இமயம் ஓர் ஆவணப்படம்

ஜெயமோகன் தனது இமய மலைப் பயணம் குறித்து எழுத ஆரம்பித்திருக்கிறார். அது நமக்கு ஆழமான பல பரிமாணங்களை அளிக்கும். அவர் கண்ட காட்சிகளை தத்ரூபமாக அவரால் நம் கண்களுக்குக் காட்டி விட முடியும். இருந்தாலும் அதற்கும் மேலாக இமயமலையில் அவர் சென்ற இடங்களையும் செல்லாத இடங்களின் காட்சிகளையும் காண விரும்புபவர்கள் இந்த பிபிசி தொலைக்காட்சித் தொடரின் 6 எபிசோடுகளில் காணலாம். அந்தக் காட்சிகள் ஜெயமோகனின் பயணக் கட்டுரைகளுடன் நமக்கு மேலும் நெருக்கத்தை அளிக்க உதவலாம். பிபிசியின் பிரபல பயண படங்கள் தயாரிப்பாளரும் காமெடி நடிகருமான மைக்கேல் பாலின் இமய மலையை கைபர் கணவாயில் இருந்து துவங்கி கிழக்கே பிரம்மபுத்ரா வரை வெளியேறுவது வரையில் ஆறு மாதங்கள் பயணித்து எடுக்கப் பட்ட ஒரு ட்ராவல் டாக்குமெண்டரி இது. ஜெயமோகன் பயணித்த அனேக இடங்கள் இந்தத் தொடரில் மிக அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளன.

ஜெயமோகனின் பயணத் தொடரில் விவரிக்கும் இடங்களை காட்சி ரூபமாகவும் காண விரும்புவர்கள் இதில் காணலாம். மைக்கேல் பாலின் காண்பிக்கும் பல இடங்களுக்கு இப்பொழுது அவரே கூட போக முடியாது. இந்தியர்கள் நிச்சயமாகச் செல்ல முடியாது. முதல் கட்டுரையில் ஜெயமோகன் வர்ணித்துள்ள ஸ்ரீநகர், கார்கில் பகுதிகளை பாலினின் 2வது எபிசோட்டில் காணலாம். அவர் கைபர் கணவாயில் துவங்கி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளில் உள்ள கே2 சிகரம் மற்றும் கில்ஜிட், சிட்ரால் பள்ளத்தாகுகளில் ஆரம்பித்து அமிர்தரஸ், சிம்லா, ஸ்ரீநகர், தர்மசாலா, நேபாள், அன்னபூர்ணா, எவரெஸ்ட், லடாக், லாசா,யுவான் பகுதி, நாகலாந்த், பர்மா, பூடான், அஸ்ஸாம் வழி சென்று பங்களாதேஷ் பிரம்மபுத்ரா வழியாக வங்காள விரிகுடாவில் வெளி வருகிறார்.

ஜெயமோகனின் பயணங்களையும் பி பி சி ஒரு பயணத் தொடராக எடுக்க முடிந்தால் இது வரையிலும் எந்தவொரு பயண டாக்குமெண்டரிகளிலும் நமக்குக் கிட்டாத அனுபவம் கிட்டும். முடிந்தால் லேப் டாப்பில் பார்க்காமல் நல்ல பெரிய டி வி யில் பார்க்கவும்.

எஸ்.திருமலைராஜன் கலிஃபோர்னியா

http://www.youtube.com/watch?v=t_iBDg5u1lM

முந்தைய கட்டுரைநூறுநிலங்களின் மலை – 5
அடுத்த கட்டுரைநூறுநிலங்களின் மலை – 6