இருபத்து மூன்றாம் தேதி காலையில் இருந்தே வேலைகள். மே ஒன்றாம் தேதி முதல் நான் நடத்தவிருக்கும் கவிதைப்பட்டறைக்கான மொழிபெயர்ப்புவேலைகள் இன்னும் முடியவில்லை. நடுவே பல வேலைகள். என் பிறந்த நாள் அன்று தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்தபடியே இருந்தன. பேசியபடியே பகல் எல்லாம் இருந்து கவிதைகளை மொழியாக்கம்செய்தேன். மொத்தம் 120 கவிதைகள். தமிழில் இருந்து மலையாளத்துக்கும் மலையாளத்தில் இருந்து தமிழுக்கும். அவற்றை அச்சு போட்டு நகல் எடுத்து பங்கேற்பாளர்களுக்கு முன்னரே அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்பி வரும்போது பகல் நான்குமணி. ஐந்துக்கு சென்னைக்கு பேருந்து. முதலில் நான் மட்டுமே செல்வதாக இருந்தது. ஆனால் அப்துல் கலாம் பரிசைக் கொடுக்கிறார் என்ற தகவல் தெரிந்ததும் என் பிள்ளைகள் வர ஆசைப்பட்டார்கள். ரயில் கிடைக்கவில்லை. ஆகவே பேருந்து. இரவெல்லாம் பயணம் செய்து மறுநாள் காலை எட்டு மணிக்கு சென்னை கோயம்பேடு ரயில் நிலையம் வந்தேன். நண்பர் கெ.பி.வினோத் காருடன் வந்திருந்தார்.
தி நகர் பிளாஸம்ஸ் ‘செர்வீஸ்ட் அப்பாட்ர்ட்மென்ட்ஸ்’ ஸ் தங்க வசதி செய்யப்பட்டிருந்தது. விடுதியைப்போஒல அல்லாமல் வசதியான அறை. நண்பர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். ஈரோட்டில் இருந்து கிருஷ்ணன் தங்கமணி போன்ற நண்பர்கள் வந்திருந்தார்கள். திருச்சி கோவை பாண்டிச்சேரி ஊர்களில் இருந்து வாசகநண்பர்கள் இவ்விழாவுக்காக வந்திருந்தது ஆச்சரியம் அளித்தது.
நாங்கள் மயிலை பாரதீய வித்யா பவன் அரங்கை அடைந்தபோது ஜெயகாந்தன் ஆவணப்படம் ஓடிக் கொண்டிருந்தது. இருட்டுக்குள் நின்ற எங்களை ரவி சுப்ரமணியன் அழைத்துக் கொண்டு அமரச்செய்தார். ஜெயகாந்தனின் ஆவணப்படம் கிட்டத்தட்ட ஒரு ‘ மறைவுக் காமிரா’ ஆவணப்படம் போலவே இருந்தது. அவரது பேச்சு முறை, இயற்கையான சிரிப்பு. கோபம். உடல் சைகைகள். நடுவே வரும் தனிமை .எல்லாமே இயல்பாக பதிவாகியிருந்தன. அவரது மடத்துக்குச் சென்று அவரைச் சந்தித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. இந்த ஆவணப்படத்தைப் பற்றி தனியாக எழுதவேண்டும்.
மதியம் பி.கெ.சிவகுமார் ஷாஜி, சுரேஷ் கண்ணன், கிருஷ்ணன் ,செந்தில்குமார், பாபு மனோகர் , வ சிரினிவாசன் என ஒரு நண்பர் குழாமே சென்று மயிலை ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு அறைக்கு திரும்பி பேசிக் கொண்டிருந்தோம். உற்சாகமான சந்திப்பு. என் நண்பர்களில் ஒருசாரார் இன்னொரு சாராரை சந்திக்கும் நிக்ழவு அது.
மாலை நான்குமணிக்கே கூட்டம். சென்றபோது அரங்கு கிட்ட்த்தட்ட நிறைய ஆரம்பித்திருந்தது. நானும் பிற விருது பெறுபவர்களும் மேடைக்கு சென்றோம். நா.முத்துக்குமார் என்னருகே அமர்ந்ததுமே ஆறுதலாக ஒருவழியாக வசந்தபாலன் அங்காடித்தெருவுக்கு பாட்டு சரியாக வந்திருக்கிறது என்று ஒப்புக்கொண்டுவிட்டார் என்று சொல்லி பாட்டை முழுமையாகச் சொன்னார்
இளையராஜாவும் பாரதி ராஜாவும் வந்தார்கள். அதன் பின் அப்துல் கலாம் அவரே ஜெயகாந்தனை வீட்டுக்குச் சென்று கூட்டிக்கொண்டு வந்தார். ஜெ.கெ. மேடையேறியதைக் கண்டு மனம் வருந்தியது. அவரது மிடுக்கான நடை மிகவும் தளர்ந்திருந்தது. அவரை இன்னொருவர் கைபற்றிக் கொண்டுவந்ததை பார்க்கவே தாங்கவில்லை.
நல்லி செட்டியார் எல்லாரையும் வரவேற்றபின் பாரதிராஜா பேசினார். இளையராஜாவுக்கும் அவருக்குமான உறவையும் இருவரும் அரை டிரவுசர் பையன்களாக ஜெயகாந்தனுக்கு பாடிக்காட்டச் சென்ற நாளையும் நினைவுகூர்ந்தார். நான் பாரதி ராஜாவிடம் ஒருமுறை ஃபோனில்பேசியிருக்கிறேன். பின் தொடரும் நிழலின் குரல் படித்துவிட்டு கூப்பிட்டிருந்தார். தன் பழைய இடதுசாரி நாட்களை நினைவுகூர்ந்தபின் நாகம்மையின் பாத்திரப் படைப்பைப்பற்றி பேசினார். நான் அவரை நேரில் சந்திப்பது அதுவே முதல் முறை. அதை அவர் தன் பேச்சில் சொன்னார்.
இளையராஜா சுருக்கமாகப் பேசினார். தன் சொந்த உழைப்பில் ஈட்டிய பணத்தை சிறந்த இலக்கியத்துக்காக அளிப்பதாகவும் அது தன் ரசனை சார்ந்தது என்றும் சொல்லியபின் எழுத்தாளர்கள் என்ன எழுதவேண்டும் என்று சொல்லி உரை நிக்ழ்தும் நோக்கமேதும் இல்லை, அது அவர்களின் படைப்பு சர்ந்தது. நான் வாசகன் மட்டுமே என்றார்
கலாம் ஜெயகாந்தனின் படைப்பூகளைப்பற்றி பேசினார். சிறுவயதில் ராமேஸ்வரத்தில் வாழ்ந்த நாட்களில் ஜெயகாந்தனின் அக்ரகாரத்தில் பூனை என்ற கதையைப் படித்து அடைந்த மன எழுச்சியைப்பற்றி குறிப்பிட்டார்.
விருதுகள் எங்களுக்கு வ்ழங்கப்ப்டான. அறிஞர் ம.ர.பொ.குருசாமி எஙக்ள் சார்பில் நன்றி சொன்னார். விழா இரண்டுமணிநேரத்தில் முடிந்தது. நானும் நண்பர்களும் அங்கேயே நின்று தொடர்ந்து பேசிக் கொன்டிருந்தோம். பல நண்பர்களை அறிமுகம் செய்துகொண்டேன்.
இன்னும் ஊருக்குப் போகவில்லை. போனபின் நினைவுகளை மீட்டி மீண்டும் எழுதவேண்டும்