பிறந்தநாள்

இன்று என் பிறந்த நாள். நாற்பத்தியாறு முடிந்து நாற்பத்தி ஏழு வயதை நோக்கிச் செல்கிறேன்.பொதுவாக நாற்பது வயதைக் கடப்பவர்களை ‘கலாய்ப்பது’ என் வழக்கம்.சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் ஷாஜிக்கு நாற்பது வயதானபோது அவருக்கு நான் விரிவான உபதேசங்களை அளித்தேன். சாப்பாட்டில் கொழுப்பை குறையுங்கள், இதய அடைப்பு வரும். உப்பு சாப்பிடக்கூடாது, ரத்த அழுத்தம் வரும். இனிப்பு சாப்பிட்டால் நீரிழிவு. மரணத்தின் காலடி ஓசை கேட்க ஆரம்பிக்கிறதா என்ற சுருக்கமான கவித்துவ விசாரணையும் உண்டு. ஷாஜி முகம் வெளிறிப்போய் அமர்ந்திருந்தார். அவர் கிளம்பும்போதே நண்பர் சுரேஷிடம் தொலைபேசியில் கூப்பிட்டு ஷாஜியிடம் மேலும் துக்கம் விசாரிக்கச் சொன்னேன். உற்சாகமாக இருந்தது. ஷாஜி மனம் உடைந்து போய் அன்று உச்சகட்டமாக தேறல் அருந்தி மாட்டிறைச்சி உண்டதாக மறுநாள் அறிந்து கொண்டேன்.

இவ்வருடம் ஜூன் மாதம் ஆர்தர் வில்சனின் பிறந்தநாள். எல்லா மிரட்டல்களையும் கேட்டபிறகு ஆர்வமாக ”ஆமா சார், ஜாக்ரதையாத்தான் இருக்கணும். நான் முடிவுசெஞ்சிட்டேன்…” என்றார். எனக்கு பகீரென்றது. விளையாட்டு வினையாகிறதா? சாப்பாட்டை ஏதாவது குறைக்கப் போகிறாரா? ”…பழங்கள் நெறைய சாப்பிடணும் இல்ல சார்? நான் இனிமே சாப்பாட்டுக்கு அப்றம் நெறைய பழங்கள் சாப்பிடலாம்னு நெனைக்கிறேன்.. பேஈச்சம்பழத்தை தேனிலே போட்டு சாப்பிடலாமா சார்? ஆப்பிள் சாப்பிட்டா ஒடனே ஒரு டம்ளர் பால் குடிச்சிடணும்னு சொல்றாங்களே?” அப்பாடா! நாற்பது வயதில் ஒரு மனிதன் மாறிவிடுவான் என்றால் அதுவரை அவன் வளர்த்து வந்த ஆளுமை என்பது என்ன?

எனக்கு நாற்பது வயதானதை சிலவருடங்கள் பிந்தித்தான் உணர்ந்துகொண்டேன். ரொம்பநாள் இளைஞனாகவே உணர்ந்தேன் என்று அர்த்தம். ஒருமுறை ஒரு சின்னப்பெண் ஸ்கூட்டியில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் அபாயகரமாகச் சென்றுகொண்டிருப்பதைக் கண்டபோது ‘இதையெல்லாம் எப்படி பொறுப்பில்லாமல் இப்படி அனுப்புகிறார்கள்?’ என்று எண்ணிக் கொண்டிருந்தபோது கூடவே ஓர் புரிதல். நான் அந்தப்பெண்ணின் அப்பா ஸ்தானத்தில் இருந்துகொண்டு அப்படி யோசித்துக் கொண்டிருக்கிறேன் என. அது ஒரு திருப்புமுனை. நாற்பது வயதைப்பற்றி என்னையும் ஒரு எழுபதுவயதுக்காரர் எச்சரித்தார்– சுருக்கமாக. அதுவரை கட்டிக்காத்து வந்த நெறிகளையெல்லாம் சற்றே தளர்த்திப் பார்க்கும் வயது என. பீதியாக இருந்தது. இப்போது ஓர் ஆறுதல். நாற்பது தாண்டப்போகிறது. அவ்வளவுதான், இனிமேல் பிரச்சினை இல்லை. சோதனைகளை வெற்றிகரமாக தாண்டிவிட்டேன்.’யாதெனின் யாதெனின்…’

காலைமுதல் வாழ்த்துக்கள். என் வீட்டில் பிள்ளைகளின் பிறந்தநாள் மட்டுமே கொண்டாடுவோம். மற்றபடி பிறந்தநாளை நினைவுகூரும் வழக்கமெல்லாம் இல்லை. காலையில் வாழ்த்துக்கள் வரும்போதுதான் தகவலே நினைவுக்கு வரும். வாழ்த்து கூறிய நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் நன்றி. வாசகிகள் தவறாமல் எத்தனையாவது பிறந்தநாள் என்று கேட்டார்கள். அ.முத்துலிங்கம் அவர்கள் அனுப்பியிருந்த வாழ்த்து அட்டையில் இவ்வருடம் விவாதங்களில் சிக்காமல் நாவலை எழுதி முடிப்பதற்காக வாழ்த்தியிருந்தார். என் திட்டமும் அதுதான். பார்ப்போம்.

நேற்றும் முழுக்க தொலைபேசி அழைப்புகள். நண்பர்கள் கூப்பிட்டுக் கொண்டே இருந்தார்கள். பாவலர் விருது குறித்து வாழ்த்துக்கள். உண்மையில் நேற்று உற்சாகமாக இருந்திருக்க வேண்டும். இல்லை. நேற்று என் லாப்ரடார் நாய் ஹீரோ ரத்தமாக மலம் கழிக்க ஆரம்பித்தது. சில முறை போனபின் சுத்தமான ரத்தம். பெரும்பாலான தொலைபேசி வாழ்த்துக்களை விலங்குமருத்துவமனையில் வைத்துதான் ஏற்க முடிந்தது. உயிர்கொல்லி வைரஸ் தாக்குதலா என்ற பீதி இருந்தது. சாயங்காலம்தான் நிலைமை தெளிந்தது.கொக்கிப்புழு பாதிப்பு. அதற்கு அளிக்கப்பட்ட குடற்புழுநீக்க மருந்து போதவில்லை, அதன் எடை மிக அதிகம். ஐம்பது கிலோவுக்கும் மேல். நான்கு புட்டி மருந்துதேவை. வழக்கமான அளவுக்கு இரு மடங்கு. அதன் எடையை உடனடியாகக் குறைக்க வேண்டும். சாப்பாட்டையே படுத்துக் கொண்டு சாப்பிட விரும்பும் பிறவி. உணவைக் குறைத்தால் கண்களில் ஒரு தீனபாவனை வந்துவிடும். அதை நம்மால் தாங்க முடியாது. என்ன செய்வது என்று தெரியவில்லை. மாலையானபோது நலமாகிவிட்டது. அதற்குள் நான் களைத்துப் போனேன்.

ஆற்றூர் ரவிவர்மாவுக்கு விருது பற்றிய தகவலைச் சொன்னேன். அவருக்கு மிகவும் உற்சாகம். பொதுவாக அவர் இம்மாதிரி விஷயங்களை பொருட்படுத்துவதே இல்லை. அவர் சொல்லி டாக்டர் எம்.கங்காதரன் உள்பட பலர் கூப்பிட்டு வாழ்த்துச் சொன்னார்கள். கல்பற்றா நாராயணன் கூப்பிட்டபோது இந்த ஊசல் நிலையைச் சொன்னேன். ”இலையின் ஓரத்தில் கசப்பு இல்லாவிட்டால் விருந்து ருசிக்காது. மேற்படி ஆசாமி ஒரு கிளாஸிஸ்ட். அவருக்கு எல்லாமே சமநிலையில் இருந்தாகவேண்டும்” என்று சொன்னார். ”…ஆனால் அவரால் அது முடிவதும் இல்லை. கோடானுகோடி வருஷங்களாக பிரபஞ்சம் இப்படித்தான் தராசுமுள் போல நிலையில்லாமல் இருக்கிறது…”

ஹீரோ உள்ளே வந்து ஆர்வமாக கணிப்பொறியைப் பார்க்கிறது. சற்றே கவனமில்லாமல் இருந்தால் மூக்கால் பித்தானை அமுக்கி அணைத்துவிட்டுப் போய்விடும். நேற்று கம்பிளிப்போர்வையை குவித்துப் போட்டதுபோல சோர்ந்து கிடந்த சாயலே இல்லை. விட்டால் உலகையே தின்றுவிடுவேன் என்ற பாவனை. ஹெலிகாப்டர் விசிறி போல பின்பக்கம் வால்சுழலல். வெளியே காகங்களின் ஒலி. தென்னை ஓலைகளின் மெல்லிய சிறகொலி….

ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நிறத்தில் விடியும் இந்த முடிவற்ற அற்புத வெளியில் எல்லா நாளும் பிறந்தநாளே.

ஷாஜி

http://jeyamohan.in/?p=173

வில்சன்

http://jeyamohan.in/?p=93

முந்தைய கட்டுரைபாவலர் விருது
அடுத்த கட்டுரைபாவலர் விருது வழங்கும் விழா அழைப்பிதழ்