பாவலர் விருது

இசைஞானி இளையராஜா இலக்கியப்பேரவை வழங்கும் படைப்பிலக்கியத்திற்கான பாவலர் விருது இவ்வருடம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் இரண்டு லட்சமும் பாராட்டுப் பட்டயமும் அடங்கியது இவ்விருது.

இசைஞானி இளையராஜா இலக்கியப்பேரவை சென்ற வருடம் முதல் இலக்கிய விருதுகளை வழங்கிவருகிறது. மொத்தம் ஐந்து இலக்கிய விருதுகள். மூத்த தமிழறிஞருக்கான பாவலர் வரதராஜன் விருது ரூபாய் இரண்டு லட்சமும் பாராட்டுப்பட்டயமும் அடங்கியது. இவ்வருடம் அது மூத்த தமிழறிஞரான ம.ரா.பொ.குருசாமி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

படைப்பிலக்கியத்திற்கான பாவலர் வரதராஜன் விருது எனக்கு, ஒட்டுமொத்த இலக்கியப் பங்களிப்புக்காக, வழங்கப்படுகிறது. ரூபாய் இரண்டுலட்சமும் பாராட்டுப்பட்டயமும் அடங்கியது இது. இளம் படைப்பாளிகளுக்கான இசைஞானி இளையராஜா விருது கவிஞர் நா.முத்துக்குமார், கவிஞர் இளம்பிறை ஆகியோருக்கு அளிக்கப்படவுள்ளது. தலா ஐம்பதாயிரம் ரூபாயும் பாராட்டுப்பட்டயமும் அடங்கியது இவ்விருது.

இவ்வருடம் இதழியல் சார்ந்த இலக்கியப் பங்களிப்புக்காக மறைந்த ‘சரஸ்வதி’ விஜயபாஸ்கரனின் மனைவிக்கு அளிக்கப்படுகிறது. ரூபாய் ஒரு லட்சமும் பாராட்டுப்பத்திரமும் அடங்கியது இவ்விருது.

சென்ற வருடம் தமிழறிஞருக்கான பாவலர் வரதராஜன் விருது பா.நமச்சிவாயம் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. படைப்பிலக்கியத்திற்கான பாவலர் வரதராஜன் விருது வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது. வளரும் எழுத்தாளர்களுக்கான இசைஞானி இளையராஜா விருது கவிஞர் பழனி பாரதி, சொ.சேதுபதி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இவ்வருடம் பரிசு பெறும் ம.ரா.பொ.குருசாமி அவர்கள் இன்றுவாழும் மூத்த தமிழறிஞர்களில் ஒருவர். திரு.வி.கவுடன் பழகியவர். மு.வரதராசனின் மாணவர். ம.பொ.சிவஞானம் அவர்களின் தொண்டராக தமிழரசுக் கழகத்தின் எல்லைப்போராட்டங்களில் பங்குபெற்றவர். கோவை பூ.சா.கோ.கலைக்கல்லூரியில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

திரு ம.ரா.பொ.குருசாமி அவர்களின் எழுத்துக்களுடன் சென்ற சில வருடங்களாக எனக்கு ஒவ்வொரு நாளும் உறவு உண்டு. அவர் தொகுத்து உரையளித்த ‘கபிலம்’ என்ற நூலில் உள்ள கபிலரின் பாடல்களை மீண்டும் மிஈண்டும் படித்தேன். என் காடு நாவலுக்கு முக்கியமான ஊக்கசக்தியாக இருந்த நூல் அது. இப்போது அவர் தொகுப்பாசிரியராக இருந்து வெளியிட்ட கோவை கம்பன் அறநிலை வெளியீடான கம்பராமாயண உரை நான் அனேகமாக ஒவ்வொருநாளும் படிக்கும் நூலாக உள்ளது. அவருடன் பரிசு பெறுவதென்பது ஒரு நன்னிகழ்வு என்று நினைக்கிறேன். வாசகர்கள் ரசனை இதழில் ம.ரா.பொ.குருசாமி அவர்களின் நினைவுகளை படிக்கலாம்.

தமிழ் நவீன இலக்கியத்தின் மலர்ச்சிக்கு வித்திட்ட இதழ் சரஸ்வதி. சுந்தர ராமசாமி ஜெயகாந்தன் போன்றவர்கள் மலர்ந்து வந்த மேடை.  தமிழ் முற்போக்கு எழுத்தின் நாற்றங்கால் அது. அதை நடத்திய ஜயபாஸ்கரன் பற்றி சுந்தர ராமசாமி நிறைய சொல்லியிருக்கிறார். சரஸ்வதி இதழ் பெறும் விருது மகிழ்ச்சிக்குரியது.

இளையராஜா அவர்களின் இசையுடன் சேர்ந்து வளர்ந்த தலைமுறையினன் நான். இத்தருணத்தில் நான் எது சொன்னாலும் அது முகமனாகவே அமையும். எனினும் அவரால் அளிக்கப்படும் விருது ஒரு முக்கியமான  கௌரவம் என்று மட்டுமே சொல்ல விழைகிறேன்.

இன்னுமொரு மகிழ்ச்சிக்குரிய விஷயம் இவ்விருதை வரும் 24-4-08 அன்று சென்னையில் முன்னாள் குடியரசுத்தலைவர் மதிப்புக்குரிய ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் வழங்குகிறார்கள் என்பது. சமகால அரசியல் உலகில் நான் உள்ளூர வணங்கும் தலைவர்களில் ஒருவர் அவர். நிகழ்ச்சி நிரல் இன்னும் கைக்கு வரவில்லை.

நிறைவும் உவகையும் கொள்ளும் தருணம் இது.

முந்தைய கட்டுரைசொல்புதிது பற்றி…
அடுத்த கட்டுரைபிறந்தநாள்