நூறுநிலங்களின் மலை – 3

கார்கிலுக்கு மதியம் சென்று சேர்ந்தோம். அங்கே முதல் பிரச்சினை, நாங்கள் சென்ற காரில் மேலே செல்ல விடமாட்டார்கள் என்பதே. நாங்கள் கார்கிலில் இருந்து ஸுரு சமவெளிக்கும் ஸன்ஸ்கர் சமவெளிக்கும் செல்ல ஆசைப்பட்டோம். அதற்கான முறையான அனுமதிகள் பெற்றிருந்தோம்.

ஆனால் அங்குள்ள வாடகைக்கார் ஓட்டுநர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத எவரும் செல்ல அனுமதி இல்லை என்று சொல்லி வழிமறித்தனர். சற்று அடாவடிதான். ஆனால் வருடத்தில் தொண்ணூறுநாட்களுக்கு மட்டுமே அங்கே கார்கள் செல்லமுடியும் என்ற நிலையில் அவர்களுக்கும் வேறுவழி இல்லை.

வாடகையைக் கேட்டோம். திடுக்கிடச்செய்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. சரவணனை தொலைபேசியில் அழைத்தோம். அவர் அங்குள்ள காவல்கண்காணிப்பாளரின் எண்ணை அளித்தார். கிருஷ்ணனும் ராஜமாணிக்கமும் கிருஷ்ணராஜும் காவல்கண்காணிப்பாளரைப் பார்க்கச் சென்றார்கள். ஒருமணிநேரத்தில் எழுத்துபூர்வமான அனுமதி கிடைத்தது. அதைக்காட்டியதும் அனுமதித்தனர்.

மதிய உணவுக்கு சங்கூ என்ற ஊரில் இறங்கினோம். அங்கே ஒரு விடுதியில் சப்பாத்திக்குச் சொன்னோம். அங்கே சப்பாத்தி என்றாலே சோளச்சப்பாத்திதான். மெல்லியது. தொட்டுக்கொள்ள காராமணிப்பயறு சமைத்த குழம்பு. காய்கறி என்ற பேச்சே கிடையாது. சோறு கிடைக்குமா என்று கேட்டேன். இல்லை என்றார்கள். ஆனால் பசிக்கு சோள ரொட்டி நன்றாகவே இருந்தது.

ஓட்டலில் ஒரு முஸ்லீம் மதகுருவின் படம் விளக்கெல்லாம் மாட்டி வைக்கப்பட்டிருந்தது. அது யார் என்பது மூளையைக் குடைந்துகொண்டே இருந்தது. சட்டென்று ஊகித்தேன். இரானிய அதிபர் அலி ஹொசெய்னி கொமெனியின் படம். [Ali Hosseini Khamenei] அதைக்கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டேன். அதன்பின் பெரும்பாலான வாகனங்களில் கடைகளில் அந்தப்படத்தைப்பார்த்தேன். அவர் ஷியாக்களின் தலைவர். அங்குள்ள ஷியா முஸ்லீம்கள் அவரைத்தான் தங்கள் ஆன்மீக-அரசியல் தலைவராக நினைக்கிறார்கள்.

உண்மையில் அது எனக்கு புதிய செய்தி. எனக்கு எப்போதுமே நம்மூர் செய்தியாளர்களும் அறிவுஜீவிகளும் எழுதும் எந்தத் தகவலிலும் நம்பிக்கை இருந்ததில்லை. நானே சென்று பார்க்காத ஒன்றை நம்பி நான் எந்தப்புரிதலையும் உருவாக்கிக் கொள்வதில்லை. என் அவதானிப்பிலும் உள்ளுணர்விலும் எனக்கு நம்பிக்கை உண்டு. இங்கே காஷ்மீர்பற்றி எழுதப்படும் உள்நோக்கம் கொண்ட எழுத்துக்கள் எதிலும் இல்லாத ஒரு உண்மைத்தகவல் இது.

காஷ்மீர் இஸ்லாமியர் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானிய ஆதரவு நிலைப்பாடு கொண்டிருப்பதாகவும், அனைவரும் தனிநாடு கோரி போராடுவதாகவும் எழுதப்படுபவை அப்பட்டமான பொய்கள் என்பதை ஒரு பத்தாயிரம் ரூபாய் செலவுசெய்து காஷ்மீருக்குச் சென்று இறங்கும் எவரும் கண்கூடாகக் காணமுடியும்.

எங்கும் இருப்பது போல இங்கும் எளியமக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு தொழில்களையே முதன்மையாகக் கருதுகிறார்கள். அரசியலுறுதிகள் கொண்டிருக்கும் அளவுக்கு கல்வியோ செல்வமோ உடையவர்கள் அல்ல அவர்கள். அவர்களின் மதநம்பிக்கை சுரண்டப்பட்டு அரசியலாக்கப்பட்டு அவர்கள் பிரிவினைவாத வெறுப்பரசியலுக்குள் இழுக்கப்படுகிறார்கள் என்பதை அங்குள்ள எவரிடம் பேசினாலும் உணரமுடியும்.

எங்கும்போல காஷ்மீரின் மொத்தச் சமூகமும் பல்வேறு மத இனக்குழு பிரிவினைகளால் ஆனதாகவே உள்ளது. காஷ்மீரின் அரசியலென்பது இந்தப் பிரிவுகளுக்கு இடையே உள்ள அதிகாரப் போராட்டம்தான்.

இங்கே உள்ள முஸ்லீம்களில் சுன்னிகள் பெரும்பான்மையினர். அவர்களுக்கு பாகிஸ்தானின் ஆதரவும் பெரும் நிதிவரவும் உள்ளது. ஆகவே அவர்களே அதிகார மையம். ஷியாக்கள் சிறுபான்மையினர். அவர்கள் சுன்னிகள் மீது கடும் வெறுப்புடனும் அச்சத்துடனும் வாழ்கிறார்கள். சுன்னிகள் ஷியாக்களுக்கு எதிராக நிகழ்த்தும் தாக்குதல்கள் காஷ்மீர அரசியலின் முக்கியமான அம்சம். இதன் விளைவாக ஷியாக்கள் எப்போதும் ஓரிரு வட்டங்களில் அடர்த்தியாக ஒருங்கிணைந்து வாழ்கிறார்கள்.

இங்கே பத்து சதவீதம் வரை அகமதியா முஸ்லீம்கள் உள்ளனர். இவர்கள் எந்தவிதப் பாதுகாப்பும் அற்று சுன்னிகள் மற்றும் ஷியாக்களின் தாக்குதல்களுக்கு அஞ்சி ஒடுங்கி வாழ்கிறார்கள். அவர்களின் வழிபாட்டிடங்கள் தாக்கப்படுவது சாதாரணமான நிகழ்வு. அகமதியாக்களைப் பொறுத்தவரை அவர்கள் இந்திய ராணுவமேலாதிக்கம் கொண்ட இடங்களுக்கு அருகே வாழ விரும்புபவர்கள்.

இரண்டுநாட்கள் கழித்து நாங்கள் மீண்டும் திரும்ப சங்கூவுக்கு வந்தபோது அங்கே உள்ளூர் தேர்தல் ஒன்று முடிந்திருந்தது. காங்கிரஸ் தேசியமாநாடுக்கூட்டணி அதில் வென்றிருந்தது.. நூற்றுக்கணக்கான லாரிகளில் முஸ்லீம் இளைஞர்கள் காங்கிரஸ்கொடியும் தேசியமாநாடுக்கொடியும் ஏந்தி நின்று கத்தி கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு சென்றார்கள். எல்லா வண்டிகளிலும் ஈரானிய அதிபரின் படம் இருந்தது. சுன்னிகளுக்கு எதிரான நிலைப்பாடாக ஷியாக்கள் காங்கிரஸ் ஆதரவை எடுக்கிறார்கள் என்று சொன்னார்கள். அந்த ஆர்ப்பாட்டமே சுன்னிகளுக்கு எதிரானதுதான். சுன்னி பகுதிகளில் வேறுவகையான ஆர்ப்பாட்டம் நிகழ்ந்திருக்கலாம்.

ஊர்வலமாகச் சென்ற பையன்கள் வழியில் நின்ற பெண்களைப்பார்த்து எம்பிக்குதித்தார்கள். பெண்கள் அவர்களை கிண்டல் செய்து உரக்கக் கூச்சலிட்டார்கள். லாரிகளில் இருந்து பையன்கள் கொடிகளை பெண்கள் மீது வீசி சிரித்தனர். என்னென்னவோ கொடிகள். விதவிதமான வண்ணங்கள். பச்சை நிறத்தில் பறந்த ஒரு கொடி ஷியாக்களுக்கு உரிய தனிக்கொடி என்றார்கள்.

ஆக காஷ்மீர் பிரச்சினை என்பது பெரும்பாலும் சுன்னிகளின் போராட்டம். அதுவும் பாகிஸ்தானிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுவது. பாகிஸ்தானிய தீவிரவாதிகள் எல்லைகடந்து வராமல் இருந்தால் ஒருமாதம்கூட காஷ்மீரில் போராட்டம் நீடிக்கமுடியாது. அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளிக்கும் நெருக்கடி அதிகரிக்க அதிகரிக்க காஷ்மீரில் பெரும்பாலும் அமைதி திரும்பிவிட்டிருக்கிறது. அதை எளிய மக்கள் விரும்புவதை, மீண்டும் சுற்றுலாத்தொழில் வளர ஆரம்பித்திருப்பதை அவர்கள் கொண்டாடுவதை எங்கு சென்றாலும் காணலாம்.

ஷியாக்களின் அரசியல் சர்வதேச நிலைமைகளை ஒட்டி தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு சுன்னிகள் மீதான மனவிலக்கமே முக்கியமான தீர்மானிக்கும் சக்தி. அதையொட்டியே இந்திய தேசியத்துடனான உறவு அமைகிறது.

சங்கூவில் இருந்து கார்ட்ஸே கார் என்ற சிற்றூரைத் தேடிச்சென்றோம். மொட்டைமலைகள் வழியாக சுற்றிச்சுற்றி தேடிச்சென்றுகொண்டே இருந்தோம். வழிகேட்டால் சிலர் சொன்னார்கள், சிலர் விழித்தார்கள். அது ஷியாக்கள் மட்டுமே வாழும் உள்கிராமம். ஷியாக்கள் மஞ்சள் இனப்பழங்குடியினர்போலவே இருந்தனர். வீடுகளின் முகப்பில்கூட இரானிய அதிபரின் படம் இருந்தது.

இப்பகுதியின் வீடுகள் காஷ்மீரின் தொன்மையான வீடுகட்டும் முறைப்படி அமைந்தவை. களிமண்ணைக்குழைத்து உருவாக்கிய செங்கற்களாலோ மலையின் உருளைக்கற்களை அடுக்கியோ சுவர் கட்டி அதன் மேலே மரத்தடிகளை அடுக்கிக் கொள்கிறார்கள். அதன்மீது சுள்ளிகளை ஒரு முழம் உயரத்துக்குப் பரப்பி அதன்மேல் மேலும் களிமண் பூசி கூரையிடுகிறார்கள். அந்தக்கூரைமேல் ஒரு அடி உயரத்துக்கு புல் செறிவாக அடுக்கப்படுகிறது.

ஆனால் கூரைகள் சரிவாக இல்லை. மழைபெய்தால் மொத்த நீரும் உள்ளே வந்துவிடும். ஆனால் மழை அங்கே பெய்வதில்லை. பனி பெய்தால் கூரைமேல் ஒரு படலமாக உறைந்துவிடும். மேற்கொண்டு நீர் உள்ளே வராமல் அதுவே தடுக்கும். குளிர் உள்ளே வரக்கூடாதென்பதே கூரையின் நோக்கம்.

வீடுகள் அந்த மண்ணுடன் கலந்தவை போலிருந்தன. வீடுகளுக்கு வெள்ளையடிப்பது போன்ற வழக்கமேதும் இல்லை. தூரத்தில் இருந்து பார்த்தால் வீடுகள் மண்ணுடன் கலந்து பெரிய மண்கட்டிகள் போலவே தென்படுகின்றன.

கிராமத்தில் இருந்து முதுகில் புல்சுமந்து வந்தவரிடம் அவ்வூரில் இருக்கும் புத்தர் சிலை பற்றி கேட்டோம். கீழே செல்லுங்கள் என்று சொன்னார். காரை நிறுத்திவிட்டு ஊருக்குள் சென்றோம். காட்டாறுக்குக் குறுக்காக அரசு புதியதாக இரும்புப்பாலம் கட்டியிருந்தது. எங்கும் மாட்டுச்சாண வீச்சம். தெருவில் இருந்த பெண்களிடம் வழிகேட்டோம். நாங்கள் சென்ற வழி தவறு என்று தெரிந்தது. தூரத்தில் தெரிந்த மண்குன்றின் மீது தெரிந்த கட்டிடங்கள் அச்சிலை இருக்கும் பௌத்த மடாலயத்தின் இடிபாடுகள் என நினைத்துவிட்டோம். அவை வீடுகள் என்றார்கள்.

திரும்பிவந்து மேலே சென்றோம். அங்கே அரசு ஏதோ நலத்திட்டத்துக்காக கட்டிவரும் கட்டிடம்தான் இருந்தது. அதுவும் பூட்டப்பட்டிருந்தது, இன்னொருவரிடம் அங்குள்ள பௌத்த சிலை பற்றிக் கேட்டோம். கிருஷ்ணன் மட்டும்தான் எங்கள் கும்பலில் உடைசல் இந்தி பேசக்கூடியவர். அங்குள்ள முஸ்லீம்கள் எல்லாருமே ஓரளவு இந்தி பேசக்கூடியவர்கள்தான். ஒருவர் கீழே சென்றால் அங்குள்ள பள்ளிக்கு அருகே சிலை இருப்பதாகச் சொன்னார்.

மீண்டும் கீழே இறங்கினோம். நீர் சுழித்தோடிய ஓடையைக் கடக்க மரத்தடிப்பாலம். மறுபக்கம் நூறு குழந்தைகள் படிக்கத்தக்க பள்ளிக்கட்டிடம் புதியதாக இருந்தது. அதற்கப்பால் வயல்வெளி. கோதுமை அறுத்து கட்டிக்கொண்டிருந்தனர். மலையில் இருந்து வந்த குளிர்காற்று சுழன்றடித்தது. சட்டென்று சிலையை கிருஷ்ணன் பார்த்துவிட்டார். அங்கே ஒரு பெரிய பாறையில் புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டிருந்தது.

கார்ட்ஸே கார் புத்தர்சிலை ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. இப்பகுதியில் அன்று செல்வாக்குடனிருந்த திபெத்திய பௌத்த மதத்தின் மையத்தெய்வங்களில் ஒன்றான புத்த மைத்ரேயரின் சிலை. மூன்றடுக்கு மணிமுடி. பெரிய மாலை. ஒரு கையில் கமண்டலம். இன்னொரு கை சின்முத்திரையுடன் இருந்தது. ஒன்பது மீட்டர் உயரமும் மூன்றடி அகலமும் கொண்ட இந்தப்பெரிய சிலை பாமியான் புத்தர்சிலைகளின் அதே பாணியில் அமைந்தது.

மைத்ரேயபுத்தர் என்ற உருவகம் பௌத்தமதத்தில் ஆரம்பகாலம் முதல் இருந்தது என்றாலும் திபெத்திய பௌத்தம்தான் அதை மைய உருவகமாக முன்னெடுத்தது. பௌத்த ஞானமரபின்படி புத்தரின் உடல் மகாதர்மத்தின் தோற்றமேயாகும். அதை தம்மகாய புத்தர் என்கிறார்கள். யுகமுடிவில் பௌத்த ஞானத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காக திரும்பிவரும் புத்தரின் பேருருவமே மைத்ரேய புத்தர். மைத்ரி என்றால் ஒருமை.

மானுட ஞானம் எதிர்காலத்தில் பலவாகச் சிதறி அமைதியின்மையை உருவாக்கும். அப்போது அனைத்து ஞானப்பிரிவினைகளையும் ஒன்றாக்கும் ஒருமையைக் கொண்டுவரும் அறவுருவமே மைத்ரேயர். அவர் இன்று ஒரு போதிசத்வராக காலவெளியில் இருந்துகொண்டிருக்கிறார். இந்த உருவகமே பின்னர் கிறித்தவ மரபில் திரும்பி வரும் ஏசுவாக எடுத்தாளப்பட்டது.

[கார்ட்ஸே கார்]

மைத்ரேயபுத்தர் ஒளிமிக்க ரஜதகிரீடமும் கையில் வஜ்ராயுதமும் அமுதகலசமும் கொண்டவராக இருப்பது வழக்கம். திபெத்தியமரபில் மைத்ரேயபுத்தரின் நூற்றுக்கணக்கான வடிவபேதங்கள் உள்ளன. கார்ட்ஸே காரின் மைத்ரேயர் சிலை ஒரு நாட்டுப்புறத்தன்மையுடன் இருந்தது. ஓங்கிய உருவம் கலையொருமையை கொண்டிருக்கவில்லை. ஆனால் பிரமிப்பூட்டியது.

அங்கே ஏழாம் நூற்றாண்டுவரை வழிபாடு நிகழ்ந்திருக்கிறது. புத்தரின் காலடியில் தீ எரிந்த கருமை தெரிந்தது. அதன்பின்னர் அச்சிலை கைவிடப்பட்டுக் கிடந்தது. சமீபமாகத்தான் கண்டடையப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலாப்பயணிகளோ வேறு எவருமோ அங்கு வருவதாகத் தெரியவில்லை. புத்தர் தனிமையில் கோதுமை வயல்களைப்பார்த்தபடி புன்னகைத்துக்கொண்டு நின்றிருந்தார்.

மீண்டும் மேலே சாலையில் நின்ற காருக்கு வந்தபோது மூச்சிரைக்க ஆரம்பித்திருந்தோம். காரில் ஏறிக்கொண்டதுமே தண்ணீர் குடிக்க போட்டிபோட்டார்கள். அங்கிருந்து மாலைக்குள் ஸுரு சமவெளி வழியாக ரங்தூன் என்ற இடம் வரை செல்வதாக கிருஷ்ணன் திட்டமிட்டிருந்தார். கார் கிளம்பியது.

ஸுரு சமவெளி ஸுரூ ஆறு உருவாக்கிய பெரும் மலையிடைவெளிநிலம். அது சிந்துவின் துணையாறுகளில் முக்கியமானது. இப்பகுதியின் நில அமைப்பைத் தீர்மானிப்பவை இந்தக் காட்டாறுகளும் இவற்றின் சிற்றோடைகளும்தான். இமயம் என்பது பல்லாயிரம் மலைகளின் பரப்பு. இம்மலைகளின் உச்சியில் படியும் கனத்த பனிப்பாளங்கள் உருகி வழிவதனால் இவை கூரிய கூம்புகளாகச் செதுக்கப்படுகின்றன.

இந்த மலைக்குவியல்களின் நடுவே பனி உருகி இறங்குவதன் மூலம் மலை அரிக்கப்பட்டு ஆழமான மலையிடுக்குகள் உருவாகின்றன. இவ்விடுக்குகளில் பனியால் உடைத்து நொறுக்கப்பட்ட பாறைகள், சரல்கற்கள், கூழாங்கற்கள், மணல், பொடிமண் ஆகியவை பீறிட்டு வழிந்து பரவி இறங்கி நிற்கின்றன. தொலைவில் இருந்து பார்க்கையில் பிரம்மாண்டமான அணை ஒன்றின் மதகுகள் வழியாக பீறிட்ட நீர் உறைந்து அசைவிழந்து நிற்பதைப்போலத் தோன்றும். சிலசமயம் அது ஒரு கற்பனைதான் என்றும் அந்த மண்வெள்ளப்பெருக்கு அடுத்தகணமே அச்சமவெளியை மூடி நிரப்பப்போகிறது என்றும் படும்.

மலையிடுக்குகளில் எல்லாம் பனியாறுகள் இறங்குகின்றன. பற்பல கிலோமீட்டர் ஆழத்துக்கு வெள்ளிச்சரிகைபோல பாறைகளில் மோதிநுரைத்து இறங்கும் இந்த ஓடைகள் கீழே ஆறாக இணைகின்றன. அந்த ஆறுகள் மலையின் மண்ணின் நிறத்தில் உள்ளன. சில சமயம் சந்தனக்குழம்பு. சில இடங்களில் சிமிண்ட் கலந்த நீர்போல. சிலசமயம் சுண்ணாம்புக்கலவை கலந்த நீர்போல. காட்டாறுகள் பெரும்பாலும் பாறைகளில் முட்டி மோதி சுழித்துக் கொப்பளித்து மலையிறங்குகின்றன. அபூர்வமாக சில இடங்களில் அவை வேகமிழக்கும்போது அவற்றுடன் வந்த வண்டல் மெல்ல படிய ஆரம்பிக்கிறது. அங்கே ஒரு பெரும் சதுப்புச் சமவெளி உருவாகிறது.

இச்சமவெளிகள் பசுமையானவை. புல்லும் மலைச்செடிகளும் முள்மரங்களும் அடர்ந்து பத்துப்பதினைந்து கிலோமீட்டர் பரப்புக்கு விரிந்து கிடப்பவை. இவற்றில் சில இடங்களில் மக்கள் குடியேறி சிறிய கிராமங்களை அமைத்துள்ளனர். அங்கே அவர்கள் கோதுமையும் முட்டைக்கோசும் பயிரிடுகிறார்கள். ஆப்பிள் மரங்களை நட்டு வளர்க்கிறார்கள். ஸுரு சமவெளி அவற்றில் ஒன்று.

சுற்றிலுமுள்ள மலைகள் பெரும்பாலும் வெறும் மண்குவியல்கள். அவற்றில் பசுமையே இருப்பதில்லை. காரணம் இங்கே மழை அனேகமாக இல்லை என்பதுதான். சிலசமயம் பெருக்காற்றடித்தால் மலைகள் தூசுப்புயலாக வானில் எழுந்துவிடும் என்ற பிரமை ஏற்படும். மண்சரிவில் உருண்டு வந்து நிற்கும் பெரும்பாறைகள் புதைந்தபடியே செல்வதாகத் தோன்றும்.

இங்குள்ள நீராதாரம் என்பது பனிதான். மலையுச்சிப்பனி ஓரிருநாட்களில் உருகி காட்டாறாக ஆகிவிடும். ஆகவே அந்தஓடைகளின் இரு மருங்கும் முளைக்கும் செடிகள் தவிரவேறு தாவரங்கள் வளர முடியாது.மலைகளில் அந்த பச்சைச்சரடுகள் நீளவாட்டில் தொங்குவதுபோலக் கிடக்கும். இலைமாலை சார்த்தப்பட்ட பெரும் சிலைகள் போல.

நான்குபக்கமும் சூழ்ந்த செந்நிற வெற்றுமலைகள் நடுவே இந்தப் பசும் சமவெளிகள் உள்ளங்கையில் பொத்தி வைக்கப்பட்ட சிறிய பச்சைத்துண்டு போல் தோன்றின. ஒரு துண்டு உயிர்வெளி.

இச்சமவெளிக்குள் செல்வதற்கான பாதையும் விசித்திரமானது. காட்டாறு மலைகள் நடுவே அரித்தோடி உருவாக்கிய இடைவெளி வழியாகவே உள்ளே செல்லமுடியும். ஆகவே சாலையின் ஒருபக்கம் எப்போதுமே ஆறு கொந்தளித்துக்கொண்டே கூடவருகிறது. ஒருபக்கம் கழுத்தைத் திருப்பி அண்ணாந்தால்கூட தெரியாத அளவுக்கு உயரமான மலைச்சிகரங்கள். மறுபக்கம் ஆற்றின் ஆழமான பள்ளம். நடுவே சாலை மண்ணில் கீறப்பட்ட ஒரு செம்மண்கோடு போல.

எங்கள் ஓட்டுநர் மிகமிகக் கவனமானவர். அதேசமயம் இத்தகைய சாலைகளில் ஓட்டி ஓட்டி தேர்ச்சியும் பெற்றவர். நிதானமான தன்னம்பிக்கையுடன் ஓட்டிக்கொண்டிருந்தார். சக்கரம் அளவுக்கே ஓட்டும்வளையமும் சுழலக்கூடிய ஒரு பயணம் என்று வேடிக்கையாகச் சொல்லிக்கொண்டோம்.

இமயமலைப்பகுதி முழுக்க பிரபலமாக இருப்பது மகிந்திராவின் ஸைலோ வண்டிதான். பிற பகுதிகளில் இந்த வண்டி அவ்வளவு வெற்றிபெறவில்லை. அதன் அமைப்பு ஆடம்பரமானதாக இல்லை என பலர் நினைக்கிறார்கள். ஆனால் இந்தப்பயணத்தில்தான் அந்த வண்டியின் ஆற்றலை உணர்ந்தோம். மிக உறுதியான கட்டுமானம். அந்தச்சாலையில் வேறுவண்டிகள் பூட்டுபூட்டாகக் கழன்றுவிடும். ஆனால் ஸைலோ ஒரு சிறிய தவறான சத்தம்கூட எழுப்பவில்லை. மிகச்சிறந்த அதிர்வுதாங்கிகள். கிட்டத்தட்ட நூறு கிலோமீட்டர்தூரம் நேரடியாகவே கூழாங்கற்கள் மீதுதான் வண்டி சென்றது. ஆனால் உடலில் பெரிய அலுப்பேதும் ஏற்படவில்லை.

சாலையின் இருபக்கமும் வெளித்த சமவெளிநிலத்தில் பூத்தசெடிகள் மண்டிக்கிடப்பதாகத் தோன்றியது. ஆனால் இறங்கிப்பார்த்தபோது அவை பூக்கள் அல்ல என்று தெரிந்தது. குற்றிச்செடிகள்தான். நீர் குறைந்ததும் சிவந்து வாடி நின்றன. அழுத்தினால் இலைகள் அப்பளம்போல நொறுங்கின. தேவதேவன் ஒவ்வொரு செடியாகப்பிடித்து பார்த்துக்கொண்டே வந்தார்.

திடீரென்று சாலையோரம் ஒரு யாக்கைப்பார்த்தோம். காட்டுமிருகம்தான். இங்கே யாக் முக்கியமான வளர்ப்பு மிருகம். அதன் அடர்த்தியான முடி குளிரில் இருந்து பாதுகாப்பை அளிக்கிறது. யாக்குடன் இணைசேர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட பசுக்களும் இங்கே வளர்க்கப்படுகின்றன. அவையும் அடர்முடிகொண்டவை. குறிப்பாக வால் நீளமாக பெண்களின் கூந்தல்போலவே தொங்கும்.

யாக்குகள் காட்டிலும் சுதந்திரமாக வாழ்கின்றன. அது காட்டு யாக் என்பது தெரிந்தது. அருகே எங்கும் வீடுகள் இல்லை. அதற்கு அச்சமே இல்லை. இந்த மலைப்பகுதியில் அதைவேட்டையாட எந்த மிருகமும் இல்லை. மதம் பரவிய கண்களால் பார்த்து யாக் எங்களை கவனித்தது. நாங்கள் காரில் இருந்து இறங்கியதும் சற்றே தலையைச் சரித்து ம்ம் என எச்சரித்தது. சற்று அப்பால் அதன் இணைகள் இரண்டு மேய்ந்துகொண்டிருந்தன. அவை தலைதூக்கி எங்களைப்பார்த்தன.

மலைச்சரிவில் அஜிதன் ஒரு விசித்திரமான பிராணியைச் சுட்டிக்காட்டினான். ஹிமாலயன் மர்மோத் [Himalayan Marmot -Marmota bobak] என்று அழைக்கப்படும் அந்தப்பிராணி சற்றுப்பெரிய அணில் போலிருந்தது. செம்பழுப்பு நிறம். கொழுத்த கனத்த பின் தொடையும் முடியடர்ந்த வாலும். ஒரு நோக்கில் தரையில் வாழும் மலபார் அணில் என்று தோன்றும். வேகமாக ஓடவில்லை. எங்கள் அசைவைக்கேட்டதும் அப்படியே சிலைத்து நின்றுவிட்டது. அதன் எதிரி என்பது இமாலயச் செம்பருந்துதான். அது அசைவுகளை மட்டுமே பார்க்கக்கூடியது. ஆகவே ஆபத்து என்றால் அசைவில்லாமல் தியானிப்பதே மர்மோதின் வழக்கம்.

சற்றுநேரத்தில் ஏராளமான மர்மோதுகளை பார்க்க ஆரம்பித்தோம். உருண்டுகிடந்த பாறைகள் நடுவே அவை சுறுசுறுப்பாக பணியாற்றிக்கொண்டிருந்தன. மாவுச்சத்துள்ள புல்லை உண்பதும் ஆழமாக முயல்வளை போல மண்ணுக்குள் சென்ற வளைகளுக்குள் கொண்டு சென்று சேர்ப்பதும்தான் பணி. பெரும்பாலானவை நன்றாக உண்டு கொழுத்திருந்தன.

பாறைகள் நடுவே அவை ஓடுவது வேடிக்கையாக இருந்தது. பனிக்காலம் முழுக்க அந்த வளைகளுக்குள் அவை பனித்துயிலில் ஆழ்ந்திருக்கும். இப்போது அதற்காக உடலில் கொழுப்பைச் சேர்க்கின்றன. குண்டான குடும்பப்பெண்கள் போன்ற அசைவு. தாவும்போது பளபளக்கும் முடிக்குள் கொழுப்பு சுருள்வதும் ததும்புவதும் தெரிந்தது.

ஸுரு சமவெளியில் மிகக்குறைவாகவே மக்கள் வாழ்கிறார்கள். பெரும்பாலான நிலம் பண்படுத்தப்படாததுதான்.  2005-க்குப்பின்னர்தான் சுற்றுலாப்பயணிகளுக்கு சாலை திறக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அனேகமாக பயணிகள் என எவரும் வருவதில்லை. நாங்கள் இன்னொரு பயணிகள் வாகனத்தை பார்க்கவே இல்லை. மொத்தப்பயணத்திலும் இரண்டே இரண்டு சிறிய லாரிகளை மட்டுமே கண்டோம்.

மாலை மங்க ஆரம்பித்தது. தங்குமிடம் தேட ஆரம்பித்தோம். நாங்கள் தங்குவதாகத் திட்டமிட்டிருந்த இடம் ரங்துன். ஆனால் அதுவரைக்கும் செல்ல முடியுமென்று தோன்றவில்லை. இருட்டியபின்னர் அந்தப்பாதையில் வண்டி ஓட்டுவதைப்பற்றி சிந்திக்கவே பீதியாக இருந்தது.

வழியில் ஒரு ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத்துறை பயணிகள் விடுதியின் அறிவிப்புப் பலகையைக் கண்டோம். வண்டியை திருப்பினோம். மலைச்சரிவில் இருந்தது அந்தக் கட்டிடம். திறந்தே நெடுநாட்கள் ஆகியிருக்கும்போல. உள்ளே சென்று பார்த்தோம். சரியான பேய்பங்களா. கண்ணாடிகள் உடைந்திருந்தன. குழாய்கள் உடைந்து கிடந்தன. மெல்லிய தூசி படர்ந்திருந்தது. வேறு வழியில்லை. மீண்டும் பயணம்.

ஆறு மணியளவில் பர்க்காசிக்குக்கு சென்று சேர்ந்தோம். அங்கே விசாரித்து ஜம்முகாஷ்மீர் அரசின் விருந்தினர் விடுதியைக் கண்டுபிடித்தோம். ஒரு மலைச்சரிவில் விடுதி இருப்பதும் அதன் முன் இன்னொரு கார் கிடப்பதும் தெரிந்தபோது ஆறுதலாக இருந்தது. விடுதியில் இரண்டு இளைஞர்களும் ஒரு விடுதிப்பொறுப்பாளரும் இருந்தார்கள். இளைஞர்கள் ஒரு கோழியை சுடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

விடுதிப்பொறுப்பாளர் ரொட்டி சுட்டுத் தருவதாக ஒப்புக்கொண்டார், விடுதியறைகளும் வசதியானவை. காலையில் வெந்நீர் கிடைப்பதற்கும் பேசிக்கொண்டோம். வாளி ஒன்றுக்கு இருபது ரூபாய். அங்கே எரிபொருள் என்பது லாரியில் வரும் மண்ணெண்ணை மட்டும்தான்.

மாலை பர்க்காசிக் விடுதியை ஒட்டிய சாலையில் ஒரு நடை சென்றோம். குளிரில் நடப்பது ஒரு இனிய அனுபவம். உடைகளுக்குள் உடல் நமக்கான வெப்பத்தை சமைத்துக்கொள்வதை உணர முடியும். மலைகள் இருட்டிக்கொண்டு வந்தன. வெகுதொலைவில் தெரிந்த நான் குன் மலைச்சிகரங்கள் மாலையின் ஒளியில் மின்னியபடி மிக அருகே தலைக்குமேல் என தெரிந்தன.

திரும்பி வந்து உணவுண்டு படுத்துக்கொண்டோம். விடுதியில் கட்டிலில் படுத்தபோது உடம்பு தாலாட்டுவதுபோல இருந்தது. வண்டியின் ஆட்டம் தூங்கியபின் கனவிலும் எஞ்சியிருந்தது.

[மேலும்]

மேலும் புகைப்படங்கள்

முந்தைய கட்டுரைஒளியுலகம்
அடுத்த கட்டுரைவிதைக்காடு