வாக்களிக்கும் பூமி 5 , வெள்ளைமலை

வெள்ளை மலைக்குச் செல்லும்வழியில் நான் ஹெர்மன் மெல்வில்லையே எண்ணிக்கொண்டிருந்தேன். மிகச்சிறிய வயதில் அவரது மோபி டிக் நாவலை நான் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழக வெளியீடாக வாசித்தேன். பின்னர் ஆங்கிலம் வாசிக்க ஆரம்பித்தபின்னர் முழுநூலையும் வாசித்தேன். அந்த அவ்வயதில் அந்நாவல் அளித்த சாகசம் அலையடிக்கும் கனவுலகம் அபாரமான மன எழுச்சியை அளித்தது.

அக்காலத்தில் சாகச நாவல்களைத்தவிர பிற என்னைக் கவர்ந்ததே இல்லை. ஐவன்ஹோ, த்ரீ மஸ்கட்டீர்ஸ், கவுண்ட் ஆ·ப் மாண்டிகிரிஸ்டோ ,வெஸ்ட்வேர்ட் ஹோ போன்ற நாவல்கள். இவற்றை நான் காசர்கோட்டில் வேலைபார்க்கும்போது அங்கிருந்த அரசு நூலகத்தில் வாசித்தேன். யாரோ ஒருவர் நன்கொடையாக அளித்த தோல் பைண்டு போட்ட நூல்கள் . இன்றும் தோல் பைண்டு செய்யப்பட்ட கனத்த நூல்கள் சட்டென்று அந்த காலகட்டத்தின் நினைவை நெஞ்சில் எழுப்பிவிடுகின்றன.

ஹெர்மன் மெல்வில் பாஸ்டனனைச் சேர்ந்த புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தவர்.  அவரது தாத்தா தாமஸ் மெல்வில் புகழ்பெற்ற பாஸ்டன் டீபார்ட்டியில் பங்குகொண்டு தப்பி பிழைத்த சுதந்திரப்போராளி. மெல்வில் நியூயார்க்கில் பிறந்தாலும் கூட அவரது மனம் முழுக்க பாஸ்டனில் உருவானதாகவே இருந்தது. வெள்ளைமலை என்ற உருவகம் அவருக்கு இங்குள்ள இந்த மலையில் இருந்துதான் கிடைத்திருக்கக்கூடும்.

வெள்ளைமலை [வைட் மௌண்டய்ன்] போகலாமென்று மெய்யப்பன் சொன்னதுமே அது ஒரு பெரும் திமிங்கலமாக என் கண்ணுக்குத்தென்பட ஆரம்பித்துவிட்டது. மனிதனை சிறியதாக்கும் எதற்குமே ஒருவகையான கவித்துவம் இருப்பதாக தோன்றுவதுண்டு. ஜூலை 14 அன்று காலை மெய்யப்பன் பாலா வீட்டுக்கு வந்து என்னை கூட்டிச்சென்றார். மெய்யப்பனின் தந்தையும் தாயும் கூடவந்தனர். அவரது இரு மகன்களும் கூடவே இருந்தார்கள். மூத்தவன் கதிர், இரண்டாமன் சுடர். ஓயாது பேசும் மூத்தவன் தன் இருப்பை எப்போதுமே நிலைநாட்டவிரும்பும் துடிப்பான ஆளுமை. எப்போதும் கவனித்தபடி இருக்கும் இளையவனாகிய சுடர் ஆழமான ஆளுமை. சிறுவயதிலேயே உருவாகிவரும் இந்த தனித்தன்மை மிகவும் ஆர்வம் அளிப்பது. மெய்யப்பனின் அப்பா காரைக்குடியில் உயிரியல் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

காரில் வெள்ளைமலை நோக்கி சென்றோம்.  இருபக்கமும் அடர்ந்த குறுங்காடு வந்தபடியே இருந்தது. அதிகமும் பைன் மரங்கள். அவ்வப்போது மேப்பிள் கூட்டங்கள். வெள்ளைமலை கனடா எல்லையருகே இருக்கிறது. ஆகவே குளிர்காலம் மிகத்தீவிரமானது. குளிர்தாங்கும் மரங்கள் மட்டும்தான் அங்கே. குளிர் மரங்களின் கூட்டங்களைப் பார்க்கையில் கஜூராஹோ போன்ற கோபுரங்கள் பச்சை நிறத்தில் கூட்டங்களாக நிற்பதுபோன்ற ஒரு கற்பனை எழுந்தது

 

View Full Size Image

இளவேனில் காலம்.  இந்த பனிநிலம் புன்னகை செய்யும் பருவம் இது. பளீரென்ற வானம்.  கீழே பசுமையே நிலமாக விரிந்து மௌனத்தில் உறைந்து கண் தொடும் தூரம் வரை விரிந்து கிடந்தது. பிரம்மாண்டமான கரிய நதிபோல வளைந்து சென்ற சாலை. அவ்வப்போது கடந்துசெல்லும் நீல ஓடைகள் நீலத்தில் ஜொலித்து வழிந்தன. ஆனால் இத்தகைய ஒரு நிலத்தில் இந்தியாவில் பறவைகள் நிறைந்திருக்கும்.  அணில்கள், பலவகைப் பூச்சிகள் புழுக்கள் ….உயிரின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்த நிலம்  அமைதியாக கிடப்பது போல் இருந்தது..

வழியில் ஒரு இடத்தை வரலாற்றுச்சிறப்புள்ள இடமாக குறித்து வைத்திருக்கிறார்கள். ஒருபெரிய பாறையின் இடுக்குதான் அது. கிட்டத்தட்ட நூறுவருடங்களுக்கு முன்னர் அவ்வழியாக வந்த ஒரு பயணி பனிப்புயலில் மாட்டிக்கொண்டிருக்கிறார். கடும்குளிரை தீரமாக எதிர்கொண்ட அவர் தான் ஏறிவந்த குதிரையை கொன்று உரித்து அந்த தோலைப்போர்த்திக்கொண்டு அந்த பாறையின் இடுக்குக்குள் நுழைந்துகொண்டார். அவரைச்சுற்றி மலைபோல பனி எழுந்து மூடியது. ஆனால் அவர் மூன்றுநாள் உயிருடன் இருந்தார். அவரைத்தேடிவந்தவர்கள் அவரை மீட்டார்கள். அந்த இடத்தைப் பார்க்க பயணிகள் வந்து கொண்டே இருந்தார்கள்.

View Full Size Image

 

சாதாராணமான ஒரு பாறை இடுக்குதான் அது. ஆனால் அங்கே என்றோ ஒரு உக்கிரமான மனித நாடகம் நடந்திருக்கிறது. உயிர் தன்னைக்காத்துக்கொள்ள செய்யும்  உச்சகட்ட போராட்டம். ஆனால் இந்திய மனம் அதற்கே உரிய கோணத்தில் சிந்திக்காமலும் இல்லை.  தான் ஏறி வந்த அந்தக் குதிரையை எப்படிக் கொல்ல முடிந்தது அவனால்? தன் வண்டிக்காளையைக் கொல்ல ஒரு இந்திய விவசாயியால் முடியுமா என்ன? அது அவன் தோழன் அல்லவா? கி.ராஜநாராயணன் எழுதிய குடும்பத்தில் ஒருவர் என்ற சிறுகதை நினைவில் எழுந்தது.

போகும்வழியில் ‘தொட்டி’ [தி பேசின்] என்னும் சிறிய நீர்வீழ்ச்சியும் பயணிகளால் விரும்பிப்பார்க்கப்படுகிறது. வேகமாக வரும் நீரோடை ஒன்று ஒரு பாறைச்சுழலில் சுழன்றுசெல்வதனால் அங்கே பாறை அரித்து ஒரு தொட்டிபோல ஆகிவிட்டிருக்கிறது. பனியில் அது உறையும்போது ஒரு மாபெரும் பீங்கான் கிண்ணம்போல் இருக்குமாம். ஹென்றி டேவிட் தோரோ அங்கே வந்து நின்று அந்த இடத்தை பார்த்திருக்கிறார். அவரது குறிப்பை அங்கே எழுதிவைத்திருக்கிறார்கள். தோரோவின் வால்டன் குளம் பாஸ்டனில் இருப்பதை மெய்யப்பன் சொன்னார். மறுநாள் என்னை வேல்முருகன் அங்கே அழைத்துச்செல்லவிருப்பதாகக் குறிப்பிட்டார். குளிர்ந்த பளிங்கு நீர் கொட்டி சுழன்று சென்றுகொண்டிருந்தது அங்கே.

வெள்ளைமலை வழியில்தான் மசாசுசெட்ஸ் மாகாணத்தின் சின்னமாக விளங்கிய மலைமுகடான செவ்விந்தியமுகம் இருந்தது. அது உண்மையில் மலையுச்சிப்பாறை ஒரு கோணத்தில் கொள்ளும் ஒரு தோற்றம்தான். நெற்றி மூக்கு ஆக தோன்றும் அடுக்கடுக்கான பாறைகள் அதற்குக் கீழே உள்ள மோவாய் போன்ற பாறையை பிடித்து வைத்திருந்தன. அந்த முகம்பதிக்கபப்ட்ட ஏராளமான கார்டுகள் சின்னங்கள் விற்கபடுகின்றன. ஆனால் அந்த முகம் இப்போது இல்லை. சிலவருடங்களுக்கு முன்பு அது சரிந்துவிட்டது. அந்த மலைமுகடு இருந்த இடத்தை பார்த்தோம்.

வெள்ளைமலை பனிச்சறுக்குக்கு புகழ்பெற்றது. பனிக்காலத்தில் நாடெங்குமிருந்து அங்கே பனிச்சறுக்குப் பிரியர்கள் வந்து குழுமுவார்கள். மலைக்குமேலே இருந்து கீழ்த்தளம் வரை சரிவாக மரங்களை வெட்டி வைத்திருக்கிறார்கள். அங்கே நாலடிக்குமேல் கனத்துடன் பனிவிழும்போது அதன்மேல் சறுக்கி அதிவேகமாக கீழே  இறங்குவார்கள். மலைமேல் ஏறுவதற்கு கயிற்றுவண்டி உள்ளது. பனிச்சறுக்குகருவிகளுடன் மலைமேல் திரும்புபவர்களுக்காக  இருவர் இருவராக இருக்கைகளில் அமர்ந்தே செல்லும் கயிற்றுவண்டிப்பாதையும் உள்ளது.

மெய்யப்பன் தட்பவெப்பநிலை சம்பந்தமாக வானொலியை நம்பி நல்ல கம்பிளி உடைகளை எடுக்காமலேயே வந்துவிட்டிருந்தார். ஆனால் வெள்ளைமலையில் கடுமையான குளிர். கீழே அவ்வளவு குளிர் இல்லை. கம்பிவண்டி வழியாக ஏறி மேலே செல்லச் செல்ல குளிர் ஏறியபடியே வந்தது மேலே ஒரு உணவகம். அங்கே பயணிகள் பலவகையான அமெரிக்க உணவுகளை தின்ருகொண்டிருந்தார்கள். சூடாக ஒரு சாக்லேட் பானம் அருந்தினேன். பின்னர் கைகளை இறுக்கிக் கட்டிக்கொண்டு மலையைப் பார்க்கச் சென்றோம்.

வெள்ளைமலை மேல் நின்றால் கனடா எல்லை தெரியுமாம். ஆனால் அப்போது தெரிந்ததெல்லாம் வெள்ளைப்பனிப்புகை மட்டுமே. பனிப்புகை மெல்ல விலகும்போது பெரிய வாள் போல கரிய பளபளப்புடன் வளைந்து கிடந்த சாலை தெரிந்தது. அதில் சிறிய கார்கள். அவை சிலசமயம் கண்ணாடித்துண்டுகளாக ஒளி விட்டன. எதிரே வரும் வெள்ளையர்கள் ”நல்ல நாளாக அமையட்டும்” என புன்னகையுடன் வாழ்த்திக்கொண்டு சென்றார்கள்.

மையத்தில் இருந்த கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி சுற்றிலும் தவழ்ந்த பனியையும் பனி விலகிய சில கணங்களில் முகம் காட்டி மூழ்கிய கரடுமுரடான மலைமுடிகளையும் பார்த்தோம். குளிர் கொஞ்ச நேரத்தில் நெஞ்சுக்குள் புகுந்துகொண்டு பாரமாக அமைந்துகொண்டது. திரும்பி அந்த  ஓட்டலுக்குள் நுழைந்த பின்னர்தான் மூச்சே மீண்டது

கம்பிவண்டியில் திரும்பி தரை இறங்கியபோது குளிர் பெரிதும் குறைந்திருந்தது. அங்கே ஓர் இடத்தில் காரை நிறுத்திவிட்டு அவரது குடும்பத்தினரும் நானும் அமர்ந்து  எலுமிச்சை சாதமும் தயிர் சாதமும் சாப்பிட்டோம். எலுமிச்சைக் கட்டுச்சாதம் எடுத்துக்கொண்டு பயணம்போகும் வழக்கம் இப்போது தமிழகத்தில் எங்காவது உள்ளதா தெரியவில்லை. ஆனால் அமெரிக்கத்தமிழர்கள் நடுவே அது பிரபலம். பர்கரை சாப்பிடுவதை தவிர்க்க வேறு வழியே இல்லை.

பொதுவாக உணவுதான் பண்பாட்டுவேறுபாடுகளை அறைந்து சொல்கிறது. இந்தியாவில் வளர்ந்த இந்தியத்தமிழர்களுக்கு இந்திய உணவின் சுவையை நாவிலிருந்து எளிதில் விட்டுவிட முடிவதில்லை. அவர்கள் அனேகமாக வீட்டில் இந்திய உணவைத்தான் உண்கிறார்கள்.  தங்கள் குழந்தைகளுக்கும் இந்திய உணவையே பழக்குகிறார்கள். ஆனால் இந்திய உணவு அமெரிக்க உணவுடன் ஒப்புநோக்க மசாலா நெடி அதிகமானது. இதை உண்டபின் ஒருவரிடம் அந்த நெடி எப்போதும் இருந்துகொண்டிருக்கும். இந்த நெடி வெள்ளையர்களுக்கு அன்னியமாகவும் சில சமயம் ஒவ்வாததாகவும் உள்ளது.

ஆகவே தமிழர்கள் அலுவலகங்களுக்கு பெரும்பாலும் சான்ட்விச்சுகள் போல நெடியற்ற அமெரிக்க உணவுகளையே கொண்டுசெல்கிறார்கள். இது ஒரு பெரிய விஷயம் இல்லைதான்.  ஆனால் சில சமயங்களிலாவது இது சில வகையான உளச்சிக்கல்களுக்கு நம்மைக் கொண்டுசெல்கிறது. நாம் ஒரு தகாத– நாகரீகம் இல்லாத- உணவை உண்கிறோமோ என்ற ஐயம் எழுகிறது. நம்முடைய ருசிகளை நாம் எந்த எல்லைவரை வலியுறுத்தலாமென்ற கேள்வி எழுகிறது.

உணவு என்பது ஒரு பகுதியின் விளைபொருட்கள் மற்றும் தட்பவெப்பநிலையுடன் தொடர்புள்ளது. இந்தியாவுக்குள்ளேயே உணவுப்பழக்கத்தில் பெரும் வேறுபாடுகள் உள்ளன. கேரளத்து உணவு இங்கே  அதிகமாக கிடைக்கும் தேங்காயைச் சார்ந்ததாக உள்ளது. மழைமிக்க குளிரான தட்பவெப்பத்துக்கு பொருத்தமானதாக உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலும் புஞ்சைநிலப்பயிரான பருப்பைச் சார்ந்த , வெயில் மிக்க தட்பவெப்பத்துக்குப் பொருத்தமான உணவு உண்ணப்படுகிறது.

உணவு எளிதாக அடையாளங்களை உருவாக்குகிறது. உடனடியாக எவரும் கண்டடைந்துவிடக்கூடிய அடையாளம் அது. இந்தியாவில் சாதி அடையாளங்களை வகுக்க உணவுப்பழக்கம் முக்கியமாக பயன்படுகிறது. ‘அய்யரும் அய்யங்காரும் ஒண்ணுதான். அய்யங்கார் வெங்காயம் பூண்டு சேத்துக்க மாட்டாங்க’ என்று ஒருமுறை ஒரு கிராமத்து ஆள் பேசியது நினைவிருக்கிறது. எத்தனை எளிமை! இந்தியச் சூழலில் சைவம்  அசைவம் என மாபெரும் பிரிவாக சமூகம் பிரிந்து கிடக்கிறது

உணவின்மூலம் ‘பிறனை’ உருவாக்கிக் கொள்வதென்பது பொதுவாக மானுட இயற்கை. நம் தென்னிந்திய மூக்குக்கு வடக்கே உள்ள கடுகெண்ணை குமட்டிக்கொண்டு வரும். ஒரு பிகாரி அருகே வந்தாலே கடுகெண்ணை வாசனை அடிப்பதாக உணர்வோம். மாமிசம் உண்பவர்களின் வியர்வை வாசனை தனக்குக் குமட்டுவதாக என்னிடம் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த விஷயத்தைச் சார்ந்த என் கருத்துநிலை இதுதான். ஒரு பொது இடத்தின் பொதுவான மனநிலையை குலைக்கும் அளவுக்கு தனிப்பட்ட உணவுப்பழக்கத்தை நாம் வலியுறுத்தக்கூடாது. இதை நாம் இந்தியாவிலும் செய்துகொண்டுதான் இருக்கிறோம். பள்ளிகளுக்கும் அலுவலகங்களுக்கும் மீன் உணவுகளை கொண்டுசெல்பவர்கள் இந்தியாவில் மிகவும் குறைவே. எல்லாரும் மீன் உணவே கொண்டுவரும் என் அலுவலகத்தில் கொண்டுசெல்வதிலும் தவறில்லை.

ஆனால் உணவுப்பழக்கம் சார்ந்து ஒரு ‘பிறனை’ உருவாக்கிக் கொள்வதென்பது மிகவும் பண்படாத ஒரு மனநிலையையே காட்டுகிறது. எந்த உணவும் சிறந்ததே. என்னைப்பொறுத்தவரை எந்த உணவையும் நான் உண்ணத்தயார். பூனை ,பாம்பு, பலவகை பூச்சிகள் என சகலத்தையும் நான் உண்டிருக்கிறேன். அப்படி  ஒருவேளை நம்மால் எல்லாவற்றையும் உண்ண முடியாமல் இருக்கலாம். நம் உணவுப்பழக்கம் தவிர பிறிதை ஏற்க முடியாமல் இருக்கலாம். ஆனால் ஒருபோதும் நாம் பிறரது உணவுப்பழக்கங்களை வெறுக்கவும் அருவருக்கவும் கூடாது. உணவுப்பழக்கத்தை வைத்து ஒருவரை மதிப்பிடவும் கூடாது.

உணவுப்பழக்கங்கள் பல்லாயிரமாண்டு பாரம்பரியத்தால் மெல்ல மெல்ல உருவாக்கப்பட்டவை. அவற்றில் அந்த நாகரீகத்தின் வரலாற்றுப்பரிணாமமே அடங்கியிருக்கிறது.தமிழர் உணவை உண்ணும் வெளிநாட்டினர் இது பொதுவாக புளிப்புச்சுவை அதிகமானது என உணரலாம். ஏனென்றால் எல்லாமே எளிதில் புளித்துவிடும் வெயில்சூழலில் நம் பண்பாடு உருவாகி வந்திருக்கிறது. புளித்தலுக்கு எதிராகவே நாம்  மிளகு சீரகம் வெந்தயம் கறிவேப்பிலை பெருங்காயம் போன்ற பல நெடிமிக்க உணவுப்பாதுகாப்பு பொருட்களை உணவுடன் சேர்த்துக்கொண்டிருக்கி§றோம்.

உணவின் ருசி என்பது மரபின் ருசியே. எந்த உணவும் நாப்பழக்கம்தான். பத்து நாள் கடும்பசியுடன் ஓர் உணவைச் சாப்பிட்டால் அது நாக்குக்கு ருசியாக ஆகிவிடும். நாகரீகமான உணவுப்பழக்கம் என்ற ஒன்றே கிடையாது. அது முழுக்க முழுக்க கண்ணோட்டம் சார்ந்தது. இலைபோட்டு அமர்ந்து கையால் பிசைந்து தின்பதை ஒரு முதிராமனம் கொண்ட வெள்ளையன் நாகரீகமற்றதாக எண்ணுவான். ஆனால் ரொட்டிக்குள் கறியையும் தாவரங்களையும்போட்டுத் திணித்து செங்கல் அளவுக்கு செய்து வாயை நீர்யானை போல பிளந்து பொச் பொச் என்று தின்னும் அமெரிக்க அதிநாகரீகம் நாஞ்சில்நாட்டு காரணவரை பீதியடையச் செய்துவிடக்கூடும்!

மிருகங்கள் தங்கள் வாசனையை அடையாளமாக விட்டுச்சென்று எல்லை வகுப்பதைப் போல எலுமிச்சை சாத வாசனையை வெள்ளைமலையில் விட்டுவிட்டு கிளம்பினோம். ஒரு நான்குநாளைக்கு அங்கே வரும் எந்த தமிழனும் ‘ஆ தமிழ்!’ என புளகாங்கிதம் அடையக்கூடும்!

[மேலும்]

முந்தைய கட்டுரைபண்பாடு ஒரு கடிதம், விளக்கம்
அடுத்த கட்டுரைஉரைகள் கடிதங்கள்