வாக்களிக்கும் பூமி 6, வால்டன்

காசர்கோடு நூலகத்தின் பழைய அடுக்குகளில் நான் 1984ல் எமர்சனை கண்டடைந்தேன். எமர்சனை வாசிப்பதற்கு மிகச்சிறந்த வழிமுறை அவரை மொழியாக்கம் செய்வதுதான் என்று கண்டுகொண்டு ஒவ்வொரு நாளும் சில பத்திகள் வீதம் மொழியாக்கம் செய்தேன். பின்னர் அதில் இயற்கை என்ற கட்டுரையை  ‘இயற்கையை அறிதல்’ என்ற நூலாக வெளியிட்டேன். எமர்சனின் சிந்தனையின் பின்புலமும் அவரது சூழலும் எதுவுமே தெரியாமல் நான் எமர்சனில் நுழைந்தேன். இன்றும் எமர்சன் என் வாழ்க்கையில் முக்கியமான ஒரு செல்வாக்காகவே திகழ்கிறார்.

ஜூலை 15 ஆம் தேதி காலையில் நண்பர் வேல்முருகனுடன் பாஸ்டனில் எமர்சனின் இல்லத்தை தேடிச் சென்றேன். சுத்தமான அழகிய நகரத்தெரு ஓய்வான மனநிலையில் கிடந்தது. சில கார்கள்தான் ஆங்காங்கே நின்றன. எமர்சனின் வீடு இருக்கும் தெருவில் சில சிறு அருங்காட்சியகங்கள் இருந்தன. அவற்றில் ஒன்றில் அதுதான் எமர்சனின் வீடு என நினைத்து நுழைந்தோம். அது பாஸ்டன் நகரம் குறித்த அருங்காட்சியகம். அங்கே இரு பாட்டிகள் முகம் மலர வரவேற்றார்கள்.. இந்த இடத்தை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டார்கள். வரைபடத்தில் பார்த்தேன் என்றார் வேல்முருகன்

 

 

எமர்சன்

பாஸ்டன் நகரம் அமெரிக்க சுதந்திரப்போராட்டத்தில் மையப்பங்காற்றியது. முதன் முதலாக பாஸ்டனில் பிரிட்டிஷ் காலனியாளர்களுடன் ஒத்துழைக்கலாகாது என்று உறுதிமொழி முன்வைக்கப்பட்டு நகர்மக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. அந்த  ஆவணம் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அதில் எமர்சனின் அப்பா ரெவெ. வில்லியம் எமர்சன் கையெழுத்திட்டிருந்தார். எமர்சனின் குடும்பம் அப்பகுதியில் பெரும் செல்வந்தர்களாகவும் நில உடைமையாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

 

பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகள் சுதந்திரப்போராட்டக்காரர்களை கூண்டுகளில் அடைத்து மரங்களில் தொங்கவிட்டிருக்கிறார்கள். அதை சித்தரிக்கும் ஓவியங்களை கண்டேன். அக்காலத்தில் வினியோகம் செய்யப்பட்ட துண்டுபிரசுரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.  ஆரம்பத்தில் அமெரிக்க சுதந்திரப்போராட்டம் பாஸ்டனின் சுயமரியாதை கொண்ட சண்டியர்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. மரம் வெட்டவந்த பிரிட்டிஷ் படைகள் அவர்களை வேட்டையாடி கொன்றிருக்கிறார்கள். பின்னர்தான் அது அறிஞர்களின் கைக்கு வந்துசேர்ந்தது.

 

ரால்ப் வால்டோ எமர்சன் 1803ல் பிறந்து 1882ல் இறந்தார். அமெரிக்க சிந்தனை என்பது இரு பெரும் சிந்தனைப்பள்ளிகள்தான். ஒன்று எமர்சன் தோரோ ஆகியோரில் உருவாகி வளர்ந்த ஆழ்நிலைவாதம். [Transcendentalism] இன்னொன்று செயல்முறைவாதம் [Pragmaticism ] என்று பொதுவாகச் சொல்லப்படும் சிந்தனை மரபு. இரண்டும் அடிப்படையில் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை. ஆழ்நிலைவாதம் அமெரிக்க கருத்துமுதல்வாதம் என்றும் செயல்முறைவாதம் அமெரிக்க பொருள்முதல்வாதம் என்றும் சொல்லலாம். அவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று உரையாடி வளர்ந்தவை

எமர்சன் ஒரு பெரும் பேச்சாளர். அவரது தந்தை ஒரு பாதிரியார். எமர்சனும் மத சிந்தனைகளில் இருந்தே ஆரம்பிக்கிறார். மெல்ல மெல்ல அவர் சுதந்திர ஆன்மீகம் என்னும் கருத்துநிலை நோக்கி நகர்ந்தார். கட்டுரைகளாக வந்த அவரது உரைகளில் மூன்று உரைகள் வழியாக அவரை நன்றாக புரிந்துகொள்ளலாம். தற்சார்பு [ Self-Reliance ] இயற்கை [ Nature ] அமெரிக்க அறிஞன் [ American Scholar ]

ஒட்டுமொத்தமாக எமர்சனின் சிந்தனைப்பங்களிப்பு என்ன என்றால் நான் இப்படிச் சொல்வேன். கிறித்தவ மரபு முன்வைத்த கூட்டான ஆன்மீகம் என்ற நிலைக்கு எதிராக தனிமனித ஆன்மீகம் என்பதை அவர் முன்வைத்தார். ஒரு தனிமனிதன் தன் ஆன்மீக விடுதலையையும் வாழ்க்கை நிறைவையும் நோக்கி முடிவிலாது முன்னேறுவதற்கான உரிமை அளிக்கும் ஒரு சமூகத்துக்காக அவர் வாதிட்டார். அதன் மூலம் தனிமனித உரிமையை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க இலட்சியவாதம் உருவாவதற்கு பெரும் பங்களிப்பாற்றினார்.

 

எமர்சன் நினைவகத்தைக் கண்டுபிடிக்க இரண்டுமுறை முன்னும்பின்னும் செல்ல வேண்டியிருந்தது.  தாழ்வான கூரை கொண்ட ஒரு சிறிய கட்டிடம் அது.  புல்வெளி சூழ்ந்து அமைதியாக இருந்தது. மிகச்சில வருகையாளர்களே இருந்தார்கள். சுற்றுலாப்பயணிகளுக்கு எமர்சனையே தெரிந்திருக்காது போலும். அந்த கட்டிடத்தின் நாலைந்து அறைகளில் எமர்சனின் நினைவாக பலபொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. எமர்சனின் கையெழுத்துப்பிரதிகள். அவரது நண்பர்களின் புகைப்படங்கள். அவர்களுக்கு அவர் எழுதிய கடிதங்கள்.  எமர்சனின் வாசிப்பு -வரவேற்பு அறையை அப்படியே வைத்திருந்தார்கள். அவர் வாசித்த கனத்த காலிகோஅட்டை நூல்கள். தோலுறையிட்ட நாற்காலிகள். விரிப்பிடப்பட்ட மேஜைகள். மெல்ல மெல்ல அச்சூழலுக்குள் நுழைந்து ஆழமான மன எழுச்சி ஒன்றை அடைந்தேன். காலத்தை தாண்டி எமர்சனுடன் இருப்பதைப்போல.

எமர்சன் ஒரு பிரபு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். அனேகமாக ஒவ்வொரு நாளும் அவரைத்தேடி பாஸ்டனில் வாழ்ந்த அறிவுஜீவிகள் வந்திருக்கிறார்கள். தோரோ அவரது நெருக்கமான நண்பர்.  நதானியல் ஹாதார்ன், ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் போன்றவர்களை எமர்சனின் மாணவர்கள் என்றும் சொல்லலாம். பின்னாளில் பிரம்மஞான சபையை நிறுவிய கர்னல் ஆல்காட்டும் எமர்சனின் தோழர்தான். அவர் வாழ்ந்த வீடு அதே தெருவில் சற்று தள்ளி இருக்கிறது. அவர்கள் ஓயாது விவாதித்தார்கள். அமெரிக்க இலட்சியவாதம் என்ற கருதுகோளின் உதயம் அந்த அறையில்தான் நிகழ்ந்தது என்று சொல்லலாம்.

எமர்சன்

 

எமர்சனும் தோரோவும் முன்வைத்த சிந்தனைகளை ஆழ்நிலைவாதம் என்ற சொல்லால் சுட்டுவது இன்றைய வழக்கம். ஐரோப்பாவில் கலாச்சார மறுமலர்ச்சி உருவானபோது விளைந்த சிந்தனைகளில் முக்கியமானது இயற்கைமையவாதம். [Naturalisam]  கிறித்தவம் முன்வைத்த தண்டிக்கும்பிதா என்ற கடவுள் உருவகத்தின் போதாமையை உணர்ந்த சிந்தனையாளர்கள் கண்முன் முடிவிலாத அழகுடன் அளவிடமுடியா மர்மங்களுடன் விரிந்து கிடக்கும் இயற்கையே ஆகப்பெரிய இறைவடிவமாகக் கண்டார்கள். இயற்கையை  ஆராதித்தல் , இயற்கையுடன் இணைந்து வாழ்தல் ஆகியவை மைய விழுமியங்களாக முன்வைக்கப்பட்டன. அந்த மரபின் ஆகச்சிறந்த கவிஞரின் ஒரு கவிதையையாவது நாம் அனைவரும் வாசித்திருப்போம்–  வேர்ட்ஸ்வர்த்

இயற்கைமையவாதத்தில் இருந்து உருவானதே ஆழ்நிலைவாதம். இயற்கையின் சாராம்சமாக உள்ள உணர்வுகளை வாழ்க்கையின் அனைத்துக்கூறுகளிலும் நிரப்பிக் கொள்வதே ஆழ்நிலைவாதம் என்று சுருக்கமாகச் சொல்லலாம். எல்லா வினாக்களுக்கும் இயற்கையிலேயே விடை தேட வேண்டும் என்றது ஆழ்நிலைவாதம். இயற்கையில் ஒன்றி வாழ்தலும் இயற்கையை அவதானித்தலுமே மனித இருப்பின் உச்சநிலைகள் என்றது. ஒவ்வொரு தனி மனிதனும் தன்னுள் சென்று அங்கே உறையும் சாராம்சமான இயல்பை உணர்தலே விடுதலை என்றது.

 

எமர்சனும் அவரது நண்பர்களும் இணைந்து 1859ல் ஆழ்நிலை மன்றம் [Transcendental Club] என்ற அமைப்பை உருவாக்கினார்கள். தி டயல் என்ற இதழை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். எமர்சனில் கீதையும் வேதங்களும் பெரும் பாதிப்பைச் செலுத்தின. குறிப்பாக வேதங்கள் இயர்கையை இறைவடிவமாகக் காணும் ஆழ்நிலையே அவரை ஆழ்நிலைவாதத்தின் அடிப்படைக் கருதுகோள்களை உருவாக்கச்செய்தது என்று சொல்லலாம்.

இயற்கையின் சாராம்சத்தை ஒருவகை மறைஞானமாக உருவகித்துக்கொண்டார்கள் பிரம்மஞானிகள். இயற்கையை பிரபஞ்சம் என்று விரித்துக்கொண்டார்கள். மறைஞானமாகவே மெய்மை மனிதனுக்கு தட்டுப்படும் என்று எண்ணினார்கள். கர்னல் ஆல்காட்டும் அவரது மகள் லேடி ஆல்காட்டும் பிரம்மஞான சங்கத்தை உருவாக்கினார்கள். அவர்களின் ஆர்வம் கீழைநாட்டு மெய்ஞான மரபை நோக்கி நகர்ந்தது. பௌத்தமும் இந்துஞானமரபும் அவர்களை ஈர்த்தன.

பின்னர் பிரம்மஞானசங்கத்தை மேடம் பிளவாட்ஸ்கி போன்றவர்கள் ஒரு இந்து மறைஞான குழுவாக மாற்றினார்கள். இந்து ஞானம் முழுக்க ரகசியஞானம்தான் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. எல்லாவற்றையுமே தியானம் சார்ந்த குறியீடுகளாக அணுகுவதும் மெய்மை என்பது ரகசியத்தன்மை கொண்டதாகவே இருக்க முடியும் என்ற நம்பிக்கையும் அவர்களின் அடிப்படை இயல்புகள். அன்னிபெசண்ட் பிரம்மஞான சங்கத்தின் தலைமைக்கு வந்தபோது அந்த அமைப்பு இந்திய சிந்தனையில் ஊடுருவியது. இந்திய சுதந்திரப்போராட்டத்துக்கும் அன்னிபெசன்ட் பெரும் பங்களிப்பாற்றினார்.

அன்னிபெசண்டால் கண்டெடுக்கப்பட்டவர்தான் ஜெ.கிருஷ்னமூர்த்தி. ஜெ.கிருஷ்ணமூர்த்தி உலக குருவாக விளங்குவார் என பெசண்ட் எண்ணினார். ஆனால் பிரம்மஞான சங்கத்தின் அமைப்பையும் அதன் நம்பிக்கைகளையும் முழுமையாக உதறி ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஒரு சுதந்திர சிந்தனையாளராக உயர்ந்தார். உலகப்புகழ்பெற்றார்.

ஆர்வமூட்டும் அம்சம் என்னவென்றால் ஜெ.கிருஷ்ணமூர்த்தி மொத்த பிரம்மஞானமரபையும் நிராகரித்து வந்து சேர்ந்தது எமர்சனில்தான் என்பதே. எமர்சனின் சிந்தனைகளின் இறுதி நுனியில் இருந்து ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஆரம்பிக்கிறார் என்று கூடச் சொல்லலாம். ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் மையச்செய்தி என்பது எமர்சன் சொல்லும் ‘இயற்கையில் இருத்தல்’ என்பதன் அடுத்தபடியே. அதாவது,  ‘பிரபஞ்சத்தில் இருத்தல்’  சுருக்கமாகச் சொன்னால் எமர்சனில் கர்னல் ஆல்காட் உருவாக்கிய ஒரு வளைவை சரிசெய்து மீண்டார் என்று ஜெ.கிருஷ்ணமூர்த்தியைச் சொல்லலாம். பாஸ்டனில் ஜெ.கிருஷ்ணமூர்த்தி பலமுறை வந்து உரையாற்றியிருக்கிறார்.

எமர்சனின் இல்லம் அவரது நினைவகத்துக்கு சற்று அப்பால் உள்ளது. அது பழுதுபார்க்கப்படுவதனால் அருகே செல்ல அனுமதி இல்லை. அது ஒரு பெரும் மாளிகை. காலையின் இனிய  ஒளியில் அது வெண்ணிறச்சிற்பம் போல பளபளத்துக்கொண்டிருந்தது. அதன் வாசல்முன் நின்று சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். அங்கிருந்து வால்டன் குளத்துக்குச் சென்றோம்.

தோரோவின் வால்டன் குளம் சிந்தனைகளுடன் அறிமுகம் உடையவர்களுக்கு தெரிந்திருக்கும்.  டேவிட் ஹென்றி தோரோ மசாசுசெட்ஸ் கன்கார்ட் பகுதியில் ஒரு பென்சில் உற்பத்தியாளரின் மகனாக 1817 ல் பிறந்து 1862 வரை வாழ்ந்தார்.  வாழ்நாள் முழுக்க அலைந்து திரியும் சுதந்திர சிந்தனையாளராக இருந்தார் தோரோ.

எமர்சன் இல்லம்

 

எமர்சனின் நண்பரான ஹென்றி டேவிட் தோரோ ஆழ்நிலைவாதத்தின் இயற்கைவாழ்க்கையை சோதனை செய்து பார்க்க விரும்பினார். எமர்சன் அதற்கு வசதிசெய்துகொடுக்க வால்டன் குளத்தின் கரையில் ஒரு மரக்குடிலை தோரோ தன் கையாலேயே கட்டினார்.

 

தோரோ

வால்டன் குடிலில் தோரோ 1845 கோடைகாலம் முதல் இரண்டு வருடக்காலம் தங்கியிருந்தார். தினமும் தன் கைகளால் விறகுவெட்டி அதை கிராமச்சந்தைக்குக் கொண்டுசென்று விற்று அந்த ஊதியத்தில் உணவுப்பொருட்களை வாங்கி வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். அடிமை வணிகம் போன்றவற்றின் அடிப்படையில் அமைந்த அமெரிக்க அரசாங்கத்திற்கு தான் குடிமகன் அல்ல என மறுத்த தோரோ அரசுக்கு வரி கொடுக்க மறுத்துவிட்டார்.  அதற்காக அவர் விசாரிக்கபப்ட்டபோது தனிமனிதனுக்கு அரசை எதிர்ப்பதற்கு இருக்கும் உரிமை குறித்து அவர் நீதிமன்றத்தில் ஆற்றிய உரை பெரும்புகழ்பெற்றது. அதுவே பின்னர் ‘குடிமைசார்ந்து பணியமறுத்தல்’ [Civil Disobedience] என்ற பெயரில் பிரபலமான போராட்ட முறையாக ஆகியது.  .

தோரோவின் வால்டன் காட்டுக்குடில் அப்படியே வைக்கப்பட்டிருக்கிறது. பத்தடிக்குப் பத்தடி மர அறையில் கணப்பும் ஒரு மரக்கட்டிலும் அதன் மீது பழைய கம்பிளியும் தலையணையும் இருந்தன. கணப்பருகே கரி அள்ளி போடுவதற்கான இரும்பு கரண்டி. ஒரு மர அடுக்கில் தோரோ புழங்கிய எளிமையான  இரும்புப் பாத்திரம் மர வாணலி மரக்கரண்டிகள். ஒரு சிறிய மர நாற்காலி மேஜை. அவற்றையும் தோரோ அவரே செய்துகொண்டார்.

அந்த இடத்தின் எளிமையில் தோரோவின் ஆளுமை இருந்தது. அத்தகைய இடங்கள் ஒரு மனிதனின் அகத்தை காட்டுபவை. குழந்தை விளையாடும்போது கவனித்திருக்கிறேன். அது பொருட்களை இடம் மாற்றி வைக்கிறது. அடுக்குகிறது. மீண்டும் இடம் மாற்றுகிறது. தன் அகத்துக்குச் சமானமாக அந்தப் புறப்பொருட்களை அமைக்கிறது போலும் என எண்ணிக் கொள்வேன். ஒரு கட்டத்தில் அக்குழந்தையின் அகமே அந்தப்பொருட்களாக அங்கே இருக்கும்.  ஒரு பெண்ணின் சமையலறை என்பது அவள் மனமேதான். அந்த அறை தோரோவின் அகம்.

வால்டன் குளம் அங்கிருந்து கொஞ்சம் தள்ளி உள்ளது. அது 102 அடி ஆழமுள்ள 61 ஏக்கர் பரப்புள்ள பெரிய குளம். மசாசுசெட்ஸ் மாநிலத்தில் கன்கார்ட் என்னும் இடத்தில் இருக்கிறது. பத்தாயிரம் வருடம் முன்பு உருவான பனியுகத்தில் பனிப்படலங்கள் உடைந்து இழுபட்டபோது உருவான பெரும் பள்ளம் அது என்பது நிலவியலாளர் கருத்து.

அக்காலத்தில் இந்தியாவின் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு பனிக்கட்டி அமெரிக்காவில் இருந்துதான் கப்பலில்  வந்துசேரும். பனியை செயற்கையாக உருவாக்கும் தொழில்நுட்பம் அன்றில்லை. உறைந்த ஏரிகளை பெரிய கட்டிகளாக வெட்டி எடுத்து உப்பு கட்டிகளை சூழ வைத்து அதற்குமேல் வைக்கோல் பொட்டலம் செய்து கப்பலில் ஏற்றி அனுப்புவார்கள். உப்பு ஓர் அரிதில் கடத்தி ஆதலால் பலமாதகாலம் பனி உருகாது

அப்படி வந்த பனிக்கட்டிகள் இப்போது சென்னை மயிலை கடற்கரையில் இருக்கும் விவேகானந்தா நிலைய கட்டிடத்துக்கும் வந்துசேரும். அது அக்காலத்தில் ஐஸ் ஹவுஸ் என அழைக்கப்பட்டது. அங்கே அந்த மாபெரும் பனிப்பாளங்களை மேலும் சிறிதாக வெட்டி பிற ஊர்களுக்கு அனுப்புவார்கள். இந்த ஐஸ் ஹவுஸ் தொழிலாளர் வரலாற்றில் முக்கியமானது. இந்த பனிக்கட்டித்தொழிலாளர்கள் போதிய வசதிகள் இல்லாமல் கடும் குளிரில் வேலை செய்தார்கள். கைகள் மரத்து ஊனம் உறுவது சாதாரணம்.

அவர்களிடம்தான் முதல் தொழிற்சங்கம் உருவாகி வந்தது. வாடியா என்ற பார்சிக்காரர்தான் முதல் தொழிற்சங்கத்தை சென்னைராஜதானியில் நிறுவினார். அவருடன் இணைந்து பணியாற்றிய திரு.வி.கல்யாணசுந்தரனார் இந்த தொழிலாளர் இயக்கத்தைப்பற்றி அவரது சுயசரிதையில் விரிவாக எழுதியிருக்கிறார். வாடியா லண்டனுக்குப் போனபின் திரு.வி.கவும் சிங்காரவேலரும் அவ்வியக்கத்தை முன்னெடுத்தார்கள்.

சென்னைக்கும்  டெல்லிக்கும் கல்கத்தாவுக்கு பனியை அனுப்பிவந்த பாஸ்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற பனி ஏற்றுமதியாளரான ·ப்ரெடெரிக் டியூடர் வால்டன் குளத்தில்தான் பனிக்கட்டிகளை வெட்டி எடுத்திருக்கிறார். தோரோ அவரது புகழ்பெற்ற வால்டன் பதிவுகளில் அதைப்பற்றிச் சொல்கிறார். ‘வால்டன் குளத்தின் தூய நீர் கங்கையுடன் கலக்கிறது’ என்று அவர் எழுதினார்.

தோரோ அவருக்குப் பின்னால் வந்த எண்ணற்ற சிந்தனையாளர்களில் ஆழமான பாதிப்பைச் செலுத்தியிருக்கிறார். அவர்களை மூன்று வகையினராகப் பிரிக்கலாம். கவிஞர்கள் இலக்கியவாதிகள் ஓவியர்கள் போன்ற படைப்பாளிகள். இயற்கையை அவதானிக்கவும் அதிலிருந்து தங்கள் ஆற்றலைப் பெற்றுக்கொள்ளவும் தூண்டிய முன்னோடியாக அவர்கள் தோரோவைப் பார்க்கிறார்கள்.  தேவதேவன்கூட தோரொவை தன் ஆன்மீக குருவாகவே எண்ணுகிறார்

இரண்டாவதாக, சூழலியர்கள். உலகமெங்கும் அறுபதுகளுக்குப் பின்னர் உருவாகி வந்த சூழலியத்தில் தோரோவின் கருத்துக்கள் பெரும் பாதிப்பைச் செலுத்தின. இயற்கை என்பது முடிவிலாது சுரண்டுவதற்குரிய ஒன்றல்ல, இயற்கை அதனுடன் ஒத்து வாழும்போதே அவனை வாழவைக்கும் என்ற எண்ணம் தோரோவால் வலுவாகவே உருவாக்கபப்ட்டது. இ.எ·ப் ஷ¤மாக்கர் எழுதிய ‘சிறிதே அழகு’ [Small is beautyful]  போன்ற நூல்களில் தோரோவின் சிந்தனையின் வளர்ச்சி நிலைகளைக் காணலாம்

மூன்றாவதாக தோரோ பின் நவீனத்துவச் சிந்தனைகள் அனைத்திலும் தத்துவார்த்தமான செல்வாக்கைச் செலுத்தினார். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் உருவாகி பத்தொன்பதாம் நூற்றாண்டை ஆக்ரமித்து  இருபதாம் நூற்றாண்டில் உச்சம்கொண்ட  நவீனத்துவத்தின் சாராம்சமாக விளங்கிய கருத்துநிலைகள் மூன்று. ஒன்று, இயற்கையை மானுடம் வென்று தனக்காக பயன்படுத்திக் கொள்வது. இரண்டு உலகம் தழுவிய சிந்தனைகளை உருவாக்கி மானுட சிந்தனை என்ற ஒற்றை வடிவை உருவாக்குதல்  மூன்று அதிமானுடன், முழுமைச் சமூகம் போன்ற உச்சநிலைகளை நோக்கிச் செல்லுதல்.

இந்த கருத்துக்களின் உருவாக்கநிலையிலேயே அவற்றை எதிர்ப்பவராக இருந்தார் தோரோ. அவர் அமைப்புகளுக்கு எதிரானவர். தொழில்நுட்பத்துக்கும் இயற்கையைச் சுரண்டுவதற்கும் எதிரானவர். ஒற்றைப்பெரும் சிந்தனைகளுக்கு எதிரானவர். மனிதனை இயற்கையின் ஒரு பகுதியாகவே எப்போதும் காணவிழைந்தவர். பின்னர் நவீனத்துவத்துக்கு எதிராக எழுந்த முக்கியமான குரல்கள் தோரோவில் இருந்து தொடங்கியவையே. உதாரணமாக கல்வி , மருத்துவம், போக்குவரது முதலியவற்றில் நவீனத்துவம் உருவாக்கிய பெருங்கட்டுமான அமைப்புமுறைகளுக்கு எதிராகச் சிந்தனை செய்த இவான் இல்யிச்.

காந்தியில் தோரோவின் பாதிப்பு மிக முக்கியமானது. தோரோவின் குடிமைசார்ந்து பணியமறுத்தல் என்ற நூலில் இருந்தே காந்தி அவரது சத்யாக்ரக வழிமுறைகளை உருவாக்கிக் கொண்டார். தோரோவின் இய்ற்கையுடன் இணைந்த வாழ்க்கை குறித்த கருத்துக்களும் காந்தியை பெரிதும் கவர்ந்திருக்கின்றன

வால்டன் காட்டுக்குள் தோரோவை நினைத்தபடி நடப்பதென்பது ஒரு உத்வேகமூட்டும் அனுபவமாக இருந்தது. வேல்முருகனிடம் தோரோவைப்பற்றி பேசினேன். தோரோவைப் பார்க்க அந்த காட்டுக்கு அக்காலத்தில் இருந்த பல முக்கியமான கவிஞர்களும் சிந்தனையாளர்களும் வந்திருக்கிறார்கள். அவர் அக்காட்டில் வாழ்ந்த இரண்டு வருடங்களில் உலக சிந்தனையே அவரைக் கவனித்துக்கொண்டிருந்தது.

ஆனால்  இந்திய மரபில் அது மிகச் சாதாரணமான விஷயம். பண்டைக்கால ரிஷிகளுக்கும் நம் மரபு வகுத்தளித்த வாழ்க்கை அதுவே. உலகிலைல் ஈடுபட்டு அனைத்தையும் அறிந்தபின் ஒவ்வொரு மனிதனும் தன் பிற வாழ்க்கையை துறந்து அந்த வன வாழ்க்கைக்கு வந்துசேரவேண்டும் என்றது மரபு.ஆசிரமங்கள் [வாழ்க்கைமுறைகள்] நான்கு. பால்யம் பிரம்மசரியம் கிரஹஸ்தம் [ இளமை, கல்வி , குடும்பம் ]என்னும் மூன்று ஆசிரமங்களுக்குப் பின்னர் நாலாவதாக வந்துசேரவேண்டிய ஆசிரமம் வானபிரஸ்தம்தான்.  அதாவது வனம் புகுதல்.

சமணத்துறவிகள் அதிலிருந்து துறவு என்னும் விரத வாழ்க்கையை இந்திய மரபில் உருவாக்கிக் கொண்டார்கள். அதில் இருந்து பௌத்தர்கள் துறவுவாழ்க்கையை ஓர் அறமாக முன்னிறுத்தினார்கள். ஒரு சம்ணத்துறவியின் வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது தோரோ செய்து பார்த்தது மிக எளிமையான ஓரு சோதனை மட்டுமே. ஆனால் மேலைநாட்டில் தொழில்நுட்பத்தை முன்வைத்த நவீனத்துவத்துக்கு எதிரான மாற்றுச் சிந்தனைகள் முளைத்து வந்த காலம் ஆதலினால் தோரோ ஒரு பெரும் குறியீடாக ஆனார்

வால்டன் குளம் நான் நினைத்திருந்ததை விட மாறாக இருந்தது. உண்மையில் ஏமாற்றம் என்றே சொல்லவேண்டும். நான் எண்ணியிருந்தது அழகான நீலநிறமான ஒரு சிறிய தடாகம்.  சோலைகள் சூழந்து குளிர்ந்து தனித்து காட்டுக்குள் ஒரு மாபெரும் நீலமலர் போல விரிந்திருக்கும் என. நான் கண்ட வால்டன்குளம் வெறும் ஒரு ஏரி. அதன் மறுகரை தெரியவில்லை. சுத்தமான நீலநீர்தான். ஆழம் அதிகம் என்பதனால்  நீந்துபவர்களுக்கு நீருக்குள் வேலி போட்டிருந்தார்கள். கடற்கரை போன்ற பெரிய மணல் விளிம்பு. அதில் நீந்துபவர்களின் பாதுகாப்புக்காக ஒரு காவல்குடீரம். அதில் காவலர்கள்.

வால்டன் குளம் ஒரு பொழுதுபோக்கு நீச்சல்மையமாக ஆகிவிட்டிருந்தது. தோரோவின் நினைவுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இருக்கவில்லை. சொல்லப்போனால்  தோரோ சொல்லிவந்தவற்றுக்கெல்லாம் நேர் எதிராக இயற்கையை ஒரு கேளிக்கைப்பொருளாகத் துய்க்கும் மனநிலை மட்டுமே அங்கே காணக்கிடைத்தது. அது அமெரிக்காவில் எங்குமே இருக்கும் தோற்றம்தான். பண்படுத்தப்படாத, வழிகள் வகுக்கபப்டாத, தன்னிச்சையான இயற்கை என்பதே அமெரிக்காவில் எனக்குக் காணக்கிடைக்கவில்லை. எல்லாமே சுற்றுலாப்பகுதிகள் போல ‘வசதியாக’ ஆக்கப்பட்டிருந்தன. வால்டன் குளத்தையும் ஒரு சுற்றுலா மையமாக ஆக்குவதற்கான எல்லாவற்றையும் செய்திருந்தார்கள். பயணிகள் தங்கள் கார்களில் வந்து உடைகளைக் கழற்றி அதற்கான இடங்களில் வைத்துவிட்டு நீரில் நீந்திக் கொண்டிருந்தார்கள். அமெரிக்கர்களுக்குப் பிடித்த  குறும்படகுச் சவாரி நீர்ச்சறுக்கு முதலியவற்றுக்கும் வசதிகள் இருந்தன

வால்டனில் அரைமணி நேரத்துக்கு மேல் நிற்க என்னால் முடியவில்லை. வேல்முருகனும் நானும் கிளம்பி மீண்டும் பாஸ்டன் நகர் மையத்துக்கு வந்தோம். அங்கே படகுச்சவாரிக்கான அழைப்புகளுடன் ஏராளமானவர்கள் அலைந்தார்கள். படகுகள் நீரில்  காதில் பாட்டுக்கருவி பொருத்திக்கொண்டு மெல்ல நடனமிட்டபடி நிற்கும் கறுப்பினப்பெண்களைப்போல அசைந்துகொண்டிருந்தன. அருகே ஒரு பெரும் கண்ணாடித்தொட்டியில் ஸீல் மீன்கள் கிடந்தன. உள்ளே அமர்ந்திருந்த ஒரு பெண் அவற்றுக்கு மீன்களை உணவாகப்போட்டாள். நாய்களைப்போலவே அவையும் ஆவலுடன் அவளைச் சூழ்ந்து நின்று துள்ளி ததும்பி உணவை வான்கித்தின்றன. பீப்பாய் உடல்.  பீப்பாயில் ஒட்டவைத்தது போல இரு சிறு துடுப்புகள். வால் அவ்வளவேதான். ஆனால் அவை அபாரமான வேகத்துடன் நீரில் சுற்றி வந்தன. பட்டுபோல சாம்பல்நிறத்தில் மின்னியது தொப்பை மட்டுமேயான உடல்.

திமிங்கலங்களைப் பார்க்கப்போவதற்காக பெரிய படகில் ஏறிக்கொண்டோம். திமிங்கிலங்களை பார்ப்பது எளிதல்ல என்றும் பார்க்கமுடியாவில்லை என்றால் மறுநாள் அதே சீட்டு செல்லுபடியாகும் என்றும் சொன்னார்கள். ஆகவே திமிங்கிலம் அனேகமாக கண்ணுக்குப் படாது என்றே நான் எண்ணினேன். ஆனால் செயற்கைக்கோள் மூலம் திமிங்கிலங்களை ஏற்கனவே கண்டுபிடித்து அவற்றை நோக்கித்தான் கூட்டிச்சென்றார்கள். கேளாஒலியலை மூலம் அவற்றின் இருப்பிடத்தைக் கண்டறிந்து துல்லியமாக தேடிச்சென்றார்கள்.

கடல் மரகத நிறத்தில் அலைகள் வ¨ளைய சூழந்து கிடந்தது. இயந்திரத்திந் உறுமல் ஒலி. குளிர்ந்த காற்று சட்டையை மீறி அடித்தது. படகிலேயே ஒரு பெரிய உணவகம் இருந்தது வெள்ளைக்காரர்கள் தின்றுகொண்டே இருந்தார்கள். எங்கும் எப்போதும் தீனிதான். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆறடிக்குமேல் உயரம். நூற்ரைம்பது கிலோவுக்கு மேல் எடை. அவர்கள் சாப்பிடும் பர்கர்களும் சாண்ட்விச்சுகளும் எல்லாமே அவர்களுக்காக நான்கடுக்கு கொண்டவை. காபிகோப்பைகள் குட்டி வாளி போல இருக்கும். உருளைக்கிழங்கு வறுவலும் பெரிய காகிதக்கோப்பை நிறையத்தான். கொக்கோகோலாவை பெரிய காகிதக் கோப்பைகளில் வாங்கி வாங்கி குடித்துக்கொண்டே இருந்தார்கள். எப்போதும் எல்லாருடைய கையிலும் ஏதேனும் உணவோ தின்பண்டமோ இருந்துகொண்டிருக்கும்.

சட்டென்று ஆச்சரிய ஒலிகள். அனைவரும் ஒரு பக்கமாக ஓடினார்கள். அங்கே நீருக்குள் அலைச்சுழிப்பை கண்டேன். பின்னர் திமிங்கலத்தின் முதுகைக் கண்டேன். முதலில் ஒரு பெரிய பாறையின் மேல்பகுதி என்ற எண்ணம்தான் வந்தது.  கூன்முதுகுத் திமிங்கலம். அந்தக் கூன் முதுகைச்சுற்றி, அது நீந்தும்போது நீர் அலைசுழித்தது. சட்டென்று அது மூழ்கி எழுந்தது. எனக்கு பெரிய யான்று நீருக்குள் மூழ்கி களியாட்டமிடுவது போலவே இருந்தது. யானையின் நிறம்தான். யானை நீந்தும்போது  துதிக்கை நீருக்குள் எழுந்து வலுவாக நீரைத் துப்பியடித்து மூச்சுவிடும். அதேபோலவே அந்த பாறை முதுகுக்கு அருகில் நீர் காற்று விசையுடன் கொப்புளித்தெழுந்தது. பிரம்மாண்டமான ஒரு நீராவி யந்திரம் போல.

அதன் மீதே கண்வைத்து பார்த்து நின்றேன். உண்மையிலேயே நீரில் வாழும் ஒரு பேருயிரை நான் பார்த்துக்கொண்டு நிற்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இரண்டு திமிங்கலங்கள். ஒன்று அம்மா இன்னொன்று மகள். அதன் பாலினத்தைக்கூட மைக்கிலே சொன்னார்கள். தாயும் மகளும் உணவு ஏதும் தேடவில்லை, சும்மா அப்படியே நீருக்குள் திளைத்தார்கள். அத்தனைபெரிய உடல்கள் நீரில் மூழ்கி எழுந்தபோதும்கூட நீர் பெரிதாக அலையேதும் எழுப்பவில்லை. அதைப்பார்க்கப் பார்க்க நீருக்குள் இரு பெரும் யானைகள்தான் கும்மாளாமிடுகின்றன என்ற பிரமையை என்னால் நீக்கவே முடியவில்லை

சட்டென்று இரண்டு இரட்டைவால்கள் மேலே தெரிந்தன. திமிங்கலங்கள் சட்டென்று மூழ்கி மறைந்தன. உடனே படகைத்திருப்பி அவை மேலே எழும் பகுதியை நோக்கி சென்றார்கள். நீருக்குள் அவை படகைத்தவிர்க்கும் பொருட்டு நீந்தி மூச்சுக்காக மேலே எழுந்தபோது ‘ஹா’ என்ற ஒலிகளுடன் பலநூறு கண்களுடன் படகு காத்திருந்தது. திமிங்கலங்கள் நீரை கொப்பலித்தன. சற்று நேரம் நீந்தியபின் மீண்டும் வால் தெரிய ஆழத்துக்குச்சென்றன. மேலும் அவற்றை பின் தொடர்தால் ஆபத்து என்றார்கள். திரும்பிவிட்டோம்.

திமிங்கலங்கல் மீண்டும் க்ர்மன் மெல்வில் நினைப்பை எழுப்பின. அவரும் பாச்டனின் ஆழ்நிலைவாதத்தின் சூழலில் வலர்ந்தவர்தான். அவருடைய கண்ணுக்கு இயர்கையின் பெரும் வல்லமையாகிய திமிங்கலம் வெல்லபப்டவேன்டிய ஒன்றாகவே தோன்றியிருக்கிறது. ஆச்சரியம்தான். என் நண்பர் நீலகண்டன் ஆரவிந்தன் அப்படி இல்லை என்றார். திமிங்கிலம் வெல்லமுடியாதது என்றே மெல்வில் எழுதியிருக்கிறார் என்றார். இருக்கலாம். நான் வாசித்து இருபது வருடமாகிரது. ஆனால் என் மனப்பிம்பத்தில் த்மிங்கிலம் குரூரமாக கொல்லப்படுவதும் கொல்பவன் மாபெரும் வீரனாக காட்டப்பட்டிருப்பதுமே நிற்கிறது

முந்தைய கட்டுரைவெள்ளைமலை. புகைப்படங்கள்
அடுத்த கட்டுரைமூதாதையர் குரல்: கடிதங்கள்