சு அம்மச்சியே…இங்கபாருங்க ரோமம் எந்திரிச்சு நிக்குது….’ என்று முழங்கையை காட்டினான்.

மூலையம் வீட்டில் அப்போதுதான் விளக்கேற்றியிருந்தார்கள். பங்கிப்பாட்டி பொக்கைவாய் மேல் கையை வைத்து ‘அய்யோ….அளப்பங்கோட்டீஸ்வரா காத்து ரட்சிக்கணே’ என்றாள்

‘அதுக்குமேலே சோமேஸ்வர அர்ச்சனைண்ணு ஒண்ணு….அடடடா! கண்ணு நிறைஞ்சுபோச்சு’

‘புண்ணியம்! புண்ணியம்!’ என்றாள் பாட்டி

‘போற்றிக்க பேரு சசி….அவரு ஆராக்கும் வித்வான்… அடிச்சு கொலுத்திட்டாருல்லா?’

அப்பால் தையல் எந்திரத்தில் தைத்துக்கொண்டிருந்த தேவகியக்கா ஓரக்கண்ணால் என்னைப்பார்த்தாள். எனக்கு உள்ளங்கால் வேர்த்து அதிலெயே வழுக்கிவிழுந்துவிடுவேன் என்று தோன்றியது. கண்களின் நுனி இந்த அளவுக்கு கூர்மையாகவா இருக்கும்

‘வல்லதும் திந்நிட்டு போடா மோனே….சைக்கிளு சவிட்டி போயதல்லியோ?…. தேவகீ’

‘ஒண்ணும் வேண்டாம் அம்மச்சி…வயறு நிறைஞ்சாச்சு’

கிளம்பும்போது தேவகி அக்கா ‘வயறு நிறைஞ்சாச்சாடே?’ என்றாள்

‘ஓ என்ன நிறைவு? இதெல்லாம் ஒரு கிளாஸு தண்ணி குடிச்ச மாதிரில்லா?’

‘கொஞ்சம் கூடித்தான் போவுது கேட்டியா?’ என்றாள் அவள் ராதாகிருஷ்ணன் கண்களைப்பார்த்து.

‘போனதுமே குறைச்சிருதேன் அக்கா’ என்றபின் ’ராமண்ணன் எப்பம் பட்டாளத்திலே இருந்து வாறாரு?’

‘போடா’ என்று சிரித்தபின் உள்ளே சென்றுவிட்டாள். அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்று எனக்குப்புரியவில்லை.

ஒருவருடம் தாண்டுவதற்குள் நன்றாகவே புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டேன்., பலசமயம் அவன் சொல்வதற்குள்ளாகவே. அவன் கதகளி ஆசான் சங்குப்பிள்ளை பெண்வேடமிடும் இடத்துக்குச் சென்று முருக்கமரத்தில் செய்து வண்ணம்பூசி வைக்கப்பட்டிருந்த முலைகளை வருடிப்பார்த்தபோதும் நாடகநடிகை பாறசாலை ராஜம்மா வேடம்போடும் அறைக்கு மேலே மாமரம் வழியாக ஏறி ஓட்டை இளக்கி உள்ளே பார்த்தபோதும் [பிராவுக்குள்ள துணி சுருட்டி வைக்குதாடே ] அணஞ்சபெருமாள் வாத்தியார் கோலப்பன் மனைவியை ரகசியமாக மரச்சீனி விளைக்கு கூட்டிச்செல்லும்போது மரத்தில் ஏறி பார்த்தபோதும் [காத்து அடிக்கான்] அருகிலேயே நின்று தவித்தேன்.

வனயட்சி கோயிலில் ‘பாண்டவ வானப்பிரஸ்தம்’ நாடகத்தில் நடிக்கையில் அவன் பீமன். தோளில் பஞ்சால் செய்த மாபெரும் புஜங்கள். தேங்காய்நாரில் அவனே செய்து மூக்கில் மாட்டிக்கொண்ட பெரிய கப்படா மீசை. கையில் காகிதம் ஒட்டிய கதாயுதம். அர்ஜுனன் ‘அண்ணா அந்த குதிரையைச் சற்று பிடி’ என்று சொன்னதும் கதாயுதத்தை தொடை நடுவே இடுக்கிக்கொண்டு குதிரையைப்பிடித்தான். கூட்டம் மொத்தமும் எழுந்து நின்று கூச்சலிட்டுச் சிரிக்க அரங்கிலிருந்த தர்மரும் அர்ஜுனரும் விழித்தனர்

‘அண்ணா என்ன இது…டேய் நகுலா, குதிரையைப்பிடி’

அதையும் அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசென்றான் ராதாகிருஷ்ணன் ‘டேய் நகுலா அண்ணன் ஆணையிடுகிறேன். நீ இந்தக் கதையைப்பிடி .நான் குதிரையைப் பார்த்துக்கொள்கிறேன்’

மறுநாள் ஆற்றில் பெண்கள் குளிக்கையில் அவ்வழியாக எருமையுடன் சென்றான். பெண்கள் சிலர் திரும்பிப்பார்த்துச் சிரித்தார்கள். மடியிலிருந்து மீசையை எடுத்து ஒட்டவைத்துக்கொண்டான். இருவர் சிரிப்பு தாளாமல் தண்ணீரில் பாய்ந்து விட்டார்கள்

‘டேய் ராதா, அந்த கதை உனக்கு கொள்ளாம் கேட்டியா?’ .

‘அது பத்திரமா இருக்கு தங்கம்மக்கா… காணணுமா?’

‘வச்சுக்கோ மக்கா….அடகுவச்சா கஞ்சிக்கு பணம் தெகையும்லா?’

அவ்வழிச் சென்ற பரமண்ணனிடம் ‘பரமண்ணா உனக்க மச்சினி கதையில்லா கேக்கா?’ என்றான் ராதாகிருஷ்ணன்

‘சொல்லிக்குடுலே…அவளுக்கு கதைண்ணா இஷ்டமாக்கும்’

வெட்கமின்மை ஒரு மாபெரும் ஆற்றல் என நம்பினேன். அதை என்னால் அடையமுடியவில்லையே என ஏங்கினேன். என்ன படித்து, என்னென்னவோ கற்பனைசெய்து என்ன புண்ணியம்? இப்படி மண்ணாந்தை மாதிரி நின்று வாயைத்திறந்து பார்ப்பதுதான் என்னால் முடிந்தது.

அதை ’குடம்’ தங்கமே சொன்னாள். ராதாகிருஷ்ணன் அவளிடம் ‘என்னடீ குடமே? குடவோலைமொறை நடக்குதா?’ என்று கேட்டான். பள்ளிப்பாடங்கள் அவனுக்கு இம்மாதிரி தருணங்களில் அபாரமாக கைகொடுக்கும்.

‘ஏமான் சில்லறையும் கொண்டு வரணும்….காட்டித்தாறேன்’

‘வாறேன். இன்னும் சில்லறை தேறல்ல கேட்டியா?’

‘ஏமானுக்க சித்தப்பன்மாரு வாறதுண்டு . ஒப்பம் சேந்து வரணும்…இதாரு மயக்கின கிளங்கு மாதிரி நிக்குதாரு?’

‘இது நம்ம கரடிக்க மகன்’

‘ஓ அப்பி வீட்டுக்குப்போணும்….இது விளைஞ்ச வித்தாக்கும். அப்பிக்க அப்பன் கையில கிட்டினா சவிட்டி எல்ல உருவிப்போடுவாரு…’

குடம் செல்லும்போது ராதாகிருஷ்ணன் ’நடையா இது நடையா ஒரு தாடகையல்லோ நடக்குது’ என்றான்

ஆனால் என் வீட்டிலும் சரி அவன் வீட்டிலும் சரி எங்கள் நட்பை தவறாக எவரும் சொல்லவில்லை. காரணம் அவன்தான். பால்வடியும் முகத்துடன் ‘மாமியே வெறகு கீறி வைக்கட்டா? வெள்ளிக்கிழமை நெல்லு வேவிக்கணுமில்லா?’ என்பான்.

ஒருகட்டத்தில் அவனிடமிருந்து விலக ஆசைப்பட்டேன். குறிப்பாக கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தபோது. என் கனவுகளும் நடைமுறைகளும் திசைமாறிவிட்டிருந்தன. இந்தியாவை விரும்பும்படியாக மாற்றியமைக்க ஆசைப்பட்டேன். விவேகானந்தர் ஆகவேண்டுமா பகத்சிங் ஆகவேண்டுமா இல்லை ஜெயகாந்தன் ஆனாலே போதுமா என்று தீர்மானிக்க முடியவில்லை. அதெல்லாம் ராதாகிருஷ்ணனுக்கு அப்பாற்பட்டவை.

’நீ என்னடே இருந்து படிக்கே?’ என்று எட்டிப்பார்ப்பான். ‘படம் உண்டாலே மக்கா?’

‘இல்ல’

‘பின்ன? மத்தது உண்டா?’

‘இல்லடே…இது வேறயாக்கும்’

‘எருமைய குளிப்பாட்டப்போறேன் வாறியா?’

’இல்ல நீ போ’

‘ஓ நீ இப்பம் படிப்பாளியாக்குமே.டேய் படிப்பாளிக்கு கெட்டினவ தங்கமாட்டா கேட்டியா?’

‘போடா’

தினமும் எருமையை குளிப்பாட்டி கட்டி புல்பறித்து வைத்துவிட்டு பள்ளிக்குச் செல்லவேண்டும். பள்ளிக்கு வீட்டிலிருந்து பத்துமணிக்குத்தான் கிளம்பிச்செல்வான். நான் பி.காம் முதல்வருடம் படிக்கும்போதுதான் அவன் பத்தாம் வகுப்புக்கே வந்துசேர்ந்தான்.

‘நீ நேரமே பள்ளிக்கு போனா என்னடே?’

‘டேய் இந்த எருமை என்னை அவளுக்க கெட்டினவன்னு நினைக்குது கேட்டியா? இவள சிங்காரிச்சு வச்சுகிட்டு போறதுக்குள்ள அங்க ஒண்ணாம் பீரியடு முடிஞ்சிரும்’

பத்தாம் வகுப்பில் தேறிவிடுவதென்று முடிவெடுத்தான். என்னிடம் விரிவாக பள்ளிப்பாடங்களை அளித்து விளக்கி என்னென்ன கேள்விகள் வரக்கூடுமென்பதை அறிந்துகொண்டான். கோயிலுக்குள் ஒளிந்து அமர்ந்து நுட்பமாக துண்டுத்தாள்களில் மொத்த பாடத்திட்டத்தையுமே எழுதிவிட்டான். என்ன செய்தான் என்றே தெரியவில்லை. பத்தாம் வகுப்பில் ஜெயித்துவிட்டான்

‘இனி பட்டாளத்துக்கு போனா எடுப்பாண்டே’

ராதாகிருஷ்ணனின் இலட்சியமாக இருந்ததே ராணுவம்தான். மாமரக்கிளையில் தொங்கி நூறு முறை எம்பி எழுவான். கயிறு கட்டி அதில் தொற்றி மேலே ஏறுவான். ‘பட்டாளத்துக்கு ஆளெடுக்கிறப்ப லெஃப்ட் ரைட்டு போட்டு காட்டச்சொல்லுவானுகளாடே?’

’சேச்சே…அதை அவனுகள்லா கத்துக்குடுப்பானுக’

‘பட்டாளத்திலே சேர்ந்தா துவக்கு குடுப்பானுகடே….நல்ல உறப்புள்ள துவக்கு. நூறு குண்டு’

‘அதை வச்சுகிட்டு ஆரையும் சுட முடியாதுல்லா?’

‘என்னத்துக்குச் சுடுகது? டேய் ஆம்பிளைக்கு துவக்கு இருந்தாப்போரும்டே…’

அவன் ராணுவத்தை கனவுகாண ,நான் புரட்சியை கனவு காண ஆரம்பித்தேன். நான் புரட்சிபப்டைத்தலைவனாக பகத்சிங் தொப்பியுடன் இமாலயக் காடுகளில் இருக்க அவன் துப்பாக்கியுடன் என்னைச் சுட வருவதாக ஒரு கதையை கற்பனை செய்தேன். அந்த மாதிரி ஒரு படம்கூட வந்திருந்தது. ஹரிஹரன் இயக்கிய படம். நசீரும் ஜெயனும் நடித்தது.

‘என்னடே எழுதுகே?’

‘கதை’

‘ஆருக்க கதை?’

‘மனுசனுக்க கதை…ஆணுக்க கதை பெண்ணுக்க கதை’

‘டேய் மக்கா ஆணுக்கு என்னடே கதை? கதை கிடக்குதது பெண்ணுக்காக்கும். அதை எந்த மயிராண்டியும் எழுத முடியாது பாத்துக்க. அவளுக எழுதவும் மாட்டாளுக’

நான் வாசிக்கும் கதைகளை அவனுக்குச் சொல்வேன். ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான், அக்கினிப்பிரவேசம், தகழியின் வெள்ளப்பொக்கத்தில். எந்தக்கதையைக் கேட்டாலும் சட்டென்று ‘இது என்ன கதைடே மக்களே? நம்ம பொன்னுப்பெருவட்டனுக்க மூத்தமோன் பிறாஞ்சிக்க கதை தெரியுமா? அவனுக்கு சுகேசினிண்ணு ஒரு வெடி…குற்றிவெடியாக்கும்…’ என்று ஆரம்பித்துவிடுவான்.

ஆனால் சம்பந்தமில்லாமல் சொன்ன ஒரு கதையில் அவன் செயலிழந்து அமர்ந்துவிட்டான். அது ஹாம்லெட்டின் கதை. கதையின் தொடக்கத்தில் இறந்துபோன ஹாம்லெட் மன்னரின் ஆவி டென்மார்க்கின் எல்ஸினோர் அரண்மனையின் வாசலில் வந்து நின்றபோதே அவன் முகம் பிரமித்துவிட்டது. கிளாடியஸால் கொல்லப்பட்ட மன்னர். அவரது மனைவியை கிளாடியஸ் மணந்துகொண்டிருக்கிறான். அவளுடைய மகன் இளவரசன் ஹாம்லெட்

‘அவனுக்க பேரென்னெடே?’

‘ஹாம்லெட் இளவரசன்’

‘செறுப்பமா?’

’ஆமா’

கொல்லவேண்டும். சிற்றப்பனையும் துரோகம் செய்த அன்னையையும். To be or not to be. ஹாம்லெட்டால் முடிவெடுக்க முடியவில்லை.

கதை முடிந்ததும் ராதாகிருஷ்ணன் பேசாமல் புல்லுக்கட்டைத் தூக்கிக்கொண்டு சென்றுவிட்டான். அவனுடைய நடத்தையை புரிந்துகொள்ளாமல் கொஞ்ச தூரம் பின்னால் சென்றேன். ஓடையை கடந்து வீட்டுக்குச் சென்றுவிட்டான்.

நான் விடுதியிலிருந்து திரும்பி வந்த மறுநாள் ராதாகிருஷ்ணனைப் பார்த்தேன். இளவெயிலில் மினுமினுத்தான். ‘டேய் என்னடே?’ அழுகிய கணவாய்மீன் மாதிரி ஒரு நாற்றம் வேறு

‘பட்டாளத்திலே தேமலிருந்தா எடுக்க மாட்டானுகண்ணு சொன்னானுக மக்கா’

ஃபோட்டோ கழுவ பயன்படுத்தும் திரவம் தேமலை போக்கும் என்ற நம்பிக்கை நிலவியது. பலன் தந்தது என்றும் நினைக்கிறேன். ராதாகிருஷ்ணன் பொதுவாகவே கழுவப்பட்ட கறுப்புவெள்ளை படத்தின் வாசனையுடன் நடமாடினான். அவனுடைய எருமை அவனைக் கண்டபோதெல்லாம் மூக்கைச்சுருக்கி மடித்து ‘ம்றே?’ என்று கேட்டது.

அதிகாலையில் கோயிலில் இருந்து காதில் துளசி இலையும் நெற்றியில் சந்தனமுமாக எங்கள் வீட்டுக்கு வந்தான். ‘என்னடே ராதா? என்ன விசேஷம்? உனக்க பிறந்தநாளா?’

‘இல்ல மாமி…. நாகருகோயிலுக்கு போறேன்…பட்டாளத்துக்கு ஆளெடுக்கானுக’

‘நல்லா வா மக்கா…உன்னை கண்டிப்பா எடுப்பானுக’

‘ நான் நல்லா தேறியாக்கும் போறது. அவனுக சொல்லுகதுக்குள்ள எல்லாத்தையும் செஞ்சிருவேன்’

உற்சாகத்துடன் ஒன்பது மணிக்குக் கிளம்பினான். முதன்முதலாக குலசேகரத்தில் வாங்கிய ரப்பர் செருப்பை அணிந்திருந்தான். ‘ஈர வரப்பில நடக்குத மாதிரி இருக்குடே’. மஞ்சள் பையில் சான்றிதழ்கள். காலையில் குளிரக்குளிர பழையதும் முந்தையநாள் மரச்சீனியும் சாப்பிட்டிருந்தான். முகம் முழுக்க பற்களாகத் தெரிந்தன.

ஊரிலிருந்து பதினேழு பையன்கள் கிளம்பிச்சென்றார்கள். கூட்டிச்சென்றவர் எட்வர்டு மாணிக்கம். ஓய்வுபெற்ற ராணுவ வீரர். அவர் வந்து ஏழெட்டுவருடமிருக்கும். வருடம்தோறும் ராணுவத்துக்கு ஆளெடுக்கையில் அவர் தன் பெட்டியில் இருந்து பழைய சீருடையை எடுத்து அணிந்துகொள்வார். ஊரிலிருந்து பையன்களை திரட்டி , கூட்டிக்கொண்டு செல்வார். அங்கே உள்ள உயர் அதிகாரிகள் அவரை தனியாகச் சந்திக்க ஒப்புக்கொள்வார்கள். சொல்லிப்பார்த்தால் நாலைந்துபேரை எப்படியும் எடுப்பார்க்ள். எட்வர்டு அதில் சாதிமதம் பார்ப்பதில்லை.

‘நானெல்லாம் அண்ணைக்கு சாவுகதுக்காகல்லா பட்டாளம் போனேன். சியாச்சினிலே ஐஸிலே கெடந்து ஏசுவேண்ணு விளிச்சு கரைஞ்சிட்டுண்டு…இண்ணைக்கு பயக்க பட்டாளம் போறதுக்காக நோம்பு எடுக்கானுக’ என்று அப்பாவிடம் சொல்வார் ‘செரி, படிச்ச பயக்க. இங்கிண கெடந்து சாணி சுமந்தா என்ன கிட்டும்? பெல்ட்டு கொண்டு அடியும் கூட்டியிட்ட சப்பாத்தியும் கிட்டினாலும் மீசையும் கோலுமா ஊருக்க வந்தா ஆணாப்பிறந்தவனா தலை தூக்கி நடக்கலாமே’

’லே வரியா ஏறுங்கலே….பட்டாளத்துக்கு போறவனுக எச்சிலு கண்ட நாயி மாதிரி சாடுகானுக’ என்று எட்வர்டு அவர்களை அதட்டி கோதையாறு வண்டியில் ஏற்றிக்கொண்டார்.

இரவு ஒன்பது மணிக்குத்தான் கல்லூரியில் இருந்து வந்தேன். அங்கே அரசியல்கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். இந்தியாவில் புரட்சிக்குப் பதில் இந்து சாம்ராஜ்யம் வருவது சிறப்பு என்ற முடிவுக்கு வந்து ஒருவருடம் ஆகிவிட்டிருந்தது.

‘டேய் ராதா வந்திருக்கான்’

வெளியே வந்து ‘என்னடே?’ என்றேன்

‘டேய் ராதா பட்டாளத்திலே உன்னை எடுக்கல்லியாடே?’ என்றாள் அம்மா

‘எடுப்பாங்க மாமி….நாளைக்கு வாறதுக்குச் சொல்லியிருக்கானுக…டேய் வாடா’

நானும் அவனும் வெளியே சென்றோம். கோயில் முகப்பில் ஒரு மண்மேடை. வருடாந்தர உற்சவத்துக்கு நாடகம்போடும் இடம். மற்ற நாளில் மண்மேடாக புல் அடர்ந்து கிடக்கும். அதில் அமர்ந்துகொண்டோம்

‘டேய் என்னடே சொன்னானுக?’

‘எல்லா டெஸ்டிலேயும் பாஸு’

‘ஓ’

‘மொட்டைத்தெங்கு மாதிரி ஒரு பெரிய இரும்புத்தூணு…அதில தொத்தி ஏறச்சொன்னானுக. பாதிப்பேரு விளுந்தாச்சு. நமக்கு அனுபவமிருக்கே. கைய மண்ணிலே தூத்துட்டு சரசரன்னு கேறிட்டேன். இறங்கிப்பாத்தா எனக்கே ஆச்சரியம். மைதானம் மலந்து கெடக்குதது மாதிரியாக்கும் அது நிக்குதது’

‘பின்ன?’

‘டேய் இந்த தடவை வந்த மேஜரு பணம் கேக்குதாரு’

‘எதுக்கு?’

‘பட்டாளத்துக்கு நாநுறு பேர எடுக்கணும்…வந்தவனுக பதினஞ்சாயிரம்பேரு…பாத்தாரு… டெஸ்ட்லே ஜெயிச்சவனுக ஆளுக்கு ஆயிரம் ரூபாயோட நாளைக்கு வந்திருங்கன்னு சொல்லிட்டாரு’

‘ஆயிரம் ரூவாயா?’

‘அம்மாவன்கிட்ட கேட்டேன். உனக்க அம்மைய ரெண்டாவது கெட்டிக்குடுத்து அனுப்பினப்பம் எல்லாம் பங்குபோட்டு குடுத்தாச்சு. அவளிட்ட போயி கேளுன்னு சொன்னாரு…’

டேய்’ என்றேன்

‘நீ என்னத்துக்குடே பயருதே? நாளைக்கு மருதங்குழி போயி அம்மையைப் பாக்குதேன். தெக்கடி வயல ஒத்தி வச்சு இப்பம்தான் பைசாவோட போனா. தருவா. தராம இருக்க முடியாதுல்லா….நமக்கும் சேத்து உரிமைப்பட்ட முதலாக்குமே’

‘அந்தாளு சம்மதிப்பானா?’

‘அந்தாளுக்க பைசாவையா நான் கேக்கேன்?’

நான் பேசாமல் இருந்தேன்

‘நாளைக்குக் காலம்பற போயிருவேன். அதாக்கும் உன்னை இப்பமே விளிச்சது. பெட்டியெல்லாம் கெட்டி வச்சாச்சு… துணியெல்லாம் அடுக்கியாச்சு. ஷேவிங் செட்டு கண்டிப்பா வேணும்னு சொன்னானுக. அம்மாவனுக்க பழைய செட்ட எடுத்து வச்சிருக்கேன்’

‘வேட்டி கெட்டிக்கிட்டு போலாமா?’

‘ஆளெடுத்ததுமே அவனுக பேன்டும் சட்டையும் பூட்ஸும் குடுப்பானுக’

‘துவக்கு?’

‘அது உடனே குடுப்பானுகளா? ஒருவருசம் டிரெயினிங் முடியணும்லா? டேய் துவக்கு கிட்டினதும் நேராட்டு ஜெயபாரதிய போயிப் பாக்கணும்’

’என்னத்துக்கு?’

’சும்மா ஒரு சல்யூட்டு வச்சிட்டு வந்திரணும் கேட்டியா?’

‘என்னத்துக்குடே?’

‘டேய் நீ சல்யூட்டு அடிக்கத பாத்திருக்கியா? நல்லா விரைச்சு உறைச்சு நிக்கணும் அதுக்கு….அப்பிடி நிக்கிறவனாக்கும் ஆம்புள …’

நள்ளிரவில் அம்மா ‘டேய் வாறியா இல்லியா? ‘ என்றாள்

‘டேய் வாறேன்’ என்றேன்

அவன் சட்டென்று என்னை ஆரத்தழுவிக்கொண்டான். வியர்வை நெடியும் உடல்வெம்மையும் என்னைச் சூழ்ந்தன

‘நாம பாக்க மாட்டம்டே இனிமே’

‘நீ லீவிலே வருவேல்ல?’

‘வருவேன்….ராத்திரியிலே சத்தம் காட்டாம வந்து உனக்க வீட்டுக்கு பக்கத்திலே தென்னை மரத்துக்குமேலே கேறி இருந்து உன்னை விளிப்பேன்…கூ கூ ஜெயா கூண்ணுட்டு…எறங்கி வந்திரப்பிடாது’

‘ஏன்?’

‘வந்தா உன்னையும் கூட்டிட்டு போயிருவேன்’

‘டேய் ஜெயா வாறியா இல்லியா?’

அவன் கையை பற்றி ‘பாப்பம்டே’ என்று சொல்லிவிட்டு திரும்பிச்சென்றேன்.

அவன் சட்டென்று என் பின்னால் வந்து என்னை மீண்டும் கட்டிப்பிடித்தான். ’என்னடே?’ என்றேன்

‘ஒண்ணுமில்லடே….நீ என்னை மறக்கப்பிடாது’

‘இல்ல’

நான் படுத்து ஒருமணிநேரமாகியிருக்கும். நாராயணன் போற்றி வந்து எங்கள் வீட்டுமுன் நின்று கூச்சலிட்டார். ‘ஜெயா…தங்கப்பா ஜெயா….டேய் ஜெயா’

விளக்கைப்பொருத்தி கதவைத் திறந்தால் வெளியே தென்னைஓலைப் பந்தம் எரிய போற்றி நின்றிருந்தார்

‘டேய் ஜெயா ஓடிவாடா…ராதாகிருஷ்ணன் என்னத்தையோ குடிச்சுட்டு விளுந்துகிடக்கான்…’

நான் உடனே நினைத்தது அவன் மிலிட்டரி ரம்மைக் குடித்துவிட்டிருப்பான் என்றுதான். அவனுக்கு அது தீராத கனவு. ‘நம்ம கள்ளு கொடம் தங்கம் மாதிரி. ரம்மு ஜெயபாரதி மாதிரியாக்கும்’

வைக்கோல்போருக்கு அருகே அவன் விழுந்துகிடந்தான். அவன் மாமனும் தங்கையனும் அவனைத் தூக்கி மல்லாக்க வைத்திருந்தனர். சுற்றி நின்ற வீட்டுப்பெண்கள் கதறிக்கொண்டிருந்தனர். விளக்கொளியில் விசித்திரமான அசைவுகளின் நிழல்கள் தென்னையோலைகளின் அடிப்பக்கத்தில் அலையடித்தன

நான் சிரித்துக்கொண்டே சென்று ‘எங்கே அவன்?’ என்றேன். அக்கணமே என் சிந்தனைகள் உறைந்தன. அவன் எரியும் டயர் போல நெளிந்துகொண்டிருந்தான். வெந்த ரப்பர் போல விசித்திரமான வீச்சம் அங்கே நிறைந்திருந்தது.

’இவன் எங்க இருந்து ரப்பர்ஆசிட்ட எடுத்தான்?’ என்றார் லாந்தருடன் வந்த நேசமணிப்பெருவட்டர்

‘சாயங்காலம் தாமஸுக்க கடையில போயி வேங்கியிருக்கான்’

‘பேசிட்டு நிக்காம ஒரு வண்டிய கெட்டுங்க…பயல ஆஸ்பத்திரியில எடுப்போம்’

இனி என்னத்துக்கு எடுக்க? கரளுல்லா பிய்ஞ்சு வருது’

’செலப்பம் கெடப்பான்வே நம்ம பாலாமணிக்க மொவ பிளைச்சள்லா?’

’அவ ரப்பரு ஒறகுத்த வச்சிருந்த வெள்ளம் சேத்த ஆசிட்டுல்லா குடிச்சா? இது தீ மாதிரி எரிப்பனாக்குமே’

‘வண்டிகெட்டிபோனா நடக்குமா? டாக்ஸி பிடியுங்க’

‘அதுக்கிப்பம் காறுக்கு எங்க போவ?’

’செல்வினுக்க முன்னால நிப்பான். விளிச்சு சொன்னா விடுவான்….போஸ்டாபீஸிலே போணு இருக்குல்லா?’

அக்கணமே திரும்பி ஓடினேன். இருட்டில் தவளைகளை மிதித்தபடி கூழாங்கற்களை சிதறடித்துக்கொண்டு ஓடி போஸ்டாபீஸ் அய்யரின் தோட்டத்துக்குள் நுழைந்து கதவை வெறியுடன் தட்டினேன்

‘என்னடே?’ என்றார். மின்விளக்கில் என் கண்கள் கூசின. மூச்சு வாங்கியது

‘ராதா…ஆசிடடிச்சுப்போட்டான்…ராதா’

‘ஆரு…மாதவிக்க மோளா?’

’ராதாகிருஷ்ணன்….’

’அய்யோ நல்லோரு பயல்லா? தாயும் தந்தையுமில்லா பிள்ள’

‘போனு செய்யணும்’

’அதிப்பம் போஸ்டாபீஸ–’

’போன் செய்யணும்’ என்று கூச்சலிட்டேன்

அவர் திகைத்தபின் உள்ளே சென்று ஒரு தடியையும் டார்ச் விளக்கையும் எடுத்துக்கொண்டு வந்தார். துண்டை தலையில் கட்டிக்கொண்டார். ‘எளம்பனியாக்கும். சளிபிடிச்சாக்க ஒருமாசம் கெடத்திப்போடும்’

இருளில் தடுமாறி விளக்கை அடித்து கூர்ந்து நோக்கி கால்வைத்து நடந்தார்.

‘சர்க்கார் பணம் வச்சிருக்கப்பட்ட எடம்…சட்டப்படி தப்பு…பின்ன நம்ம மனசு கேக்கல்ல’ போஸ்டாபீஸை திறந்தார். விளக்கைப்போட்டு போனை எடுத்து காதில் வைத்துக்கொண்டு காத்திருந்தார். ‘எடுக்க மாட்டானுக…எக்ஸேஞ்சில அவனுக உறங்குத நேரம்..அலோ…ஆமா…அர்ஜெண்டு…செல்வின் ஆசுபத்திரி…ஆமா…’

மீண்டும் காத்திருப்பு. ஒரு நிமிடத்தில் வாழ்க்கை அலையடித்து அலையடித்து அலையடித்து— ‘அலோ’

மறுபக்கம் நர்சின் குரல்

‘ஆமா…அர்ஜெண்டு…ஆசிட்டு அடிச்சுபோட்டான்…ஒரு பய….இங்க திருவரம்பு போஸ்டாபீஸுக்க முன்னால நிக்கம்….’

இருபது நிமிடங்களில் உலகம் உருகி வழிந்து திரவமாகி அர்த்தமற்ற சொற்களாகி அமைதியின் இருளாகிவிட்டிருந்தது. இருளுக்குள் இருந்து ஒளிச்சட்டங்கள் பீரிட்டு வந்து கட்டிடச்சுவர்களை வருடிச் சென்றன. விளக்குக்கம்பத்தின் நிழல் சுழன்று சென்றது. இரு ஒளிக்கண்கள் விழித்து வந்த டாக்ஸி மெல்ல வேகம் குறைந்து விழியணைந்தது

‘ஆராக்கும் வே விளிச்சது?”

‘நாங்கதான்’

‘கேறுங்க’

ஒளியில் கூழாங்கற்கள் பரவிய சாலை மின்னி பின்னால் சுருண்டது. மரங்கள் இலையடிப்பரப்புகள் ஒளிவிட்டுச் சுழன்று பின்நகர்ந்தன
‘இதாக்கும் எடம்’

’காறுவந்தாச்சு…பயல தூக்குங்க…’

இறங்கி ஓடினேன். ராதாகிருஷ்ணனைப் பிடித்துத் தூக்கினார்கள். அவன் முறுக்கி நெளிந்து அதிர்ந்துகொண்டிருந்தான். மனித உடலைப்பற்றிய ஓரு புரிதல் நம் கைகளில் உள்ளது. அதை மீறும் மனித உடலை நம்மால் கையாள முடிவதில்லை. துள்ளும் கைக்குழந்தையைக்கூட. அவன் உடல் கைகளை விட்டு நழுவியது

‘டேய் பிடிடா’

காருக்குள் அவனை நானும் நேசமணிப்பெருவட்டரும் மடியில் போட்டுக்கொண்டோம். அவன் மாமன் முன்னால் ஏறிக்கொண்டார். அவர் அழுதபடி ‘ எறும்புக்கண்ணணுக்க கிட்ட அஞ்சுவட்டிக்கு பணமெடுத்து வச்சிட்டுல்லா வந்து படுத்தேன்….நாசமாப்போற பாவி…. இப்பிடிச்செஞ்சுப்போட்டானே…எனக்க மகாதேவா….வந்து நிப்பாளே….அந்த பத்ரகாளிக்கு என்ன பதில் சொல்லுவேன்…’என்றார்

‘சும்மா இருக்கணும் பிள்ள அனத்தாம’ என்றார் பெருவட்டர்

ராதாகிருஷ்ணன் என் மடியில் கிடந்து நெளிந்து வளைந்துகொண்டிருந்தான். அது அவன் உடலென்றே நம்ப முடியவில்லை. அவன் வாய் வீங்கி உப்பி மூடியிருந்தது. வாய்க்குள் எதையோ நிறைத்துக்கொண்டதுபோல. கழுத்து இறுக்கப்பட்ட கன்றுக்குட்டிபோல, சுழலும் செக்குக்குள் பாத்திரம் விழுந்து அரைபடுவதுபோல விசித்திர ஒலியுடன் மூச்சு பீரிட்டது. அப்போது திப்பிதிப்பியாக ஏதோ தெறித்தது. அமிலத்தில் வெந்த சதை. அது பட்ட என் கைகளும் சட்டையற்ற மார்பும் எரிந்தன.

‘டேய் ராதா…டேய்…’ என்றார் பெருவட்டர்

‘ம்ம்…ம்ம்’ என்றான். அவன் கேட்கிறான் என்பதுதான் அந்த உடலுக்குள் அவன் இருக்கிறான் என்பதைக் காட்டியது.

நாகக்கோடு தாண்டுவதற்குள் ராதாகிருஷ்ணன் மெல்ல அடங்க ஆரம்பித்திருந்தான். பற்றியிருந்த அவன் கையில் விரல்கள் அசைவிழந்து விரிந்தன. ஒரு கால் மட்டும் மின்சாரம் பட்டதுபோல இழுத்து இழுத்து அசைந்தது

செல்வின் ஆஸ்பத்திரிக்கு முன்னால் சென்றதுமே ஸ்டிரெச்சர் கொண்டுவந்து அவனைத் தூக்கி அதில் போட்டார்கள். அவனை வெள்ளையாடை அணிந்த கரிய மனிதர்கள் இருவர் எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல் திறமையாக அள்ளி உருட்டி அதில் ஏற்றி இலகுவாக தூக்கிக்கொண்டு சென்றனர். செல்லும்வழியிலேயே ஒருவர் என்னிடம் ‘படிக்கானா பய?’ என்றார்

நான் பதில் சொல்லவில்லை. என் மனம் வேறெங்கோ அர்த்தமற்ற சொற்பெருக்காக ஓடிக்கொண்டிருந்தது. என் உடம்பெங்கும் தவிட்டுநிறத்தில் அமிலச்சதைத்திப்பிகள். முகம் நெஞ்சு தொடை எல்லாம் எரிந்தன

அவனை மார்பளவு உயரமான ஒரு தகரக்கட்டிலில் படுக்கசெய்தனர். அவன் கை கீழே சரிந்து தொங்கி ஆடியது. அதை மெலிந்த கழுத்துள்ள ஒல்லியான நர்ஸ் எடுத்து அவன் மார்பின் மீது வைத்தாள்.

‘டாக்டர் கிட்ட சொல்லியாச்சா குட்டி?’ என்றார் பெருவட்டர்

‘வாறாவ….அப்பமே சொல்லியாச்சு’

வெளியே பெஞ்சில் ராதாகிருஷ்ணனின் மாமன் படுத்துவிட்டார்.

ஒரு தொடர்பும் இல்லாமல் To be or not to be என்ற சொற்கள் நினைவுக்கு வந்தன. பேச்சிப்பாறை அணை துல்லியமான ஞாபகத்தில் இருந்து எழுந்து வந்தது. மெல்லிய மழையில் செடிகள் நனைகின்றன. ஏன் இந்நேரத்தில் பேச்சிப்பாறை நினைவுக்கு வருகிறது என இன்னொரு மூலையில் நானே வியந்து பார்த்துக்கொண்டிருந்தேன்

டாக்டர் செல்வின் சட்டைக்கையை சுருட்டிவிட்டபடி வந்தார். ‘ஆராக்கும் பையனுக்க ஆளுக?’

’நானாக்கும்…எனக்க பேரு நேசமணி…பஞ்சாயத்து மெம்பராக்கும்’

‘போலீசுகேசாக்கும் வே

‘அது பாத்துக்கிடலாம். எங்க தோளருக்கு ஆளு அனுப்பியிருக்கு….நீங்க இப்பம் பயல ரெட்சிக்க முடியுமாண்ணு பாருங்க’

செல்வின் உள்ளே சென்றார். பார்த்ததுமே தயங்கினார். அவன் கையைப்பிடித்து நாடி பார்த்தார். நெஞ்சில் கையை வைத்தார். பிறகு திரும்பி ‘வே….பையன் அப்பமே செத்துட்டானே’ என்றார்

‘நல்லாப்பாக்கணும்’

‘இதில என்னவே பாக்க? சூடு அடங்கிட்டிருக்கு….போயி பதினஞ்சு நிமிசமிருக்கும்’

சன்னல்கம்பிகள் வழியாக உள்ளே பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு அவர்கள் பேசிய சொற்கள் கேட்டன. ஆனால் அதற்கும் என் மனதுக்கும் தொடர்பில்லை. ராதாகிருஷ்ணன் உடனே எழுந்துவிடுவான் என எதிர்பார்த்துக்கொண்டு நின்றேன்

செல்வின் பெருவட்டருடன் பேசியபடி வெளியே சென்றார். நர்ஸ் அவருடன் செல்ல ராதாகிருஷ்ணன் தனியாக கட்டிலில் அசைவில்லாமல் கிடந்தான். ஸ்டிரெச்சர் தூக்கிய கரிய மனிதர் வந்து கையில் இருந்த வெண்ணிறமான பெரிய போர்வையை அவன் மேல் விரித்து முகத்தையும் உடலையும் முழுமையாக மூடினார்

அவன் மறைந்த கணத்தில் எல்லாவற்றையும் என் சிந்தை புரிந்துகொண்டது. என் உடம்பு நடுநடுங்கி சரியப்போக இரு கைகளாலும் கம்பிகளை இறுகப்பிடித்துக்கொண்டேன். அவனுடைய உடலின் நடுவே ஆண்குறி விரைத்து எழுந்து நிற்க அதன்மேல் வெண்போர்வை கூடாரமாக பரவியிருந்தது

நான் ஓசையே இல்லாமல் இறங்கி இருண்ட சாலையில் இறங்கி ஊரை நோக்கி ஓட ஆரம்பித்தேன்.

முந்தைய கட்டுரை1979
அடுத்த கட்டுரைதேசமெனும் தன்னுணர்வு உரை- காணொளி