அன்புள்ள ஜெ.மோ,
நலமா? ஒரு இனம்புரியாத மன எழுச்சியையும், சிலிர்ப்பையும் அளித்தது இந்தக் கட்டுரை, மாமலைகள் தரும் சொல்லில் அடங்காத தரிசன அனுபவமே போன்று. இலக்கியம் பற்றி நீங்கள் இதில் சொன்ன வாசகங்களுக்கு இந்தக் கட்டுரையே சாட்சியாகி விட்டது!
// இங்குவந்த வெள்ளையர்கள் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாத அவன் அகத்தை நான் அறிகிறேன். அவனையும் என் மூதாதையாக எண்ண என்னால் முடிகிறது. //
உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்த வார்த்தைகள் என்பது புரிகிறது.. சில வருடங்கள் முன் அமெரிக்காவில் உள்ள cherookee என்ற ஊரில் (Tenessee மாகாணத்தில் உள்ளது) தங்கியபோது (இன்னமும் மீதமிருக்கும்) செவ்விந்தியர் எனப்படும் அமெரிக்காவின் பூர்வகுடிகள் பலரைப் பார்கக் நேரிட்டது – இந்தப் பகுதிகளில் அவர்கள் வாழும் கிராமங்கள் உள்ளன. அவர்களில் சிலர் தங்கள் பாரம்பரிய உடைகள் அணிந்திருந்தனர், எங்களுக்கு மிகவும் இயல்பானவர்களாகவே தெரிந்தனர், பேசி சிரித்தோம், கைகுலுக்கினோம்.. ஆனால், அங்கு வந்திருந்த பெரும்பாலான வெள்ளை அமெரிக்கர்கள் இவர்களை ஏதோ ஜந்துக்களையும், மியூசியம் பொருள்களையும் பார்ப்பது போலவே பார்ப்பதைக் கண்டோம். இன்றுவரை சராசரி வெள்ளை மனம் இவர்களைப் புரிந்து கொள்ளவே இல்லை என்றே தோன்றுகிறது.
அன்புடன்,
ஜடாயு
அன்புள்ள ஜடாயு,
நலம்தானே?
நான் என் அமெரிக்க பயணத்தின்போது மனம் நொந்ததே செவ்விந்தியர்களைப்பற்றிய செய்திகளை வாசிக்கும்போது மட்டும் தான். முழுமையான இன அழித்தொழிப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல. அது வெறும் படையெடுப்பால் விளைவதல்ல. சரி தவறுகள் குறித்தும் மெய்மை குறித்தும் முழுமையான கறுப்புவெள்ளை நோக்கு மட்டுமே அத்தகைய விளைவை உருவாக்க முடியும். அந்த அழிக்கப்பட்ட மக்களுக்காக மட்டும் அல்ல, அவ்வழிவை நிகழ்த்திய மூடர்களுக்காகவும் வருத்தப்பட்டேன்.
மெய்மை என்பது பன்மையாகவே இருக்க முடியும். உளன் எனின் உளன் இலன் எனின் இலன் என்று சொன்ன குரலிலேயே அதைச் சொல்ல முடியும். அந்த நம்பிக்கை மேலும் பலப்பட்டது
ஜெ
ஆனந்த் அண்ணாமலைக்கான உங்கள் பதிலை அவர் சரியாக புரிந்துகொண்டாரானால்
அவருக்கு மிகவும் நல்லது. மிகச் சிறந்த பதில்.
ஓஷோவை படிக்கலாம், சிந்திக்கலாம் ஆனால் அவர் சொல்வதைப்போல் வாழமுடியாது. அவர் ஆன்மீக உலகில் தோன்றிய கம்யூனிஸ்டாக எனக்கு தோன்றுகிறார். சமூக போலித்தனங்களை நகையாடும் அவர் தீர்வாகத்தருவது நடைமுறைச்சாத்தியமில்லாத ஒன்று.
அப்பா தன் பிள்ளைகள்மேல் இருக்கும் அன்பைவிட உலகத்தின்மேல் அன்புகாட்டவேண்டும் என்பது ஒரு கனவாக மட்டுமே இருக்கும். உண்மையில் பிள்ளையின் மேல் இருக்கும் அன்பே விரிவடைந்து உலகத்தின்மேல் பரவும். இந்த சமூகம், அது அடைந்த முன்னேறங்கள், அனைத்தும், அன்னையர் சொல்லி தந்தையரால் தம் பிள்ளைகளுக்காக கட்டப்பட்டவையே ஆகும். அறிஞர்கள், தத்துவவாதிகள் அனைவரும் எட்டநின்று ஆலோசனை சொன்னவர்கள் மட்டுமே. பெற்றோரே இச்சமூகத்தின் உரிமையாளர்கள், பாதுகாவலர்கள்.
அன்புடன்
த.துரைவேல்
அன்புள்ள துரைவேல்
மனிதனின் பல பண்புகளை, அவன் உருவாக்கிய பல அமைப்புகளை, நான் அவன் உருவாக்கிக் கொண்ட கருவிகளாகவே கருதுகிறேன். தேவையில் இருந்து உருவாக்கப்பட்டவி. தங்கள் வரலாற்றுப்பணியை ஆற்றியவை. ஆற்றுபவை. எந்த ஒரு பண்பாஇயும் மைப்பையும் நிராகரிப்பதற்கு முன்னால் அதன் பங்களிப்பென்ன என்பதைப்பற்றிய புறவயமான வரலாற்றுபூர்வமான நோஒக்கு தேவை என்பதே என் எண்ணம். பலசமயம் நாம் அப்படி செய்வதில்லை. இளைஞர்களாக இருக்கும்போது தூக்கி எறிவதை பற்றி பேசுவோம் — நீங்களும் பேசியிருப்பீர்கள். அது நமக்கு அளிக்கும் பிம்பம் குறித்து மட்டுமே நாம் அப்போது கவலைகொள்கிறோம்
ஜெ