சோனாமார்க்கின் விடுதியில் காலை ஐந்துமணிக்கே எழுந்துவிட்டோம். கார்கில் செல்லும் பாதையை காலை ஏழுமணிக்குத்தான் திறப்பார்கள் என்று விடுதிக்காரர் சொன்னார். விடுதியின் உரிமையாளர் அவராக இருந்தாலும் வெந்நீர் கொண்டு வைப்பதுவரை அவரே செய்தார். ஜமால் என்று தன் பெயரைச் சொன்னார். ஷியா முஸ்லீம் என்று தெரிந்தது. அவரது மகன்களும் இருவேலைக்காரர்களும் இணைந்து அங்கே எல்லாவற்றையும் செய்தனர். விடுதிக்குள்ளேயே இரண்டு அறைகளில் அவர்கள் தங்கியிருந்தனர். எங்களைத்தவிர ஒரு சிந்தி குடும்பம் அங்கே தங்கியிருந்தது.
வாளியில் கொதிக்கும் வெந்நீர் கொண்டுவந்து வைத்தார்கள். அதில் குளித்தபோது இரவெல்லாம் உடலைச்சுருட்டித் தூங்கிய களைப்பு மறைந்தது. தசைகள் இலகுவாகி உடல் நிமிர்ந்ததுபோல உணர்ந்தேன். விடுதியில் தேநீருக்குச் சொன்னேன். சிந்தி குடும்பம் சமையலறைக்கே சென்று டீயை வாங்கிக்கொள்வதைக் கண்டபின் நானும் தேவதேவனும் உள்ளே சென்றோம். ஜமாலின் மகன் தேநீர் போட்டுக்கொண்டிருந்தான். தேவதேவன் சீனி தேவையில்லை என்பதை பலமுறை சொன்னாலும் அவனுக்குப் புரியவில்லை. நான் ‘சீனி கம்’ என்றேன். கச்சிதமாகப்புரிந்துகொண்டான்.
இளவெயில் மலைகளுக்கு அப்பால் இருந்து ஒரு சிறிய இடைவெளி வழியாக வந்து மறுபக்கம் இருந்த மலைச்சிகரத்தை செவ்வொளி பெறச்செய்தது. மலைச்சரிவுகளின் விளிம்புகளை ஒளி கூர் தீட்டிக்காட்டியது. ஆனால் சூரியன் நேரடியாகத் தெரிய பத்துமணிக்கு மேல் ஆகும். மலைகளுக்கு அப்பாலிருந்து சூரியன் வெளிவந்தாகவேண்டும். குளிரில் உடல் நடுங்க நின்று மலைகள் மீது ஒளி நிறம் மாறிக்கொண்டே இருப்பதை நானும் தேவதேவனும் பார்த்தோம்.
காஷ்மீர்வாசிகளுக்கே உரிய முறையில் பெரிய கம்பளத்தை கோட்டு போல அணிந்திருந்த ஜமால் ‘இனிய வரவு…மீண்டும் வாருங்கள்’ என்று சொல்லி விடைகொடுத்தார். ஆறரை மணிக்குக் கிளம்பினோம். இருபக்கமும் புல்வெளிகளில் வால்களை உதறியபடி குதிரைகள் குனிந்து மேய்ந்தன. சாலை ஓரத்துக் கடைகளின் முன்னால் சிறிய கூடாரங்களைக் கட்டி டீ விற்றுக்கொண்டிருந்தார்கள்.
கார்கில் செல்லும் சாலை இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்று. [NHD1] எல்லைப்புற சாலை அமைப்பால் நிர்வகிக்கப்படுவது. சமவெளிகளில் சாலை நன்றாகவே இருந்தது. வேகமாகச் செல்லவும் முடிந்தது. சில லாரிகளை முந்திச்சென்றோம். ஆனால் விரைவிலேயே சாலையின் இயல்பு மாற ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் ஒரு பயங்கர அனுபவமாக ஆகத்தொடங்கியது சாலை.
இமயமலையின் மண் மிக மென்மையானது. பூமியில் மிக வயதுகுறைந்த மலை என அதைச் சொல்கிறார்கள் நிலவியலாளர்கள். இந்திய-ஆஸ்திரேலியக் கண்டத்தட்டு யுரேஷியக் கண்டத்தட்டில் மோதியதன் விளைவாக ஏழுகோடி வருடங்களுக்கு முன்பிருந்து மெல்லமெல்ல உயர ஆரம்பித்த நிலப்பகுதி இது. அந்த உயரத்தில் உள்ள மண்ணை ஒரு மலை என்று சொல்லவே முடியாது. சேற்றுமண்ணை கூழாங்கற்களுடன் கலந்து அள்ளிக்கொட்டியதுபோலத் தெரியும். இந்தச்சேற்றுமண் பூமி உருவாக ஆரம்பித்த காலத்தில் பெய்த பெருமழையில் உருவானது. அந்தக்கால பெருவெள்ளத்தால் உருவான உருளைக்கற்கள் கலந்தது.
இமயமலையின் பாறைகள் பெரும்பாலும் சேற்றுப்படிவுகள் இறுகி உருவானவை. அத்துடன் விதவிதமான கனிமங்கள் கலந்த பாறைகளும் ஆங்காங்கே எழுந்து தெரிகின்றன. மரதகப்பச்சைப்பாறைகள், துருப்பிடித்த இரும்புபோன்ற செந்நிறப்பாறைகள், கருமெழுகுபோன்ற பாறைகள், காக்கைப்பொன் மின்னும் கருங்கல்பாறைகள், சாக்லேட் நிறமான பாறைகள், மிக அபூர்வமாக காபிநிறப்பாறைகள்.
எல்லா மலைச்சரிவுகளும் மாபெரும் கைவிரல்களால் வழிக்கப்பட்டவை போன்ற தடங்கள் கொண்டவை. பனிப்பாளங்கள் உருகி வழிவதனால் உருவான தடங்கள் அவை. பனியில் குளிர்ந்து பின் வேனிலில் சூடாகிக்கொண்டே இருப்பதனால் மலைப்பாறைகள் நெருக்கமாக வெடித்து பிரம்மாண்டமான நூலகம் ஒன்று சரிந்து குவிந்து புத்தகக்கூம்பாரமாகக் கிடப்பதுபோலத் தெரிகின்றன. அவ்வப்போது மொத்தமாகச் சரிந்து கீழிறங்கி கற்குவியல்களாக வழிந்து நிற்கின்றன.
[ உலகிலேயே அபாயகரமான பாதை]
ஒரு கட்டுமான வளாகத்துக்குள் சிறு பூச்சியாக மாறி ஊர்ந்துகொண்டிருப்பதுபோன்ற பிரமையை எழுப்பியது இமயமலை. ஜல்லிக்குவியல்கள், கற்குவியல்கள், மணற்குவியல்கள், கான்கிரீட் குழைத்த குவியல்கள்,சேற்றுக்குவியல்கள். மொத்த மண்ணிலும் சிமிண்ட் கலந்திருப்பதுபோல ஒரு நிறம். இருபக்கமும் வான்முட்ட நின்ற மலைகளுக்கு நடுவே சென்றபோது சற்றுமுன்புதான் அங்கே பிரம்மாண்டமாக ஏதோ நிகழ்ந்திருப்பதுபோல தோன்றியது. எல்லாமே அசைந்து உடைந்து சரிந்து முட்டி மோதி மெல்ல அசைவிழந்து அடுத்த அசைவுக்காகக் காத்து நிற்கின்றன!
மலையடுக்குகள் வழியாக ஊடுருவிச்சென்ற பாதை சட்டென்று மலை ஒன்றின் விலாவில் ஏறி வளைய ஆரம்பித்தது. இமயமலையின் சாலைகள் தென்னகத்தில் எங்கும் காணமுடியாதவை. குவிந்து சரிந்து கிடக்கும் நிலையற்ற மண்மலையின் மீது பத்தடி அகலத்தில் போடப்பட்ட சாலை. சில இடங்களில் ஆறடி அகலம்கூட இருப்பதில்லை. பக்கவாட்டில் அமர்ந்திருந்தால் சக்கரம் சாலையில் இருக்க காரின் எஞ்சிய விளிம்பு அந்தரத்தில் நிற்பதாகத் தெரியும். கீழே செங்குத்தாக நாலைந்து கீலோமீட்டர் ஆழத்தில் மலையின் அடுத்த மடிப்பு. நாம் வந்த சாலையைத் திரும்பிப்பார்த்தால் வயிற்றின் தசைகள் இழுத்து முறுக்கிக்கொள்ளும்.
இந்த அழகில் சாலையின் பல இடங்களில் மேலிருந்து சரிந்து ஒலித்து இறங்கும் அருவிகள் சாலையை அரித்து பள்ளத்தில் இறங்கி உப்புக்குவியல்களாக ஆழத்தில் கொட்டிக்கொண்டிருக்கும். மலைமீதிருந்து உருண்டு வந்த பாறைகள் சிலசமயம் சாலையிலேயே கிடக்கும். அந்த எட்டடி அகலச்சாலைக்குள் அந்தக்கல்லைச் சுற்றிக்கொண்டு வண்டி செல்லவேண்டும். எதிரே வரும் லாரிகளுக்கு வழிவிட ஆங்காங்கே சிறிய மேடுகள். அவற்றில் கார் ஏறும்போது மேலும் ஒரு அடி தூரம் சக்கரம் நகர்ந்தால் கார் முடிவேயற்ற ஆழம் நோக்கிச் சென்றுவிடும் என்ற எண்ணம் ஏற்படும்.
எந்த நம்பிக்கையில் ஓர் இயந்திரத்தை நம்பி அந்த விளிம்புவரை செல்கிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே அது இயந்திரம் ஆதலினால்தான் என்றும் பட்டது. அதன் விதிகள் வரையறை செய்யப்பட்டவை. அது ஒரு குதிரை என்றால் அந்த எல்லைவரை அதை நம்ப முடியுமா? இல்லை ஒருவேளை குதிரையின் எல்லையும் வரையறை செய்யப்பட்டதுதானா?
மதியம் வரை பயணம். யானையின் விலாவில் ஊர்ந்துசெல்லும் பேன் போல எங்கள் கார் சென்றது. குலுங்கி அதிர்ந்து. சிலசமயம் அலைகளில் படகு போல. சிலசமயம் யானைமேல் அம்பாரி போல. சிலசமயம் ரங்கராட்டினத்தில் இறங்கும் தொட்டிபோல. மதியம் கார்கிலைச் சென்றடைந்தோம்.
கார்கில் என்ற ஊரின் பெயர் இன்று இந்தியா முழுக்க தெரிந்த ஒன்று. உள்ளூர்க்காரர்கள் கறுகில் என்று சொல்கிறார்கள். கார்கிலின் முக்கியத்துவம் அது காஷ்மீர்ச்சமவெளியையும் லடாக்கையும் இணைக்கும் சாலையில் உள்ள ஊர் அது என்பதுதான். பூரிக் என்று முற்காலத்தில் சொல்லப்பட்ட இப்பகுதி ஸுரு சமவெளி ஸன்ஸ்கர் சமவெளி உள்ளிட்ட பன்னிரண்டுக்கும் மேற்பட்ட மலையிடுக்குச் சமவெளிகளில் வாழும் மக்களின் தொகுதியாகும்.
பழங்காலத்தில் இருந்தே இது திபெத்திய பௌத்தமதத்தினரான மஞ்சள் இனப் பழங்குடிகளின் நிலமாக இருந்தது. அவர்கள் மிகமிகக் குறைந்த எண்ணிக்கை கொண்டவர்கள். ஒரேசமவெளியில் நிலைத்து வேளாண்மையும் மேய்ச்சலும் செய்யக்கூடியவர்கள். ஏழாம் நூற்றாண்டில்தான் இப்பகுதிக்கு இன்றைய பாகிஸ்தானியப்பகுதிகளில் அலைந்து திரியக்கூடிய இஸ்லாமிய மேய்ச்சல் பழங்குடிகள் குடியேற ஆரம்பித்தனர். அவர்கள் தார்த்தாரிய இனத்தவர்.
இவ்வூர்ப் பழங்குடிகளுக்கும் அவர்களுக்கும் இடையே பூசல்கள் நிகழ்ந்தாலும் அவர்களால் எதிர்க்கமுடியவில்லை. அதற்கு முதன்மையான காரணம் திபெத்திய அரசு ராணுவ அரசு அல்ல என்பதே. லாமாக்கள் என்னும் மதகுருக்களை ஆட்சியாளர்களாகக் கொண்ட திபெத்திய அரசும் சிற்றரசுகளும் முழுக்கமுழுக்க மத அதிகாரத்தாலேயே ஆட்சி செய்பவை. தற்காப்புக்கு அவை இப்பகுதியின் கடினமான பாதைகளையும் கடும்பனியையும் மட்டுமே நம்பியிருந்தனர். ஆயுதமில்லா அரசுகள் என அவற்றைச் சொல்லலாம்.
ஆகவே அக்கால பாகிஸ்தானிய ஆப்கானிய போர்ச்சூழலில் இருந்து தப்பி வந்த இஸ்லாமிய மேய்ச்சல்பழங்குடிகள் இந்நிலங்களைக் கைப்பற்றிக்கொண்டபோது அவர்களுக்கு அரசாங்க எதிர்ப்பு என ஏதும் நிகழவில்லை. ஆரம்பத்தில் வந்தவர்கள் ஆப்கன், மற்றும் ஈரானில் இருந்து வந்த தார்த்தாரிய ஷியா முஸ்லீம்கள். அவர்கள் இங்கே வாழ்ந்த மஞ்சள் இனத்துப்பழங்குடிகளுடன் காலப்போக்கில் கலந்துவிட்டனர். பின்னர் வந்தவர்கள் சுன்னி முஸ்லீம்கள். அவர்கள் தங்கள் இன அடையாளத்தைப் பேணுகிறார்கள். ஷியா முஸ்லீம்களுக்கு மஞ்சள் இனச்சாயல் இன்றுள்ளது. சுன்னிகள் எல்லாவகையிலும் தனித்துத்தெரிகிறார்கள்.
ஒன்பதாம் நூற்றாண்டில் காஷோ என்று இவர்களால் குறிப்பிடப்படும் தாதாகான் இப்பகுதிக்கு படைகளுடன் வந்தார். ஷியா முஸ்லீம்களான ஆப்கானிய சுல்தான்களின் வம்சத்தில் வந்த அவர் தன் சகோதரர்களால் துரத்தப்பட்டு இப்பகுதிக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர் இங்கிருந்த சிறிய குடியிருப்புகளை ஒருங்கிணைத்து ஒரு அரசை அமைத்தார். அவர் முதல் புரிக் சுல்தான் என்று அழைக்கப்படுகிறார். அதன் பின்னர் வெவ்வேறு சுல்தான்கள் இப்பகுதியை ஆட்சி செய்திருக்கிறார்கள்.
பதினேழாம் நூற்றாண்டில் இன்றைய பாகிஸ்தானைச்சேர்ந்த காரகோரம் மலையில் அமைந்துள்ள மலையுச்சி அரசான பால்டிஸ்தானின் அரசர் அலி ஷெர் கான் அஞ்சன் கார்கில் பகுதியை கைப்பற்றி தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஸ்ரீநகரை ஆண்ட இந்து அரசர்களான டோக்ரி வம்சத்தினர் கார்கிலையும் லே பகுதியையும் கைப்பற்றி தங்கள் அரசுடன் இணைத்துக்கொண்டனர். 1947-இல் டோக்ரி வம்சத்து கடைசி மன்னர் மகராஜா ஹரிசிங் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க ஒப்புக்கொண்டார்.
இன்றைய காஷ்மீர் மாநிலம் மூன்று பகுதிகளால் ஆனது. காஷ்மீர் சமவெளி, ஜம்மு அடிவாரச்சமவெளி மற்றும் லடாக் மலைநாடு. காஷ்மீர் சமவெளி முஸ்லீம் பெரும்பான்மை கொண்டது. ஜம்மு இந்துப்பெரும்பான்மை கொண்டது. லடாக் பௌத்த நிலம். இம்மூன்று நிலங்களையும் சேர்த்து பாகிஸ்தானின் பகுதியாக ஆக்கவேண்டும் என்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளான காஷ்மீர் பிரிவினைவாதிகள் கோருகிறார்கள். அவர்களில் ஒரு சாரார் காஷ்மீர் சுதந்திர இஸ்லாமிய நாடாக நீடிக்கவேண்டுமென விரும்புகிறார்கள்.
கார்கில் பாதை லடாக்கை ஸ்ரீநகருடன் இணைக்கக்கூடியது. இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்புதான் லடாக்கை மணாலியுடன் இணைக்கும் மலைப்பாதை அமைக்கப்பட்டது. இன்னும் அந்தச்சாலை முழுமையாக அமையவில்லை. ஆகவே முன்பு லடாக் வெளியுலகுடன் தொடர்பு கொள்ளும் ஒரே பாதை கார்கில் வழியாகச் செல்வதுதான். ஆகவே இப்பாதையைக் கைப்பற்ற பாகிஸ்தான் பலமுறை முயன்றுள்ளது.
முன்பு கார்கில் வழியாகச் செல்லும் லடாக் பாதை குதிரைகள் மட்டும் செல்லக்கூடிய ஒற்றைத்தடமாக இருந்தது. குளிர்காலத்தில் பாதை முழுமையாகவே மூடிவிடும். பாகிஸ்தானிய ராணுவம் 1951-இல் இப்பாதையை கைப்பற்றியது. லே பகுதியில் உள்ள சிகரங்களில் பீரங்கிகளை அமைத்தது. அப்போது இந்திய ராணுவத்தலைவராக இருந்த ஜெனரல் கரியப்பா உடனடியாக ஸ்ரீநகர் முதல் லடாக் வரை ஒரு ராணுவச்சாலை அமைக்க ஆணையிட்டார். வெறும் நான்கு மாதங்களில் அந்தச்சாலை அமைக்கப்பட்டது. அதன்வழியாகச் சென்ற ராணுவ டாங்குகள் பாகிஸ்தானிய ராணுவத்தை விரட்டியடித்தன. லடாக் வெளியுலகுடன் நிரந்தரத் தொடர்பு பெற்றது.
அச்சாலையை அமைத்தவர் மேஜர் தங்கவேலு. தமிழகத்தைச் சேர்ந்தவர். அவருக்கும் அந்தப்பணியில் விபத்திலும் குளிரிலும் மாண்ட வீரர்களுக்கும் இந்திய அரசு அமைத்த நினைவாலயம் கார்கில் சாலையில் உள்ளது. அங்கே காலையில் இறங்கிச்சென்று பார்த்தோம். மேஜர் தங்கவேலுவின் படையில் இறந்தவர்களில் பலர் தமிழர்கள் என்று தெரிந்தது.
1999-இல் பாகிஸ்தானிய ராணுவம் கார்கிலைக் கைப்பற்றுவதற்காகச் செய்த இரண்டாவது போரைத்தான் நாம் கார்கில் போர் என நினைவுகூர்கிறோம். கார்கிலைச் சூழ்ந்துள்ள டாலோலிங் போன்ற மலைச்சிகரங்களை கைப்பற்றிக்கொண்டு லடாக்கை பிணைக்கைதியாக வைத்து காஷ்மீருக்கான பேரத்தை ஆரம்பிக்க பாகிஸ்தான் திட்டமிட்டது. குளிர்காலத்தில் இந்திய ரோந்துப்படைகள் கவனமற்றிருந்தபோது ஹெலிகாப்டர்கள் மூலம் பாகிஸ்தானிய ராணுவத்தினர் பீரங்கிகளுடன் மலைமுகடுகளுக்கு இறக்கப்பட்டனர். இப்பகுதியைப்பார்த்தால் எவருக்கும் தெரியக்கூடிய ஒன்று உண்டு. மலைச்சிகரங்களில் தொலைதூர பீரங்கிகளை அமைத்தால் மலைச்சிகரங்களினூடாகச் செல்லும் இப்பாதையை முழுமையாகவே பிடித்துவிடலாம்.
அன்றைய பாகிஸ்தான் அரசு அரசியல் இக்கட்டில் இருந்த சமயம் அது. பாகிஸ்தானிய ராணுவமும் அரசும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூலிப்படைகளாகவே சென்ற நாற்பதுவருடங்களாகச் செயல்பட்டுவருகின்றன. பாகிஸ்தானின் திவாலான பொருளியல் அமெரிக்க உதவியையே நாடியிருக்கிறது. ஆகவே ஈராக்கிலும் ஆஃப்கானிலும் அமெரிக்கா செய்யும் போரை பாகிஸ்தானிய ராணுவம் ஆதரித்துத்தான் ஆகவேண்டும். ஆனால் அதன் விளைவாக உள்நாட்டில் உள்ள பெரும் அரசியல்சக்தியான இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் சினம் பாகிஸ்தானிய அரசை நோக்கித் திரும்பியது
அதைச்சமாளிக்க ராணுவத்தளபதியான பர்வேஸ் முஷரஃப் கண்டுபிடித்த குறுக்குவழிதான் கார்கில் படையெடுப்பு. காஷ்மீருக்கான கடுமையான போர் ஒன்றைச் செய்தால் உள்நாட்டு எதிர்ப்பை திசை திருப்பிவிடமுடியுமென அவர் நினைத்தார். குறைந்தபட்சம் காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச அரங்கில் பேசுபொருளாக ஆக்கினால்கூட போதும். ஆனால் வெளிப்படையான ஓர் எல்லைமீறலை அமெரிக்கா அனுமதிக்காது. ஏனென்றால் 1971-இல் பாகிஸ்தான் கையெழுத்திட்ட சிம்லா ஒப்பந்தப்படி இப்பகுதியின் எல்லைகளை பாகிஸ்தான் சட்டபூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறது.
ஆகவே இந்திய முஜாஹிதீன்கள் என்ற தீவிரவாதிகளின் வடிவில் பாகிஸ்தானிய ராணுவம் கார்கிலுக்கு அனுப்பப்பட்டது. கார்கில் ஊடுருவலை இந்திய ராணுவம் கடுமையான முயற்சியின் விளைவாக முறியடித்தது. பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது பழிபோட்டு பர்வேஸ் முஷரஃப் தப்பித்துக் கொண்டார். ஷெரீஃப் அவரது அரசியல் வாழ்க்கையை இழந்தார்.
கார்கில் வீரர்களுக்கான நினைவுச்சின்னம் ஒன்று திராஸ் மலைமுகடுகளுக்குக் கீழே அமைக்கப்பட்டுள்ளது. அங்கே அப்போரில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன
பின்னாளில் பாகிஸ்தானிய அதிகாரிகளே தெளிவாக அப்படையெடுப்பு பாகிஸ்தானிய ராணுவத்தால் நடத்தப்பட்டது என்று ஒப்புக்கொண்டனர். சட்டபூர்வமாக ராணுவவீரர்களின் சடலங்களை பெற்றும் கொண்டனர். ஆனால் இந்தியாவில் உள்ள இஸ்லாமிய ஆதரவு இதழாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளில் ஒருசாரார் இப்போதும்கூட அது பாகிஸ்தானிய படையெடுப்பு அல்ல என்றே சொல்லிவருகிறார்கள்.
[மேலும்]