ஹண்டரின் விடுதியில் தேவதேவன் காலையிலேயே எழுந்து சென்று சுற்றிலுமுள்ள செடிகொடிகளைப்பார்வையிட ஆரம்பித்துவிட்டிருந்தார். பின்பக்கம் நின்ற ஆப்பிள் மரங்களிலிருந்து நாலைந்து ஆப்பிள்களை பறித்துவந்தார். அவரும் அஜிதனுமாகத் தின்றனர். அஜிதன் ‘பாக்க சிவப்பாத்தான் இருக்கு. ஆனா காய்’ என்றான். தேவதேவன் ‘நல்லாத்தான் இருக்கு’ என்று அபிப்பிராயப்பட்டார்.
விடுதிக்கு முன்னால் தக்காளி வெங்காயம் பயிரிட்டிருந்தனர். தேவதேவன் ஊருக்குச்சென்றதும் அதேபோல வெங்காயம் பயிரிடப்போவதாகச் சொன்னார். வெங்காயத்தாள் பொரியல் செய்வதை அவருக்கு நான் விளக்கினேன்.
விடுதியின் முகப்பில் பெரிய சூரியமின்சக்தி வெந்நீர் உருளை இருந்தது. ஒரு குழாய்வழியாக குளிர்நீரைக் கொட்டியபோது கொதிக்கக் கொதிக்க வெந்நீரை மறுபக்கம் ஊற்றியது. குளித்து முடித்தபோது ரொட்டியும் பழக்கூழும் காபியும் வந்தது. சாப்பிட்டுவிட்டு அறையை ஒழித்து கிளம்பினோம். முதலில் நுப்ரா சமவெளியின் பாலைவன மணல்.
நான் பல்வேறுபாலைவன மணல்மேடுகளில் அலைந்திருக்கிறேன். ஆனால் மலையுச்சியில் ஒரு மணல்வெளியில் நிற்பது அதுவே முதல்முறை. மனம் பொங்கிக்கொண்டே இருந்தது. காலையிலேயே வெயில் வந்துவிட்டது. ஆனால் குளிரும் அதேயளவுக்கு இருந்தது. காரை ஓர் ஓடையருகே நிறுத்திவிட்டு இறங்கி கையை விரித்துக்கொண்டு நின்றபோது உலகின் உச்சியில் நின்ற பரவசம் உருவாகியது.
இந்த பருவகாலத்தில் மட்டும் ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்திருக்கும் ஒட்டகச்சவாரி வசதி உள்ளது. ஆனால் அதெல்லாம் காலை ஒன்பதுமணிக்கு மேலேதான். நாங்கள் செல்லும்போது கூடாரங்கள் காலியாக இருந்தன. மணலில் ஒரு நடை சென்று வரலாமென்று கிளம்பினோம்.சாதாரணமாக மணலில் நடந்தாலே மூச்சுத்திணறும். ஆக்ஸிஜனும் குறைவாக இருந்ததனால் ஆஸ்துமா நோயாளிகள் போல உணர்ந்தோம்.
ஆனால் நடக்க நடக்க உடம்பு சூடாகி நுரையீரலை விரிக்கும்போல. மூக்கடைப்புகள் முற்றாக விலகி நுரையீரலுக்குள் காற்று முழுமையாக சென்று மீள்வதை உணரமுடிந்தது. சாதாரணமான பாலைநில மணலைவிட மென்மையான தூசுபோன்ற மணல் இது. கையில் அள்ளியபோது கண்ணாடிப்பொடிபோலவே இருந்தது. ஒரு பெரிய பருந்து செத்து பாடமாகி மண்ணோடு ஒட்டிக்கிடந்தது, உடைந்த குடைபோல.
மணல்மேட்டில் சறுக்குவதுதான் பாலைவன அனுபவத்தில் முதன்மையானது. மலைச்சரிவுபோல அச்சமூட்டும். செங்குத்தாக இருப்பதுபோல பிரமைகூட்டும். ஆழத்தை எண்ணி கால் பதறும். ஆனால் நடக்கலாம். பாயலாம். விழவே மாட்டோம். அதை நம் அகம் அறிந்ததும் வினோதமான குதூகலம் ஒன்று நம்மை ஆட்கொள்கிறது. மணலில் சறுக்கி கீழே சென்றோம். அஜிதன் படுத்து உருண்டே கீழே வந்தான். ராஜமாணிக்கம் உருண்டபோது பீதியடைந்துவிட்டார். ஒரு கட்டத்தில் உருளுவதன் வேகத்தின்மீது நமக்குக்கட்டுப்பாடு இல்லை என்று உணர்வதன் அச்சம்.
மணல் குழந்தைகளாக ஆக்கியது. மாறி மாறி விழவைத்தோம். மணலில் ஓடினோம். மலைகள் சூழ்ந்திருக்கையில் அந்த மணல்வெளி ஒரு மடித்தட்டு போலிருந்தது. சின்ன வயதில் அம்மாவின் மடியில் விளையாடியது போல. அம்மா வெள்ளைவேட்டிதான் கட்டுவாள்.
நாலைந்து சுற்றுலாப்பணியாட்கள் வந்தார்கள். இருவர் அருகே இருந்த குறுங்காட்டுக்குள் சென்றார்கள். அங்கே வினோதமான ஒலி கேட்டது. செம்புத்தவலையை சுவரில் உரசியதுபோல. அதன்பின் அவர் ஒட்டகங்களை கூட்டிவந்தார். நான் இரட்டைத்திமில் பாக்டீரிய ஒட்டகங்களைப்பார்ப்பது அதுவே முதல்முறை. உண்மையில் முதற்கணம் ஏதோ ஸ்டீவன் ஸ்பீல்பர்க் படத்தில் வரைகலை டைனோசர்களை பார்ப்பதுபோல தோன்றியது.
ஒட்டகங்கள் மணலில் நடந்து வருவது ஓர் அழகு. அவை மணலை அதிராமல் மிதித்து மிதப்பது போல வரும். மணலுக்குச் சொந்தக்குழந்தைகள் அவை என்ற எண்ணம் ஏற்பட்டது. அவற்றின் திமில்கள் குழந்தைகள் தள்ளாடி அமர்ந்திருப்பது போல அசைந்தன
அடர்ந்த முடிபோர்த்தப்பட்ட உடம்பு. முடி தொங்கும் விலாவும் வயிறும். முடி குச்சலமாக அடர்ந்த கால்கள். முதுகின் இரட்டைத்திமில்கள் சரிந்து குழைந்து கிடந்தன. கோடையில் தூக்கமே இல்லாமல் மேய்ந்து ஏற்றிக்கொண்ட கொழுப்புச்சேகரிப்பு அவை. குளிர்காலத்தில் அவை கரைந்து மறைந்துவிடும். சாதாரண ஒட்டகத்தைவிட இருமடங்கு சேமிப்புக்கிடங்குகள் கொண்டவை ஆதலால்தான் அவை இந்தக்குளிர் வெளியில் வாழமுடிகிறது.
குளிர்காலத்தில் குச்சிகளை மட்டும் தின்று பனிக்கட்டியை குடித்து வாழ முடியும் அவற்றால். வாய்க்குள் பற்களைப்பார்த்தால் பயமாக இருக்கும். பசுக்கள் தொடாத பலவற்றையும் முறுக்கு தின்பதுபோல தின்ன முடியும். படுத்ததுமே அசைபோட ஆரம்பிக்கின்றன. அசைபோடப்படுவதற்காக இரைப்பையில் இருந்து உணவு கிளம்பி வாய்க்கு வருவதை வெளியே காணமுடியும்.
பாக்டீரியன் ஒட்டங்களை ஒட்டகமென்றே சொல்லமுடியாது. கழுத்தும் பிளவுண்ட வாயும் அகலமான குளம்புகளும்தான் அவற்றை ஒட்டகமெனக்காட்டின. சோம்பலாக மென்றபடி படுத்துக்கொண்டன. மூக்கை அடிக்கடி நன்றாக மூடி பர்ர் என்றன. மோவாய் பிளந்திருந்தது.
அவை படுப்பதும் வேடிக்கையான காட்சிதான் .மணலில் அடிவயிற்றை நன்றாக ஒட்டி பின்கால்களை கும்பிடுவதுபோல கூப்பி முன்கால்களை மடித்து உள்ளே வைத்து கழுத்தை வளைத்து அவை படுத்திருக்கும் அழகு பரவசமூட்டியது. எழுவதென்றால் முதலில் பின்னங்கால்களைத் தூக்கின.
இங்குள்ள கழுதை யாக் மாடுகள் எல்லாவற்றின் முடியும் தேங்காய்நார் போல சொரசொரவென்றிருக்க்கும். கோடைநிலத்து உயிர்களின் முடியில் உள்ள பளபளப்போ வழுபழுப்போ இருப்பதில்லை. முடியை மென்மையாக்க தோலில் இருந்து ஊறும் எண்ணை இவற்றுக்குக் கிடையாது. ஒட்டகங்களின் முடியைத் தொட்டுப்பார்த்தேன். நார்க்கம்பளத்தை வருடியதுபோல இருந்தது. திமில் உறுதியாக எலும்புக்குவை மாதிரி தோன்றியது.கடித்துக்கிடித்து வைக்குமோ என்ற அச்சம் இருந்தது.
ஒட்டகங்களின் பார்வை விசித்திரமானது. மோவாயைத் தூக்கி அலட்சியமாகப் பார்க்கும்பார்வையை ஆங்கிலத்தில் supercilious என்பார்கள். எல்லா ஒட்டகங்களும் உலகை துச்சமாக நினைக்கும் உயர்குடிகள் என்ற எண்ணம் ஏற்பட்டது
ஒட்டகங்களின் முதுகில் கம்பளங்களை போட்டு உடலுடன் கட்டினார்கள். வட இந்தியப்பெண்கள் புல்லாக்கு போல போட்டிருக்கும் மூக்குவளையம் போல ஒட்டகங்களும் அணிந்திருந்தன. அவற்றில் கயிறுகட்டிப்பிடித்துக்கொண்டால்தான் இவற்றைக் கட்டுப்படுத்த முடியும். இங்கே மாடுகளுக்கும் இதே மூக்குச்சவ்வு வளையம்தான். பெண்களின் புல்லாக்கும் இதிலிருந்து வந்ததோ என்னவோ?
புல்லாக்கைப்பிடித்து சற்றே அசைத்து பால்டி மொழியில் ஒரு கூச்சல். ஒட்டகம் ‘உசிரை வாங்குறானுங்கப்பா’ என்ற பாவனையில் எழுந்துகொண்டு காலால் மணலை தட்டியது. திமில்கள் இருபக்கமும் தொய்ந்து ஆடின. பர்ர் என ஒரு ஒலி. கண்களுக்குமேல் இமைமயிர் ஒரு திரைபோல தெரிந்தது.
[கேள்வி]
பயணிகளாக எங்களைத்தவிர ஒரு தொழிலதிபர் குடும்பமும் ஒரு ஜெர்மானியப்பெண்மணியும் மட்டும்தான். ராஜமாணிக்கமும் தேவதேவனும் ஒட்டகங்களில் ஏறிக்கொள்ள விரும்பினார்கள். அவர்கள் ஏறும்போதுள்ள முகபாவனை வேடிக்கையாக இருந்தது. தேவதேவன் ‘ஒட்டகத்தோட அசைவு என் ஒடம்புக்கு வாறத அனுபவிக்கணும்னு ஆசை’ என்றார். அஜிதன் மிருகங்கள் மீது ஏறுவதில்லை என்ற கொள்கை உடையவன். மிருகங்களை உண்பதுமில்லை.
கூட்டமாக அவர்களை பாலைநிலத்தில் ஒரு வட்டமடித்து நடக்கச்செய்து கூட்டிவந்தார்கள். இரு திமில்கள் நடுவே செருகிக்கொண்டு அமர்வது சிரமம். ஒட்டகப்பயணம் நான் நிறையவே செய்திருக்கிறேன். ஐந்துநிமிடங்களுக்குப்பின் இடுப்பு பிடித்துக்கொண்டு உயிர்போகும். ஒரு விசித்திரமான அந்தர நடனம் அது. பழகிவிட்டால் நம் உடம்பு ஒட்டகத்தின் அசைவுக்கு எதிர்வினை காட்டாமலாகிவிடும். அதன்பின் பிரச்சினையில்லை.
[கவனம்]
ஒட்டகப்பயணம் முடிந்து வந்து இறங்கிய தேவதேவன் ‘ஒட்டகம் மாதிரியே தெரியல்ல’ என்றார். வேறு எப்படி இருக்கிறது என்றேன். ‘சைக்கிள் ரொம்பநாள் பழகினா சைக்கிளுக்கு நம்மள தெரியும்னு தோணும்ல, அதேமாதிரி ஒட்டகத்துக்கு என்னைய நல்லா தெரியும்னு தோணிச்சு’ என்றார்.
ஒட்டகத்தில் இருந்து இறங்கிய வெள்ளைக்காரி எழுப்பிய ஒலி உறவுச்சத்திற்கானது. ஒட்டகம் ஒருவரை இறக்கி விட்டதுமே உரிமையாளரிடம் அதற்கான பிரதிபலனை எதிர்பார்த்தது
ஹண்டரில் இருந்து பனாமிக் வெந்நீர் ஊற்றைப் பார்க்கச் செல்லவேண்டும். அது ஹண்டரில் இருந்து மேலும் எழுபது கீமீ மலைக்குள் இருந்தது. சியாச்சின் பனிப்பாளத்தின் கடைசி நுனி அது. இமயமலையின் எரிமலை வாய்களில் ஒன்று. லடாக்கில் பயணிகள் அனுமதிக்கப்படும் கடைசி எல்லை பனாமிக்தான்.
லேயில் நாங்கள் கூட்டிவந்த ஓட்டுநர் மலைப்பயணங்களில் நிபுணர். அவர்கூட இந்தப்பாதையில் ஓட்டமுடியாது. ஆகவே திஸ்கித் ஊரில் இருந்த இன்னொரு ஓட்டுநர் வண்டியை ஓட்டினார். மலையில் தவழ்ந்து ஏறிச்சென்ற வண்டியை ஒரு மொட்டைப்பாலையில் நிறுத்தினார் அங்கிருந்து நான்கு கிமீ மலையில் ஏறிச்சென்றால் யராப் ஸோ என்ற புனிதமான ஏரி வருகிறது.
[ராஜமாணிக்கம் ஏறுவதற்கு முன்பு ஒட்டகம்]
லடாக்கிய பௌத்தத்தில் பாவங்களைக் கரைக்கும் புனித ஏரியாக இது கருதப்படுகிறது. அடியில் எரிமலை இருப்பதனால் குளிர்காலத்தில் இது வெம்மையாக இருக்கும். ஆனால் அதில் இறங்கவோ நீரைத் தொடவோ கூடாது. அதன்கரையில் தியானம் செய்து பூசைகள் வைக்கலாம், அவ்வளவுதான்
யராப் ஸோ ஒரு சிறிய ஏரிதான். அதன் கரையெங்கும் பக்தர்கள் வேண்டுதல்களுக்காக அடுக்கிச்சென்ற கல்லடுக்குகள் இருந்தன. அதிகம்பேர் வருவதில்லை. ஆனால் புல்கூட இல்லாத அந்த வெளியில் காற்றோ பனியோ வருவது வரை கல்லடுக்குகள் கலையாமலிருக்கும்.
[ஒட்டகத்தில் ராஜமாணிக்கம்]
[ராஜமாணிக்கம் ஏறி இறங்கியபின்பு ஒட்டகம்]
நல்ல வெயில். சியாச்சினுக்கு அருகே அப்படி வேர்த்துக்கொட்டியது என்றால் நம்ப மாட்டார்கள். ஏரியை கண்டு திரும்பும் வரை மூச்சு விட்டதற்குச் செய்த உழைப்பே அதிகம். அந்த இடத்தின் வெறிச்சிட்ட தன்மை அது மனிதர்களின் நிலமல்ல, தெய்வங்களுக்குரியது என்று எண்ணச்செய்தது
பனாமிக் வெந்நீர் ஊற்று சமீபகாலம் வரை வெறும் குழியாக இருந்தது. இப்போது குளியலறைபோல கட்டிவிட்டார்கள். நடுவே குளியல் தொட்டி போல பெரியதாக கான்கிரீட் போட்டு டைல்ஸ் போட்டு கட்டியிருக்கிறார்கள்.
உண்மையில் அங்கே தண்ணீர் சூடானது அல்ல. ஒரு குழாய் வழியாக பனிக்கட்டிபோன்ற குளிர்நீர்தான் தொட்டிக்கு வருகிறது. தொட்டிக்கு அடியில் எரிமலையின் கந்தகச்சூடு. ஆகவே அதில் விழும் குளிர்நீர் கொதிக்க ஆரம்பிக்கிறது. நிறைய நீர்விட்டால் இறங்கிக் குளிக்கும்பதத்தில் இருக்கும். கிருஷ்ணராஜ் குளிக்கவில்லை. மற்றவர்கள் இறங்கி ஒருமணிநேரம் குளித்தோம். வேறு பயணிகள் என எவரும் இல்லை. கந்தகத்தண்ணீர்.ஆனால் பெரிய அளவில் கந்தகநாற்றம் இல்லை. அந்த குளிருக்கும் இனிய நீராடல் அது.
மீண்டும் நெடுந்தூரம் சென்று லேயை அன்று மாலைக்குள் அடையவேண்டும். ஆகவே கிளம்பினோம். பாலைத்துண்டை பார்த்துக்கொண்டு சென்றேன். ஒருகட்டத்தில் அது மறைந்தது. ஒரு தேர்ந்த மந்திரவாதி சட்டைப்பைக்குள் இருந்து நம்பமுடியாத ஒருபொருளை எடுத்துக்காட்டிவிட்டு உள்ளே வைப்பதைப்போல இமயம் பாலைவனத்தைக் காட்டி மறைத்துவிட்டது. அதன் பைக்குள் இன்னும் என்னென்னவோ இருக்கக்கூடும். துருவப்பகுதிகள் பூமத்தியரேகைப்பகுதிகள், ஏன் கடல்கள்கூட!
[சிந்தனை]
செல்லும் வழியில் திஸ்கித் மடாலயத்தை இறங்கிப்பார்த்தோம். திஸ்கித் ஊரிலேயே சாப்பிட்டுவிட்டு திஸ்கித் மடாலயத்திற்கு ஏறிச்சென்றோம். அங்கே ஐந்து வயதுமுதல் பதினைந்து வயதுவரை வெவ்வேறு பிராயங்களைச் சேர்ந்த இளம் பிட்சுக்கள் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள். செங்காவி உடை மொட்டைத்தலை சிரிக்கும் சிறிய கண்கள் பழுப்புநிறமான பற்கள். எல்லாரும் சேர்ந்து எங்களை நோக்கி ‘ஜூலே’ என்று கத்தினார்கள். லடாக்கியமொழியில் அதற்கு ’வருக’ என்று அர்த்தம்
சில வயோதிக பிட்சுக்கள் நிழலில் அமர்ந்திருந்தனர். ஆசிரியர்களாக இருக்கலாம். ஒரு மூத்த பிட்சு எங்களிடம் எங்கிருந்து வருகிறோம் என்று கேட்டார். கன்யாகுமரி அவர்களுக்கு தெரிந்த ஒரே தென்னிந்திய ஊர் என்று தெரிந்தது. ஜூலே என்று வரவேற்று ஆசியளித்தார்
மடாலயம் மிகவும் புதியதாகச் செப்பனிடப்பட்டிருந்தது. பெரிய முற்றம் தரையோடு ஒட்டப்பட்டு சுத்தமாக இருந்தது. மேலேறிச்செல்லும்போது அந்தப்பையன்களின் உற்சாகத்தை நினைத்துக்கொண்டேன். அவர்களின் ஆசிரியர்களும் அங்கேதான் இருந்தனர். ஆனால் எந்தக்கெடுபிடியும் இல்லை. நம் பள்ளி மாணவர்களின் தோள்களில் தெரியும் கண்ணுக்குத்தெரியாத எடை அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை
[ஆச்சரியம்]
மடாலயத்தின் உட்பகுதி தொன்மையான கட்டிடம் என்று தெரிந்தது. மையமாக புத்தர். இருபக்கமும் பத்மசம்பவர் காலபூதம். டோங்கா ஓவியத்திரைகளும் இருக்கைகளும் எல்லாம் புத்தம்புதியதாக இருந்தன. அந்த புத்தம் புதியதன்மை இன்னொரு வகையான அனுபவத்தை அளித்தது.
பழைமையான மடாலயங்கள் காலத்தின் மறுபக்கம் இருப்பவை போலத் தோன்றின. இந்த மடாலயம் வாழும் இடமாகத் தெரிந்தது. நூற்றாண்டுகள் பழைமையான ஓர் அமைப்பு அதேபோல இன்றும் நீடிப்பதைக் காண்கையில் ஒரு நிறைவு உருவாகிறது.
வெளியே வந்து கிளம்பும்போது ஆட்டம் முடிந்திருந்தது. தோல்வியடைந்த பிட்சுக்கள் தலையை தொங்கப்போட்டு சிதறி அமர்ந்திருக்க வென்ற குட்டிப்பிட்சுக்கள் கூட்டமாக நின்று எங்களைநோக்கி ‘ஜீத் ஹே’ என்று கூச்சலிட்டனர். தண்ணீர்புட்டிக்குள் நீரை வைத்து அமுக்கி ஷாம்பேன் போலச் சிதறடித்து சிரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சோழிசோழியாக பற்கள்.
மீண்டும் நீண்ட பயணம். உருளைக்கற்களின் பாதையில் மலையின் விளிம்பில் ஒட்டிக்கொண்டு ஊர்ந்து ஊர்ந்து மேலேறினோம். கார்டங்லா கணவாய் வரை சென்றபோது இருட்ட ஆரம்பித்திருந்தது. அங்கே கடைகள் பூட்டியிருந்தன. ராணுவ டீக்கடையில் நேபாள வம்சத்து ராணுவவீரரான ரானா மட்டும் இருந்தார். மீண்டும் கொதிக்கும் டீ. மோமோக்கள் இல்லை. மீண்டும் ஒரு டீயை குடித்து ஈடுகட்டிக்கொண்டோம்.
அவ்வேளையில் காடங்லா கணவாயில் வண்டிகளோ மோட்டார்சைக்கிள்காரர்களோ இல்லை. அருகே பனிபடர்ந்த மலை மட்டும் வானத்தில் வெண்ணிறப்படலமாக நின்றிருந்தது. ஒரு பறக்கும்கம்பளம் போல அந்த பனிச்சரிவு தெரிந்தது. அல்லது வானுக்குச் செல்ல போடப்பட்ட படிக்கட்டு. வானம் என்னும் பசுவின் அகிடு. கீழே இருந்த மலை இருட்டி மறைய மறைய பனிப்படலம் வானில் தொங்கிக்கிடப்பதாகப் பட்டது
[சலிப்பு]
கார்டங்லாவிலிருந்து லே வரை மலையில் சுழன்றிறங்கும் இடுங்கலான பாதை. பயமாகத்தான் இருந்தது. ஆனால் இருட்டில் பயணம்செய்வதுதான் நல்லது என்றார்கள். ஓட்டுநருக்கும்கூட அதுவே வசதி. முகவிளக்கின் ஒளியில் தெரியும் நிலத்தை மட்டுமே கவனித்து ஓட்டினால் போதும். கையாளமுடியாத கவலைகள் இல்லை. ஆகவே சிக்கல்களும் இல்லை. எம்.எஸ்.கல்யாணசுந்தரம் அவரது நூல்களில் ஒன்றில் இதை ஒரு பெரிய வாழ்க்கைத்தரிசனமாகச் சொல்லியிருக்கிறார்