ஜெ.சைதன்யா :ஓர் எளிய அறிமுகம்

           ஜெ .சைதன்யா என்ற கீழைத்தத்துவ அறிஞரை பொதுவாக சிந்தனையாளர்களை  உதாசீனம் செய்யும் தமிழ்ச் சூழல்  அறிந்திருக்க வாய்ப்பில்லை.மாபெரும் சிந்தனையாளர்களுக்கு பொதுவாக உள்ள வழக்கப்படி இவரும் தன் சிந்தனைகளை எழுதிவைக்கவோ, சொற்பொழிவுகள் ஆற்றவோ செய்யவில்லை என்பதை குறிப்பிட்டாக வேண்டும். சிந்தனை இவர்களுக்கு வாழ்க்கையாகவே  இருந்தது. அவை அன்றாட வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் இருந்து சகஜமாக எழுந்து உடனடியாக  காற்றில் மறைந்து போயின.

ஆனால் மாபெரும் சிந்தனையாளர்களிடம் காலம் கருணையோடிருக்கிறது. ஆகவே மற்ற மாபெரும் சிந்தனையாளர்களைப்போலவே  ஜெ .சைதன்யாவுக்கும் பிரதம சீடர் ஒருவர் உருவாகி, அவரது கூடவே இருந்து அச்சிந்தனைத் தெறிப்புகளை உடனடியாக பதிவு செய்தபடியே இருந்திருக்கிறார். இவற்றின் ஒருபகுதி மேற்படி பிரதம சீடரின் விருப்பப்படியும், தூண்டுதலின்படியும் எழ நேர்ந்தவை என்பதும், அவற்றை பதிவு செய்வதில் அவரது மொழியின் சாத்தியங்களும் அவரது புரிதல் எல்லையும் தடையாக இருந்துள்ளன என்பதும், உலக வரலாற்றை எடுத்துப் பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம் தருவதாக இராது. திரிபு படாத  மாபெரும் சிந்தனைகளை பெறும் பாக்கியம் இவ்வுலகிற்கு இதுவரை அமையவில்லை.

ஜெ.சைதன்யா அவர்கள் தனது மூன்று விரல்களின் எண்ணிக்கை அளவு வேளைக்கு குழம்புவிட்டு பிசையப்பட்ட சாதத்தை  ஓரளவு வன்முறையுடன்  ஊட்டிவிடப்பட்டு, வீட்டுநாய் குட்டன், வழக்கமான காக்கா, கொன்றைமரம் மற்றும் அணில்கள் துணையுடன் உண்டதனால்  மிகவும் வளர்ந்து , ஜட்டி போடாவிட்டால் ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆகுமளவுக்கு பெரிய பெண்ணாக ஆகநேரிட்டு, எலிக்கேஜியிலேயே படிப்பவர்  என்பதை பெருமிதத்துடன் இங்கு குறிப்பிட்டாக வேண்டும் .

ஜெ.சைதன்யாவின் தோற்றப்பொலிவு எவர் கண்ணையும்  கருத்தையும் கவர்வதாகும், அதற்குரிய நடவடிக்கைகளில் இவரும்  உடனடியாக ஈடுபடுவதுண்டு. இவரது தலைமயிர் கறுப்புப் பாமரேனியன் முதுகு போல பளபளப்பாக இருக்கும். சிறிது அமுங்கிய மூக்கும், [மூக்கே மூக்கே மூக்கம்ம்மா ! மூக்கில்லாத மூக்கம்மா என்ற பிரபல தாலாட்டுப்பாடல் இவரைப் பற்றி இவரது தந்தையாரும் பிரதம சீடருமான எழுத்தாளர் எழுதியதென்பதை இங்கு நினைவூட்டுகிறோம்] போதுமான அளவுக்கு உப்பிய கன்னங்களும், சிறிய உதடுகளும், இவர்களை பிடிவாதமானவர் என்று காட்டும். பொதுவாக இவர்  இரு வகையான மன/முக நிலைகளில் காணப்படுவார் .”தந்தோச்சம்” என இவர் குறிப்பிட்ட மனநிலையில் இவர்  [பொதுவாக இது புத்தாடைகள் அணிதல் ,குளிர்ந்த நீரில் குளித்து முடித்தபிறகு முதலிய தருணங்களில் ஏற்படுவது] துள்ளித்துள்ளிக்  குதித்து சுற்றிவருவார்.  மற்ற நேரங்களில் இவர்  மூக்கு கூர்மை கொண்டு, உதடுகள் அழுந்தி , புருவங்கள் மேலேறிக் காணப்படும். பிரபஞ்சத்தை இவர் அவதானிக்கும் தருணங்கள் இவை .

ஜெ.சைதன்யா அவர்கள் கருவிலேயே திருவுடையவர் என்பதை எடுத்துக் கூறவேண்டியதில்லை.இவர்  மருத்துவர் குறித்த தேதியை தாண்டி வெகுநாட்களாகியும் வெளிவர முனைப்பெதுவும் காட்டாமையால் இவரது பெற்றோர் செறிவொலி [Ultra sound ] மூலம் இவரது அன்றைய வாழ்விடத்துக்குள் எட்டிப்பார்த்த போது நிழற்கோலமாக தன் முதல் தரிசனத்தை வெளியுலகுக்கு ஈந்தருளினார். அப்போதே தன் வருகை நோக்கத்தையும் அடிப்படை செய்தியையும் இவர் சைகை மூலம் வெளிப்படுத்தியதாக இவரது பிரதம சீடர் குறிப்பிடுகிறர். கைவிரல்களை இறுக முஷ்டி பிடித்து மேலும் கீழும் ஆட்டி அறியாமைக்கு எதிராக போராடுவதே தன் நோக்கம் என்று வெளிப்படுத்தினார். இவரது தாயார் இவர் பெண்பாலர் என்பதைமட்டுமே கவனித்து ஆழமான பரவச நிலக்கு ஆளாகி , கண்­ணீர் மல்கத் தலைப்பட்டார் .  இவர் தன்னை சுற்றிய கொடியினை கையால் பற்ற முற்பட்டமை இவரது ஆய்வு மனநிலையை காட்டுவதாக அமைந்தது . பின்பு இவர் கொட்டாவி விட்டு மிதந்து மெல்ல திரும்பிக் கொண்டார்.

திரும்புகையில் மொத்த உலகமும் அசாதாரணமான ஒளியும் அழகும் கொண்டிருப்பதை முதலில் கவனித்தவர் இவரது சீடராகும் பொருட்டு காத்திருந்தவரான இவரது தந்தையே. நகரின் பழுப்பு டிஸ்டெம்பர் கட்டங்களும், தூசி படிந்த இலைகள் கொண்ட மரங்களும், எருமைகளும் எல்லாம் இச்செய்தியை முன்கூட்டியே அறிந்துவிட்டிருந்தன. பார லாரிகள் இனிய இசையுடன் கடந்து சென்றன. சாக்கடை  நறு மணம் நிரம்பி குமிழியிட்டது. நடந்தபோது மண் ஒவ்வொரு காலடியையும் அன்புடன் மெல்ல உள்ளங்கையில் வாங்கிக்கொண்டது. எங்கும் எதிலும் ஒன்றே விளங்கிக் கண்ட அவர் என்னவென்று தெளிவாகப்  புரியாமலே எங்கோ கேட்ட “தத்வமசி ” என்ற சொல்லை தனக்குத்தானே மந்திரம் போல சொல்லிக் கொண்டார் .

“அப்பா அம்மா வயித்துக்குள்ள இருக்கிறது  குட்டிப்பாப்பா தானே?” என இவரது முதல் குழந்தையும்   உலகவீரசாலிகளில் ஒருவருமான ஜெ. அஜிதன் கேட்ட போது மீண்ட  இவர் ” ஆமாம்டா நம்பளோட குட்டிப்பாப்பாதான்” என்றார்

“பாப்பு ஏன் கோட்டாவி விடுது?”

“உள்ளார டீ வி இல்லதானே ? போர் அடிக்கும்ல ?” என தந்தையார் விளக்கியபோது தன் இயல்பான கற்பனை வீச்சுடன் அதை புரிந்துகொண்ட  முன்னோடி சிந்தனையாளார், அடுத்த படிகளை தாவியேறி ” ஒரு நாக்குட்டி இருந்தாக்கூட வெளயாடலாம்” என்றார் .

ஜெ .சைதன்யா வின் பிறப்பு எளிமையாகவே நடந்தேறியது. தாதியால் கால்களை பற்றி தூக்கப்பட்டு  பின்பு  திருப்பப்பட்ட போது உலகம்  தலைகீழாக மாறியதை விரும்பாமல் இவர் சற்று எதிர்ப்பு தெரிவித்தது உண்மையே. அத்துடன் அவர் முன்பு  இருந்த வெளியில் இருந்து அள்ளிவந்து கைகளில் இறுகப்பற்றியிருந்த வெறுமையை ஒவ்வொருவரும் விரித்துப் பார்க்க முயன்றதையும் அவர் ஏற்காமல் முகத்தையும் உதடுகளையும் சுளித்தார் .

ஜெ .சைதன்யா அவர்கள் சிறுவயதிலேயே ஆழமான தேடல் கொண்டிருந்தார் என்பதை அவரது பிரதம சீடர் பதிவு செய்கிறார். மல்லாந்து கிடந்த நாட்களில் இடைவிடாது விண்ணை நோக்கி விழித்துப் பார்ப்பவராகவும், அவ்வப்போது எளிய மானுடரால் அறியமுடியாததான எதைக் கண்டோ மகிழ்ந்து கண்களில் ஒளி தெறிக்க  செக்கச் செவேலென்று  சிரிப்பவராகவும்      அவர் இருந்திருக்கிறார். அண்மையிலோ சேய்மையிலோ உள்ள எதை கண்டாலும் அதை நோக்கி பாய்ந்தெழ முற்படுவது தன் உரிமை என  கருதியதுடன் எழுவதற்கு தன் பிருஷ்டத்தையே முதலில் தூக்கவேண்டுமென்றும்  எண்ணி முயன்றுவந்தார் .

குப்புறபடுக்க முடிந்த மறுகணமே அவர் மண்ணை நோக்கி தன் கவனத்தை முற்றிலும் திருப்பிவிட்டார். தரையின் கோடுகள், விரிசல்கள், தூசிகள், எறும்புகள் போன்றவற்றையெல்லாம் அதி உன்னிப்பாக கவனிப்பதற்கென்றே  வடிவமைக்கப்பட்டவை இவரது அடர்ந்த புருவங்கள். பூச்சிகளையோ மற்ற பொருட்களையோ பிடித்து ஆராய முயலும்போது உடலியங்கியலின் சில விதிகள் தடையாக அமைவதை இவர் கண்டடைந்தார். அப்போது தாடை தரையில் மோதுவதற்கு காரணம் தன் அன்னையே என இவர் எண்ணி அலறி அழுததுண்டு என்றாலும், தன் இயல்பான கூர்மதியினால் ஒரு கையை மடித்து தொப்பைக்கு அடியில் வைக்கலாம் என சீக்கிரமே கண்டுகொண்டார். எறும்புகள் ருசியற்றவை என்றும்  தூசி சிறந்த சரிவிகித  உணவு என்றும்  மெல்ல இவர் ஆய்ந்தறிந்தார்.

ஆய்வுமனநிலையை இவர் தன் கரங்களில் குவித்திருந்ததனால்   அவை சிலவகை வேலிமுட்கொடிகள் போல ஆயின என இவரது அன்னை குறிப்பிடுகிறார். இவர் அன்னை இடையில் அமர்ந்துகாற்றில் நகரும் பாதையில் உள்ள  காதுத்தோடுகள், தலைப்பூக்கள், அலமாரி பொருட்கள் முதலியவை இவரில் சிக்கி கூடவே வருவது வழக்கம். அவற்றை விடுவிப்பதும் எளிதல்ல. முள்கொடி போலவே ஒன்றை விடுவிக்கும்போது பிறிதொன்றில் சிக்குமியல்பு கொண்டவை அவை.  சம்சாரம் என்பதே அதுதானே?

தன்னை சுறுசுறுப்பாக இயங்கச்செய்யும் பொருட்டு மேலிருந்து அனுப்பப் பட்ட சிறு கருவி என்றே இவரது தந்தை இவரைப்பற்றி மதிப்பிட்டிருந்தார். ஈர ஜட்டிக்காக அழ ஆரம்பித்து,   அதை மாற்ற தாய்தந்தையர் இருவேறு திசைகளில் பதறிகொண்டிருக்கும்போதே பசிக்காக வேறு சுருதியில் வீரிட ஆரம்பிக்கும் இவரது குணமும் ; பாலை குடித்தபடியே தூங்கி,  தோன்றும்போது விழித்து, வாயில் காம்பு இல்லாமைக்காக கோபாவேசம் கொண்டு இவர் எழுப்பும் கண்டனப்பேரொலியும் அவர்களை நரம்பு பதற்றததை நோக்கித் தள்ளியிருக்கிறது.

வாரத்தில் மூன்று நாள் ஜலதோஷம் [ நிரல்: முதல்நாள் மூக்குச்சளி  பிறகு முறையே இழுப்பு, காய்ச்சல்] மீதிநாள் வயிற்றுப்போக்கு என இவர் அவதிப்படுவதும், மருத்துவரிடம் எடுத்துச் செல்லப்படுகையிலேயெ புத்துணர்ச்சி பெற்று ஊர்க்கோல உற்சவர் போல அபயஹஸ்தம் மற்றும் மோகனபுன்னகையுடன் இலங்கி , காத்திருப்பு அறையின் எல்லாப்பக்கங்களிலும் தவணைமுறையில்  சிறுநீர் கழித்து, பெஞ்சு விளிம்புகளை கரம்பி, மருத்துவருடைய பேனாவை கடித்துவிட்டு கூர்ந்து பார்த்து , அவரது இதயஒலிநோக்கியை ஆவலுடன் பற்றி  இழுத்து , பாராட்டுபெற்று, திரும்பியதுமே தோசைக்கல் போல சுட ஆரம்பிப்பது குறித்து இவரது தந்தையார் மனக்கிலி கொண்டிருந்தார். மாத்திரையை நீரில் கரைத்து நன்றாக கலக்கி அடிநாக்கில் விட்டு, ஒருவாய் தண்­ணீரும் ஊட்டி, தோளில் கவிழ்த்து   குறுஏப்பமும் வரவழைக்கப்பட்டு , படுக்கப்போட்ட பின்பு கடைவாயின் மர்மப்பாதை  வழியாக மாத்திரையை வழியவிடும் கலையையும்  இவர் பயின்றிருந்தார். இவர் வயிற்றுப்போக்கினால் அவதிபடுவதைப்பற்றி இவரது தந்தையாரின் உடலில் கமழும் மென்மணம்மூலம் அறிய நேரிட்ட நண்பர்கள்  கவலை தெரிவிப்பதுண்டு.

அனைத்தையும் விட நாள் /இரவு கணக்கில் இவருக்கும் பிரபஞ்ச நியதிக்கும் இருந்த கருத்து முரண்பாடு எழுப்பிய பிரச்சினைகள் பல. நடுப்பகல் வெயிலில் இவர் பெற்றோர்  சோர்ந்து பார்த்திருக்கையில்  அயர்ந்து தூங்கி, புத்துணர்ச்சியுடன் நள்ளிரவில் எழுந்து, அழுது காலைக்கடன் கழித்து, அழுது உணவுண்டு, அழுது விளையாடி,மீண்டும் அழுது ஈரமாகி, உலர்ந்து ஈரமாகியபடியே இருப்பது  இவரது தந்தையாரை பலவகையிலும் மனப்பாதிப்பிற்கு ஆளாக்கியிருக்கக் கூடுமென்பது அவரது நண்பர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலை நடுவே மெய் மறந்து போய் இருப்பது, தனியே சிரித்துக் கொள்வது, அடிக்கடி கடிகாரத்தை பார்ப்பது , “பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் மனம்…” என்று ஆக்ரோஷமாக பாடிக் கொள்வது போன்ற பல பிரச்சினைகள்  அவருக்கு  இருந்திருக்கின்றன.

ஆனால் ஜெ.சைதன்யாவின் தந்தையாராகிய இவர் -இவருக்கு தானே ஒரு சிந்தனையாளர் எழுத்தாளர் என்றெல்லாம் எண்ணம் இருந்திருக்கிறது. மனிதர்களின் அகங்காரத்துக்கு எல்லை உண்டா என்ன?- ஒரு நாள் இரவு பேருந்தில் குடும்பத்துடன் வெளியூருக்கு போகும்போது ஒரு ஆழ்ந்த தரிசனத்தை காணும்பேறு பெற்று மெய்யடியாராக மாறினார் என்று அவரே குறிப்பிடுகிறார். பேருந்தில் கனத்த அட்டையை மடி மீது விரித்து அதன்மீது சிறு மெத்தையை போட்டு அதில் ஜெ.சைதன்யா வை படுக்க வைப்பது இவரது வழக்கம் . திடுமென இவர் விழித்துக் கொண்ட போது எதிரே வந்த லாரியின் முகவிளக்கின் ஒளியில் நெருப்புவண்ணத்தில் சுடர்விட்ட  ஜெ.சைதன்யாவின் முகத்தை கண்டார் . மனம் பொங்கிய கணத்தில் தன் பெரும் குலத்தின் பல்லாயிரம் வருடத்து  அன்னை தெய்வங்களெல்லாம்  உக்கிரமும், அருளும், அன்னைமையும், கன்னிமையுமாக தன் முன் விரிந்து செல்வதை அறிந்தார் .

பின்பு தன் நடுங்கும் விரல்களால் ஜெ.சைதன்யா வின் மண்ணறியா மென்பாதங்களை தொட்டபோது அவரது ஆழத்தில் ஆயிரம் ஞானநூல்களாலும், பல்லாயிரம் அறிவுரைகளாலும்  முட்டிமோதியும் திறக்காமலிருந்த அந்தக் கரும்பாறைக் கதவுகள் பட்டுத்திரைச்சீலைகள் போல  விலகி விலகி வழிவிட்டன .

==================================================================

முந்தைய கட்டுரைஇடது அறிவியக்கமும் இந்துத்துவ அறிவியக்கமும்
அடுத்த கட்டுரைஅனல் காற்று நாவல் (தொகுப்பு)