அன்புள்ள ஜெ அண்ணாவுக்கு,
‘காடு’ நாவல் படித்து முடித்தேன். ‘முடித்தேன்’ என்பது கூட தவறான சொல் பிரயோகம். ‘காடு’ வாசிப்பை என்னளவில் இன்னும் முடியாத ஒரு தொடர்ச்சியாகவே கருதுகிறேன். சில படைப்புகள் என்னை இவ்வகை இடைநிலைத் தன்மையில் நிறுத்திவிடுகிறது. அதில் ‘காடு’ம் ஒன்று.
வாசிப்பின் போது மனஓர்மை தவறுவதோ, படைப்பில் நிகழும் சாத்தியங்களுக்கு எதிராக ஒவ்வாமை நிகழ்வதோ அல்லது வாழ்க்கை பற்றிய இதுவரையான முன்முடிவுகளோ படைப்பின் அனுபவத்தை முழுமையாக எனக்குள் இறங்க விடாமல் செய்து விடுகின்றன. எனக்கு எது நேர்ந்ததோ தெரியவில்லை. ‘காடு’ வாசிப்பு எனக்கு ஒரு வகையான மாயஉணர்வைத் தந்துவிட்டுச் சற்றுத் தள்ளியே நின்று என்னைப் பார்த்துச் சிரிக்கிறது.
ஆணியில் அறையப்பட்ட நீலியைப் போன்றே இந்த நாவலின் வாசிப்பனுபவமும் என் மனதுக்குள் பெருவியப்பாய் அறையப்பட்டுவிட்டது. நானும் அந்தக் கிரிதரனைப் போலவே ஒரு விடுதலைத் திறப்பை நிகழ்த்த ஏங்கித் தவிக்கிறேன் என்றே படுகிறது.
கிரிதரன் மனதில் நீலி அமானுஷ்ய வனதேவதையாகவும் துால வடிவக் காட்டுப்பெண்ணாகவும் முயங்கிச் செயல்படும் நிலையை எழுத்தில் வடித்துள்ள லாவகம் இதுவரை என் வாசிப்பனுபவத்தில் நான் காணாதது. இரண்டு துண்டுகளான காட்சிப் படிமங்களை ஒன்றாக இணைக்கும் மாயவிளையாட்டை வாசகன் உணராத வண்ணம் எழுத்தில் நிகழ்த்துவதென்பது ஒரு படைப்பிலக்கிய அற்புதம்.
‘காடு’ நெடுகிலும் மனிதர்கள் வந்துலவுகிறார்கள். காமம் அவர்களுடைய உடல் தேவையாக, ஏக்கமாக, ஏகாந்தமாக, ரசனையாக, மனநோயாக மற்றும் காதலாக ஒரு பின்தொடரும் நிழலாய் வந்துகொண்டேயிருக்கிறது. காமம் தொடருவதாக மட்டுமல்லாமல் முடிவின்றி தொடரப்படுவதாகவும் இருக்கிறது.
மனிதக்காமத்திற்கு ஈடுகொடுத்தோ மறுதலித்தோ நிற்கும் குறியீடுகளாக நாவல் நெடுகிலும் நானாவிதக் காட்டுவிலங்குகளும் பயணிக்கின்றன. காமத்தின் துாதுவர்களாக மலைச்சிகரங்களும் நீரோடைகளும் மரங்களும் செடிகளும் பூக்களும் மட்டுமல்லாது சமயத்தில் மூண்டு நிற்கும் கருமேகங்களும் ஆர்ப்பரித்துக்கொட்டும் மழையும் கூடச் செயல்புரிகின்றன. சங்கப்பாடல்களும் பேரிலக்கியங்களும் மறைநுால்களும் காமத்தின் ஆன்மீக வேர்களைத்தேடிச் சென்று நீர் சொரிகின்றன.
அறைக்கு வெளியே அலைபாய்ந்தபடி படபடக்க உலவிக் கொண்டிருக்கும் நீலியின் நிலையிலேயே நானும் இருக்கிறேன் காட்டைச் சென்றடைய.
காட்டை முழுமையாக உள்வாங்கிவிட்டதாய் எவர் கருதினாலும் அது அகங்காரம் அழியாததற்கான அடையாளமே. ‘காடு’ என்னுடைய அகங்காரத்தை அடையாளம் காட்டியிருக்கிறது. மீண்டும் மறுவாசிப்பிற்கான ஒரு அழைப்பாக அதை எடுத்துக்கொள்கிறேன். நன்றி.
வீரக்குமார்