லே நகருக்கு நள்ளிரவில் வந்துசேர்ந்தபோது மின்சாரம் இல்லை. லே நகரம் சமீபகாலம்வரை முழுக்கமுழுக்க டீசலை எரித்துத்தான் மின்சாரத்தைப்பெற்றுக்கொண்டிருந்தது. அதுவும் ராணுவ டிரக்குகள் கொண்டுவரும் டீசலை அவர்கள் மின்சாரமாக ஆக்கி நகருக்கு விற்றுக்கொண்டிருந்தார்கள்.சமீபகாலமாகத்தான் அங்கே இரு சிறு நீர்மின் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாங்கள் அறையை அடைந்தபோது வன ஊழியர் இருளுக்குள் வந்து டீ கொடுத்தார்.
[சங் லா கணவாயில் கவிஞர்]
இரவு சத்பால் வந்து நெடுநேரம் பேசிவிட்டுச்சென்றார். ஹண்டரில் நடந்த குளறுபடிகளுக்கு மன்னிப்பு கோரினார். அது எங்கும் நிகழ்வதே என்று நான் சொன்னேன். சத்பாலின் கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதியின் அளவு கேரளத்தைவிட அதிகம். மக்கள்தொகை சில ஆயிரங்கள். ஊழியர்கள் சிலநூறுபேர்தான். ஆனால் வனக்கொள்ளை எல்லாம் கிடையாது. காரணம் பெரும்பாலும் வனமே இல்லை. சமீபகாலமாக சில தனியார் ஆங்காங்கே நட்டு உருவாக்கும் மரங்கள் மட்டும்தான்.
அன்றும் மறுநாளும் அங்குள்ள பலரிடம் லடாக் மற்றும் காஷ்மீரி அரசியல்பற்றிப் பேசினோம். காஷ்மீரி அரசியல் என்பது முழுக்கமுழுக்க சர்வதேச அரசியலையும் , இந்தியா பாகிஸ்தானின் அரசியல் சமநிலைகளையும் சார்ந்த ஒரு அதிகாரச்சதுரங்கம் மட்டுமே என்பதிலும் அதில் எவ்வகையிலும் மக்கள்நலன் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பதையும் பௌத்தர்களும் முஸ்லீம்களும் மீண்டும் மீண்டும் சொன்னார்கள். மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதிகார சக்திகள் காஷ்மீர் பிரச்சினையை உயிருடன் வைத்திருக்கவே செய்யும் என்பதே உண்மை.
காஷ்மீர் அரசியலில் முதல்குளறுபடி இந்திய அரசால், குறிப்பாக நேருவால் செய்யப்பட்டது என்பதில் பெரும்பாலும் ஒத்த கருத்து இருந்தது. காஷ்மீருக்குச் சிறப்புத்தகுதி கொடுத்து அதை ஒரு விவாதத்துக்குரிய அரசியல்பகுதியாக ஆக்கியதில் அது தொடங்குகிறது. காஷ்மீரின் பெருந்தலைவராக இருந்த ஷேக் அப்துல்லாவை தாஜா செய்ய அளிக்கப்பட்ட சலுகை அது.
காஷ்மீர உயர்குடியில் பிறந்த ஷேக் அப்துல்லா காஷ்மீரை ஒரு மன்னரைப்போல ஆட்சி செய்தார். எதிர்க்க ஆளில்லாமல் தேர்தல்களில் வென்றார். இந்தியாவின் எல்லாப்பகுதிகளிலும் ஆரம்பகட்டத்தில் அவ்வாறு உயர்குடியினரே அதிகாரத்தை அடைந்தனர். சுதந்திரம் கிடைத்த மிகச்சில வருடங்களில் எல்லா இடங்களிலும் அவர்களின் அதிகாரம் சாமானியர்களால் வீழ்த்தப்பட்டது. அப்படி ஜனநாயகம் தனக்கு எதிராகத் திரும்பியபோது அவர் தனிக்காஷ்மீர் என்ற குறுக்குக்கோரிக்கையை கையில் எடுத்தார். அதை இந்திய அரசு ஜனநாயகரீதியாக கையாண்டிருக்கவேண்டும். மாறாக அவரைச் சிறையிலடைத்தது காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டுவந்தது
.
ஜனாதிபதி ஆட்சி என்பது அதிகாரிகளின் ஆட்சி. எந்நிலையிலும் அது மக்களுக்கு கசப்பூட்டக்கூடியதாகவே இருக்கும். மேலும் அந்த அதிருப்தி நேரடியாக மத்திய அரசு மீது திரும்பவும் செய்யும். தொடர்ந்து மத்திய அரசு காஷ்மீரில் உண்மையான ஜனநாயக அரசு அமையாமல் அரசியல் விளையாட்டை ஆடியது. அது அந்த அரசு மீது மக்கள் கடும் அதிருப்தி கொள்ள வழிவகுத்தது
1978ல் ஆப்கானிஸ்தானை ருஷ்யா போலி மார்க்ஸியப்புரட்சி வழியாகக் கைப்பற்றியது. அதை எதிர்த்து அங்குள்ள மதவாதிகளைத் தூண்டிவிட்டு உள்நாட்டுப் போராட்டத்தை உருவாக்கியது அமெரிக்கா. இச்செயல் மத்திய ஆசியா முழுக்க ஆயுதமேந்திய இஸ்லாமிய தீவிரவாதம் உருவாகி வலுப்பெற அமெரிக்காவின் உளவமைப்பான சி.ஐ.ஏ அடித்தளமிட்டது. இந்தத் தீவிரவாதத்தின் பயிற்சிக்களமாக அமெரிக்காவின் நிதியுதவியில் வாழும் பாகிஸ்தானை அமெரிக்கா பயன்படுத்திக்கொண்டது.
ஆப்கானிஸ்தானின் அண்டைநாடான பாகிஸ்தான் வழியாக ஆப்கானிய ருஷ்ய ஆதரவு அரசு மீது ஓர் மறைமுகப் போரை நடத்தியது அமெரிக்கா. அமெரிக்காவின் அந்த போரை அமெரிக்காவுக்காக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடத்தினர். அது மதப்போர் என்று அவர்களால் அறிவிக்கப்பட்டது. நவீன உலகத்தில் இவ்வாறாக இஸ்லாமிய மதப்போர் அறிமுகம் செய்யப்பட்டது.
அதற்கு முன்னர் ஈரானிலும் ஈராக்கிலுமெல்லாம் மதம் அரசியல்மாற்றத்துக்கான கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. நவீன உலகில் மதப்போர் என்ற கருதுகோளின் பிதா என்று ஈரானிய அதிபர் அயத்துல்லா கோமெனியைத்தான் சொல்லமுடியும். ஆனால் அவையெல்லாம் ஒரு நாட்டுக்குள் நிகழும் அரசியல்கிளர்ச்சிகளாகவே இருந்தன. ஒருவகையில் அவையெல்லாம் மக்களியக்கங்கள்தான். மக்களை இணைக்கும் விசையாக மதம் இருந்தது, அவ்வளவுதான்.
ஆப்கானியப் போர்தான் உலகளாவிய இஸ்லாமியப் புனிதப்போர் என்ற கருத்து உருவாகி வலுப்பெற்ற களம். மக்களியக்கமாக அல்லாமல், சொல்லப்போனால் மக்களுக்குச் சம்பந்தமே இல்லாமல், தலைமறைவுப்போராளிகளால் நிகழ்த்தப்பட்ட போர் அது. சரியாகச் சொல்லப்போனால் இன்றைய உலகளாவிய இஸ்லாமியத் தீவிரவாதத்தின் அமைப்பும் கொள்கைகளும் வழிமுறைகளும் உருவாகி வந்தது அதனூடாகவே. மக்கள் அதன் பிணைக்கைதிகள் மட்டும்தான்.
பாகிஸ்தானின் பல்லாயிரம் மதரசாக்கள் மதவாதிகளுக்கு விடப்பட்டன. கடுமையான மதவெறியைப் பிரச்சாரம் செய்து போருக்கு ஆப்கானியப்போருக்கு ஆள்சேர்க்கும் மையங்களாக அவை மாறின. அவற்றிலிருந்து தாலிபான் உருவாகி வந்தது. தாலிபானின் நூற்றுக்கணக்கான குழந்தைகளில் சில என்று லஷ்கர் இ தொய்பாவையும், அல் குவைதாவையும், ஜெய்ஷ் இ மொகமதுவையும் சொல்லமுடியும். இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சிமியும், அல் உம்மாவும் அதன் நீட்சிகளே. அந்த நாற்றங்காலில் விளைந்தவைதான் முஸ்லீம் முன்னேற்றக்கழகமும் தௌஹீத் ஜமாஅத்தும் எல்லாம்.
இந்த இஸ்லாமிய எழுச்சியின் விளைவாகவே காஷ்மீர்பிரச்சினை எண்பதுகளின் தொடக்கத்தில் வேகம்பிடித்தது. இஸ்லாமிய அடிப்படைவாதம் காஷ்மீருக்கு வேகமாக வந்து சேர்ந்தது. அங்கே இருந்த பரவலான அரசியல் கசப்புடன் அது இணைந்துகொண்டது. காஷ்மீரெங்கும் சுன்னி மதவழிபாட்டிடங்களில் உக்கிரமாக மதவெறுப்பும் இஸ்லாமியத் தேசியத்துக்கான கோஷங்களும் கற்பிக்கப்பட்டன. மத்திய அரசு உண்மையான ஜனநாயக வழிமுறைகள் வழியாக அதை எதிர்கொள்ளாமல் முழுக்கமுழுக்க ராணுவரீதியாகவே அதைக் கையாண்டது. விளைவாக அடிப்படைவாதம் வளர்ச்சியடைந்தது.
பலபடிகளாக இன்றுவரை நீண்டுவந்திருக்கும் காஷ்மீரப்பிரிவினை இயக்கத்தின் பின்னணியில் எப்போதும் பாகிஸ்தான் இருந்துவருகிறது. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் ஒரு பெரிய சமாளிப்புக்கருவி. பாகிஸ்தானிய அரசு அமெரிக்காவின் அடியாள்போலச் செயல்படுவதை உலகறியும். இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கெல்லாம் அமெரிக்கா இஸ்லாமியநாடுகள் மீது கடுமையான ராணுவ ஆதிக்கம் செலுத்திவருவதும், எண்ணைவளங்கள் மீது முழுக் கட்டுப்பாட்டை வைத்திருப்பதும் அரைநூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தெரியும்
[மலைகளின் வேர்கள்]
இஸ்ரேலை அரேபியாவுக்கு எதிரான அடியாட்களாக அமெரிக்கா கையாண்டு வருகிறது. 1947 முதல் இஸ்ரேலுக்கு எதிராக அரேபியநாடுகள் போராடி வருகின்றன. 1973ல் அரபுநாடுகள் ஒருங்கிணைந்து இஸ்ரேல்மீது நடத்திய போரில் அமெரிக்கா ஆதரவுடன் இஸ்ரேல் வென்றது. அந்தக்கசப்பு இஸ்லாமிய உலகமெங்கும் இருந்தது.
அத்துடன் சௌதி அரேபியாவில் மன்னராட்சியை பொம்மையாக வைத்து அதன் எண்ணைவளத்தை சுரண்டிவந்தது அமெரிக்கா. அதற்கு எதிராக அறுபதுகள் முதல் நடந்துவந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் எல்லா போர்களும் தோற்கடிக்கப்பட்டன. எண்ணை வளத்தை தங்கள் கைக்குள் கொண்டுவர எண்ணைவளநாடுகளின் கூட்டமைப்புகள் நடத்திய எல்லா முயற்சிகளும் அமெரிக்காவால் முறியடிக்கப்பட்டன. எழுபதுகளின் செய்தித்தாள்களை வாசித்த நினைவுள்ள எவருக்கும் இந்த சித்திரம் தெளிவாகி வரக்கூடும்.
ஆகவே இஸ்லாமிய அடிப்படைவாதம் அதன் மைய எதிரியாகக் கண்டது அமெரிக்காவையே. ருஷ்யா தற்காலிக எதிரிதான். இந்நிலையில் அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்த பாகிஸ்தானிய அரசும், ராணுவமும், உளவுத்துறையும் பாகிஸ்தானின் இஸ்லாமியத் அடிப்படைவாதிகளின் அதிருப்தியைச் சமாளிக்கும் திசைதிருப்பும் கருவியாக காஷ்மீரைக் கையில் எடுத்தனர். காஷ்மீரை ‘இந்து’ இந்தியாவில் இருந்து விடுவிப்பது பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் புனிதப்போராக மாற்றப்பட்டது. பாகிஸ்தானிய உளவுத்துறை அவர்களுக்கு நிதியும் பயிற்சியும் ஆயுதங்களும் அளித்தது. திட்டங்கள் போட்டு உதவியது.
[அதி துல்லிய ஏரி]
காஷ்மீரின் ஆயுதமேந்திய கிளர்ச்சியின் சர்வதேசப்பின்புலம் இதுவே. இந்தக்கிளர்ச்சியில் எப்போதும் முன்னிலையில் நின்று போராடியவர்கள் எல்லைகடந்து இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானிய தீவிரவாதிகள்தான். வெவ்வேறு காலகட்டங்களில் பாகிஸ்தான் நேரடியாக அமெரிக்காவுக்கு ஆதரவுகொடுத்தாகவேண்டிய கட்டாயம் நேரும்போதெல்லாம் மறுவிசையாக காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்திருப்பதை வரலாற்றைத் திரும்பப்பார்த்தால் எவரும் காணலாம்.
தீவிரவாதம் எப்போதுமே அரசின் இயல்பை மாற்றியமைக்கிறது. சிவில்அரசு பின்னகர்ந்து ராணுவஅரசு முன்னால் வருகிறது. அடக்குமுறைகளும் கெடுபிடிகளும் அதிகரிக்கின்றன. குடிமைச்சட்டங்கள் ரத்தாகின்றன. இதற்கு விதிவிலக்காக உள்ள அரசு என ஏதும் இன்று உலகில் இல்லை. ஏதேனும் வடிவில் எப்போதேனும் தீவிரவாதத்துக்கு இடம்கொடுக்கும் மக்கள் அரசின் ராணுவமுகத்தை எதிர்கொண்டே ஆகவேண்டுமென்பது உலகமெங்கும் உள்ள விதி.
இவ்வியல்பை எப்போதும் தீவிரவாதிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் அரசை நோக்கி தாக்குதல் தொடுத்துவிட்டுப் பதுங்கிக்கொள்கிறார்கள். அரசு ராணுவமயமாகிறது. அது அடக்குமுறையை வெளியே எடுக்கிறது. அந்த அடக்குமுறை மக்களில் கோபத்தை உருவாக்குகிறது. அக்கோபத்தை தீவிரவாதிகள் மேலும் தூண்டிவிடுகிறார்கள். அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
கூலி இதழாளர்களும் கூலி அறிவுஜீவிகளும் மனிதாபிமானம், அமைப்புக்கு எதிரான மனநிலை என்னும் போர்வைகளில் அரசுக்கு எதிரான கசப்புகளை வளர்த்து மக்களை தீவிரவாதம் நோக்கி மேலும் மேலும் தள்ளுகிறார்கள். பிரச்சினைகளின் நுட்பமான ஊடுபாவுகளை மறைக்கிறார்கள். அதிகார உள்ளீடுகளை மழுப்புகிறார்கள். மட்டையடியாக எழுதி உணர்ச்சிகளை கிளப்புகிறார்கள். அவையெல்லாமே தீவிரவாதத்துக்குச் சாதகமானவை. காஷ்மீரில் நடந்தது இதுதான். உலகமெங்கும் நிகழ்வதும் இதுதான்.
ஆனால் ஒருகட்டத்தில் தீவிரவாதம் மக்களுக்குச் சலிக்கிறது. அது வாழ்க்கையை அழிக்கிறது என்ற பிரக்ஞை எழுகிறது. ஆனால் அப்போது மிகத்தாமதமாகியிருக்கும். தீவிரவாதிகளை மக்கள் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. அதிகார ஆட்டம் மக்களுக்கு அப்பால் வெகு உயரத்தில் தேசங்களும் ராஜதந்திரிகளும் சர்வதேச வணிகசக்திகளும் சேர்ந்து ஆடும் சதுரங்கமாக ஆகிவிட்டிருக்கும். ஒருபக்கம் தீவிரவாதம். மறுபக்கம் அரசு. அரசமைப்பு தீவிரவாதத்தால் ஊழல்மிக்கதாக மாறிவிடுவதும் உலகில் எங்கும் நிகழ்வதே. தணிக்கைசெய்யப்படாத செலவினங்களே காரணம். ஊடே புகுந்து ஆயுதவணிகர்களும் சர்வதேச நிதியங்களும் லாபம் பார்க்கின்றன. கடைசியில் மக்கள் இழப்பை மட்டுமே அடையமுடியும்.
காஷ்மீர் பிரச்சினையின் திருப்புமுனை அமெரிக்கா அது உருவாக்கிய இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிராகத் திரும்பியதுதான். 2000த்தில் அமெரிக்கா தாலிபானால் தாக்கப்பட்டபின் அமெரிக்கா ஆப்கானிய தீவிரவாத அரசுக்கு எதிராக போர் தொடுத்தது. அவர்கள் வளர்த்த பூதத்தை அவர்களே அழிக்க முயன்றனர். அதில் பாகிஸ்தான் அமெரிக்க அடியாளாகச் செயல்பட நிர்பந்திக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நாற்றங்கால்கள் அமெரிக்காவால் வெட்டி அழிக்கப்பட்டன. அதன் விளைவாக மெல்லமெல்ல காஷ்மீர் பிரச்சினை தணிய ஆரம்பித்தது
பாகிஸ்தானின் அரசு அது அமெரிக்காவுக்கு அளித்த ஆதரவின் விளைவாக உள்நாட்டில் உருவான எதிர்ப்பை திசை திருப்ப தொடர்ந்து காஷ்மீரில் தாக்குதல்களை நிகழ்த்தினாலும் சென்ற பத்தாண்டுகளில் காஷ்மீர் பிரச்சினை அடங்கிவிட்டிருப்பதை அரசியலறிந்தவர்கள் உணரமுடியும். மக்கள் ஐந்தாண்டுகளுக்கு முன்னரே அமைதிக்குத் திரும்பிவிட்டனர். பிளவுபட்டு, மக்களாதரவை இழந்து விட்ட காஷ்மீரிப்பிரிவினை இயக்கங்கள் அவ்வப்போது ஸ்ரீநகரில் உருவாக்கும் சிறு கலவரங்கள், எல்லைதாண்டிய ஒருசில தீவிரவாதிகள் மீதான ராணுவத்தாக்குதல்கள் மட்டுமே அங்கே இன்று நிகழ்கின்றன. காஷ்மீர் இயல்புநிலைக்கு திரும்பியதை கண்கூடாகவே கண்டோம்.
ஆச்சரியமென்னவென்றால் அங்கே நாங்கள் பேசிய இருவர் தமிழகத்திலும் கேரளத்திலும் காஷ்மீரைவிட அதிகமாக இஸ்லாமியத் தீவிரவாதம் இருப்ப்தாகச் செய்திகளில் வாசித்ததைச் சொன்னார்கள். தமிழகத்தில் அமெரிக்கத் தூதரகமே தாக்கப்பட்டதல்லவா என்றார் ஒருவர். கேரளத்தில் தீவிரவாதப் பயிற்சிமுகாம்களே பிடிபட்டிருக்கின்றன என்றார். ’அந்த அளவுக்கு இங்கே இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்’ என்றார். உண்மைதான். இன்றும்கூட காஷ்மீரில் புர்க்காபோடாத பெண் மீது ஆசிட் வீசப்பட்டது என்ற ஒரு செய்தி பதிவாகவில்லை.
எங்கள் திட்டபபடி ஒருநாள் முழுக்க லே நகரைச் சுற்றி உள்ள இடங்களை பார்க்கவேண்டும். ஆனால் சாலையின் நிலைமை எங்களால் ஊகிக்கமுடியாததாக இருந்தமையால் ஸன்ஸ்கரிலேயே ஒருநாள் போய்விட்டது. ஒரு இடத்தைக் கழிக்கவேண்டும். அதிகமாகச் சுற்றுலாப்பயணிகள் வரும் லே நகரை விட்டுவிடலாமென முடிவுசெய்தோம். அங்குள்ள முக்கியமான இடங்களை மட்டும் பார்ப்பது என்று திட்டமிட்டுக் கொண்டோம்
மறுநாள் அதிகாலையிலேயே ஓட்டுநர் வந்துவிட்டார். நேராக பாங்கோங் ஏரிக்குக் கிளம்பினோம். பாங்கோங் ஸோ என அழைக்கப்படும் இந்த ஏரியை இந்தியாவின் மலையுச்சி ஏரிகளில் மானசரோவருக்கு அடுத்தபடியானது எனலாம். குட்டிமானசரோவர் என்றே இதை சொல்கிறார்கள். 14,270 அடி உயரத்தில் உள்ள இந்த ஏரி 134 கிலோமீட்டர் நீளமுள்ளது. இதன் பாதிக்குமேல் திபெத்தில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. எஞ்சியபகுதி இந்தியாவில் இருக்கிறது. முழுக்கமுழுக்க பனி உருகி மலைகளிலிருந்து வழிந்து உருவான இந்த ஏரியின் நீர் இதிலிருந்து வெளியே செல்வதேயில்லை.
இந்த ஏரியின் கரையில் இதை ஆண்ட திபெத்திய அரசால் கட்டப்பட்ட குர்நாக் கோட்டை இருக்கிறது. 1952இல் சீனர்கள் அதைக்கைப்பற்றிக்கொண்டு தங்கள் எல்லையாகக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஏரியை ஒட்டுமொத்தமாக தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவர சீனா கொஞ்சம் கொஞ்சமாக முயன்றுவருகிறது. மிகச்சமீபகாலமாகவே இங்கே சுற்றுலா அனுமதிக்கப்பட்டுள்ளது
நாங்கள் மலையேறி சங் லா கணவாய் என்ற இடத்தை அடைந்தோம். 17,590 அடி உயரத்தில் உள்ள இந்தச் சாலை உலகின் மூன்றாவது உயரமான வண்டிச்சாலை என குறிப்பிடப்படுகிறது. சங் என்றால் தெற்கு என்று பொருள். இந்த கணவாய்க்கு அப்புறமுள்ள பகுதி சங்டாங் என்றும் அங்குள்ள மக்கள் சங்க்பா என்றும் அழைக்கப்படுகிறார்கள். இங்கும் இந்திய ராணுவத்தின் ஒரு இலவச டீ வினியோக மையம் உள்ளது. மோட்டார்சைக்கிள்காரர்கள் இந்த இடம் வரை வந்து படம் எடுத்துக்கொள்வதைக் கண்டேன். சில வெள்ளையர் சைக்கிளிலேயே அந்த உயரம் வரை வந்திருந்தார்கள்.
மதியம் பாங்கோங் ஏரிக்கரைக்குச் சென்றோம். தொலைவிலிருந்து பார்த்தபோதே ஏரியின் அபாரமான நீலம் பிரமிக்கச்செய்தது. தென்கிழக்குப்பகுதியில் சில அபூர்வமான கடல்களுக்கு அந்த நீலம் உண்டு. உள்நாட்டில் அமெரிக்காவின் பிரபலமான கிரேட்டர் ஏரியில் அந்த நீலத்தைக் கண்டிருக்கிறேன். மணிநீலம் என்று சொல்லலாம். நெருங்க நெருங்க அந்த நீலம் எங்களை முழுமையாகவே ஆட்கொண்டது
ஏரிக்கரையில் கூடாரங்கள் அமைத்து தற்காலிகமான உணவகங்களும் ஓய்வுச்சாலைகளும் அமைத்திருந்தனர். நாங்கள் சென்ற மற்ற இடங்களுடன் ஒப்பிடுகையில் அதிகமான சுற்றுலாப்பயணிகளையும் மோட்டார்சைக்கிள்காரர்களையும் அங்கே காணமுடிந்தது. சாலை ஒப்புநோக்க நல்ல நிலையில் இருப்பது காரணமாக இருக்கலாம். ஆனால் த்ரீ இடியட்ஸ் என்ற படம் அங்கே எடுக்கப்பட்டமைதான் அதிகமாக சுற்றுலாப்பயணிகள் வருவதற்கான காரணம் என பிறகு தெரிந்தது
ஏரிக்கரையில் உணவகத்தில் அமர்ந்து திபெத்திய சோளரொட்டிக்கு சொன்னோம். அதைச் சாப்பிட்டபடி ஏரியையே பார்த்துக்கொண்டிருந்தோம்.. அது ஒரு ஏரி என்று நம்பமுடியவில்லை. விளிம்பில் மெல்லிய அலைகள் அடித்தன. கடலின் ஒரு உள்நிலவளைவு என்றே தோன்றிக்கொண்டிருந்த்து. மலையுச்சிக்கடல்!
பாங்கோங் ஏரியை விதவிதமான நீலங்களினால் ஆன ஒரு பெரும் பரப்பு என்று சொல்லலாம். வான்நீலம், குவளைமலர்நீலம், துத்தநாகநீலம் எனச் சென்று மெல்லிய ஊமத்தையின் ஊதாநீலம் வரை வண்ணங்கள். நீரின் ஆழம், ஒளிவிழும் கோணம், மலைநிழல்கள் ஆகியவை இணைந்து உருவாக்கிய இயற்கையின் வண்ணநிகழ்வு. இமயத்தின் அழகிய விழி என்று நினைத்துக்கொண்டேன். சொற்களால் அள்ள முயன்று பின் சொல்லிழந்து வெறுமே பார்த்துக்கொண்டிருந்தேன்.
உணவுக்குப்பின் ஏரியின் கரை வழியாக முடிந்தவரை உள்ளே சென்று பார்க்கலாமா என்ற எண்ணம் ஏற்பட்டது. அது எவரும் செய்யக்கூடியது அல்ல என்றாலும் அதிகாரியின் தொடர்பு இருப்பதனால் கிளம்பினோம். ஏரிவிளிம்புவழியாகவே சென்றோம். ஓரிடத்தில் ஏரியின் கூழாங்கல்பரப்பில் இறங்கி உள்ளே சில கிலோமீட்டர் சென்று நீரின் விளிம்பில் நின்றோம்
கடற்கரையில் நிற்பதுபோலத்தான் இருந்தது. உப்பு நீர். மிகமிகமிகத் துல்லியமானது. அடித்தளம் கண்ணாடிப்பரப்பாகத் தெரிந்தது. பாங்கோங் ஏரியில் மீன்கள் இல்லை. எந்தவிதமான கடற்தாவரங்களும் இல்லை. முற்றிலும் உயிரற்ற நீர்வெளி. வருடத்தில் எட்டுமாதம் வரை பனிப்பரப்பு. 1962 சீனப்போரின்போது அதன்வழியாக சீன டாங்குகள் ஏறிவந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நீர்ப்பரப்பு மீது சில பறவைகளைக் காணமுடிந்தது. நீர்விளிம்பில் வாழும் சில சிற்றுயிர்களை அவை உண்ணுகின்றன. பறவைகள் மிகக்குறைவுதான்
நீரில் இறங்கி நின்றோம். குளிரில் கால் விரைத்து சுரணையை இழ்ந்ததுபோலிருந்தது. எனக்கு தொடைப்பக்கம் நரம்புகள் உளைச்சலெடுக்க ஆரம்பித்தன. தேவதேவன் அந்த நீரிலும் துழாவி கூழாங்கற்களைப்பொறுக்கிக் கொண்டிருந்தார். கரையில் நன்றாக வெயிலடித்தாலும் ஏரியிலிருந்து வந்த காற்று சில்லென்றிருந்தது.
ஒருமணிநேரம் ஏரிக்கரையில் நின்றிருந்தோம். சுற்றுலாப்பயணிகள் இல்லாத தனித்த இடம் என்பது நிறைவை அளித்தது. பின்னர் கிளம்பி ஏரிக்குமேலே சென்ற மண்சாலையில் சுற்றி வந்தோம். காபிப்பொடிக்குவியலில் ஒரு வண்டு ஊர்வதுபோல குமுகுமுத்துக்கிடந்த மண்ணில் சென்றது எங்கள் வண்டி. சருமத்தில் மின்னும் வடுபோல வளைந்த சாலை.
பாங்கோங் ஏரியை விட்டுச் சென்றபோது ஒரு சிறு ஏமாற்றமும் இருந்தது. அவ்வளவு பயணிகள் அங்கிருந்திருக்காவிட்டால் அங்கே இன்னும் ஓர் அந்தரங்கத்தன்மை கைகூடியிருக்கும். அங்கே இரவு தங்கியிருக்கலாம். சுற்றுலா இடங்களில் புனிதமான ஏதோ ஒன்று அழிக்கப்பட்டுவிடுகிறது. அங்கே இரவு தங்கினால் நெருப்புவிருந்தும் நடனமும் உண்டு என்று எழுதப்பட்டிருந்ததை வாசித்தபோது விலகிச்செல்லவே தோன்றியது. பாங்கோங் ஏரிக்கு மீண்டும் வந்தால் ஒரு மனிதர் கூட அங்கே வராத கடும்குளிர்காலத்தில்தான் வருவேன் என எண்ணிக்கொண்டேன்