நூறுநிலங்களின் மலை – 5

இரவெல்லாம் சரியாக தூக்கமில்லை. நாங்கள் தங்கிய இடங்களிலேயே மிகக்குறைவாக ஆக்ஸிஜன் இருந்த இடம். மூச்சுத்திணறல் தூக்கத்தை கலைத்துக்கொண்டே இருந்தது. களைப்பினால் தூங்கி நினைவழிந்து செல்லும்போது நுரையீரல் விம்மி விழித்துக்கொள்வேன். அரைத்தூக்க கனவுக்குள்ளும் மூச்சுதான் வரும். மார்பில் எடைகள் ஏறியிருப்பதுபோல. நீருக்குள் மூழ்கி மூச்சழிவதுபோல. வாய்க்குள் மணல் நிறைந்து இறுகுவதுபோல.

நள்ளிரவில் அஜிதன் தலைவலிப்பதாகச் சொன்னான். ஒரு கட்டத்தில் குளிர்ந்தாலும் பரவாயில்லை என்று கதவுகளை திறந்தே வைத்தேன். உடம்பு துள்ளித்துள்ளி விழுந்தது. ஆனால் அவர்கள் வைத்திருந்த ரஜாய்கள் மிகத்தரமானவை.

ரங் துன் மடாலயத்தைப்பார்த்தபடி காலையில் கண்விழித்தேன். இமாச்சலப்பிரதேசத்தினர் வைக்கும் சிவப்புக்குல்லாய் போல. நேற்றிரவு அது மலைகளுடன் இணைந்திருந்து காலையில் உதிர்ந்து தனித்துக்கிடப்பதுபோல. ஆலமரத்தடியில் ஒரு சிறு விதை.

அந்த வீட்டில் ஒரே ஒரு கழிப்பறைதான். அதுவும் பாரம்பரிய முறையிலானது. ஓர் ஓட்டைவழியாக மலமும்நீரும் குழாயில் புகுந்து மண்ணுக்குள் செல்லும். குளிக்க வெந்நீர் கிடையாது என்று முன்னரே சொல்லிவிட்டார்கள். குளிக்கும் வழக்கமே அங்கில்லை. பல்தேய்ப்பது வீட்டுக்குமுன்னால் ஓடிய ஒரு சிற்றோடையில். அந்த தண்ணீர் பனிக்கட்டிபோல இருந்தது. வாய்கொப்பளித்தபோது திரும்ப துப்ப உதடுகளை அசைக்கமுடியவில்லை. கொஞ்சநேரத்துக்கு பேச்சும் வரவில்லை

ஏழுமணிக்கு கடைக்குச்சென்று காலையுணவாக மாகி நூடில்ஸ் சாப்பிட்டோம். இமயமலைப்பகுதிகளில் கிடைக்கும் தயார் உணவு மாகிதான். அங்கே உணவை தயாரித்து வைக்கும் வழக்கமே இல்லை. நாம் கேட்டபின்னர்தான் சமைப்பார்கள். அதற்கு எளியது மாகிதான். அதன் சுவையும் அவர்களுக்கு பிடித்திருக்கிறது. முட்டைக்கோஸ் செதுக்கிப்போட்டு நீர்விட்டு கொதிக்கச்செய்து கிண்ணத்தில் எடுத்து தந்துவிடுகிறார்கள். பத்துரூபாய் உறைக்குள் உள்ள மாகி சமைக்கப்பட்டால் முப்பது ரூபாய் மதிப்புள்ளதாக ஆகிவிடுகிறது.

ரங்தன் மடாலயத்தை தாண்டி ஸுரு ஆற்றின் கரையிலூடாகச் சென்ற கூழாங்கல் பாதையில் முன்னேறினோம். மேலே செல்லச்செல்ல பாதை இன்னும் அபாயமானதாக ஆகியது. குளிர் ஏறி ஏறி வந்தது. ஸுரு ஆற்றின் தொடக்கம் தெரிய ஆரம்பித்தது. மலையில் இருந்து இறங்கி ஆறுவரை வந்து சரிந்துகிடந்தது ஒற்றைப்பனிப்பாளம். பனிப்பாளம் மலையுச்சியில் தூயதாக இருந்தாலும் கீழே கரிய மண்ணுடன் கலந்து பிளந்திருந்தது. திமிங்கலத்தின் உடல் போல.

ஸுரு ஆற்றை நோக்கி பனிப்பாளங்கள் ஒன்றின் மேல் இன்னொன்று அமர்ந்து மெல்லச்சறுக்கி இறங்கின. கீழே இருந்த பனிப்பாளம் மேலே அமரும் பனிப்பாளங்களின் எடையால் மெல்லப்பிளந்தது. புகைபடிந்த பற்கள் போன்ற பனிப்பலகைகள். அவை நெக்குவிட்டு மடிந்து ஆற்றுநீரை நோக்கி மண்டியிடுபவை போல அமர்ந்தன. அவற்றின் மெல்லிய முனகலைக்கூட கேட்கமுடியும் என்று தோன்றியது.

பனிப்பாளங்கள் சரிவதைப் பல படங்களில் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் அது ஓர் அழகிய காட்சியாகவே தெர்ந்தது. ஆனால் எங்களைச் சூழ்ந்து பனிப்பாளம் இருக்கையில் அதன் ஒரு விரிசல் என்பது மரணத்தின் புன்னகை என்று பட்டது. நமக்கு மரணம் கருநிறம் கொண்டது, ஐரோப்பியர்களுக்கு அது வெண்ணிறம் கொண்டது என்று அஜிதன் சொன்னான்.

[சரியும் பனி]

பென்ஸீலா கணவாய்க்குச் செல்லும் வழி ஒரு பலகையால் அறிவிக்கப்பட்டது. அதன்மேல் திபெத்திய மதச்சின்னமான வண்ணக்கொடிகள். அதை ஒரு யாக் ஆர்வத்துடன் மென்றுகொண்டிருந்தது. அதிகம் ஆட்களைப் பார்க்காத ஜீவன். எங்களை கூர்ந்து பார்த்தபின் மீண்டும் மெல்ல ஆரம்பித்தது

பென்ஸீலா கணவாய் நோக்கி எங்கள் வண்டி சென்றது. சுற்றிலும் மலைச்சிகரங்களில் எல்லாம் பனிக்கூரை வேயப்பட்டிருந்தது. தாடைகள் நடுங்கும் குளிர். மூச்சுக்காற்று உள்ளேயே பனித்தது படர்ந்தது. இருபக்கமும் மலையிடுக்குகள் அனைத்திலும் இருந்து பனியோடைகள் வழிந்து இறங்கிக்கொண்டிருந்தன. கிருஷ்ணனின் திட்டப்படி பென்ஸீலா கணவாயை ஒருமணிநேரத்தில் அடையவேண்டும். ஆனால் பனிமலைகள் நடுவே மூட்டைப்பூச்சி போல நகர்ந்துகொண்டிருந்தோம். காலம் உறைந்து விட்டது. கடிகாரத்தைப்பார்த்தால் மூன்றுமணிநேரம் தாண்டிவிட்டிருந்தது

பென்ஸீ லா மலையின் நடுவே உள்ள பிரம்மாண்டமான இடைவெளியின் வழியாக வழிந்துகிடக்கும் மிகப்பெரிய பனிப்படுகையை த்ராங் த்ரங் [‘Drang-Drung Glacier’] என அழைக்கிறார்கள். மலையின் விளிம்பில் சென்றுகொண்டிருக்கையிலேயே பென்ஸீ லா மலையுச்சியில் படர்ந்திருந்த கனத்த பனிப்பாளத்தைப்பார்த்தோம். கீழே கண்கூசும் வெளிச்சம் தெரிந்தது. முதலில் அது பனியாறு என்ற எண்ணம் ஏற்பட்டது. தொலைநோக்கியால் பார்த்தபோதுதான் அது நிலைத்து இருப்பதை உணரமுடிந்தது. கார் அருகே நெருங்க நெருங்க அது ஆறல்ல ஆற்றின் வடிவில் உறைந்த பனிப்பெருக்கு என்று தெரிந்தது

[டோடோ சிகரம்]

பென்ஸீலா கணவாயின் மேலே இருப்பது டோடா சிகரம். 21,490 அடி உயரம் கொண்ட அந்த மலைச்சிகரத்தின் உச்சியில் படியும்பனி அதன் பெரும் எடை காரணமாக கீழே அழுந்துகிறது. அழுத்தப்படும் பனிப்பாளம் கீழே உள்ள பென்ஸீலா கணவாயின் இடைவெளியில் பிதுக்கி தள்ளப்பட்டு அந்த பனிப்பெருக்கு உருவாகிறது. சியாச்சின் பனிப்பாளத்துக்குப் பின்னர் லடாக் பகுதியின் மிகப்பெரிய பனிப்பாளம் இதுதான்.23 கிமீ நீளம் கொண்ட இந்தப்பனிப்பாளம் கடல்மட்டத்தில் இருந்து 15680 அடி உயரத்தில் உள்ளது.

பனிப்பாளத்தைப்பார்த்தபடி மலை விளிம்பில் நின்றோம். கண்கூசும் வெளிச்சம். கறுப்புக்கண்ணாடிபோட்டால் அந்த இடத்தை முழுக்கண்ணாலும் பார்க்கமுடிந்தது, ஆனால் காட்சி இயற்கையாக இல்லை. கறுப்புக்கண்ணாடி இல்லை என்றால் கண்கள் கூசி கண்ணீராகக் கொட்டியது. குளிரில் மூக்கிலிருந்தும் நீர் வழிந்தது. கடுமையான மூச்சடைப்பு. உடல் அடிக்கடி அதிர்ந்து அடங்கியது

பனிப்பாளம் கீழிறங்க இறங்க அடர்த்தியான அலைகளாக இருந்தது. மலையின் வெண்தலைப்பாகையின் அலங்கார குச்சம் போல. அந்த ஒவ்வொரு அலையும் நூறடி உயரமிருக்கும். . அருகே உள்ள பனிப்பாளத்தில் அலைகள் இல்லை. அடுக்கியடுக்கி வைத்ததுபோன்ற விரிசல்கள்தான். விரிசல்களின் ஆழத்துக்குள் சாதாரணமாக ஒரு மனிதன் மறைந்துவிடமுடியும். பனிப்பாளத்தின் கடைசி நுனியில் பனி மென்மையாக உடைந்து சரிந்து உருகி ஓடைகளாகி சென்று ஒன்றாகியது

த்ராங்க் த்ரங் பனிப்பாளத்தில் இருந்துதான் ஸ்டோட் ஆறு உருவாகிறது. அது சன்ஸ்கர் ஆற்றில் சென்று சேர்கிறது. ஸன்ஸ்கர் சிந்துவின் வலுவான துணைநதிகளில் ஒன்று.

பென்ஸீலா கணவாயின் மறுபக்கம் இருக்கும் சமவெளி ஸன்ஸ்ன்கர் சமவெளி என்று அழைக்கப்படுகிறது. ஸன்ஸ்கர் ஆறு அங்கே ஓடி பாகிஸ்தான் சென்று சிந்துவில் கலக்கிறது. ஸன்ஸ்கர் சமவெளியில் படும் என்ற இடம் வரைதான் செல்லமுடியும். அங்கே ஒரு ராணுவமுகாம் உள்ளது. அதற்கப்பால் பாகிஸ்தான் எல்லை.

பனிப்பாறையாக ஒருகணமும் ஓடப்போகும் நதியாக மறுகணமும் மலையின் சரிவாக ஒருகணமும் மலையில் ஏறிச்செலவேண்டிய பனிப்படிக்கட்டாக மறுகணமும் தோன்றிய த்ராங் த்ரங்கைப்பார்த்துக்கொண்டு நின்றோம். குளிர் அதிகநேரம் நிற்க விடவில்லை.

மீண்டும் ரங்துன் வந்தோம். டீ சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். மதியம் சங்கூவுக்கு வந்தோம். சாப்பிட்டுவிட்டு காரிலேறப்போகும்போதுதான் அந்த தேர்தல் வெற்றிக்களியாட்டம் எதிரே வந்தது. அவர்களில் பலர் பிரியங்கா காந்தி இந்தியாவின் எதிர்காலம் என்ற அட்டைகளை பிடித்திருந்தனர். கூடவே ஈரான் அதிபரின் படத்தையும்.

[பியோமா கும்பு]

பியாமா கும்பு [ bhyama khumbu] என்ற இடத்தில் இன்னொரு புத்தர் சிலை இருப்பதாக இணையத்தில் தகவல். அதை சங்கூவின் ஓட்டலில் விசாரித்தபோது மிக அருகேதான் அது இருப்பதாகச் சொன்னார்கள். காரில் விசாரித்துக்கொண்டே வந்தோம். ஒருபெண் ஓடையில் துணிதுவைத்துக்கொண்டிருந்தாள். அவளிடம் பியாமா கும்பு என்று கேட்டோம். சாலையில் இருந்து பிரிந்து சென்ற ஒரு பாதையைக் காட்டினாள்.

திரும்பி அவ்வழியாகச் சென்றோம். அங்கே புதியதாக வீடு கட்டிக்கொண்டிருந்த ஒருவரிடம் கேட்டோம். அவர் அதுதான் பியாமா கும்பு என்றார். ஆனால் சிலை அங்கே இல்லை. அதற்கு நாங்கள் வந்தவழியே செல்லவேண்டும், சாலையின் ஓரமாகத்தான் இருக்கிறது என்றார்

அந்த துணிதுவைக்கும் பெண்ணிடமே கேட்டோம். அவள் யோசித்துவிட்டு ‘புத்தர் சிலையா?’ என்றாள். அவளிடம் ஏற்கனவே புத்தர்சிலை என்று சொல்லவில்லை. ஆமாம் என்றோம். ‘இதோ இருக்கிறதே’ என தனக்குப்பின்னாலிருந்த பெரிய பாறையைச் சுட்டிக்காட்டினாள். அதில் புத்தர் இருந்தார். சிலையாக அல்ல, ஓவியமாக!

சிலை ஓவியம் என அதைச் சொல்லலாம். பாறைப்பரப்பில் அரை இஞ்ச் தடிமனில் மெல்லிய புடைப்பாக கோட்டோவியமாகச் செதுக்கப்பட்ட பத்மபாணி அவலோகிதேஸ்வரர். அவலோகிதேஸ்வரர் என்றால் அவ்வண்ணமே வந்தவர் என்று பொருள். எழுதப்பட்ட நூல்களின் படி வரப்போகும் புத்தர் அவர். கையில் தாமரை வைத்திருந்தார். இருபக்கமும் இரு துணைதேவதைகள் நின்றிருந்தனர். இந்த சிலை கிபி 12 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்தது என்பதை இங்குள்ள இரண்டு வரி திபெத்திய மொழிக் கல்வெட்டு குறிப்பிடுகிறது

இச்செதுக்குவடிவம் அது. அப்பகுதி திபெத்திய பௌத்தத்தால் ஆளப்பட்டபோது உருவாக்கப்பட்டது. இப்போது முழுக்கமுழுக்க ஷியா முஸ்லீம்களின் நிலமாக அது உள்ளது. அம்மக்கள் அச்சிலையைப்பற்றி எதுவுமே தெரியாதவர்கள்.

அங்கிருந்து கார்கில் வரும் வழியில் அபாத்தி என்னும் இடத்தில் இன்னொரு பெரிய மைத்ரேய புத்தரின் சிலை இருப்பதாகச் சொன்னார்கள்.அபாத்தியை விசாரித்துச் சென்றோம். வழக்கம்போல அது விதவிதமான ஷியா கிராமங்கள் வழியாகச் செல்லும் ஒரு பயணமாக அமைந்தது.: எங்கெங்கோ சுற்றி எவரெவரிடமோ வழி கேட்டு கடைசியில் அபாதி கிராமச்சாலையில் சென்று நின்றோம்.

[ஓட்டுநர்]

வழியருகே இருந்த பெண்களிடம் சிலையைப்பற்றி கேட்டோம். அங்கேதான் என வழி சொன்னபின்னர் ‘காசு கொடுங்கள்’ என்றார்கள். அதை யாசகமாகவோ கூலியாகவோ அல்லாமல் சிரித்துக்கொண்டே ஒரு விளையாட்டாகவே கேட்டார்கள். பிள்ளைகளும் சிரித்துக்கொண்டுதான் வந்து கேட்டன. அங்கே அதிகமும் வருபவர்கள் பௌத்தத் துறவிகளும் வெள்ளையரும்தான். அவர்களும் அதை ஒரு விளையாட்டாகவே கொண்டிருக்கவேண்டும். ஆளுக்கு பத்து ரூபாய்வீதம் கொடுத்தோம்.

மாலிக் என்ற பன்னிரண்டு வயதுப் பையன் அவனே வந்து வழிகாட்டிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டான். ’வாருங்கள்’ என்று கூட்டிச்சென்றான் தன்னம்பிக்கையும் சுறுசுறுப்பும் கொண்ட இந்தமாதிரிப்பயல்கள் ஒரு குடும்பத்தையே கட்டிக்காப்பவர்கள். பெரும்பாலும் எதிர்காலத்தில் வெற்றிகரமாக வரக்கூடியவர்கள்.

மொத்த கிராமமே ஒரு பெரிய மலைச்சரிவில் அமைந்திருந்தது. வீடுகளினூடாக, சந்துகள் வழியாக அவன் கூட்டிச்சென்றான். அவன் கூட்டிச்செல்லாவிட்டால் கண்டிப்பாக அவ்வழி போக முடியாது. சிலசமயம் வீட்டுத்தொழுவங்கள் வழியாகக்கூட செல்லவேண்டியிருந்தது. சுள்ளிக்கூரைகள் கொண்ட மண் வீடுகள். ஒரே ஒரு கட்டிடம்தான் சற்றுப்பெரியது, மசூதி.

எங்களைச்சூழ்ந்து கிராமத்தின் குழந்தைகளும் சிறுவர்களும் வந்தனர். மிக அழகான பல்வரிசையுடன் வெட்கிச்சிரித்த முகமது அலிக்கு மூன்று வயது. அவன் அண்ணா அண்ணா அகமது கொஞ்சம் தீவிரமான முகத்துடன் வந்தான். முகமது அடிக்கடி என்னை ஓரக்கண்ணால் பார்த்து புன்னகைத்தான். மிக அழகான பையன். தூக்கி காரில்போட்டு கொண்டுவந்துவிட்டாலென்ன என்று தோன்றச்செய்யும் அளவுக்கு.

பாதை நேராகச் சென்று காட்டுக்குள் ஓடிய ஒரு ஓடையில் இறங்கியது. ஓடைக்கு அப்பால் மேலேறியது. மூச்சுவாங்க மேலே சென்றோம். அங்கே சமீபகாலமாகத்தான் படிகள் கட்டியிருந்தனர். மேலும் மராமத்துவேலைகள் நடந்தன. உள்ளூர்க்காரர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். முதுகில் சாக்குமூட்டையில் மண்கொண்டுவந்து கொட்டினர் இரு இளைஞர்கள்.

[அப்பாத்தி புத்தர்]

அப்பாத்தி புடைப்புச்சிற்பம் மைத்ரேயபுத்தருடையது. ஒரு பெரிய ஒற்றைப்பாறையில் செதுக்கப்பட்டது. கார்ட்ஸே கார் புடைப்புச்சிலையைவிட இது பெரியது, பழைமையானது. ஏழு மீட்டர் உயரம் கொண்டது. ஆறாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது

சிலையின் காலடியில் நிற்கையில் அதன் பிரம்மாண்டம் முழுமையாகவே மனதை ஆட்கொள்கிறது. புத்தரின் விழிகள் எதையும் பார்க்காதவை, எல்லாவற்றையும் உணரக்கூடியவை என்று தோன்றிவிடுகிறது

சட்டென்று மேலே ஒரு நரி ஓடியது. இமாலய நரி. அவ்வளவாக முடி இல்லை. அந்த பனிப்பாலையில் எப்படி வாழ்கிறது என்று புரியவில்லை.

நாங்கள் சிலையைப்பார்த்து நிற்கையில் குழந்தைகள் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தன. திரும்பிப்பார்த்த போது புன்னகையுடன் ஒருவரோடு ஒருவர் ஒட்டிக்கொண்டன.

திரும்பி வரும்போது நினைத்த அளவுக்கு அந்த வழி கடுமையானதாக இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. மாலிக்குக்கு நான் ஐம்பது ரூபாய் கொடுத்தேன். பொதுக்கணக்கிலிருந்து ஐம்பது ரூபாய் கொடுக்கப்பட்டது. கிருஷ்ணராஜ் இருநூறு ரூபாய்க்குமேல் எல்லாக்கைகளுக்குமாக பங்கிட்டார். நான் முகமது அலிக்கு ஒரு இருபது ரூபாய் கொடுத்து கன்னத்தைப்பிடித்து கிள்ளினேன். ரூபாயை வாங்கி அண்ணன் கையில் கொடுத்துவிட்டு வெட்கிச் சிரித்தான்

[சிவப்பு ஸ்வெட்டர் முகமது அலி, சிரிப்பவன் வழிகாட்டி மாலிக்]

மண்சாலையில் மீண்டும் ஒரு பயணம். மீண்டும் கார்கில் வந்தோம். கார்கிலிலேயே தங்கலாமா இல்லை போவது வரை போகலாமா என்று ஒரு சின்ன விவாதத்துக்குப்பின் செல்வது என முடிவெடுத்தோம். கார்கிலைத்தாண்டி இருக்கும் முல்பெக் என்ற ஊர் அடுத்த இலக்கு. முல்பெக்கில் ஒரு அரசுவிடுதி ஏற்பாடு செய்து தருவதாக ஆனந்த் செல்பேசியில் சொல்லியிருந்தார்

முல்பெக் விடுதியில் காவலர் இருந்தார். நாங்கள் சென்றபோது மின்சாரம் இல்லை. ஒருநாளில் இரண்டுமணிநேரம் மின்சாரம் இல்லை, காரணம் அது மலைப்பகுதி என்றார். ஒருநாளில் எட்டுமணி நேரம் எங்களூரில் மின்சாரம் இல்லை, காரணம் அது சமவெளி என்று நினைத்துக்கொண்டேன்.

அறை வசதியாக இருந்தது. அதுவரை இருந்த மூச்சுத்திணறலும் குறைந்துவிட்டது. குளிர் இருந்தது. அப்படியே படுத்து தூங்கிவிட்டோம்

முந்தைய கட்டுரைஒரு முதற்கடிதம்
அடுத்த கட்டுரைஇமயம் ஓர் ஆவணப்படம்