நூறுநிலங்களின் மலை – 10

லே நகரிலிருந்து மணாலி வரை காரிலேயே வந்து அங்கிருந்து பேருந்து வழியாக டெல்லி வந்து டெல்லியில் இருந்து ஊர்திரும்புவது திட்டம். ஆனால் செலவினங்களை கணக்குப்போட்டுப் பார்த்தபோது அதைவிட காரிலேயே டெல்லிவரை செல்வதுதான் லாபம் என்று தெரிந்தது. லேயில் இருந்து மேலும் சில இடங்களுக்குச் செல்லும் திட்டமும் இருந்தது.

பொதுவாக இந்தப்பயணத்தில் ஊரில் இருந்துகொண்டு கிலோமீட்டர் கணக்குகளைக்கொண்டு போடப்பட்ட திட்டங்கள் எல்லாமே தவறின. சராசரியாக ஒருமணிநேரத்திற்கு இருபது கிலோமீட்டர்தான் இப்பகுதியில் பயணம் செய்யமுடியும். ஸன்ஸ்கர் சமவெளியில் பத்து கிமீ பயணம்செய்தால் அதிகம். நாளில் பெரும்பகுதி காரிலேயே கழிந்தது. ஆனால் வெளியே கனவுவெளியென வந்துகொண்டிருந்த இமயம் அதை மறக்கச்செய்தது.

[ஷே]

அதிகாலையிலேயே கிளம்பிவிட்டோம். முதலில் லே நகரின் வெளியே இருந்த இரு முக்கியமான இடங்களைப் பார்த்தோம். பழைய அரச இருப்பிடமான ஷே [Shey] ஒரு குன்றுதான். அதன்மீது முழுக்க பழங்கால இடிந்த கட்டிடங்கள். குன்றின் அதே மண் நிறத்தில் கட்டப்பட்டவை. தொலைவிலிருந்து பார்த்தால் கட்டிடங்களைக் காணமுடியாது. மண்குன்றின் மணல்வடிவங்களாகவே தெரியும். நெருங்க நெருங்க அவை கட்டிடங்களாக உருப்பெற்று வரும்.

[ஷே கல்வெட்டுச்சிற்பம்]

ஐநூறுவருடங்களுக்கு முன்பு லடாக்கின் மன்னராக இருந்த லாஜென் [Lhachen Palgyigon] கட்டிய அரண்மனை இது. அதன்பின் முந்நூறாண்டுக்காலம் அரசாட்சி நிகழ்ந்த இடமாக இது இருந்திருக்கிறது. ஏதோ பாலைவன இடிபாடு போல இந்தk குன்று பிரமை கூட்டுகிறது. இடிந்த சுவர்கள். நூற்றுக்கணக்கான சிறிய தூபிகள்.

இங்கே ஒரு மடாலயம் உள்ளது. மேலே சென்று அதை பார்க்கலாமென்றால் இரு சிக்கல்கள். ஒன்று, மடாலயம் காலை ஒன்பதுக்குதான் திறக்கும். இரண்டு, எங்கள் வண்டியை கண்டால் உள்ளூர் டாக்ஸிக்காரர்கள் சண்டைக்கு வருவார்கள். லடாக்கின் டாக்ஸிகள் மட்டுமே உள்ளூர் சுற்றுலாவுக்கு அனுமதிக்கப்படும் என்பது அவர்களே வைத்துக்கொண்ட விதி.

ஷே நகரின் வெளிப்பகுதியில் சாலையோரமாக பல பாறைச்செதுக்குகளைக் கண்டோம். மைத்ரேயபுத்தரின் செதுக்குவடிவம். திபெத்திய மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள். இவை எல்லாமே பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

திபெத்திய முறையில் கோட்டுச்சித்திரமாகச் செதுக்கப்பட்ட மைத்ரேயபுத்தர். யானைகள். குதிரைகள். மயில்கள் போன்ற பறவைகள். இந்த வழியில் இச்சிலை ஏன் உள்ளது என்று தெரியவில்லை. பழங்காலத்தில் இந்தப்பாறைகளின் அடியிலேயே வழிபாடுகளைச் செய்வார்கள்போல.

உண்மையில் ஷே நகரம் மட்டும் ஒரு முழுநாளும் தங்கி பார்க்கப்படவேண்டியது. லடாக்கின் வரலாற்றை முழுமையாக புரிந்துகொண்டு ஆராய்ந்து அறியப்படவேண்டிய பல இடங்கள் இங்குண்டு. லே நகருக்கு மட்டுமாக குடும்பத்துடன் இன்னொரு பயணம் வரவேண்டுமென நினைத்துக்கொண்டேன்.

லே நகரின் ஐந்து மடாலயங்கள் முக்கியமானவை. ஹெமிஸ், திக்ஸே இரண்டும் அவற்றில் பெரியவை. இரண்டையும் பார்க்கவேண்டுமென நினைத்திருந்தாலும் இரண்டில் ஒன்றை மட்டும் தேர்வுசெய்யுமளவு காலநெருக்கடி. ஆகவே திக்ஸே மடாலயத்தை மட்டும் பார்ப்பதாக முடிவெடுத்தோம். திக்ஸே நாங்கள் செல்லும் வழியில் சாலையோரமாக இருந்தது.

[திக்ஸே மடாலயம்]

திக்ஸே மடாலயம் லே நகரிலிருந்து 17 கிமீ தொலைவில் உள்ளது. அறுநூறு வருடம் பழையது. லே நகரின் இரண்டாவது பெரிய மடாலயம் இதுவே. கெலுக்பா பௌத்த மரபைச் சேர்ந்த இந்த மடாலயம் பால்டன் ஷெரப் என்ற ஆட்சியாளரால் அமைக்கப்பட்டது.

மடாலயத்தின் சாலையோரமாக வண்டியை நிறுத்திவிட்டு ஏறிச்சென்றோம். ஒரு முழுக்குன்றையும் நிறைத்துக் கட்டப்பட்டிருந்தது இந்த மடாலயம். கீழே குன்றின் அடிவாரம் முதல் உச்சி வரை தொடர்ச்சியாக மடாலயத்தின் கட்டிட வரிசை. பன்னிரண்டு அடுக்குகள். அவை ஒரே கட்டிடம்போல ஆகிவிட்டிருந்தன.

கீழிருந்து மூச்சுவாங்க மேலேறினோம். வளைந்து வளைந்து செல்லும் படிகளில் ஒவ்வொரு அடுக்கிலும் பலவகை கட்டிடங்கள். அனைத்துமே உருளைக்கல் சுவர்கள் மீது சுள்ளிகளை அடுக்கிக் கட்டப்பட்டவை. மெல்லிய தூறலாக மழை இருந்தது. இத்தனை நாட்கள் தொடர்ந்து நடந்த பயிற்சி இல்லையேல் ஏறியிருக்கமுடியாது. இருபது நிமிடங்களில் மேலே சென்றுவிட்டோம்.

திக்ஸே குன்றிலிருந்து கீழே விரிந்து கிடக்கும் சிந்து பள்ளத்தாக்கை பார்க்கமுடிந்தது. கண்ணெட்டிய தூரம் வரை நூற்றுக்கணக்கான சிறிய தூபிகள் தெரிந்தன. இங்குள்ள தூபிகள் களிமண்ணாலும் உருளைக்கற்களாலும் கட்டப்பட்டு வெள்ளைநிறம் பூசப்பட்டவை. மேலே சென்றபோது பிரார்த்தனை நிகழ்ந்து கொண்டிருந்தது. சில வெள்ளைப்பயணிகளும் அமர்ந்திருந்தனர்.

ஓரமாக இருந்த ஐந்து வயது பிட்சு எங்களைப்பார்த்து அதீதமாக வெட்கப்பட்டார். பெரிய காவி உடையை தோளில் பொருத்தி வைப்பதிலேயே அவரது முழு கவனமும் இருந்தது. பக்கத்தில் இருந்த எட்டு வயதான தெற்றுப்பல் பிட்சு சிரித்தார். ஆழ்ந்த அடித்தொண்டையில் மந்திர உச்சாடனமும் நீண்ட கனத்த குழலின் அதிர்வும் அகலமான முரசின் விம்மலும் இணைந்துகொண்ட அந்தப் பிரார்த்தனை காலையில் ஒரு பரிசுத்தமான மன எழுச்சியை உருவாக்கியது.

திக்ஸே மடாலயத்தில் பத்து கோயில்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானது பதினைந்து மீட்டர் உயரமுள்ள மாபெரும் மைத்ரேயபுத்தரின் சிலை. 1980-இல் இன்றைய தலைமை லாமாவின் கண்காணிப்பில் அமைக்கப்பட்ட சிலை இது. களிமண்ணாலும் மரத்தாலும் செய்யப்பட்டு அரக்குபூசப்பட்டு பொன்னிறப்பூச்சு செய்யப்பட்ட அழகிய சிலை. நுட்பமான திபெத்தியபாணி செதுக்குவேலைகள் கொண்டது.

மைத்ரேயபுத்தர் எப்போதும் பொன்னொளியிலேயே தெரிகிறார். அரசகம்பீரம் கொண்ட முகம். தியானபாவனை இருக்கும்போதும்கூட அச்சிலை கம்பீரத்தையும் நிமிர்வையுமே நமக்கு உணர்த்துகிறது. மைத்ரேயரின் கிரீடத்தில் கூட விதவிதமான தேவர்கள் இருந்தனர்.

ஒரு பெரிய கட்டிடத்தின் இரு அடுக்குகளிலாக இச்சிலை உள்ளது. கீழ் கட்டிடத்தில் சப்பணமிட்டு அமர்ந்த கால்கள். அங்கே தூபமும் பூசைக்கூடமும் உள்ளது. பலவகையான வண்ண டோங்காக்கள் தொங்கும் தியான மண்டபம் அது.

மேலே உள்ள கட்டிடத்தில் நேராகவே நாம் நுழையலாம். அங்கே மைத்ரேயரின் மார்புக்குமேல் உள்ள வடிவம் உள்ளது. அத்தனைபெரிய சிலையின் முகத்துக்கு அருகே சென்று நின்று பார்க்கமுடிவது ஒரு பெரிய அனுபவம். ஒரு பிட்சு காலையில் அப்பகுதியை கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்துகொண்டிருந்தார்.

இன்னொரு கோயிலில் காலபூதம் மையமாக கோயில் கொண்டிருக்கிறது. கன்னங்கரிய உருவம். கோரைப்பற்கள். உறுத்துவிழிக்கும் கண்கள். கையில் வஜ்ராயுதம். பூதத்தின் ஏராளமான கைகளும் கால்களும் அந்தப் பெரிய கருவறை முழுக்கப்பரவியிருந்தன. இருட்டே ஒர் அரக்க உருவம் கொண்டு வந்ததுபோன்ற தோற்றம். அருகே காலபூதத்தின் சிறிய சிலைகள் பல இருந்தன.

இன்னொரு சன்னிதி தாராதேவிக்குரியது. வழக்கமாக தாராதேவிக்கு தனி கருவறைகள் இருப்பதில்லை. பெரிய பீடத்தில் தாராதேவி தாமரை மலர்களுடன் அமர்ந்திருந்தாள். பொன்னிறம் பொலியும் உடல். தாமரை மலரிதழ் தண்டில் ஒசிந்து அமர்ந்திருப்பதன் நளினம்.

அந்தக்கருவறையின் கீழே கண்ணாடி அறைகளுக்குள் நூற்றுக்கணக்கான தாராதேவிச் சிலைகள். வெண்கலத்தையும் நீல, பச்சை கற்களையும் கலந்து அமைக்கப்பட்டவை. தாராதேவியின் மணிமுடியில் சிவந்த அருங்கற்கள் ஒளிவிட்டன.

மீண்டும் நாங்கள் வந்தபோதும் மடாலயத்தில் பிரார்த்தனை முடியவில்லை. குட்டிப்பிட்சு ஓரக்கண்ணால் பார்த்துச் சிரித்துவிட்டு உரக்க மந்திரங்களை கூவினார். மடாலயத்தின் விதவிதமான உப்பரிகைகளில் நின்று கீழே மெல்லிய மழை மூடியிருந்த சிந்துவெளியைப் பார்த்தோம்.

கீழே இறங்கி காரிலேறிச் சென்று அருகே இருந்த சந்திப்பில் நிறுத்தி காலையுணவு. பின்னர் மூர் சமவெளிக்குப் பயணமானோம். உண்மையில் அது ஒரு நல்ல திட்டமல்ல. மூர் சமவெளி நாற்பது கிமீ தொலைவில் இருந்தது. சாலை அதிக சிரமமானது அல்ல. ஆனால் அத்தனைதூரம் சென்றதற்கு ஹெமிஸ் மடாலயத்தை நிதானமாகப் பார்த்திருக்கலாம்.

ஆனால் நாங்கள் லடாக்கின் வனமிருகங்கள் என எதையும் பார்த்திருக்கவில்லை. காட்டு யாக்குகளைப் பார்த்தோம், ஆனால் யாக்குகள் அங்கே வளர்ப்பு மிருகங்களும் கூட. மூர் சமவெளியில் காட்டுக்கழுதைகள் உண்டு என்று நேஷனல் ஜியாக்ரஃபி சேனலில் கிருஷ்ணன் பார்த்திருந்தார். மிக அரியவகை உயிரினங்கள் அவை. அனேகமாக உலகில் எஞ்சியிருக்கும் மிகச்சில காட்டுக்கழுதைகள் அவைதான். அவற்றைப் பார்ப்பதற்காகவே மூர் சமவெளிக்குச் செல்ல முடிவெடுத்தோம்.

சம்கல் லுங்பா [Sumkhel Lungpa] ஆறு ஊடறுத்துச்செலும் மூர்சமவெளி உண்மையில் ஒருவகை பனிப்பாலை. பனியில்லாத போது வெறும்பாலை. எல்லா பக்கங்களிலும் செங்குத்தான மலைகள். அங்குள்ள மலைகள் எல்லாமே மென்மையான மணற்பாறைகள். காற்றும் பனியும் அரித்து அம்மலைகளை விபரீதமான சிற்ப வடிவங்களாக ஆக்கியிருந்தன. நடுவே பெரும்பாலும் முழங்கால் உயரம் மட்டுமே உள்ள ஒருவகை குத்துச்செடிகள் மட்டுமே மண்டிய சமநிலம் விழி விரியச்செய்யும்படி அகன்று கிடந்தது.

கிட்டத்தட்ட நாற்பது கிலோமீட்டர் தூரத்துக்கு இப்படியே அந்த பெரும் சமநிலம் செல்கிறது. கைவிடப்பட்ட மாபெரும் மைதானம் போல தெரிந்தது மூர் சமநிலம். சாலை நன்றாக இருந்தாலும் அடிக்கடி கரடுமுரடான உருளைக்கற்களால் மறிக்கப்பட்டது. இறங்கி அந்தச்செடிகளை தொட்டுப்பார்த்தோம். அவை உலர்ந்து காய்ந்து நிற்பவை போல் தெரிந்தன. அவற்றின் இயல்பே அப்படித்தான். பெரும் பாலைநிலங்களிலேயே அவ்வாறு நீரற்ற செடிகளைக் காணமுடியும்.

ஆப்ரிக்கப் பாலையில் செல்வதுபோன்ற அனுபவம். கார் சென்றுகொண்டே இருந்தது. அவ்வாறு எவ்வளவு தொலைவுதான் சென்றுகொண்டிருப்பது என்ற எண்ணம் எழுந்தது. ஸோ கார் என்ற ஏரி அருகே இருந்தது. அதனருகே துக்ஜீ [Thugje i] என்ற ஒரு சிறு இடையர் கிராமம் உண்டு. அங்கே செல்லலாமென முடிவெடுத்தோம்.

ஸோ கார் ஓர் உப்புநீர் ஏரி. கோடையில் பெரும்பகுதி வற்றி பனி உருக ஆரம்பித்ததும் பெருகிவிடும். சமீபகாலம் வரை அங்கிருந்துதான் உப்பு எடுத்துக்கொண்டிருந்தனர். திபெத்திற்கு அங்கிருந்து உப்பு சென்றுகொண்டிருந்தது. அருகே உள்ள மலைகளில் இருந்து கரைந்து வந்துசேரும் உப்பு அது.

ஸோ கார் பகுதியில் குளிர்காலத்தில் மைனஸ் இருபது டிகிரி வரை குளிர் இருக்கும். கோடையில் முப்பது டிகிரி வரை சூடு. இங்கே மழையும் ஒப்புநோக்க அதிகம். மிக அபூர்வமாக ஐரோப்பிய சாகசப்பயணிகள் மட்டுமே இங்கே வருகிறார்கள். பொதுவாக மூர் சமவெளி முழுமையாகவே மனிதவாசம் அற்றது.

சாலையில் ஒரு அமெரிக்கரும் தோழியும் நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்பகுதியில் எங்குமே மனிதச்சுவடு இல்லை. வண்டியை நிறுத்தி ‘என்ன விஷயம்?’ என்று விசாரித்தோம். அருகே உள்ள பேருந்துப்பாதை வரை செல்வதாகச் சொன்னார்கள்.

‘ஸோ கார் ஏரி எங்கே?’ என்று கேட்டோம். அது பதினைந்து கிமீ தொலைவில் இருப்பதாகவும் அங்கிருக்கும் இடையர் கிராமத்தில் இருந்து அவர்கள் வருவதாகவும் சொன்னார்கள். ‘நல்ல மனிதர்கள். நன்றாக உபசரிக்கிறார்கள்’

ஆனால் பதினைந்து கிமீ சென்றபின்னும் அதே நிலம் அப்படியே தொடர்ந்தது. மேலும் சென்று ஏரியைப் பார்ப்பதா திரும்புவதா என்ற குழப்பம். நடந்து செல்பவர்களை அப்படியே விட்டுவிட்டு வந்தது பற்றிய சங்கடம். சரி என்று திரும்பிவிட்டோம்.. அவர்களை வழியில் சந்தித்து ஏற்றிக்கொண்டோம்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் அவர்கள். அந்தப்பெண் டேராடூனுக்கு ஆய்வுநிமித்தமாக வந்தபின் இந்தியாமீது, குறிப்பாக இமயம் மீது பெரும் ஈடுபாடு கொண்டுவிட்டாள். அது அவளுடைய மூன்றாவது பயணம். அவரது இரண்டாவது பயணம்.

அவர்களின் பயணமுறையே வித்தியாசமானது. வண்டிகளை வைத்துக் கொள்வதில்லை. நடந்தே செல்வார்கள். வழியில் செல்லும் வண்டிகளில் லிஃப்ட் கேட்டு வாங்கிக்கொள்வார்கள். பெரும்பாலும் ராணுவ வாகனங்கள். சுற்றுலா வண்டிகள். அப்படித்தான் ஸோ கார் ஏரி வரைக்கும் சென்றிருக்கிறார்கள்.

ஆச்சரியமாக இருந்தது. ‘இங்கே அபாயகரமாக உணரவில்லையா?’ என்று கிருஷ்ணன் கேட்டார்.

‘இந்தியா தனியாகச்செல்லும் பெண்களுக்கு ஆபத்தானது’ என்றார்கள். மற்றபடி பிரச்சினை இல்லை’ என்றாள் அந்தப்பெண்.

’அமெரிக்கா அளவுக்கு அபாயமில்லை. அங்கே எல்லாரிடமும் துப்பாக்கி இருக்கிறது’ என்றார் அவர்.

‘இமயமலையில் விதவிதமான இயற்கைத் தோற்றம் பிரமிக்கச் செய்வது’ என்று அவள் சொன்னாள்.

அப்படி கிளம்பி ஆஸ்திரேலியாவிலோ அமெரிக்காவிலோ நாம் உலவுவது பற்றி கற்பனை செய்து பார்த்தேன். இன்னமும் நாம் சாகஸமென்றால் அறியாத எளிய நடுத்தரவர்க்க மனிதர்கள்தான். இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம்.

சட்டென்று அஜிதன் காட்டுக்கழுதையைக் கண்டான். மிகத்தொலைவில் தன்னந்தனியாக ஒன்று மேய்ந்துகொண்டிருந்தது. குதிரை என்றுதான் தோன்றியது. தொலைநோக்கியில் பார்த்தபோதுதான் நிமிர்ந்த தலையும் நீண்ட வாலும் கொண்ட கழுதை என்று புரிந்தது. அஜிதன் படமெடுத்தான். மூர் சமவெளியில் காட்டுக்கழுதைகள் கூட்டம் கூட்டமாக தென்படும் என்று கதை விட்டிருந்த கிருஷ்ணன் நிம்மதி அடைந்து ‘ஒண்ணாவது தெரிஞ்சுதுல்ல?’ என்று சமாளிக்க ஆரம்பித்தார்.

மூர் சமவெளியில் திபெத்திய புள்ளிமான்கள் [Tibetan gazelles] திபெத்திய ஓநாய்கள் [Tibetan wolves] உண்டு என்று வழிகாட்டிக் குறிப்புகள் சொன்னாலும் அவற்றைப் பார்ப்பதென்றால் அங்கேயே தங்கவேண்டுமென்று தோன்றியது. நாங்கள் செல்லவேண்டிய தொலைவு அதிகம்.

மீண்டும் லே-மணாலி சாலைக்கு வந்ததும் அவர்கள் இருவரும் இறங்கிக்கொண்டார்கள். ஓட்டுநர் ஆவலாக வெள்ளைக்காரியுடன் நின்று படம் எடுத்துக்கொண்டார். அவர்கள் இருவருடனும் நின்று படமெடுத்தபின் வெள்ளைக்காரரிடம் சற்று தள்ளி நிற்க முடியுமா என்று கேட்டு அவளிடம் மட்டும் நின்று படமெடுத்துக்கொண்டார். அவரும் அவளும் சிரித்துக்கொண்டே இருந்தார்கள்.

படங்கள் https://plus.google.com/u/0/102324461063443964080/posts

முந்தைய கட்டுரைஆகாயப்பறவை
அடுத்த கட்டுரைவரலாற்றின் உண்மை