இந்திய சிந்தனை -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் ,
தங்களுடைய
இங்கிருந்து தொடங்குவோம்  என்ற கட்டுரையை படித்தேன் நெகிழ்ந்தேன். நம் தத்துவங்களை பற்றிய அறிவு நம்மிடையே சிறிது சிறிதாக குறைந்து கொண்டிருக்கிறது , இந்நிலையில் நம் மதத்தை பற்றிய தங்களது கட்டுரை பலருக்கும் அதை பற்றி கற்கும் ஒரு ஆவலை உண்டாக்கும் என்று நினைக்கிறன். இது போன்ற அருமையான கட்டுரைக்கு மிக்க நன்றி


Thanks and Regards,
Ramkumar

 

அந்தக் கட்டுரை ஒரு சில வரிகளில் இந்த சிந்தனைமரத்தின் வேர்களையும் கிளைகளையும் சொல்லிவிடமுடியுமா என்ற தேடல். அமெரிக்காவில் சில முறை அதைச் சொல்ல நேர்ந்தது

ஜெ

 

நாம் ஒரு மொழியில் ஒரு சிந்தனைச்சூழலில் பிறந்து விழுகிறோம். ஆனால் அந்த மொழியையும் சூழலையும் நாம் முறைப்படி கற்பதில்லை. அதற்கான எந்த கல்வி அமைப்பும் இன்று நம் மண்ணில் இல்லை. ஆகவே நாம் நம் மரபின் சிந்தனைத் தொடர்ச்சி அறுபட்டவர்களாக இருக்கிறோம். இன்னொரு சிந்தனை மரபின் நுனியில் இரண்டாம்தர மக்களாக சென்று ஒட்டிக்கொள்கிறோம். நம் மரபில் நமக்கு பயிற்சி இருக்கும் என்றால் அதை நாம் உலகின் எந்த சிந்தனை மரபுடனும் இணைத்துக்கொண்டு வளர்த்தெடுக்க முடியும். அது நமக்கு தனித்தன்மையையும் நமக்கே உரிய சிந்தனைவழிகளையும் அளிக்கும். நம்மை உலகில் முன்னிலைப்படுத்தும். உலகின் புத்தம்புதிய சிந்தனைகள் எல்லாமே இப்படித்தான் உருவாகியிருக்கின்றன.
மிக அருமையான சத்தியமான வரிகள்.அனேகமாக இந்தவரிகள் தன்னை தானே எழுதிக்கொண்டவையாக தோன்றுகின்றன.
உங்களிடம் எனக்கு பிடித்த ஆற்றல் எதையும் தொகுத்து /பகுத்து, பின்  புரிந்து/ விளக்குவது.
நான் கூட நினைப்பதுண்டு.சுமார் 2000௦ ஆண்டுகளுக்கு முன் “திருக்குறள்” போன்ற செவ்விலக்கியம்  எழுதப்பட்டிருக்குமானால் அதற்கு எத்தனை நூறாண்டு முன்னமே மொழி, சிந்தனை வளர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும்  ?!” என்று…
அதுபோல நம் சிந்தனை மரபில், இசை,அறிவியல், மருத்துவம் அனைத்திலுமே ஒரு மரபின் தொடர்ச்சி இருப்பதை புரிந்து கொள்ளாமல் இந்த சூழ்நிலையில் வந்து விழும் நாம் இதை TAKEN FOR GRANTED  என எடுத்து கொள்கிறோம். அப்போது VESTED INTEREST -உடன் பிரச்சாரம் செய்பவரது வார்த்தைகளை தன சுய சிந்தனை என மயங்கிவிடுகிறோம்.
இந்த பல்வேறு ஞான தரிசனங்களை பலரும் வளர்த்தெடுத்தாலும்,பிற்காலத்தில் அதனை ஒரு அறிவாக தலைமுறைக்கு கடத்த பெருமளவில் பிராமணர்கள் ( ஒரு லைப்ரரியன் போல) செயல் பட்டார்கள்.
இதனை தவறாக பிராமணர்களின் தத்துவ நூல்கள் என புரிந்துகொண்ட திராவிட இயக்கம் ஒட்டுமொத்தமாக நிராகரித்தது.
இந்த சூழ்நிலையில் கூச்சம் கொண்ட பலரும் இந்திய ஞான மரபில் இருந்து தங்களை அந்நியப்படுத்திக் கொண்டனர்.
இதற்கு பல்வேறு அரசியல், சமூக காரணங்களும் உண்டு. சரிதானே?
கேரளமும், வங்கமும் பல ஒற்றுமையான கூறுகளை கொண்டவை.(சாக்தம்,கம்யூனிசம் ETC.)  நாயர்கள் நேபாள் பக்கமிருந்து இங்கே புலம் பெயர்ந்தவர்கள் என்று ஒரு கூற்று உண்டே ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?
அல்லது பரசுமார்/நம்பூதிரி புராணம் ஏதேனும் ஆதாரம் தருமா?
இதனால் பழங்காலம் முதலே இந்த பரிவர்த்தனை நடந்திருக்க வாய்ப்புண்டா?
நன்றி! அன்புடன்,
SATHIANARAYANAN.R,

அன்புள்ள சத்யநாராயணன்

கேரளம் வங்கம் இரண்டுக்கும் நடுவே பல ஒற்றுமைகள். கடல் அருகே இருப்பதனால் நீண்டகால ஐரோப்பிய ஊடுருவலும் அதன் பண்பாட்டுத்தாக்கமும். சாக்த மதத்தின் செல்வாக்கு. நீர் சூழந்த பகுதிகள் என்பதனால் பொதுவான சில வாழ்க்கைக்கூறுகள்…

மற்றபடி என்ந்த வகையிலும்  சொல்ல முடியவில்லை. நாயர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வாழ்ந்த நாகர்கள் தான் என இ எம் எஸ் சொல்கிறார்.– நாகப்பாம்பு வழிபாடு அவர்களிடம் உண்டு. ஆனால் பொதுவாக அவர்கள்  சேர மண்ணின் பழங்குடிகள் என்றே கொள்ள வேண்டும்

ஜெ

 

 

ஜெயமோகன்,

அமெரிக்க பயணம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி.
பதிவுபோல மிகப்பிரமாதமான கட்டுரை. அதில் பிரச்சனை என்னவென்றால் நமது எண்ணங்களெல்லாம் வெறும் கட்டுரையோடு நின்றுவிடுவதுதான்.

நமக்கு நேரம், பணம் மற்றும் அனைத்து வசதிகளும் இருந்தால் என்ன செய்திருப்போம் என்று நினைத்து பார்த்து
சில திட்டங்களை திட்டலாம். அவைகளை ஒரு பொதுப்பார்வையில் கொண்டுவரலாம். ஓத்த கருத்து உள்ளவர்களின் பொதுத்திட்டமாக மாறும்போது ஆற்றல் அந்த திசையிலே திருப்பிவிடப்படுகிறது.

உதாரணமாய், ஒரு ஓப்பன் சோர்ஸ் திட்டத்தில் குஜராத்தி எழுத்துக்களை மேலேற்ற வேண்டி நிறைய வேலைகளை செய்யவேண்டியிருந்தது. அதற்காக எனது குஜராத்தி நண்பரின் வலை மனையில் விண்ணப்பம் அனுப்பியிருந்தோம். ஆச்சரியம்,
குடும்ப பெண்கள், நிறுவனங்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், சில மண்டல்கள் என்று அவரவர்களாகவே தங்களது பங்களிப்பை செய்தார்கள். இதை ஒரு பேராசிரியர் சொன்னபோது நான் ஆச்சரியப்பட்டேன். இதுபோல நிறைய சின்ன சின்ன செயல்களை கம்யூனிட்டி ஓர்க்காக அந்த பேராசிரியர் செய்து கொண்டேயிருக்கிறார்.

உங்களுக்கு நேரமிருந்தால் – முடிந்த அளவு திட்டங்களை ( plan and strategy – we can assume we have all resources for time being )  திட்டி பொதுவெளிக்கு விட்டுவிடுதல் நன்று.

அன்புள்ள

k a mani

mubai

அன்புள்ள மணி

நல்ல சிந்தனை. தமிழில் அதிகமாகப் புழங்கும் சம்ஸ்கிருதச் சொற்களுக்கான ஒரு தனி இணைய அகராதியை பொதுவான நண்பர்கள் உருவாக்குவது அவசியம் என்று எனக்கு தோன்றியிருக்கிறது– வேர்ச்சொல் குறிப்புடன்

உதாரணம் அவசியம் என்ற சொல்

ஜெ

முந்தைய கட்டுரைமூதாதையர் குரல்: கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎழுத்தாளர்களைப் பற்றிய பதிவுகள்