நூறுநிலங்களின் மலை – 7

லே நகரிலிருந்து நுப்ரா சமவெளிக்குச் செல்லவேண்டும். லே நகரின் விதிகளில் ஒன்று வேறு ஓட்டுநர்களை அவர்கள் உள்மலைப்பயணத்துக்கு அனுமதிப்பதில்லை என்பது. ஒருநாளுக்கு இருபதாயிரம் ரூபாய் கட்டணம் கேட்டார்கள். சத்பாலிடம் சொன்னோம். அந்த ஓட்டுநர்களே ஓட்டுவதுதான் பாதுகாப்பு என்றார். வேறு வழியில்லாமல் ஓர் ஓட்டுநரை அமைத்துக்கொண்டோம்.

மங்கோலிய இனத்தைச்சேர்ந்த ஓட்டுநர் அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவர். ஓட்டுநர் வேலை அங்கே மிக கௌரவமான வேலை. வண்டியும் சொந்தமாக வைத்திருந்தார். கையில் ஒரு உறை போட்டிருந்தார். புலியின் கை போல இருக்கும். தூரத்திலிருந்து பார்த்தால் அப்படி பச்சைகுத்தியிருக்கிறார் என்ற எண்ணம் வரும்

அவர் கொண்டுவந்த வண்டியும் ஸைலோதான். நாங்கள் வந்த வண்டியை அங்கேயே விட்டுவிட்டு அந்த ஓட்டுநரையும் சகபயணியாகக் கூட்டிக்கொண்டோம். அதிகாலையிலேயே கிளம்பிவிட்டோம்.நுப்ரா சமவெளி லே நகரிலிருந்து நூற்றைம்பது கிலோமீட்டர் வடக்காக மேலும் ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. லடாக் மொழியில் லும்ரா [மலர்வெளி] என்று இச்சமவெளி அழைக்கப்படுகிறது.

நுப்ரா ஆறுக்கு சியாச்சின் ஆறு என்றும் பெயருண்டு. சியாச்சின் பனிப்பாளம்தான் இந்தியாவின் பனிப்பாளங்களில் பழையது. பல்லாயிரம் வருடங்களுக்கு முன் உருவாகி இன்னும் அப்படியே நீடிக்கக்கூடியது அது. நுப்ரா ஆறு சியாச்சின் பனிப்பாளத்தில் இருந்து உருகி வழிந்து வருகிறது. அது ஷ்யோக் ஆற்றைச் சந்திக்கும் இடம்தான் நுப்ரா சமவெளி.

நுப்ரா சிந்துவில் சென்று கலக்கிறது. கிட்டத்தட்ட பத்தாயிரம் அடி உயரமுள்ள நுப்ரா சமவெளி உலகின் உயரமான வாழ்நிலங்களில் ஒன்று. லடாக்கில் ஒருவர் பார்த்தாகவேண்டிய அபூர்வமான இடமும் அதுவே. செல்வதற்கு அரிய இடமும் கூட.

[இதில் ஒரு கோடு சாலை]

கார்டங் [ Khardung ] கணவாய் வழியாக நுப்ரா சமவெளிக்குள் நுழையவேண்டும். ஷ்யோக் மற்றும் நுப்ரா சமவெளிக்குள் நுழைவதற்கான மலையுச்சி கணவாயான ‘கார்டெங் லா’ உலகிலேயே உயரமான வண்டிச்சாலை என்று அங்கே எழுதிவைத்திருக்கிறார்கள். அபாயகரமான வளைவுகள் இருந்தாலும் சன்ஸ்கர் சாலையை பார்த்துவிட்ட காரணத்தால் அந்த அளவுக்கு அச்சம் எழவில்லை. மேலே செல்லச்செல்ல குளிர் ஏறி ஏறி வந்தது.

மலை உச்சியில் சாலையோரமாக அந்த இடத்தின் உயரம் 5,602 மீட்டர் என்றும் [18,379 அடி] அதுதான் Highest Motorable Road In the World என்றும் சுற்றுலாத்துறையால் எழுதி வைக்கப்பட்ட பலகை உள்ளது. அங்கே வண்டியை நிறுத்தி இறங்கிக்கொண்டோம். நல்ல உச்சி வெயில். ஆனால் இறங்கியதும் குளிர்ந்த நீரில் குதித்ததுபோல இருந்தது. கைகால்கள் உதற ஆரம்பித்தன.

அஜிதனின் ஸ்வெட்டர் போதவில்லை. அங்கே காஷ்மீர் அரசின் சுற்றுலாத்துறையினரின் கடை இருந்தது. அங்கே சென்று ஒரு பிளாஸ்டிக் விண்ட்சீட்டர் வாங்கிக்கொண்டேன். அதில் அந்த இடம் உலகின் மிக உயரமான மலைப்பாதை என்று எழுதப்பட்டிருந்தது.ஒரு நினைவுச்சின்னமும் ஆயிற்று

அந்த உச்சிக்குச் சமானமான உயரத்தில் கிழக்காக ஒரு பெரிய பனிமலை. கண்கூசும் வெளிச்சத்துடன் பரந்து கிடந்தது. மலைவிளிம்பில் நின்று அதைப்பார்க்கையில் ஒரு பெரிய வெள்ளை விளக்கை நேருக்குநேர் பார்ப்பது போல இருந்தது. அத்தனை ஒளியுள்ள ஒன்று கடுங்குளிருடன் இருக்குமென்பது நம் தென்னிந்தியப் பிரக்ஞையை அதிரச்செய்யக்கூடியது.

ஓரளவுக்கு நல்ல சாலை என்பதனால் லடாக்கிலிருந்து மோட்டார்சைக்கிள் பயணங்கள் செய்பவர்கள் கார்டங்க் லா வரை வருகிறார்கள். நாங்கள் சென்றபோதுகூட ஒரு குழு வந்து நின்று தலைக்கவசங்களைக் கழற்றிவிட்டு புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதைக் கண்டோம். அதற்கு அப்பால் பெரும்பாலும் மோட்டார் சைக்கிள்கள் செல்வதில்லை.

கார்டெங் லா உச்சியில் இந்திய ராணுவத்தின் ஒரு கடை இருக்கிறது. அங்கே எந்நேரமும் சுடச்சுட டீ இலவசம். அரிசிமாவுக்குள் காய்கறிகள் வைத்தும் நம்மூர் இலையப்பம் போல ஆவியில் வேகவைக்கப்படும் மோமோ என்னும் ஒருவகை அப்பம் அங்கே சூடாகக் கிடைத்தது. அதையே காலை உணவாகச் சாப்பிட்டோம். சுவையாக இருந்தது.

கடுமையான மூச்சுத்திணறல் இருந்தமையால் காஷ்மீரி கஹ்வா கிடைக்குமா என்று கேட்டோம். கிடைக்கவில்லை.அங்கே இருந்த இந்திய ராணுவ வீரர் ரானா இன்முகத்துடன் வரவேற்று டீ கொடுத்தார். அவரது சொந்த ஊர் நேபாளம் என்றார். எப்படி இந்திய ராணுவவீரராக ஆனார் என்று தெரியவில்லை

அபாயகரமான மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ள இதய-நுரையீரல் நோயாளிகளுக்காக அங்கே ஆக்ஸிஜன் மையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. ஒரு சுவாரசியத்துக்காகப் போய் மூச்சிழுத்துப்பார்ப்போமே என்று பார்த்தோம். பூட்டிக்கிடந்தது. மூச்சுத்திணறல் இருந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் இளவெயிலின் இனிமையை அங்கே அனுபவிப்பதுபோல எங்கும் உணரமுடியாது

கார்டெங்லா அக்டோபரில் பொதுமக்களுக்கு மூடப்பட்டுவிடும். அதன்பின் ஜூனில்தான் திறக்கப்படும். தொடர்ச்சியாக இங்கே நிலச்சரிவுகள் நிகழ்ந்துவருகின்றன. வருடந்தோறும் விபத்தில் பயணிகள் இறப்பதும் நடக்கிறது. வரும்வருடங்களில் பனிமலைப்பயணிகளுக்காக கர்டெங்லாவை குளிர்காலத்திலும் திறப்பதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன

நாங்கள் கார்டெங்லாவைத் தாண்டி நுப்ரா பள்ளத்தாக்கை நோக்கிச் செல்ல ஆரம்பித்தோம். நுப்ரா நான்குபக்கமும் மலைகளால்சூழப்பட்ட ஓரு மேட்டு நிலம். மலைகளின் இடுக்கு வழியாக நுப்ரா ஆறு அறுத்துப்பீரிட்டு வெளிவந்த மலைவெடிப்புதான் உள்ளே செல்வதற்கான ஒரே வழி.

நுப்ரா செல்வதற்கான அனுமதிகள் உள்ளூர்நிர்வாகம் மற்றும் வனத்துறையிடமிருந்து பெறவேண்டும். அதற்கு வழக்கமாக இருநாட்கள் ஆகும். நாங்கள் சத்பால் சிங்கிடமிருந்து அதைப்பெற்றுக்கொண்டோம். மலையிறங்கி நுப்ராவின் விளிம்பை அடைந்தோம். அதைப்பார்த்துக்கொண்டே சென்றோம். மலையிடுக்குகளிலிருந்து குட்டி ஆறுகள் துள்ளிச்சரிந்து வந்து நுப்ராவை கட்டிக்கொண்டன.

நுப்ரா சமவெளியின் தலைநகரம் என்று திஸ்கித் என்னும் ஊர் சொல்லப்படுகிறது. நுப்ரா சமவெளியில் மிகமிகக் குறைவாகவே மக்கள் வாழ்கிறார்ர்கள். பெரும்பாலானவர்கள் குளிர்காலத்தில் மலையிறங்கிச்சென்றுவிடக்கூடிய அலையும் மேய்ப்பர்கள். திஸ்கித் ஒரு தொன்மையான பௌத்த மடாலயம். அங்கே எப்போதும் பிட்சுக்கள் இருப்பார்கள்.ஆகவே அதுவே நுப்ரா சமவெளியின் மையமாக ஆகிவிட்டது

நுப்ரா சமவெளிக்கான பாதையும் ஒரு திகில்பாதையாகவே இருந்தது. மலைகளில் சுற்றிச்சென்ற மண்சாலை பெண்களின் அலங்காரத்துப்பட்டா போல நழுவிநழுவிச்சரிந்துகொண்டிருந்தது. பக்கவாட்டு பள்ளத்தைப்பார்க்காமல் தத்துவ, அரசியல், அழகியல் சிந்தனைகளில் ஈடுபட்டால் நிம்மதியாகச் சென்று சேரமுடியும்.நுப்ரா செல்லும் பயணம் ஒரு முழுநாளும் நீடித்தது. பயணம் என்பதைவிட மலைத்தோற்றங்களினாலான கலைக்கண்காட்சி வழியாக மெல்ல மெல்ல நகர்வது என்று அதைச் சொல்லலாம்.

இப்பகுதியின் நிலம் அதுவரை பார்த்ததிலிருந்து முழுமையாகவே வேறுபட்டிருந்தது. இமயத்தில் வடக்காகப்போகப்போக மழைகுறையும், விளைவாக நிலம் மாறுபடும். காஷ்மீர் ஒரு மலையுச்சிப் பசுமைநிலம். கார்கில் வரும்போது நிலம் வறண்டு பாறைவெளியாக ஆகியது. லே நெருங்கியபோது புழுதிமலைகள். இங்கே கூழாங்கல் மலைகள். அப்பகுதியை ஆப்கானிஸ்தானிய நிலம் என்று சொன்னால் எவருக்கும் ஐயமிருக்காது.

மேலும் செல்லச்செல்ல செர்ஜியோ லியோனின் திரைப்படங்களில் வரக்கூடிய வறண்ட மெக்ஸிகோ பாலைநிலம்போலவே தோன்ற ஆரம்பித்தது சூழல். மொட்டைக்குன்றுகள். காற்றில் அரித்து விசித்திரவடிவுடன் நின்றிருந்த செம்மண் பாறைகள். பிளந்தும் வெடித்தும் நின்ற சேற்றுப்படிவபாறைகள். காற்று உருவாக்கிய குகைகள். நிலம் உருமாறிக்கொண்டே இருந்தது

பின்பு இன்னொருவகை நிலம். உயர்ந்த கூம்புப்பாறைகள். நடுவே பொங்கி வழிந்திருந்த மண்மணல்கூம்பாரங்கள் பச்சை நிறமாக இருந்தன. புல்பச்சை அல்ல, மின்னும் களிம்புப்பச்சை. கீழே சாலையோரம் உருண்டுவந்து கிடந்த சில பெரும்பாறைகளை நோக்கியபோது காரணம் பிடிகிடைத்தது. அவை பச்சைநிறமான பாறைகள். Chlorite வகைப்பாறைகள் அவை. அவை பனியால் உடைத்து நொறுக்கப்படுவதனால் வரும் பச்சை நிற மணல். சற்றுநேரத்தில் அந்தப்பொடிமணலின் முந்தானைச்சரிவு செந்நிறமாக தெரிய ஆரம்பித்தது. செந்நிறப்பாறைகளினால்.

சில இடங்களில் வெண்ணிறமான மணல்மலைகள் காற்றாலும் மண்பொழிவாலும் வரிவரியாகச் சீவப்பட்டவைபோல தோன்றின. தொலைவிலிருந்து பார்க்கையில் குளிப்பாட்டப்பட்டு ஈரம் சொட்ட வந்து நிற்கும் பாமரேனியன் நாய் போல தோற்றமளித்தன. வடிவமின்மை என்பது நம் அந்தக்கரணத்தை திகைக்கச்செய்கிறதுபோலும். அறிந்த வடிவங்கள் அனைத்தையும் அள்ளியள்ளிப்போட்டு அந்த அகழியை நிறைத்துக்கொள்ள முயல்கிறோம் போலும்.

ஆனால் இலக்கியத்தின் பணியே அதுதானே? சொல்லமுடியாத ஒன்றை சொல்வது. மொழிக்கு அப்பால் உள்ள ஒன்றை நோக்கி மொழியை முடிந்தவரை கொண்டு செல்வது. முடியாமல் மொழி திரும்பிவரும் இடமே எப்போதும் மொழியனுபவத்தின் உச்சமென அறியப்படுகிறது. ஏனென்றால் கற்பனை மொழியின் அந்த உச்சி விளிம்பிலிருந்து மேலே எம்பிச்சென்றுவிடுகிறது.

சாலை இறங்கிக்கொண்டே இருந்தது. மெல்லமெல்ல குளிர் குறைந்து உடலில் வெம்மை ஓட ஆரம்பித்தது. உண்மையில் குளிர் நன்றாகவே இருந்தது. ஆனால் மலையுச்சியைவிட குறைவு என்பதே வெம்மையாக உணரச்செய்தது

நுப்ரா சமவெளி வரலாறு முழுக்க சுதந்திரமான நிலமாகவே இருந்துள்ளது, காரணம் இந்தப்பகுதிக்குள் நுழைவது மிகக் கடினம் என்பதுதான். ஆனால் திபெத் மற்றும் லடாக்கின் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக நுப்ரா சமவெளியை கைப்பற்ற முயன்றபடிதான் இருந்துள்ளனர். ஆனால் அதிகபட்சம் நுப்ரா சமவெளியின் சிறுமன்னரிடமிருந்து கப்பம் பெறுவதை மட்டுமே அவர்களால் செய்யமுடிந்திருக்கிறது.

நுப்ராசமவெளியின் மக்கள் பால்ட்டி மொழி பேசக்கூடியவர்கள். நம் காதுகளுக்கு அது திபெத்திய மொழியாகவே ஒலிக்கிறது.பா என்ற ஒலி அதிகம் காதில் விழுவதாக ஒரு பிரமை. பெரும்பாலும் பௌத்தர்கள். மிகச்சிறுபான்மையினராக ஷியா முஸ்லீம்கள் உள்ளனர். மாடுமேய்த்துக்கொண்டு அலைவதுதான் சமீபகாலம்வரை இவர்களின் தொழில். இப்போது சுற்றுலாவை தொழிலாகச் சொல்லலாம்.


[நுப்ரா சமவெளி முதல் தோற்றம்]

வரலாற்றின்படி பதிநான்காம்நூற்றாண்டில் லடாக்கை மன்னர் கிரக்ஸ்பா பம் லே [Grags-pa-‘bum-lde ] ஆண்டிருக்கிறார். அவரது தம்பி நுப்ராசமவெளியை வெல்ல முயல அதை நுப்ராவின் இனக்குழு அரசரான நிங் மா கிரக்ஸ்பா [Nyig-ma-grags-pa] வென்றிருக்கிறார். நிங் மா மன்னர்தான் நுப்ரா சமவெளியின் அடையாளமாக உள்ள திஸ்கித் கோம்பா மடாலயத்தைக் கட்டுவதற்கான நிதியுதவியைச் செய்தார் என்று வரலாறு குறிப்பிடுகிறது.

மாலையில் திஸ்கித் மடாலயத்துக்குச் சென்று சேர்ந்தோம். சென்ற சிலவருடங்களாக இங்கே சுற்றுலாவை மேம்படுத்த அரசு முயன்றுவருகிறது. மேலும் தலாய் லாமா அடைந்துள்ள உலகப்புகழ் காரணமாக திபெத்திய பௌத்தமும் வளர்ந்து வருகிறது. பெரும்பாலான லடாக்கிய மடாலயங்கள் நல்ல நிலையில் உள்ளன. நன்றாக பேணப்படுகின்றன. ஏராளமான மாணவர்கள் மதக்கல்வி பெறுகிறார்கள். சன்ஸ்கர் சமவெளியில் உள்ள ரங்துன் போன்ற சில தொலைதூர மடாலயங்கள் மட்டுமே விதிவிலக்கு

பெரும்பாலான லடாக்பகுதி மடாலயங்கள் போலவே திஸ்கித் மடாலயமும் வானிலிருந்து கீழிறங்கும் பெரும் படிக்கட்டு போலிருந்தது. உச்சிக்குன்றில் மடாலயத்தின் மையக்கோயிலைக் கட்டிவிடுகிறார்கள். பின்னர் அடிவாரம் வரை அதன் விஹாரக் கட்டிடங்களைக் கட்டிக்கொண்டே இருக்கிறார்கள். மலையே கட்டிடமாக ஆகிவிடுகிறது

[திஸ்கித் மடாலயம்]

திஸ்கித் கோம்பா கெலுக்பா பிரிவினரின் மடாலயமாகும். சோங் கபா [Tsong Khapa] என்ற பௌத்த ஞானியால் பதிநான்காம்நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது கெலுக்பா பௌத்த ஞானப்பிரிவு. அவரது நேரடி மாணவரான ஸாங்க்போ [Changzem Tserab Zangpo] இந்த மடாலயத்தை நிறுவினார்.

பொடோங் எனப்படும் தலைமை லாமாவின் அலுவலகம் கீழே உள்ளது. அங்கே ஒரு அருங்காட்சியகமும் உள்ளது. ஆனால் நாங்கள் செல்லும்போது அவை பூட்டிக்கிடந்தன. மலைக்கு மேலே லாசங் கோயில் உள்ளது. அங்கே சோங் காப்பா என்ற ஞானியின் சிலை உள்ளது என்றார்கள். ஆனால் அதுவரை ஏறிச்செல்ல எங்களுக்கு நேரமிருக்கவில்லை.

[மலைச்சிகரச்சிலை]

திஸ்கித் மடாலயம் ஷ்யோக் ஆற்றின் கரையில் ஒரு பெரிய குன்றின் மீது சமவெளியைப்பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளது. நுப்ரா ஆறு இங்குதான் ஷ்யோக் ஆறுடன் கலக்கிறது. தூரத்திலேயே குன்றின் உச்சியில் இருந்த பெரும் சிலையை பார்த்துவிட்டோம். பின்னர் இரு ஆறுகளும் கலக்கும் ஆழத்தை. அங்கே ஒளி ஒளியுடன் இணைவதுபோல நீர்வளைவுகள் முயங்குவதை கண்டோம்.

நாங்கள் மேலும் பலகிலோமீட்டர் சென்று நுப்ரா சமவெளியின் எல்லையில் உள்ள ஹண்டர் என்ற ஊரில்தான் இரவு தங்கவேண்டும். ஆகவே திஸ்கித் மடாலயத்தை மறுநாள் திரும்பிவரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். திஸ்கித் மடாலயத்தின் அருகே இணையாக உள்ள ஒரு குன்றின் மீது 32 மீட்டர் உயரமுள்ள மைத்ரேய புத்தரின் புதிய கான்கிரீட் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதை மட்டும் ஏறிப்பார்த்துவிடுவது என்று திட்டமிட்டோம்.

படிகளில் ஏறி மேலே சென்றோம். இந்தச்சிலையின் பீடம் ஒரு பெரிய கட்டிடம். அதற்குள் பௌத்த ஆலயம் உள்ளது. சென்ற 2006இல்தான் இந்த சிலை அமைக்கும் வேலை ஆரம்பமானதாம். இச்சிலை திஸ்கித் கிராமத்தை அபாயங்களில் இருந்து பாதுக்காக்கும் பொருட்டு கட்டப்பட்டது என்கிறார்கள்.

கெலுக்பா பௌத்தப்பிரிவின் தலைவரான காண்டென் திபா [Ganden Thipa ] எட்டுகிலோ தங்கத்தை இச்சிலையை அமைப்பதற்காக அளித்தார் என்கிறார்கள். கோயிலுக்குள் அவரும் தலாய் லாமாவும் சிரித்தபடி தழுவிக்கொண்டிருக்கும் வண்ணப்புகைப்படத்தைப் பார்த்தோம்

சிலை பெரிதாக இருந்தாலும் அழகாக இருந்தது. ஒரு பெரும் மரச்சிற்பம் அது என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் காலடிக்குக் கீழே மிகப்பலவீனமான ஒரு பொம்மை போல திக்சித் கிராமத்தின் தற்காலிகப்பசுமை.

மைத்ரேயர் அனைத்தையும் ஒன்றாக்கும் முத்திரையும் வைரமணிமுடியுமாக தாமரை மீது அமர்ந்திருந்தார். குளிர்ந்த காற்று சமவெளியிலிருந்து வந்துகொண்டிருந்தது. கிராமத்தின் தொலைதூர ஒலிகள். வானம் வெளிச்சமாக இருந்தது. சுற்றிலும் அலையலையாகக் கிடந்த மலைகள் ஒளியை வாங்கி திருப்பி வான் நோக்கி பிரதிபலித்தன என்று பட்டது.

கோயிலுக்குள் மஞ்சள் ஆடை தரித்த சாக்கியமுனி புத்தரின் பெரிய சிலை. பக்கவாட்டில் பத்மசம்பவரின் சிலை உக்கிரமான கண்களுடன் உற்றுப்பார்த்தது. வஜ்ராயன குருக்களை மந்திர உபதேசம் செய்யும் பாவனையில் அமைப்பதே வழக்கம். அவர்கள் நம் கண்களை உறுத்துநோக்கிப் பேசமுயல்வதுபோலிருக்கும். பத்மசம்பவர் எப்போதும் ஒரு படைவீரரைப்போலத்தான் சித்தரிக்கப்படுகிறார்.

கீழிறங்கி ஹண்டர் நோக்கிச் சென்றோம். நுப்ரா சமவெளியில் இன்று முக்கியமான ஊர் என்பது ஹண்டர்தான். நுப்ரா சமவெளியின் மறு எல்லை என்று அதைச் சொல்லலாம். ஹண்டர் செல்லும் வழியில் நிலக்காட்சி பிரமிப்பூட்டும்படி மாறிக்கொண்டிருந்தது. அதை ஒரு இந்தியாவின் மலையுச்சியில் உள்ள ஓர் இடம் என்று சொன்னால் எவரும் நம்ப முடியாது. அது ஒரு பாலைவனம். நான்குபக்கமும் மலைகளால் சூழப்பட்ட மணல்வெளி. மணல்மேடுகள் அலையலையாக தொலைதூரம் வரைப் பரவியிருந்தன. நடுவே சில இடங்களில் உயரமில்லாத குத்துச்செடிகள். மணல் ராஜஸ்தான்போல செம்மைகலந்ததாக இல்லாமல் நல்ல தூய வெண்ணிறமாக இருந்தது.

சாலை மலையை ஒட்டி சமவெளியின் விளிம்பில் வளைவாகப் போடப்பட்டிருந்தது. அதில் செல்லும்போது நுப்ரா பாலைநிலம் மெல்ல சுழல்வதாகப் பிரமை எழுந்தது. மலைகள் அதன்மேல் அமர்ந்து சுற்றிவருவதுபோல. மீண்டும் மீண்டும் மனதை நம்பவைக்க வேண்டியிருந்தது, அது இமயமலையின் உச்சி என. வெண்மணல் மேடுகள் வானிலிருந்து விழுந்துப் படிந்த பட்டுச்சீலை போலத் தெரிந்தன. இல்லை அவை பனியா என்று மீண்டும் அகம் அடம்பிடித்தது. மணலேதான். மலையிடுக்குகளிலிருந்து காற்று வீசும் இடங்களில் மணல் புகைபோல எழுந்து பறந்துகொண்டிருந்தது. சிலசமயம் அது மணலால் ஆன ஓர் அருவி என நினைக்கச்செய்தது.

இமயம் என்பது ஒரு மலை என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். பள்ளிப்பாடங்கள் அளிக்கும் சித்திரம். மொத்த இந்தியாவிலும் உள்ள நிலக்காட்சிகளை விட இமயமலையில் உள்ள நிலக்காட்சிகள் அதிகம். பச்சை வயல் சமவெளிகள், மொட்டை மலைகள் சூழ்ந்த வெறும்வெளிகள், பனிப்பாலைகள், வெண்மணல் மேடுகள், ஆற்றுவெளிகள், ….

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அரேபியா சுவிட்சர்லாந்து, லண்டன், அமெரிக்கா என எங்கே எடுத்த சினிமாவுக்கும் நீட்சியை இமயத்திலேயே எடுத்துவிடலாம் என்று சினிமாவுடன் தொடர்புடையவன் என்ற கோணத்தில் சிந்தித்தேன். நாங்கள் சென்றுகொண்டிருப்பது அரேபியா என்று சொன்னால் எவரும் நம்புவார்கள்.

ஹண்டருக்குச் சென்று சேர்ந்தோம். மிகச்சமீபமாக உருவாகிவந்திருக்கும் ஓர் ஊர். ஊரை உருவாக்கியது இந்திய ராணுவம் என நன்றாகவே தெரிந்தது. ஊரின் மையம் என்பது மிகப்பெரிய ராணுவநிலையம்தான். முள்வேலிபோட்டு மலையடிவாரங்கள் வளைக்கப்பட்டிருந்தன. ராணுவத்துக்குரிய உயரமற்ற , மண்ணில் மறைந்து தெரியக்கூடிய, கட்டிடங்கள். ஆனால் ராணுவத்தினர் அதிகம் கண்ணில் படவில்லை. அங்கே ராணுவத்தினர் எவரும் குடும்பத்துடன் பணியாற்றமுடியாது.

பயணிகளை உத்தேசித்து இந்திய அரசின் சுற்றுலாத்துறையின் தாராளமான கடல்வசதியால் கட்டப்பட்ட விடுதிகள் சில இருந்தன. மொத்த ஹண்டர் ஊரும் ஒரு கோடைகாலத் தற்காலிகத் தங்குமிடம்தான். அக்டோபரில் மொத்த ஊரும் முழுமையாகவே கைவிடப்படும். ராணுவத்தினர் மட்டும் இருப்பாகள். திக்சித் மடாலயத்தில் பிட்சுக்களும்.

விடுதிகள் எல்லாமே மிகச் செலவேறியவை என்பது ஓரக்கண்ணால் பார்த்தாலே தெரிந்தது. நாங்கள் செல்லவேண்டிய இடம் வனவிடுதி. அதை ஒருவழியாகக் கண்டுபிடித்தோம். புதிய கட்டிடம். ஆனால் அது பயன்பாட்டில் இருப்பதாகவே தெரியவில்லை. உள்ளே சென்றால் எவரும் இல்லை. பி.எஸ்.என்.எல்லின் செல்பேசி ஓரளவு சமிக்ஞை கொடுத்தது. சத்பால்சிங்கை கூப்பிட்டோம். அவர் அந்த விடுதிப்பொறுப்பாளரைக் கூப்பிட்டுச் சொல்வதாகச் சொன்னார். நாங்கள் திரும்பிச்சென்று ஹண்டரின் கடை ஒன்றில் சாப்பிட்டோம். எனக்கு இரவுணவுக்கு ஆப்பிள் கிடைத்தது. ஆனால் விலை நாகர்கோயிலை விட அதிகம்.

திரும்பிவந்தோம். சத்பால்சிங் விடுதிப்பொறுப்பாளரின் மேலதிகாரியை அழைத்திருக்கிறார். அவர் நுப்ரா சமவெளியிலேயே இல்லை. விடுதிப்பொறுப்பாளர் திஸ்கித்தில் இருக்கிறார். அவர் இங்கே வரும் வழக்கமே இல்லை. பொதுவாக ஹண்டருக்கு அரசதிகாரிகள் எவருமே வருவதில்லை. அலுவலர்கள் வந்து பணியாற்றுவதும் இல்லை. சத்பால்சிங் மன்னிப்பு கோரினார்

திரும்பி விடுதி தேட ஆரம்பித்தோம். ஒரு விடுதியில் இடமில்லை. இன்னொரு விடுதியில் எல்லா அறைகளும் காலியாக இருந்தன. ஹண்டரில் விடுதிகள் கட்டப்பட்டுள்ளனவே ஒழிய பயணிகள் வருகை மிகமிகக் குறைவு. இந்தியர்கள் வருவதில்லை. வெளிநாட்டவர் இன்னும் வர ஆரம்பிக்கவில்லை. சமீபகாலமாகத்தான் சுற்றுலாத்துறை இணையம்மூலம் வெளிநாட்டவரைக் கவர ஆரம்பித்திருக்கிறது.

ஹண்டரின் விடுதியில் தங்கினோம். விடுதிக்குள்ளும் வெளியிலும் விசித்திரமான ஒரு தழைமணம். வெளியே ஆப்பிள் மரங்கள் காய்க்க ஆரம்பித்திருந்த வாசனை அது. மாலையாகிவிட்டதனால் குளிர் நன்றாகவே இருந்தது. அறைக்குள் சென்றதுமே விழுந்து தூங்கவேண்டுமென்ற எண்ணம்தான் ஏற்பட்டது. ஆனால் மூச்சுத்திணறல் தூங்கவிடுமா என்ற ஐயமும் வந்தது.

ஆழமாக மூச்சிழுத்து விட்டு பிராணயாமம் செய்தேன். அதன்பின் தூங்கினால் சட்டென்று தூக்கம் வந்துவிடும். அதன்பின் எல்லாவற்றையும் தூக்கமே பார்த்துக்கொள்ளும். என் தூக்கத்துக்குள் ஆப்பிள் தோட்டங்கள் மெல்ல முளைத்து பூக்க ஆரம்பித்தன

முந்தைய கட்டுரைஇமயம் இன்னொரு காணொளி
அடுத்த கட்டுரைநித்ய சைதன்ய யதி இணையத்தில்