நூறுநிலங்களின் மலை – 1

நித்ய சைதன்ய யதியின் மாணவரான ஷௌகத் அலி நித்யாவின் மறைவுக்குப்பின் கிட்டத்தட்ட நாலாண்டுக்காலம் இமயத்தில் அலைந்த அனுபவங்களை ‘இமயத்தில்’ என்ற பயணக்கட்டுரைநூலாக மலையாளத்தில் எழுதினார். நீண்ட இடைவேளைக்குப்பின் உஸ்தாதை திருவண்ணமாலையில் பவா செல்லத்துரையின் நண்பராகச் சந்தித்தேன். அவர் கேரள சாகித்ய அக்காதமி விருது பெற்ற அந்நூலை அளித்தார். அதை வாசித்தபோது மீண்டும் இமயப்பயணம் பற்றிய கனவை அடைந்தேன்.

அக்கனவு எப்போதும் என்னுடன் இருந்துகொண்டிருந்த ஒன்றுதான். எப்போதென்று சொல்லவேண்டுமென்றால் என் இளமையின் அந்தரங்கத்திற்குள் செல்ல வேண்டும். சிவன் வீற்றிருக்கும் கைலாயம் என்ற வெண்பனிமலையின் காலண்டர் ஓவியங்கள்தான் எழுத்தறியா வயதிலேயே அக்கனவை உள்ளூர விதைத்திருக்கவேண்டும். அற்புதமான கதைசொல்லியான என் அம்மா புராணக்கதைகள் வழியாக அக்கனவை வளர்த்திருக்கவேண்டும். மன்னும் இமய மலையெங்கள் மலையே என்ற வரி பிறகெப்போதோ ஒளியுடன் உள்ளே வந்து தங்கிவிட்டது. வாசிக்க ஆரம்பித்த ஆரம்பகட்ட நூல்களிலேயே இமயத்தைப்பற்றிய சித்திரங்கள் வர ஆரம்பித்து விட்டன.

சிறுவயதில் நான் என் கற்பனையில் பல்லாயிரம் முறை இந்த மலைச்சரிவுகளில் உலவியிருக்கிறேன். குட்டிக்குட்டி மண்மேடுகளில் குப்புறப்படுத்துக்கொண்டு அவற்றை இமயமலையடுக்குகளாக பிரம்மாண்டமாக்கியிருக்கிறேன். எறும்புகள் யானைக்கூட்டங்களாக, வெண்மணல் பனியடுக்குகளாக அது எனக்குள் விரிந்துகொண்டே சென்றிருக்கிறது. எந்த மலையையும் இமயத்துடன் ஒப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். ஆம், நீரெல்லாம் கங்கை என்பதுபோல மலையெல்லாம் இமயம்தான்.

நான் என்னை ஒரு பயணியாக எண்ணிக்கொள்ள ஆரம்பித்ததும் அப்போதுதான். அ.லெ.நடராஜன் எழுதிய சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு அக்காலத்தில் என்னை ஆட்கொண்ட முக்கியமான நூல். நான் ஏழாம் வகுப்பு படிக்கையில் ஒரு போட்டியில் அது எனக்குப்பரிசாகக் கிடைத்தது. அதில் என்னைக் கவர்ந்தது சுவாமிஜி அவரது பவிராஜக வாழ்க்கையில் இமயமலையடுக்குகளிலும் கீழே விரிந்துகிடந்த இந்தியப்பெருநிலத்திலும் செய்த பயணங்கள். நூற்றுக்கணக்கான முறை அந்நூலில் அந்தப் பயணப்பகுதிகளை வாசித்திருக்கிறேன்.

அதன்பின் பயண எழுத்தாளர்கள் மீது எனக்கு பெரும் ஈடுபாடு ஏற்பட்டது. மலையாள எழுத்தாளர் வெட்டூர் ராமன்நாயர் எழுதிய புரி முதல் நாசிக் வரை என்ற பயணக்கட்டுரைநூல் இந்தியா என்ற நிலப்பரப்பை என்னுள் நிலைநாட்டியது. தீராப்பயணியான எஸ்.கெ.பொற்றேக்காட்டின் பயணக்கட்டுரைகளுக்காக நூலகங்களில் தேடி அலைந்தேன். தமிழில் தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான், ந.சுப்புரெட்டியார், பரணீதரன் ஆகியோரின் ஆலயப்பயணங்கள். அங்கிருந்து பின்னகர்ந்து ஏ.கே.செட்டியாரின் பயணநூல்கள். அதற்கும் முன்பு சென்று தமிழின் முதல் பயணநூல் என்று சொல்லத்தக்க பகடாலு நரசிம்மலு நாயுடுவின் தென்னகயாத்திரை என நான் வாசிக்காத பயணநூல்கள் தமிழில் குறைவே.

வீட்டைவிட்டுக்கிளம்பி பயணம்செய்ய ஆரம்பித்த முதிரா இளமையிலேயே கங்கைக்கும் இமயமலைக்கும்தான் வந்தேன். அன்று உத்தரகாசி முதல் கேதார்நாத் வரை துறவியாக நடந்தே சென்றேன். அன்று கண்ட இமயம் ஒருபக்கம் என்னுடைய எல்லா கற்பனைகளையும் சிறிதாக்கி ஓங்கி எழுவதாக இருந்தது. மறுபக்கம் அதன் ஒவ்வொரு மடிப்பும் ஆழமும் எனக்கு நன்கு அறிமுகமானதாகவும் இருந்தது. நான் அதுவரை காணாத என் முதுமூதாதையர் முகங்கள் போலிருந்தன கைலாயமும் கஞ்சன் ஜங்காவும். அதன்பின்பு எண்பத்தியெட்டில் தனியாக மீண்டும் இமயம் வந்தேன். கங்கோத்ரியையும் யமுனோத்ரியையும் கண்டேன்.

எழுத்தாளனாக அறியப்பட்டபின் சமீபத்தில் நண்பர்களுடன் ஏற்கனவே இருமுறை இமயப்பயணங்கள் செய்திருக்கிறேன். 2008ல் நானும் வசந்தகுமாரும் யுவன் சந்திரசேகரும் கிருஷ்ணனும் அரங்கசாமியும் கோவை அருணும் ஹரித்வார் கும்பமேளாவுக்குச் சென்றோம். அங்கிருந்து கஙகையில் குளித்தபடியே மலையேறி ருத்ரபிரயாக் வரை சென்று மீண்டோம். அதன்பின் 2010ல் நானும் வசந்தகுமாரும் யுவன் சந்திரசேகரும் கே.பி.வினோத்தும் அரங்கசாமியும் கிருஷ்ணனும் செந்தில்குமார்தேவனும் தங்கவேலும் வங்காளம் வழியாக சிக்கிம் மற்றும் பூட்டானுக்குச் சென்றோம்.

அவை இமயத்தின் மையமும் கிழக்கும். இம்முறை இமயத்தின் மேற்கே ஒரு பயணம் சென்றாலென்ன என்று கிருஷ்ணனிடம் சொன்னேன். என்னுடைய அலுவல்கள் காரணமாக பயணம் பிந்திச்சென்றுகொண்டே இருந்தது. அத்துடன் வரவிருந்த பல நண்பர்கள் நின்றுவிட புதியவர்களைச் சேர்க்கவேண்டியிருந்தது. முன்னதாகவே விமான இருக்கைகள் முன்பதிவு செய்துகொண்டமையால் அதிக செலவில்லாமல் ஏற்பாடுகளைச் செய்துகொண்டோம். ஆனால் நண்பர் சேலம் பிரசாத்தின் திருமணம் காரணமாக தேதியை மீண்டும் மாற்றி விமான முன்பதிவை மாற்ற நேர்ந்தது.

25-ஆம் தேதி நானும் என் மகன் அஜிதனும் பேருந்தில் பெங்களூர் வந்தோம். அங்கே ஒரு நண்பர் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. நண்பர் ஷிமோகா ரவி இல்லத்தில். கிட்டத்தட்ட ஐம்பது நண்பர்கள் சந்தித்துப்பேச வந்திருந்தார்கள். காலையிலேயே தேவதேவன் வந்திருந்தார். மாலையில் ஈரோட்டில் இருந்து கிருஷ்ணனும், கிருஷ்ணராஜும் வந்தனர். நள்ளிரவில் ராஜமாணிக்கம் வந்தார். மாலையில் கடைவீதிக்குச்சென்று எனக்கு மலைப்பயணத்துக்கான சப்பாத்துக்கள் வாங்கிக்கொண்டேன்.

அதிகாலையில் விமானம். கிருஷ்ணராஜ் கடைசியில் வந்துசேர்ந்தவராதலால் அவருக்கு மும்பை வழியாக தனி விமானம்.. எங்களுக்கு டெல்லி வழியாக ஸ்ரீநகர். காலை ஆறரை மணிக்கு ஷிமோகா ரவி பெங்களூர் விமானநிலையத்துக்கு வந்து ஏற்றிவிட்டார். டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய எங்களை இறக்கி விமான ஓடுபாதையிலேயே நடக்கவைத்து கூட்டிச்சென்று ஸ்ரீநகர் விமானத்தில் கொல்லைப்பக்கம் வழியாக ஏற்றிவிட்டனர். முதலில் காலியாக இருந்த விமானம் கிளம்பும்போது பெரும்பாலும் நிறைந்துவிட்டது.

எனக்கு முன்வரிசையில் நடு இருக்கை. விமானம் எழுந்ததும் பின்னால் காலியாக இருந்த சன்னலோர இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டேன். டெல்லியில் இருந்து வடக்காகச் செல்லும் விமானப்பயணம் எப்ப்போதுமே முக்கியமானது. யமுனையும் கங்கையும் தெரியும்.மிக விரைவிலேயே இமயம்.இமயப்பயணம் செல்பவர்களுக்குத்தெரியும், பனிமலைச்சிகரத்தின் முதல் காட்சி என்பது எப்போதுமே பரவசமூட்டக்கூடியது.

கீழே கங்கை கலங்கலாக ஓடியது. செந்நிறமான ஒரு பெரிய வேர்ப்பரப்பு போல அதன் கிளைகள். பின்பு அடர்ந்த வெண்ணிற மேகம் வந்து மூடிக்கொண்டது. பட்டுத்திரைக்குள் விமானம் குலுங்கி அதிர்ந்து சென்றது. ஒரு கணத்தில் திரை சரேலன பின்பக்கம் இழுபட்டு மறைய விமானத்தின் சிறகுகளுக்கு அப்பால் வெண்பனிக்கூட்டங்கள் ஒளியில் குளித்து பிரமித்தவை போல நின்றிருந்தன. கனவு நனைந்து கனத்த மனத்துடன் அந்த வடிவற்ற வடிவப்பெருவெளியை பார்த்துக்கொண்டிருந்தேன். சில நிமிடங்களுக்குப்பின்புதான் அவற்றினூடாகத்தெரிந்த பனிமலைமுகடுகளைக் கண்டடைந்தேன். அவை வேறுவகை மேகங்கள் போலிருந்தன. உறைந்து படிந்த மேகங்கள்.

பனிமலைகளைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன். கூம்புக்கூரைகள் மீது பதிக்கப்பட்ட வெள்ளிக்கவசங்கள். பெரிய கரும்பசு மீது வெள்ளைவட்டங்கள். திமிங்கலங்களின் மீது வெண்கொழுப்புப் படிவு. மலையுச்சி என்பது மண்ணுக்கும் விண்ணுக்குமான ஒரு தொடர்புப்புள்ளி. பனிமலையுச்சியில் வானம் இன்னும் சற்றுக்கனிந்து கீழிறங்கித் தழுவியிருக்கிறது.

ஸ்ரீநகரில் விமானம் தரைதொட்டது. 1985-க்குப்பின் நான் ஸ்ரீநகர் வருகிறேன். அன்று தரைவழியாக வந்தேன். இரண்டே நாட்களில் குளிர் தாங்காமல் திரும்பி ஓடிவிட்டேன். நகரின் சில பகுதிகளையும் டால் ஏரியையும் மட்டும்தான் அன்று கவனித்தேன். விமானநிலையம் திருவனந்தபுரம் விமானநிலையம்போல கைக்கடக்கமாக, வீட்டுச்சூழலுடன் இருந்தது. விமானத்தில் இருந்து இறங்கி நடந்தே உள்ளே சென்றோம். குளிர் பெரிதாக இல்லை.

கிருஷ்ணராஜ் வந்து சேர மேலும் ஒருமணிநேரம் ஆகும். விமானநிலையத்திலேயே காத்திருக்கவேண்டியதுதான். எங்கள் ஓட்டுநர் வந்திருக்கிறாரா என்று செல்பேசியில் அழைத்தோம். எண் கிடைக்கவில்லை. ஓட்டுநரை ஏற்பாடு செய்து தந்த சரவணன் என்ற நண்பரின் எண் கிருஷ்ணராஜிடம் இருந்தது. விமானநிலையத்தில் பலபகுதிகளில் சந்தடியே இல்லை. அப்போதுதான் கட்டுமான வேலை நடந்துகொண்டிருந்தது. ஒரு விமானம் வந்து சந்தடி அடங்கியபின் அப்பகுதியே ஆழ்ந்த அமைதியில் மூழ்கியது. பட்டாணிய முகம் கொண்ட நாலைந்து காவலர்கள் ஆயுததாரிகளாக அமர்ந்திருந்தனர். இதமான சோம்பல் முகங்களில் தெரிந்தது. கேள்வி ஏதும் கேட்கவில்லை.

ஒன்றரை மணிநேரம் கழித்து கிருஷ்ணராஜ் வந்து இறங்கினார். சரவணனைக் கூப்பிட்டோம். ஓட்டுநர் ஜம்முவில் இருந்து முந்தைய நாளே வந்து ஸ்ரீநகரில் தங்கியிருப்பதாகவும், விமானநிலையத்துக்கு வெளியே வந்து நிற்பதாகவும் சொன்னார். அவரது எண் ஸ்ரீநகருக்கு வரும்போது இன்னொன்று. அதை கிருஷ்ணனுக்குத் தெரிவித்திருந்தார் சரவணன். கிருஷ்ணன் செல்பேசியைக் கொண்டுவரவில்லை.

ஓட்டுநரிடம் பேசினோம். வெளியே சென்றபோது மெலிந்த இளம்கூனல் கொண்ட, ரிதிக் ரோஷனுக்கு தூரத்துச் சொந்தம் போன்ற, ஓட்டுநர் வந்து கைகொடுத்தார். தாடியில்லாத சீக்கியர் அவர். அவரை நாங்கள் காகா என்று அழைத்தோம்.

நேராக ஒரு பஞ்சாபி ஓட்டலுக்குச் சென்றோம். செல்லும் வழி முழுக்க ஸ்ரீநகரைப் பார்த்தபடி இருந்தேன். எண்பதுகளில் ஸ்ரீநகரின் எல்லா கட்டிடங்களும் பழமையானவை. மண்ணைக்கொண்டு கட்டி மரத்தால் கூரையிடப்பட்ட இரண்டடுக்குக் கட்டிடங்களே அங்கே அதிகம். கால்நூற்றாண்டுக்காலத்தில் நகரம் நிறையவே மாறியிருந்தது. இந்தியாவின் எந்த ஒரு சுற்றுலாநகரையும்போலத்தான். ஆனால் பிற சுற்றுலாநகரங்கள் இன்னும் அதிகமாக நவீனமயமாகியிருக்கும். ஸ்ரீநகரில் இன்னும் கொஞ்சம் பழைமையான கட்டிடங்கள் எஞ்சியிருந்தன. பல கட்டிடங்கள் மறுகட்டமைப்புக்காக பாதி இடிக்கப்பட்ட நிலையில் இருந்தன.

சுற்றுலாப்பயணிகளுக்காகவே இயங்கியது நகரம். கடைகளில் காஷ்மீர் சால்வைகள், கம்பளங்கள், கலைப்பொருட்கள். பல்வேறுவகையான உணவகங்கள். தெருவியாபாரிகள். செப்டெம்பர் என்பது அங்கே சுற்றுலாப்பருவம் அல்ல. ஆனால் கார்கள் மலிந்துவிட்ட இக்காலகட்டத்தில் எல்லா சுற்றுலாமையங்களிலும் எல்லா பருவங்களிலும் கூட்டமிருக்கிறது. வெள்ளைப்பயணிகள் குட்டை ஆடையுடன் இளவெயிலில் அலைந்தார்கள்:. ஆனால் எனக்கு கோட்டு போட்டுக்கொள்ளும் அளவுக்கு குளிர் அடித்தது.

சப்பாத்தியும் டாலும் சாப்பிட்டுவிட்டு அருகே இருந்த வங்கி யந்திரத்தில் பணம் எடுத்துக்கொண்டேன். டால் ஏரியைச்சுற்றிக்கொண்டு சென்றோம். பிரம்மாண்டமான ஏரி. அதன் விளிம்புபுகளில் பெரும் படகுவீடுகள். அவற்றை கட்டுமானங்கள் என்றுதான் சொல்லவேண்டும். அவை அசையக்கூடியவை அல்ல. ஆனால் மிக ஆர்ப்பாட்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. பட்டுத்திரைச்சீலைகள், உயர்தர மெல்லிருக்கைகள், சபைக்கூடங்கள். படகுவீடுகளில் எல்லா வகையான ஐரோப்பிய, சீன உணவுகளும் கிடைக்கும் என அறிவிப்புகள் இருந்தன. சிறியபடகுகளில் பட்டுத்திரைச்சீலை அலங்காரங்கள் செயப்பட்டு காற்றில் படபடத்தன.

டால் ஏரியின் அளவை அதைச்சுற்றி காரில் செல்லும்போதுதான் உணரமுடியும். ஒரு காலத்தில் மிகவசீகரமான ஏரியாக இருந்திருக்கலாம். இப்போது அதன் கரை முழுக்க வணிகமயமாகிவிட்டது. மொத்த நகரும் அந்த ஏரியை நம்பியே வாழ்ந்துகொண்டிருந்தது. ஏரிக்குள் பல இடங்களில் குப்பைகள் மிதந்தன. நாலைந்து இடங்களில் பெரிய இயந்திரங்களைக்கொண்டு ஏரியின் சங்கிலிப்பாசிகளை அள்ளி படகில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.

எங்கள் திட்டத்தில் ஸ்ரீநகர் இல்லை. நேராகவே கார்கில் சென்றோம். கார்கில் சாலை வழியாக காஷ்மீரின் உள்பகுதிகளைப் பார்த்துக்கொண்டே சென்றோம். இத்தகைய பயணங்களில் உருவாகும் மனநிலை விசித்திரமானது. மனம் சுறுசுறுப்பை இழந்து மந்தமான ஒரு போக்கில் உள்ளுக்குள் ஓடும் எண்ணங்களை ஒரு கண்ணாலும் வெளியே ஓடும் காட்சிகளை இன்னொரு கண்ணாலும் பார்த்தபடி செல்லும். ஆனால் இந்த மனநிலையில் நாம் அள்ளிக்கொள்ளும் அளவுக்கு தகவல்களை, கூரிய மனப்பதிவுகளை எந்த ஆய்வுமனநிலையிலும் அடைவதில்லை. நெடுநாள் நினைவில் நிற்பவை எப்போதும் இத்தகைய தருணங்களில் உள்ளே செல்லக்கூடியவைதான். ஆழ்மனம் திறந்திருக்கும் நிலை அது என்று சொல்லலாம்.

காஷ்மீரில் அது கோடைகாலம். ஆகவே எங்கும் ஒரு வித உற்சாகம் தென்பட்டது. கண்களைக் கூசச்செய்யாத வெயிலில் வயல்களில் கோதுமைக்கற்றைகளை அறுவடைசெய்து சிறு குவியல்களாக வயல்களிலேயே காயவிட்டிருந்தனர். சல்வார் கமீஸ் அணிந்த பெண்களும் பாண்ட்சட்டைபோட்டு கறுப்புக்கண்ணாடி அணிந்த ஆண்களும் வயல்வேலைசெய்வது தமிழகத்துப்பார்வைக்கு ஆச்சரியம் அளிப்பது. ஆப்பிள் மரநிழல்களில் பெண்கள் அமர்ந்து ஓய்வாகப்பேசிக்கொண்டிருந்தனர். தூயநீர் துள்ளிக்குதிக்கும் ஓடைகளில் பெண்கள் துணிதுவைத்தனர். காஷ்மீரில் எங்குமே புர்க்கா அணிந்த பெண்களைப்பார்க்க நேரவில்லை.

செல்லும்போதே ஒரு சிறு விபத்து. மிகவேகத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் எங்கள் காரின் கண்ணாடியை உரசி உடைத்துச்சென்று பின்னால் வந்த கார்மீது மோதிச்சரிந்தனர். ஒருவனுக்கு சற்றுபலமான அடி. இன்னொருவனுக்கு சிராய்ப்பு. சுற்றும் இருந்து கிராமவாசிகள் கூடிவிட்டார்கள். கருத்துக்களும் அனுதாபச்சொற்களும் சிதறுவதைக் கேட்கமுடிந்தது. பதினைந்து நிமிடத்தில் எங்கள் கார் மீது பிழை இல்லை என்று சொல்லி போகச்சொல்லிவிட்டார்கள். மதுரை என்றால் யார் எங்கே மோதினாலும் உடனே கார் ஓட்டுனர்களை அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதை நினைத்துக்கொண்டேன்.

மாலை சோனாமார்க் என்ற ஊரில் தங்க முடிவெடுத்தோம். ஸ்ரீநகர்-கார்கில்-லடாக் சாலையில் உள்ள ஒரு சிறிய கிராமம் இது. சென்ற இருபதாண்டுகளில் உருவாகி வந்தது. நாலைந்து தங்கும்விடுதிகளும் ஒரு கடைவீதியும் ஒரு மசூதியும் ஐம்பதுக்கும் குறைவான வீடுகளும் கொண்டது. விடுதி அதிகச் செலவுபிடிப்பதாக இருக்கவில்லை. மூன்று அறைகளுக்கும் ஓட்டுநருக்கு தனிப்படுக்கையும் சேர்த்து இரண்டாயிரத்தைநூறுரூபாய்.

மாலையில் விடுதிக்கு முன்னால் இருந்த புல்படர்ந்த மலைச்சரிவில் ஏறிச்சென்றோம். அப்பகுதி முழுக்க மட்டக்குதிரைகளும் கோவேறுகழுதைகளும் மேய்ந்துகொண்டிருந்தன. சோனாமார்க்கில் தங்கும் பயணிகள் அவற்றில் ஏறி அந்த பெரிய புல்மேட்டில் சுற்றிவருவது வழக்கம். மேலேறிச்சென்றபோது ஒரு குடும்பம் குதிரைகளில் திரும்ப வந்துகொண்டிருந்தது. பயந்துபோன கைக்குழந்தை ஒன்றை ஒருவர் முழுக்கவே சால்வையால் சுற்றி கண்காதுமூக்கெல்லாம் மறைத்து வயிற்றோடு அழுத்திப்பிடித்திருந்தார்.

ஒரு புல்மேட்டின் மீது ஏறி அமர்ந்து அப்பால் பெரிய மலைகளுப்பின்னால் சூரியன் மறைவதைப் பார்த்தோம். இமயமலைச்சரிவுகள் தென்னக மலைகளைப்போல வளைவுகள் கொண்டவை அல்ல. நேராக சரிந்துசெல்லும் மலைவிளிம்புக்கோடு கண்ணெட்டும் தூரம் வரை சென்று அடுத்த மலையின் காலடியில் மறையக்கூடியது. மாலைவெளிச்சத்தில் ஒருபக்கம் பொன்னிறமாகச் சிவந்த மண்மலை ஒன்று எங்கள் முன் நிற்க பிற மலைகள் சிவந்து கருகி மெதுவாக இருண்டு மறைந்துகொண்டிருந்தன. இப்பகுதியின் மலைகள் செந்நிறமானவை. ஆகவேதான் இப்பெயர்.

எங்கள் தலைக்குமேலே இரு பனிமலைச்சிகரங்கள் மலைகளுக்கு அப்பால் தெரிந்துகொண்டே இருந்தன. அவறை ஜமால் நன்-குன் என்று அறிமுகம் செய்தார். அவர்கள் சகோதரிகள். ஸுரு சமவெளியின் உயரமான சிகரங்கள் அவைதான். பயணம் முழுக்க அவை தெரிந்துகொண்டே இருந்தன. கூர் தீட்டப்பட்ட ஈட்டிமுனைகள் போல அவற்றின் பனிமுடிகள் மின்னிஒக்கொண்டிருந்தன.

இருட்டியபின் நடந்து கீழிறங்கி அறைக்கு வந்தோம். நண்பர்கள் விடுதியில் சாப்பிட அமர்ந்தனர். நான் ஓட்டுநருடன் சென்று சோனாமார்க் கடைவீதிக்குச் சென்று ஆப்பிளும் வாழைப்பழமும் வாங்கி வந்தேன். இரவு எட்டரை மணிக்குக் கூட சோனாமார்க் கடைவீதியில் நடமாட்டம் இருந்தது. பெரும்பாலும் லாரிக்காரர்கள். கொஞ்சம் பயணிகள். தாடிவைத்த முதிய கடைக்காரர் மிகமிக மெதுவாக பொருட்களை எடுத்துத் தந்தார்.

‘எங்கிருந்து வருகிறீர்கள்? பீகாரா?’ என்றார். நான் ’கன்யாகுமரி’ என்றேன். ‘ஆ! கன்யாகுமரி….காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை….’ என்றார். அதை அங்கே எங்குபார்த்தாலும் எழுதிப்போட்டிருந்தனர். ‘கன்யாகுமரி எங்கே இருக்கிறது? டெல்லிக்கு அந்தப்பக்கமா?’

என்ன சொல்வதென்று தெரியவில்லை ‘ஆமாம்’ என்றேன். தொழில்நுட்பரீதியாக அதில் பிழை இல்லைதானே? இன்னும் இரு ஆப்பிளை எடுத்துப்போட்டு ‘இனிய விருந்தினருக்காக’ என்றார். புன்னகை செய்தபோது அவருக்கு சுருட்டுப்பிடிக்கும் பழக்கம் இருப்பது தெரிந்தது. அவரது தலைப்பாகை ஒட்டிய கன்னம் எல்லாம் ஏதோ ஈரானிய திரைப்படத்தில் காட்சியளித்தவர் என்ற பிரமையை அளித்தன.

அன்றிரவு நன்றாகவே குளிர்ந்தது. ஆனால் குளிருக்கு இதமான கனத்த ரஜாய்களும் கம்பிளிகளும் இருந்தன. பயணக்களைப்பு இருந்தமையால் நான் உடனடியாகவே தூங்கிவிட்டேன். கடைசியாக கண்ணயரும்போது வீட்டில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறேன் என்ற எண்ணம் முதலில் வந்தது. அந்த விடுதியைச் சுற்றி பிரம்மாண்டமாகச் சூழ்ந்திருந்த மாமலையடுக்குகளின் நினைவு அடுத்தபடியாக வந்தது. யானைகளின் காலடியில் கிடக்கும் பல்லிமுட்டை போல அந்த விடுதியை நினைத்துக்கொண்டேன். வெளியே அந்த மலைகளின் மூச்சொலியாக காற்று ஓசையிட்டது.


[மேலும்]

படங்கள்

முந்தைய கட்டுரைமதுரை சுல்தான்கள்
அடுத்த கட்டுரைநூறுநிலங்களின் மலை – 2