நூறுநிலங்களின் மலை – 6

முல்பெக் லடாக் செல்லும் சாலையில் உள்ள ஒரு நகரம். அங்கே சாலை ஓரமாக ஒரு பெரிய புத்தர்சிலை உள்ளது. அந்த வழி ஒருகாலத்தில் முக்கியமான வணிகப்பாதையாக இருந்திருக்கிறது. வணிகர்களுக்காக அமைக்கப்பட்ட வழிபாட்டிடம் அது

முல்பெக் மடாலயம் கிபி ஆறாம் நூற்றாண்டில் அமைக்கபப்ட்டது. அதற்கு நூறு வருடங்களுக்கு முன்னரே அங்கே ஒற்றைப்பெரும்பாறையில் மைத்ரேயபுத்தரின் பிரம்மாண்டமான புடைப்புச்சிலை செதுக்கப்பட்டிருந்தது. மடாலயம் அச்சிலையை உள்ளே விட்டு சுற்றிலும் கட்டப்பட்டிருந்தது. முல்பெக்கில் இறங்கியதுமே ஓங்கி நின்றிருந்த புத்த மைத்ரேயரைப்பார்க்க முடிந்தது.

பத்து மீட்டர் உயரமுள்ள முல்பெக் மைத்ரேய புத்தர் லடாக் பகுதியிலுள்ள மைத்ரேய புத்தர் சிலைகளிலேயே பெரியது. சாலையிலேயே மரங்களுக்கு மேலாக புத்தரின் சிரத்தைப்பார்க்கமுடியும். மணிமுடி சூடிய முகம் சீன புத்தர்களுக்குரிய உருண்ட கன்னங்களும் சிறிய கண்களும் கொண்டது

காலை ஒளியில் சிலையின் முகத்தில் புன்னகை நிறைந்திருப்பதுபோலத் தோன்றியது. நாங்கள் செல்லும்போதுதான் ஒரு பிட்சு வந்து மடாலயத்தை திறந்தார். பயணிகள் எவரும் இல்லை. முன்னால் இருந்த டீக்கடையில் அடுப்பு பற்றவைத்துக்கொண்டிருந்தார்கள். பிட்சு முந்தையநாளின் மலர்ச்சரங்களையும் தூபக்குச்சிகளையும் அகற்ற ஆரம்பித்தார்

மடாலயத்துக்குள் நுழைந்தால் புத்தரின் பாதங்களை தரிசிக்கமுடியும். மிகப்பெரிய பாதங்கள் தாமரைப்பீடம் மீது ஊன்றி நின்றன. அந்தக்கட்டைவிரல்களைப்பார்த்தபோது சிரவணபெலகொளாவின் கோமதேஸ்வர் சிலை நினைவுக்கு வந்தது. அதேபோன்ற பாதங்கள். ஆனால் தீர்த்தங்காரர் சிலைகளில் முழங்கால்மூட்டு இத்தனை பெரியதாக இருக்காது. இடுப்பு இன்னும் சிறியதாக இருக்கும்.

அங்கே நின்றபோது மேலே ஒரு மலைச்சிகரத்தைப்பார்ப்பதுபோல புத்தரின் முகத்தைப்பார்க்கமுடிந்தது. நாம் உணரும் தன்னிலையை சுருங்கி மறையவைக்கும் பிரம்மாண்டம். இகவுலக வாழ்க்கைக்குள் இருந்த எவருக்கும் அத்தனைபெரிய சிலைகளை அமைக்கக் கூடாதென்று நினைத்துக்கொண்டேன். துறவும் ஞானமும் மட்டுமே அப்படி மானுடவாழ்க்கைக்குமேலே எழுந்து நிற்கவேண்டும்.

பொதுவாக பெரியசிலைகள் மீது எனக்கு ஓர் ஒவ்வாமை உண்டு. பெரியசிலைகள் தியானநிலையில் மட்டுமே இருக்கவேண்டும். புத்தர், தீர்த்தங்காரர் போல. இந்துச்சிலைகளில் நந்தி பெரிதாக இருக்கும்தோறும் மனதில் மௌனத்தை நிறைக்கிறது. துயிலும் விஷ்ணுவின் சிலையும் பெரிதாக இருக்கலாம். பிள்ளையார் சிலை நம்மைப்பார்ப்பதில்லை. ஆகவே அது ஓரளவுக்குப் பெரிதாக இருக்கலாம்.

பிரம்மாண்டமான காளி, சிவபெருமான் சிலைகள் என் அகத்தை நடுங்கச்செய்கின்றன. பலசமயம் அரைக்கணத்தில் கண்களைத் திருப்பிக்கொண்டு நகர்ந்துவிடுவேன். சமீபமாக கான்கிரீட்டில் கட்டியெழுப்பப்படும் பெரும் சிலைகள் நம் சூழலின் பெரிய மருக்கள் போல மாறிவிட்டிருக்கின்றன

முல்பெக் புத்தரின் முன் நின்றபோது அச்சிலை உருவாக்கும் ஆழ்ந்த அமைதிக்கான காரணம் என்ன என்று புரிந்தது. சிலைக்கு அப்பால் வானம் ஒளிபட்டுத் தெளிந்துகொண்டிருந்தது. மலையடுக்குகள் வானில் இருந்து தனித்துப்பிரிந்து வந்துகொண்டிருந்தன

ஆம்,மலைப்பாறைகளில் எப்போதும் ஓர் அமைதியான தியானநிலை உள்ளது. அந்த அமைதியை அச்சிலையும் தன்னுள் கொண்டுள்ளது. செதுக்கப்பட்டமையால் புத்தர்முகமாக ஆன மலைப் பாறைதான் அது.

முல்பெக் மடாலயம் சிறியது. சுள்ளிக்கூரையும் சிவப்புத்தூண்களும் கொண்டு கட்டப்பட்ட கூழாங்கல் கட்டிடம். நெடுங்கால தூபப்புகை பட்டு கருமைகொண்ட கூரை. பழைமையான டோங்காக்கள் அசைந்தன.தரையில் கால்கள் மிதித்து வழவழப்பான தரை. பௌத்தமடாலயங்களின் மணமாக அந்த மெல்லிய தூபவாசனை ஆகிவிட்டிருக்கிறது

பிட்சு பூசைக்கான பாத்திரங்களை எடுத்துவைக்க ஆரம்பித்தார். நாங்கள் வெளியே வந்து ஒரு டீ சாப்பிட்டபின்பு கிளம்பினோம். அருகே முந்தையநாள் இரவு நண்பர்கள் சாப்பிட்ட சர்தார்ஜி ஓட்டல் இருந்தது. அங்கே காலைச்சிற்றுண்டி. பின்பு நேராக லடாக்கின் தலைநகரமான லே.

லே-லடாக் செல்லும் சாலையின் இருபக்கமும் மலைகள் முற்றிலும் வேறுமாதிரி இருந்தன. அதுவரை பார்த்த மலைகள் எல்லாம் ஒன்று பாறைக்குவியல்கள் அல்லது அரிக்கப்பட்டு விசித்திரவடிவம் கொண்ட பெரும்பாறைகள். மண்ணும் விண்ணும் கொள்ளும் உறவின் ஓயாத களிநடனத்தின் விளைவாக உருவான வடிவப்பெருவெளி

ஆனால் லடாக்சாலையில் வெறும் மண்ணாலான பெரும் மலைக்குவியல்களைப் பார்த்தோம். மரத்தூள் குவித்ததுபோல, காபித்தூளைக் குவித்ததுபோல, சிமின்டைக்குவித்ததுபோல மலைகள். மலைகளின் சரிவில் மெல்லிய மணல்கதுப்பில் காற்று வீசி வீசி உருவாக்கிய அலைவளைவுகள்.

பின்பு மணற்குவியல்கள்போன்ற மலைகள் வர ஆரம்பித்தன. நமீபியாவின் பெரும் மணற்குன்றுகளைத்தான் நினைவுபடுத்தின அவை. ஆனால் இவை பொடிமண் இறுகி உருவானவை. மணல்போல நிலையற்றவை அல்ல. முதலில் மணல்மேல் ஏதோ பூச்சிகள் ஊர்ந்து ஊர்ந்து உருவான தடங்கள் போலத் தோன்றியது. பிறகுதான் அது காற்றின் கால்கள் பட்ட கோலம் என்று தெளிந்தது

லடாக் இமையமலையின் மழைமறைவுப்பகுதி. அங்கே மிகமிக மழை குறைவு. லடாக்கை ஒரு மலையுச்சிப்பாலைநிலம் என்றே சொல்லிவிடமுடியும். தெற்கே கடலில் இருந்து வரும் ஈரப்பதம் கொண்டமேகங்கள் இமயத்தால் தடுக்கப்பட்டு வட இந்தியா முழுக்க மழையாகக் கொட்டுகின்றன. இமயத்தின் அடித்தட்டிலும் பெருமழை பெய்கிறது.

எஞ்சிய ஈரப்பதம் மலையுச்சியில் பனியாக கொட்ட ஆரம்பிக்கிறது. இமயத்தின் வடபகுதியில் ஆர்ட்டிக்கில் இருந்து வரும் குளிர்காற்று வீசுவதனால் மொத்த ஈரப்பதமும் பனியாகி இமயத்திலேயே விழுந்துவிடுகிறது. அதற்கு வடக்கே மழையே பெய்வதில்லை. உலகின் மிக வறண்ட நிலமான கோபி பாலை இப்படித்தான் உருவாகிறது. உண்மையில் லடாக்கிலேயே கோபிபாலைவனம் தொடங்கிவிடுகிறது எனலாம்

மென்மணல் மலைகள் மீது மழைபெய்து ஒரு தோல்படலம் உருவாகியிருந்தது.காற்றுவரிகள் படிந்து அது யானையின் சருமம் போல தோன்றியது. யானைத்தோல் அதன் கால்மடிப்புகளில் சுருங்கியிருப்பதுபோல. பெரிய டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக தூங்கிக்கொண்டிருப்பதுபோன்ற மலைகள். மலைகள் நம்மை சிறியவர்களாக்குகின்றன. மன அளவில் குழந்தைகளும் ஆக்கிவிடுகின்றன.

லடாக் செல்லும் வழியில் ஓர் இடத்தில் ‘காந்தமலை’ என்ற அறிவிப்புப்பலகை உள்ளது. சுற்றுலாத்துறையால் வைக்கப்பட்ட பலகை. அந்த மலை காந்தசக்தி உள்ளது என்றும் அங்கே ஓர் இடத்தில் காரை சமநிலையில் நிறுத்தினால் அதுவே மேடு ஏறும் என்றும் எழுதப்பட்டிருந்தது. அருகே ஒரு சின்னக்கோயில். அதை ‘காந்தம்மன் கோயில்’ என்று விரிவாக்க திட்டமிருக்கலாம். உள்ளே ஒரு நாய்தான் கிடந்தது

காரை நிறுத்தவேண்டிய இடத்தையும் பதிவு செய்திருந்தனர். அதையும் பார்ப்போமே என்று காரை விதவிதமாக நிறுத்திப்பார்த்தோம். கார் நகரவில்லை. பக்கவாட்டில் கூட செலுத்திப்பார்த்தோம். பயனில்லை. எங்களைப்போலவே எல்லாரும் செய்துபார்ப்பார்கள் போல. அந்த இடத்தில் எதிர்திசையில் மலைத்திறப்பு உள்ளது. அங்கிருந்து காற்று வலுவாக வீசும்போது கார் சற்று நகரும்போலும்.

லேநகரை நெருங்கும்போது முதல் ஊர் வந்தது . லாமாயுரு என்ற மடாலயநகரம். ஃபௌது லா என்ற மலைக்கணவாயின் அருகே இந்த ஊர் உள்ளது. இன்று மடாலயமும் சில கடைகளும் அன்றி ஏதுமில்லை. மிகப்பழைய மடாலயம். ஒரு மண்குன்றின்மீது மண்நிறத்திலேயே கட்டப்பட்ட பெரிய கட்டிட அடுக்கு.

கீழே உணவுண்டுவிட்டு மடாலயத்தை ஏறிப்பார்த்தோம். திபெத்திய போன் மரபு பௌத்தத்தின் தலைமையிடமாக இருந்த மடாலயம் இது. இந்தியாவிலிருந்து வந்த திபெத் பௌத்த ஞானியான நரோபா இந்த இடத்தில் இருந்த ஏரி ஒன்றை வற்றச்செய்து இந்த மடாலயத்தை அமைத்தார் என்று அங்குள்ள குறிப்பு சொல்கிறது

லாமாயுரு மடாலயம் கிபி பத்தாம் நூற்றாண்டில் லடாக்கின் மன்னர் ரிஞ்சென் ஸாங்க்போ [Rinchen Zangpo ]வால் விரிவாக்கிக் கட்டப்பட்டது. அவர் 180 மடாலயங்களைக் கட்டினார் என்று தொன்மங்கள் சொல்கின்றன. லடாக்கில் உள்ள பெரும்பாலான மடாலயங்களில் அவரது திருப்பணிகள் உள்ளன

மிகவும் பழைமையான கட்டிடம். இடுங்கலான வழிகள் ரகசியச்சுரங்கப்பாதை போன்று சென்றுகொண்டே இருக்க சன்னல்களே இல்லாத அறைகள். அங்கே துறவிகள் தங்குகிறார்களா இல்லை மாடுகளை பாதுகாப்பதற்கானவையா என்ற ஐயம் எழுந்தது. திபெத் மடாலயங்களுக்குரிய அதே அமைப்பு. தியானசாலை. அதில் புத்தர், மகாகாலர், பத்மசம்பவர் சிலைகள்.

லே நகரத்தை மாலையில் சென்றடைந்தோம். அரங்கசாமியின் நண்பர் வழியாக அங்குள்ள வனத்துறை மேலாளர் சத்பால் அவர்களின் தொடர்பு கிடைத்திருந்தது. அவர் எங்களுக்கு வனவிடுதியில் தங்க ஏற்பாடு செய்திருந்தார். வசதியான மூன்று அறைகள். டீ குடித்தபின் லே நகரைச் சுற்றிப்பார்ப்பதற்காகச் சென்றோம்

லே இன்று ஒரு சுற்றுலா நகரம். ஒருகாலகட்டத்தில் சுற்றியுள்ள மலைக்கிராமங்களின் சந்தையாகவும் பௌத்த மையமாகவும் இருந்தது. சாலைவசதிகள் இந்திய ராணுவத்தால் மேம்படுத்தப்பட மெல்லமெல்ல பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து இன்று நகரின் வருமானமே சுற்றுலாவால்தான் என ஆகிவிட்டிருக்கிறது. லே நகரில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட பௌத்த மடாலயங்கள்தான் முக்கியமான சுற்றுகாக்கவர்ச்சி. மலைஏற்றமும் குளிர்காலத்தில் பனிச்சறுக்கும் சாகசக்காரர்களுக்குரியவை.

லடாக் என்றால் மலைப்பாதைகளின் நிலம் என்று பொருள். திபெத்திய மொழியில் லா ட்வக்ஸ் என்று இதைச் சொல்கிறார்கள். வடக்கே குன்லுன் மலைதொடரும் கிழக்கே இமயமலைச்சரிவுகளும் கொண்டது இந்நிலம். நில அமைப்பிலும் பண்பாட்டிலும் எல்லாம் திபெத்தின் நீட்சி என்று லடாக்கைச் சொல்லலாம். நெடுங்காலமாக திபெத் வழியாகவே லடாக்குக்கு வெளியுலகத் தொடர்பு இருந்தது. 1960 வாக்கில் சீனா திபெத்தைக் கைப்பற்றி மலைப்பாதைகளை அடைத்தது. அதன்பின் இந்தியா காஷ்மீரில் இருந்தும் மணாலியில் இருந்தும் லடாக்குக்குச் சாலைகளை அமைத்தது.

1974ல் லடாக்கை ஒரு சுற்றுலாமையமாக முன்னிறுத்தும் முடிவை இந்திரா காந்தி எடுத்தார். அம்முயற்சி லடாக்கை வறுமையிலிருந்தும் தனிமையிலிருந்தும் முழுமையாக மீட்டிருக்கிறது. லடாக்கின் பொருளியல் அங்குள்ள மிகக்குறைவான வேளாண்மையையும் மேய்ச்சலையும் சார்ந்தே இருந்தது. உலகில் மக்கள் குறைவாக வாழும் நிலப்பகுதிகளில் ஒன்று லடாக். மொத்த லடாக்கின் மக்கள்தொகையே மூன்று லட்சம்தான். அவர்களில் இரண்டு லட்சம்பேர் லே நகரில் வாழ்பவர்கள்.

லடாக்கின் பொருளியலைத் தீர்மானிக்கும் இரண்டாவது பெரும்சக்தி இந்திய ராணுவம். பாகிஸ்தானாலும் சீனாவாலும் குறிவைக்கப்பட்டிருக்கும் லடாக் இந்தியாவின் சிறகுகளுக்குள் ஒளிந்திருக்கும் சிறு நிலப்பகுதி. இங்கேதான் இன்று அதிகாரபூர்வமாக திபெத்திய பௌத்தம் எஞ்சியிருக்கிறது. இங்குள்ள பௌத்த மக்களுக்கு இந்தியா மீதுள்ள பெரும் பற்று இந்தியா திபெத்திய பௌத்தம் மீது காட்டிய அக்கறையின் நன்றியுணர்ச்சியினால் ஆனது.

இவர்களுக்கு தலாய்லாமா மானுடவடிவம் கொண்டு வந்த புத்தரேதான். தலாய் லாமாவைப்பேண இந்தியா எடுத்த உறுதியான நடவடிக்கையும் அதன்விளைவான இந்திய-சீன போரும், இன்றும் இந்தியாவை சீனா திபெத்தின் பொருட்டு மிரட்டுவதும் இவர்களிடம் ஆழமான பாதிப்பை உருவாக்கியிருக்கின்றன.

லடாக் பௌத்தர்களுக்கு அவர்கள் காஷ்மீருடன் இணைக்கப்பட்டிருப்பதில் ஆழமான அதிருப்தி இருக்கிறது. சுன்னி முஸ்லீம்களாலான காஷ்மீரி அரசியல்வாதிகளும் இஸ்லாமியநோக்குள்ள அரசும் லடாக்கை அடிமையாக நடத்துகின்றன என்றும் மத்திய அரசு அளிக்கும் நிதியை லடாக்குக்கு அளிக்காமல் திசைதிருப்பிவிடுகின்றன என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். சாலைகள், பாதுகாப்பு போன்றவை மைய அரசாங்கத்திடமிருப்பதனால்தான் லடாக் தாக்குப்பிடிக்கிறது,

சுன்னிகள் லடாக்கை அழிக்கவே முயல்கிறார்கள் என்று லே லடாக்கில் சந்தித்த வன அலுவலர் சொன்னார். பௌத்தரான தரம்பால் தெற்கே அமராவதி வரை கூட வந்திருக்கிறார். சுன்னி முஸ்லீம்களின் மதக்காழ்ப்பு கொண்ட ஆட்சியில் இருந்து விடுபட மத்திய அரசு லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை லடாக்கில் வலுத்து வருகிறது. ஆனால் காஷ்மீரை அப்படிப்பிரிப்பது சுன்னி அடிப்படைவாதிகளிடம் அந்நிலத்தை கையளிப்பதாகவே ஆகிவிடும் என்றும் ஆகவே ஜம்முவும் லடாக்கும் காஷ்மீருடன் இருந்தாகவேண்டும் என்று மைய அரசு நினைக்கிறது

லே நகரம் லே மாவட்டத்தின் தலைமையிடமும் கூட. குஜராத்தின் பாலைவனமாவட்டமான கட்சுக்குப்பின் லேதான் மிகப்பெரிய இந்திய மாவட்டம். மலைகள் மட்டுமே நிறைந்த வெற்றுநிலம் இது. லடாக் வழியாக குஷானர் காலகட்டத்திலேயே ஒரு பாதை காஷ்மீர் வரை இருந்திருக்கிறது என்பதை சில நூல்கள் குறிப்பிடுகின்றன. அதன்வழியாக கோடையில் சீனவணிகர்கள் வந்திருக்கிறார்கள். திபெத்திய பௌத்தம் கிபி நான்காம் நூற்றாண்டுமுதலே லடாகில் வேரூன்றியிருக்கிறது. ஆனால் பத்தாம் நூற்றாண்டில் லே நகரை தன் ஆட்சியின் கீழே சேர்த்துக்கொண்ட திபெத்திய இளவரசர் நியோமோ கோன் [ Nyima gon] காலகட்டத்துக்குப்பின்னரே லேயின் எழுதப்பட்ட வரலாறு ஆரம்பமாகிறது

முந்நூறு பேர் கொண்ட படையுடன் நியோமோ கோன் லடாக்கைப்பிடித்து இங்கே மலையுச்சிகளில் சிறிய கோட்டைகளைக் கட்டி நிலப்பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். இன்றைய லே நகரில் இருந்து பதினைந்து கிமீ தொலைவில் உள்ள ஷே என்ற நகரம் நியோமோ கோனால் உருவாக்கப்பட்டது. அதுதான் பழைய தலைநகரம்.

பதினாறாம் நூற்றாண்டில் காஷ்மீரை ஆண்ட சுன்னி முஸ்லீம் மன்னரான டெலெக்ஸ் நம்கியால் [Delegs Namgyal] லடாக்கை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். அவர் கட்டிய ஒரு பெரிய மசூதி லே நகரில் உள்ளது. அதன்பின்னர்தான் லே நகரம் வளர ஆரம்பித்தது. அது ஒரு வணிக மையமாக ஆகியது. காஷ்மீரி வணிகர்களை லடாக்கின் மலைமக்கள் சந்திக்கும் மையமாக அது இருந்தது. நம்கியால் லே நகரில் கட்டிய அரண்மனை ஒன்பது அடுக்குகள் கொண்டது. இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டது. அதன் இடிபாடுகள் இன்று ஒரு சுற்றுலாத்தலமாக உள்ளன

இரவில் லே நகரின் தெருக்களில் எல்லாவகையான இந்தியக் கார்களும் மூக்கும் பின்பக்கமும் ஒட்டி ஒட்டி நின்றிருந்தன. காஷ்மீரி சால்வைகள் விற்கும் கடைகள், பலவகையான கலைப்பொருட்களை விற்கும் கடைகள், உணவகங்கள் திறந்திருந்தன. நகரை குளிருக்கு உடலைக்குறுக்கியபடிச் சுற்றிவந்தோம். அஜிதன் சைதன்யாவுக்காக ஏதாவது வாங்க விரும்பினான். நான் பொதுவாக நினைவுப்பரிசுகள் வாங்குவதில்லை. அஜிதன் பௌத்த தாரா தேவியின் ஒரு வெண்கலச்சிலையை வாங்கினான்.

பௌத்த பெண்தெய்வங்களில் முக்கியமானது தாரா. பிஞ்ஞாதாரா என்று பாலியிலும் பிரக்ஞாதாரா என்று சம்ஸ்கிருதத்திலும் சொல்லப்படும் தாரா ஓர் உருவகத்தெய்வம். பிரக்ஞையின் ஓட்டத்தை தெய்வ வடிவமாக ஆக்கியிருக்கிறார்கள். கற்பனையின் ஞானத்தின் தேவதை. தாராவுக்கு விதவிதமான வடிவங்கள் உண்டு. அமுதகலசம், தாமரை, வஜ்ரம் ஆகியவற்றை ஏந்திய வடிவிலேயே அதிகமும் காணப்படுவாள். சீன தாராதேவி ஏகப்பட்ட ஆடைகளுடன் கையில் ஒரு சிறிய குச்சியுடன் இருப்பதைக் கண்டிருக்கிறேன்

பழங்கள் வாங்கிக்கொண்டு திரும்ப வந்து சேர்ந்தோம். கீழே ஊழியர்களிடம் உணவு சொல்லியிருந்தார்கள் நண்பர்கள். நான் அறைக்குள் சென்று படுத்துக்கொண்டேன். குளிர் அதிகமாக இல்லை. ஆனால் மூச்சுத்திணறல் இருந்தது. காஷ்மீரி கஹுவா என்ற ஒரு பானம் கடைத்தெருவில் விற்றார்கள். இஞ்சி பதாம் போன்றவை கலந்த டீ போன்ற இனிப்புபானம். அதைக்குடித்தால் மூச்சுத்திணறல் நிற்கும் என்றார்கள். பெரிய பலன் தரவில்லை. சுற்றுலாவுக்கான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இருக்கலாம்

[மலைகளின் நடுவே ஒரு சமவெளி. ஒரு துளி உயிர்]

முந்தைய கட்டுரைஇமயம் ஓர் ஆவணப்படம்
அடுத்த கட்டுரைஇமயம் இன்னொரு காணொளி