கொற்றவை கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம், தங்களது அமெரிக்க பயணம் நல்ல முறையில் அமைய வாழ்த்துக்கள். தங்களது பதில் மின்னஞ்சல் கண்டேன். மகிழ்ச்சி.

தற்போது “கொற்றவை” நாவல் வாசித்துக்கொண்டுள்ளேன். புத்தகம் வாங்கி அநேக நாட்கள் ஆகிவிட்டன. ஆனாலும் வாசிப்பதற்கு சிறு தயக்கம். என்னென்றால் கொற்றவை, விஷ்ணுபுரம் போன்ற படைப்புகளை வாசிக்கும் பக்குவம் இன்னும் எனக்கு வரவில்லையோ என தோன்றுகிறது. கிட்டத்தட்ட ஐந்து  ஆண்டுகளுக்கு முன்பு லியோ டோல்ச்டோயின் “போரும் அமைதியும்” படிப்பதற்காக எடுத்து தோல்வியை தழுவினேன். ஆனால் இந்த ஐந்தாண்டு கால வாழ்கை எதையோ கற்றுகொடுத்துள்ளது. இப்பொழுது டோல்ச்டோய்யை வாசிக்கமுடிகிறது.

அதேபோல் கொற்றவையையும், விஷ்ணுபுறத்தையும் வாசிக்க இன்னும் நாட்கள் பிடிக்கும் போல். ஆனாலும் வாசித்துவிடுகிறேன். ஏன்? “கவிதைகளுக்கு உரைமூலம் அர்த்தம் கொள்ளகூடாது. கவிதைக்கான அர்த்தத்தை வாழ்க்கை வழங்கும்” என நீங்களே சங்கசித்திரம் முன்னுரையில் கூறி இருக்கிறிர்கள். இன்று வாசிக்கும் வரிகள் நாளையோ நாளை மறுநாளோ அல்லது என்றாவது ஒரு நாள் அதற்கான பொருள் நீர் பரப்பை கிழித்துக்கொண்டு வரும் மீன் போல் விளங்க கூடும். அப்படி கவிதையை போல் தான் வாசிதுக்கொண்டு இருக்கிறேன் இவ்விருநூல்களையும். வாழ்வில் அப்படியான தருணங்கள் மிக சிலவே……………………..

கொற்றவை வாசிக்கும் போது ஓர் சந்தேகம்…… இளங்கோவடிகள் தனது காப்பியத்தை படைக்க எத்தனையோ ஆபரணங்கள் இருக்க – மாதவி வர்ணிக்கும்  போது தலை முதல் கால்வரை எத்தனையோ அணிகலன்களை அணிந்து ஓவியதூன் விட்டெழுந்த சிலை போல் இருக்கிறாள் –  சிலம்பை மட்டும் எடுத்துக்கொள்ள காரணம் யாது?

வணிகர்குல மரபாக வியாபாரத்தில் எல்லா பொருள்களையும் இழந்த பின்பு இறுதியாக விற்பதற்காக சிலம்பை பயன்படுத்துவதால் இருக்குமா?

கொற்றவையில் விவரிக்கபடுவது போன்று “சிலம்பு” என்பது அன்றைய தமிழ்குலங்களின் புனித அணியாக கருதப்பட்டதால் இருக்குமா? ஏனெனில் சிலம்பணிவிக்கும் விழாவை அன்றைய தமில்குலங்கள் அத்தனை சிறப்பாக நடத்தும் காட்சி கொற்றவையில் காட்டப்பட்டுள்ளது. பார்ப்பனர்கள் பூணூல் போல.

உளவியல் ரீதியாக கூறினால் யாசகம் கொடுக்க நமது கை முதலில் கழுத்தில் உள்ள ஆபரணத்தை கழற்றவே செல்லும் காலுக்கு இறுதியாகத்தான் வரவேண்டும். ஆகையால் கண்ணகி எல்லாம் கொடுத்து இறுதியில் காலில் இருக்கும் சிலம்புடன் மட்டுமே இருந்தால் என கூறுவதற்காக இருக்கலாமா?

இளங்கோ ஏன் தாலியை ( அன்று தாலி இருந்ததா என தெரியவில்லை அனால் மங்கள நாண் என்ற குறிப்பு வருகிறது.) எடுத்துக்கொள்ளவில்லை?

உங்களுடன் உரையாடவே ஆவலாக  உள்ளேன்…………

தாங்கள் செவ்வனே பணி முடித்து திரும்ப வாழ்த்துக்கள்…………………..

அன்புடன்
ரவிச்சந்திரன்

 

அன்புள்ள ரவிச்சந்திரன்

சரியாகச் சொல்லப்போனால் என்ன காரணத்தால் அக்காலத்தில் சிலம்புக்கு அத்தனை மதிப்பு வந்தது என்று இப்போது சரியாகச் சொல்ல முடியாது. ஊகங்களை மட்டுமே  சொல்ல முடியும். நான் என் நூலில் அது ஒரு குலச்சின்னமாகவும் மங்கலச்சின்னமாகவும் இருந்திருக்கலாம் என்ற ஒரு ஊகத்தை நிகழ்த்தியிருக்கிறேன்

கொற்றவை குறித்த கவிதை வரிகளில் பொதுவாக கொற்றவையின் கழல் குறித்த குறிப்பு வருகிறது. காலில் உள்ள அணி என்பது நாம் இன்று காணும் ஒரு வகை குறைவு இல்லாமல் முக்கியமான அணியாக அன்று கருதப்பட்டிருக்கலாம்.

தொல்தமிழர் தாலி அணிந்தார்களா என்பது  விரிவாக பேசப்பட்ட ஒரு தலைப்பு. தாலி என்பது தாலம் என்ற சொல்லில் இருந்து வந்தது. தாலம் என்றால் பனை ஓலை. பனையோலைச்சுருளையே அக்காலத்தில் மங்கலச்சின்னமாக அணிந்திருக்கிறார்கள்.அது தமிழ் சொல் ஆதலினால் தாலி தமிழே என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்

ஜெ

 

கொற்றவை

நூல்கள்:கடிதங்கள்

கொற்றவை – ஒருகடிதம்

தமிழ்நேயம்-31.’கொற்றவை’ சிறப்பிதழ்

தமிழின் நல்லூழ்:இரா. சோமசுந்தரம்

இளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா

ஜெயமோகனின் கொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து”:அ.ராமசாமி

கொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை. ராமபிரசாத்

கொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன் : அரவிந்தன் நீலகண்டன்

முந்தைய கட்டுரைகாந்தியும் சாதியும்
அடுத்த கட்டுரை“அநங்கம்”