தஸ்தாயெவ்ஸ்கியின் முகம் [சிறுகதை]

அப்பாக் கவுண்டர் அத்தனை சீக்கிரத்தில் விழுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லைதான்! விழக்கூடும் என்றோ விழவேண்டும் என்றோ எண்ணாதவர்களும் எங்கள் பட்டிப் பக்கம் கம்மி. அதுதான் தஸ்தாயெவ்ஸ்கி சொல்லியிருக்கிறானே, கோபுரங்களைப் பார்க்கும் மனிதர்கள் எல்லாம் அது இடிந்து விழக் காணவேண்டுமாய் ஆசைப்படுகிறார்கள் என்று. (காரமஸோவ் சகோதரர்கள் படித்திருக்கிறீர்களோ இல்லையோ?)

அப்பாக் கவுண்டர் பழைய கோபுரம் மாதிரிதான் இருப்பார். உயரமாய், கறுப்பாய், புல்படர்ந்து, அடிதடிக்காகவே பிறவியெடுத்தவர் என்று பரவலாய் நம்பப்பட்டு வந்தது. காரணம், அவர் தன் ஜீவித நெடும் பாதையில் வேலையென்று ஏதும் செய்தவரல்ல. தாத்தாக் கவுண்டர் பிரிட்டிஷ் காக்கிச் சட்டை. சம்பாத்தியமெல்லாம் ராஜகணக்கு. எல்லாவற்றையும் நிலமாக மாற்றிப்போட்டுத்தான் மண்டையைப் போட்டார். பதினாறு வயதிலேயே அப்பாக் கவுண்டர் தன் இடுப்பில் சீவு அரிவாளைத் தொங்கவிட்டார். நோய்ப் படுக்கையில் மல்லாத்திக் கிடத்த அசவுகரியமாய் இருக்கிறது என்று அதை எடுத்தோம். கவுண்டர் எழுப்பிய ஒலி உறுமல் மாதிரிதான் இருந்தது.

நடந்து கொண்டிருந்த எட்டு கிரிமினல் வழக்குகளும் பணச் செலவில்லாமல் முடிய ஓர் அரிய வாய்ப்பை அவருடைய நோய் ஏற்படுத்தித் தந்துவிடலாம் எனும் இனிய கனவு எனக்குள் ஊற ஆரம்பித்து விட்டிருந்தது. என் குணச்சித்திரம் அப்படி. அதுதான் ஆரம்பத்தில் தஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றிய பிரஸ்தாபத்திலேயே புரிந்திருக்குமே. கொஞ்சம் ஈடிபஸ் காம்ப்ளெக்ஸுக்கும் வாய்ப்பு இல்லாமலில்லை. என் அம்மா வெள்ளாடு, கலைமான், குழிமுயல் முதலான ஜீவ ஜாலங்களின் பாற்பட்டவள். பாத்திரம் கைதவறி விழும் ஒலியைக் கேட்டாலே வெலவெலத்து போய்விடுவாள். இந்த சீரில் அம்மா அப்பாவின் மனைவியாக இருபது வருடம் வாழ்ந்தது இந்திய மரபின் எத்தனையோ அதிசயங்களுள் ஒன்று. அப்பா திண்ணையில் ஏறி அமர்ந்து, அரிவாளைக் கழட்டி அருகே வைத்தபடி, ‘கிட்ணம்மா’ என்று அதிர்ந்தாரென்றால் அம்மாவின் உடம்பில் உறுப்புகள் வெவ்வேறு அதிர்வெண்களில் நடுங்க ஆரம்பித்துவிடும். அப்பா அவளை நகை தாங்கி, சமையல் மேற்பார்வை, இன்ன பிற வேலைகளுக்கான யந்திரமாகவே உபயோகித்து வந்தார். இருவரும் இயல்பாக முகம் பார்த்துப் பேசி நான் கண்டதில்லை. கர்சனையும் முனகலும் தான் மாறி மாறிக் கேட்டுக் கொண்டிருக்கும். உதாரணமாய் இப்படியொரு காட்சியை கற்பனை செய்வோம். பருத்தி போடப் பணமில்லாத கவுண்டன் ஒருவன் வீட்டு வாசலுக்கு வந்து, தலைப்பாகையை அவிழ்த்து அக்குளில் செருகி, வினயமாய் நின்று, கடன் கேட்டுவிட்டான் என்று வைத்துக் கொள்வோம். அப்பாக் கவுண்டர் பெரிய அரிவாளால் நகத்தை சீவியபடி, அவனை ஏறிட்டே பார்க்காமல் யோசிக்கிறார், பிறகு உள்பக்கமாகத் திரும்பி, பக்கத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் தாய்க்கோழி குடல்பதறி ஓடும் விதமாய் ஒரு அழைப்பு

‘… கிட்ணம்மா’

அம்மா பதறி ஓடிவந்து கதவிடுக்கில் நின்றப்படி வெளியே பார்க்கிறாள். பரண் இருட்டில் எலியின் கண்களைப் பார்த்த ஞாபகம்தான் குடியானவக் கவுண்டனுக்கு வரும்.

‘எங்கட்டி ஒளிஞ்ச, சவத்துமிண்டெ, கூப்பிடறனுல்ல….’

‘இருக்கனுங்க’

‘அன்னாக்கவுண்டன் பருத்தி போடறானாம்’

நிசப்தம்.

‘வெதப்பாட்டுக்கு பணமில்லேண்ணு அளுவுதான்’

அதற்கும் மவுனம்.

‘பேசிக்னு இருக்கேன்ல, உம்னு நின்னா இன்னா அர்த்தம்?’

‘கேக்கிறனுங்க’

‘புள்ளைக்கு சீக்குன்னு வெதப் பருத்திய வித்துப் போட்டானாம்..தாளி குடிச்சு போட்டுட்டு வந்து கதைக்கான்.’

‘இல்லிங்க, நசம்மாத்தானுங்க’ என்பான் யாசகக் கவுண்டன்.

“அடக் கம்முனாட்டி நாயே, நா ஏ கவுண்டிச்சியிட்ட பேசிக்னுகீறேன் நடுவால பூந்து பேசறீய நீயி?”

“இல்லிங்க கவுண்டரே”

“இன்னாடா இல்ல?”

‘பேசலிங்க’

“பேசாட்டி, உங்க அப்பங்கவுண்டனா வந்து மடிய நீட்டுவான், வக்கோளி வாய நீட்டாத, ஆங்,’

தலையைச் சொறிந்தபடி அசட்டுச் சிரிப்பு சிரிப்பான் வந்தவன்.

‘இன்னா சொல்றே இப்ப?’ என்று அம்மாவிடம் திரும்புவார்.

‘உங்க இஸ்டமுங்க’

‘ஆங், அதுசெரி குடுத்துப் போடலாமுங்கறே?’

‘அமுங்க’

‘ச்சீ பரதேசிப் பய மொவளே, குடுத்தா உங்கப்பன் மாரப்பக் கவுண்டன் வந்து திருப்பிக் குடுப்பானா? எச்சக்கல நாயே ..வாய நீட்டாத..தெச்சிப்போடுவேன் தெச்சி..ஆம..’

மவுனம்.

‘வக்கத்த பெயவளுக்கு குடுத்துக் கட்டுமா? வாரானுங்க இங்க என்னமோ வச்சிருக்குன்னுட்டு’

அம்மா தவிப்புடன் கால் மாற்றி நிற்கிறாள்.

“பேசிக்னு இருக்கேன்ல, வாயில இன்னாடி கீது? கொளுக்கட்டையா? உங்கப்பன் மாரப்பக் கவுண்டன் ஆக்கிப் போட்டானாடி பண்ணி ?”

‘இல்லிங்க’

‘என்ன இல்ல?’

‘அப்டீலாம் இல்லிங்க’

‘இப்ப இன்னா சொல்றே நீ? குடுங்க வாணாம்ங்கறீய?’

‘அமுங்க’

‘ தூத்தெறி கம்முனாட்டி மொவளே, உங்கப்பன் மாரப்பக் கவுண்டன் சம்பாரிச்சதாடி கூத்தியா? ராங்கி பண்றியா நீயி? கீசிப்புடுவேன் ஆமா….”

கொடுத்தால் மட்டுமே இவ்வளவும் சாத்தியமாகும் என்பதும் அப்பாக் கவுண்டருக்குத் தெரியும். வாங்கிப் போகிறவன் மனநிலை எப்படி இருக்கும் என்பது பெரிய பிரம்ம ரகசியமும் இல்லை.

ஆயினும் அம்மாவிற்கு அப்பா கண்கண்ட தெய்வம்- காரணம் சாயந்தரமானால் தண்ணிபோட்டு மஜாவாக வீடு திரும்பும் கவுண்டர் தேவதையாக இருப்பார். வலக்கையில் அல்வா, இடக்கையில் ‘மல்லீயப் பூ’ படியேறி, வீட்டுக்குள் நுழையப் பிறர் சகாயம் வேண்டும். இது எப்படி சரியாக வீடு மட்டும் திரும்பி விடுகிறது என்று எனக்குப் பெரிய ஆச்சரியம் தான். பறவைகளின் மைக்ரேஷன் பற்றி சலீம் அலி எழுதிய கட்டுரையொன்று சந்தேகத்தைத் தீர்த்து வைத்தது. பறவை முற்றத்தில் விழுந்து சிறகடிக்கிறது. ‘கிட்ணம்மா, கிட்ணம்மோவ். எங்க ஏங் கவுண்டச்சி? ஏஞ் சக்கரக்கட்டி?’

அம்மா ஆதரவாய் பாய்ந்து வந்து, தூக்கி படியேற்றுவாள். கிட்ணம்மா… ஏங்கண்ணு ..ஏம் லெச்சுமி ..கெரக லெச்சுமி ..உனக்கு இன்னா வோணும் ஸொல்லு..இப்ப வாங்கியாரேன், இல்லாட்டி நான் கவுண்டனுக்குப் பொறக்கலை, ஹிக்..’ அம்மாவின் முகம் பரம குதூகலமாக இருக்கும், உள்ளே மரக்கட்டிலை அடைய ஒரு மணி நேரம் தேவைப்படும். அதற்குள் பிலாக்கணம், வஞ்சினம், சிருங்காரம், சோகம், வீரம் முதலான ரசங்கள் வழிந்து ஓடும். ஆலிங்கனாதிகள் உபரியாக. சோறு ஊட்டிவிட்டால்தான் இறங்கும். இடிக்குரலில் பாட்டு வேறு. நள்ளிரவு வரை விழாக் கூத்துதான். அதன் பிறகுதான் ஆழ்ந்த சோகம். தாத்தாக் கவுண்டனுக்குரிய ஒப்பாரி முடிந்தபிறகு குட்டித் தூக்கம். பிறகு பொதுவாய் உலக நிலைமைக்காக இறங்கி ஒரு பாட்டம். கோழி கூவ ஆரம்பிக்கும்போது கவுண்டர் கட்டிலில் பாதி தரையில் பாதியாக வழிந்திருப்பார். ஒன்பதரை மணி சுமாருக்கு அறைவாசலில் நின்று துயிலெழுப்புவது பற்றித் தத்தளிக்கும் அம்மாவை காண முடியும். கவுண்டரின் குறட்டை மிக்ஸி ஒலியை ஒத்திருக்கும்.

நான் கவுண்டருக்கு பிறந்தவன்தானா என்ற சந்தேகம் அடிக்கடி அவருக்கு எழும்.இருபது வருடம் முன்பு ராயக்கோட்டை எஸ்டேட்டில் ஜீவியவந்தராக இருந்த ஒரு துரையின் பீஜம் எவ்வண்ணமாவது என்னில் கலந்திருக்குமோ என்று ஒரு குழப்பம் அவருக்கு. முடிந்தவரை இந்த சந்தேகத்தை ஊரில் பரப்பப் பாடுபட்டு வந்தார். கிழட்டு காரமஸோவின் ஒரு அம்சத்தை இவ்வண்ணமாய் நான் என் தந்தையில் கண்டேன். ராயக்கோட்டை துரை இருபத்திநாலு மணிநேரமும் புஸ்தகம் படித்து பைத்தியம் வந்து செத்தாராம்.

அப்பாவிற்கும் எனக்கும் காசுப் பிரச்சனை ஏதுமில்லை! அதிலெல்லாம் பரம தாராளம். நாலு தலைமுறைக்கு என் குடும்பத்தில் இருந்து வந்த கிரிமினல் அம்சத்தை நான் இல்லாமல் ஆக்கிவிட்டது பற்றியே அவருக்கு வருத்தம். மச்சூட்டுக் கவுண்டரின் குடும்பத்தைப் பொது ஜனம், அதாவது நாலு சாதி, மரியாதையின்றி பேசும் காலம் வரும் முன் தன்னை கூப்பிட்டுக் கொள்ளும்படி அப்பாக் கவுண்டர் கசமுத்தையன் சாமியை வற்புறுத்தி வந்தார். அதுதான் அவருக்கு இஷ்ட தெய்வம். கவுண்டரின் குணவிசேஷங்களின் தெய்வ வடிவம்தானே அது.

ஆனால் கசமுத்துவித்துவிற்கு கவுண்டரின் மீது பிரீதி பற்றாது. இல்லாவிட்டால் மல்லுப்பட்டிச் சந்தைக்கு வரும் மாட்டுத் தரகர்களிடம் மோதி தோள் தினவு தீர்க்கும் பொருட்டுச் சென்றவர் அங்கே சுலபமாக விற்கப்படும் பிரபலமான பாட்டரி ரசம் கலந்த சாராயம் குடிக்க ஆவல் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதில் ஸ்பிரிட் அம்சம் இசைகேடாக முறுகிவிட்டிருந்ததும் விதியே. கவுண்டரை உடம்பின் சகல துவாரங்கள் வழியாகவும் திரவம் வெளிவரும் பதனத்தில்தான் பிற்பாடு ஓசூர் ஆஸ்பத்திரியில் கண்டோம். அப்போது அவர் இயங்கிக் கொண்டிருந்த ஒரே உறுப்பான வாய் மூலம் டாக்டரின் பிறப்பைப் பற்றி சந்தேகம் எழுப்பிக் கொண்டிருந்தார். திரவ வெளிப்போக்கை ஈடுசெய்ய குளுக்கோஸ் செலுத்தும் பொருட்டு டாக்டர் கவுண்டரில் துளைப் போட்டதுதான் காரணம். சாகசக் குடி நிகழ்வில் பங்குபெற்ற பிறருக்குக் கண்ணும் காதும் வாயும் பறிபோயின. கவுண்டருக்கு அவை தவிர மீதி எல்லாமே நின்றுவிட்டன. ஒரு மாத சிகிச்சைக்குப் பிற்பாடு ஆஸ்பத்திரிப் படுக்கையில் அவர் உயிர் பிரிவது அவரது ஆத்மா அடையவேண்டிய சாந்தியைத் தவிர்த்து விடும் என்று டாக்டர் அபிப்பிராயப் பட்டார். கொள்ளுத் தாத்தா தீவட்டிக் கொள்ளைக்கு இணையாக அந்தக் காலத்தில் பிரதாபம் பெற்றிருந்த தண்டல்காரன் வேலையை திறம்பட ஆற்றிவந்த காலத்தில் காணிக்கையாகப் பெற்றதும் ஏழு மரணம் கண்டதுமான பெரிய கருங்காலி கட்டில் மீது கவுண்டர் மல்லாக்க விரிக்கப்பட்டார்.

சிச்ருஷை செய்ய வரும் அம்மாவை எட்டி உதைக்க முடியாமை பற்றி கவுண்டர் ஆறாத் துயரம் கொண்டிருந்தார். சதா அவருடைய குரல் வீட்டுக்குள் முழங்கியது. இத்தகைய கதாபாத்திரங்களை பெருந்தன்மையும் கருணையும்தான் பெரிதும் சித்திரவதை செய்கின்றன என்கிறான் தஸ்தாயெவ்ஸ்கி. அவனுடைய மனக்கண் துருவ நட்சத்திரம் போல. போகாத ஆழம் இல்லை. இல்லையா? உடம்பு செயலிழந்த போது கவுண்டரின் மூளை பூரணப் பொலிவுடன் இயங்க ஆரம்பித்தது. அபூர்வமானவையும், பண்டைய வாழ்வு முறையை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள வகை செய்வதுமான கெட்ட வார்த்தைகளை அவருக்கு ஞாபகம் வரச்செய்தது அந்நிலை. தாங்க முடியாமல் ஆனபோது அவர் நாவையும் காலைமாதிரி பண்ணிவிட மருத்துவ சாஸ்திரத்திலே மார்க்கம் உண்டா என்று டாக்டரிடம் கேட்டுவிட்டேன். அம்மா என்னைக் குலக் கோடரிக் காம்பு என்றாள். மூன்றுநாள் என்னைக் கண்ணெடுத்துப் பார்ப்பதையும் தவிர்த்து விட்டாள். டாக்டரும் என்னை ஒரு வினோத கேஸ் என்று புரிந்துகொண்டு, புன்னகையுடன், ரொம்பவும் பொறுமையிழந்து விடும்படி ஆகாது என்று நம்பிக்கை தந்தார்.

அம்மாவின் ஆவேசம்தான் என்னை வியப்புக்கு உள்ளாக்கியது. நகைகள் இல்லை. நல்ல துணி இல்லை. சரியான சோறு தூக்கம் இல்லை. சதா அழுகை, பிரார்த்தனை. இம்மி பிசகாத சிச்ருஷை. எல்லாம் சரியாகிவிடும் என்று அவள் திடமாய் நம்பினாள். பலவிதமான ஆத்தாக்கள் தொடர்ந்து பூஜை- காணிக்கைகளை அவளிடம் இருந்து பெற்றனர். மாங்கல்யம் தினசரி மாற்றப்பட்டது. சுமங்கலிகள் பூவும் ரவிக்கைத் துணியும், பிராமணர்கள் பசுக்களும், தானமாய்ப் பெற்றனர். வாசலில் தினம் ஒரு புது சோசியனோ இமய மலையிலிருந்து நேரடியாக வந்திறங்கிய சடைமுடிச் சாமியாரையோ காண்பதில் ஆச்சரியம் ஏதும் கொள்ளதவனாக நான் ஆனேன். நோய் பெரியது, குணமாகப் போவதில்லை என்று ஒருமுறை நான் விளக்கம் தரப்போக கவுண்டச்சி சாமி வந்து ஆடினாள். “மகாலெச்சுமி, கவுண்டச்சிக்க தாலிபாக்கியத்தச் சொல்லியாவது மாரியாத்தா மனமெரங்கிப் போடுவா”, என ஊர் பெண்டுகள் சொன்னார்கள். சிலர் அதை நேரிலே வந்து சொல்லி அரிசி, கம்பு என்று வாங்கி முந்தானையில் முடிந்து கொண்டு சென்றார்கள். கலிகால சதி சாவித்திரி ஒருத்தியின் உதயம் ஊரில் பரவலான திருப்தியை ஏற்படுத்தி விட்டதாக உணர்ந்தேன். எனக்கு உள்ளூறப் பயம்தான். எங்கே கலிகாலம் என்பதையெல்லாம் மறந்து எமதருமனும் கவுண்டரை விட்டு விடுவானோ என்று. கவுண்டரின் கொத்துச்சாவி என் கைக்கு வந்தது. கணக்குகளைப் பார்த்தபோது கவுண்டர் தன் மீதி ஆயுளில் செலவழிக்கச் சாத்தியமான குறைந்தபட்சச் சொத்துக்களை மட்டுமே விட்டு வைத்திருந்தார் என்று தெரிந்தது. நானே ஒரு கசமுத்தைய பக்தனாக ஆனேன்.

கவுண்டரின் சீக்கும் கவுண்டச்சியின் பராமரிப்பும் உச்சக்கட்ட நிலையை அடைந்தது. கவுண்டரால் அதிகம் பேச முடியாமல் ஆனபோது அவர் வீட்டிலிருப்பதையே மறந்து விட்டேன். அவரைப் பார்ப்பதே வாரம் ஒருமுறை சம்பிரதாயமாய் டாக்டர் வந்து பார்க்கும் நாட்களில் மட்டும்தான் என்று ஆனது. கவுண்டரும் ஒருமாதிரி கஞ்சி போன துண்டு போல ஆகி, மோட்டுவளையைப் பார்த்தபடிப் படுத்திருப்பது வழக்கம். டாக்டர் வரும் வெண்ணிற அசைவு கண்ணில் பட்ட உடனே கவுண்டச்சி மடேர் மடேரென்று மார்பில் அறைவாள். டாக்டர் கவுண்டரைப் பார்க்கும்போது பின்னணி இசை உச்சத்தில் இருக்கும். டாக்டர் என்னிடம் ஃபீஸ் வாங்கிவிட்டுப் போகும்போது கவுண்டச்சி பின்னால் ஓடி பிலாக்கணம் வைப்பாள். டாக்டரும் சினிமா டாக்டர்களைப் பார்த்துக் கற்றுக் கொண்ட பாணியில் தைரியம் சொல்லுவார்.

கடைசியாய் டாக்டரை வழியனுப்பும் ஒப்பாரிக்குப் பிறகு கவுண்டச்சி என் அறைக்குள் வந்தாள். என் அறைக்குள் கிராமியக் கலை நிகழ்ச்சி தொடர்ந்து நிகழப் போகிறது என்று நான் பயப்பட்டேன். மேலும் எனக்கும் கவுண்டச்சிக்குமான உறவே சற்றுச் சிக்கலானது. பல சமயம் பெப்பர்மின்ட் பாப்பா மாதிரித்தான் என்னை நடத்துவாள். சில சமயம் அந்நிய ஆண்மகனுக்குரிய தூரத்தை எனக்களித்து, முகம் சிவக்க பேசிக் கூசுவாள். எது எப்போது நிகழும் என்று கூறுதல் இயலாது. அதற்கும் அப்பாக் கவுண்டர் அவளிடம் அதற்கு முன் கொண்ட அணுகுமுறைக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. குழந்தைத்தனமாய் இருக்கும் கணங்களில் கிழவியை எனக்கு மிகவும் பிடிக்கும். அபூர்வமான மற்ற சமயங்களில் அவள் ஏதோ புதிய முகம் போல பிரமிப்பும் ஒருவிதமான குறுகுறுப்பும் ஏற்படுத்துவாள். இப்போது சமீபகாலமாய் அப்பாக் கவுண்டரிடம் நான் காட்டிய உதாசீனம் காரணமாய் கவுண்டச்சி என்னிடம் தூரம் வளர்த்து விட்டிருந்தாள். சற்றுப் பதுங்கலுடன் பரபரத்த கண்களுடன் கவுண்டச்சி வந்து என் மேஜை அருகே பேசாமல் நின்றாள். அவள் அந்த வித்தியாசமான மனநிலையில் இருக்கிறாள் என்று அறிந்து சற்றுத் துணுக்குற்றேன். இதைக் கொஞ்சம் காடாவாகக் கூறவேண்டுமென்றால், ஒரு கோணலான உறவுமுறைப் பெண்ணுடன் தனியாக இருப்பதுபோல, யாரும் பார்த்து விடக்கூடாது என்று பயப்படுவது போல இருந்தது. ஒரு அர்த்தத்தில் பார்த்தால் ரொம்பவும் தஸ்தாயெவ்ஸ்கியைப் படிக்கக் கூடாது. வாழ்க்கையைக் கட்டியெழுப்புகிற பல பொய்கள் இல்லாமல் ஆகிவிடுகின்றன.

“என்னம்மா” என்றேன். மவுனம் அத்தனை அசிங்கமாய் இருந்ததனாலேயே நான் பேச நேர்ந்தது.

அம்மா சுற்றுமுற்றும் பார்த்தபடி முந்தானையால் முகத்தைத் துடைத்தாள்.

“என்ன வேணும் சொல்லு” என்றேன் எரிச்சலுடன்.

“லாக்கிட்டரு என்ன தம்பி சொன்னாரு?”

“மீதி சொத்தையும் வித்து அவர் கைல குடுக்கிறது வரெக்கும் மருந்து கொடுப்பாராம்”

கவுண்டச்சி எதிர்பார்க்கப்பட்ட ஆவேசத்தைப் பெறவில்லை. நான் சற்று வியப்புடன் அவளை ஏறிட்டுப் பார்த்தேன். மனசைத் துணுக்குறச் செய்யும் ஒன்று அவள் முகத்தில் இருப்பதைக் கண்டேன்.

“நசமாலே சொஸ்தமாயிடாதுங்கிறாரா?” என்றால்.

“உனுக்குப் பைத்தியம். அதுதான் அத்தினி தடவ படிச்சிப் படிச்சி சொல்லியாச்சே. கொணமாகிறதுக்கு சான்ஸே இல்ல. அதிகம் போனா ஒரு மாசம். கவுண்டரோட ஈரக்கொலை கெட்டுப் போச்சாம். வேற என்ன வேணும் உனுக்கு?”

கவுண்டச்சி சரேலென்று அறையை விட்டுப் போய்விட்டாள்.

அவளுடைய அந்தப் பார்வையை என்னால் உதறிவிட முடியவில்லை. திடீரென்று ஒருவிதமான பீதி ஏற்பட்டது. அந்த அமைதி ஒரு சந்தேகத்தை எழுப்பி விட்டது. அவள் கண்களின் ஆழம் அத்தனை சாதாரணமான ஒரு விஷயம் இல்லை. கவுண்டர் போய் விட்டால் இவள் ஏதாவது செய்து கொண்டு விடுவாளா? அதற்காக உறுதி கொண்டு விட்டாளா? யோசிக்க யோசிக்க அந்த எண்ணம் வளர்ந்தபடியே, உறுதிப்பட்டபடியே, வந்தது. தூங்கமுடியாமல் தவித்தேன். கிழவியை நுட்பமாய் கண்காணிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். அவள் கோழை அல்ல. அது எனக்கு உள்ளூறத் தெரியும். சொல்ல முடியாது. இதெல்லாம் முக்குத்தெரு மாரியம்மன் மாதிரி காலத்துக்கு அப்பாற்பட்ட ஜாதி. உடன்கட்டை ஏறினாலும் ஏறும்.

நான் கவுண்டச்சியிடம் இதெல்லாம் பற்றிப் பேசித் தெளிவு பெற விரும்பினேன். ஆனால் அந்தப் பேச்சையே என்னால் அவளிடம் எடுக்க இயலவில்லை. அவள் கவுண்டரை முன்போலவே பார்த்துக் கொண்டாள். கழனி வேலைகளை மேற்பார்வை செய்வதிலும், சமையற்கட்டின் இயங்கு சக்தியாகவும், பம்பரமாய் இருந்தாள். “அதெல்லாம் நடிப்பு, நம்பாதே!” என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

இந்த விழிப்புணர்வுதான் அன்று வழக்கத்துக்கு மாறாக கவுண்டரின் குரலைக் கேட்டுத் தூக்கம் கலைய வழிவகுத்தது. நள்ளிரவு “கிட்ணம்மா கிட்ணம்மா’ என்று கவுண்டரின் தீனமான குரல் ஒலித்தது. பிறகு மெல்லிய காலடி ஓசை கேட்டது. பிறகு சற்றுநேரம் அமைதி. பிறகு வியப்பூட்டுமளவு உணர்ச்சியால் சிதிலமடைந்த கவுண்டரின் துயரக்குரல் கேட்டது. சாபம் போலத் தொடங்கி, விம்மலாய் அது முடிந்தது. எல்லாம் ஒரு கனவுபோல எனக்குப் பட்டது.

சட்டென்று எழுந்து கொண்டேன். என்னவோ வினோதமாய் நடக்கிறது என்று புரிந்தது. ஒருவேளை – ஆமாம், மனசின் கற்பனைத் தாவல் இருக்கிறதே, பயங்கரம். என்ன எண்ணினேன் என்றால் கவுண்டச்சி கவுண்டரையும் தன்னையும் சேர்த்து மாய்த்துக் கொள்ள முயல்கிறாள். பதற்றத்துடன் நான் கவுண்டரின் அறை நோக்கிப் போனேன்.

அங்கு விளக்கு எரிந்தது. எதிர்ப்பக்க வாசலில் கவுண்டச்சி நிலைப்படியில் சாய்ந்தவளாகச் சலனமின்றி நின்றிருந்தாள். அவள் கண்கள் கவுண்டர் மீது நிலை குத்தியிருந்தன. கவுண்டர் கட்டிலில் மல்லாந்து கிடந்தார். அவர் கண்களும் அவள் மீது நிலை குத்தியிருந்தன. அவர் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. முகம் வெளிறியிருந்தது. பிரமிப்பின் ஜில்லிப்பு அடங்கியதும் அந்த துர்நாற்றத்தை நான் உணர்ந்தேன். உத்வேகத்துடன் ஒரு அடி முன்னால் வைத்தேன். ஆம், கவுண்டர் படுத்தபடியே மல்லாந்த வாக்கில் மலமும் மூத்திரமும் கழித்துக் கொண்டிருந்தார். அடிபட்டவன் போல கவுண்டச்சியைப் பார்த்தேன் நெற்றிக் குங்குமத்துடன் சேர்ந்து அவள் முகம் எரிந்து கொண்டிருந்தது. அவள் பார்வை பாம்பின் பார்வை போலிருந்தது. அது அவள் என்று தோன்றவில்லை. ஏதோ கெட்ட ஆவி அங்கு அவள் வடிவில் நிற்பது போல இருந்தது.

பீதியில் வயிற்றுச் சதைகள் விறைப்புக் கொண்டு இழுத்தன. எனினும் நான் என்ன செய்ய வேண்டும் என்பது பளிச்சிட்டது. விரைந்து சென்று கட்டிலின் அடியிலிருந்து பாத்திரத்தை எடுத்தேன். கோணலாக உதடுகள் வளைய கவுண்டர் என்னிடம் வேண்டாம் என்று தலையசைத்தார். நான் அதை ஏற்காமல் பாத்திரத்துடன் அவரை அணுகியபோது கடும் கோபமும் ஆங்காரமும் பீறிட்ட குரலில் கவுண்டர், “வேண்டாம்னு சொன்னனுல்ல, போடா நாய்!” என்று கூவினார். பிறகு வாழ்வின் முதல்முறையாக, நான் என்றுமே மறக்க இயலாதபடிக்கு என் மனசில் சூட்டுக்கோலால் வரையப்பட்ட அந்தக் காட்சியைக் கண்டேன். கவுண்டர் குழந்தை போல கேவிக் கேவி, உடல் குலுங்க அழ ஆரம்பித்தார்.

எதையும் ஏறிட்டுப் பார்க்காமல் நான் தோட்டத்துக்கு ஓடினேன். அப்படியே ஓடி எங்காவது மனிதவாடை இல்லாத இடத்துக்குப் போய் விட வேண்டும் போலிருந்தது. பிறகு ஒரு போதும் கவுண்டச்சியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கும் துணிவு எனக்கு ஏற்படவில்லை. இருபத்து நான்கு மணிநேரம் கழித்து பிணம் போல நான் வீடு திரும்பினேன். அப்போது வீட்டு முன் கூட்டம் நின்றிருந்தது. கவுண்டர் போய்விட்டிருந்தார்.

தஸ்தாயெவ்ஸ்கியை படிப்பதும் பேசுவதும் எளிய விஷயம்தான். ஆனால் நிஜ வாழ்வில் அவன் முகத்தை நேருக்கு நேர் காண நேர்வது இருக்கிறதே – அனுபவித்தால்தான் தெரியும்.

[1989ல் எழுதப்பட்ட கதை. விட்டல்ராவ் தொகுத்த நூற்றாண்டுத் தமிழ்ச்சிறுகதைகள் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது]

முந்தைய கட்டுரைலடாக்கின் தமிழ் முகங்கள்
அடுத்த கட்டுரைஆறு , இன்று