ஜெ.சைதன்யாவின் கல்விச்சிந்தனைகள்

ஜெ. சைதன்யா  ‘கின்டு விடியாலாயா’ என்ற பள்ளியில் சேர்க்கப்பட்டது அவருடைய கோரிக்கைக்கு ஏற்பவே என்பது ஓர் உண்மை. ஆனால் அவர்  ‘க்கூள்’ என்பது வேறு விதமாக இருக்குமென எதிர்பார்த்திருந்தார். இவரது தமையனார் ஜெ அஜிதன் தினமும் பள்ளிக்கு புத்தகப்பை, தண்ணீ­ர் புட்டி முதலியவற்றுடன் போவதும், போகும்போது நல்ல உடைகளையும் ஷூக்களையும் அணிவதும், ரகசியமாக பொம்மைத்துப்பாக்கி கவண் கல் முதலியவற்றை எடுத்துக் கொள்வதும்  இவர் கவனத்துக்கு வந்தபோது தானும் போக இவர்  விரும்பியமை இயல்பே. ” பாப்பூவும்  க்கூளுக்கு போறேன்” என கதறியபடி இவர் முழுமையான உடலுடன் பின்னால்  ஓடுவ்தும், தாய் தந்தை, பக்கத்து வீட்டு மாமி உட்பட பலர் சேர்ந்து துரத்திப் பிடித்து நெளியத் துவள தூக்கி வருவதும்  வாடிக்கையாக இருந்தது.

ஜெ. சைதன்யா  பள்ளிக்கு போவதற்கான முதற்கட்டப் பயிற்சியாக தமையனின் தண்ணீ­ர் புட்டியிலிருந்து சிறுகுழாய் மூலம் உறிஞ்சி  தண்ணீ­ர் அருந்துவது, [நீருக்குள் கொப்புளங்கள் எழுவது நின்று, நீர் மேலேறிவர ஒருவார காலப் பயிற்சி தேவைப்பட்டது] தோளில் பையை மாட்டிக் கொள்வது முதலியவற்றில் ஈடுபட்டார். பள்ளிவயதான குழந்தைகள் திரவ உணவை புட்டியிலிருந்து மட்டுமே அருந்த வேண்டுமென இவர் உணர்ந்தபிறகு  டம்ளர்களில் அருந்தும்  அநாகரீகத்துக்கு எவ்வகையிலும் உடன்படவில்லை. தன்னுடைய பொம்மைகள் மற்றும் பொறுக்கிச் சேர்க்கும் காகிதங்கள் அனைத்தையும் இவர் ஒரு பழைய புத்தக பையில் சேர்த்தும் வந்தார். அவ்வப்போது தனிமையில் இருக்கும்போது பிரேமையுடன் “க்கூள்!” என்று சொல்வதுமுண்டு.

தமையனார் பள்ளி குறித்து கூறும் விஷயங்களை இமைகூட்டாமல் கூர்ந்து கவனித்து இவர் தன்னுடைய பள்ளிகுறித்து அறியத்  தலைப்பட்டனர். மறுநாள் தூங்கி விழித்த போது அவையெல்லாமே இவரது சொந்தப் பள்ளியில் நடந்தவையாக ஆகிவிட்டிருந்தன. பெயர்களும் , வேடிக்கைகளுமாக இவர் தன் பள்ளி நிகழ்வுகளை சொல்ல முற்படும்போதெல்லாம்  இவரது தமையனார்  சற்றும் மனமுதிர்ச்சி இல்லமல்”போடி நான் சொல்றதையே  சொல்றியா?போடி” என்று  கத்தியது வருத்தம் தருவதாக இருந்தது.

ஜெ. சைதன்யாவின் பள்ளியிலே பாட்டு மட்டுமே கற்பிக்கப்பட்டது. ஏராளமான ஆசிரியைகள் ஜெ. சைதன்யாவிற்கு பிடித்தமான ரத்தச்சிவப்பு மற்றும் தீப்பெட்டி ஊதா நிறங்களில் புடவை கட்டி, பொட்டு வைத்து, பூசூடி அவரது குற்றேவலுக்காக சூழ்ந்திருந்தனர். தொலைக்காட்சியில் சுற்றிவந்து நடனமிடும் பெண்களை பெரிதும் இவர்கள் ஒத்திருந்தது இயல்பே. விளையாடத்தயாராக  பலவிதமான குழந்தைகள் நிரம்பியிருந்தார்கள் . அங்கு சென்ற உடனே ஜெ. சைதன்யா அவர்கள் வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகி, பலவகை வல்லமைகளை பெற்றார். இவ்வளவு இருந்தும் அவரது தினசரிக் கோரிக்கையை ஏற்று அவரை பள்ளிக்கு அனுப்ப அவரது பெற்றோர் முன்வராதது அநீதியாகவே இருந்தது. இவரது தந்தை ஒரு நூலில் குழந்தைகளை சிறுவயதிலே பள்ளிக்கு அனுப்பலாகாது என படித்திருந்தமையே காரணம்.

ஆனால் ஒரு சிறிய தவறான புரிதல் காரணமாக ஜெ. சைதன்யா அவர்கள் பாதியிலேயே பிரிகேஜிக்கு செல்ல நேர்ந்தது. தன் அன்னை வீடு திரும்பும்போது உபசரிப்பதற்காக இவர் எரிவாயு  அடுப்பை திறந்து வைத்து, அதன்மீது காபிபோடும்  பாத்திரத்தையும் வைத்துவிட்டு, நடுவே துடைப்பத்திற்கு  திசைதிரும்பி அதை  சீரான துண்டுகளாக மாற்றுவதில் ஈடுபட்டு அப்படியே தூங்கியும்விட, வீடுதிரும்பிய இவரது அன்னை  நடுங்கி அலறி  ரகளை செய்துவிட்டார்கள். குழந்தைகள் விளையாடும்போது நிஜத்தீ வருவதில்லை என்ற உண்மையை போதிய அறிவு இல்லாத காரணத்தால் இவரது அன்னை உணரவில்லை என்பதே பிரச்சினைக்கு காரணம். மறுநாளே ஜெ. சைதன்யா பள்ளிக்கு  செலுத்தப்பட  முடிவாயிற்று.

ஜெ. சைதன்யா அன்று  தன் இரவெல்லாம் பள்ளியே நிரம்பியிருக்கக் கண்டார். நள்ளிரவில் துள்ளி  எழுந்து  தடுமாறி ஓடி  தன் ‘க்கூள் பேக்’கை எடுத்த போது தூங்குமாறு அறிவுறுத்தப்படவே பள்ளிக்கு போவதற்கு முன்னரே இரவாகி விட்ட கொடுமையை  அறிந்து  மனமுடைந்து  கண்ணீ­ர் விட்டார். அவரது அப்பாதான் “சாமி லைட் போட மறந்து போச்சு பாப்பா. நீ தூங்கு ..நாளைக்கு லைட் வந்துடும்ல? ” என்று முயல் கதை சொல்லி தூங்க வைத்தார். பள்ளிக்கு போகும் அவசரத்தில் ஜெ .சைதன்யா பதற்றத்துடன் “என்னோட பேக் எங்க?” ,” அம்மா என்னோட சிலேட்ட காணும்..” என பலவாறாக புலம்பியபடி சுற்றிவந்து, துளித்துளியாக பற்பல முறை சிறுநீர் கழித்தார் . ரெடிமேடில் சகாயவிலையில் எடுத்த  தாள்தோயும் பினஃபோரும், முந்தானைபோல அடிக்கடி தோளில் சரியும் சட்டையும், ஒன்றோடொன்று மோதும்  பெரிய ஷூக்களும், ஒட்டுப் பொட்டும்,  டப்பா நிறைய மிட்டாயும், தனியாக சிறு டப்பாவில் தின்பண்டங்களுமாக  [இது   பண்டம்பாக்ச் என  குறிக்கப்பட்டு, பேரன்போடு தனியாக மார்போடு சேர்த்தணைக்கப்பட்டு, பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது ]  தமையனார் கரம் பற்றி  அலையலையாக குதித்து  பள்ளிக்குச் சென்றார்.

பள்ளி ஜெ. சைதன்யா வை திருப்திப்படுத்துவதில் பரிதாபத் தோல்வியை அடைந்தது என்பதை சொல்லாமலிருக்க முடியாது. மேற்படி நிறுவனம் மிக கொடூரமான வழிமுறைகளை கொண்டிருந்தது. முதலில் அவர்கள் ஜெ. சைதன்யாவின் மிட்டாய்களை வாங்கி மற்ற குழந்தைகளுக்கு அளித்து அக்குழந்தைகளிடம் ” வேல் -கேம் – டூ- சே -தன்யா” என்று பாடச்சொன்னார்கள். பகீரிடவைக்கும் காலிடப்பாவே ஜெ. சைதன்யாவிற்கு திருப்பியளிக்கப்பட்டது.அதை அவர் மார்போடணைத்து  கண்­ணீர் விட்டபிறகு,  மிட்டாயை சப்பிச் சப்பி அநாகரீகமாக தின்னும் மற்ற குழந்தைகளை பிதுங்கிய உதடுகளுடன் தாழ்த்திய கண்களுடன் குரோதமாகப் பார்த்தார் . அவரைப்பார்த்து சிரித்த டி.தேபியை பார்த்து ‘ப்போ’ என்று தலையை ஆட்டினார்.

மதிய உணவுக்கு வருகையில் ஜெ. சைதன்யா வாய் கோணி, கதறியபடி வந்தார். “ஒக்கார சொல்லிட்டாங்க!ஒக்கார சொல்லிட்டாங்க!” என மனமாறாமல் புலம்பினார். ஜெ. சைதன்யா எங்கும் எப்போதும் உட்காரும் பழக்கம் இல்லை. உட்கார நேர்ந்தால் தூங்கி விடுவது வழக்கம் . இவரது தந்தை பள்ளி என்ற அவ்வமைப்பே மனிதர்களை உட்கார வைக்கும்பொருட்டு உரூவாக்கப்பட்டதுதான்  என்பதை மனைவியிடம் குறிப்பிட்டார். கருத்துக்களில், அமைப்புகளில், பதவிகளில், அடையாளங்களில் அமர்வதற்கான பயிற்சியே அங்கு அளிக்கப்படுகிறது. அங்கு பயின்ற பிறகு அலைவதெல்லாமே அமர்வதற்கான இடம் தேடி மட்டுமே.  ஆனால் எங்குமே அமர முடியாதவர்களால்தான் இந்த உலகம் ஆக்கப்பட்டுள்ளது. அமர்ந்தவர்கள் நடுவே அலைபவர்கள் பதறிச் சுற்றிவருகிறார்கள் …

“போதும் போதும் நீங்க படிச்ச லச்சணம்.” என  அவரது மனைவியார் குறிப்பிடுவது வரை ஒரு பயங்கரக் கனவாக இருந்த தன் கல்விநாட்களை  இவரது தந்தையார் நினைவுகூர்ந்தார். கடைசியில் வணிகவியலில் எல்லா பாடங்களிலும் இருபதுக்கும் குறைவாக மதிப்பெண் பெற்று   கல்லூரிப்படிப்பை முடிக்காமல் ராமகிருஷ்ண மடத்துக்கு  ஓடிப்போனது வரை  பெருமூச்சுடன் எண்க் கோண்டார்.

காலைநேர சோக கானம், பிறகு தூக்கம், விழிக்காமலே வீடு சேர்தல் என சில நாட்களை கடத்தி ;பின்பு எலிக்கேஜிக்கு போன பிற்பாடு ஜெ. சைதன்யா ஓரளவுக்கு சுதரித்துக் கொண்டார். இப்போது  ஞாயிற்றுக் கிழமை அல்லாத நாட்களில் ஆழ்ந்த பொறுப்புணர்வு மிளிரும் விழிகளுடன் இந்றுவனத்துக்கு இவர் சென்று வருவதெல்லாம் சமூக அங்கீகாரம் கருதி மட்டுமேயாகும். அதன் பொதுவான இயங்குமுறை அவருக்கு ஒப்புக் கொள்ளக் கூடியதாக இல்லை . ஆகவே ஜெ. சைதன்யா அவர்கள் எக்காரணம் கொண்டும் எவர் கேட்கும் எக்கேள்விக்கும் எப்பதிலும் சொல்வதில்லை என முடிவெடுத்தார்.

இப்பள்ளியில் என்ன காரணத்தாலோ பெற்றோரால் வலுக்கட்டாயமாகக் கொண்டு வந்து விடப்படும் குழந்தைகள் [ இவர்கள் ரொம்ப கெட்ட குழந்தைகள் , கொஞ்சம் கெட்ட குழந்தைகள் ,டி. தேபி ,  நிடீன் என நான்கு வகைப்படுவார்கள்] மற்றும் ஆசிரியர்கள் மிக அபத்தமான பல பழக்க வழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தினமும் ஒன்றாக சேர்ந்து உச்ச குரலில் ”ஏ!-பீ!-சீ!-டீ!” என்று கத்துவதை ஜெ. சைதன்யா பல மாதங்களுக்கு ஆச்சரியத்துடன் கவனித்தபிறகு அதற்கான காரணம் என்ன என தன்  பிரதம சீடரிடம் கேட்டார். அதை கல்வி என்று சொல்கிறார்கள் என அவர் சொன்னபோது ஜெ. சைதன்யா தன் வீட்டுக் கொல்லையில் காகங்கள் அப்படி கூடி ஒலியெழுப்புவதை நினைவுக்கூர்ந்து அதன் தாத்பர்யத்தை தெள்ளென புரிந்து கொண்டார் . காகங்கள் ஏன் கருப்பு யூனிஃபார்ம் அந்திருக்கின்றன என்ற கேள்வியை எழுப்பி தானே விடையும் கண்டார்.

இங்கு சீலங்கள் சரிவர கற்பிக்கபடுவதில்லை என்பதும் ஜெ. சைதன்யா வின் கருத்தாகும். ஒழுகும் மூக்கை துடைத்துக் கொள்ளும் பொருட்டே வடிவமைக்கப்பட்ட டை என்ற நீளத்துயானது கழுத்திலேயே தயாராக கட்டப்பட்டிருந்தபோதிலும் சில குழந்தைகள் முழங்கையால் மூக்கை காதை நோக்கி இழுத்துக் கொள்வது மிக அருவருப்பூட்டுவதாக ஜெ. சைதன்யா அவர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். பிளாஸ்டிக் சேர்களின் அடிப்பகுதி வீடு போல வசதியாக இருக்க அதன் மேலே மட்டுமே குழந்தைகள் அமர வேண்டுமென வற்புறுத்தப்பட்டனர் . டி. தேபி எலிக்கேஜ“யை மட்டுமரியாதை இல்லாமல் ஒரு மிஸ் “தேவிக்குட்டீ” என அழைத்தாள். புல்லோ, மணலோ இல்லாமல் சுத்தமாக இருந்த திண்ணையை சிறுநீர்கழிக்க பயன்படுத்தக் கூடாது, அவையெல்லாம் உள்ள ஓர் இடத்தையே பயன்படுத்தவேண்டுமெனவும் கூறப்பட்டது .

இங்கு சட்டம் ஒழுங்கும் போதிய கவனத்துடன் பேணப்படவில்லை. கெ .அன்பரசன் ஜெ. சைதன்யா வின் நாற்காலியை பின்னால் இருந்து உதைத்ததும் அதை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அவர் அவனது தலையில் தண்ணீ­ர்புட்டியால் அடித்ததும் அவனுடைய உதடுகள் கோணலாகியபடியே வருவதைக் கண்டு  மனமுடைந்து தேம்பியதும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள். பிற குழந்தைகள் தவறான பாதைக்குச்  செல்லாமலிருக்கும் பொருட்டு ஜெ. சைதன்யா அவர்கள் தண்ணீ­ர்புட்டி , சிலேட் போன்றவற்றை பயன்படுத்தும்போது கெட்ட மிஸ”கள் ஜெ. சைதன்யாவையே தண்டிக்க முற்பட்டனர். உச்சகட்ட குரலில் அழுவது ஜெ. சைதன்யா தான் என்பதும் மற்ற குழந்தை இவ்வழுகையை கண்டு திகைத்து பிரமைபிடித்து நிற்பதும்கூட இந்த கெட்ட மிஸ”களால் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. 

இந்நிறுவனத்தில் மடத்தனமான  பல நடத்தை நெறிகள் வலியுறுத்தப்பட்டு வன்முறைமூலம் அமல்படுத்தப்படுவது  ஜெ. சைதன்யாவின் விமரிசனத்துக்கு பிறகு ஏற்கப்பட்டது. உதாரணமாக சிறுநீருக்கும் இசைக்கும் என்ன உறவு? அல்லது கவிதைக்கு என்ன தொடர்பு? ஒரு குழந்தை சிறுநீர் கழிக்கப்   போக வேண்டுமெனில் எந்த அவசரமாக இருந்தாலும் “மீ…ஸ்ஸ் –  ஐ  வா..ண்ட்  டு கோ… டூ…..- ரீசஸ்!” [ அம்மா இங்கே வா! வா! மெட்டு ] என்ற இசைப்பாடலை ஏன் பாடவேண்டும்? ஆனால் படிப்படியாக அப்பாடல் ஜெ. சைதன்யா அவர்களின் விருப்பத்துக்கு மாறாக அவர் இதழ்களில் குடியேறி அவர் தன்னை மறந்து விளையாடும்போதெல்லாம் அவர் வாயிலிருந்து  கசிந்து பரவியபடியே இருக்க நேர்ந்தது.

மேலும் இந்நிறுவனம் பல விஷயங்களை ‘ஈங்லி’ என்ற விபரீதமான மொழியில் தான் சொல்ல வேண்டும் என  கட்டளையிட்டது. உதாரணமாக தண்ணீ­ர், தாகம், உன் வகுப்பிலே எனக்கு போர் அடிக்கிறது, நீ கெட்ட மிஸ் போன்ற பல விஷயங்களை “ஐவான்ட்வாட்டர்” என்ற  சொல்லால் குறிப்பிட்டு வந்ததும் ஒவ்வொரு  குழந்தையும்   ஐவான்ட்வாட்டரை  தனது புட்டியிலிருந்தே குடிக்கவேண்டுமென கட்டாயப்படுத்தியதும்  கொடுமையானவை. அப்புட்டிக்குள் சாக்குகட்டியை எடுத்து போட்டு குலுக்குவதைக்கூட இந்றுவனம்  அனுமதிக்கவில்லை.

ஆனால் ஓரளவுக்கு சுவாரஸ்யமான விஷயங்களும் இங்கு இல்லாமலில்லை என்பதை ஜெ.சைதன்யா அவர்கள் தன் அந்தரங்க மனநெகிழ்வின் தருணங்களில் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இங்கு பரவலாக காணப்படும் சாக்பீஸ் அல்லது சாக்கேட்டி என்ற பலநோக்கு பயன்பாட்டுப் பொருள் முதன்மையாக குறிப்பிட ஏற்றது. இதை வைத்து அக்காக் கிளாஸ் மிஸ்கள் கரும்பலகைகளில் நண்டுகளை வரைவதும் அதை அக்காக்கள் எறும்புகளாக தங்கள் நோட்டுபுத்தகங்களில் வரைவதும் ஜெ.சைதன்யா அவர்களால் ஏற்கனவே கவனிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு வீணடிக்கப்படும் இந்த வெண்மையான பொருளை தரையில் தேய்த்தால் மிக மென்மையான ஒரு தூள் உருவாகிறது. அதன் மீது கையை ஒப்பி எடுத்து எங்கு வேண்டுமானாலும் கைமுத்திரையை எளிதாக பதிக்க முடியும், சுவர்கள், எம். அர்ச்சனாவின் கடற்படைநீல கவுன், சிலேட்டுகள் முதலிய அனைத்து பொருட்களையும் ஜெ.சைதன்யாவுக்கு டாட்டா காண்பிக்க வைக்கலாம். 

இதை கெ. ஆல்வின் ஜோசப், ரெஜினாள் மேரி , எஸ். மணிகண்டன் நாயர் ஆகியோர் விரும்பி உண்பதுண்டு. இந்த ஆபாசமான பழக்கத்தை ஜெ.சைதன்யா அவர்கள் தன் தந்தையாரிடம் கடுமையாகக் கண்டித்து , அப்படி செய்பவர்கள் ‘பேட் பாய்ஸ், பேட் கேள்ஸ்’  என குறிப்பிட்டார்கள். காரணம் சிவப்புச்  சாக்குக்கட்டியானது சற்று கசப்பாகவும், மஞ்சள் சாக்குகட்டி சோப்புபோலவும், மற்றவை  மாவுபோலவும் ருசியற்று இருப்பவை. பாத்திரம் விளக்கும் தூள், விபூதி போன்றவையும் இதே சுவை கொண்டவையே. இப்பிரபஞ்சம் பொதுவாக உண்ணப்பட ஏற்றதல்லாத பொருட்களையே அதிகமாகக் கொண்டிருக்கிறது என ஜெ.சைதன்யா அவர்கள் பொறுமையாகக்  கரம்பியும், கண்களைமூடி  மென்றுதுப்பியும், அக்கம் பக்கம் பார்த்து நக்கியும் கண்டடைந்த அனுபவ உண்மையாகும்.

இந்நிறுவனத்தில் உள்ள தண்ணீ­ர் குழாய்கள் மிக முக்கியமான, உற்சாகம் தரக்கூடிய விளையாட்டுஅமைப்புகள் என டி.தேபி, ஜெ.சைதன்யா ஆகிய இருவரும் கூட்டாக அபிப்பிராயப்படுவதற்கு இருவருமே மிஸ்ஸிடம் “அவதான் என்னோட ஊணிபாம் டெஜ்ஜை நனைச்சா மீஸ் !” என மாறி மாறி புகார் சொல்வது தடையாக இல்லை. ஆனால் அவற்றை மூடியே வைக்கவேண்டுமென சொல்லும்  மேரி ஆயாளின் அராஜக ஆணவ மனப்பான்மையை இவர்களுடன் நிடீனும்  சேர்ந்து கடுமையாக கண்டிக்கிறார் என்பதை இங்கு சுட்டிக்காட்டியாக வேண்டும். அக்குழாய்கள் கிச்ச் என்று ஒலியுடன் சீறுகையில் ஜெ.சைதன்யா அவர்கள் வாயைப்பொத்தி சிரிப்பதற்கு அவருக்கு வயிறு சரியில்லாத நேரங்களில்   அவ்வொலி எழுவதே காரணமென்பது அவர்களால் மிகுந்த சிரிப்புக்கு இடையே அவரது சீடருக்கு அந்தரங்கமாக வெளிப்படுத்தப்பட்டது.

மேலும் எம். கே.கோமளவல்லியின் பேனா, சி. சுல்தானா பேகத்தின் காதணி, நாராயணன் போற்றியின் கடுக்கன் ஆகியவையும் ஆர்வமூட்டும் விஷயங்கள் என குறிப்பிட்ட ஜெ.சைதன்யா அவற்றை அவர்கள் என்ன காரணத்தாலோ கேட்டால் தரமறுக்கிறார்கள் என்றார். இத்தனைக்கும் தனக்கு உவப்பான விஷயங்களை தேவையான அளவுக்கு மட்டுமே வன்முறையை கையாண்டு  கைப்பற்றிய பிறகு அதற்கு கைம்மாறாக தன்னிடமுள்ள ஆகச்சிறிய பொருளை , சாத்தியமென்றால் அவற்றின் நுனியை மட்டும் உடைத்து, அளித்து விடும் உயரிய மரபினையும் ஜெ.சைதன்யா கடைப்பிடித்துத்தான் வருகிறார்.

ஜெ.சைதன்யாவின் ஆசிரியப் பெருந்தகைகள் குறித்து அவருக்கு கிஞ்சித்தும் மதிப்பில்லை என்பதானது  “அங்க பார் எங்களோட பாபா பிளாக் ஷீப் மிஸ்ஸு. அவங்களுக்கு ஒண்ணு பாட்டுதான் தெரியும் . தெனமும் பாடுவாங்க தெரிமா? ” என இவர் ஒரு பெண்மணியை அறிமுகம் செய்ததில் இருந்து தெரிய வருகிறது. அவரது தந்தையார் மேலும் போதிய மரியாதை இல்லை என்பதை அவர் இன்னொருவரை  சுட்டி  “அவங்கதான் ஒன்னோட ஒண்டூத்ரீ மிஸ்ஸா ? ” என்று கேட்டபோது ” அய்யோ அப்பா! அவங்க ஏபீசீடீ மிஸ்ஸு .அவங்களுக்கு எப்பிடி ஒண்டூத்ரீ தெரியும்?” என இவர் சலித்துக் கொண்டமையிலிருந்து அறியலாம். மற்ற வகுப்பு மிஸ்ஸுகள் குண்டு மிஸ்ஸு , ஒல்லி மிஸ்ஸு, தொப்பை மிஸ்ஸு , பூனை மிஸ்ஸு என்றெல்லாம் அழைக்கப்படும்போது கெ. அமுதாவின் அன்னையானதனால் ஒருவர்  மட்டும் அம்மாமிஸ் என கௌரவமாக கூறப்படுகிறார் . 

பள்ளி செல்வது கடமை, பலனை  எதிர்பாராது செய்யவேண்டும் என்பதை அறிந்த ஜெ.சைதன்யா அதில் மறுப்பு தெரிவிப்பதில்லை. ஆனால் தினமும் காலை எழுந்ததுமே சோகம் கப்பிய குரலில் “அப்பா இண்ணைக்கு என்ன கிளமை?” என்று கேட்பார். அதற்கு எப்போதுமே இவரது தந்தையார் தவறான பதிலையே சொல்வதுவழக்கம் என்பதற்கு ஒரு நாள் சொன்ன பதிலை மறுநாள் சொல்வதில்லை என்பதே ஆதாரம். பொய்யை ஏற்க ஜெ.சைதன்யாவால் என்றுமே முடிவதில்லை  என்பதால் இவர் ” ஞாயிற்றுக் கிளமை சொல்லூ…” என்று மெல்ல ஆரம்பித்து உச்சத்துக்கு போகும் காலைக் கீர்த்தனையைப் பாடுகையில் அதன் பொருட்டு திறக்கப்பட்ட  வாயையே   இவரது தாயார் பல் தேய்க்கப்படுவதற்கும், காபி இட்டிலி முதலியவை ஊட்டப்படுவதற்கும் பயன்படுத்துகிறார் என்பது ஓர் உண்மை.

எலிக்கேஜி முடித்து உல்கேஜி தேறியதுமே மூக்குத்தி போட்டு,புடவை கட்டி, பூ வைத்து, மொபெட் வாங்கி, ஒட்டகம் வாங்கி, கல்யாணமும் செய்து கொள்ள வேண்டும் என்பது ஜெ.சைதன்யாவின்  எதிர்காலத்திட்டமாகும். புடவை கட்டினால் குழந்தை பிறந்துவிடுமென்பதை இவர் அறிந்திருக்கிறார். பள்ளி என்ற அசட்டு அமைப்பில்  ஈடுபடுவது  ஜெ. சைதன்யாவுக்கு மிக்க சிரமமாகவே உள்ளது. ஆனாலும் வேறு வழியே இல்லை. குழந்தைகள் படிப்படியாக வளர்வதற்காகவே அவ்வமைப்புகள் உருவாகியுள்ளன எனும்போது அடுத்த வகுப்புக்கு போகாமல் எப்படி வளர முடியும்? பள்ளிக்கூடம் போகாவிட்டால் என்றென்றும் பக்கத்துவீட்டு மனோஜ் போல மம்மு மட்டுமே சாப்பிட்டு அம்மா இடுப்பில் உட்கார்ந்து  சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். போகிற வருகிற அத்தனை பேரும் கன்னத்தை பிடித்து கிள்ளுவார்கள். ஜெ.சைதன்யா இவ்வுலகில் ஆற்ற வேண்டிய பணிகள் அனைத்துமே பெரிய பெண் ஆகி   மொபெட் வாங்கிய பிறகே உள்ளன எனும்போது வேறு வழியே இல்லை .

கல்வி குறித்த ஜெ. சைதன்யாவின் கருத்தை தெளிவாகக் காட்டும் ஒரு நிகழ்ச்சியை இங்கு எடுத்துச் சொல்லவேண்டியுள்ளது. இவரது தந்தையாரின் நண்பரான பேராசிரியர் ஒருவர் அனுப்பிய கடிதத்தில் அவரது பெயருக்கு பிறகு ஏராளமான ஆங்கில எழுத்துக்கள் வரிசையாக இருப்பதைக் கண்ட ஜெ. சைதன்யா அது குறித்து வியந்து கேட்டபோது அவர் அதெல்லாம் அந்நண்பரது படிப்புகள் என விளக்கினார். ” அந்த மாமா எவ்ளோ நாள் படிச்சாங்க?” “ரொம்ம்ம்ம்ம்ப நாள் பாப்பா” .ஜெ. சைதன்யா விழி பிதுங்கிய பிறகு குரலை தாழ்த்தி ” ஏன் அவ்ளோ படிக்கிறாங்க? அவங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா?” என வினவியபோது அவரது முதற்சீடர்  மெய்யறிவின் நுனி  வந்து தன் மேல் உரசப்பெற்றதாக குறிப்பிடுகிறார்.

http://jeyamohan.in/?p=395

முந்தைய கட்டுரைகுகைகளின் வழியே – 17
அடுத்த கட்டுரைகவிதைக்கு ஒரு தளம்