பண்பாடு ஒரு கடிதம், விளக்கம்

 

அன்புள்ள ஜெயமோகன்,

எங்கள் வீட்டில் ட்ஃபி என்றொரு நாய் குட்டி வளர்த்தோம். ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு உணவும் பாசமுமாக, ஊட்டி ஊட்டி வளர்த்தோம். வீட்டுக்குள் அது சுற்றி விளையாட போதுமான இட வசதி கிடையாது. யாரேனும் தெருக்கதவை திறக்க மாட்டார்களா என்று காத்திருந்து நொடிப் பொழுது சந்தர்ப்பம் கிடைத்தாலும் பயன் படுத்திக் கொண்டு வெளியே ஒடிவிடும். கார்த்திகை மாதம் என்றால் இன்னும் சிரமம். இரவு முழுவதும் துணை தேடி டஃபி ஊளையிட்டுக் கொண்டே இருக்கும்.

 

அது வீட்டுக் கதவினை தப்பிச் சென்று விடும் நிலையில்வீட்டு நாயான அதனால் தெரு நாய்களுடன் உறவாட முடியாமல், கடி பட்டு ரத்தம் சொட்ட சொட்ட திரும்பி வரும். காயத்துக்கு மருந்து போட நெருங்க விடாது. அப்பா இரவு முழுவதும் விழித்திருந்து அது உறங்கிய பின் ஓசை படாமல், அதை நெருங்கி, அழுத்தமாக பிடித்துக் கொள்வார். அது திமிர முயற்சிக்க நான் அவசரமாக மருந்திடுவேன். சரியாக அதை பழக்கவில்லை என்று எண்ணி அது வெளியேற முயன்ற பொழுதுகளில் கொஞ்சம் அடிப்பது போல் மிரட்டி,  பிறகு அடித்துமே கூட பார்த்தோம். கனமான சங்கிலி கொண்டு பிணைத்து வைத்தோம். எதுவும் பிரயோஜனப் படவில்லை. அதற்கு வெளியேற வேண்டும் என்ற வெறி இயல்பிலேயே இருந்திருக்க வேண்டும். சங்கிலியை அறுத்து போட்டு விட்டு ஓடியது. மீறி ஒட முடியாத சமயங்களில் சாப்பிட மறுத்தது. சோர்ந்து போய் மூலையில் முடங்கிக் கொண்டது. மொட்டை மாடியின் கட்டை சுவர் மேல் முன்னங்கால்களை தூக்கி வைத்துக் கொண்டு தெருவையே வேடிக்கைப் பார்த்தது.

 

இப்போது யோசித்துப் பார்த்தால் அது வாழ் நாள் முழுவதும் தெருவையே ஏங்கி காத்திருந்ததாகப் படுகிறது. வெளியேறத் துடிக்கும் ஆசையைத் தவிர மிக மிக பாசமான நாய்க்குட்டி. கடைசியில் கடிபட்ட காயம் ஆறாமல் தான் அது இறந்து போக நேர்ந்தது. அப்பா அதை தெருக்கோடியில் புதைத்து விட்டு அடிக்கடி அந்த இடத்தை சென்று பார்த்து வருவார். நான் என மின்னஞ்சல் முகவரியை உருவாக்கும் போது அதன் பெயரை சேர்த்துக் கொண்டேன். அம்மா அது இறந்த நாளை நினைவு கூறும் போது குரலில் தழு தழுப்பாள்.

 

எல்லாவற்றையும் தாண்டி எனக்கு ட்ஃபியை எண்ணும் போது குற்ற உணர்ச்சிதான் மேல் எழுகிறது. சுதந்திரமாக அதை ஆரம்பம் முதல் தெருவிலேயே விட்டு விட்டு, வீட்டு வாசலில் சாப்பாடு மட்டும் வைத்தபடி நாங்கள் ஒதுங்கிக் கொண்டிருந்திருக்க வேண்டும். அப்போது அது எங்கள் உண்மையான அன்பை வெளிப்படுத்துவதாக இருந்திருக்கும். டஃபியை பொறுத்தவரை அதன் வாழ்வு நரகமானதற்கு எனது நாய் வளர்க்கும் ஆசை தான் காரணம். என்னால் என்னை மண்ணிக்கவே முடியாது.

 

 

உங்களின் ‘யாருடைய ரத்தம்?’ – படித்தேன். இந்தியா குறித்த இழிவுணர்ச்சி, இளக்காரம் வருந்தத் தக்கது தான். ஆனால், அதே சமயம் ஒருவர் இந்தியர் என்ற பெருமிதத்தை அடைவது அதற்கு எப்படி மாற்றாக ஆகும் என்று வியக்கிறேன். இளக்காரத்துக்கு நேர் எதிர் நிலை தானே பெருமிதம். அதைத் தவிர ‘பெருமிதம்’ வேறு என்ன நன்மை சேர்த்து விட முடியும்?

 

 

அமெரிக்காவில் ‘இளக்காரம்’ செயலாற்றுகிறது என்று வருந்தியிருக்கிறீர்கள். இங்கே மலாவியில் ‘பெருமிதம்’ தன் வினையாற்றுகிறது. ஆஃபிரிக்கர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று எண்ணுகிறார்கள். அப்படிப் பார்த்தால் பெருமிதம் ஏற்படுத்தும் சிக்கல்கள் ‘ இளக்காரத்தை’ விட அதிகமாகத் தான் தெரிகிறது.(இங்குள்ளவர்கள் நீங்கள் பட்டியலிடும் எழுத்தாளர்களை படித்திருந்தால் ஒருவேளை கொஞ்சம் ஆழமாக சிந்தித்திருப்பார்களோ என்னவோ – ஆனால்

நல்ல வாசிப்பில் நிச்சயம் ‘பெருமிதம்’ எஞ்சாது, சாரம்சமான அன்பே மிச்சமாகும். எனவே அப்போதும் அவர்களுக்கு ‘பெருமிதம்’ கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்பது மட்டுமே எனக்கு முக்கியமாகப் படுகிறது)

 

அன்பு வழி – என்ற அந்த நாவலை படித்ததில்லை. உங்கள் வார்த்தைபடுத்தலில் அதன் சூருக்கத்தை வாசிக்க முடிந்தது. நன்றி. அற்புதமான நாவலாகத் தான் தோன்றுகிறது. தேடி பிடித்து படித்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொள்கிறேன்.

ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள விதத்திலே கூட, அந்த நாவல் பேசும் தளம் வேறொன்றாகத் தான் இருக்கிறது. அது மனிதனை வழி நடத்தும் அற உணர்வை ,அதன் அடிப்படையிலான உணர்சிகளை பிரதிபலிப்பதாகவே, என்னால் காண முடிகிறது. அந்தக் கதையை கிறிஸ்துவை விடுத்து ராமசாமி என்ற பெயருடைய கதாபாத்திரத்துடனும் கூட சொல்லிவிட, புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

 

 

‘அன்பு வழி ‘ யில் துவங்கி அதை நீங்கள் கொண்டு சென்று இணைக்கும் இடமே இந்த கடிதத்தை நான் எழுதக் காரணம். உங்கள் வார்த்தைகளின் வழி நான் வாசுத்த ‘அன்பு வழி’ , யாருடைய ரத்தம்? – என்ற ‘பற்றுதல்’ பற்றி பேசவில்லை என்றே நம்புகிறேன். அதில் ‘பற்றுதல்’ என்றொன்றை தேடினால், அது ‘நாம் எல்லாரும் பாவிகள் என் தேவனே என்னை ரட்சித்து அருளுங்கள்’ என்று கண்ணை மூடிக் கொண்டு கதறும் நிலைக்கான கிறிஸ்தவப் பற்றுதலில் கொண்டு சேர்த்துவிடும். அத்தகைய விஷயங்களில் ஒரு இலக்கிய வாசகன் அக்கறை கொள்ளுதலே ‘தற்கொலையாக’ முடியும் என்று நினைக்கிறேன்.

அதே இடத்தை ஓஷோ, தனது வழக்கமான நகைச்சுவை மூலம், தாண்டிச் செல்கிறார். 

 

http://www.youtube.com/watch?v=2nEyPAmMr5A&feature=fvsr இந்த இணைப்பில் அது கிடைக்கிறது. பூமியிலிருந்து 20 அடி உயரத்தில் என்ற வர்ணணை ஒஷோ சொல்ல முனைவதற்கு வலு சேர்த்து விடுகிறது.

 

 

 

கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், ‘அன்பு வழி’ என்ற இந்த கதைக்கும் சுஜாதா, தன் தந்தையிடம் பேசும் ‘பாச மலர்’ காட்சிக்கும் சம்மந்தமில்லை என்று படுகிறது. நான் ‘ பாசம்’ என்ற வார்த்தையை பகடி செய்ய முயலவில்லை. அன்பு எந்த வடிவிலிருந்தாலும் அது உன்னதமாகத் தான் இருக்கிறது. ஆனால் ‘மகன்’ என்ற பிடிப்பிலிருந்து ‘பாசம்’ என்ற சொல்லுடன் எழும் அன்பு, இலக்கியத்திற்கோ வேறு பல உரையாடல் தருணங்களில் சூட்டுதலுக்கோ முக்கியமானதென்று ஏற்க முடியவில்லை. அதே சுஜாதாவின் தந்தை ‘உன் பிள்ளைகளுக்கு கொடுடா போறும்’ என்பதற்கு பதிலாக ‘ மற்றவர்களுக்குக் கொடு’ என்று பொதுமைப் படுத்தி யிருந்தால் அந்த வாசகம் நிச்சயம் கொண்டாட்டத்துக்குரியது தான்.

 

 

யுவன் சந்திர சேகர் தன் கதைகளில் அப்படி ஏந்தி நிற்கிறார். அவரது கதைகள் அனைத்திலுமே கவனித்துப் பார்த்தால் அந்த தன்மை இருக்கிறது. அவர் குடும்பக் கதை போல் சொல்லும் ஒவ்வொரு இடத்திலும் அந்த அமைப்பின் மூலம் விரிவு பட்ட தொரு அன்பினை காட்டவே முயல்வதாக கவனிக்கிறேன். நீங்கள் அதை உங்கள் நகைச்சுவைப் பகுதியில் ‘நெகிழ்வு’ என்று மட்டும் கிண்டலாக சொல்லிவிட்டு விட்டுவிட்டீர்கள். யுவன் சமந்தப் பட்ட வேறு பதிவுகளில் நீங்கள் இதை முன் நிறுத்திப் பேசியதாகவும் நினைவில்லை.

 

சமீபத்தில் எழுதியிருந்த மற்றொரு பதிவினில், யுவனை நான் எப்படி வரையறுக்கிறேன்- அவன் சிறிய விஷயங்களின் கதை சொல்லி என்று துவங்கி எழுதியிருந்தீர்கள். ஒரு ஜென் கவிதை ஒன்று ஞாபத்திற்கு வருகிறது.

 

 

உலகம் ஒரு
பனித்துளி போன்றது…உலகம்
ஒரு பனித்துளி போன்றதுதான்
…என்றாலும்…
…என்றாலும்…
கொபயாஷி இஸ்ஸா (ஜென் கவிதைகள் – யுவன் சந்திர சேகர்)

 

 

கோபயாஷி இஸா -வை நாம் பனித்துளி பற்றி எழுதிய கவிஞர் என்று சொல்லிவிட முடியுமா. அது போல தான் எனக்கு யுவனை, சிறிய விஷயங்களின் கதை சொல்லி என்று வரையறுப்பதும் படுகிறது. ஒரு மின்னற் பொழுதில் தென்படும் ஆகாயத்தின் பிரம்மாண்டத்தை பேசும் ஒரு கலைஞனை, சிறிய விஷயங்களின் கதை சொல்லி என்று வரையறுத்தல் கூட அவனுக்கு இழைக்கப் படும் துரோகமாகத் தானே முடியக் கூடும்?

 

 

முதல் பத்தி தோறும், யுவனை இப்படி புறக்கணிக்கிறார்கள் அப்படி புறக்கணிக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, கடைசியில் அதைத் தானே நீங்களும் சிறிய விஷயங்களை பேசுகிறவர் என்று சொல்வதன் வேறு வகையில் செய்கிறீர்கள்? இதில் மட்டும் அவரது முக்கியத்துவம் புறக்கணிக்கப் படவில்லையா. மனித சரித்திரத்தின்  கதா நாயகர்களின் பெயரைச் சொல்லி பேசினால் அது பிரம்மாண்டம், சராசரி வாழ்வின் வழி பேச முயன்றால் அது சிறிய விஷயமா.

 

 

உதாரணத்திற்காக கேட்கிறேன், தவறு என்றால் மன்னிக்கவும் -யுவன் அவரது கதாபாத்திரத்திற்கு ‘புக்காரின்’ என்று பெயர் வைத்து கொஞ்சம் பின்னணி சேர்த்திருந்தால் அது பெரிய விஷயமாகியிருக்குமா? அதற்கு மட்டும் தான் பெருவெளியை பேசுதல் என்று பெயரா? யுவனை ஒரு சாகஸக்காராகத் தான் என்னால் காண முடிகிறது. ஒரு வாசகனாக என்னால் ஒரு பெருவெளியை அவரது படைப்புகளின் உணர- காண அல்ல உணர – முடிகிறது!  அதை சுருக்கி ஒரு வரையறைக்குள் கொண்டுவர முயல்வதெல்லாம் விமர்சகரின் தேவையே தவிர வாசகனின் தேவை என்றே புரிதல் கொள்கிறேன்.

மேலும் யுவன் சேர்க்கப் படவேண்டியது, மெளனி, நகுலன், தேவதச்சன்…என்ற வரிசையிலே அன்றி, நாஞ்சில் நாடன், வண்னதாசன் வரிசையில் அல்ல என்றே நினைக்கிறேன்.

நாஞ்சில் நாடனை இங்கே குறைவாக சொல்ல முயலவில்லை. அவரது தேவை தமிழ் நாட்டிலுள்ளவர்களுக்கு தாங்கள் வாழ நேரும் சமுகத்தின் பார்வைகளாக உபயோகம் சேர்க்கலாம். ஆனால், அமெரிக்காவிலுள்ள தமிழர்களுக்கு அவரை வாசிக்க வேண்டிய அவசியம் என்ன என்றுதான் புரியவில்லை.

பொருளாதாரத் தேவைகளினால், வேறொரு தேசத்தில் வாழ நேரும் மனிதன், என்னேரமும் பிரிதொரு தேசத்தையே கனவு கொண்டிருந்தால், வாழ்வே கனவாகிப் போகும் என்று தான் தோன்றுகிறது. எப்போதும் சரித்திரத்தையே திரும்பி பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? சக மனிதன்-அவன் எந்த தேசத்தை சேர்ந்தவன் என்றாலும் சக மனிதன் தானே? இதில் எங்கு தனியாக நான் இந்தியன், நான் அமெரிக்கன், நான் ஆஃபிரிக்கன் என்ற பெருமை, பெருந்தன்மை, இளக்காரம் எல்லாம் அவசியமாகிறது. ரியூனியன் தீவில் வசிப்பவர்கள், பல்வேறு கலாச்சாரத்தை கலந்தெடுத்த சாராம்சத்தில் ஒரு புதிய கலையை உருவாக்குகிறார்கள். அந்த வகையில் தானே அமெரிக்காவிலுள்ள தமிழர்கள் செயல் பட வேண்டும். எதற்காக அவர்கள், என் தந்தை உப்பில் ஊறுகாய் பேதத்தையெல்லம் அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் . எனக்கு எந்த ஒரு கலாச்சார்த்தின் தனித் தன்மையை விட, இன்றைய உலக மயமாக்கலின் சூழலில், வேறு தேசத்தில் வாழ்பவர்களுக்கிடையே பொது அம்சம் நிறைந்திருப்பதே அத்தகைய கலவியான சமூகங்களுக்கு நன்மை சேர்க்கும் என்று படுகிறது.

 

 

தமிழ் நாடு என்றால் கதை வேறு. அமெரிக்காவில் தமிழ் குடும்பத்தில் பிறந்த ஒரு குழந்தை என்றால் அது வேறு. அது தன் சொந்த தேசம் என்று அமெரிக்காவைத் தான் நம்ப வேண்டுமே தவிர, இந்தியாவை தூக்கிச் சுமப்பது ஆபத்தானது – ஆபத்து இந்தியாவுக்கு அல்ல அமெரிக்காவுக்கு.

 

 

இப்படி சொல்லிப் பார்க்கிறேன்: அக்கிர குராசாவாவின் ‘ரெட் பியர்டில்’ ஒரு காட்சி வருகிறது. அன்பு புறக்கணிக்கப் பட்ட ஒரு நோயுற்ற சிறுமி. அவளை ஒரு இளம் மருத்துவரின் அன்பும் கவனிப்பும், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப் படுத்துகிறது. அந்த மருத்துவரை அவள் மிகவும் நேசிக்கிறாள். வேறொருவர் அவரிடம் நெருங்கிப் பழகுவதை அவளால் ஏற்க முடியவில்லை. ஆனால் தலைமை மருத்துவரான ‘ரெட் பியர்ட்’, கொஞ்சம் பொறுத்திரு, உன் மீது அவள் அன்பு கொண்டிருக்கிறாள், அந்த அன்பு மெல்ல மற்றவரிடமும் பரவத்துவங்கும் என்கிறான். வெகு விரைவிலேயே பசிக்கு உணவற்ற ஒரு ஏழை சிறுவனிடம் அது தன் வெளிப்படுவது கண் கூடாகிறது. ஆரம்பத்தில் யாரையுமே நம்பத் தயாராக இல்லாமல் வெறுக்கும் அந்த சிறுமி, மெல்ல அன்பே உருவானவளாக மாறிப் போகிறாள்.

 

 

 

இந்த கதை பேசும் அன்பு, பிடிப்பில் தோன்றி மெல்ல மெல்ல சுதந்திரமாக பரவி நிறைகிறது. இத்தகைய அன்பைத் தானே நாம் கொண்டாட வேண்டும்? மாறாக, என் தந்தை மீது எனக்குள்ள தனிப்பட்ட பாசம், குடும்பம் என்ற அமைப்பிலிருந்து நான் அவரது ரத்தத்தை உறிஞ்சி வளர்ந்தவன் என்ற எண்ணம் ஏற்படுத்தும் கடமை உணர்வு போன்றவை எந்த வகையில் முக்கியம்? அன்பு அமைப்புகளைத் தாண்டியதாக இருக்க வேண்டாமா? நீங்கள் கூறுவதில் அந்த குடும்ப அமைப்பின், கட்டுப் பாட்டின், கட்டுகோப்பினைப் பற்றிய பெருந்தன்மை அல்லவா முன் வைக்கப் படுகிறது. இது எப்படி ஒரு நல்ல சமூகத்திற்கு வழி வகுக்கும்?

 

 

இதே உரையை நீங்கள், தமிழ் நாட்டிலுள்ள, ஒரு மென் பொருள் நிறுவனத்தில் சென்று நிகழ்த்தியிருந்தால் அது வேறு. ஆனால் அமெரிக்காவில் அதுவும் அமெரிக்க சமூகத்தில் பிறந்த இந்த தலை முறை குழந்தைகள், இந்தியா குறித்த பெருமிதத்தை தங்கள் மனதில் சுமக்க வேண்டும் என்பது விளைவிக்க போவது என்ன? அவர்கள் அமெரிக்காவில் ஏன் இந்தியராக வாழ முயல வேண்டும்? அது மனதளவில் தன்னை வேறு படுத்திக் கொள்ளத் தானே உதவும்.(முதலில் இந்தியாவுக்குள்ளேயே நார்த் இந்தியன்- சவுத் இந்தியன் பேதங்கள் இருக்கிறதே…தமிழ் நாட்டவர்களை சாலா,,மெதராஸி என்று துவங்குபவர்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது?) இப்படி பட்ட மனத்தடைகளுடன், வேறொரு தேசத்தில் வேறொரு அடையாளத்தின் பெருமிதத்தை மனதளவில் சுமப்பதால் அது அந்த சமூகத்திற்கு அபாயகராமான நிலைகளை உற்பத்தி செய்யும் என்றே படுகிறது. அமெரிக்காவிலுள்ள தமிழர்கள், ஏன் நாஞ்சில் நாடனை படித்தாக வேண்டும், தமிழர்களின், இந்தியர்களின் எண்ணிக்கையை உலகளவில் பெருக்கிக் காட்டவா? அவர்கள் தமிழ் சங்கம் வைத்திருக்கிறார்கள், லியோனியை புறக்கணித்து இந்த முறை ஒரு மதிக்கத் தகுந்த தமிழ் எழுத்தாளரை அழைத்து கூட்டம் நடத்துகிறார்கள். மிகுந்த சந்தோஷமாகத் தான் இருக்கிறது. இதை அவர்கள், அமெரிக்க சமூகத்திற்கு தமிழ் வாழ்வின் சிந்தனைகளின் கூறுகளை, இலக்கியங்களை அறிமுகப் படுத்துவதன் மூலம் அந்த சமூகத்திற்கு நன்மை சேர்க்கும் முற்சியாக இருக்குமானால், அது மிகவும் பாராட்டுக்குறியது. மாறாக அமெரிக்க சமூகத்தில் , நான் இந்தியன், எனக்கு அதற்கான பெருமிதம் இருக்கிறது என்று கிளம்புவார்களானால் அது மிகவும் ஆபத்தானதாகவே முடியும் என்று தோன்றுகிறது.

 

 

முதலில் ஒரு தீவிரமான எழுத்தாளரின் பேச்சில், இந்தியன், தமிழன், அமெரிக்கர், ஆஃபிரிக்கர் என்ற பேச்சுக்கெல்லாம் இடம் உண்டா? இங்குள்ள கறுப்பர்கள் ஆஃபிரிக்கர்களே, அமெரிக்கர்கள் அல்ல என்கிறீர்கள் – ‘ க்ராஷ்’ என்றொரு படம் நினைவுக்கு வருகிறது. நிற வேற்றுமையும், அடிப்படை வாழ்வியல் வித்யாசங்களை கடந்து செல்ல ஒரே வழி அன்பு என்ற ரீதியில் அன்பினைப் பற்றிய தேடலை, வித்யாசங்களினால் கட்டமைக்கப் பட்டிருக்கும் சமூகத்தின் சிக்கல்களை அதன் மேலான விமர்சனத்தை அந்த ஹாலிவுட் படம் முன் வைக்கிறது. அந்த படத்தில் அன்பு வெளிப்படும் இடத்திலெல்லாம், ‘பெருமிதம்’,’ பிடிப்பு’ போன்றவை உடைந்து உருகுகிறது. இந்த உடைவு அல்லவா, உங்கள் பேச்சினில் பிராதானப் படுத்தப் பட்டிருக்க வேண்டும். இந்த படத்திற்கு, மூன்று ஆஸ்கர் விருதுகளை கொடுத்து கொண்டாடியது அமெரிக்க சமூகம்.. அப்படி முயன்று கொண்டிருக்கும் சமூகத்தில் ஒரு தமிழ் எழுத்தாளர் சென்று, ‘ கருப்பர்கள் ஆஃபிரிக்கர்களே, யூதர்கள் யூதர்களே, என்று பேசியிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்கள் அனைவரையும் அமெரிக்கர்கள் என்று பரந்து பட்டு ஒப்புக் கொண்டு ஒரு சமூகத்தை கட்டமைக்க முயல்கிறார்கள். இந்த முயற்சியில் நீங்கள் கூறியிருக்கும் ‘ பெருமித’ உணர்வு தான், அது இந்தியருக்காக இருந்தாலும், ஆஃபிரிக்கருக்காக இருந்தாலும், இந்த ‘பெருமித’ உணர்வு தான் முதல் எதிரியாக நிற்கும்.

 

 

அது மேலோட்டமான பெருமித உணர்வு என்றாலும் சரி, ஆழமான புரிதலிலிருந்து எழும் பெருமித உணர்வு என்றாலும் சரி, அது அமெரிக்க சமூகத்திற்கு தடையாகத் தான் நிற்கும். (ஆழமான புரிதலில் பெருமிதம் மறைந்து சாராம்சம் அறிவார்களானால், அது வேறு வகையில் அந்த சமூத்திற்கு உதவி செய்ய கூடும் என்பது மற்ற எதையும் விட முக்கியமாகப் படுகிறது).

கிறிஸ்துவை பற்றி இருந்தாலும், கிருஷ்ணனை பற்றி இருந்தாலும், அது மானுட பொதுத் தன்மை மிக்கதாய் இருப்பதாலேயே, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த நாவல் அத்தனை எழுத்தாளர்களை பரவசப் படுத்தியிருக்க வேண்டும்.

 

மானுடப் பொதுத் தன்மையின் முன், இந்தியர், அமெரிக்கர் என்ற பெருமிதம் எல்லாம் ஒன்றுமில்லை என்றே தோன்றுகிறது. அசலில் தமிழ் நாட்டில் நடந்தது என்ன? இந்த குடும்ப அமைப்பு பற்றிய ‘பெருமிதம்’ தியாகம் தியாகம் என்று அரற்றியதால் தான் சிவாஜி கனேசன் நம் திரைகளில் கண்ணீர் வடித்து நட்சத்திரமாக முடிந்தது. அதே சமயம் இன்னொரு விஷயமும் நடக்கிறது. நிறைய படங்களில் உறவுகளை விட நட்பே முக்கியம் என்ற வகையில் இதே விஷயம் தலைகீழான முறையில் விடுப்பாக செயல் பட்டு கைத்தட்டும் பெறுகிறது.

 

 

சில வருடங்களுக்கு முன் ‘பாபா’ என்றொரு படம் பார்த்தேன். ரஜினி மனீஷா கொய்ராலாவின் வீட்டுக்கு செல்கிறார். சுற்றி இருப்பவர்களைப் பார்த்து நீ யார், நீ யார் என்று ஒவ்வொருவராக கேட்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை உறவு, அத்தனை பேரையும் எழுந்து வெளியே போக சொல்லி விட்டு, கடைசியில் நண்பன் என்பவரை மட்டும் உட்கார சொல்கிறார். தியேட்டரில் ஒரே விசில் பறந்தது. உள்ளுக்குளிருந்து ஆத்மார்த்தமாக உடல் புல்லரிக்க கைதட்டுகிறார்கள்!

 

சமீபத்தில் கந்தசாமி என்றொரு படத்தில் வரும் பாட்டு, எதேச்சையாக காதில் விழுந்தது. எல்லா உறவு நிலைகளையும் சொல்லி விட்டு, எல்லாமே டூப்பு, நண்பன் தான் டாப்பு என்று முடிக்கிறார்கள். சேரனின் தவமாய் தவமிருந்தும் ஒடத் தான் செய்கிறது. தமிழ் நாட்டில் உறவின் பற்றுதலுக்கு கைதட்டுபவர்களே பிறகு விடுப்புக்காக ஏங்கி, அதற்கு நேர் எதிர் நிலைக்கும் கைதட்டுகிறார்கள். அது தவிர்க்க முடியாத அவசியமாகிப் போகிறது. ஏனென்றால் இங்கு பெரும்பாலானவர்களின் வாழ்க்கையின் நிறைந்திருப்பதெல்லாம் தியாகம் தான். தியாகத்தை தவிர வேறெதுவும் இல்லை.

 

 

ஓஷோ கூறுய கதையை கவனிக்கும் போது சமீபத்தில் நடந்த இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. என் உறவினர் ஒருவருடன் ஹோட்டலுக்கு சென்றிருந்தேன், சுற்றி இருந்தது பிரஞ்சுக் காரர்கள், மற்றும் மலாவியர்கள் – ஒரே கொண்டாட்டமாக இருந்தது. சுற்றி பார்த்துவிட்டு. தன் குடும்பத்துக்காகவே ஒடாக உழைத்து தேய்ந்த அந்த உறவினர் கூறினார் – இவங்க எல்லாம் வாழுறாங்க, நாம ஃபோட்டோ தான் தயாரிக்கிறோம். ஃபிரேம் போட்டு எங்கப்பா எனக்காக உழைச்சார்னு என் புள்ள என்ன பார்த்து கும்பிடனும். அதோட வாழ்க்கை முடிஞ்சிறுது. அப்புறம் என் புள்ள அவன் ஒரு ஃபோட்டோ தயாரிப்பான்!

 

எனக்கு என்னவோ இதையெல்லாம் பற்றி பேசும் போது டஃபி என்று நான் வளர்க்க விருப்பப் பட்ட நாய்க்குட்டியும், அதை நாங்கள் பிணைத்து வைத்திருந்த சங்கிலியும், அது தெருவை மோகித்தே மடிந்ததும் தான் நினைவாக எழுகிறது. அதனாலேயே அது எந்த நாடாக இருந்தாலும், எந்த வகை கலாச்சாரமாக இருந்தாலும் எதனால் எப்படி கட்டமைக்க பட்டிருந்த ‘மனமானா’லும் தியாகத்தை, பிடிப்பை, உரிமை கொண்டாடுதலை புறக்கணித்து, சுதந்திரமான அன்பை பரிந்துரையுங்கள் என்று கோரிக்கை வைக்கத் தோன்றுகிறது

அன்புடன்
ஆனந்த் அண்ணாமலை
மலாவி

 

 

 

 

அன்புள்ள ஆனந்த்

உங்கள் நீளமான கடிதம் கண்டேன். உங்கள் கடிதம் குறித்து சில அவதானிப்புகளைச் சொல்லலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அது, நீங்கள் கவனித்தால், உங்களுக்கு உதவலாம். பொதுவாக எவரும் இப்படி கவனித்து எதிர்வினையாற்ற மாட்டார்கள் என்பதனால்…

உங்கள் கடிதத்தின் நடை நன்றாக இருக்கிறது. சரளம் கைகூடி வருவதென்பது ஒரு அபூர்வமான விஷயம். மொழியை புறவயமாக பயில்வதன் மூலம் சிந்தனையை பழக்குவதன் விளைவாகவே நடை சரளமாக ஆக முடியும். நீங்கள் தொடர்ந்து எழுதினால் புனைவுலகில்கூட முக்கியமான படைப்புகளை உருவாக்க முடியும். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

ஆனால் உங்கள் கடிதத்தில் சில எதிர்மறை அம்சங்கள் தெரிகின்றன. அவை இளமைக்குரிய இயல்புகள் என்பதனால் நீங்கள் இளையவர் என்று ஊகிக்கிறேன். அவ்வியல்புகள் உருவாக்கும் தடையை தாண்டி நீங்கள் வரவேண்டும் என எண்ணுகிறேன்.

உங்கள் கடிதத்தை வைத்தே அதை விளக்கலாம். ஒன்று, நீங்கள் மிக எளிதாக முன் முடிவுகளுக்கு வந்துவிடுகிறீர்கள். அது உங்கள் வாசிப்புப் புலம், உங்கள் புரிதல் திறன் ஆகியவை சார்ந்து உங்களுக்கு இருக்கும் அபாரமான தன்னம்பிக்கையில் இருந்து உருவாவது. அந்தத் தன்ன்னம்பிக்கை நல்லதே– அது உருவாவதற்கு நீங்கள் இன்னும் கொஞ்சம் முன்னே செல்லவேண்டியிருக்கிறது.

உஙள் கடிதத்தில் நீங்கள் யுவன் சந்திரசேகரின் எழுத்துக்களை வைத்து நான் அவனை சிறியவிஷயங்களின் கதைசொல்லி என்று சொல்லியிருப்பதைக் குறித்து சொல்லியிருப்பதை முதலில் எடுத்துக்கொள்வோம். முதலில், ஒரு எழுத்தாளன் சிறிய, அதாவது சல்லிசான விஷயங்களை மட்டும் எழுதிக்கொண்டிருந்தால் அவனை ஒரு மிக முக்கியமான எழுத்தாளன் என ஏன் நான் சொல்ல வேண்டும் என்று நீங்கள் யோசித்திருக்கலாம். சிறியவிஷயங்களைக் கொண்டு இலக்கியம் எப்போதுமே கவனபப்டுத்தும் சாராம்சமான விஷயங்களை விவாதிப்பவன் அவன் என்பதே அக்குறிப்பின் பொருள் என்பது எளிய வாசிப்புக்கே புரியக்கூடியது.

அக்கட்டுரையில் மீண்டும் மீண்டும் நேரடியாகவே அது விளக்கப்படுகிறது. பெரிய விஷயங்களை சின்ன விஷயங்கள் மூலம் சொல்வதன் கலையைப்பற்றி. பெரிய விஷயங்களை சின்ன விஷயங்களாக ஆக்கும் கலைப்பாவனையைப் பற்றி. அதில் இருக்கும் விளையாட்டுத்தனம் மூலம் அபத்தம் உருவாக்கப்படும் விதம் குறித்து.

அந்த அம்சம் பின்னவீனத்துவத்தில் முக்கியமானது என்று அதற்கு மேலும் விளக்குகிறேன். மிலன் குந்தேராவை உதாரணமும் காட்டுகிறேன். பெரிய விஷயங்களைச் சொல்லுவது நவீனத்துவத்தின் இயல்பென்றும் அவற்றை எப்படியோ சிறிதாக ஆக்குவதே பின் நவீனத்துவம் என்றும் விளக்கியபின்னரே அந்த தலைப்பு போடப்பட்டிருக்கிறது. அக்கட்டுரை வாசித்த எவருக்கும் புரியக்கூடிய இந்த விஷயம் ஏன் உங்களுக்கு புரியவில்லை என்பதை எண்ணிப்பாருங்கள்

ஏன் என்றால் நீங்கள் கவனித்து படிக்கவில்லை. அதற்குக் காரணம் உங்களுக்கு விஷயங்கள் தெரியும் என்ற நம்பிக்கை அதிகம் இருக்கிறது. ஆகவே உங்கள் கடிதத்தில் ஒருவகை உபதேச தொனி இருக்கிறது. நீங்கள் நான் சொன்னதை புரிந்துகொள்ள முயலவில்லை. என்னுடன் விவாதிக்கவும் முயலவில்லை. என்னை ‘திருத்த’ முயல்கிறீர்கள்!

இன்னொரு விஷயம். அன்புவழி நாவலைப்பற்றியது. அந்த நாவல் உருவாக்குவது ஒரு கவியுருவத்தை [மெடஃபர்] . அந்த படிமத்தை நான் என் கருத்து ஒன்றைச் சொல்ல பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். நவீன சிந்தனையாளர் அனைவருமே செய்வது இது. அந்த நாவல் என்ன சொல்கிறதென்பது வேறு விஷயம். இங்கே அப்படிமம்– நீதிமானின் ரத்ததை கடன்கொள்ளுதல் என்ற படிமம்– என் தரப்பின் ஒரு குறிப்பிட்ட கருத்தைச் சொல்ல கையாளபட்டிருக்கிறது. நவீன கட்டுரைகளை வாசிப்பவர்களுக்கு சாதாரணமாக புரியக்கூடிய விஷயம்தான் இது.

இந்த விஷயத்தை நீங்கள் எடுத்துப்பேசும் விதம் இவ்விஷயத்தை நீங்கள் இன்னமும் கவனிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. அது இயல்பே. ஆனால் அதையும் எனக்கு விஷயம் தெரியவில்லை, சிந்திக்க தெரியவில்லை என்ற பாவனையில் சொல்கிறீர்கள்.

கடைசியாக, நகுலன் பெயரை ஒருவர் சாதாரணமாக சொல்ல ஆரம்பித்தாலே அவரை ஒரு பாவனையாளர் என்று நான் கணிப்பேன். மிகக் குறைவாக மட்டுமே நகுலன் சொல்லும்படியான ஆக்கங்களை எழுதியிருக்கிறார். அவை  அவரது தனிமையும் மொழிச்சிக்கலும் விசித்திரமான தற்செயல்மூலம் கலக்கும்போது உருவாகின்றவை. அவருக்கும் தேவதச்சனுக்கும் இடையே ஒரு தொடர்பும் இல்லை. தேவதச்சனின் கலை என்பது செய்நேர்த்தியில் இருந்து உதிப்பது. யுவன் முற்றிலும் வேறு உலகைச் சேர்ந்தவன்

நாஞ்சில்நாடனைப்பற்றிய உங்கள் கருத்தும் விசித்திரமானது. நாஞ்சில்நாடன் அன்றாட எளிய விஷயங்களை மட்டும் சொல்லிய உலகியல் கலைஞன் அல்ல. நாஞ்சில்நாடனின் உலகுக்குள் செல்ல முடியாத ஒருவரால் யுவனையோ நகுலனையோ அறிந்துகொள்ள முடியாது.

*

மரபு குறித்த உங்கள் கருத்துக்கள். அவை உங்களுடைய தனிப்பட்ட மனப்பிம்பங்கள். அவற்றுக்கு நான் முன்னரே என் பதிவுகளில் பதில் சொல்லிவிட்டேன்.

பொதுவாக தத்துவ விவாதங்களில் உள்ள ஒரு மாப்ரும் பிழை இரண்டாயிரம் வருடங்கள் முன்னரே அடையாளம் காணப்பட்டுவிட்டது. அதை இந்திய நியாய சாஸ்திரம் ‘விவேஷஸாமான்ய சங்கிரமணம்’ என்று சொல்லும்.

அடிப்படை விவாதங்கள் நடக்கும் தளத்தை சாமான்யம் விசேஷம் என்ற இரு தளங்களாக நம் மரபு விளக்குகிறது. சாமான்யம் என்பது புலன்களின் உலகை சேர்ந்தது. உலகியல் சார்ந்தது. புழக்க தளம் சார்ந்தது. விசேக்சம் என்பது தத்துவ தளம் சார்ந்தது. உருவகங்களின் உலகைச் சார்ந்தது

சாமான்ய தளத்தில் உள்ள விஷயங்களை விவாதிக்கும்போது விசேஷ தள பதில்களை கொண்டுவருவதும் விசேஷ தளத்தைவிவாதிக்கும்போது சாமான்ய தள கேள்விகளைக் கொண்டுவருவதும் குழப்பத்தை உருவாக்கும். அதையே சாமான்ய விசேஷ சங்கிரமணம் என்கிறார்கள்

ஒரு கட்டிடத்தின் அமைப்பைப்பற்றி விவாதிக்கும்போது கட்டிடம் என்று ஒன்று கிடையாது என்று சொல்லி கட்டிடம் என்பது சிலிகான், சிலிகான் என்பது மூலக்கூறுகள், மூலக்கூறுகள் என்பவை அணுக்கள், அணுக்கள் என்பவை நுண்துகள்கள், நுண்துகள்கள் என்பவை ஆற்றல்மட்டுமே, ஆகவே கட்டிடமே இல்லை அது ஆற்றல் மட்டுமே என ஒரு இயற்பியலாளன் உள்ளே புகுந்து விவாதிப்பதுபோல. அது வெறும் குழப்பத்தையே உருவாக்கும்

கண்முன் கட்டிடம் இருக்கிறது என்பது சாமான்ய உண்மை. பொருள்கள் என்பவை ஆற்றலின் ஒரு தோற்றநிலைகளே என்பது விசேஷ உண்மை. அவை இரண்டும் முரண்பட்டவை அல்ல. ஒன்று இன்னொன்றை மறுப்பதும் இல்லை.

நீங்கள் உங்கள் கடிதத்தில் செய்வது அதையே. என் பேச்சில் நான் முன்வைபது மானுட அன்பை அல்லது மானுடகுலத்தை நிராகரிப்பதை அல்ல. அவை வேறு ஒரு தளத்தை சேர்ந்தத்வை.

ஒரு தனிமனிதன் தான் எதிர்கொள்ளும் முற்றிலும் அன்னியமான சூழலில் தன் ஆளுமையை கண்டடையவும் நிலைநிறுத்தவும் உலகியல் வாழ்க்கையில் வெற்றிகொள்ளவும் அவன் பண்பாட்டுக்கூறுகள் எப்படி இன்றியமையாதவை என்றும் அவை எவ்வாறு ஆழ்படிமங்களாக ஆகி அவனுடைய கற்பனையையும் சிந்தனையையும் உருவாக்குகின்றன என்றும் சொன்னேன். அவன் மானுடப்பேரன்பை அடைந்து முழுமானுடனாக ஆவதற்கான வழியாக அதைச் சொல்லவில்லை.
அது முற்றிலும் வேறு. அது படிப்படியாக அடையாளங்களை துறப்பதன் பெருவழி. வெட்டவெளிக்கீழே நிற்கும்  நிலை நோக்கிய பாதை அது.

தனித்த பண்பாடுகளை விட்டு விட்டு ஏது உலகப்பண்பாடு? உலகப்பண்பாடு என்பதே தனிப்பட்ட பண்பாடுகளின் தொகையாக உருவாகி வருவதே. நம் காலகட்டத்தில் மானுட குலம் முழுமைக்கும் பிரதிநிதிகளாக எழுந்து வந்த மானுடர்கள் அனைவருமே தங்கள் தனிப்பண்பாட்டின் வேரில் இருந்து முளைத்தவர்களே. தல்ஸ்தோய், கதே, ஐன்ஸ்டீன் ,காந்தி… அவர்களில் இருந்து அவர்களின் சொந்தப் பண்பாட்டை விலக்க முடியாது.

அதில் இருந்தே ஒருவன் முளைக்கிறான். அதை அவன் தன்னை பிறரிடம் இருந்து பிரிக்கும் அடையாளமாகக் கொள்ள வேண்டியதில்லைல் தன்னை தன் முன்னோடிகளால் உருவாக்கப்பட்ட மரபுடன் பிணைக்கவும் அதன் சாரத்தை உலகம் தழுவ விரிக்கவும் பயன்படுத்தலாம். அதுவே சாத்தியம்.

வெறும் சொற்களை ஒருவகையான ஆர்ப்பாட்டமான தன்னம்பிக்கையுடன் சொல்வதனால் ஏதும் பயனில்லை. அது ஒரு முதிரா நிலை. உங்களுக்கு கருத்துக்களில் மாற்று தோன்றலாம். அவற்றை விவாதிக்கலாம். ஆனால் ஒரு கருத்து தோன்றியதுமே அதை நம்பி பிறரை திருத்த முயல வேண்டாம்

உங்கள் கருத்துக்கள் இந்நிலையில் விவாதத்துக்கு உரிய தன்மையையே இழந்துவிடுகின்றன

யோசியுங்கள்

ஜெ

முந்தைய கட்டுரைவீடு
அடுத்த கட்டுரைவாக்களிக்கும் பூமி 5 , வெள்ளைமலை